Saturday, January 23, 2010

சென்டிமெண்ட் சினிமா : எம்ஜிஆர் பட தலைப்புகளும் வசூல் வீழ்ச்சிகளும்

சமீபத்தில் வந்து பயங்கர விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் வரை எம்ஜியார் பட தலைப்புகளை வைத்த எந்த படங்களும் வசூலை வாரி கொடுக்கவில்லை என்பது உண்மை. எனக்கு ஞாபகம் இருந்து சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் தான் எம்ஜிஆர் தலைப்பில் வந்த முதல் படம் (ஏதோ எல்லா சரத்குமார் படங்களும் பயங்கர வெற்றியை கொடுத்த மாதிரியும் இது ஓடாததிற்கு ஒரு காரணம் சொல்வதாக நினைக்க வேண்டாம்) அதை பின் அன்பே வா, வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஓருவன் எல்லாமே குப்பர படுத்துக்கொண்ட படங்கள் தான்.. என்ன காரணமாக இருக்க முடியும்.. கதையும் கொடுத்த விதமும் சரியில்லை என்பது தான் முதல் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் பார்க்காத ஆள் யாரும் இல்லை. அப்படி இருக்க மறுபடியும் ஏன் இப்படி தலைப்புகளை தெரிவு செயவேண்டும்..

இப்போது நடிகர் ராஜ்கிரண் தனது புதி சொந்த படதிற்கு மலைகள்ளன் என்று பெயர் வைத்திருக்கிறார். ஓடுமா அந்த படம்? நீங்கள் தமிழ் சினிமாவின் சென்டிமெண்டுகளை நன்றாக கவனித்தாலே ஒரு படம் ஓடுமா ஓடாதா என்று சரியாக சொல்லிவிட முடியும். எப்படி? வரும் வாரங்களில் பார்க்கலாம். ஒரு உதாரணதிற்கு, வில்லு ஓடாது என்று என் நண்பர்களிடம் நான் எடுத்து சொன்ன சென்டிமென்ட் காரணங்கள் கீழே
1. ஒரு பொங்கல் விட்டு ஒரு பொங்கலிலோ, அல்லது ஒரு தீபாவளி விட்டு ஒரு தீபாவளிலோ தான் விஜய் படங்கள் ஓடி உள்ளன. ஒரு பொங்கலில் ஆதி காலை வாரிவிட, அடுத்ததில் போக்கிரி தூக்கி நிறுத்தியது. அதனால் அடுத்த பொங்கல் ரிலீசான வில்லு இந்த சென்டிமென்ட் படி படுத்துகொள்ளூம்.
2. சூப்பர் வெற்றி கொடுத்த இயக்குநர் விஜயின் அடுத்த படத்தை கவிழ்த்து இருக்கிறார். பாசில் காதலுக்கு மரியாதைக்கு பிறகு கண்ணுக்குள் நிலவிலும், ரமணா திருமலைக்கு பிறகு ஆதியிலும்.. அதனால் போக்கிரிக்கு பிறகு வில்லுவும் பிரபு தேவா எடுப்பதால் கவிழ வாய்ப்பு உள்ளது. (இதில் பேரரசு விதிவிலக்கு).
3. அப்போது நயன்தாராவின் மார்க்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருந்ததால்.. ஏகன், சத்யம் என்று அவரின் படங்கள் அடிமேல் அடி வாங்கி கொண்டிருந்தன

மேலே சொன்ன மாதிரி இன்னும் பல சென்டிமென்ட்கள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக அலசி காய்ப்போடுவோம் நேரம் கிடைக்கும் போது

Friday, January 15, 2010

நான் தகப்பனானேன்

வாழ்க்கையின் அடுத்த அடுத்த அனுபவங்கள் மிகவும் அதிசயமானவை..ஆச்சர்யமானவை.. அப்படி எதிர்பார்த்து, காத்திருந்து, ஒவ்வொரு நாளும் கண்கள் பூத்திருந்து நிகழ்ந்தது தான் நான் தந்தையாகிய தருணம்.. நவம்பர் மாதம் 5-இல் நான் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனானேன்.. எனது ஆசையும் பெண் குழந்தை தான்.. ஆண்டவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடந்தது.. அந்த நாள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் தனிப்பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..
அதுவும் கிட்டதட்ட மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 25 நாளுக்கு குழந்தை பிறந்தது.. இப்போது தாயும் சேயும் நலம்..

பெயர் : வேதாந்திகா

விரைவில், இங்கே குழந்தையின் புகைப்படத்தையும் இடுகிறேன்.. இப்போதைக்கு ஆர்குட்-டில் இருக்கிறது..

Thursday, January 14, 2010

ஔவையார் கண்ணாடி அணிந்திருந்தாரா?

பத்து வருஷத்துக்கு முன்னால், ஒரு வீதியில் ஒரு மளிகை கடை இருக்கும். ஆனால் இன்று வீதிக்கு ஒரு பணம் வழங்கும் இயந்திரம், மருந்துக்கடை, கண் சிகிச்சை தரும் இடங்கள், மூக்கு கண்ணாடி பொருத்தி விடும் கடைகள் என்று பல்கி பெருகிவிட்டன.. இத்தனை பெருக காரணம் தொழில் நுட்பமா இல்லை நமது வாழ்க்கை முறையா என்று ஒரு நாளும் நாம் சிந்தித்தது கிடையாது. காரணம் தெரியாத காரணத்தால் முன்னோர் பழக்கங்களையும் நாம் கடைபிடிப்பது இல்லை.. இயந்தர வாழ்க்கையாகி இன்று எதற்காக என்று தெரியாமல் வாழ்கிறோம்.. எதிர்கால சமுதாயம் நம்மை விட வேகமாக உருமாறி கொண்டிருக்கிறது ஒரு தவறான பாதையில் பயணம் கொண்டு..

என்று முதன் முதலாய் கண்ணாடி அணிய மனிதன் ஆரம்பித்தான் என்று பார்ப்பதை விட ஏன் ராஜ ராஜ சோழனும், பிசிராந்தையாரும், நக்கீரரும், ஔவையாரும், மாவீரன் நெப்போலியனும், ராவணனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் அணியவில்லை என்று சிந்தனையை தட்டிவிட வேண்டும். அவர்கள் கடைபிடித்த ஏதோ ஒன்றை நாம் செய்யவில்லையா அல்லது நமது உணவு பழக்கம் இந்த அளவு தறிகெட்டுவிட்டதா அல்லது இன்றைய தொழில் நுட்பம் (தொலைகாட்சி பெட்டி, இரவு இரண்டு சக்கர மற்றும் ஏனைய வண்டிகளில் பயணிக்கும் போது எதிர் வாகனத்தின் சக்தி மிகுந்த வெளிச்சம், ஏனைய பிற)காரணமா, என்று தெரியவில்லை.. ஆனால் இப்போது சாலைகளில் நடக்கின்ற முதல் ஐந்து நிமிடத்தில் நீங்கள் ஒரு பத்து பேரையாவது மூக்கு கண்ணாடியுடன் பார்க்காமல் இருக்க முடியாது. நமது முந்தைய தலைமுறைகளை கேலியுடனும் கிண்டலுடனும், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம், நமது நாளைய சமுதாயத்தை எப்படி அமைத்திருக்கிறோம் என்று சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

அப்துல் கலாம் அவர்கள் சொன்ன 2020-இல் மூக்கு கண்ணாடி மனிதர்களின் எண்ணிக்கை ஏறத்தான் போகிறது.. இன்று ஒரு வீட்டில் ஒருவர் இருவர் என்றால் எதிர்காலத்தில் வீட்டில் எல்லோரும் தனது வாழ்நாளிற்குள் கட்டாயம் கண்ணாடி அணிவர் என்பது தான் உண்மை. சிந்திக்க தெரிந்த மனித இனம் இப்போது சிந்தனையை மறந்தோ இல்லை தன்னை பற்றிய ஒருமுக சிந்தனையுடனோ வாழ கற்றுக்கொண்டோம் என்பது தான் உண்மை. இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, சிறார்களை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் அரசாங்கம் அனுமதித்த எண்ணிக்கையிலான பள்ளிக் குழந்தைகளைத் தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று சொன்னால், அரசே எங்கள் வயிற்றில் அடிக்காதே என்று அச்சுத்தாள் அடுத்து எதிர்ப்பை காட்டுகின்றனர் அந்த வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள். இதை என்னவென்று சொல்வீர்கள் நீங்கள்?

ஒழுங்காக பயிற்சி எடுத்து முறையாக ஓட்டுநர் உரிமை வாங்கிய யாராவது ஒரு நபரை எனக்கு காட்டுங்கள்? இப்படி ஓட்டுநர் உரிமம் வாங்கியவருக்கு வாகனத்தில் உள்ள கீழ் மற்றும் மேல் விளக்குகள் (Low and High beam) எதற்காக என்று தெரியுமா? தெரிந்திருந்தால் தான் எப்போதுமே பயன்படுத்தும் உயர் சக்தி மேல் விளக்குகள் எதிர் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்குமே அல்லது அவர்களால் ஒழுங்காக வண்டி ஓட்ட முடியாதே என்று உணராமல் இருக்க மாட்டார்கள்.. இந்த பழக்கம் தொண்ணூறு சதவிகத வாகன ஓட்டிகளை விட அதிகமான நபர்களுக்கு இருக்கிறது.. அதுவும் நான்கு சக்கர ஓட்டுநர்கள் இருக்கிறார்களே யெப்பா, அப்படியே அவர்களின் கண்களை கட்டாயம் திறக்க வைத்து தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு அதே உயர் சக்தி மேல் விளக்குகளை கண்களுக்குள் பாய்ச்ச வேண்டும்.. ஒவ்வொரு முறையும் இரவு நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் இது தான் எனக்கு தோன்றும். அப்படியொரு கோபம். எதிர்காலம் நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அவதார் படம் பார்த்தவுடன் உங்கள் மனத்தில் என்ன தோன்றியது என்று உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் கேட்டதற்கு, பண்டோரா கிரகம் உண்மையில் இருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியதாக கூறியுள்ளார்கள்.. ஹ்ம்ம்.. ஒரு காலத்தில் நமது பூமியும் அப்படித் தான் இருந்தது..நாம் தான் அதனை இன்றிருக்கும் நிலைமைக்கு மாற்றியவர்கள் என்று யாருக்கு புரிகிறது.. இல்லை புரியாதது மாதிரி நடிக்கிறார்களா?

ஒன்று மட்டும் நிச்சயம்.. உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படி யாரும் உயர் சக்தி மேல் விளக்குகளை பயன்படுத்துவது இல்லை என்பது தான் உண்மை.. எப்பொழுதும் போல தம்பட்டம் அடித்தே பழகும் நாம், இந்தியா சீக்கிரம் வல்லரசாகி விடும் என்று பெருமைக்கு சொல்லிகொள்ள வேண்டியது தான்
அடுத்தது நமது உணவு பழக்கம்.. இப்போது மிக அதிகமான குழந்தைகள் நூடுல்ஸும், துரித உணவு வகைகளுக்கும் அடிமையாகிவிட்டனர். பெற்றொர்களுக்கும் நல்ல உணவு வகைகளை சமைக்கும் நேரமும் பிள்ளைகளுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை சொல்லி தந்து தொலைக்காட்சி பெட்டியின் முன் இருக்கும் நேரத்தை குறைக்கவும் கற்றுக்கொடுக்க நேரமில்லை. நேற்று மாநகர ரயிலில் ஒரு நடிகரை பற்றி விலாவாரியாக பேசத் தெரிந்த ஒரு சிறுமிக்கு, நமது பிரதமரின் பெயரைச் சொல்லத் தெரியவில்லை. மேலும் யுவராஜ் சிங், மன்மோகன் சிங், இதில் யாரு என்று கேட்டால் பளிச்சென்று யுவராஜ் சிங் என்று சொல்லும் அளவிற்க்கு இன்றைய பிள்ளைகளின் அறிவு திரைப்படங்களின் மோகத்தில் மூழ்கி கிடக்கிறது.

கீரைகள், எல்லா விதமான வண்ண காய்கறிகள் (எண்ணையூற்றி செய்யாமல், நீரில் வேக வைப்பது தான் உடலுக்கு மிகவும் நன்று) என்று தினமும் தந்து, கிழங்கு வகைகள், பழ வகைகள் எல்லாமே சரி விகிதத்தில் கலந்து சிறார்களுக்கும், எல்லோருக்கும் தரப்பட வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது வாரம் ஒருமுறையாவது வெளி உணவகத்திற்கு செல்லவில்லையென்றால் கௌரவ குறைச்சல் ஆகிவிட்டது.. கீழ் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர் தன் பிள்ளையின் பள்ளியில் எல்லோரும் வெளிஉணவகம் சென்று சாப்பிடுவதால் தானும் தன் பிள்ளைக்காக அதன் வற்புறுத்தலுக்காக அவ்வாறு செய்து வந்தார் என்பது மிகவும் வேதனையான விஷயம். அதுவும் எத்தனை உணவகங்களில் உணவுகள் சரியாக சுகாதாரமாக சமைக்கப் படுகிறது என்பது கேள்விக்குறியே. இங்கே மக்கள் எல்லா விஷயத்தையும் சுலபமாக ஏற்க பழகிவிட்டனர் என்பது முகத்தில் அறையும் உண்மை. சோம்பேறித்தனத்தால், மறு கன்னத்தைகூட காட்டாமல் ஒரு கன்னத்திலேயே ஒவ்வொரு முறையும் இவர்கள் அறை வாங்கிகொண்டே இருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை மக்களை எதையும் ரசிக்க விடாமல் அடித்துகொண்டே இருக்கிறது மாறி மாறி, ஒவ்வொரு முறை ஒரு புதிய ஆயுதம் கொண்டு.

அப்படித் தான் இந்த கண்ணாடி போடும் பழக்கமும்.. ஆறு வயதில் ஆரம்பித்து குழந்தைகள் கண்ணாடி போடும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.. அவர்களுக்கு ஏற்ப தொழில் நுட்பமும், லேசர் முறைகளால் கண்ணாடி போடும் கட்டாயத்தை குறைக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வேளை 2020-இல் அதிகம் பேர் கண்ணாடி போடுவது இந்த சிகிச்சை முறையினால் முறைந்தாலும் குறையலாம். நல்ல உணவு, முறையான முன்னோர் சொன்ன வழக்கங்களை கடை பிடித்தல் (அதிகாலையில் சூரியனை வணங்கினால் கண்குறைபாடுகள் நீங்கும் என்று தெரிந்தும் இன்னும் இழுத்து போத்திகொண்டு எத்தனை பேர் தூங்குகிறோம்..இப்படி வந்தது தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பழமொழி), முறையான வாழ்க்கை முறையினை கடைபிடியுங்கள்.. இப்படி இருந்தால் ஔவையார் வயதிலும் மூக்கு கண்ணாடியில்லாமல் வாழலாம்.

பொங்கல் வாழ்த்துகள்

நீள்நாள் கழித்து எழுதலாம் என்று ஒரு ஆசை. பார்ப்போம் எத்தனை நாட்கள் முடியுமென்று..


தை பிறந்தால் வழி பிறக்கும்.. நமது தாகத்திற்கு வடிகால் கிடைக்குமா..பார்ப்போம்..


எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்