Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Wednesday, May 19, 2010

சென்னை குளிர்கிறது

வரப்போகிறது, விரைவில் வந்துவிடும் என்று எதை சொன்னார்களோ அது இப்போது வந்துவிட்டது என்றே நினைகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அனலாய் சுட்டெறித்த அக்னிக் கோடை, லைலா (பெயர் தான் காரணமோ) என்ற புயல் வந்து சென்ற பிறகு குளிர்கிறது. உண்மையாய் இந்த இரவு என்னால் போர்வை உதவி இல்லாமல் உறங்க முடியவில்லை. தட்ப வெட்ப சூழ்நிலை மெதுவாய் மாற ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி அனலாய் தகிக்கும் என்று நினைக்கிறேன்
பெரிய்ய்ய்ய்ய பதிவு இடமுடியவில்லை என்றாலும் இதுமாதிரி சிறிதாய் எழுதலாமென்ற எண்ணத்தில் மறுபடியும் ஆரம்பிக்கிறேன்.
எல்லோருக்கும் எனது வணக்கங்கள்

Monday, November 19, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 6

நீண்ட நாட்களாய் எழுதாமல் பாதியில் விட்ட இந்த தொடரை மீண்டும் தூசி தட்டு, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...

ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... -
இரண்டாம் பகுதியிலிருந்து...

பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...

சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...

பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். -
ஐந்தாம் பகுதியிலிருந்து


துரத்தி ஓடி வந்தவர்கள், இந்தப் பக்கம் யாராவது ஓடினார்களா என்று எங்களைப் பார்த்து கேட்டார்கள்.. என் நண்பன் கத்தி குத்துபட்டு ஓடியவன் சென்ற திசையை காட்டினான்.. அவர்கள் நான்கு பேரும் அந்தப் பக்கம் ஓட ஆரம்பித்தனர்.. எங்களுக்கெல்லாம் பயங்கர கோபம் வழி சொன்ன நண்பன் மீது.. எங்கள் கோபத்தை புரிந்து கொண்ட அவன், "டேய்! பூச்சியை மாதிரி என்னை பாக்காதீங்கடா... கத்தியில குத்து வாங்கினவர் அங்க இருக்க பாலத்துக்கு கீழ ஓளிஞ்சுகிட்டார்.. அதனால தான் நான் வழி சொன்னேன்..அங்க பாருங்க அந்த நாலு பேரும் அந்த பாலத்தை தாண்டியே போயிட்டாங்க" என்று சொன்னவன், வாங்கடா, நாம வேற வழில ரூமுக்கு சீக்கிரம் போயிடலாம்" என்று எங்களை அவசரப்படுத்தினான்.. அறைக்குள் நுழைந்த பின்னும் ஒருவித பதட்டமும், குத்து பட்ட அந்த ஆளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற கவலையும் இருந்தது எங்களுக்கு.

எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்த போது அவ்வப்போது திடீர் பெண்கள் நடமாட்டமும், பக்கத்து அறைகளில் கண்ணாடி டம்ளர்களின் (பின்னாளில், அவைகள் பயன் படுத்திய பின், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள்) ஓசைகள், சிரிப்பும் கோபம் கலந்த பேச்சுகளுமாய் எதிரொலித்தது. முக்கால்வாசி நாட்களின் இரவுகள் இப்படித் தான் கழிந்தன.. நாங்கள் அப்போது வேலை தேடும் மும்மரத்தில் இருந்ததால், இதை பற்றியெல்லாம் ரொம்பவும் சட்டை செய்ததில்லை.. இரவு நேர சாப்பாடாய், கையேந்தி பவனில் முடித்த பின், அறைக்குள் நுழைந்து விட்டால், அன்றைக்கு நடந்த விஷயங்கள் பற்றிய அரட்டையும், கையில் சீட்டு கட்டுடன் நடு இரவு வரை சீட்டாட்டமும் தொடரும்.. வார இறுதிகளில் திருவல்லிக்கேணியில் இருக்கும் தியேட்டருக்கோ (தியேட்டரின் பெயர் மறந்து விட்டது), இல்லை தேவி, சாந்தி, சத்யம் தியேட்டர்களில் ஏதேனும் படங்களுக்கோ செல்வாதாய் கழிந்தது.. அதுவும் தேவி தியேட்டரில், பிளாக்கில் டிக்கட் விற்கும் பெண்கள், டிக்கட் தரும் நபரிடம் அக்கவுண்ட் வைத்திருந்ததை பார்த்தவுடன் எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. மொத்தமாக பத்து இருபது டிக்கட்டுகள் இது மாதிரி அக்கவுண்ட்டில் வாங்கி சென்று அதை இருபது, முப்பது ரூபாய் அதிகமாய் விற்று அந்த கடனை அடைப்பதாய் அவர்களின் வேலை சென்று கொண்டிருந்தது.,. இதற்கு தியேட்டருக்கு மிகவும் தாமதமாக வரும் குடும்பத்தினரை (பொதுவாக, எல்லோரையும்)சொல்லவேண்டும்.. டிக்கட் கொடுக்க ஆரம்பித்த பின்னர் தான் அவர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள்.. அதுவரை வந்தபின், அவ்வளவு பெரிய வரிசையில் நிற்பதுவும் இயலாத காரியம்.. தியேட்டர் வரை வந்த பின்னர், படம் பார்க்காமல் செல்வதுவும் இழுக்கு.. கடைசியில் கணவனின் வியர்வை, டிக்கட்டை பிளாக்கில் விற்கும் நபரின் வியர்வைக்காக, சினிமா டிக்கட்டாய் தியேட்டர் வாசலில் கிழியும்.. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் சத்யம் தியேட்டரில் இது போன்ற இடைஞ்சல்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.

2002, ஏப்பிரல் மாதம் 13ந்தேதி, திருவல்லிக்கேணி தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்துகொண்டிருந்தோம்.. கலைவாணர் அரங்கத்தின் வழியாகத் தான் புதிய விடுதிக்கு செல்வோம்.. அப்படி செல்கையில் கலைவாணர் அரங்கத்தின் வாயிலில் வண்ண தோரணங்கள் எல்லாம் கட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் செல்ல செல்ல, அங்கிருந்தவர், எங்கோ பார்த்த ஆள் மாதிரி தெரிந்தது.. அட! நம்ம(!) சாபு சிரில்.. பாய்ஸ் படத்தின் பட பூஜை விழாவிற்காக அலங்கார வளைவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள் அவரது குழுவினர்.. எங்களுக்கோ இன்ப அதிர்ச்சி.. இவரையாவது சென்னையில் இருப்பதற்கு நேரில் பார்க்க முடிந்ததே என்று எனக்கு மகிழ்ச்சி.. (மற்றவர்கள் எம்.எல்.ஏ விடுதியில் நடந்த காதல் அழிவதில்லை படத்தின் படப்பிடிப்பை பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியவர்கள்) பக்கத்தில் சென்று அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திகொண்டோம்.. அவசரத்தில் என் நண்பன் பூபாலன் சினிமா டிக்கட்டிலும், கிச்சா ஒரு சிறிய டைரியிலும் கையெழுத்து வாங்கி கொண்டார்கள்.. (என்னிடம் அது கூட இல்லை அந்த நேரத்தில்) அந்த கையெழுத்தை போட்டுவிட்டு "இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. இன்னமும் அந்த சினிமா டிக்கட்டும் டைரியும் அவர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஹேராமின் கல்கத்தா கலவரத் தெரு, கன்னத்தில் முத்தமிட்டாலின் உடைந்த படகு என்று நமக்கு தெரிந்த அவரின் கைவரிசைகள் பற்றி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அவரும் எங்களை பற்றி விசாரித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அவரிடம் பேசிவிட்டு உள் நுழைந்தால், நடிகர் கமலஹாசனின் (முன்னாள்) மனைவி சரிகா நின்று கொண்டிருந்தார். இவர் தான் பாய்ஸ் படத்தின் உடையலங்கார நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடம் சென்று பேசுவதற்கு என்ன இருக்கிறது (ஏன் கமலுக்கும் உங்களுக்கும் சண்டை என்று கேட்பதை தவிர) என்று நினைத்துகொண்டு நாங்கள் எங்களின் அறைக்கு சென்று விட்டோம்.

மறு நாள், தமிழ்ப் புத்தாண்டு.. ஆங்கில புத்தாண்டில் தண்ணியடிக்க இருக்கும் சௌகரியம் தமிழ் புத்தாண்டில் இல்லை.. அன்று கோவிலுக்கு செல்வது தான் முக்கிய விஷயம் போல.. ஒரு நாள் விடுமுறை, சில திரைப்படங்கள் ரிலீஸ் என்று தான் இருக்கப்போகிறது.. ஜனவரி 1 அன்று இருக்கும் சந்தோசம், குதியாட்டம் எதுவும் ஏப்பிரல் 14-இல் ஏனோ இருப்பதில்.. இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த நாள் மறக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.. இது தான் எங்களுக்கு இடையில் முக்கியமான விவாதமாய் இருந்தது அன்று.. தூங்கி எழுந்து, வாலஜா ரோட்டில் இருக்கும் கடையொன்றில் காபியும், தி ஹிந்துவும் வாங்கி வர சென்றோம், நானும் கிச்சாவும். கலைவாணர் அரங்கத்துள் வந்தால் எங்கு பார்த்தாலும் கொடியும் தோரணமும்.. வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்..அட..இன்னைக்கு பாய்ஸ் பட துவக்கவிழா என்பதே மறந்திடுச்சு என்று கூட்டத்தை பார்த்துகொண்டே நடந்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வருக! வருக! என்று பேனர் கட்டப்பட்டிருந்தது.. அட! நம்ம தலைவர் வர்றார்..சொல்லவே இல்லியே யாரும்.. காலை காப்பியையும் ஹிந்துவையும் மறந்தோம்.. கூட்டத்தோடு கூட்டமாக நின்று, வருவோர் போவரையெல்லாம் பார்த்துகொண்டிருந்தோம்.. சத்யராஜ், கார்த்திக், என பலர் காரை விட்டு இறங்கி உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். படத்தை குத்து விளகேற்றி துவக்க ஜோதிகா என்று கூட்டத்தில் யாரோ சொல்ல, ஆஹா.. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று மெல்ல முண்டியடித்து கூட்டதுக்குள் நுழைந்தோம்..

சிவப்பு நிற டி-ஷர்டும், கறுப்பு பேண்டும் அணிந்து ஜோதிகா.. அட அட அடடா.. இதுவல்லோ பாக்கியம் என்று நானும் கிச்சாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துகொண்டோம்.. ரஜினி வருவாரா என்ற ஆவல் பல மடங்கு எகிறியது.. அவரது கார் வந்தது..அவர் வெள்ளை வேஷ்டி, சட்டையில் வந்திருந்தார்.. பாபா முக வெட்டில் இருந்தார்.. சரியாக பார்ப்பதற்குள் "வாம்மா..மின்னல்" வேகத்தில் நுள்ளே நுழைந்துவிட்டார்.. எங்கள் இருவருக்கும் பயங்கர கவலை.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு(?) நின்று ரஜினியை ஒழுங்கா பார்க்க முடியவில்லையே என்று.. அப்போது தான் எங்களுக்கு அந்த இனிய அதிர்ச்சி கிடைக்கும் செய்தி கேட்டது..

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Sunday, April 22, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 5

நாலாம் பகுதியிலிருந்து...

அப்போது தான் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பயன்படுத்தியிருந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் இருந்து முடிந்தவரை சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.

இனிமேல்...

எங்கள் ஆறு பேரின் மனசிலும், அடுத்து தங்க என்ன செய்வதென்பது தான் ஒரே யோசனையாய் இருந்தது. அந்த அறை எங்களது சொந்த அறையை போலவே எங்களுக்கு தோன்றியது. அப்போது கூட தங்கியிருந்த நண்பன் பூபாலன் எங்கள் நெஞ்சில் பால் வார்த்தான். அவனுக்கும், தேனி மாவட்ட எம்.எல்.ஏவை தெரியும் என்றும் அவரிடம் சொல்லி புது அறைக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். பட்டென்று யாரோ ஒருவர் வெளிச்சம் காண்பித்தது போன்று ஒரு சந்தோசம் எங்களுக்குள்.

நான் தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் நிறுவனதிற்கு தினமும் மின்சார ரயிலில் தான் செல்வேன். எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து எழும்பூர் ரயில் நிலையதிற்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் சானிடோரியம் சென்று, அங்கிருந்து கம்பெனியின் வேன் மூலம் ஆபீஸ் செல்வேன். ரயில் வாழ்க்கை ஒரு வித்யாசமான அனுபவம். காலேஜிற்கு கிட்டதட்ட ஒரு வருடம் சென்ற அனுபவம் இருந்தாலும் இது அதை காட்டிலும் மிற்றுலும் வித்யாசமான அனுபவம்.

நான் திண்டுக்கல்லில் இருந்து ரயில் செல்லும் போதும் பெண்களுக்கென தனி பெட்டி இருக்கும். தினமும் வந்து செல்லும் பெண்கள் அதில் பயணம் செய்வதைத் தான் விரும்புவார்கள். அதிலும் ஒரு சில காதல் கதைகள் இருக்கத்தான் செய்கிறது. என் கூட சிறிது காலத்திலேயே நண்பனாய் அமைந்த விஜய், அந்த மாதிரி ஒரு காதலில் சிக்கி, கலகலப்பு விஜய் சோக விஜய் ஆனாது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ஆனால் அது காதலா, சிறிது கால நட்பை காதலென நினைத்தாரா என்ற சந்தேகம் இன்னும் எனக்குள் இருக்கிறது. ஆனால் கிட்டதட்ட ஒரு நான்கு வருடம் கழித்து அவரை சந்தித்த போது அதே பழைய கலகலப்பு இருந்தது. அவரை பாக்கவே சந்தோசமா இருந்தது.
சென்னை ரயிலிலும் அது போன்றே பெண்களுக்கென தனிப் பெட்டி இருக்கிறது. அதிலும் காலை பரபரப்பு நேரத்தில் அதில் தொங்கிகொண்டு போகும் பெண்கள் என்னை ஆச்சரியப்படுத்தவே செய்தனர். சுடிதார் அணிந்த பெண்களும் சரி, புடவைகள் அணிந்த பெண்களும் சரி எல்லோருமே அப்படித் தான் சென்றார்கள். அதுவும் செங்கல்பட்டிலிருந்து வரும் ரயிலில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். நான் நகரை விட்டு போகும் ரயிலில் செல்வதால் அந்த அளவு கூட்டம் இருக்காது, உள்ளே வரும் ரயில்களைப் போல.

ரயில்களில் வியாபரிகள் கூட்டமும் தர்மம் கேட்கும் கும்பலும் இருக்கும். ரயிலினுள் வியாபாரம் செய்பவர்கள் பலரும் விழியிழந்தோர் தான். சிறிய அளவு கூண்டுசி முதல், ரேஷன் கார்டு அட்டை, காது குடையும் பஞ்சு முதல் எல்லாவற்றையும் விற்பார்கள். சில பேருக்கும், கண்கள் சரியாக இருந்தாலும், இரக்கத்தில் வியாபாரம் நடக்கும் என்பதால், விழிகளை இழந்தது போலவே தங்களது வியாபாரங்களை செய்வார்கள். ஒரு பக்கம் அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

ஒரு சில பேர் நல்ல பாடவும் செய்வார்கள். அவர்களின் சோகம் அந்த குரலில் ஏறி நம்மையும் மூழ்கடிக்கும். ஒன்றை குறைத்த ஆண்டவன் மற்ற ஒரு வரபிரசதத்தை தந்திருக்கானே என்று பல சமயங்களில் நினைத்துகொள்வேன். சென்னை ரயில் பயணங்களில் எனக்கும் சொல்லிக்கொள்ளும்படி எந்த நண்பர்களும் அமையவில்லை. ஆனால் பயணம் எனக்கும் பிடித்தே இருந்தது. தினமும் காலையில் கிளம்பி, அங்கே இருக்கும் VLR ஸ்டாலில் நான்கு இட்லிகளையோ, இரண்டு தோசைகளையோ சாப்பிடுவேன். அதன் ருசியே தனி தான்.

ரயிலில் நான் கவனித்தது, கண்டது கேட்டது எல்லாம் ஒரு தனிக்கதை.. நிறைய விஷயங்களை அது எனக்குச் சொல்லித் தந்தது. அதப் பற்றி பின்னால் சொல்கிறேன்..

பூபாலன் அந்த எம்.எல்.ஏவிடம் பேசி, புதிய அறையை வாங்கினான். அது புதிய எம்.எல்.ஏ ஹாஸ்டல். பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து நாங்கள் அங்கே ஜனவரி மாத கடைசியில் குடிபெயர்ந்தோம்.. புதிய அறை கொஞ்சம் விசாலமானது. அறை எண் 420. நாலாவது மாடியில். அங்கிருந்து பார்த்தால் அலைகள் இரவிலும் கரையில் இருப்போரை தொட முயற்சி செய்வதை பார்க்கலாம். தொரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கப்பல்கள் விளக்குகள் போட்டு நிற்பதை காணலாம். எனக்கும் இந்த அறை மிகவும் பிடித்திருந்தது. மனசு லேசான மாதிரி இருக்கும் ஜன்னலை திறந்து அமர்ந்தால்..

இரவு நேரங்களில் சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது வழக்கம். அன்று சேப்பாக்கம் வரை நடந்து சென்றோம். தூரத்தில் ஒருவன் வேகமாக ஓடி வருவது தெரிந்தது. கைலியை மடித்து கட்டியிருந்தான். பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். எங்கள் நண்பன் வேகமாக எங்களை நடக்கச் சொன்னான். நாங்கள் வளைந்து வாலாஜா ரோட்டில் வலது பக்கம் திரும்ப, தூரத்தில் நான்கு பேர் இடது பக்கத்தில் ஓடிவருவது அந்த அடர்ந்த இருட்டில் தெரிந்தது.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Sunday, April 08, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 4

மூன்றாம் பகுதி

அருமையான வாய்ப்பு தவறிப் போய்விட்டதே என்று எனக்கு பெரும் கவலை.. இந்த வேளையில் சென்னையில் புராஜெக்ட் தேடி அலுத்துவிட்ட என் நண்பனும் தனியாக வீட்டிலேயே சென்று செய்கிறேன் என்று மதுரைக்கு கிளம்பிவிட்டான்.. பக்கத்தில் சொல்லி அரற்ற நண்பனும் இல்லை. எனது இருபத்திமூன்று வருட வாழ்க்கையில் கிடைத்ததெல்லாம், முருகன் அருளால் தான். மனசு நிம்மதியடைய வடபழநி முருகன் கோயிலுக்கு சென்று வந்தேன்.. முதல் முறை சென்றதிலேயே நல்ல தரிசனம். மனதுக்குள், நாலு பாட்டில் பூஸ்ட்டை மொத்தமாக குடித்துவிட்டு, முருகன் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று சொன்னது போல் இருந்தது. அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை வந்ததால் ஊருக்கு சென்று வரலாம் என்று கிளம்பினேன். சென்று வந்தால் மனசுக்குள் இன்னும் நம்பிக்கை பிறக்கும் என்று எண்ணம்.

ஊரில் இருந்தபோது, திண்டுக்கலில் இருக்கும் அபிராமி அம்மன் கோவிலுக்கு போனேன்.. வெள்ளிக்கிழமை ஊரில் இருந்தால் அபிராமி அம்மன் கோவிலுக்கு பெரும்பாலும் போய்விடுவேன்.. அங்கே தெற்கு வாசப்படியில், புதுசாய் வாங்கின உயரம் கூடிய செருப்பை ஐம்பது பைசாவுக்கு அங்க இருக்கும் காலணிகளை பாதுகாப்பில் வைத்துவிட்டுச் சென்றேன்.. செருப்புகள் வைப்பதற்கு என்று எந்த அலமாரிகளும் இல்லை.. எல்லாமே அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்திருந்தார்கள். உள் சென்று அம்மனை தரிசித்துவிட்டு அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, செருப்பை காணல.. பாதுகாக்குறவங்க கிட்ட கேட்டா, நாங்க என்ன சார் பண்றது.. யாரோ மாத்தி எடுத்துட்டு போயிட்டாங்க போல என்று அசால்டா பதில் சொன்னாங்க.. எனக்கு சுர்ருன்னு கோபம் ஏறிடுச்சு. செருப்பு காணாம போனதை விட அதுக்கு அவங்க சொன்ன பதில் தான் கோபத்துக்கு காரணம். யாரோட செருப்பை யார் வேணும்னாலும் எடுத்துட்டுப் போனா அப்புறம் எதுக்கு அதை பாதுகாக்கன்னு இவங்க வேற தனியா.. ஒருவேளை புது செருப்புங்கிறதால அவங்களே கூட எடுத்திருக்கலாம்.. ஆனாலும் என்ன பண்றது, அப்படியே வீட்டுக்கு வந்தேன்.. மனசே சரியில்லை.. கம்பெனிலயிருந்து அனுபின லெட்டர் வரல.. புது செருப்பு கோயில்ல காணல.. மெல்ல சனி தலைல சம்மணம் போட்டு உட்கார்ந்ததா ஒரு கவலை..

ஆனா, செருப்பு காணாம போனதுக்கு வீட்ல சொன்ன காரணமோ உல்டாவா இருந்தது. கோயில்ல செருப்பு தொலஞ்சா நல்லதாம்.. அட..யாரோ ஒரு கூடை ஐஸை எடுத்து தலைல வச்ச மாதிரி ஜில்லுன்னு இருந்தது. அந்த ஜில்லிப்போட மெட்ராஸ் வந்து, அந்த தங்கைக்கு போனைப் போட்ட, "அண்ணா, உங்களை ஜனவரி ரெண்டாம் தேதி டைரக்டா கம்பெனிக்கு வந்திடச் சொன்னாங்க.. அன்னைக்கே லெட்டரையும் நேர்ல தந்திடுறாங்களாம்.." அப்படி ஒரு சந்தோசம் மனசுக்குள்.. நாம எல்லாம் கம்பெனில போய் புராஜெக்ட் பண்ண போறோமா.. ஆஹா! செருப்பு தொலஞ்சது நல்லதுக்குத் தான் போலன்னு நினச்சுகிட்டேன்..

அந்த 2002 ஆரம்ப காலங்களில், நமக்கு ஆங்கில புலமை எல்லாம் அவ்வளவா இல்லை. ஏதோ பேசத் தெரியும். யார் பேசினாலும் அதை புரிஞ்சுக்க முடியும். காலேஜ்ல இருக்க வரைக்கும், எப்படியோ நாளை நகத்தியாச்சு. கிளாஸ்ல செமினார் எடுக்கச் சொன்னா எடுக்கச் சொன்ன ஆளையே கிண்டல் பண்ணிட்டு அமைதியா உட்கார்ந்துடுவோம். அதுக்கு எல்லாம் மொத்தமா உள்ளுக்குள்ள உளறல். எப்படி போய் ஒரு கம்பெனில நாம எல்லாம் வேலை பாக்க போறோம். ஜனவரி 2-ம் தேதி, அந்த கம்பெனியோட ரிசப்சன்ல திருட்டு முழியோட தான் உட்கார்ந்து இருந்தேன். அதே நாள், அதுக்கு பிறகு என் கூட புராஜெக்ட சேர்ந்து வேலை செய்த ஒரு தோழியும் அங்க உட்கார்ந்து இருக்காங்க. இன்னைக்கும் அந்த முழியை சொல்லி சொல்லியே நம்மளை கலாய்ப்பாங்க. என்ன கேள்வி கேட்டா என்ன மாதிரி பதில் சொல்லணும் நான் மனசுக்குள்ளயே ஒரு சின்ன நாடகம் மாதிரி போட்டு பாத்துகிட்டேன்.. ஆனா, உள்ளே போன பிறகு தான் தெரிந்தது வாய்ப்பு கிடைக்கிறவரை சச்சின் கூட ரஞ்சி பிளேயர் தான்னு.. நமக்குள்ள இந்த அளவுக்கு தெளிவான ஒரு ஆள் உட்கார்ந்து இருக்கான்னா அப்போ தான் எனக்கும் தெரிஞ்சது..

இந்தப் பக்கம், புராஜெக்ட் தேடி சென்னை வந்த என் நண்பர்கள் தங்க இடம் கிடைக்காமல் இருக்க, அவர்களும் என் கூட, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்க வந்தார்கள். அப்போது நான் ஒருவன் மட்டுமே இருந்ததால், இன்னும் ஐந்து நண்பர்கள் என்னுடன் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் என் கூட எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்தவர்கள். ஆக மொத்தம் அந்த சின்ன அறையில் ஆறுபேருடன் சேர்த்து இனிதாக ஆரம்பமானது 2002. நான் தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் MஏPZ-இல் இருக்கும் கணினி நிறுவனத்திலும், என் நண்பன் கிச்சா சென்னை தலைமைசெயலகத்தில் இருக்கும் நீC-யிலும், மற்ற மூன்று நண்பர்கள் அண்ணா சாலையில் இருக்கும் ஒரு நிறுவனத்திலும் மற்றொரு நண்பன் செந்தில் சைதையில் இருக்கும் ஒரு நிறுவனத்திலும் புராஜெக்ட் செய்ய ஆரம்பித்தோம். தினமும் கம்பெனி போய்விட்டுவந்தால் ஆரம்பிக்கும் அரட்டை இரவு பனிரெண்டு மணிக்கும் மேலும் நீடித்தது. பல நாட்கள் சீட்டுகட்டை எடுத்துப் போட்டால், ரம்மி, கழுதை என்று ஆட்டம் கலகலப்பாய் போகும். மொத்தத்தில் இன்னொரு கல்லூரி வாழ்க்கையை நாங்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருந்தோம், கல்லூரியில் அல்லாமல்.

அப்போது தான் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பயன்படுத்தியிருந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் இருந்து முடிந்தவரை சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Monday, March 26, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 3

இரண்டாம் பகுதி

ஸ்பென்சர் பிளாசா -

மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால், எனது பள்ளித் தோழன்.. அவனை பார்த்தவுடன் ஆச்சர்யம் ஒரு பக்கம்.. அதிசய பார்வை மறு பக்கம்.. என்னடா அப்படிப் பாக்குற.. மறந்துட்டியா.. என்று கேட்டான் பிரகாஷ்.. என்னுடன் ஆறாம் வகுப்பு மட்டும் படித்தவன்.. மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஊர் சொன்னான்.. அப்போது நானும் அவனும் ஒரே மாதிரி.. இந்த நாகரீகங்கள் எல்லாம் அப்போது எங்களுக்கு, அண்ணாந்து பார்த்து அதிசயப்படும் ஜெட் விமாங்கள் போல, உணர்வைத் தரும். சென்னையிலிருந்து இளையராஜா என்ற பையன் (அண்ணா நகர் என்று நினைக்கிறேன்) ஒவ்வொரு முறை ஊருக்கு சென்று வரும் போதும், புதுசாய் பேண்ட், கால் பேண்ட் மாடல்கள் இருக்கும். அதை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு ஆச்சர்யப்பட்டு தெரிந்து கொள்வோம். அப்படி என்னுடைய எண்ணத்தோடு இருந்தவன், இப்போது பார்த்தால் பக்கா சென்னைவாசி.. காதில் சின்ன கடுக்கன், கிழிந்த ஜீன்ஸ் பெண்ட், வுட்லேண்டஸ் ஷூ, எண்ணெய் வைக்காத பரட்டை தலை.. விழுந்து விடுவதை போல தவாங்கட்டையில் பிரெஞ்சு தாடி.. என்னால் உண்மையில் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அட! இந்த அதிர்ச்சியோடு அவன் சொன்னது சொல்ல முடியாத குற்ற உணர்வையும் கிளப்பியது..


இந்த பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு தெரியாது. ஆனால், நல்ல வேலையில் சேர்ந்த பிறகு, இவனளவுக்கு கடுக்கனோடு மாறலைனாலும், சென்னை மக்களுக்கு ஏத்த மாதிரி மாறனும்.. நீளச் சட்டை, பலூன் பேக்கிஸ் வகையறாக்களுக்கு விடைகொடுக்கணும்னு நினச்சுகிட்டேன். இவ்வளவு நாட்கள் அதற்கு வாய்ப்பு வரவில்லை.. இனிமேல், இடத்திற்கு தகுந்த மாதிரி நாம நம்ம உடைகளை மாற்றி கொள்ளவேண்டும் என்று நினைத்துகொண்டேன்.. ஆனால் உள்ளிருக்கும் மனசு எப்பவும் சிப்புக்குள் இருக்கும் முத்து மாதிரி வச்சுக்கணும்னு நினச்சேன்.. என்ன தான் பாசி படிந்து, வண்ணங்கள் சிப்பியில் படிந்தாலும், அது உள்ளிருக்கும் முத்தின் வெள்ளை நிறத்தை மாற்றாது அல்லவா, அதைப்போல..

அன்று ஒருவழியாக, ஸ்பென்சரின் எல்லாத் தளங்களையும் சுற்றி விட்டு, வெகு தாமதமாகத் தான் அறைக்கு கிளம்பினோம். நானும் என் நண்பன் குமரனும் ஸ்பென்சரில் இருந்து கிளம்பி எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்துகொண்டிருந்தோம். சாந்தி தியேட்டரின் எதிர்புறம், தபால் அலுவலகம் இருக்கும் இடத்தில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. சுரங்கப்பாதையின் அந்த கூண்டின் பக்கவாட்டில் மக்கள் நடந்து போக சிறிது வழி வைத்திருந்தார்கள். சுரங்கப்பாதையின் வலது புறம் சாலை இருப்பதால் எல்லோரும், இடது பாதசாரி வழியையே பயன்படுத்துவார்கள். நாங்களும் அவ்வழி செல்ல நுழைகையிலும், அங்கே அந்த மெல்லிய வெளிச்சத்தில் இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள் என்று நினைத்த வேளையில், ஒருவள் வேகமாக நடந்து எங்களை நோக்கி வந்தாள். அருகில் வரவரத் தான் எங்களுக்கு புரிந்தது, அவர்கள் அரவாணிகள் என்று. வந்தவர் என் நண்பனின் கைபிடித்து ஏதேதோ சொல்ல ஆரம்பிக்க, நானும் என் நண்பனும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைத்தோம். ஆனால், அதற்குள் இன்னும் இருவர் வந்து எங்களை வளைக்க ஆரம்பிக்க, நாங்கள் அவர்களின் இடையில் புகுந்து ஓட்டமெடுத்தோம். அதன் பிறகு ஒரு நாள், என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது, சாந்தி தியேட்டர் சுரங்கப் பாதை இதற்கு சிறந்தது என்று.

இரவு நேர எம்.எல்.ஏ ஹாஸ்டல் ரொம்ப அமைதியானது. எல்லா அறையிலும் விளக்குகள் விடிய விடிய எரிந்தாலும் உள்ளிருந்து எந்த சப்தங்களும் வராது.. நாங்களும் சூரியன் இல்லையென்றால் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும் என்ற சென்னையின் கலாச்சாரதிற்கு பழக்கப்பட்டிருந்தோம். சில சமயம் சில அறைகளின் உள்ளே பாட்டில்கள் உருளும் ஒலி இருக்கும்.. தூக்கம் வராத சில இரவுகளின் போது, இரவு நேர பெண்களின் வருகையை கூட நான் கவனித்திருக்கிறேன். ஓமந்தூரார் இல்லத்தின் உள்ளே, எம்.எல்.ஏ ஹாஸ்டலின் உள்ளே, இரவு நேரங்களில் விலைமாதர்கள் தொந்தரவு இருக்கும் என்று ஒரு வாரைதழில் படித்தேன். ஆனால் நான் அங்கு இருந்த ஐந்து மாத காலங்கள் அப்படி எந்த சம்பவம் நடந்ததை நான் கண்டது கிடையாது. பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் புதிய எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் இடையே மரங்கள் சூழ்ந்த பகுதியில் இது போல் நடப்பதாக சொல்லப்பட்டது.

இந்த வேளையில், என் புராஜெக்ட் தேடும் பணியும் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள், என் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண், என் தோழியின் அறையில் தங்கியிருந்த காரணத்தால், பழகியதில் எனக்கு தங்கையாகி இருந்தாள். அவளிடம் என் ரெசியுமை கொடுத்து புராஜெக்ட் தேடச் சொல்லியிருந்தேன், அவளின் மாமா சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால். அவளிடம் இருந்து எனக்கு இ-மெயில் வந்திருந்தது. ஏன் இன்னும் அவள் மாமா சொன்ன கம்பெனியில் இருந்து அழைப்பு அனுப்பியும் அந்த கம்பெனியில் புராஜெக்டில் சேரவில்லை என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடா, அவர்கள் அனுப்பிய இ-லெட்டரை நான் மறந்து ஏதும் அழித்துவிட்டேனோ என்று. ஊருக்கு கால் பண்ணியும் கேட்டேன், அப்படி கடிதம் எதுவும் வந்ததா என்று. ஆனால் அவர்களும் வரவில்லை என்றார்கள். அந்தப் பெண் அனுப்பிய இ-மெயில் இருந்த தொலைபேசிக்கு டயல் செய்தேன்.. ஆண்டவா, இப்படி கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்று வேண்டினேன்.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Tuesday, March 06, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 2

முதல் பகுதி

தினமும் நாங்கள் சிஃபி ஹப்பில் போய் மெயில் செக் செய்வது, ஏதாவது நிறுவனத்தில் இருந்து சேதி வந்திருந்தால் அவர்களை போய் பார்ப்பது, இது தான் எங்களது வேலை. இதற்காக சிஃபியில் ஐம்பது ரூபாய் பேக்கேஜ் வாங்கி வைத்திருந்தோம். மெயிலில் செய்தி வந்த இடங்கள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் சில நேரம் வெட்டியாக ஊரைச் சுற்றியிருக்கிறோம். ஒரு முறை என் நண்பனுக்கு சிட்லபாக்கத்தில் ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து புராஜக்ட் தருவதாக அழைத்திருந்தார்கள். சரி போகலாமே என்று எல்.ஐ.சியில் பஸ் பிடித்தோம். அங்கே இருந்து சிட்லபாக்கம் போவதென்பது ஒரு பெரிய சுற்றுலா. நான் எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகளின் கருணையினால் ஐம்பது நிமிடத்தில் மதுரைக்கு சேர்த்துவிடுவார்கள். இங்கே நாங்கள் சிட்லபாக்கம் வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அது முதல் தடவை சென்னையை சுற்றுவது. அதனால் டி.எம்.ஸ், தேனாம்பேட்டை, சைதபேட்டை, கிண்டி, ஏர்போர்ட் (இந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் நான் சீட்டில் இருந்து மெல்ல எழுந்து ஏதாவது ஏரோபிளேனை உயர்ந்த காம்பவுண்டு சுவர்களுக்கு பின்னால் பார்க்க முடிகிறதா என்று எட்டிப் பார்ப்பேன்)பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என்று எல்லா இடங்களை மனதுக்குள் குறித்துக்கொண்டே வந்தேன். எந்த ஊருக்கு புதிதாக சென்றாலும் போகும் வழி ஊர்களையும், அந்த ஊரை பற்றி முன்னமே எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறோமா என்றும், நான் எண்ணிப்பார்ப்பது வழக்கம்.

சிட்லபாக்கத்தில் இறங்கி கிட்டதட்ட ஒரு மைல் தொலைவு நடந்து சென்றோம். ஒரு மாடி வீடு வந்தது. வெளியே அந்த நிறுவனத்தின் பெயர் பலகை இருந்தது. உள்ளே சென்றோம். ஒரு வீட்டின் ஹால் மற்றும் அறைகளுக்குள் கம்பியூட்டர்கள் வைக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். நாங்கள் சென்று அந்த கம்பெனியின் மேனேஜரை பார்த்தோம். அவர் புராஜெக்ட் தருவதாகவும், ஆனால் அதற்கு நாங்கள் ஐந்தாயிரம் பணம் கட்டவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். புராஜெக்டுக்காக சென்றால், இது போல பல நிறுவனங்கள் பணம் கேட்ட கதை எங்களுக்கும் நடந்திருந்ததால் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினோம். கீழே வந்த பிறகு தான் ஞாபகம் வந்தது, என் ரெசியூம் அவர்கிட்ட இருப்பது. நான் மறுபடியும் அந்த மேனேஜரை பார்த்து, கொடுத்த ரெசியூமை திரும்ப வாங்கி வந்தேன். அப்போதெல்லாம் ஒரு ப்ரிண்ட் எடுக்க கிட்டதட்ட ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வர ஆகும். எப்படியும் பணம் கொடுத்து இங்கே புராஜெக்ட் செய்யப் போவதில்லை.. எதுக்கு பணத்தை வேஸ்ட் செய்யவேண்டுமென்று அது தான் திரும்ப வாங்கி வந்தோம்.

எல்.ஐ.சியை படத்தில் மட்டுமே பார்த்து வந்த எனக்கு, அதன் பிறகு எல்.ஐ.சி ஒரு பெரிய விஷயமாக இல்லை. இந்த குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கும். அழுது ஆர்பாட்டம் பண்ணும். ஆனால் அந்த பொருள் கையில் கிடைத்துவிட்டால் சிறிது நேரம் தான் ஆர்வமெல்லாம். அது போன்றதொரு நிலையில் தான் என் மனமும் எல்.ஐ.சியை நினைத்தது. பஸ் ஏறவும் இறங்கவும் அங்கே தான் செல்வேன் என்பதால் எனக்கு இப்போது அது சலித்து விட்டது. ஆனால் ஸ்பென்சருக்கு போகாததால் அதற்கு செல்லலாமென்று ஒரு நாள் வார இறுதியில் கிளம்பினோம். ஞாயிற்றுக்கிழமை தான் ஸ்பென்சர் களைகட்டும் என்று நண்பர்கள் அடிக்கடி சொல்லியிருந்ததால் அன்றைக்கே கிளம்பினோம். ஸ்பென்சர் பிளாசா, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து நடக்கும் தூரம் என்பதால், நாங்கள் நடந்தே தான் சென்றோம்...

ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன. அதென்ன கிராமத்து உடைகள் என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது. கிராமத்து மனிதர்களின் சட்டைகள் எப்போது முட்டிவரை நீண்டு இருக்கும். நான் சட்டை தைக்க போகும் போதெல்லாம் என் அம்மா, வளர்ற பையன்னு சொல்லி நீளமா தான் தைப்பாங்க.. அப்புறம் மதுரைல காலேஜ் சேர்ந்த பிறகு, நீளம் கொஞ்சம் குறைந்ததென்னவோ உண்மை தான். இப்படி ஒவ்வொரு உடை ஸ்டைலும் நான் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து தான் வருகிறேன் என்பதை ஊருக்கு முரசு கொட்டி சொல்லும். அப்புறம் சட்டையை இன் செய்ய ஆரம்பித்ததில் இருந்து இந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மறுபடியும் பேண்ட் மாடல் பிரச்சனை தரும். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் பிடித்தன எனக்கு, மக்களோடு ஒன்றாக இணைவதற்கு...

ஸ்பென்சர் பிளாசா நவநாகரீக உலகமாக தெரிந்தது. அவர்களின் உடைகளும் பேச்சுகளும் என்னை மெதுவாக நத்தை கூட்டுக்குள் நத்தை சுருங்கி கொள்வது போல மாற்றியது. மெல்ல ஏதோ ஒரு தெரியாத உலகத்தில் நுழைந்து விட்டமோ என்ற குறுகுறுப்பும் படபடப்பும் என்னை ஆட்டுவித்தது. அந்த ஏசி பிளாசாவிலும் முகம் திட்டு திட்டாய் வேர்க்க ஆரம்பித்தது. தரை தளத்தில் எல்லோரும் அடித்து பிடித்து, சிற்றுண்டிகளை வாங்கி கொண்டிருந்தார்கள். மெல்ல விலைப்பட்டியலை பார்த்தேன். எங்கள் ஒரு நேர உணவின் விலையது.. அப்படியே அங்கிருந்து மெல்ல நகன்று எல்லாத் தளங்களுக்கும் சென்று வந்தோம். மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால்..

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Thursday, March 01, 2007

சூரியன் FM - கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!

உங்களுக்கே தெரியும், உங்களை குஷிப்படுத்த என்ன என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் தேடிக்கொடுப்பது தான் நம்ம வேலை.. இதோ இப்போ அடுத்த விஷயம்!

நீங்க அமெரிக்காவுல இருங்க, சூடான்ல இருங்க, துபாய்ல இருங்க இல்ல ஆஸ்திரேலியா, லண்டன்ல கூட இருங்க.. நீங்க எங்க இருந்தாலும் இருந்த இடத்துல இருந்தே இப்போ சென்னை சூரியன் FM கேட்கலாம்!

கேளுங்க! கேளுங்க! கேட்டு கிட்டே இருங்க!

உங்க கிட்ட விண்டோஸ் மீடியா ப்ளேயர் இல்லைனா, அதை தரை இறக்கம் செய்ய வேண்டும் சூரியன் FM கேட்க.. இது இந்திய நேரப்படி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

நன்றி : தீவு

Wednesday, February 28, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 1

முன்னுரை :இது எனது பார்வையில் நான் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய ஒரு தொடர் பதிவு. வயல்காட்டையும் மதுரை (பெரிய கிராமம்) வீதிகளையுமே பார்த்தவன், டி.நகர் தெருக்களையும் ஸ்பென்சர் பிளாசாவில் பெண்களையும் கடற்கரை வரம்பு மீறல்களையும் கண்ணார கண்ட போது என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதுகிறேன்.. சில விஷயங்கள் என் கண்களை பெரியதாகவும் பல விஷயங்கள் கண்களை மூடவும் செய்த ஒரு அனுபவ தொடராய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நான் டைரியில் எழுதுவதைப் போல இங்கே எழுதுகிறேன். எப்பவும் தரும் உங்கள் ஆதரவையும் உயர் கருத்துகளையும் பின்னூட்டத்தில் இடவும் நண்பர்களே..

நான் எனது எம்.சி.ஏ கடைசி செமஸ்டர் புராஜெக்டுக்காக 2001 டிசம்பர் ஆறாம் தேதி சென்னை வந்து இறங்கினேன். அது எனது இரண்டாவது சென்னை பயணம். அந்த இரண்டிலும் நான் எல்.ஐ.சி பார்த்திருக்கவில்லை. மதுரையில் இருந்து நான் எனது நண்பன் குமரனும், அண்ணா சாலையில் சாந்தி தியேட்டரை தாண்டி வெயிலில் நின்றிருக்கும் அண்ணா சிலை அருகே எங்களை இறக்க்விட்டு சென்றது நாங்கள் வந்த பேருந்து. எனது நண்பரின் அப்பா, மதுரை திருமங்கலம் தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.. சென்னையில் எங்களுக்கு யாரும் தெரியாததால் நாங்கள் எனது நண்பர் தங்கியிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதென ஏற்பாடு ஆகியது. அறை எண் 16. அது பனிரெண்டுக்கு பத்து (குத்து பதிப்பாக) வகையிலான அறை. எதிர் மூலையில் கட்டில் இருக்கும். பேன் வசதியும் போன் வசதியும் உண்டு. அதனால் வீட்டில் இருந்து அழைப்பதற்கு வசதியாகவும் போயிற்று. மொசைக் தரையிலான குளியறை. ஹீட்டர் வசதி உண்டு.

அப்போது அந்த அறைக்கு வாடகை மாதம் ஆயிரத்து எண்ணூறு. முதன் முதலாக சென்னையில் வாசம். சுற்றிலும் ஒவ்வொரு தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள். நடப்பு எம்.எல்.ஏக்களுக்கு என தனி விடுதியும் உண்டு. அதுவும் கலைஞர் 96-இல் பதவி ஏற்றபோது அவர்களுக்கென தனியாக குவாட்டர்ஸ், மூன்று படுக்கை வசதி கொண்டது ஒன்றை கட்டினார். அது தான் டி.ஆரின் காதல் அழிவதில்லை படத்தில் விவேகானந்தா கல்லூரி என்று காட்டப்பட்டது.

எனக்கு எல்லாமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. பேருந்து எண்கள், வெள்ளை, மஞ்சள், எம் போர்ட் என பல வகைகள் என்று எல்லாமே என்னை வெகுவாக குழப்பியது. மதுரையில் ஏ சர்வீஸ், பி சர்வீஸ் என்று இருந்ததால் இதை விரைவாகவே புரிந்துகொண்டோம். நிஜமாகவே பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்த நிலை தான் எனக்கு. நுங்கம்பாக்கம் ரோட்டில் இருக்கும் பொட்டிபட்டி பிளாசாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் புராஜெக்டுக்காக தேர்வு இருந்தது. அதற்காக பஸ் (எப்படியோ) பிடித்து அங்கே போய் சேர்ந்தோம். பொட்டிபட்டி பிளாசா நுங்கம்பாக்கம் முடிவில் இருந்தது. நாங்கள் தி பார்க் ஹோட்டல் அருகிலேயே இறங்கினோம். இறங்கியவுடன், அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தோம். ஏதோ ரெண்டு நிமிசம் நடந்தால் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடக்கிறோம் நடக்கிறோம் நானும் எனது நண்பனும், இடம் வந்த பாடில்லை. மறுபடியும் விசாரித்தோம். இவரும் அதே மாதிரி தான் சொன்னார். கிட்டதட்ட நீண்ட நடைக்கு பிறகு அந்த பிளாசாவை கண்டுபிடித்தோம். இங்கே தான் எங்களின் முதல் பாடம். சென்னையில் யாரிடம் கேட்டாலும் எல்லா இடத்தையும் இந்த அப்படிக்கா போன வந்துவிடும் என்ற ரீதியில் தான் சொல்கிறார்கள். நடந்தால் தான் தெரிகிறது அது எவ்வளவு நீண்ட தொலைவு என்று. அதானல இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டொம்.

எனது காலணி பத்தியும் அது தன்னை தொலைத்துவிட்டு எனக்கான புது வாழ்க்கை தந்ததையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும். நான் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் சற்று உயரம் கொண்ட செருப்புகளையே அணிவது வழக்கம். அதனால் சென்னைக்கு வருவதற்கு முன்னால் அப்படியொரு தோல் காலணியை தைத்து வாங்கி வந்திருந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை. அது தேவையில்லா ஒன்று எனவும் குடும்ப நிலமைக்கு அறுநூறு ரூபாய் ஷூ பெரிய விஷயம் என்பதாலும் நான் இந்த இன்டர்வியூ வரை ஷூ வாங்கியதே இல்லை. எனது சிறு வயதில் ஆசை காரணமாக என் தந்தை வாங்கி தந்த ஷூ மட்டுமே அதுவரை எனக்காக வாங்கப்பட்ட ஒன்று. இந்த இன்டர்வியூ போவதற்கு இடம் கண்டுபிடித்தவுடன், பக்கத்தில் ஏதாவது ஷூ கடை இருக்க என்று தேடினோம். பாட்டா ஷோரூம் கண்ணில் அகப்பட்டது. உள்ளே சென்று புதியதாய் வாங்கி அப்படியே அந்த நிறுவனத்துக்குள் நுழைந்தோம். எல்லோரும் என் ஷூவில் தான் முகம் பார்த்துகொள்கின்றனரோ என்பது போல், எனது இடது இதய ஆரிக்கிள் கூச்சத்திலும், வலது ஆரிக்கிள் பெருமிதத்திலும் நிரம்பி தள்ளாடியது. நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள். இதோடு நுழைவுத் தேர்வு படபடப்பு வேற என்னைத் தொற்றிக்கொண்டது. (இன்று அணியும் நாற்பது டாலர் பதிப்பு ஷூ எப்போதும் எனது செருப்புக்காலை நினைவுபடுத்த தவறியதே இல்லை)

தேர்வு எழுதிவிட்டு மறுபடியும் வண்டி பிடித்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். எனது ஆரம்ப காலங்களில் நான் காலை உணவு உட்கொண்டதே இல்லை. அப்பா கொடுத்தனுப்பி விட்ட பணத்தை கொண்டு எந்த அளவுக்கு சிக்கனமாக இருக்க வேண்டுமோ அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தோம். இந்த மூன்று நேர உணவுகளை தவிர்த்து வேறேதுவும் நாங்கள் சாப்பிட்டோமா என்றால் அந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இரண்டு ரூபாய் காபியோ டீயோ எங்களது வயிற்றை நிரப்பியது. அதனால் மதிய உணவு அன்லிமிடட் மீல்ஸ் தான். தேர்வு முடிந்து வந்தவுடன், எம்.எல்.ஏ (இதற்கு தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பெயர் வைக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம்) விடுதியில் இருக்கும் உணவகத்தில் தான் உணவு உட்கொள்வோம். அன்லிமிடட் மீல்ஸ் பதினாறு ரூபாய், கூடவே கோழி குழம்பும் மீன் குழம்பு உண்டு. இது தான் நாங்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு. சில சமயம் அந்த குழம்புகளோடு வந்து விழும் சில கறித் துண்டுகள் இப்போது கைகளில் வாங்கும் லட்சம் ரூபாயை விட அதிகம் மதிப்பு கொண்டது, அன்றைய நாட்களில்.இரவு உணவு கையேந்தி பவன்களில் இரண்டு புரோட்டாக்களோ, இல்லை மூன்று வாழைப்பழங்களோ தான் தினமும் எங்களின் வாக்கைக்கு ஆதாரம்.. எங்கள் ஆகாரம்.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Saturday, February 17, 2007

யாஹூவின் சென்னைப் பக்கம் - சூப்பர் புகைப்படங்களுடன்

யாஹூ இந்தியாவில் இருக்கும் மாநகரங்களுக்கென புதியதாக தனித்தனியான பக்கங்களை உருவாக்கி உள்ளது. அங்கே நீங்கள் சென்றால் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழச்சிகள் மற்றும் சென்னையை சுற்றி எடுத்த புகைப்படங்கள் என்று பல கலவையான செய்திகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

அங்கே இருந்து சுட்டது தான் கீழே உள்ள படங்கள் சில.. அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அப்படியே ஒரு ரவுண்டு சென்னையை சுற்றி வந்தது போல இருந்தது..

இது திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் இருக்கும் ஒரு கடை


பச்சை விளக்குகிற்காக வெயிட்டிங்


சென்னை சென்ட்ரல் உள்ளே


சென்னைக்கு வராதவங்க கூட திரைப்படங்களில் பார்த்திருக்கும் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் ஒரு சின்னம் (?)


நம்ம மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்


போய்த்தான் பாருங்களேன் யாஹூ சென்னை பக்கத்துக்கு

Tuesday, January 09, 2007

பளபளக்கும் பழைய மஹாபலிபுர சாலை - படங்களுடன்

அய்யோ.. பக்கத்து வீடு பார்வதிக்கு திடீர்னு இடுப்புவலி வந்திடுச்சே.. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்..ஒரு ஆட்டோ புடிங்கப்பா என்று கத்தியவாறே வந்தாள் சரோஜா.. அப்படி அவசர அவசரமாக நாவலூரில் இருந்து ஆட்டோ பிடித்து ராயப்பேட்டை போவதற்குள் ஆட்டோகுள்ளேயே குழந்தை பிறந்து விடும்.. ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், பழைய மஹாபலிபுரம் சாலையில் மருத்துவமனை சென்ற பல கர்ப்பிணி பெண்களின் நிலைமை இது தான். அதற்கு பிறகு மழைகாலத்து புற்றீசல் போல கணினி நிறுவனங்கள் வந்த பிறகு அதற்கு செல்லும் ஒவ்வொரு நிறுவன பேருந்துகளில் பயணித்தே முதுகெலும்பு வளைந்து போனது எத்தனையே மக்களுக்கு.. ஆனால் அவர்கள் கனவெல்லாம் நனவாக போகிறது. மத்திய கைலாசத்தில் ஏறினால் எவ்வித பிரச்சனையும் இன்றி நாவலூர் போகலாம்..

டைடல் பார்க்கின் புதிய முகப்பு



இனிமேல் அவர்கள் முதுகெலும்பெல்லாம் அப்பாடா..என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளும்.. ஆமாம்.. பளபளக்கும் ரோடுகள்.. இருபுறமும் கண்ணை கவரும் கருதுச் செறிந்த, பார்த்தால் மனதை இறகு போல் லேசாக்கும் வகையிலான விஷயங்கள்.. சிலை உருவாக்கங்கள்.. சுவற்றுசித்திரங்கள் என்று பக்காவா ஒரு நவீன சாலை உருவாகி வருகிறது..

அழகிய பேருந்து நிறுத்தம்




முதலில் இந்த சாலை போட ஆரம்பிக்கும் போது..அட போடவைப்பது போல மாதிரி படங்கள் வைத்திருப்பார்கள்.. ஆச்சரியமாய் இருக்கும்.. இப்படி எல்லாம் இருக்குமா என்று அதிசயப்பட்டதுண்டு.. ஆனால் இன்று அங்குள்ள பேருந்து நிறுத்தங்களை காணுகையில்..எல்லாம் நனவாகும் தூரம் எட்டும் பக்கத்தில் தான் இருக்கிறது. அதிலும் இந்த மாதிரி சிலை மற்றும் கலை வடிவங்கள் எல்லாம், எப்படி இப்படி எல்லாம் என்று கண்களை அகல வைக்கிறது.

சாலையின் பக்கவாட்டுகளில் நடனமாடும் சிலைகள்




வருக.. எங்கள் புதிய கனவுச் சாலையே.. அதிலே பயணிக்கபோறவன் என்ற வகையில் அதனை வரவேற்க கையில் மாலையுடன் முதல் வரிசையில் நிற்கிறேன்.. ஆனால் இவ்வளவு அருமையான சாலையை தந்த பின், அதை ஒழுங்காக பராமரிப்பார்களா என்ற எண்ணம் கொஞ்சம் மனதை அழுத்தவே செய்கிறது.. ரோடு போட அரசாங்கத்தை நாம் எப்படி வற்புறுத்துகிறோமோ அவ்வாறே அதை பரமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் முயல வேண்டும்.. அரசுக்கு உதவ வேண்டும்.. சும்மா சிகரெட் துண்டுகளையும், தின்பண்ட பெட்டி மற்றும் காகிதங்களையும் சாலையிலே விட்டெறிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த சாலையின் ஒரு அடி உங்களுக்கு சொந்தம் என்று நினையுங்கள். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு சென்றால் மட்டும் சலையிலே குப்பை போடாமல் தவிர்க்கும் நீங்கள், சரியான வேகத்தில் வண்டியை ஓட்டும் நீங்கள், இந்தியா போனவுடன் 'பழைய குருடி கதவை திறடி' என்று மாறும் மாற்றத்தை ஒழியுங்கள்..

சாலையோர சுவர் ஓவியங்கள்


நாட்டை காப்போம்.. சாலையை காப்போம்.. எல்லாவித சக்திகளை சரியாக உபயோகிப்போம்.. என்று எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள்.. இல்லையெனில் அடுத்து வரும் எதிர்கால சந்ததியினர், நமது பேரக்குழந்தைகள் தான் அல்லாடுவார்கள்.


படங்கள் அனைத்தும் சென்னையை காதலிக்கும் அவியுக்தா கீர்த்திவாசனின் பொக்கிஷத்திலிருந்து... நன்றி கீர்த்தி

இது அவர் உருவாக்கிய அடையாளம்