Sunday, February 18, 2007

டீக்கடை சம்பவமும், பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்தின செய்தியும்

எங்க ஊர் டீக்கடையில் காலையில நடக்கிற கூத்து பாக்கவே சிரிப்பா இருக்கும். அப்படி நான் கவனித்த ஒரு கூத்தை இப்ப உங்களுக்கு சொல்றேன். காலைல ஒரு ஐந்து மணிக்கு எங்க ஊர் பூசாரி கோயில்ல ரேடியோ போடுறப்பவே, எல்லா டீக்கடையும் ஓபன் ஆகிடும். எங்க ஊருல ஒரு நாலஞ்சு டீக்கடைகள் இருக்கு. அதுல முக்கல்வாசி அந்த கோயிலை சுத்தியே இருக்கு. முந்தி காலத்துல டீக்கடையில பாட்டு மட்டும் தான் ரேடியோவிலோ டேப்லயோ போடுவாங்க. இப்போ எல்லாம் ரேடியோ மாதிரி டிவி ஆகிடுச்சு. காலைல கே டிவில போடுற பாட்டோட ஆரம்பிச்சா நைட் படம் வரை தொடர்ந்து ஓடும். ஒரு ஆள் வந்து டீக்கடையில உட்கார்ந்தா முதல் காபி குடிச்சுட்டு, வர்ற பேப்பரை படிச்சுட்டு, அங்க போடுற வடை பஜ்ஜியை சாப்பிட்டு பத்து மணிவாக்குல தான் அந்த டீக்கடையையே விட்டு கிளம்புவாங்க.

அப்படி வந்து ஒரு நாள் நம்ம முருகன் உட்கார்றார். இவருக்கு வேலையே டீ குடிச்சிட்டு டீக்கடையிலே அரட்டை அடிக்கிறது தான். இவர் ஒரு குறிப்பட்ட கட்சியை சார்ந்தவர். என்ன ஆனாலும் அந்த கட்சியை விட்டுக் கொடுக்காதவர்.

"தம்பி, ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போடப்பா"

இவர் கடை பாய்லர்ல நிக்கிற டீ மாஸ்டர் கிட்ட சொல்லி முடிக்க அந்தப் பக்கம் இவரோட பங்காளி பழநின்னு ஒருத்தர் போறார்.

"யோவ் பங்கு.. என்னையா நான் உட்கார்ந்து இருக்கதை பார்த்தும் பாக்காத மாதிரி போற.. வாய்யா.. ஒரு காப்பியை குடிச்சிட்டு போகலாம்"

வேலில போற ஓணானை மடியை விடுற மாதிரிங்கிற பழமொழி இவங்களை பார்த்த பிறகு தான் சொல்லி இருப்பாங்க போல.

"தம்பி, மொதச் சொன்ன காப்பியோட இன்னொரு காப்பியை போடப்பா.. பாதி சக்கரை போட்டாப் போதும். நம்ம பங்குக்கு சக்கரை (நோய்) இருக்குல்ல.. என்ன பங்கு.. நான் சொல்றது சரி தான"

இப்படி இவர் சொன்னதுமே மெல்ல பழிநிக்கு உள்ளாற ஷூட் ஆகி இருக்கும். இத்தனை பேர் மத்தில சக்கரை பத்தி கத்தி சொன்னதுல. இருந்தாலும் கொஞ்சம் அமைதியா இருப்பார்.

அந்த நேரம் பாத்து காலைல தினசரி வரும். ஆளுக்கொரு பேப்பரா எடுத்துப் படிக்க ஆரம்பிப்பாங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நக்கல்ப்பட்ட பழநி எப்படா காலை வாரணும்னு கங்கணம் கட்டிகிட்டு இருப்பாரு. இப்போ முருகனோட கட்சியை பத்தி இன்னொரு கட்சி பேச்சாளர் மட்டரகமா பேசி இருக்கதை பேப்பர்ல இவர் படிக்க மனுஷனுக்கு குஷியாகிடும். இந்த நேரத்துல சூடா காப்பியை டீக்கடைக்கார பையன் இவங்களுக்கு தர, அந்த சூடு மெல்ல இவங்க கிட்டயும் ஏறுது.

"யெம்பா பங்கு, என்ன அந்த கட்சிக்காரன் உன் கட்சியை இப்படி பேசி இருக்கான். எவ்வளவு தைரியமா இருந்தா உன் கட்சிகாரன் எல்லாம் நாக்கை புடுங்கி செத்து போகமாட்டீங்களான்னு கேக்குறான்"

மெல்ல பழநி திரியை கொளுத்தி போடுறார்.

"அவன் கிடக்கிறான், காசுக்கு மாரடிக்கிற பய.. ஒரு தடவை என்னதான் பேசுறானானு பாக்க திண்டுக்கல்ல நடந்த மீட்டிங்கு போயிருந்தேன்.. இவன் பேச்சை கேக்க மைக் செட் போடுறவன் மட்டும் தான் இருக்கான்.. கேக்குறதுக்கே ஆள் இல்லாதப்போ எப்படி பேசுறான் பாரு"

மனுஷன் டென்ஷனாகி நாலஞ்சு கெட்ட வார்த்தைகளை அந்த பேச்சாளர் மீது விட்டிருப்பார்.

பழநிங்கிறவர் இருக்காரே, அவர் அப்பக்கூட விடமாட்டார்.

"அட பங்கு, நல்லா யோசிச்சு பாரப்பா.. அது உன் கட்சி மீட்டிங் தான"

"என்ன நக்கலா உனக்கு..ம்ம்.. நம்ம பங்காளியேன்னு உன்னை கூப்பிட்டு காப்பி வாங்கி கொடுத்தா, நான் கொடுத்த காபித் தண்ணி உள்ளாற இறங்கினவுடனே நம்மளையே நக்கல் அடிக்கிற..ம்"

முருகன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்து இருப்பார்.

"யோவ்.. சும்மா போறவன கூப்பிட்டு சக்கரை..கிக்கரைனு நீ நக்கலடிப்ப, ஒத்த ரூவா காப்பிக்கு அத நா நாக்க தொங்க போட்டு கேட்டுகிட்டு இருக்கணுமா உன் கட்சிகாரன மாதிரின்னு"

பழநி அவர் வாய்க்கு வந்தபடி பேச, அந்த இடத்துல அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு எல்லோரும் காதை பொத்துற அளவுக்கு சண்டையும் தடித்த வார்த்தையுமாத் தான் இருக்கும்.

இப்படித்தான் நிறைய நேரங்களில் டீக்கடை பஞ்சாயத்துகள் இருக்கும். இந்த சண்டைகள் சில நேரம் அடுத்த தடவை டீக்கடையில் பார்க்கும் வரை தான் இருக்கும். இல்லையென்றால், ஜென்மபகையாகி விடும்.

இதைவிட பெரியது, குழாயடி சண்டைகள் தான். இந்த வம்பு சண்டைகள் பெண்களில் இருந்து ஆரம்பிப்பதால் பெரும்பாலும் ஜென்ம பகையாகவே மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

அப்புறம், நேற்று படித்த ஒரு நகைச்சுவையான செய்தி. புரோட்டாவுக்காக மதுரையில் ஒரு குடிமகன் பஸ்ஸையே கடத்தினாராம்!

15 பின்னூட்டங்கள்:

said...

கலக்கல்.. அதிலும் இந்த லைன் சூப்பர்:

//"யோவ்.. சும்மா போறவன கூப்பிட்டு சக்கரை..கிக்கரைனு நீ நக்கலடிப்ப, ஒத்த ரூவா காப்பிக்கு அத நா நாக்க தொங்க போட்டு கேட்டுகிட்டு இருக்கணுமா உன் கட்சிகாரன மாதிரின்னு" //

:-P

Anonymous said...

Athu oru jaali taan ;)

said...

தலைவா..

என்ன இப்ப கவிதை, கதை எல்லாம் வூட்டுட்டிங்களா???
டீக்கடை சண்டை, குழாயடி சண்டைகளுன்னு கலக்குறிங்க....

\\புரோட்டாவுக்காக \\

இங்க (sharjah) புரோட்டா தான் தேசிய உணவு...

Anonymous said...

அய்யா, நானும் ஒரு தமிழ் வலைப்பதிவருங்கோ.. அப்புறம் தம்பித்தோட்டத்துல படிச்சவங்கோ. உங்கூரு அதுக்குப்பக்கமுங்களா?

said...

LOL...கலக்கல் தல...இத எல்லாம் படிக்கும் போது எங்க ஊருக்கு போன எபக்ட்...ரொம்ப டாங்ஸ் :-)

said...

chudachuda kaaapi chi news solringa thala :)

said...

//கலக்கல்.. அதிலும் இந்த லைன் சூப்பர்://

அதுவும் நேர்ல இதையெல்லாம் பாத்தா கலக்கலா இருக்கும், மை பிரண்ட்

said...

//Athu oru jaali taan //

:-)

said...

//என்ன இப்ப கவிதை, கதை எல்லாம் வூட்டுட்டிங்களா???
டீக்கடை சண்டை, குழாயடி சண்டைகளுன்னு கலக்குறிங்க....//

வித்தியாசமா செய்யலாமேன்னு தான் கோபி!

//இங்க (sharjah) புரோட்டா தான் தேசிய உணவு... //

அட!

said...

//அய்யா, நானும் ஒரு தமிழ் வலைப்பதிவருங்கோ.. அப்புறம் தம்பித்தோட்டத்துல படிச்சவங்கோ. உங்கூரு அதுக்குப்பக்கமுங்களா? //

அட நண்பா.. நானும் தம்பிதோட்டம் தான்.. உங்க வலைப்பக்கம் வந்து மிச்ச கதை சொல்றேன்!

said...

/LOL...கலக்கல் தல...இத எல்லாம் படிக்கும் போது எங்க ஊருக்கு போன எபக்ட்...ரொம்ப டாங்ஸ்//

எல்லா ஊர்லயும் இதே கதை தான் போல நாட்டாமை :-)

said...

//chudachuda kaaapi chi news solringa thala//

:-)

said...

ரொம்பவே வேகம் பதிவு போடறதிலே, நமக்குக் கொஞ்சம் வேலை அதிகம் இப்போ, தினமும் வர முடியறதில்லை. அதுக்குள்ளே ஒரு பத்துப் பதிவு சேர்த்துடறீங்க! படிச்சுட்டு எழுதறேன். :-)

said...

//அப்டியே தமிழ் சினிமால வர கிராமத்து சீன் மாதிரி இருக்கு//

ஆமாங்க வேதா.. இந்த மாதிரி சீன் எல்லாம் வடிவேலுக்கு அல்வா சப்பிடுற மாதிரி

said...

//ரொம்பவே வேகம் பதிவு போடறதிலே, நமக்குக் கொஞ்சம் வேலை அதிகம் இப்போ, தினமும் வர முடியறதில்லை. அதுக்குள்ளே ஒரு பத்துப் பதிவு சேர்த்துடறீங்க! படிச்சுட்டு எழுதறேன்.//

பரவாயில்ல மேடம். மெதுவா வந்து பதிவை படிங்க