எனக்கு பள்ளியில் படிக்கும் போது தமிழ் பாடம் என்றால் கொள்ளை பிரியம். எனக்கு, நான் தம்பிதோட்டத்தில் எட்டு, ஒன்பது, பத்தாவது படிக்கும் போது தமிழ் பால் ஊட்டியவர் த.கதிர்வேல் ஐயா அவர்கள். அவருக்கு என்னை கண்டாலும், எனக்கு அவரை கண்டாலும் அப்படி ஒரு சொல்லொணா பாசம். வகுப்புக்கு வந்தால் தமிழ் வகுப்புகளில் உரைநடை புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிப்பதிலிருந்து, தமிழ் கட்டுரைகளை வாசிக்கும் வரை என்னை தான் செய்ய சொல்வார். அவரிடம் திட்டு வாங்குவதும், தலையில் நறுக்கென்று குட்டு வாங்குவதும் தினமும் நடக்கும் செயல். ஆனால் என்னமோ தெரியவில்லை, அவர் என்னை திட்டியதில்லை. ஒரு முறை, அவர் தமிழ் கட்டுரை வாசிக்க வாசிக்க நாங்கள் எழுதிக்கொண்டிருந்தோம். அப்போது நான் பெஞ்சின் ஓரத்தில் தான் உட்கார்ந்திருப்பேன். அவர் நடந்து கொண்டே வாசிக்கும் போது ஏதோ ஒன்றுக்கு நான் சந்திப் பிழை விட்டுவிட்டேன். அவ்வளவு தான் நறுக்கென்று தலை ஒரு குட்டு விழுந்தது. அப்போது தான் வகுப்பில் மற்றவர்கள் அடி வாங்கும் வலி எனக்குப் புரிந்தது. அது தான் அவர் என்னை முதலும் கடைசியுமாய் தலையில் கொட்டியது.
நான் எட்டாவது பயிலும் போது, முதல் முறையாக அவர் எனக்கு படம் எடுத்த அழகு இன்னமும் ஞாபகப் பெட்டகத்தில் இருக்கிறது. பெரும்பாலும் பேண்ட் சட்டை தான் அணிந்திருப்பார். என்றாவது ஒரு நாள் வெள்ளை வேட்டி சட்டை அணிவார். சைக்களில் தான் வந்து போவர். அதன் செயின் மர்காடில் அவரது பெயரும், வாங்கிய பட்டங்களும், பள்ளியின் பெயரும் இருக்கும். தமிழ் வாத்தியார் என்பதால் எப்போதும் வைரமுத்து பேசுவது போல் எல்லாம் பேசமாட்டார். வாலியின் வரிகளை போல எளிமையாய் இருக்கும். ஆனால் சொல்ல வந்த விஷயத்தையும் எங்களுக்கு அழகாக விளக்குவார். செய்யுளை அவர் பிரித்து பொருள் சொல்லும் அழகே அழகு. அதை ஒரு முறை கேட்டாலே, பரீட்சையில், அன்பில்லாதவர்களை பற்றி வள்ளுவர் என்ன கூறுகிறார் என்றால் நாலு பக்கங்களுக்கு மிகாமல் எழுதலாம்.
கொஞ்சம் முற்போக்கான சிந்தனை உள்ளவர். அதை தனது வாழ்க்கையிலும் நடத்தி, கடைபிடித்தவர். எனது நாடக, நடிக்கிற எண்ணங்களுக்கு நெஞ்சில் விதை விதைத்து, அறுவடை பார்த்து உச்சி மோர்ந்தவர். இன்னும் எந்தன் நெஞ்சில் இப்படி தமிழை பச்சை குத்தியிருக்கிறேன் என்றால் அது அவர் எனக்குள் விழுத ஏர் தான். இப்போது பட்டி மன்றங்களில் நடுவராக, தனது எண்ணங்களை சின்னாளபட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் பரப்புபவர்.
இன்று வரை எனக்கு புரியாத ஒன்று, எங்கு கேட்டும் அர்த்தம் கிடைக்காதது, அவர் கோபத்தில் எங்களை திட்டும் போது பயன்படுத்தும் வார்த்தை. அது 'கோப்பன் பொரியுருண்டை'. என்ன அர்த்தம் என்று தெரியவே இல்லை. ஆனால் யாரை திட்டும் போதும் இப்படித் தான் சொல்வார். முதல் முறை அவர் திட்டும் போது, இந்த சொல்லை பயன்படுத்தும் போது, எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவர் அடிக்கடி பயன் படுத்தும் போதெல்லாம் கேட்டு கேட்டு, சேது படத்தில் சீயான் பெயரின் அர்த்தத்தை எல்லோரும் தேடுவது போல் நான் தேடி இருக்கிறேன். யார் யாரிடமோ கேட்டிருக்கிறேன். விடை தான் கிடைத்தபாடில்லை. உங்கள் யாருக்காவது இதன் அர்த்தம் தெரியுமா.. தெரிந்தால் சொல்லுங்களேன்.. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.