Saturday, June 17, 2006

ஓணான் வேட்டை

எங்க ஊருல இருந்து பள்ளி நாலு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. திண்டுக்கல் அருகில் மதுரை போற வழில இருக்கிற காந்திகிராமம் என்ற ஊருல இருந்த தம்பிதோட்டம் தான் நான் படித்த பள்ளியின் பெயர். என் ஊரான வெள்ளோட்டில் இருந்து பேருந்தை பிடிக்க ஒரு கிலோமீட்டர் நடக்கனும். அந்த ஒரு நடை பயணம் ரொம்ப இனிமையானது..சுவையானது. ஒரு வயர்கூடையை வலது பக்க தோள்பட்டையில மாட்டிகிட்டு அந்த வழியா என் நண்பர்கள் கூட நடக்குறதே ரொம்ப விளையாட்டுத்தனமனது. பல நாட்கள் ஓணான் பிடிச்சு விளையாடுனதுல பள்ளிக்கு லேட்டா போய் காம்பௌண்டு சுவர் தாண்டியது உண்டு.

இந்த ஓணானைப் பிடிக்கிறதே ஒரு அலாதியான விஷயம். எப்போவுமே கருவேலமரத்துல சுத்திகிட்டு திரியற ஓணான்கள் தரைக்கு வந்தாலே பசங்களுக்கு குஷி ஆகிடும். அதுக தலைய தூக்கி டொய்ங் டொய்ங் ஆட்றத பாத்தாலே அது கழுத்துல சுருக்கு போட்டு பிடிக்கணும்னு கையெல்லாம் பரபரன்னு இருக்கும். ஒரு நீளமான குச்சியில நுனில நரம்புல சுருக்கு போட்டு, ஓணான்களுக்கு முன்னாடி ரெடியா வச்சிருப்பாங்க. அது தலையை தூக்கியவுடன் சுருக்க போட்டுவாங்க. அதுக துள்ளிகிட்டு கீழ விழும். அப்புறம் ஓணான்களை தலைல நூல கட்டி ஊர்வலம் கூட்டிகிட்டு போவோம். சில சமயங்களுல ஒரு இருபது முப்பது ஓணான்களை ஊர்வலமா அந்த செம்மண் பொட்டல் காட்டுல கூட்டிகிட்டு, அதுக போற பாதையெல்லாம் தும்பை, காகிதப்பூ, தாத்தாப் பூ, எல்லாம் தூவி, பக்காவா ஒரு விழாவே நடக்கும். அந்த ஊர்வலத்தோட முடிவுல நிறைய ஓணான் பிடிச்சவனுக்கு பரிசும் கொடுப்போம். ஏதோ சினிமா படத்தோட கிளைமாக்ஸ் காட்சி பாத்தது மாதிரி இருக்கும்..புழுதி பறக்க நடக்குற அந்த ஊர்வலத்தைப் பாத்தா..

ஓணான் பிடிக்கிறதை விட, இந்த மாதிரி ஊர்வலங்களை பாக்குறதுல, எனக்கு ரொம்ப பிரியம். அதுவும் அப்போ அந்த பசங்க மொகத்துல வர்ற சந்தோசம் இருக்கே, அதை வார்த்தைல சொல்லவே முடியாது.

இந்த மாதிரி ஓணான் பிடிக்கிறது என்பது ஆடு மாடு மேய்க்கிற பசங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. என் கூட சிறுவயதில ஒண்ணாவது ரெண்டாவது படிச்சுட்டு குடும்ப நிலைம காரணமா இப்படி ஆடு மேய்க்க போனவங்க நிறைய பேர். அப்படிபட்ட என் நண்பர்களை இந்தியன் படம் ரீலிஸ் ஆனப்போ தியேட்டருக்கு கூட்டிட்டுப் போனேன். அந்த படத்துல விலங்குகளை பாதுகாக்குற வேடத்துல மனிஷா கொய்ராலா நடிச்சிருப்பாங்க..அதை பாத்துட்டு கூட வந்த ஒருத்தன் கேட்டான். ஏண்டா கார்த்தி, நாம எத்தனை ஓணானை பிடிச்சிருப்போம்..அப்புறம் ஏண்டா இந்த பொண்ணு மனிஷா வந்ததே இல்லைனு கேட்டான். அதை கேட்டவுடன் தியேட்டரே கொல்லுன்னு சத்தமா சிரிச்சது.

9 பின்னூட்டங்கள்:

said...

kai kalavachikitu summa irukararthe kidayath..hmmm :)

said...

ஆமாம் மஹேஷ்..அதெல்லாம் மறக்கவே முடியாது

enna panrathu Bharani..chinna vayachula athu thaan thrillingE..

said...

உண்மை கார்த்திக்,
ஆனால் எதுவும் வெளிப்படையாக இருக்கும் இப்போது இம்மாதிரி எல்லாம் இருக்கிறதா சந்தேகம்தான்.

said...

உங்க அனுபவங்களும் நல்லாவே வருது, கார்த்திக், தைரியமா எழுதுங்க, கொஞ்சம் கொஞ்சமா நல்லா வந்துடும்.

said...

நன்றி கீதா..எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஆதரவில் தான்..

said...

//அப்புறம் ஏண்டா இந்த பொண்ணு மனிஷா வந்ததே இல்லைனு கேட்டான்.//
hahaaa, ROTFL. :)

said...

சரியாக சொன்னீர்கள் சஞ்சீவ்..அது நான் சொல்ல மறந்த கதை

அம்பி, :-))

said...

RSPCA-la pidichu koduthuduven ungalai, onan ellam evalo paavam?! J/k, aana nijamave en indha onan ellam pidikareenga?

said...

yarukku thriyunga antha chinna vayachulaa..easy pidikka mudiyurathu athai thaane..