(சற்றே பெரிய பதிவு)
தினமும் நான் அவ்வழியே தான் அலுவலகம் செல்வேன்.. புகை கக்கிய பேருந்துகளும் முகமூடி அணிந்த மனிதர்களும் இருபுறமும் சென்றுகொண்டிருப்பார்கள். நானும் அப்போது பேருந்து பயணி தான். எப்போதும் என் பையில் சில சில்லறை காசுகள் இருக்கும். ஒரு முறை அப்படி புளிமூட்டைக்குள், நசுங்கிய புளியாக நான் நின்றுகொண்டிருந்த போது, சில்லறை இல்லை என்பதால் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டேன். அப்படி, தேய்த்த சட்டை கசங்கி நான் வெளியே துப்பப்பட்ட போது தான் எனக்கு அவன் அறிமுகமானான். சில சமயம், படிகளிலும், சில சமயம் ஜன்னலோரமும் பயணிக்கையில் நான் அவனை பார்த்திருக்கிறேன்.. அவனது சடை முடியும் தாடியும் பார்த்து காவி அணியாத சாமியார் என்று நினைத்தேன், முதல் முறை கவனித்த போது.. மனதை கவ்வுகிற ஆளாக இல்லையென்றாலும், அவனை விட்டு என் மனம் அகலவே இல்லை. என் வயது தான் இருக்கும். அவ்வளவு சிறிய வயதில் ஏனிந்த கோலம் என்று நான் நினைத்து வியந்ததுண்டு.. வருத்தப்பட்டதுண்டு.
வாழ்க்கையில் கஷ்டங்கள் வராமல் ஒரு மனிதன் வாழ முடியுமா.. அப்படி கஷ்டங்கள் வந்தவர்கள் எல்லாம் இவனைப் போல இருந்தால் நாடே இப்படி பட்டவர்களின் முதுகில் தான் எழுந்து நிற்கும்.. ஒரு வேளை, கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது போல, ரயில் பெட்டிகள் போல அடுத்தடுத்து இடர்கள் இவனுக்கு மாலை போட்டு ஆட்டி எடுத்திருக்குமோ.. அதில் கண்ணதாசன் சொல்லியிருப்பார்.. ஒருவனுக்கு அடுத்தடுத்து துன்பங்கள் நடக்கிறது.. அடாது பெய்த மழையில் அவனது மாடுகள் இறந்து போகின்றன.. பரந்து விரிந்த வயல்வெளியெல்லாம் தண்ணீரில் மூழ்கி போகின்றன.. வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. விளையாடிய மகனை பாம்பு கடித்து விட்டது.. வாசலிலே கடன் கொடுத்தவர்கள் கொடுத்த காசுக்காக கழுத்தை நெருக்க காத்திருக்கிறார்கள்.. இப்படி ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், ஒரே நாளில் ஏற்பட்டால் இப்படித்தான் ஆகியிருப்போனோ.. இளவயதில் சாமியாராக ஆகுபவர்கள் எவரும் உண்மையான பற்றற்வர்களாக பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் மனசு அந்த லௌகீக வாழ்க்கையை மட்டுமே சுற்றி சுழலும். அதனால் தான் பிரேமானந்தா போன்ற சாமியர்கள் உருவாகிறார்கள். கௌதம புத்தரும் கல்யாணம் பண்ணிய பிறகு, வாழ்வை அனுபவித்த பிறகு தான், ஆசையை விடு என்றார். இல்லையென்றால் அவருக்கும் அந்த ஏக்கங்கள் இருக்கத்தான் செய்திருக்குமோ..
அவனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இப்படித்தான் பல நினைவுகள் மனச் சுவர்களில் அலையாய் மோதி செல்லும். இவனை பார்க்கவே சில சமயம் நான் தூரமாய் இருந்தாலும் அந்த பேருந்து நிறுத்ததிற்கு வருவது உண்டு.. இப்போதெல்லாம் என்னை பார்த்து அவன் மீசைக்குள் புன்னகைப் பூ பூப்பதுண்டு.. தாடி புதர் சில சமயம் பூங்காவாய் மாறுவதுண்டு.. கிழிந்த ஆடை.. அது அவனது ஏழ்மையை காட்டுகிறதா... இல்லை உள்ளத்தின் கதவுகளா தெரியவில்லை.. எத்தனையோ பிச்சைக்காரர்கள், நான் அவர்களுக்கு கால் ரூபாயை போட்ட போதெல்லாம் என்னை செல்லாகாசை பார்ப்பதுப் போல் பார்ப்பார்கள். இவனோ என்ன போட்டாலும் சிரித்து கொண்டே ஏற்றுக்கொள்கிறான்.. அதோடு ஒரு சின்ன புன்னகையையும் நன்றியாக செலுத்துகிறான்.
எப்படி அவன் மீது எனக்கு அப்படி ஒரு பாசம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு பூர்வ ஜென்மத்து பந்தம் போல அது இருந்தது.. பக்கத்தில் வைத்திருக்கும் அந்த அழுக்கு மூட்டைக்குள் என்ன வைத்திருப்பான் என்னும் கேள்வி என்னை குடைந்துகொண்டே இருக்கும். அவனை பற்றிய ஏதேனும் உண்மைகள் அதற்குள் இருக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் ஏனோ அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும் மனதுக்குள் அதிகமாகி கொண்டே போனது.. அவனை அந்த பிச்சைக்கார உலகில் இருந்து மீட்டு வர மனம் எண்ணியது.. எனது நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.. எனக்கு ஏனிந்த விபரீத ஆசை என்று கிண்டல் செய்தார்கள்.. ஆனால் எனக்கு மனதுக்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே இருந்தது..
ஒரு நாள் சனிக்கிழமை அவனிருக்கும் அந்த பேருந்து நிறுத்ததற்கு சென்றேன்.. எப்பவும் போல போய்வரும் மக்களையே அண்ணாக்க பார்த்து அவனுக்குள் பேசிக்கொண்டிருந்தான்.. அந்த பேருந்து நிறுத்ததில் ஆட்கள் குறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவனும் என்னை பார்த்து வழக்கம் போல சிரித்து விட்டு, மற்றவர்கள் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.. யாராவது மனைவி, குழந்தைகளோடு வந்தால் அவர்களை மட்டும் அவர்களை இவன் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு அரைமணி நேரம் நான் பொறுமையாக காத்திருந்தது வீண் போகவில்லை. அந்த பேருந்து நிறுத்தம் வெறிச்சோடி கிடந்தது.. அவன் பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி இருந்தான். நான் அவன் அருகில் சென்று மெதுவாக, எச்சில் விழுங்கி மெல்ல ஹாய் என்றேன்.. அவன் சின்ன அதிர்ச்சியோடு கண் விழித்தான். நான் தான் கூப்பிட்டேன் என்று தெரிந்ததும் ஸ்னேகமாய் சிரித்தான். உங்க கூட பேசணும்.. வாங்க அப்படியே நடந்து பேசலாம்.. மதிய உணவையும் முடிக்கலாம் என்று அழைத்தவுடன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. அப்படியே எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான்..
என்ன யோசிக்கிறீங்க.. வாங்க போகலாம் என்று கொஞ்சம் மனசுல தைரியத்தை வளர்த்து கொண்டு கூப்பிட்டேன்.. இப்போ மெல்ல ஆச்சர்யமும், கொஞ்சம் கேள்விக்குறியோடும் பார்த்தான். எழுவதா, என் அழைப்பை மறுப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை.. கண்களில் சின்ன பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்ச நேர குழப்பத்திற்கு பிறகு, தனது அழுக்கான அந்த பையை எடுத்துகொண்டு கிளம்பினான்.. எனக்கு மனசுக்குள் சின்ன சந்தோசம் எழுந்தது.. அவனை அப்படியே பக்கத்தில் இருந்த கட்டண குளியலறைக்கு அழைத்து சென்று அவனுக்கு குளிக்க சோப்பும், கையோடு எடுத்து வந்த புதிய உடைகளையும் கொடுத்தேன்.. என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.. கொடுத்ததெல்லாம் வாங்கி கொண்டான். பேருந்து நிறுத்ததில் இருந்து இந்த குளியலறை வரை அவன் என் கூட ஒரு மாதிரி கூச்சப்பட்டே நடந்து வந்தான். எதுவும் பேசவில்லை.. என்னை விட்டு கொஞ்சம் பின்னாலும், ஒதுங்கியும் தான் நடந்து வந்தான். யாரை பற்றியும் கவலை படாமல் நான் நடந்து வர, அவன் சுற்றி முற்றி எல்லோரையும் பார்த்த வாறே நடந்து வந்தான்.. இந்த சின்ன விசயத்தில் தான் அவனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..
அரை மணி நேரம் அவன் வரும் வரை காத்திருந்தேன்.. என் நண்பர்களிடம் மொபைலில் பேசி விஷயத்தை சொன்னேன்.. கூப்பிட்ட ஆறு பேரில் நான்கு பேர் என் கூட அந்த ஹோட்டலில் வந்து சேர்ந்து கொள்வதாக சொன்னார்கள். அவர்களுக்கு சொல்லமுடியாத ஆச்சர்யம். குளித்து விட்டு அவன் வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தான்.. நன்றாக குளித்துவிட்டு அழகாக இருந்தான்.. நான் எடுத்திருந்த சட்டை அவனுக்கு கொஞ்சம் தொளதொள என்று தான் இருந்தது.. ஆனால் அவன் அதை ரசித்தான்.. கைகூப்பி நன்றி சொன்னான்.. அவனது கண்களில் இப்போது கண்ணீர் கசிந்தது.. நான் வைத்து இருந்த சென்னை சில்க்ஸ் பையில் அவனது அழுக்கு மூட்டையை வைத்துகொள்ளச் சொன்னேன்.. அப்படியே வைத்துகொண்டான்.. இப்போது நான் எதை சொன்னாலும் செய்கின்ற நிலைக்கு வந்திருந்தான்.. நண்பனிடம் ஓசி வாங்கி வந்திருந்த டூ-வீலரில் அவனை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றேன்..
அவனை பற்றிக் கேட்டேன்.. எந்த கேள்விக்கும் அவன் வாயை திறக்கவில்லை.. கடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.. நீண்ட நேரம் கழித்து அவனது அழுக்கு மூட்டையில் இருந்து ஒரு கசங்கிய லேமினேட் செய்த ஒன்றை வெளியில் எடுத்து என்னிடம் கொடுத்தான்.. அதில் அவன் பொருளாதாரத்தில் இளநிலை படித்திருக்கிறான் எனவும் அவனது பெயர் ரஞ்சித் எனவும் இருந்தது.. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.. அதற்கு மேல் எதுவும் அவன் சொல்லவில்லை.. எனக்கும் முதல் நாளிலே அவனிடம் எல்லாம் கேட்டுபெறுவது சரியல்ல என்று நினைத்து விட்டுவிட்டேன்.. என் நண்பர்களுடன் மதிய உணவு முடித்துவிட்டு, அவனுக்கு எப்படியும் நல்ல வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினோம்.. முதலில் கிண்டலடித்த நண்பர்களும் இப்போ அவனை பற்றி தெரிந்து கொள்ள, நல்ல வேலையில் அமர்த்த என் கூட உறுதுணையாய் இருப்பதாக கூறினார்கள்.. அவனை எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டும் எங்கள் அறைக்கு மட்டும் வரமுடியாது என்று சொல்லிவிட்டான்.. அவனை மறுபடியும், விட மனமில்லாமல் அந்த பேருந்து நிறுத்ததில் இறக்கிவிட்டு கிளம்பினோம்.
அடுத்த நாள், எப்பவும் போல அலுவலகம் கிளம்பினேன்.. பேருந்து அந்த நிறுத்தத்தை கடக்கும் போது அவனை தேடினேன்.. எப்போதும் அமரும் இடத்தில் அவனை காணவில்லை.. என்ன ஆனான் என்று குழம்பியவாறே அலுவலகம் சென்றேன்.. திரும்பி வரும் போது, அந்த நிறுத்ததில் இறங்கினேன்.. சுற்றி முற்றி எங்கு தேடியும் அவனை காணவில்லை.. ஒருவித குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.. அதன் பிறகு அந்த இடத்தில் அவனை எப்போதுமே பார்க்கமுடியவில்லை.. அவன் காணாமல் போன நான்கு நாட்களுக்கு பிறகு, என் அலுவலக் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது அவனிடம்.. இப்படி ஒரு நண்பன் கிடைப்பான் என்று தான் நினைத்தே பார்க்கவில்லை என்றும், அன்றைய ஒரு நாள் வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்தும், ஏனோ எனக்கு உங்களுக்கு சிரமமாய் இருக்க தோன்றாததால் எங்கோ கண்காணாத இடத்திற்கு செல்வதாகவும் எழுதி இருந்தான்.. எனது அலுவலக கார்டை அன்று அவனுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.. நாம் தான் அவனது வாழ்க்கையை மாற்றிவிட்டோமோ என்று நினைத்தேன்.. ஏனோ தெரியவில்லை.. என்னை அறியாமல் ஒரு குன்றை தூக்கி இதயத்தில் வைத்தது போல மனம் சுமையாய் இருந்தது.. மெல்ல கண்ணீர் கன்னங்களை உழ ஆரம்பித்தது..