Saturday, May 22, 2010

பலே ஜெயலலிதா மேடம்

மின்சார வெட்டுக்கள், விலைவாசி உயர்வுகள், குள ஆக்கிரமிப்புகள், காலாவதி அதிர்ச்சிகள் என்று மக்களுக்கு நாளுக்கு நாள் அதிர்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்க, புதியதாய் மாபெரும் விஷயத்தை கையெலெடுத்து போரட்டம் செய்ய தன் படைகைளை ஏவியிருக்கிறார், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியின் தலைவர், தமிழ் நாட்டை இரு முறை ஆண்ட செல்வி ஜெயலலிதா அவர்கள். என்ன போராட்டம், தலைமைசெயலக ஊழியர்கள் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பது..(ஏனைய பெரும் போராட்டங்கள் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்துகொண்டிருப்பீர்கள்)

இன்னமும் குளிர் அறையில் இருந்து உலகம் பார்த்து அரசியல் நடத்துகிறார் பாவம், கடந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் கூட இன்னும் சுட்டிக்காட்டபடவில்லையோ என்னவோ.

சிறிதாவூர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா அவர்களை விடுவித்திருக்கிறார்கள். தாசில்தாரர் இடம் மாற்றிய போது, ஆட்சியில் யார் இருந்தார்கள்? அவனவன் ஒரு கார்பரேட் கம்பெனி போல ஒவ்வொரு ஆண்டு தனது நிறுவனத்தின் மதிப்பை கூட்ட 'என்னவெல்லாமோ' செய்துகொண்டிருக்க, இன்னும் காக்கை உட்கார பனம் பழம் விழுமா, ராஜிவ் இறப்பில் மகுடம் சூட்டியது போல காத்திருப்பது விந்தைக்குறியது.

தனெக்கென்று ஒரு சேனல் வைத்துகொண்டு அதில் தன்னை பற்றியே பேசிக்கொண்டு, கிணற்று தவளை மாதிரி இருப்பது, இப்படியொரு ஆலமர கட்சி அடிசாய போகிறதே என்று, லட்சக்கணக்கான அநுதாபிகள் கண்ணீர் விடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதை தான் குறிக்கிறது.

எதிர்கட்சி சிறந்திருந்தால்,செயல்பாட்டோடு இருந்தால் நிச்சயம் மக்கள் நலம் பெறுவர். பெறுவோமா?

நடிகர் விஜயின் 'தல'க்கு மேல் கத்தி


அடுத்தடுத்து ஆதி முதல் சுறா வரை (போக்கிரி மட்டும் இதில் விதிவிலக்கு) மொக்கை படங்களாய், அரசியல் ஆசை காரணமாய் அவசர அவசரமாய் எடுத்த எல்லா படங்களும், செல்போன் நிறுவனங்களுக்கு மட்டும் லாபம் தந்து, தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட வைத்ததால், இன்று கூடும் அதன் சங்க உரிமையாளர்கள் மிகவும் முக்கியமான முடிவுக்கு (தங்கள் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படம் இல்லை ரெட் கார்டு) வர இருக்கின்றனர். ஏற்கனவே ஆதி படத்தின் போது இதே போல ஒரு பிரச்சினை ஏற்பட்டது. எப்படியோ சமரசம் செய்து, சரிசெய்தார்கள். இப்போது மறுபடியும்?

ஒவ்வொரு முறையும் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம் என்றும் ரசிகர்களை போல நம்பிக்கொண்டிருந்த இவர்களுக்கு, சுறா பெரிய ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் வேலைக்கு ஆகாது இன்று நினைத்து விஜய்க்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருகின்றனர்.

தியேட்டர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும், இவ்வளவு காலமா என்ன பாஸ் பண்ணிகிட்டு இருந்தீங்க? சுறாவுக்குமா அதிக விலை கொடுத்தீங்க?

விஜய் சார், தியேட்டர் ஆபரேட்டர் முதல் உங்கள் 'குட்டி' ரசிகர்கள் வரை எல்லோரும் கடுப்பாகி இருக்கின்றனர்.. வித்தியாசமா ஏதாவது பண்ணுங்கண்ணா..

கௌதம் சாருக்கு திருப்பாச்சி, சிவகாசி டிவிடி பாக்கத்தானே கொடுத்தீங்க?
ஆமா, ராகுல் கிட்ட உங்கப்பாவுக்கு கவர்னர் போஸ்ட் கேட்டீங்களாமே, உண்மையா.. பாத்துங்கண்ணா உங்களை பத்தி இப்படித்தான் நிறைய நியூஸ் வருது..

இனிமேலாவது நல்ல படம் கொடுங்கண்ணா..

Friday, May 21, 2010

ரஜினியின் ஆங்கிலம்

ரஜினியின் படங்களில், ஆரம்பித்தில் இருந்து இன்று வரை பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும், பாம்பு, கராத்தே ஸ்டைல், முக்கியமாக ஆங்கிலம் பேசுற ஸ்டைல் என்று பெரிய பட்டியல் நீளும்.

ரஜினியின் ஆங்கிலம் பேசும் விதத்தில், இன்னமும் மனசில் நிலைத்த படம் குரு சிஷ்யன். படம் நெடுக ரஜினி காமெடி சரவெடி வெடித்துக் கொண்டிருப்பார். இன்னமும் குரு சிஷ்யன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால், சேனல் மாற்றாமல் ரசிப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் அவர் ஆங்கிலம் தெரிந்த மாதிரி எதையாவது பேச, மற்றவர்கள் முழிக்க, அப்படியொரு படம் வந்தே நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்து இன்றும் மனதில் நிற்கும் வசனம் "Mr. Paramasivam, I want to know, No or Yes". படம் பாருங்கள் நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.

குரு சிஷ்யன் தவிர, வேலைக்காரன் வசனம் "I can talk English, I can walk English, I can swim English" மிகவும் பிரபலமானது.

அண்ணாமலை, உழைப்பாளி போன்ற படங்களில் ரஜினி ஆங்கிலம் பேசுவதும், அதை அவர் குழப்பி அடிப்பதும் எல்லோராலும் ரசித்த ஒன்று. இப்படி இவர் படங்களில் ஆங்கிலத்தை குழப்பி அடிக்க, ஷங்கரின் சிவாஜி என்னை ஆச்சரியப்படவைத்தது. ஆம். நுனி நாக்கில் ரஜினி ஆங்கிலம் பேசியது முற்றிலும் வித்தியாசம் தான். எப்படி அவர் ஆங்கிலம் பேசத் திணறியது மிகவும் ரசிக்கப்பட்டதோ அதே போல், அவரின் சரள ஆங்கிலம் வெகுவாக ரசிக்கப்பட்டது என்பது உண்மை. Cool Buddy!

சிவாஜியிலே அப்படி என்றால், எந்திரனில். எல்லா ரசிகர்களுடன் நானும் எதிர்பார்ப்பில்.

Wednesday, May 19, 2010

சென்னை குளிர்கிறது

வரப்போகிறது, விரைவில் வந்துவிடும் என்று எதை சொன்னார்களோ அது இப்போது வந்துவிட்டது என்றே நினைகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அனலாய் சுட்டெறித்த அக்னிக் கோடை, லைலா (பெயர் தான் காரணமோ) என்ற புயல் வந்து சென்ற பிறகு குளிர்கிறது. உண்மையாய் இந்த இரவு என்னால் போர்வை உதவி இல்லாமல் உறங்க முடியவில்லை. தட்ப வெட்ப சூழ்நிலை மெதுவாய் மாற ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி அனலாய் தகிக்கும் என்று நினைக்கிறேன்
பெரிய்ய்ய்ய்ய பதிவு இடமுடியவில்லை என்றாலும் இதுமாதிரி சிறிதாய் எழுதலாமென்ற எண்ணத்தில் மறுபடியும் ஆரம்பிக்கிறேன்.
எல்லோருக்கும் எனது வணக்கங்கள்

Saturday, January 23, 2010

சென்டிமெண்ட் சினிமா : எம்ஜிஆர் பட தலைப்புகளும் வசூல் வீழ்ச்சிகளும்

சமீபத்தில் வந்து பயங்கர விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் வரை எம்ஜியார் பட தலைப்புகளை வைத்த எந்த படங்களும் வசூலை வாரி கொடுக்கவில்லை என்பது உண்மை. எனக்கு ஞாபகம் இருந்து சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் தான் எம்ஜிஆர் தலைப்பில் வந்த முதல் படம் (ஏதோ எல்லா சரத்குமார் படங்களும் பயங்கர வெற்றியை கொடுத்த மாதிரியும் இது ஓடாததிற்கு ஒரு காரணம் சொல்வதாக நினைக்க வேண்டாம்) அதை பின் அன்பே வா, வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஓருவன் எல்லாமே குப்பர படுத்துக்கொண்ட படங்கள் தான்.. என்ன காரணமாக இருக்க முடியும்.. கதையும் கொடுத்த விதமும் சரியில்லை என்பது தான் முதல் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் பார்க்காத ஆள் யாரும் இல்லை. அப்படி இருக்க மறுபடியும் ஏன் இப்படி தலைப்புகளை தெரிவு செயவேண்டும்..

இப்போது நடிகர் ராஜ்கிரண் தனது புதி சொந்த படதிற்கு மலைகள்ளன் என்று பெயர் வைத்திருக்கிறார். ஓடுமா அந்த படம்? நீங்கள் தமிழ் சினிமாவின் சென்டிமெண்டுகளை நன்றாக கவனித்தாலே ஒரு படம் ஓடுமா ஓடாதா என்று சரியாக சொல்லிவிட முடியும். எப்படி? வரும் வாரங்களில் பார்க்கலாம். ஒரு உதாரணதிற்கு, வில்லு ஓடாது என்று என் நண்பர்களிடம் நான் எடுத்து சொன்ன சென்டிமென்ட் காரணங்கள் கீழே
1. ஒரு பொங்கல் விட்டு ஒரு பொங்கலிலோ, அல்லது ஒரு தீபாவளி விட்டு ஒரு தீபாவளிலோ தான் விஜய் படங்கள் ஓடி உள்ளன. ஒரு பொங்கலில் ஆதி காலை வாரிவிட, அடுத்ததில் போக்கிரி தூக்கி நிறுத்தியது. அதனால் அடுத்த பொங்கல் ரிலீசான வில்லு இந்த சென்டிமென்ட் படி படுத்துகொள்ளூம்.
2. சூப்பர் வெற்றி கொடுத்த இயக்குநர் விஜயின் அடுத்த படத்தை கவிழ்த்து இருக்கிறார். பாசில் காதலுக்கு மரியாதைக்கு பிறகு கண்ணுக்குள் நிலவிலும், ரமணா திருமலைக்கு பிறகு ஆதியிலும்.. அதனால் போக்கிரிக்கு பிறகு வில்லுவும் பிரபு தேவா எடுப்பதால் கவிழ வாய்ப்பு உள்ளது. (இதில் பேரரசு விதிவிலக்கு).
3. அப்போது நயன்தாராவின் மார்க்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருந்ததால்.. ஏகன், சத்யம் என்று அவரின் படங்கள் அடிமேல் அடி வாங்கி கொண்டிருந்தன

மேலே சொன்ன மாதிரி இன்னும் பல சென்டிமென்ட்கள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக அலசி காய்ப்போடுவோம் நேரம் கிடைக்கும் போது

Friday, January 15, 2010

நான் தகப்பனானேன்

வாழ்க்கையின் அடுத்த அடுத்த அனுபவங்கள் மிகவும் அதிசயமானவை..ஆச்சர்யமானவை.. அப்படி எதிர்பார்த்து, காத்திருந்து, ஒவ்வொரு நாளும் கண்கள் பூத்திருந்து நிகழ்ந்தது தான் நான் தந்தையாகிய தருணம்.. நவம்பர் மாதம் 5-இல் நான் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனானேன்.. எனது ஆசையும் பெண் குழந்தை தான்.. ஆண்டவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடந்தது.. அந்த நாள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் தனிப்பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..
அதுவும் கிட்டதட்ட மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 25 நாளுக்கு குழந்தை பிறந்தது.. இப்போது தாயும் சேயும் நலம்..

பெயர் : வேதாந்திகா

விரைவில், இங்கே குழந்தையின் புகைப்படத்தையும் இடுகிறேன்.. இப்போதைக்கு ஆர்குட்-டில் இருக்கிறது..

Thursday, January 14, 2010

ஔவையார் கண்ணாடி அணிந்திருந்தாரா?

பத்து வருஷத்துக்கு முன்னால், ஒரு வீதியில் ஒரு மளிகை கடை இருக்கும். ஆனால் இன்று வீதிக்கு ஒரு பணம் வழங்கும் இயந்திரம், மருந்துக்கடை, கண் சிகிச்சை தரும் இடங்கள், மூக்கு கண்ணாடி பொருத்தி விடும் கடைகள் என்று பல்கி பெருகிவிட்டன.. இத்தனை பெருக காரணம் தொழில் நுட்பமா இல்லை நமது வாழ்க்கை முறையா என்று ஒரு நாளும் நாம் சிந்தித்தது கிடையாது. காரணம் தெரியாத காரணத்தால் முன்னோர் பழக்கங்களையும் நாம் கடைபிடிப்பது இல்லை.. இயந்தர வாழ்க்கையாகி இன்று எதற்காக என்று தெரியாமல் வாழ்கிறோம்.. எதிர்கால சமுதாயம் நம்மை விட வேகமாக உருமாறி கொண்டிருக்கிறது ஒரு தவறான பாதையில் பயணம் கொண்டு..

என்று முதன் முதலாய் கண்ணாடி அணிய மனிதன் ஆரம்பித்தான் என்று பார்ப்பதை விட ஏன் ராஜ ராஜ சோழனும், பிசிராந்தையாரும், நக்கீரரும், ஔவையாரும், மாவீரன் நெப்போலியனும், ராவணனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் அணியவில்லை என்று சிந்தனையை தட்டிவிட வேண்டும். அவர்கள் கடைபிடித்த ஏதோ ஒன்றை நாம் செய்யவில்லையா அல்லது நமது உணவு பழக்கம் இந்த அளவு தறிகெட்டுவிட்டதா அல்லது இன்றைய தொழில் நுட்பம் (தொலைகாட்சி பெட்டி, இரவு இரண்டு சக்கர மற்றும் ஏனைய வண்டிகளில் பயணிக்கும் போது எதிர் வாகனத்தின் சக்தி மிகுந்த வெளிச்சம், ஏனைய பிற)காரணமா, என்று தெரியவில்லை.. ஆனால் இப்போது சாலைகளில் நடக்கின்ற முதல் ஐந்து நிமிடத்தில் நீங்கள் ஒரு பத்து பேரையாவது மூக்கு கண்ணாடியுடன் பார்க்காமல் இருக்க முடியாது. நமது முந்தைய தலைமுறைகளை கேலியுடனும் கிண்டலுடனும், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம், நமது நாளைய சமுதாயத்தை எப்படி அமைத்திருக்கிறோம் என்று சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன 2020-இல் மூக்கு கண்ணாடி மனிதர்களின் எண்ணிக்கை ஏறத்தான் போகிறது.. இன்று ஒரு வீட்டில் ஒருவர் இருவர் என்றால் எதிர்காலத்தில் வீட்டில் எல்லோரும் தனது வாழ்நாளிற்குள் கட்டாயம் கண்ணாடி அணிவர் என்பது தான் உண்மை. சிந்திக்க தெரிந்த மனித இனம் இப்போது சிந்தனையை மறந்தோ இல்லை தன்னை பற்றிய ஒருமுக சிந்தனையுடனோ வாழ கற்றுக்கொண்டோம் என்பது தான் உண்மை. இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, சிறார்களை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் அரசாங்கம் அனுமதித்த எண்ணிக்கையிலான பள்ளிக் குழந்தைகளைத் தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று சொன்னால், அரசே எங்கள் வயிற்றில் அடிக்காதே என்று அச்சுத்தாள் அடுத்து எதிர்ப்பை காட்டுகின்றனர் அந்த வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள். இதை என்னவென்று சொல்வீர்கள் நீங்கள்?

ஒழுங்காக பயிற்சி எடுத்து முறையாக ஓட்டுநர் உரிமை வாங்கிய யாராவது ஒரு நபரை எனக்கு காட்டுங்கள்? இப்படி ஓட்டுநர் உரிமம் வாங்கியவருக்கு வாகனத்தில் உள்ள கீழ் மற்றும் மேல் விளக்குகள் (Low and High beam) எதற்காக என்று தெரியுமா? தெரிந்திருந்தால் தான் எப்போதுமே பயன்படுத்தும் உயர் சக்தி மேல் விளக்குகள் எதிர் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்குமே அல்லது அவர்களால் ஒழுங்காக வண்டி ஓட்ட முடியாதே என்று உணராமல் இருக்க மாட்டார்கள்.. இந்த பழக்கம் தொண்ணூறு சதவிகத வாகன ஓட்டிகளை விட அதிகமான நபர்களுக்கு இருக்கிறது.. அதுவும் நான்கு சக்கர ஓட்டுநர்கள் இருக்கிறார்களே யெப்பா, அப்படியே அவர்களின் கண்களை கட்டாயம் திறக்க வைத்து தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு அதே உயர் சக்தி மேல் விளக்குகளை கண்களுக்குள் பாய்ச்ச வேண்டும்.. ஒவ்வொரு முறையும் இரவு நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் இது தான் எனக்கு தோன்றும். அப்படியொரு கோபம். எதிர்காலம் நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அவதார் படம் பார்த்தவுடன் உங்கள் மனத்தில் என்ன தோன்றியது என்று உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் கேட்டதற்கு, பண்டோரா கிரகம் உண்மையில் இருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியதாக கூறியுள்ளார்கள்.. ஹ்ம்ம்.. ஒரு காலத்தில் நமது பூமியும் அப்படித் தான் இருந்தது..நாம் தான் அதனை இன்றிருக்கும் நிலைமைக்கு மாற்றியவர்கள் என்று யாருக்கு புரிகிறது.. இல்லை புரியாதது மாதிரி நடிக்கிறார்களா?

ஒன்று மட்டும் நிச்சயம்.. உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படி யாரும் உயர் சக்தி மேல் விளக்குகளை பயன்படுத்துவது இல்லை என்பது தான் உண்மை.. எப்பொழுதும் போல தம்பட்டம் அடித்தே பழகும் நாம், இந்தியா சீக்கிரம் வல்லரசாகி விடும் என்று பெருமைக்கு சொல்லிகொள்ள வேண்டியது தான்
அடுத்தது நமது உணவு பழக்கம்.. இப்போது மிக அதிகமான குழந்தைகள் நூடுல்ஸும், துரித உணவு வகைகளுக்கும் அடிமையாகிவிட்டனர். பெற்றொர்களுக்கும் நல்ல உணவு வகைகளை சமைக்கும் நேரமும் பிள்ளைகளுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை சொல்லி தந்து தொலைக்காட்சி பெட்டியின் முன் இருக்கும் நேரத்தை குறைக்கவும் கற்றுக்கொடுக்க நேரமில்லை. நேற்று மாநகர ரயிலில் ஒரு நடிகரை பற்றி விலாவாரியாக பேசத் தெரிந்த ஒரு சிறுமிக்கு, நமது பிரதமரின் பெயரைச் சொல்லத் தெரியவில்லை. மேலும் யுவராஜ் சிங், மன்மோகன் சிங், இதில் யாரு என்று கேட்டால் பளிச்சென்று யுவராஜ் சிங் என்று சொல்லும் அளவிற்க்கு இன்றைய பிள்ளைகளின் அறிவு திரைப்படங்களின் மோகத்தில் மூழ்கி கிடக்கிறது.

கீரைகள், எல்லா விதமான வண்ண காய்கறிகள் (எண்ணையூற்றி செய்யாமல், நீரில் வேக வைப்பது தான் உடலுக்கு மிகவும் நன்று) என்று தினமும் தந்து, கிழங்கு வகைகள், பழ வகைகள் எல்லாமே சரி விகிதத்தில் கலந்து சிறார்களுக்கும், எல்லோருக்கும் தரப்பட வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது வாரம் ஒருமுறையாவது வெளி உணவகத்திற்கு செல்லவில்லையென்றால் கௌரவ குறைச்சல் ஆகிவிட்டது.. கீழ் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர் தன் பிள்ளையின் பள்ளியில் எல்லோரும் வெளிஉணவகம் சென்று சாப்பிடுவதால் தானும் தன் பிள்ளைக்காக அதன் வற்புறுத்தலுக்காக அவ்வாறு செய்து வந்தார் என்பது மிகவும் வேதனையான விஷயம். அதுவும் எத்தனை உணவகங்களில் உணவுகள் சரியாக சுகாதாரமாக சமைக்கப் படுகிறது என்பது கேள்விக்குறியே. இங்கே மக்கள் எல்லா விஷயத்தையும் சுலபமாக ஏற்க பழகிவிட்டனர் என்பது முகத்தில் அறையும் உண்மை. சோம்பேறித்தனத்தால், மறு கன்னத்தைகூட காட்டாமல் ஒரு கன்னத்திலேயே ஒவ்வொரு முறையும் இவர்கள் அறை வாங்கிகொண்டே இருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை மக்களை எதையும் ரசிக்க விடாமல் அடித்துகொண்டே இருக்கிறது மாறி மாறி, ஒவ்வொரு முறை ஒரு புதிய ஆயுதம் கொண்டு.

அப்படித் தான் இந்த கண்ணாடி போடும் பழக்கமும்.. ஆறு வயதில் ஆரம்பித்து குழந்தைகள் கண்ணாடி போடும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.. அவர்களுக்கு ஏற்ப தொழில் நுட்பமும், லேசர் முறைகளால் கண்ணாடி போடும் கட்டாயத்தை குறைக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வேளை 2020-இல் அதிகம் பேர் கண்ணாடி போடுவது இந்த சிகிச்சை முறையினால் முறைந்தாலும் குறையலாம். நல்ல உணவு, முறையான முன்னோர் சொன்ன வழக்கங்களை கடை பிடித்தல் (அதிகாலையில் சூரியனை வணங்கினால் கண்குறைபாடுகள் நீங்கும் என்று தெரிந்தும் இன்னும் இழுத்து போத்திகொண்டு எத்தனை பேர் தூங்குகிறோம்..இப்படி வந்தது தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பழமொழி), முறையான வாழ்க்கை முறையினை கடைபிடியுங்கள்.. இப்படி இருந்தால் ஔவையார் வயதிலும் மூக்கு கண்ணாடியில்லாமல் வாழலாம்.

பொங்கல் வாழ்த்துகள்

நீள்நாள் கழித்து எழுதலாம் என்று ஒரு ஆசை. பார்ப்போம் எத்தனை நாட்கள் முடியுமென்று..


தை பிறந்தால் வழி பிறக்கும்.. நமது தாகத்திற்கு வடிகால் கிடைக்குமா..பார்ப்போம்..


எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

Tuesday, November 04, 2008

இப்படியும் நடந்து இருக்கலாமோ - அஜித்தும் நடிகர் சங்க உண்ணாவிரதமும்

புரட்சி புண்ணாக்கு எழுதிய இந்த கட்டுரையை படியுங்கள், நீங்கள் சொல்வீர்கள் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று

Monday, September 15, 2008

நாலு வரியில் புதுப்பட விமர்சனங்கள்

தாம் தூம் - ஆங்கில இசை தொகுப்பை போல பாடல் காட்சிகள், வழக்கமான ஜீவா படத்தின் ஹை-லெட்டான ஹாரிஸ் ஜெயராஜின் அசரவைக்கும் பாடல்கள், ஜெயம் ரவியின் நடிப்பு, இவைகள் படத்தின் தூண்கள். திரைக்கதை இன்னும் மெருகேற்றப்பட்டிருந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும் - 5.5/10


பொய் சொல்ல போறோம் - முதல் பாதியில் ஆமை வேக கதையில் எல்லாமே வறட்சி.. இரண்டாவது பாதி பரவாயில்லை - 4/10

சத்யம் - கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு ஏற்ற வகையில் படம் இல்லை. நிச்சயமாக இது விஷாலுக்கு சறுக்கல் தான். தாம் தூமிற்கு இசை பலம் தந்த ஹாரிஸ் இதில் காலை வாரிவிட்டிருக்கிறார். சண்டை காட்சிகள் மட்டும் பரவாயில்லை, அதுவும் கூட்ட கூட்டமாக வருவதால் சலிப்பு தான் - 3.5/10

ஒரே நேரத்தில் இரு நிலாக்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்னைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசின்னு அறிவிச்சு, அதை ஆரம்பிச்சும் வச்சுட்டார். நமக்கு எதுக்குங்க அரசியல்? ஒரு காலத்துலா நாமளும் ஒரு நாளைக்கு ஒரு பதிவுன்னு போட்டுகிட்டு இருந்தோம்.. இப்போ தான் முடியல.. மறுபடியும் கிட்டதட்ட ஆறேழு மாசத்துக்கு பிறகு, இணைப்பெல்லாம் கொடுத்து செட் ஆகியாச்சு..

இனி தொடரும் என்ற நம்பிக்கையுடன்..

பின் குறிப்பு : டைட்டில் பத்தி ஒன்னும் சொல்லலியேன்னு பாத்தீங்களா, சும்மா எல்லாரையும் சுண்டி இழுக்கத்தான்

Thursday, June 19, 2008

தசாவதாரம் - ஆராய்ச்சிகள் 1

தசாவதாரம் படத்திற்கு முன், எனக்கொரு சின்ன சந்தேகம் இருந்தது.. இவ்வளவு பணத்தை இறைத்து எடுக்கப்படும் படம் வியாபார ரீதியாக ஓடுமா என்று? ஏனெனெனில் ஆளவந்தான் இது போன்று உரக்க பேசப்பட்டு கடைசியில் உப்பில்லாத ப(ண்)டம் ஆனது. படத்தின் விற்பனைக்கு பெரிதும் உதவிய பத்து வேடங்கள் எந்தவாறு உதவும் என்றும் ஐயமும் இருக்கத் தான் செய்தது. என்னை பொறுத்தவர் படம் நன்றாக இருக்கிறது, முந்தைய பதிவில் சொன்னது போல.. கயாஸ் தியரி மற்றும் பட்டாம்பூச்சி எபெக்ட்களை பற்றி பின்னால் பார்ப்போம். முதலில் பாத்திர படைப்புகளை பற்றி காண்போம்.

படத்தில் மொத்தம் நான்கு கமல்கள்.. என்னடா பத்து வேடங்கள் என்று சொன்னார்களே என்று பார்க்கிறீர்களா? நான் சொன்னது கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று கமல் இந்த படத்தில் எடுத்துக்கொண்ட வெவ்வெறு பரிமாணங்கள் பற்றி. படத்தில் சிறு சிறு விஷயங்கள் கூட சிலாகிக்க தகுந்தவை.. படத்தின் கதை எல்லோருக்கும், படம் பார்க்காதவர்களுக்கு கூட தெரியும் என்பதால் அதை பற்றி பெரியதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை.

படத்தில் நாம் முதலில் எடுத்துக்கொள்வது, மணற் கொள்ளையை எதிர்க்கும் வின்சென்ட் பூவராகன் பாத்திரம். அதில் நான் கவனித்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.

1. பெரும்பாலும் தலித் இன மக்கள், கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட, கிறித்துவ - இந்து கலந்த பெயர் வின்சென்ட் பூவராகன். இதில், நாகர்கோயில்காரராக பூவராகனை வடித்திருப்பதிலும் இது சரியே என்று தெரிகிறது.
2. கே.எஸ்.ரவிகுமார் படம் என்றாலே கற்பழிப்பு காட்சிகள் இருக்கும் என்று எல்லோரும் விமர்சனங்களில் எழுதியிருந்தனர். ஆனால், அந்த விஷயம் கதையில் மிக முக்கியமானது. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். தனது மேலாடை உருவப்படும் போது ஆன்டாள், நாராயணா என்று ஆண்டவனை அழைக்கிறாள். திரௌபதிக்கு சேலை தந்து காத்தது போல், இங்கேயும் நுழைகிறது பூவராகன் கதாபாத்திரம். அங்கே கண்ணன் கறுப்பு.. இங்கே பூவராகனும் அப்படியே. கண்ணனும், பூவராகனும் கனுக்காலில் கூர்மையான ஆயுதம் குத்தியே இறந்து போகின்றனர். கமல், பூவராகன் பாத்திரத்தை கண்ணனோடு ஒப்புமை படுத்திய உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.
3.சந்தான பாரதி, பி. வாசு இருவரும் தவறு செய்பவர்களே.. அதுவும் தப்பு செய்ய தூண்டும் பி.வாசுவே பெரிய குற்றவாளியாக தோன்றுகிறார். ஆனால், கதையில் பி.வாசு சாகாமல் சந்தாபாரதி சுனாமியால் இறப்பது ஏன்? அதற்கான காரணங்கள்
அ) பெண்ணை மானபங்க முயற்சி செய்ததால்
ஆ) பி.வாசு இறந்திருந்தால் சந்தான பாரதி மணற்கொள்ளையை தொடர்ந்திருக்கலாம். இப்போது, பி.வாசுவின் மகன்களை பூவராகன் காப்பாற்றியதால், அவரது கால்களில் விழுந்து மனது மாறுகிறார். இனிமேல் மனற்கொள்ளை நிச்சயம் நடக்காது
இ) பூவராகனை விட சந்தான பாரதி தான் பி.வாசுவுக்கு உறவினர். ஆனால், பூவராகனும் சந்தானபாரதியும் இறந்து கிடக்கும் இடத்தில் அவரது எல்லா உறவினரும் பூவராகனை சுற்றியே. என்னதான் உறவினராய் இருந்தாலும், நல்ல உள்ளங்கள் போற்றப்படுகிறான் என்பது உணர்த்தப்படுகிறது இங்கே
4. கிருஷ்ணவேணி பாட்டி, இறந்த பூவராகனை மகனாக நினைத்து அழும்பொழுது சாதி உணர்வுகள் உடைத்தெரியப்படுகிறது.. அதற்கேற்றார்போல் அங்கே வசனங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

"நம்ம ஆராமுதன் சிவப்பால இருப்பான்"
"உள்ளே சிவப்பு தாண்டா.. உழச்சு உழச்சு கறுப்பாயிட்டான்"

இப்போது பொதுவான சில விஷயங்கள்...

1. இரண்டாம் உலகப்போரில் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு இருந்தது ஜப்பானும் (கடைசியில் சுனாமி என்று கத்தி சொல்வதற்கும் இவர் உதவி உள்ளார். நன்றாக பார்த்தால் இந்த சுனாமிக்கு முன்னர் ஜப்பான் நாட்டை சேர்தவர்கள் தான் அதை பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்தனர்), அமெரிக்காவும்.. அந்த இரண்டும் நாடுகளும் உலகத்தை அழிக்கும் சக்தியை எதிர்த்து நேரடியாகவும் மறைமுகமாகவும் போராடுகின்றன.. இதற்கு வழக்கம்போல் இந்தியா உதவுகிறது
2. இந்தியாவில் பஞ்சாப் (அவ்தார் சிங்), ஆந்திரா (பல்ராம் நாயுடு), தமிழ்நாடு (கோவிந்த்) (நரசிம்மராவ் என்று வரும் அந்த கொரியர் அலுவலக கன்னட இளைஞனையும் சேர்க்கலாம்) என்று மாநிலங்களுக்கு இடையே கதாபாத்திரங்கள் அமைத்து, அவர்களும் தீய சக்தியை அழிக்க மறைமுகமாகவோ நேரடியாகவோ உதவுகின்றனர்
3. மூன்று முக்கிய மதத்தை சார்ந்த கதாபாத்திரங்கள் (கோவிந்த், வின்சென்ட் பூவராகன், கபி ஃபுல்லாகான்)
4. ஒரே மதமாயினும் வேறு வேறு வகுப்பை சார்ந்தவர்கள்

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மெல்ல மெல்ல கதைக்கு ஏற்றவாறு அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.. நன்றாக இன்னும் ஆராய்ந்து பார்த்தால் கமலின் புலமை நமக்கு தெள்ள தெளிவாக தெரியும்..

இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் அடுத்த பதிவில்.. காத்திருங்கள்..

உங்கள் எண்ணங்களையும் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்



பின் குறிப்பு : நான் அக்மார்க் ரஜினி ரசிகன் என்பது நான் பிளாக் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து பதிவுகளை படிப்பவர்களுக்கு தெரியும்

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - எங்கெங்கும் விமர்சனம்

பிளாக் உலகம் ஆரம்பித்த பிறகு, ஒரே படத்திற்கு இத்தனை விமர்சனங்கள் கிடைத்தது தசாவதாரதிற்குத் தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள். விமர்சனங்கள் படித்த பிறகு படத்திற்கு செல்வோர் இவர்களின் விமர்சனங்கள் பார்த்து மண்டை குழம்பி போய் உள்ளனர்.. கயாஸ் தியரி, பட்டர்பிளை இபக்ட் என்று புதுசு புதுசாக சொல்கிறார்கள்.. ஒன்றும் புரியவில்லை.. இரண்டாவது நாளே ஓசி டிக்கட்டில் படம் பாத்தாகிவிட்டது. உண்மையில், எனக்கு படம் பிடித்து தான் இருந்தது.. அப்ப விமர்சனம் எழுதலையா என்று கேட்கிறீர்களா.. இதோ நாளை இரண்டாவது தடவையாக சொந்த காசில் பார்க்க போகிறேன்.. வந்து விரிவாக எழுதுகிறேன்

Wednesday, June 04, 2008

MGM - என்ன நிலையிலிருக்கிறது

கடந்த வாரம் ஊரிலிருந்து அப்பா, அம்மா, எனது சித்தி பசங்க எல்லோரும் விடுமுறைக்கு வந்ததால், சனிக்கிழமை MGM சென்றோம்.. கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு, அங்கே சென்றேன். எனக்கு அதிர்ச்சி நுழைவு கட்டணம் தரும் இடத்திலிருந்து ஆரம்பித்தது. இதற்குமுன் சென்ற போது, குறைந்தபட்ச நுழைவு கட்டணம் (இதை பெற்ற பிறகு உள்ளிருக்கும் சில விளையாட்டுகளுக்கு தனியாக பணம் கட்டவேண்டும்),எல்லா ரெய்டுகளும் விளையாடும் நுழைவு கட்டணம், சிறுவர்-சிறுமிகளுக்கு என்று மூன்று வகையான கட்டணங்கள் இருக்கும். ஆனால் இப்போது குறைந்தபட்ச நுழைவு கட்டணம் என்ற ஒன்றை எடுத்திருந்தனர். பெரியவர்களுக்கு என்று ஒரே கட்டணம் வசூலித்தனர். இதையெல்லாம் சரியாக வசூல் செய்யும் இவர்கள், உள்ளிருக்கும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் கூப்பாடு போடுவதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். பல மாதங்களாக, ஏதோ ஒரு விளையாட்டு இயந்திரம் அந்து விழுந்து உயிர் சேதம் நிகழ்ந்ததால் மூடி கிடந்ததாக கேள்விப்பட்டேன். அதன் பிறகாவது நன்றாக பராமரித்திருப்பார்கள் என்று நம்பினால் இன்னும் மோசம். பணம் மட்டும் சரியாக வசூல் செய்துவிட்டு உள்ளே ஒன்றும் உருப்படியாக இல்லை.

MGM பற்றி அவர்கள் தரும் வரைபடம் மகா கேவலம். ஏதோ கடமைக்காக தருகிறார்கள் போலும். அந்த பிட்-நோட்டிஸ்ஸில் நமக்கு ஒரு விஷயமும் உருப்படியாக இருப்பதில்லை. கழிவறைகள், குடிநீர் இடங்கள், எந்தெந்த ரெய்டுகள் எங்கெங்கே என்று ஒரு விவரமும் இல்லை. அரசாங்கம் தரும் பட்டாவில் இருக்கும் வரைபடம் மாதிரி இருந்தது. நிச்சயமாக அந்த ஒரு வரைபடம் அச்சடிக்க அவர்களுக்கு ஐம்பது காசு கூட செலவாகி இருக்காது.. அதை ஏன் தருகிறார்கள் என்று புரியவில்லை.

நிச்சயமாக நான் சென்று வந்த பிறகு, MGM போய் வாருங்கள் என்று மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு MGM ஒன்றும் விசேஷமானதாகவோ தரமானதாகவோ பாதுகாப்பானதாகவோ இல்லை என்பது தான் உண்மை. மற்ற நாடுகளில் இருக்கும் இது போன்ற பார்க்குகளோடு ஒப்புமை படுத்தும் அளவிற்கு இல்லை என்றாலும் இன்னும் நன்றாக மக்களுக்கு தரலாமே? ஏன் எப்படி காசை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொழில் ரீதியாக பார்கிறார்களோ தெரியவில்லை (உள்ளே கிடைக்கும் சாப்படு, ஒவ்வொரு ரெஇடிலும் இருக்கும் நபர்களின் அணுகுமுறை என்று மைனஸ் விஷயங்கள் பல.. சிலவற்றை மட்டுமே ஆதங்கத்தில் சொல்கிறேன்). மார்க் போடும் காலம் என்பதால் பத்திற்கு நான்கை மட்டுமே கஷ்டப்பட்டு தரமுடிகிறது இந்த பார்கிற்கு

Monday, May 26, 2008

சிவாஜி - குருவி ஒற்றுமை

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.

சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது. படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும், பல இடங்களில் சிவாஜியின் சாயல் தெரிந்தது. அது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.. கவனித்ததை பட்டியலிடுகிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் பட்டியலை தொடருங்கள்

1. சிவாஜியில் ரஜினியின் அப்பா மணிவண்ணன், குருவியில் விஜயின் அப்பாவும் இவரே
2. சிவாஜியிலும் குருவியிலும் வில்லன் சுமன்
3. சிவாஜியில் இடைவேளையின் போது காசை சுண்டிவிட்டு, சிங்க பாதையா பூப்பாதையா என்று ரஜினி விவேக்கிடம் கேட்பது போன்று, இங்கேயும், மலேசியா கிளப் சண்டைக்கு முன்பு விஜய் இரு விரல்களை காண்பித்து அகிம்சை, அடிதடி என்று விவேக்கை தேர்வு செய்ய சொல்வது
4. சிவாஜியில் ரஜினி செத்து பிழைப்பது போல், இதிலும் விஜய் தண்ணீரில் இறந்து விட்டது போல் காட்சி அமைத்திருந்தது
5. மியூஉசிக்கல் ஸ்டோரில் நடக்கும் முதல் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி, குருவியில் மலேசியா கிளப் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி..
6. இது ஒற்றுமையா என்று தெரியவில்லை.. இரண்டிலும் நாயகர்கள் கூடவே விவேக்

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.. இன்னும் இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..

பி.கு: கல்யாணம் முடிந்து விருந்து என அலைந்து இப்போது தான் கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்தது.. இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்.. கல்யாணத்திற்கும், பிறந்த நாளிற்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

இந்த மாதம் மத்தியில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கிய கவிதாயினி வேதாவிற்கும், மாப்ள பரணிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Wednesday, March 19, 2008

நம்ம வீட்ல விஷேசங்க

மளமளவென வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு தயாராகிவிட்டேன்.. இப்போது தான் இந்தியா வந்த மாதிரி இருக்கிறது அதற்குள் இருபது நாட்கள் ஓடி விட்டது. நிற்க நேரமில்லை.. எனது பள்ளி கால நண்பர்களிலிருந்து பழைய அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்த நண்பர்கள் வரை, அவர்களின் தொடர்பு எண்களை வாங்கி குவிக்கிறேன்.. நேரமிருக்கும் போதெல்லாம் என் திருமணதிற்கு வர அவர்களை அழைக்கிறேன்.. திருமணம்? ஆமாம்.. நான் வந்த ஒரே வாரத்தில் எல்லாம் முடிவு செய்யப் பட்டு ஏப்பிரல் 11-இல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் RR கம்யூனிட்டி ஹாலில், வத்தலகுண்டை சேர்ந்த ஹேமலதாவை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கிறேன்.. இதை படிக்கும் அனைவரும், நான் நேரில் வந்து அழைத்ததாய் எண்ணி எங்களை வாழ்த்த வருமாற் அழைக்கிறேன்..

இன்னும் திருமண அழைப்பிதழ் எனக்கு ஊரிலிருந்து வரவில்லை. வந்தவுடன் அழைப்பிதழுடன் உங்கள் அழைக்கிறேன் நண்பர்களே..

Saturday, February 16, 2008

முனியாண்டி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு



மெட்டி ஒலி புகழ் திருமுருகன், தன் முதல் முயற்சியான எம் மகனில் தன்னை ஒரு நல்ல டைரக்டர் என்று நிருபித்தார். இப்போது அதே குழுவோடு அடுத்த படத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த படத்தின் புகைப்படங்கள் இப்போது தான் வெளியடப்பட்டிருக்கிறது.



படத்தின் குழுவில், எம் மகனின் நாயகி கோபிகா தவிர, பெரும்பாலும் அனைவரும் அதே ஆட்கள்.. கோபிகாவிற்கு கால்ஷீட் இல்லாததால், தனக்கு தெரிந்த இன்னொரு தூரத்து பெண்ணை டைரக்டருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.. அவர் பெயர் தாமரை.. சாயலில் கோபிகா போலவே இருக்கிறார்.



இந்த கலர் தாவணி, கோயில் அம்மன் வருவது போல ஒரு உணர்வை தருகிறது.. கோபிகாவை போலவே நன்றாக மணம் வீசுவாரா இந்த தாமரை?



திருமுருகன், படத்தின் கதைக்கு தரும் முக்கியதுவத்தை படத்தின் தலைப்பிற்கும் தருவார் போல...

Friday, February 15, 2008

பரபரப்பாய் தமிழ்நாடே பாக்குற பாட்டு

இப்போதைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே விடாம பாத்து பாத்து ரசிக்குற படப்பாடல் இது.. இனிமேல் வடிவேல் தேவையில்லை..விவேக் வேண்டாம் நகைச்சுவைக்கு.. லாரன்ஸ் ஓடட்டும்.. ராஜூ சுந்தரம் ரிட்டர்யட் ஆகட்டும்.. எங்கள் அண்ணன் சாம் அன்டர்ஸ்னின் பாடல் அசைவுகளுக்கு ஈடு கொடுக்க யாரும் உண்டோ..



வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.. இந்த பாடலை பார்த்தா நோய் எந்த ஜென்மத்திற்கும் வராது..

இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல்.. எங்கள் நண்பர்களுக்கு மத்தியில் சாம் அன்டர்ஸன் தான் ஹீரோ

Wednesday, February 13, 2008

யார் இவர்? எதற்காக இந்த வேஷம்?





இது கமல் தான்.. தசவதாரதிற்கான வேடம்.. சரியாய் பதில் சொன்ன எல்லோருக்கும் ஒரு சபாஷ்

Tuesday, February 05, 2008

அமெரிக்க இந்திய உணவகங்கள் - சுகாதாரம்?

என் பிலாக் குரு பாலாஜிக்கு சான்டா கிளாரா தோசா பிலேசில் நடந்த குலோப்ஜாமுனில் பூச்சி சம்பவத்தை படித்த பிறகு, அறுபது சதவிகித இந்திய உணவகங்கள் அமெரிக்காவில் இப்படித் தான் இருக்கின்றன, என்ற என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. இப்போது முக்கால்வாசி அப்படித் தானோ என்று யோசிக்கத் தோன்றுகிறது..

கொலம்பஸ்ஸில், பனானா லீஃப் (வாழை இலை) என்ற ஒரு உணவகம் இருக்கிறது.. முதலில் ஆரம்பித்த போது மக்கள் நிறைய சென்று நல்ல வருமானம் ஈட்டியது.. கூட்டம் எப்போதும் இருக்கும்.. உணவும் சுவையாக இருக்கும்.. ஆனால் சுகாதாரம், அதற்கு பெரிய கேள்விக்குறி தான் மிஞ்சும் .அதுவும் அங்கே சமைக்கும் ஒருவர், கேரளா பாலக்காட்டுகாரர், ஆரம்பித்த புதிதில் வெள்ளையும் சொல்லையுமாக இருப்பார்.. சாப்பிட வருபவர்களை குசலம் விசாரிப்பார்.. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அவர் வெளியில் வந்து எங்களை சாப்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வந்தால் தெறித்து ஓடுவொம்.. முகத்தில் பாதி இடத்தில் தோசை மாவு இருக்கும்.. கை வைத்த வெள்ளை பனியன், காவி கலரில் இருக்கும்.. தலை முடி கண்ணா பின்னாவென்று சிதைந்து கிடக்கும்.. பார்ப்பதற்கு சமையல்காரர் போல இருக்கமாட்டார்.. இவரை பார்த்தே அந்த கடையில் கூடும் கூட்டம் குறையத் தொடங்கியது.. ஒரு நாள், ஒரு உணவுகூட ஆய்வின் போது கடையையும் பூட்டிவிட்டார்கள்.. ஒரு மாததிற்கு பிறகு கடையை மறுபடியும் திறந்தார்கள்.. அந்த பாலக்காட்டு சமயல்காரரை காணவில்லை.. இப்போது முன்னைவிட கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது..

பணம் சம்பாரிக்கத் தான் நாம் வந்திருக்கிறோம்.. ஆனால் ஓரளவிற்காவது நாம் சுத்தமாக வைத்துகொள்ளவேண்டும்.. நாயகரா சென்றபோது, அங்கே இருந்த டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்ப்பிட்ட பிறகு இனிமேல் வெளியூரில் எந்த இந்திய உணவகங்களில், அது பற்றி நன்றாகத் தெரியாமல் சாப்பிடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.. நிச்சயமாய் இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல இந்திய உணவகங்கள் இருக்கத் தான் செய்கின்றது.. இதற்கு விதிவிலக்காக அமெரிக்கர்களை அசத்தும் உணவகங்களும் உண்டு..

நியுயார்க்கில் 26வது வீதியும் லெக்க்ஷிங்டன் அவென்வியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது சென்னை கார்டென்.. சைவ உணவகம்.. சரவண பவன் அருகில் இருப்பது.. சிதம்பரத்தில் இருந்து இங்கிருக்கும் ஒரு கோவிலுக்கு வர்ணம் பூச வந்தவர், அந்த வேலை ஆறு மாதத்தில் முடிய, ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.. அதன் பிறகு, கிட்டதட்ட ஆறேழு வருடங்களுக்கு பிறகு, தனியாக இந்த உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார். அங்கு சாப்பிடும் போது அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது இந்த கதை..நல்ல வருமானம்.. உணவும் ருசியாக இருந்தது.. மூன்று நாளில் முதலிரண்டு நாட்கள் சரவண பவனில் சாப்பிட, இங்க ஒரு நாள் சாப்பிட்டோம்.. கழிவறை மட்டும் மிகவும் சிறியது.. இந்தியர்களை விட, அதிக அமெரிக்கர்களை தான் பார்க்க முடிந்தது..

இங்கு திரவியம் தேட வந்தவர்கள், சிறிது சுகாதாரம், பண்பு எல்லாவற்றையும் கற்றுகொண்டால் நல்ல பெயரும் அதிக வருமானமும் அவர்களுக்குத் தானே.. இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? புரியவில்லை...