Monday, January 15, 2007

பொங்கல் போனஸ்

நண்பர்களே, பொங்கல் போனஸ் செய்தியா இங்கே பதிவிடப்பட்ட கவி கட்டுரையை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள் தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழுவினர். அந்த பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

என்றும் இவனை ஆதரித்து எழுத்துகளை படித்து, மனசுக்கு உற்சாக பின்னூட்டங்கள் தந்து வரும் எனது நண்பர்களாகிய, உங்கள் அனைவருக்கும் எனது இமயம் தொட்டு இதயம் தொடும் இதமான நன்றிகள்.. இந்த இடத்தை, இவனை அடைய வைத்தது தங்களின் நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் தான் நண்பர்களே.

சிறிய எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி அவர்களின் தரமான எழுத்துக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.. மேலும் இந்த பதிவை வெளியிட தேர்ந்தெடுத்தற்கு அவர்களுக்கு என் மகிழ்வான நன்றிகள்..

Sunday, January 14, 2007

ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்

(சற்றே பெரிய பதிவு)

தினமும் நான் அவ்வழியே தான் அலுவலகம் செல்வேன்.. புகை கக்கிய பேருந்துகளும் முகமூடி அணிந்த மனிதர்களும் இருபுறமும் சென்றுகொண்டிருப்பார்கள். நானும் அப்போது பேருந்து பயணி தான். எப்போதும் என் பையில் சில சில்லறை காசுகள் இருக்கும். ஒரு முறை அப்படி புளிமூட்டைக்குள், நசுங்கிய புளியாக நான் நின்றுகொண்டிருந்த போது, சில்லறை இல்லை என்பதால் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டேன். அப்படி, தேய்த்த சட்டை கசங்கி நான் வெளியே துப்பப்பட்ட போது தான் எனக்கு அவன் அறிமுகமானான். சில சமயம், படிகளிலும், சில சமயம் ஜன்னலோரமும் பயணிக்கையில் நான் அவனை பார்த்திருக்கிறேன்.. அவனது சடை முடியும் தாடியும் பார்த்து காவி அணியாத சாமியார் என்று நினைத்தேன், முதல் முறை கவனித்த போது.. மனதை கவ்வுகிற ஆளாக இல்லையென்றாலும், அவனை விட்டு என் மனம் அகலவே இல்லை. என் வயது தான் இருக்கும். அவ்வளவு சிறிய வயதில் ஏனிந்த கோலம் என்று நான் நினைத்து வியந்ததுண்டு.. வருத்தப்பட்டதுண்டு.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வராமல் ஒரு மனிதன் வாழ முடியுமா.. அப்படி கஷ்டங்கள் வந்தவர்கள் எல்லாம் இவனைப் போல இருந்தால் நாடே இப்படி பட்டவர்களின் முதுகில் தான் எழுந்து நிற்கும்.. ஒரு வேளை, கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது போல, ரயில் பெட்டிகள் போல அடுத்தடுத்து இடர்கள் இவனுக்கு மாலை போட்டு ஆட்டி எடுத்திருக்குமோ.. அதில் கண்ணதாசன் சொல்லியிருப்பார்.. ஒருவனுக்கு அடுத்தடுத்து துன்பங்கள் நடக்கிறது.. அடாது பெய்த மழையில் அவனது மாடுகள் இறந்து போகின்றன.. பரந்து விரிந்த வயல்வெளியெல்லாம் தண்ணீரில் மூழ்கி போகின்றன.. வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. விளையாடிய மகனை பாம்பு கடித்து விட்டது.. வாசலிலே கடன் கொடுத்தவர்கள் கொடுத்த காசுக்காக கழுத்தை நெருக்க காத்திருக்கிறார்கள்.. இப்படி ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், ஒரே நாளில் ஏற்பட்டால் இப்படித்தான் ஆகியிருப்போனோ.. இளவயதில் சாமியாராக ஆகுபவர்கள் எவரும் உண்மையான பற்றற்வர்களாக பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் மனசு அந்த லௌகீக வாழ்க்கையை மட்டுமே சுற்றி சுழலும். அதனால் தான் பிரேமானந்தா போன்ற சாமியர்கள் உருவாகிறார்கள். கௌதம புத்தரும் கல்யாணம் பண்ணிய பிறகு, வாழ்வை அனுபவித்த பிறகு தான், ஆசையை விடு என்றார். இல்லையென்றால் அவருக்கும் அந்த ஏக்கங்கள் இருக்கத்தான் செய்திருக்குமோ..

அவனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இப்படித்தான் பல நினைவுகள் மனச் சுவர்களில் அலையாய் மோதி செல்லும். இவனை பார்க்கவே சில சமயம் நான் தூரமாய் இருந்தாலும் அந்த பேருந்து நிறுத்ததிற்கு வருவது உண்டு.. இப்போதெல்லாம் என்னை பார்த்து அவன் மீசைக்குள் புன்னகைப் பூ பூப்பதுண்டு.. தாடி புதர் சில சமயம் பூங்காவாய் மாறுவதுண்டு.. கிழிந்த ஆடை.. அது அவனது ஏழ்மையை காட்டுகிறதா... இல்லை உள்ளத்தின் கதவுகளா தெரியவில்லை.. எத்தனையோ பிச்சைக்காரர்கள், நான் அவர்களுக்கு கால் ரூபாயை போட்ட போதெல்லாம் என்னை செல்லாகாசை பார்ப்பதுப் போல் பார்ப்பார்கள். இவனோ என்ன போட்டாலும் சிரித்து கொண்டே ஏற்றுக்கொள்கிறான்.. அதோடு ஒரு சின்ன புன்னகையையும் நன்றியாக செலுத்துகிறான்.

எப்படி அவன் மீது எனக்கு அப்படி ஒரு பாசம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு பூர்வ ஜென்மத்து பந்தம் போல அது இருந்தது.. பக்கத்தில் வைத்திருக்கும் அந்த அழுக்கு மூட்டைக்குள் என்ன வைத்திருப்பான் என்னும் கேள்வி என்னை குடைந்துகொண்டே இருக்கும். அவனை பற்றிய ஏதேனும் உண்மைகள் அதற்குள் இருக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் ஏனோ அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும் மனதுக்குள் அதிகமாகி கொண்டே போனது.. அவனை அந்த பிச்சைக்கார உலகில் இருந்து மீட்டு வர மனம் எண்ணியது.. எனது நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.. எனக்கு ஏனிந்த விபரீத ஆசை என்று கிண்டல் செய்தார்கள்.. ஆனால் எனக்கு மனதுக்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே இருந்தது..

ஒரு நாள் சனிக்கிழமை அவனிருக்கும் அந்த பேருந்து நிறுத்ததற்கு சென்றேன்.. எப்பவும் போல போய்வரும் மக்களையே அண்ணாக்க பார்த்து அவனுக்குள் பேசிக்கொண்டிருந்தான்.. அந்த பேருந்து நிறுத்ததில் ஆட்கள் குறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவனும் என்னை பார்த்து வழக்கம் போல சிரித்து விட்டு, மற்றவர்கள் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.. யாராவது மனைவி, குழந்தைகளோடு வந்தால் அவர்களை மட்டும் அவர்களை இவன் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு அரைமணி நேரம் நான் பொறுமையாக காத்திருந்தது வீண் போகவில்லை. அந்த பேருந்து நிறுத்தம் வெறிச்சோடி கிடந்தது.. அவன் பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி இருந்தான். நான் அவன் அருகில் சென்று மெதுவாக, எச்சில் விழுங்கி மெல்ல ஹாய் என்றேன்.. அவன் சின்ன அதிர்ச்சியோடு கண் விழித்தான். நான் தான் கூப்பிட்டேன் என்று தெரிந்ததும் ஸ்னேகமாய் சிரித்தான். உங்க கூட பேசணும்.. வாங்க அப்படியே நடந்து பேசலாம்.. மதிய உணவையும் முடிக்கலாம் என்று அழைத்தவுடன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. அப்படியே எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான்..

என்ன யோசிக்கிறீங்க.. வாங்க போகலாம் என்று கொஞ்சம் மனசுல தைரியத்தை வளர்த்து கொண்டு கூப்பிட்டேன்.. இப்போ மெல்ல ஆச்சர்யமும், கொஞ்சம் கேள்விக்குறியோடும் பார்த்தான். எழுவதா, என் அழைப்பை மறுப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை.. கண்களில் சின்ன பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்ச நேர குழப்பத்திற்கு பிறகு, தனது அழுக்கான அந்த பையை எடுத்துகொண்டு கிளம்பினான்.. எனக்கு மனசுக்குள் சின்ன சந்தோசம் எழுந்தது.. அவனை அப்படியே பக்கத்தில் இருந்த கட்டண குளியலறைக்கு அழைத்து சென்று அவனுக்கு குளிக்க சோப்பும், கையோடு எடுத்து வந்த புதிய உடைகளையும் கொடுத்தேன்.. என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.. கொடுத்ததெல்லாம் வாங்கி கொண்டான். பேருந்து நிறுத்ததில் இருந்து இந்த குளியலறை வரை அவன் என் கூட ஒரு மாதிரி கூச்சப்பட்டே நடந்து வந்தான். எதுவும் பேசவில்லை.. என்னை விட்டு கொஞ்சம் பின்னாலும், ஒதுங்கியும் தான் நடந்து வந்தான். யாரை பற்றியும் கவலை படாமல் நான் நடந்து வர, அவன் சுற்றி முற்றி எல்லோரையும் பார்த்த வாறே நடந்து வந்தான்.. இந்த சின்ன விசயத்தில் தான் அவனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..

அரை மணி நேரம் அவன் வரும் வரை காத்திருந்தேன்.. என் நண்பர்களிடம் மொபைலில் பேசி விஷயத்தை சொன்னேன்.. கூப்பிட்ட ஆறு பேரில் நான்கு பேர் என் கூட அந்த ஹோட்டலில் வந்து சேர்ந்து கொள்வதாக சொன்னார்கள். அவர்களுக்கு சொல்லமுடியாத ஆச்சர்யம். குளித்து விட்டு அவன் வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தான்.. நன்றாக குளித்துவிட்டு அழகாக இருந்தான்.. நான் எடுத்திருந்த சட்டை அவனுக்கு கொஞ்சம் தொளதொள என்று தான் இருந்தது.. ஆனால் அவன் அதை ரசித்தான்.. கைகூப்பி நன்றி சொன்னான்.. அவனது கண்களில் இப்போது கண்ணீர் கசிந்தது.. நான் வைத்து இருந்த சென்னை சில்க்ஸ் பையில் அவனது அழுக்கு மூட்டையை வைத்துகொள்ளச் சொன்னேன்.. அப்படியே வைத்துகொண்டான்.. இப்போது நான் எதை சொன்னாலும் செய்கின்ற நிலைக்கு வந்திருந்தான்.. நண்பனிடம் ஓசி வாங்கி வந்திருந்த டூ-வீலரில் அவனை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றேன்..

அவனை பற்றிக் கேட்டேன்.. எந்த கேள்விக்கும் அவன் வாயை திறக்கவில்லை.. கடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.. நீண்ட நேரம் கழித்து அவனது அழுக்கு மூட்டையில் இருந்து ஒரு கசங்கிய லேமினேட் செய்த ஒன்றை வெளியில் எடுத்து என்னிடம் கொடுத்தான்.. அதில் அவன் பொருளாதாரத்தில் இளநிலை படித்திருக்கிறான் எனவும் அவனது பெயர் ரஞ்சித் எனவும் இருந்தது.. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.. அதற்கு மேல் எதுவும் அவன் சொல்லவில்லை.. எனக்கும் முதல் நாளிலே அவனிடம் எல்லாம் கேட்டுபெறுவது சரியல்ல என்று நினைத்து விட்டுவிட்டேன்.. என் நண்பர்களுடன் மதிய உணவு முடித்துவிட்டு, அவனுக்கு எப்படியும் நல்ல வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினோம்.. முதலில் கிண்டலடித்த நண்பர்களும் இப்போ அவனை பற்றி தெரிந்து கொள்ள, நல்ல வேலையில் அமர்த்த என் கூட உறுதுணையாய் இருப்பதாக கூறினார்கள்.. அவனை எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டும் எங்கள் அறைக்கு மட்டும் வரமுடியாது என்று சொல்லிவிட்டான்.. அவனை மறுபடியும், விட மனமில்லாமல் அந்த பேருந்து நிறுத்ததில் இறக்கிவிட்டு கிளம்பினோம்.

அடுத்த நாள், எப்பவும் போல அலுவலகம் கிளம்பினேன்.. பேருந்து அந்த நிறுத்தத்தை கடக்கும் போது அவனை தேடினேன்.. எப்போதும் அமரும் இடத்தில் அவனை காணவில்லை.. என்ன ஆனான் என்று குழம்பியவாறே அலுவலகம் சென்றேன்.. திரும்பி வரும் போது, அந்த நிறுத்ததில் இறங்கினேன்.. சுற்றி முற்றி எங்கு தேடியும் அவனை காணவில்லை.. ஒருவித குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.. அதன் பிறகு அந்த இடத்தில் அவனை எப்போதுமே பார்க்கமுடியவில்லை.. அவன் காணாமல் போன நான்கு நாட்களுக்கு பிறகு, என் அலுவலக் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது அவனிடம்.. இப்படி ஒரு நண்பன் கிடைப்பான் என்று தான் நினைத்தே பார்க்கவில்லை என்றும், அன்றைய ஒரு நாள் வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்தும், ஏனோ எனக்கு உங்களுக்கு சிரமமாய் இருக்க தோன்றாததால் எங்கோ கண்காணாத இடத்திற்கு செல்வதாகவும் எழுதி இருந்தான்.. எனது அலுவலக கார்டை அன்று அவனுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.. நாம் தான் அவனது வாழ்க்கையை மாற்றிவிட்டோமோ என்று நினைத்தேன்.. ஏனோ தெரியவில்லை.. என்னை அறியாமல் ஒரு குன்றை தூக்கி இதயத்தில் வைத்தது போல மனம் சுமையாய் இருந்தது.. மெல்ல கண்ணீர் கன்னங்களை உழ ஆரம்பித்தது..

Friday, January 12, 2007

கிராமத்துப் பொங்கல்

இப்போது இந்த நேரம் எனது ஊரில் இருந்திருந்தால், காணும் பொங்கலுக்கு வருடாவருடம் நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு பண்ணிகொண்டிருப்பேன் என் நண்பர்கள் கூட சேர்ந்து.. காலை பத்து மணி முதல் இரவு பதினொரு மணி வரை போட்டிகள் நடக்கும். ஐந்து வயது குழந்தைகள் முதல் எழுபது வயது குமரன் வரை எல்லோருக்கும் போட்டிகள் உண்டு.. இதில் மாலை நான்கு மணிக்கு மேல நடக்கும் போட்டிகள் தான் சுவராஸ்யமானவை. கண்ணை கட்டிக்கொண்டு கயிற்றில் தொங்கும் மஞ்சள் தண்ணீர் நிரம்பிய பானையை உடைத்தல் போட்டி ரொம்ப ரசிக்க வைப்பதாய் இருக்கும். சில பேர், கண்ணை கட்டி விட்ட பிறகு பானையை நோக்கி நடக்காமல் கூட்டத்தை நோக்கி தடியோடு நடப்பதை பார்த்தால் ரொம்ப சிரிப்பாய் இருக்கும்.. நாங்கள் என் சென்னை டைடல் அலுவலகத்தில் இதே மாதிரி போட்டியை, பானைக்கு பதிலாக பலூனை வைத்து விளையாடினோம்.. அதை தொடர்ந்து கபடி போட்டி நடக்கும்.. இது மெல்ல சூரியன் அடிவனத்தில் தஞ்சமடையும் நேரம் நடக்கும்.. வேலைக்கு போய் திரும்பிய மக்கள் எல்லோரும் இதில் பார்க்கும் கூட்டதில் இருப்பதால் கூட்டம் இதற்கு மட்டும் அதிகமாக இருக்கும். கபடி போட்டியை பத்தி ஏற்கனவே கதைத்து விட்டதால் அதற்கு பிறகு வரும் மாறுவேடப் போட்டி பற்றி பார்ப்போம்..

எனக்கு இந்த மாறுவேட போட்டிகள் மிகவும் பிடிக்கும்.. இதற்கு வயது வரம்பு கிடையாது.. எல்லோருடைய திறமைகளையும் காட்ட கிடைக்கும் அற்புதமான களம். அதுவும் கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற போட்டிகள் தான் தங்களை கூராக்கி கொள்ள உதவும். இதில் போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் நிறைய பேர் கலந்துகொள்வார்கள்.. அவர்கள் கண்ணனாக, ராணுவ வீரனாக, கட்டபொம்மனாக வேடமிட்டு செய்யும் குறும்புகள் நம்மை பூமி விட்டு தனி உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.. இந்த மாதிரி போட்டிகளிலும் சில பிரச்சினைகள், வம்புகள் உண்டு.. சில பசங்க சினிமாவில் வரும் ஐயிட்டம் நம்பர் பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஆபாசமாக வேற ஆட முயற்சிப்பார்கள்.. அவர்களையும் முகம் கோணாமல் சமாளிக்க வேண்டும்.. இல்லையெனில் அவ்வளவு தான். அதுவும் இந்த மாதிரி போட்டிகளை காண குறைந்தபட்சம் ஊர் ஜனமே கூடி இருக்கும் அங்கே. அப்பொழுது இது போல முகம் சுழிக்க வைக்கும் செய்கைகளை அனுமதிக்கக்கூடாது..

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. எங்கள் ஊரில் இருக்கும் எல்லா மாடுகளும் கழுவப்படும். கொம்புகள் மெருகூட்டப்பட்டு வண்ண வண்ண பெயிண்டுகள் அடிக்கப்படும். இதிலும் ஒரு கவனிக்கதக்க விஷயம் உண்டு. அந்த மாடுகளும் தங்கள் கொம்புகளில் முதலாளி கட்சியின் கொடி நிறத்தை சுமந்திருக்கும். ஜல்லிக்கட்டு காளைகள் கிட்டதட்ட ஒரு இருபது எங்கள் ஊரில் உண்டு. அந்த மாடுகளின் கொம்புகள் கூராக சீவப்பட்டிருக்கும். எப்படி பள்ளீயில் படிக்கும் போதும் ஒவ்வொரும் பென்சிலையும் ஆசை ஆசையா, கூரா சீவி வச்சிருப்போமோ அது மாதிரி அந்த கொம்புகளை சீவி வைத்திருப்பார்கள். மாடு வைத்திருக்கும் எல்லோர் வீடுகளிலும் பொங்கல் வச்சு சாமி கும்பிட்ட பின்னாடி, கிறித்தவர்கள் சர்சுக்கும் இந்துக்கள் கோவிலுக்கும் மாடுகளை அழைத்துச் செல்வார்கள். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின், அன்றைக்கு சிறிய அளவில் எங்க ஊரில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

எங்க ஊர் மாடுகளும் மற்ற இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு போய் வரும். அப்படி போவதற்கு முன், எங்க ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதாத விதி. ஒரு முறை அப்படி எங்க ஊர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளாமல் வெளியூருக்கு மாடுகளை அழைத்து சென்றதால் அந்த மாடுகளுக்கு ரத்தம் வருமளவு காயங்கள் உண்டாகின.. ஜல்லிக்கட்டு அன்றைக்கு எங்கள் கையில் ஒரு முழு நீள கரும்பு இருக்கும்.. தோகை சீவப்பட்டு, அடி வேருள்ள கணுக்கள் நீக்கப்பட்ட பெரிய கரும்பு இருக்கும்.. ஜல்லிகட்டு முடியும் முன் எப்படியும் இது மாதிரி மூன்று நான்கு கரும்புகளை தின்று தீர்த்திருப்போம். இவ்வளவு பெரிய கரும்பு வைத்திருப்பதிலும் ஒரு காரணம் உண்டு. ஏதாவது மாடுகள் அப்போது பக்கத்தில் வந்தால் இந்த கரும்பு உதவட்டுமே என்று தான்.

இந்த பொங்கல் விழாவை ஆரம்பித்தவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். வருடம் முழுக்க, மண்ணை பிளந்து, ஏரில் ஏறி, விதைகள் விதைத்து, அது முளை விடும் வரை கண் முழித்து, வாய்க்கால் வரப்புகளில் படுத்துக் கிடந்து இந்த உலகம் உய்ய வாழ்பவன் விவசாயி. எனக்கு தெரிந்து எந்த விவசாயியும் நல்ல சட்டை போட்டதில்லை. பணக்காரன் ஆனதில்லை. (பணக்காரன் ஆனதெல்லாம் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து விவசயம் செய்யும் மிட்டா மிராசுதார்கள் மட்டுமே) நான் சின்ன வயசுல் எப்படி பார்த்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறான். வற்றிய குளங்களை போலவே அவன் வயிறு இருக்கிறது.. இன்னும் அதே கூரை வீடுகள் தான் அவன் உறங்க, சமைக்க, அடுத்த தலைமுறையை விதைக்க அவனுக்காய் இருக்கிறது.. ஆனால் எவ்வளவு நடந்தாலும் அவன் விவசாயம் செய்வதை விட்டுவிட வில்லை.

இதில் இயற்கை வேறு அவனை பயமுறுத்துவதுண்டு.. ஒரு வருடம் மழையே இல்லாமல், நிலங்கள் வெடிக்க, அடுத்த வருடம் வரும் மழை அவன் பயிரை எல்லாம் குடித்து போனது.. இவ்வளவு கஷ்டப்பட்டு அவன் செவ்வந்தி தோட்டத்தில் சம்பாரித்தால், வாழை தோட்டத்தில் அந்த பணம் எல்லாமே போயிருக்கும், நேற்று அடுத்த காற்றீளோ, வாய்க்குள் நுழையாத பூச்சியின் காரணமாகவோ.. நெல் பயிரிடும் விவசாயி அதை சாப்பிடுவதே இல்லை. சோளமும் கம்பும் தான் அவன் பசியாற்றுகின்றன.. இப்படி அவன் உழைத்து உருகி போகும் வேலையில், அவன் கூடவே வாழ்ந்து, அவை வாழ வைப்பது இந்த மாடுகள் தான்.. அதற்கும் நன்றிகள் சொல்கிறான்.. சூரியனுக்கும் நன்றி சொல்கிறான்.. கிணற்று தண்ணீருக்கு, அந்த வயல்வெளி தோட்டத்துக்கு என்று எல்லாவற்றுக்கும் அவன் நன்றி சொல்கிறான்..

மாறி மாறி வரும் அரசுகள் அவனுக்காய் என்ன செய்கின்றன.. முறையான உதவிகள், ஆலோசனைகள், அவன் கேள்விகளை தீர்த்து வைக்கும் கருத்தரங்குகள்..ஏதேனும் ஒழுங்காய் நடத்துகிறதா.. நான் இதுவரை, எங்கள் ஊரில் இப்படி நிகழ்ச்சிகள் நடந்ததை விரல் விட்டு எண்ணிவிடுவேன்.. ஆனால் எப்போது அடித்துகொண்டாலும் அவனை பற்றி தான் அடித்துகொள்கிறார்கள். விவசாயியின் காவலனாய் காட்டிகொள்வதிலே குறியாய் இருக்கிறார்கள். இவனது வாழ்க்கையை யாருமே பார்ப்பதில்லை, பொங்கல் அன்று வாழ்த்து செய்தி விடவும், தேர்தலின் பொழுது வாக்குகள் பெற வாக்குறுதி தரவும் பயன்படுத்துகின்றன..

ஒரு பக்கம் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தொழிற்சாலைகள், மற்றும் வெள்ளை காலர் நிறுவனங்கள் எழுகின்றன.. அதை கொண்டு வருவதற்கு செய்யும் முயற்சிகளை, விளம்பரங்களை விவசாயத்திற்கு செய்வதில்லை..

இந்த பொங்கலிலாவது, எல்லோரும் சொல்வது போல, விவசாயிக்கு, தை பிறந்து வழி பிறக்குமா?

நண்பர்கள் அனைவருக்கும்,தமிழகம் மட்டுமல்ல, உலகம் எல்லாம் உழைக்கும் விவசாய மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Wednesday, January 10, 2007

நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும்

ஐந்து காலண்டர்களை மாற்றிவிட்டேன்.. இன்னும் இதயத்தில் இருக்கும் அவளை மாற்ற மனதால் முடியவில்லை. எப்போது முயற்சித்தாலும், சுவற்றில் ஒட்டிய போஸ்டரை கிழிக்கும் போது, சுவரும் சின்னதாக பெயர்வதை போலவே என்னை பாதிக்கிறாள்.. ஆனாலும் என்னை விட்ட பாடில்லை.. சூரியனின் வட்டபாதையை சுற்றியே பழக்கப்பட்ட பூமி பந்து போல, அவளையே சுற்றுகிறது என் காற்றாடி மனம்.. அதிலும் ஒரு அதிசயம். பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது.. அப்படி சுற்றி சுற்றியே தலை சுற்றி மயக்கப்பட்டாலும், மறுபடியும் கனவாக விரிகிறது அவள் பற்றிய எனது நினைவுகள்..

நீண்ட அந்த நெடுஞ்சாலையிலே, மரங்கள் வரவேற்பு வளையம் போட்டுக் கவிழ்ந்து கிடந்த சோலையிலே, நடந்து நடந்து அந்த தார் ரோடு பழுதடைந்துபோனது.. ஆனால் இத்தனை காலமும் அவளை நினைத்து நினைத்து என் இதயம் என்னவோ மெருகேறியே கிடக்கிறது, தேய்த்து போட்ட தங்கம் போல.. ஒவ்வொரு முறையும் இலை உதிரும் போதெல்லாம் சின்ன சின்ன காயம்பட்ட அவ்வழி மரங்கள், நான் தனியே, அவள் இல்லாமல், அந்த சாலையிலே நடந்து செல்வதை பார்த்து தன் கிளைகளை ஒடித்துக் கொண்டது..

கண்ணாடி முன்னால், தனியாக, அன்று மலர்ந்த மலர்களின் காதுகளில், பூஞ்சோலை கிளிகளின் இசைக்கு பாட்டாய், அவளிடம் பேசுவதற்காக எத்தனை முறை, நான் பயின்றிருப்பேன். எல்லாம் அவள் வந்து இதழால் சிரித்து, செவியோர முடிகற்றைகளை ஒதுக்கியவாறே, வளைந்து என்னருகே அமர்ந்த போது, அந்த பயிற்சி பெற்ற வார்த்தைகள் சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன. அமர்ந்த பின், மெல்ல வில்லிமை தூக்கி, செவ்விதழ் சுழித்து, புருவத்தால் அவள் செய்த சைகையில் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. என் இதயத்தில் நடந்த அதிர்ச்சியில், ஏதோ பிரளயம் நடந்ததாய் நினைத்துக்கொண்டு மரத்து பறவையெல்லாம் அடித்து பிடித்து அங்கிருந்து பறந்து சென்றன..

அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு.. இடைவிடாத அந்த பரிமாறல்களின் முடிவில், எழுகையில் எனக்கு இன்னும் பசிக்கிறது, அவளுக்கோ விருந்தே கொண்டது போல் நிம்மதி இருக்கிறது.. இப்படித்தான் இருக்குமோ காதல்.. ஊரே என்னைச் சுற்றி இயங்கி கொண்டிருக்க, நானோ அவளை சுற்றி ஊர்வலம் போகிறேன். அப்படியொரு ஓய்யார பயணத்திலே, ஓரிடத்தில் ஓய்வுக்காய் நான் அமரும் வேளை கவனிக்கிறேன், அவள் என்னில் ஊர்வலம் போன பாத சுவடுகளை..

இன்னும் என் காலக்குறிப்பேடின் காகிதப் பக்கங்களில், அவள் கூந்தல் வாழ்ந்து விழுந்த மலர்களின் வாசமும், அவள் சிந்திவிட்டு போன சிவப்புதட்டின் சின்னத் தடங்களும், நேரான பக்கக்கோடுகளில் வளைந்து வளைந்து அவள் என்னில் விளையாடிய தடங்களுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.. என் நான்கு இதய அறைகளிலும் தாறுமாறாய் கிடக்கிற சின்ன பெரிய புத்தகங்களில் எல்லாம் அவளை பற்றிய குறிப்புகளே அதிகமாய் விளைந்து கிடக்கின்றன.. அதனையெல்லாம் எத்தனை முறை படித்ததோ, சிவந்து போய் கிடக்கிறது என்னிதயம்.

அவள் இதழ் சொல்லித்தான் என் பெயரின் சுவை தெரிந்தது. அவளின் அருகாமை சொல்லித்தான் என்னின் காந்தம் புரிந்தது. அவள் புன்னகை எழுதிய குறிப்பில் தான் என் அருமை எனக்கே புரிந்தது.அவள் தலைசாய்த்து பார்க்கும் பார்வையில் என் மீதான கர்வம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இன்னமும் இருக்கிறது.. அதே அளவு காதல்.. கிரிஷ்ணனுக்கு மட்டுமா அட்சய பாத்திரம் சொந்தம். இதோ என் இதயமும் ஒரு அட்சய பாத்திரம் தான்.. எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது அவளைப்பற்றிய எல்லா நினைவுகளும்.. அவள் கேர்பின் குத்தியதிலிருந்து கைகுட்டை ஒற்றிய அந்த தருணங்கள் வரை அப்படியே இருக்கிறது என்னுள் மழையில் நனைத்த மரத்தின் பச்சை இலைகளை போல.. என் மூளையில் முளைத்து கிடக்கும் கோடிக்கணக்கான நியுரான்களெல்லாம் அவளின் நினைவுகளை அடைத்து வைத்தே நிம்மதி அடைகின்றன.. அதெல்லாம் பற்றாமல் போய், உடம்பு ரத்தங்கள் ஆக்சிஜனை கடத்த மறந்து இவளின் நினைவுகளை, உச்சிக்கும் உள்ளங்காலுக்கும் தூக்கி கொண்டு ஒடுகின்றன.. வெட்ட வெட்ட முளைக்குமாம் மரம்..அட.. இவளின் நினைவுகள் கூட எனக்குள்ளே வளர்ந்தது அவ்வாறு தான்.

இன்றும் நான் நடந்து செல்கையில் அவள் என்னுடன் நடப்பதாய் நினைக்கிறேன்.. தனிமையில் தனித்துக் கிடந்த காலங்களில் அவள் என் தோளில் கை போட்டு என் தாவாங்கட்டையை, அவளின் குவித்த விரல்களால் பிடித்து கொஞ்சுவதாய் நினைக்கிறேன்.. தலையணை எல்லாம் அவள் மடியாய் எனக்கு உருவகம் ஆகிறது..

என்ன சொல்லி என்ன புண்ணியம்.. இப்படி காற்றில் மட்டுமே கவிதை பாட, வெறுங்கையால் மட்டுமே முழம் போட, எனக்கு பழகிவிட்டது. இதிலும் ஒரு சுகம்.. உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?

Tuesday, January 09, 2007

நானும் சிம்புவும் மாமன் மச்சான் - தனுஷ் சிலிர்ப்பு

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17

அப்பப்போ நாட்டுல சில வயிறு வலிக்க சிரிக்கிற மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்னு சொல்லிகிட்டே பலமா சிரிச்சுகிட்டே வந்தது சிட்டுக்குர்வி.. நல்லா ஆள் சைஸ் ஏறி குண்டாகி வந்திருக்கு.. இருபது நாள் லீவுல வீட்ல உட்கார்ந்து ஒரு கட்டு கட்டியிருக்கும் போல.. போலீஸ்காரன் தொப்பை வேற.. பறக்க முடியாம பறந்து வந்திருக்கு..

என்ன சிட்டுக்குருவி வந்தவுடனே பயங்கர பீடிகை எல்லாம் போடுற.. என்ன நம்ம ஜனதா கட்சி சுப்ரமணியசுவாமி பத்தின நியுஸா.. ன்னு நான் கேக்க டென்ஷனாயிடுச்சு சிட்டுக்குருவி..

ஒரு இருபது நாள் வரலைனா போதுமே.. நான் யாரு.. என்ன சப்ஜெக்ட் பேசுவேன்னு எல்லாம் மறந்துடுமேன்னு ஒரு கோபப்பார்வை விட்டது, சிட்டுக்குருவி..

அட.. அப்படியெல்லாம் இல்ல சிட்டுக்குருவி.. ஆள் வேற இப்படி நல்லா உடம்பேறி வந்திருக்கியா.. அதுனால அரசியலும் பேசுவியோன்னு ஒரு சந்தேகம் அது தான்.. ஆமா.. என்ன இப்படி ஒரு சிலிண்டர் மாதிரி வந்திருக்கன்னு நான் கேள்வி கேட்டது தான் தாமதம்.. என்னை வந்து ரெண்டு கொத்து கொத்திவிட்டுப் போனது..

அடப்பாவி.. கண்ணு வைக்காத.. எல்லாம் என் லவ்வர் சமையலில் வளர்ந்த உடம்பு இதுன்னு டக்குன்னு ஒரு குண்டை தூக்கி போட்டது..

(ஆஹா.. மெல்ல இது அந்தப் பக்கம் போகுதே.. நமக்கு சிக்கலான ஏரியா அது.. கடைசில நமக்கே ஆப்பு வைக்கும்..) சிட்டுக்குருவி வர்றப்போ ஏதோ சொல்லிகிட்டு வந்தியே என்ன அது.. (ஸ்ஸ்..அப்பாடா தப்பியாச்சு.. பேச்சையும் மாத்தியாச்சு)


(மகனே தப்பிக்கிறியா.. உன்னை இரு கடைசில வச்சுக்கிறேன்..) அது ஒண்ணும் இல்ல.. சூப்பர் ஸ்டார் மருமகன் விட்ட டயலாக் தான் இப்போ ஊரெல்லாம் ஒரே பேச்சு.. இப்போ தான் ஒரு கல்யாணத்துல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுகிட்டு போனாங்க.. இப்போ கேட்டா மாமன் மச்சான்னு ஒரு ஸ்டண்ட் வேற.. பங்காளின்னு சொன்னாக்கூட பரவா இல்ல.. (களுக்ன்னு சிரிச்சது சிட்டுக்குருவி) மாமன் மச்சானாம்.. ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா.. சிம்புகிட்ட கேட்டா.. ஆமா நாங்க அப்படித்தான்னு ஒரு ஜால்ரா வேற.. அடப்பாவிகளா.. பொறி பட பாடல் கேசட் வெளியிட வந்தோமா..போனமான்னு இல்லாம இந்தப் பொறி தேவையா இந்த தனுஷுக்கு.. கேட்டா இவர் திருவிளையாடல் ஆரம்பிச்சுட்டாராம். ஒரு படம் ஓடிடக்கூடாதே.. என்று மூச்சு விடாமல் பேசிக்கிட்டே தலையில் அடித்துக்கொண்டது சிட்டுக்குருவி..

அது மட்டுமில்ல.. சூப்பர்ஸ்டார் நடிக்கிற சிவாஜி படத்தின் கேரளா உரிமை மட்டும் 3.10 கோடிக்கு வித்திருக்கிறதா கோலிவுட்ல ஒரே பேச்சு.. ரஜினியின் விசிறியான பாலக்காடு கோவிந்தன் தான் இதை வாங்கியிருப்பதாக பெரிய புரளிப் புயல் ஒண்ணு பயங்கரமா சுத்திகிட்டு இருக்கு.. இது கேரளா சூப்பர்ஸ்டார்கள் மம்மூட்டி, மோஹன்லால் படங்களை விட அதிக விலை என்பதால் எல்லோரும் ஆச்சரியத்துடன் பாக்குறார்கள்.. இந்த ஓப்பந்தத்தில் படம் மே 11 அல்லது ஜூன் 8 வெளியாகும் என்று குறிப்பிடபட்டிருக்கிறதாம். அட.. படம் அப்போ தமிழ் புத்தாண்டுக்கு இல்ல போல என்று பெருமூச்சு விட்டுக்கொண்டது..

சிட்டுக்குருவியின் முன்னால் நான் வைத்திருந்த திராட்சை பழங்கள் சுவைத்து கொண்டே சவுகரியமாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டது.. கார்த்தி.. உனக்கு தெரியுமா.. என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தது சிட்டுக்குருவி.. சிட்டு..இப்படி விஷயத்தை சொல்லாமல் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்று நான் முழிக்க.. அட..இதுக்கெதுக்குப்பா பேய்முழி முழிக்கிற என்று என்னை வம்பிழுத்து அடுத்த சேதியை ஆரம்பித்தது சிட்டுக்குருவி.

இப்போவெல்லாம் இந்த விஷால் அருவாளை கட்டிப்பிடிச்சு தான் தூங்குகிறாராம். அவர் அருவாள் தூக்காம நடிச்ச சிவப்பதிகாரம் ஊத்திகிட்டதால அருவாள் தான் தனக்கு ராசின்னு முடிவு பண்ணிட்டாராம்.. அதுவும் அடுத்து வர்ற ஹரியோட தாமிரபரணியில் அருவாள் இல்லாம சீனே இல்லியாம்.. எப்பா.. இந்த சினிமாக்காரவங்களோட சென்டிமென்டுக்கு அளவே இல்லியேப்பா.. என்று அலுத்துகொண்டது..

இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.. சில படங்கள் வெளியாக.. பொங்கலுக்கு வரும் அஜித்தின் ஆழ்வார் A சர்டிபிகேட்டும், போக்கிரியும் பருத்திவீரனும் UA சர்டிபிகேட்டும் வாங்கியுள்ளன.. அதுவும் ஹரியின் தாமிரபரணியும் இதில் தான் அடங்கும் என்பதால் இந்த பொங்கல் ஒரே கலவரப் பொங்கலாக இருக்கும் என்று கோலிவுட் மக்கள் சொல்கிறாங்க..

எப்படி வேண்டுமனாலும் இருக்கட்டும்..எனக்கு என் ரோஸ் (சிட்டுக்குருவியின் லவ்வர் பேர்) தான் பொங்கல் செய்யப்போறா.. என்று சிட்டுக்குருவி தம்பட்டம் அடித்துக்கொண்டது.. அதோட விட்டிருக்கலாம்.. போற நேரத்துல வந்து என் காதுல.. என்ன பொழப்புய்யா உன் பொழப்பு.. இன்னும் நீயே சமச்சுகிட்டு.. சே.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே.. ன்னு ஒரு அட்டாக்கை வேற போட்டுட்டு போகுது.. அட்டாக் பொறுக்காமல் சிட்டுக்க்க்க்க்க்குருவிவிவிவிவிவிவிவிவி.. என்று கத்தினேன்.. அது அப்படியே ஒரு டைவ் அடிச்சு ராக்கெட் மாதிரி பறந்து விட்டது.

பளபளக்கும் பழைய மஹாபலிபுர சாலை - படங்களுடன்

அய்யோ.. பக்கத்து வீடு பார்வதிக்கு திடீர்னு இடுப்புவலி வந்திடுச்சே.. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்..ஒரு ஆட்டோ புடிங்கப்பா என்று கத்தியவாறே வந்தாள் சரோஜா.. அப்படி அவசர அவசரமாக நாவலூரில் இருந்து ஆட்டோ பிடித்து ராயப்பேட்டை போவதற்குள் ஆட்டோகுள்ளேயே குழந்தை பிறந்து விடும்.. ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், பழைய மஹாபலிபுரம் சாலையில் மருத்துவமனை சென்ற பல கர்ப்பிணி பெண்களின் நிலைமை இது தான். அதற்கு பிறகு மழைகாலத்து புற்றீசல் போல கணினி நிறுவனங்கள் வந்த பிறகு அதற்கு செல்லும் ஒவ்வொரு நிறுவன பேருந்துகளில் பயணித்தே முதுகெலும்பு வளைந்து போனது எத்தனையே மக்களுக்கு.. ஆனால் அவர்கள் கனவெல்லாம் நனவாக போகிறது. மத்திய கைலாசத்தில் ஏறினால் எவ்வித பிரச்சனையும் இன்றி நாவலூர் போகலாம்..

டைடல் பார்க்கின் புதிய முகப்பு



இனிமேல் அவர்கள் முதுகெலும்பெல்லாம் அப்பாடா..என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளும்.. ஆமாம்.. பளபளக்கும் ரோடுகள்.. இருபுறமும் கண்ணை கவரும் கருதுச் செறிந்த, பார்த்தால் மனதை இறகு போல் லேசாக்கும் வகையிலான விஷயங்கள்.. சிலை உருவாக்கங்கள்.. சுவற்றுசித்திரங்கள் என்று பக்காவா ஒரு நவீன சாலை உருவாகி வருகிறது..

அழகிய பேருந்து நிறுத்தம்




முதலில் இந்த சாலை போட ஆரம்பிக்கும் போது..அட போடவைப்பது போல மாதிரி படங்கள் வைத்திருப்பார்கள்.. ஆச்சரியமாய் இருக்கும்.. இப்படி எல்லாம் இருக்குமா என்று அதிசயப்பட்டதுண்டு.. ஆனால் இன்று அங்குள்ள பேருந்து நிறுத்தங்களை காணுகையில்..எல்லாம் நனவாகும் தூரம் எட்டும் பக்கத்தில் தான் இருக்கிறது. அதிலும் இந்த மாதிரி சிலை மற்றும் கலை வடிவங்கள் எல்லாம், எப்படி இப்படி எல்லாம் என்று கண்களை அகல வைக்கிறது.

சாலையின் பக்கவாட்டுகளில் நடனமாடும் சிலைகள்




வருக.. எங்கள் புதிய கனவுச் சாலையே.. அதிலே பயணிக்கபோறவன் என்ற வகையில் அதனை வரவேற்க கையில் மாலையுடன் முதல் வரிசையில் நிற்கிறேன்.. ஆனால் இவ்வளவு அருமையான சாலையை தந்த பின், அதை ஒழுங்காக பராமரிப்பார்களா என்ற எண்ணம் கொஞ்சம் மனதை அழுத்தவே செய்கிறது.. ரோடு போட அரசாங்கத்தை நாம் எப்படி வற்புறுத்துகிறோமோ அவ்வாறே அதை பரமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் முயல வேண்டும்.. அரசுக்கு உதவ வேண்டும்.. சும்மா சிகரெட் துண்டுகளையும், தின்பண்ட பெட்டி மற்றும் காகிதங்களையும் சாலையிலே விட்டெறிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த சாலையின் ஒரு அடி உங்களுக்கு சொந்தம் என்று நினையுங்கள். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு சென்றால் மட்டும் சலையிலே குப்பை போடாமல் தவிர்க்கும் நீங்கள், சரியான வேகத்தில் வண்டியை ஓட்டும் நீங்கள், இந்தியா போனவுடன் 'பழைய குருடி கதவை திறடி' என்று மாறும் மாற்றத்தை ஒழியுங்கள்..

சாலையோர சுவர் ஓவியங்கள்


நாட்டை காப்போம்.. சாலையை காப்போம்.. எல்லாவித சக்திகளை சரியாக உபயோகிப்போம்.. என்று எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள்.. இல்லையெனில் அடுத்து வரும் எதிர்கால சந்ததியினர், நமது பேரக்குழந்தைகள் தான் அல்லாடுவார்கள்.


படங்கள் அனைத்தும் சென்னையை காதலிக்கும் அவியுக்தா கீர்த்திவாசனின் பொக்கிஷத்திலிருந்து... நன்றி கீர்த்தி

இது அவர் உருவாக்கிய அடையாளம்

Sunday, January 07, 2007

மடை திறந்து பாயும் நதியலை நான் - ரவுசான புதுசு

சில சமயம் காலத்திற்கு ஏற்ப சில பழைய விஷயங்கள் மாற்றப்படும் போது, அதுவும் ரசிக்க வைக்கும் வகையில் பரிமாறப்படும் போது, நமக்கு ஏனோ அந்த புது விஷயங்கள் பிடித்துவிடுகின்றன.இது இட்லியை வைத்து கொண்டு சுடச்சுட இட்லி உப்புமாவாய் தருவதை போல சில சமயங்களில் இருக்கிறது. ரீமேக் பற்றி பல கருத்துகள் இருந்தாலும், சில சமயம் அந்த முரண்பாடான கருத்துக்களை முதுகுக்கு பின்னால் அனுப்பிவிட்டு, இதை எல்லாம் ரசிக்கவே மனம் விரும்புகிறது.

நிழல்கள் படத்தின் மடை திறந்து பாயும் நதியலை நான் பாட்டின் காட்சி



நிழல்கள் படத்தில் பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று வண்ணக் கனவுகளுடன் வாழும் சந்திரசேகருக்கு, ஒரு தயாரிப்பாளருக்கு மெட்டுக்கள் போட்டு காட்டும் வாய்ப்பு தரப்படுகிறது. அப்போது மடை திறந்த வெள்ளம் போல மனதில் பிரவாகமெடுத்து, வருகிறது மடை திறந்து பாயும் நதியலை நான் என்னும் பாடல். அப்போது புழக்கத்தில் இருந்த கருவிகளை வைத்தே அருமையாக தந்திருப்பார் இசைஞானி. உற்சாக பிரவாகம் எடுக்கும், துள்ளல் இசை பாடல். இப்போது கேட்டாலும் நமது இதயம் அந்த இசையினால் துள்ளுவதென்னவோ உண்மை. இளையராஜா அவர்களின் இசைக்கு இது போன்ற பாடல்கள் மிகப் பெரும் எடுத்துக்காட்டு. அதுவும் அந்த பாடலில் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்னும் வரிகளுக்கு இளையராஜாவே முகம் காட்டுவது இன்னும் சிறப்பாய் இருக்கும். இந்த பாடலை கேட்கும் போது, அந்த மடை திறந்த வெள்ளத்தில் நானும் அடித்து செல்வதை போல் உணர்வேன். மேல உள்ள அந்த படத்தின் பாடல் காட்சியை பார்க்கும் போது, நானே அந்த பாடலில் குதிப்பதாய், பறப்பதாய் கனவில் வாழ்கிறேன்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த பாடலை அமெரிக்காவில் வாழும் சில நண்பர்கள் (அவர்களை பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியது) மேற்கத்திய இசை வடிவத்தில் அருமையாக மாற்றி இருந்தனர். மிகவும் ரசிக்க வைத்த அந்த வீடியோ தான் கீழே உள்ளது. இங்கே இருக்கும் மக்கள் போல நடனம், செய்கைகள் கொண்டு அருமையாக எடுத்துள்ளனர். அவர்கள் இதற்காக எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது இதை பார்த்தலே புரியும்.

புது வடிவ பாட்டும் அதன் காட்சியும்




இது போன்ற இளங்கலைஞர்களுக்கு, இன்னும் சிறப்பாய் தனித்துவ இசைகள் தந்து, புது இசை வடிவங்களை தந்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மேல உள்ள பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது - இதை பற்றிய தகவல் தந்த பெத்தராயுடுவிற்கு நன்றி.

Saturday, January 06, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)

இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்.. வெளியில் சற்று முன் பெய்த மழை இன்னும் உள்ளே அந்த பாதிப்பை தந்து கொண்டுதான் இருந்தது. காலையில் புது வருஷத்தில் வாஷிங்டன் நகரமே அந்த மழையினால் கழுவப்பட்டிருந்தது.. வானம், ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை.. இந்த மாதிரி பருவ நேரத்தை அவ்வளவு எளிதாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.. ஒவ்வொரு துளியாக மரங்கள் பூமிக்கு அனுப்பும் அந்த பொழுது வைரமுத்து பொன்மாலை பொழுது என்று எழுதிய அந்த பாட்டின் தருணத்தை விட ரசிக்க வைப்பது. ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு, ஊர் சுத்த கிளம்ப ஆரம்பித்த சமயமே வானம் மழை சாரல் மலர்களோடு எங்களை வறவேற்க தயாராய் இருந்தது. முதலில் ஒயிட் ஹவுஸை பார்க்க வேண்டும் என்று கூகிளில் எடுத்த மேப்பை கையில் வைத்துகொண்டு ஆரம்பித்தோம்..


(பிரதிபலிப்பு குளத்தில் தெரியும் வாஷிங்டன் நினைவுச் சின்னம்)

நீண்ட தூர நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவதை விட இது மாதிரி நகரச் சாலைகளில் ஓட்டுவது சற்று சிரமம். ஒரு இடத்தில் திரும்ப மறந்தாலும் அந்த வீதியின் பெயரை கவனிக்காமல் விட்டாலும், மறுபடியும் அந்த இடத்துக்கு வருவதற்கு, நமது கார் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும். வழக்கம் போல எப்படியோ எங்கேயோ வழியை தொலைத்துவிட்டோம். ஆனால் ஹோட்டலில் எடுத்த சிட்டி மேப் கைகொடுத்தது. எப்போதும் இது மாதிரி புதிய நகரத்துக்கு சென்றால் அங்கு ஓட்டலின் வரவேற்பறையில் இருக்கும் எல்லாவிதமாத கையேடுகளையும் எடுத்துக்கொள்ளுதல் இந்த மாதிரி நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.. அதை வைத்து ஓயிட் ஹவுஸ் சென்று சேர்ந்தோம். அங்கே புஷ் நம்மை வறவேற்க தயாராய் காலை மழை போலவே காத்து கிடந்தார் என்று சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை. என்ன என்ன இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அதெல்லாம் நடக்கும் தூரத்திலே இருந்ததால் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கிளம்பினோம்.


(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தெரியும் லிங்கன் நினைவு மண்டபம்)

முதலில் வாஷிங்டன் நினைவுச் சின்னம். தனது முதல் ஜனாதிபதிக்காக அமெரிக்கா எழுப்பிய அழகான, அமெரிக்காவின் பழைய கட்டிட கலைக்கு சான்றாக விண்ணை துளைக்குமாறு வானளாவ நிற்கிறது, இந்த வெள்ளைவண்ண நினைவுச் சின்னம். உள்ளே செல்லும் முன் எல்லாவகையிலான பாதுகாப்பு சோதனைகளுக்கும் நம்மை உட்படுத்துகின்றனர். இது கிட்ட தட்ட 160 மீட்டர் உயரம் கொண்டது. உள்ளே உச்சிவரை செல்லுமாறு லிப்ட் வசதியும் உண்டு. இதன் உச்சியில் இருந்து வாஷிங்டன் நகரத்தின் எல்லா பழம் பெரும் சின்னங்களையும் காணலாம். இந்த உயரிய நினைவு சின்னத்தை வெறும் கற்களை அடுக்கியே கட்டி உள்ளனர். முழுப் பூச்செல்லாம் கிடையாது. ஒரு தொழிற்சாலை புகைகூண்டு வடிவத்தை ஒத்து இது இருக்கிறது. உள்ளே, உச்சியிலே பார்ப்பதற்காக நான்கு திசைகளிலும் பாதுகாப்பான கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன. அதுவும் நாங்கள் போயிருந்த போது அப்போதிருந்த வானிலை காரணம நன்றாக எதனையும் அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. ஆனால் கண்களை உரசியவாறு சென்றது மேக மூட்டங்கள். இந்த உயர்ந்த சின்னத்தின் பக்கவாட்டில் செயற்கை முறையிலும் வெண்புகைகளை உருவாக்குகின்றனர். உள்ளே லிப்ட் மூலம் இறங்கும் போதும் பக்கவாட்டு சுவர்களில் சில நினைவு சின்னங்களையும் சில கற் ஓவியங்களையும் பதித்திருப்பதை நாம் காணலாம். அதுவும் 150 வருஷதுக்கு முன்னலேயே இப்படி ஒரு அற்புத, வாயை பிளந்து வியக்க வைக்கிற சின்னத்தை உருவாக்கிய, பெயர் மறந்து போன அந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில்.. பின்னே பசிபிக் கடல் தூண்.. அதனை சுற்றிய மாநிலத் தூண்கள்)

இந்த நினைவு சின்னத்தின் வடக்கு பக்கம் ஓயிட் ஹவுஸும், கிழக்கு பக்கம் அமெரிக்க பாராளுமன்றமும், தெற்கு பக்கம் ஜெப்பர்சன் நினைவு கட்டிடமும், மேற்கு பக்கம் லிங்கன் நினைவு மண்டபமும் இருக்கிறது. இந்த நான்கு திசைகளையும் உயரத்தில் இருந்து, வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து நீங்கள் பார்க்கலாம். நாங்கள் வழக்கம் போல இந்த சின்னத்தை சுற்றி ஒரு நடை வந்து, எங்களது போட்டோ செஷன்களை முடித்தோம். ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாம் சென்று வந்ததற்கு அடையாளங்கள் இந்த புகைபடங்கள் தானே. அங்கிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நடந்தால் அழகிய நீரூறுக்களுடன் இரண்டாம் உலகப் போருக்கான நினைவிடம் இருக்கிறது. இது வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலும், லிங்கன் நினைவு மண்டபத்திற்கு இருநூறு அடி முன்னாலும் உள்ளது. இந்த இடத்தை சுற்றி அமெரிக்காவின் எல்லா மாநிலத்துக்கும் தனித் தனியான தூண்கள் ஒரு அரை வட்ட வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது. எல்லா தூண்களிலும் அந்த மாநீலத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தூண்களையும் முறுக்கேறிய மாதிரி கற்கயிறுகளாலேயே இணைத்தும் உள்ளனர். இந்த அரை வட்டத்தின் கிழக்கு முடிவில் பசிபிக் என ஒரு பெரிய தூணும் கிழக்கில் அட்லாண்டிக் என்னும் தூணும் கட்டப்பட்டு ஒரு முழுமையான அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நீரூறிலும் நீர் கீழிலிருந்து மேல் சென்று மறுபடியும் கீழ் விழுவதை காணுகையில், இரண்டாம் உலகப் போரில் போரிட்ட ஒவ்வொரு போர் வீரனின் வேகத்தையும், அவனது துடிப்பையும் அவனது எழுச்சியையும் பறைசாற்றுவதாகவே உள்ளது.

(அந்த அழகான நடைபாதையில்)

இரண்டாம் உலகப்போரின் நினைவிடத்தை கடந்து, லிங்கன் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஒரு நீளமான பாதை ஒன்று வளைந்து வளர்ந்த மரங்களால் சூழப்பட்டு, இரு பக்கமும் உயர வெள்ளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த மரங்கள் இலைகளை பூமிக்கு அனுப்பிவிட்டு குளிர்காலத்துக்காக மொட்டை அடித்துவிட்டு வேண்டுதலுடன் நிற்பது போல் இருந்தாலும், நாங்கள் சென்றிருந்த அந்த நேரத்தில் அழகாய் தெரிந்தது. அந்த நடைபாதையில் நடந்து போகையில் அப்ப கைபிடித்து குழந்தை வயதில் நடந்த அந்த காலத்தை நினைவூட்டியது எனக்கு.

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தண்ணீரில் லிங்கன் மண்டபம் மிதப்பது போல் எடுத்த ஒரு புகைப்படம்)

இந்த நினைவிடத்தில் இருந்து, வளர்ந்து விரிந்த மரங்களிடையே அமைந்த நடைபாதையில் நடந்தால் லிங்கன் நினைவிடத்தை அடையலாம். இந்த இரண்டு நினைவிடத்தையும் இணைப்பது ஒரு பெரிய செவ்வகக் குளம். லிங்கன் நினைவிடம், இந்த குளம், வாஷிங்டன் நினைவுச் சின்னம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பிரதிபலிப்பு குளம் அதாவது ரிப்லெக்டிங் பூல் என்று பெயரிட்டுள்ளார்கள். போசாக்கான யானையின் கால்களை விட கிட்டதட்ட பதினைந்து மடந்கு பெரிதான பத்திற்கும் மேற்பட்ட தூண்களால் கட்டபட்டுள்ள இந்த லிங்கன் நினைவு மண்டபத்திலிருந்து பார்த்தால் வாஷிங்டன் நினைவுச் சின்னம் இந்த குளத்தில் படுத்துகிடப்பது போல் பிரதிபலிக்கும். லிங்கன் நினைவு மண்டபத்தில் அவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலையும் அவரது மற்றும் அவரை பற்றிய வாசகங்களும் உட்கட்டிட சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடமும் அமெரிக்க கட்டிட கலையை இறுமாப்பு கொண்ட கர்வம் கொண்ட ஒரு துறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

படங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டுங்கள்

(தொடரும்)

Thursday, January 04, 2007

ஆபீசுல இல்லாத ஆளை கண்டுபிடிக்க எளிய வழி

இப்படி எல்லாம் எதிர்காலத்துல நடக்குமோ.. பாவம் வர்ற சந்ததிகள்.. ஆனா இதுலையும் நம்ம நாட்டாமை மாதிரி டகால்டி காமிக்கிற ஆட்கள் இருக்கத்தான் செய்வாங்க

Tuesday, January 02, 2007

சூடமாய் கரையும் நினைவுகள்

எழுதாத பேப்பரை கையில் வைத்து கொண்டு என்ன எழுதலாம், எப்படி எழுதலாம், எப்படி எழுதினால் சுவையா இருக்கும் என்று பலவாறான யோசனைகள். இப்படி எத்தனை கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்பதில் மட்டும் ஒரு சின்ன எல்லையை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். அத்தனை பக்கங்களில் அவனே முதலில் எழுதுகிறான். நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான். உலகில் அத்தனை பேருக்குமாய் அவன் எழுதுகிறான். நாம் நமக்கே எழுத சிரமப்படுகிறோம். இப்படித்தான் வருடத்தின் முதல் நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்படுகின்றன.

நடந்தது எல்லாம் இப்போது நினைக்கையில் மங்கலான கனவுகளாய் தெரிகிறது. நடக்கபோவது எல்லாம் இழுக்க இழுக்க நீளும் ரப்பராய் நீண்ட கனவுகளாய் இருக்கிறது. முன்னாலும் பின்னாலும் கனவுகளை சுமக்கும் மனிதன்,வாழ்க்கை எல்லாம் கனவுகளை போலவே போகிறது, முன்னால் நகரும் போது பின்னால் ஓடி கரைகின்ற புகைவண்டி புகைகளாய்.

ஓசோன் மண்டலம் ஒரு பக்கம் கிழிந்து போய் மழைக்காலங்களில் வெய்யிலையும் வெய்யில் காலங்களில் குளிரையும் மாற்றித் தந்து தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. ஒரு பக்கம் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் காடுகள் கான்கிரீட் சுவர்களாகிறது. இப்படியே காடுகள் இடிக்கப்பட்டால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் இந்த கான்கிரீட் கட்டடங்களை கண்டு மழைபெய்யுமா இந்த வானம்? ஓசோ சொன்னதை போல இயற்கையை நாம் மதித்தால் அது நம்மை அரவணைக்கும். முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள். இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.

புதியதாய் பிறக்கும் ஒரு வருடம் நமக்கு ஒரு வயதை மட்டுமா தருகிறது. புதிதாய் போடப்பட்ட ஒரு சாலையிலே போகின்ற வண்டிகள் தரும் தடங்களை போல எத்தனை எத்தனை படிப்புகளை சொல்லித் தருகிறது. அடுத்தவரின் தவறுகளை இங்கே பட்டியலிட்டுகொண்டே தனதை பூஜை அறையின் அடியிலே சமாதியாக்குகின்றனர். பதவிகளை ஏற்கும் போதும் கொள்ளப்படும் பிரமாணங்களை போல வாழும் ஒவ்வொருவரும் ஒன்றை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். அது புதிய ஒன்றை கண்டுபிடிக்க இல்லையென்றாலும் பழையதை அழிக்காமல் இருத்தல் பெரியது.

யாருமே இல்லாத ஒரு நாளிலே உக்கார்ந்து யோசித்தால் இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள் தூளியில் ஆடுது. சில சமயம் நமக்கு முன்னால் நடக்கும் சில விதி மீறல்கள், படி தாண்டல்கள் நமக்கு இதயத்தின் அதிகபட்ச துடிப்புகள் கணக்கிட உதவுகிறது. அன்னியன் விக்ரமாய் தலைவிரித்து கற்பனையில் குதிரையோடு பறக்கிறது.

நமக்கு நாமே கோடுகளை இட்டு, உற்றோர் உறவினர் என்று இல்லாமல் எல்லோரும், உலகில் வாழும் ஒற்றை ஜாதி மலரிலிருந்து அதை பிறக்க வைக்கும் சூரிய பிரபு வரை சுகத்தோடு இருக்க, ஆசை கோபம் களவு தெரிந்தவன் பேசத் தெரிந்த மிருகம் என்று ஆண்டவனின் ஆறு கட்டளையின் ஒன்றாய் இல்லாமல், பல வண்ண அரிதரங்கள் பூசி நாலு பேரை அழ வைப்பதை போல, க்ளுகென முகிழ்க்கும் உதட்டு மலரின் புன்னகை கொண்டு நெஞ்சமெலாம் வாழ்த்தி, புறாக்களில் மட்டுமல்ல இதயங்களிலும் அமைதியை, இமயம் தொட்டு விடும் ஆகாச எண்ணங்களுக்கு இந்த வருடத்தில் புது வண்ணம் பூசுவோம்.

போகும் வழியெல்லாம் காற்று உங்களுக்கு வாசனை தந்து தடையென நிற்பவை எல்லாம் தடமில்லாமல் போகிட, போகியில் தீயிட, பரமபத ஏணிகளில் ஏறி, பாம்புகளில் தப்பித்து, வாழ்க்கை தாயத்தில் வாகை மலரது சூடி, எனக்கு அறுபது அடுத்தோற்கு நாப்பது என எல்லாம் ஒதுக்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மனத்தில் எழுச்சி எண்ணி என்றும் சிறப்பாய் வாழ இந்த ஆண்டு வேண்டும் என வேண்டியது எல்லாம் கிடைத்து உங்களை வாழ வைக்க வேண்டுகிறேன்