Monday, April 30, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 3

இரண்டாம் பகுதி

ஒரு நாள் இரவு, பனிரெண்டு மணி போல எப்போதும் அடிக்கபடும் சர்ச் கோவில் மணியோசை கேட்டது.. ஊரே கண்ணை முழிச்சுகிட்டது.. திருடர்களை பிடிச்சதாகவும், அவங்க நாலஞ்சு பேருன்னும் தெரிஞ்சவுடன் எல்லா வீட்டுல இருந்த உலக்கை, அருவாள் எல்லாம் அந்த வீட்டு ஆண்களோட கைக்கு மாறியது.. அதுக்குள்ள யாரோ போலீசுக்கும் போன் போட்டாங்க.. போலீஸ் வர்றதுக்குள்ள, ஊரே சேர்ந்து அடிச்சதுல, அந்த அஞ்சு பேரும் கிழிஞ்ச துணிமாதிரி ஆகியிருந்தாங்க..போலீஸ் வந்து ஊரை சமாதனப் படுத்தி அந்த அஞ்சு பேரையும் கூட்டிகிட்டு போனாங்க..

போலீஸுக்கு எங்க ஊர்ல இருக்க பாதி பேரோட பேர் தெரியும்.. நிறைய பேர் போலீஸ் தோளுல கை போட்டு பேசுற அளவுக்கு பரிச்சயமானவங்க.. சில பேர் போலீஸ் கிட்ட நண்பர்கள் மாதிரி கூட பழகுவாங்க.. எனக்கெல்லாம் போலீஸ்னா எப்போதுமே ஒரு அலர்ஜி உண்டு.. எங்க ஊரை நம்பி எங்க ஊர் காரவங்க மாட்டும் அல்ல, நிறைய போலீஸ் குடும்பங்கள் அப்போது பிழைத்து கொண்டிருந்தன.. ஆனால் ஒரு சில பேர் பிழைக்க நிறைய குடும்பங்கள் அழிந்ததென்னவோ உண்மை தான்.. சில போலீஸ்காரர்கள் இந்த சாராய வியாபாரிகளுக்கு கூழைகும்பிடு போட்டு பணம் வாங்கி சென்றதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் இரவு ஆறு மணி ஆகிவிட்டால் எங்கள் தெருவே சத்தமும் சண்டையும் கலாட்டாவுமாகத் தான் இருக்கும்.. வேலைக்கு போய்விட்டு வந்து ஒவ்வொருவராக அப்போது தான் சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் பண்ணுவார்கள்.. ஒருவர் வயது கிட்டதட்ட அறுபதை ஒட்டி இருக்கும்..இவர் கிறித்துவர்..தண்ணியை போட்டுவிட்டு வந்தால், எங்கள் ஊர் பெரிய சிலுவைதிண்ணை (இது சர்ச் கிடையாது. ஊரில் இது போன்று சிலுவை திண்ணைகள் நிறைய உண்டு. பத்து வருடங்களுக்கு முன்னால், இங்கே மதிய நேரத்தில் அரட்டை அடிப்பதும் படுத்துக் கிடப்பதுமாய் நிறைய பேர் இருப்பார்கள். ஒரு சிலுவை வைக்கப்பட்டு திணை கட்டப்பட்டிருக்கும். சர்ச் பூட்டி இருக்கும் நேரங்களில் இங்கே தான் எல்லோரும் சாமி கும்பிடுவார்கள்) முன் மண்டியிட்டு பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்.. பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவேன்னு இவர் ஆரம்பித்தால் கிட்டதட்ட இவரது பிரசங்கம் ஒரு மணி நேரதுக்கும் மேலாக இருக்கும்.. மற்ற நாட்களில் இவர் அவ்வளவு சாது.. அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டு போவார்கள்.. இதெல்லாம் எங்கள் ஊர் மனிதர்களுக்கு மிகவும் சகஜம்..

இன்னொருவர்.. இவர் வீடு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் தோட்டத்தில் இருப்பதால் வாரம் ஒரு முறை தான் வருவார்.. கிட்டதட்ட நானூறு அடி தூரம் இருக்கும் எங்கள் வீதியில் வடக்கும் தெற்குமாக கிட்டதட்ட ஒரு முப்பது தடவைக்கு மேல நடப்பார்.. இவர் இந்து என்பதால்..இவருடைய பூஜையும் உண்டு.. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாப்பதிரண்டு ரிஷிமார்களுக்கும் என்ன சொல்லிக்கிறேனா..அப்படின்னு ஆரம்பிச்சார்னா அவர் தோட்டத்துல பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கிறதுல இருந்து காலைல சாப்பிட்ட கஞ்சி வரைக்கும் ஒண்ணு விடாம சொல்லிடுவர்.. ஆனா எவ்வளவு நேரம் பேசினாலும் இவங்க வாயில இருந்து ஒரு கெட்ட வார்த்தை கூட வராது.. இன்னும் சில பேர் இருக்காங்க.. வாயத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள் தான்.. இவங்க பேசுறதை கேட்டாலே காது கூட புளுத்துப்போகும்னு சொல்வாங்க.. ஆனா ஒவ்வருவரும் ஒரு ஒரு ஸ்டைல் வச்சு இருப்பாங்க.. எங்க வீட்டுப்பக்கதுல இருந்த ஒரு முன்னாள் வாத்தியார், தண்ணியை போட்டாலே சின்ன சின்ன கணக்குகள் சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்.. என்ன பண்ணினாய்..என்ன பன்னி நாய்னு சொற்களைப் பிரித்து தமிழ் பாடம் வேற எடுப்பார்..

இரவு நேர எங்கள் ஊர் இப்படித் தான் இருக்கும்.. இது இல்லாமல் எங்கள் ஊரில் இருக்கும் இந்திராகாந்தி சிலை அருகே சில சூதாட்டமெல்லாம் நடக்கும்.. இதுக்கு ஆங்கிலத்துல பிங்கோன்னு பேர் சொல்றாங்க.. ஒரு தகடுல ஒன்பது கட்டங்கள்ல ஒன்பது எண்கள் இருக்கும்.. இந்த விளையாட்டு விளையாட ஒரு ரூபா கொடுத்து இந்த தகட்ட வாங்கி கொள்ளணும்.. இது மாதிரி பல பேர் வாங்கி இருப்பாங்க.. இதை நடத்துறவர் ஒவ்வொரு நம்பரா சொல்வார்.. அது உங்க தகடுல இருந்தா அந்த நம்பர் மேல கொஞ்ச மண்ணை எடுத்து வச்சுக்கணும்.. அப்படி எல்லா நம்பரிலும் நீங்க மண் நீங்க வச்சுட்டீங்கன்னா நீங்க தான் வின்னர்.. இது மாதிரி பல விளையாட்டுக்கள் ஆடுவாங்க.. அதுவும் அந்த தெரு விளக்கின் கீழ் விடிய விடிய நடக்குமே கோலிகுண்டு விளையாட்டு, அதை பாக்கவே அவ்வளவு கூட்டம் கூடி நிக்கும்.. அந்த விளையாட்டுல காசு வச்சு எல்லாம் விளையாடுவாங்க.. பீடியை பத்த வச்சுகிட்டு ஒவ்வொருத்தரும் அவ்வளவு நுணுக்கமா விளையாடுறதை பாக்கணுமே..நமக்கே ரொம்ப த்ரில்லா இருக்கும்.. இது இல்லாம சீட்டு விளையாட்டு படு ஜோரா இருக்கும்.. ஆலமரம், அரசமரம், புளியமரம்னு ஊருக்கு மூணு திசையிலும் பகலெல்லாம் இந்த சூதாட்டம் நடக்கும்.. இது மட்டுமில்லாமல், யாராவது மதியத்துக்கு மேல இறந்து போயிட்டா, அவங்கள அடுத்த நாள் தான் சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போவாங்க.. இறந்து போனவங்களுக்கு இறுதி மரியாதை எல்லாம் அடுத்த நாள் தான் நடக்கும்.. எங்க ஊர்ப் பக்கம், அப்படி இறந்து போனவங்களை அலங்கரிச்சு ஒரு சேர்ல உக்கார வச்சுடுவாங்க.. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான் அந்த நேரம் இருப்பாங்க.. விடிய விடிய கண் முழிச்சு இறந்து போனவங்க கிட்ட இருக்கனும்னு ஒரு பழக்கம் இருக்கு.. அந்த நேரத்துல இறந்து போனவங்க வீட்டு சார்பா சீட்டுக்கட்டு வாங்கித் தருவாங்க.. அதை வச்சு அங்கேயும் காசு வச்சு இந்த விளையாட்டு நடக்கும். இவங்களுக்கு டீயெல்லாம் வேற சப்ளை பண்ணனும்.. இவங்க கூட இறந்தவங்க வீட்டுக்காரவங்களும் கண் முழிச்சு தூங்காம இருப்பாங்க. பத்து வருஷதுக்கு முன்னாடி, இதோட ரெண்டு படம் வேற வீடியோவுல ஓட்டுவாங்க..

இதெல்லாம் பெரியவங்க விளையாட்டுனா, சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு.. அந்த ஒவ்வொரு விளையாட்டையும் இப்போ நினச்சாலும் அதுக்காக போட்ட சண்டை, அந்த சந்தோசம் மனசுல இன்னைக்கும் இன்னிக்கும்.

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Sunday, April 29, 2007

மலாய் படிக்கலாம் வாங்க

நம்ம காமெடி குவின் மை பிரண்ட், தான் காமெடி குவின் மட்டுமல்ல, நல்ல டீச்சரும் கூடன்னு நிரூபிச்சு இருக்காங்க.. நீங்களும் மலாய் மொழியை எலிமெண்டரி லெவல்ல இருந்து கத்துக்கங்க.. ஹிஹிஹி.. நானும் அங்க ஒரு ஸ்டுடண்ட் தான்பா.. வாங்க எல்லோரும் சேர்ந்து படிக்கலாம்..

Saturday, April 28, 2007

கூகிள் வழங்கும் இலவச இன்டெர்நெட் இணைப்பு.. முந்துவீர்!

இன்றைக்கு புதிதாய் வாங்கிய சன் டிவி இணைப்பில் எட்டு மணி செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன்.. வணிக செய்தியில், கூகிள் வர்த்தகத்தில் மைக்ரோசாப்டை முந்திவிட்டதாம்.. அட! அசைக்க முடியாதுன்னு நினச்சவங்களை, ஆலமரத்தை மெல்ல வந்து ஆட்டிப் பாத்துட்டாங்களேன்னு என் புருவ முடி, ஆச்சர்யத்தில் தலை முடியை தொட்டுவிட்டது..

அதை விட ஆச்சர்யம்.. அவங்க தர்றதா சொல்லியிருக்க இலவச இன்டெர்நெட் இணைப்பு..(நன்றி:பாலா) முயற்சி பண்ணல.. முயற்சி பண்ணிட்டு சொல்லுங்களேன் நண்பர்களே...

[மக்கள்.. இது உண்மையானது நினைச்சு நானும் பதிவை போட்டுட்டேன்.. அப்புறமா பாத்தா இது ஏப்ரல் பூல் செய்தியாம்.. அதனால இதை அப்படியே மறந்துடுங்க]

Friday, April 27, 2007

திரைப்பட வினாடி-வினா 4

இந்த வாரம் சற்று வித்யாசமான கேள்விகளோடு..

1. புரட்சித் தலைவர் கூட அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் யார்? இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் எந்த நடிகை? இந்த இரண்டு நடிகைகளுக்கும் இடையிலான வித்தியாசம் எத்தனை படங்கள்?

2.இவர் ஒரு டைரக்டர். தனது குருவை விட்டு வந்து முதல் படம் எடுக்கும் போது திணறினாலும்(முதல் படமும் ஹிட்டே), அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரின் முதல் படத்திலும் குருவின் முதல் படத்திலும் ஒரே கதாநாயகனே. இவரின் முதல் படத்தில் தான் இந்த கதாநாயகனுக்கு புதிய பட்டம் கிடைத்தது. அது இன்றளவும் நிலைத்து நிற்கிறது. கேள்வி என்னவென்றால், இவரது குரு தனது முதல் படத்தின் கதாநாயகனின் சில படங்களில் அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றி இருக்கிறார். அதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்?

3.இவர் ஒரு இளம் நடிகர். முதலில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், பின்னால் ஆசைப்பட்டு நடித்த சில படங்கள் எல்லாம் சொதப்பியது. இன்னும் அதிலிருந்து எழவே இல்லை. பிரபலமான நடிகையோடு காதலென்று கிசுகிசுக்கப்பட்டது இவர்களிருவரும் சில படங்களில் ஜோடியாக நடித்த போது. இப்போது தனது முதல் படத்தை இயக்கிய டைரக்டரின் படத்திலேயே நடிக்கிறார். இவரை அறிமுகப்படுத்திய இந்த டைரக்டரின் பெயர் இரண்டெழுத்து. இவர் தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்த வில்லன்-கம்-டைரக்டர் நடிகர் யார்?

கேள்விகள் ரொம்ப தலையை சுற்றுகிறது என்று எல்லோரும் கருத்து சொன்னதால், சில க்ளூக்கள்..

1.அதிகப் படங்கள் நடித்தவர், புரட்சித் தலைவர் இறக்கும் போதும் வகித்த பதவியில் இரண்டு முறை இருந்தவர். அடுத்தவர், புரட்சித் தலைவருக்கு ஆடத் தெரியாது என்று ஒரு முறை பத்திரிகைளில் பேட்டி கொடுத்து கலக்கியவர் இந்த கொஞ்சும் குரல் நடிகை..

2. அந்த நடிகருக்கு கிடைத்த புதிய பட்டம் தல

3. அந்த நடிகரோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஸ்நேகா

வழக்கம் போல பதில்கள் திங்கள் கிழமை...

அஜித்திற்கு பிறந்த நாள் பரிசாக கிரீடம் இல்லை


அஜித், விஜய் (நடிகர் விஜய் அல்ல.. தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் விஜய்) இயக்கத்தில் நடிக்கும் கிரீடம் படத்திற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், அப்பா அம்மாவாக ராஜ்கிரண் சரண்யாவும் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை ஜி.வி.ப்ரகாஷ்.
படம் மே 1, தல பிறந்த நாளன்று ரிலீஸ் செய்வதாக முடிவு செய்து நூறுக்கும் குறைவான நாட்களிலேயே திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்தார்கள். ஆனால், இப்போது படத்தை மே 1 அன்று வெளியிடப்பட முடியாத சூழ்நிலை.
சிவாஜி மே 17 அன்று ரிலீஸ் ஆவதால், தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட தியேட்டர் வாங்குவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடைபட்ட காலதிற்குள் படத்தின் மூலம் லாபத்தை ஈட்டமுடியுமா என்று கவலை. அதனால், படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.தலைவரின் சந்திரமுகி வெளியானபோது போட்டிக்கு விஜய் சச்சினை வெளியிட்டு சூடு வாங்கிகொண்டதை போல, அஜித்தும் கிரீடம் தயாரிப்பளர்களும் செய்யாதது நல்லதே..

Thursday, April 26, 2007

எஜமான் ரஜினி - அழகிய தமிழ் மகன் விஜய் - என்ன சம்பந்தம்?[படம் கீர்த்திவாசனின் பதிவிலிருந்து]

மேல இருக்கும் படத்தை மூன்று மாசத்துக்கு முன்னாடி பாத்தப்ப ஏதேச்சையான விஷயம்னு நினைச்சேன்..

கீழே இருக்கின்ற தலைவரின் படம் எஜமான் திரைபடத்திலிருந்து. விஜயின் படம், தயாரிப்பில் இருக்கும் அழகிய தமிழ் மகன் படத்திலிருந்துஇப்போ உண்மையோ என்று தோன்றுகிறது? நீங்க என்ன நினைக்கிறீங்க?
ஒரு முடிவோடதான் விஜய் இருக்கார் போல.. ஆனால் ரஜினியிடம் இருக்கும் விமர்சனங்களை தாங்கி கொள்கின்ற பக்குவம் இன்னும் வரணும். சமீபத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவில் போக்கிரி படத்தை பேக்கரி என்று கிண்டல் செய்ததை கண்டு பொறுக்காமல், அவரது தந்தை அந்த டைரக்டர் மற்றும் டெக்னிஷியன்களை அழைத்து மன்னிபு கேட்க வைத்தாராம். ஆனானப்பட்ட ரஜினி கமல் படங்களை கிண்டல் செய்தாலும் அது நகைச்சுவை நிகழ்ச்சி என்று தான் நினைப்பார்கள். இந்த சகித்துகொள்ளும் தன்மை விஜய்க்கும் இருந்தால் சீக்கிரம் தொடலாம் தேடும் நாற்காலியை...

Wednesday, April 25, 2007

தத்துவம் நம்பர் 10101

தோல்வி என்பது உனது காதலி உன்னை விட்டு சென்றதல்ல,
நீ, அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான்

- சுவாமி காதலானந்தா

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 19 [சூடான சினிமா பகுதி]

ரொம்ப நாள சிட்டுக்குருவி வராததால, நாமளே இன்னைக்கு ஏன் சினி பிட்ஸ் எழுதக்கூடாதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். எப்படித் தான் நான் யோசிச்சது சிட்டுக்குருவிக்கு தெரிஞ்சதோ தெரில, இன்னைக்கு வர்றேன்னு வாய்ஸ் மேஸேஜ் விட்டிருந்தது.. நம்ம குருவியோட பஞ்சுவாலிட்டி தான் தெரியுமே.. கரெக்டானா நேரத்துக்கு வந்தது.. அதுக்காக ஜன்னலை திறந்துவிட்டப்போ தான் அந்த ஆச்சரியமான இன்னொரு ஆளை பார்த்தேன்.. சிட்டுக்குருவியோட காதலி.. என் கிட்ட அறிமுகம் பண்ணிவைக்க சொன்னுச்சாம். அட! நாம அவ்வளவு பெரிய ஆளா என்று நினைக்கிறப்பவே நைசா காதுல வந்து சிட்டுக்குருவி சொன்னுச்சு..மகனே இன்னைக்கு உனக்கு ராடு தான்.. நீ அடிக்கடி எனக்கு போன் பண்ணி தொல்லை பண்றேன்னு, நம்மாளு கோபத்துல இருக்கு. உன்னை நேர்ல பாத்து நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்விகேட்கலாம்னு வந்திருக்கு.. என்ன கொடுமை இது ACE!

இன்னைக்கு எப்படியாவது சிட்டுக்குருவியோட கைல இருந்து தப்பிக்கணுமே.. புதுசா ஏதாவது திட்டம் போடுடா கார்த்தின்னு மனசு சொன்னுச்சு.. சரி.. ரெண்டு பேரும் புதுசா வந்திருக்காங்க.. ஏதாவது ட்ரீட் அரெஞ்ச் பண்ணி அசத்திடவேண்டியது தானேன்னு டக்குன்னு ஒரு பிளான் போட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் ஜோடியா வந்திருக்கீங்க.. உங்க ரெண்டு பேருக்கு இன்னைக்கு ட்ரீட் நான் தர்றேன் அப்படின்னி சொன்னேன்.. உடனே சிட்டுக்குருவியோட காதலி ஒரு லுக் விட்டுச்சு பாருங்க.. பக்கத்துல இருந்த டேபிள் லேம்ப் படார்ன்னு வெடிச்சது.. ஏன் ஏன் இந்த கோபம்னு கேட்டேன்.. நீங்க ட்ரீட் தர்ற லட்சணம் தான் இந்த உலகத்துக்கே தெரியுமே.. எல்லோருக்கும் ட்ரீட் தர்றேன்னு கூட்டிட்டு போய், நீங்களெள்ளாம் ரவுண்ட் கட்டி ஹோட்டலை காலி பண்ணிட்டு, பில்லை மட்டும் அந்த பச்சபுள்ள பில்லு பரணிகிட்ட கொடுத்துடுவீங்க.. அவனும் எத்தனை நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே உங்க பில்லையெல்லாம் கட்டுவான்னு நம்மளை பாத்து ஒரு கேள்வி கேட்டுச்சு.. இங்க பாருங்கடா! மாப்ள பரணி பில்லு ஆனது அகில உலக ஜீவராசிகள் எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கேன்னு நமக்கு ஒரு ஆச்சர்யம்!

சரி..சரி.. வந்த வேலையை கவனிங்க.. வெட்டியா இந்தாளு கூட என்ன பேச்சுன்னு (இவிங்க எப்பவுமே இப்படித் தான்) காதலி சொல்ல, பரபரப்பா நியுஸை சொல்ல ஆரம்பிச்சது சிட்டுகுருவி.. சரி.. நாம மக்களுக்காக எப்படி எல்லாம் உழைக்கிறோம்.. இத்தனை அடிகளான்னு நினச்சுகிட்டேன்..

முக்கியமான விஷயத்தை கடைசில சொல்றேன்ன்னு ஒரு சின்ன சஸ்பென்ஸோட ஆரம்பிச்சது சிட்டுக்குருவி.. நாம பல தடவை கேட்டும் அதை கடைசில தான் சொல்வேன் சொல்லிடுச்சு..

இந்த பாலா நான் கடவுளை எப்பத்தான் முடிப்பாரோ.. அந்த புராஜெக்டை விட்டு அஜித் வெளியேறி(யேற்றப்பட்டு) ஒரு வருஷம் ஆகப் போகுது.. இன்னும் படம் முடிஞ்சபாடு இல்லை.. கால்ஷீட்டெல்லாம் வேஸ்ட்டாகுதுன்னு (இல்லைனா, பில்லு பரணி மாப்ள கூடவாவது ஊர் சுத்தியிருப்பேன்) பாவனா சொல்ல, இப்ப புது ஹிரோயின்களை தேர்ந்தெடுக்கிறார் பாலா.. கூடிய விரைவில், அதற்கான அறிவிப்பு வரும் போல தெரியுது..

சூர்யா, கௌதமோட இயக்கத்துல வாரணம் ஆயிரம் படத்துல நடிக்கிறது எல்லாருக்கும் தெரியும். ஷூட்டிங் கூட ஸ்டார்ட் ஆகப்போகுது.. இதுக்கு இடைல, அதே நேரத்துல, ஹரியோட இயக்கத்துல வேல் படத்துலையும் நடிக்கப்போறார். கஜினி வெற்றிக்கு பிறகு அசின் ஜோடி சேர்றார் நம்ம அசின்.. கஜினியோட ரீமேக்ல அமீர் ஜோடியா அசின் நடிக்க போறது எல்லோருக்கும் தெரியும்.. மெல்ல நம்ம கோலியுட்டை விட்டு பாலிவுட்டுக்கு பறக்குது அசின் கிளி.. கிளிக்கு றெக்கை முழைச்சுடுச்சு.. பறந்துடுச்சுன்னு தமிழ் மக்கள் கதறப் போறாங்க.. நானும் அப்படின்னு சிட்டுக்கிருவி வழிய, பக்கத்துல உட்கார்ந்திருந்த சிட்டுக்குருவியோட லவ்வர், கைல கிடச்ச வாட்டர் கேனை தூக்கி எறிந்தது, செல்லமா.. (போடி..இந்த வழிசலுக்கு உனக்கு ஆப்பு இருக்குன்னு சிட்டுக்குருவியை பார்த்து சொன்னேன்)

இம்சை அரசனுக்கு பிறகு, இந்திரலோகத்தில் நா அப்பாசாமிங்கிற படத்துல வடிவேலு ஹீரோவா நடிக்கிறதா இருந்தது. பல காரணத்தினால அது தள்ளி போயி ட்ரொப்பும் ஆகிடுச்சு. இப்போ அந்த புராஜெக்டை செவந்த் சேனல் நாராயணன் தயாரிக்கப் போறார். அடுத்த மீழு நீள காமெடி படம் ரெடியாகப் போகுது..

இதை சொலி முடிச்சிட்டு பார்த்த சி.குவோட லவ்வர் கௌச்சுல நல்லா கால் நீட்டி தூங்க ஆரம்பிச்சிடுச்சு..

கமெர்சியல் டைரக்டர் (திருப்பதி, தர்மபுரிக்கு பிறகு அப்படி கூப்பிடலாமா) பேரரசு இப்போ பரத்தை வச்சு அடுத்த படத்தை எடுக்கிறார். படத்து பேரு பழநி.. (மக்களே.. உங்க ஊர் பெயரை அனுப்பி வையுங்க.. அடுத்த பட டைட்டிலுக்கு பேரரசு யோசிப்பார்). முக்கிய வேஷத்துல நடிக்க நதியாவை கேட்டிருக்காங்க.. படத்துக்கு இசை ப்ரூ காப்பி..சாரி..ஸ்ரீகாந்த் தேவா.. வரிசையா நல்ல படங்களை தந்து கேரியர் கிராப் நல்லா போயிகிட்டு இருக்க பரத்துக்கு இந்த படம் அடுத்த லெவலுக்கு ஏற்றுமான்னு பாக்கலாம்.. மறந்தே போயிட்டேன்.. இந்த படத்தோட டேக் லைன் கமர்ஷியல் பஞ்சாமிர்தம்..

நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும்.. ஜூன் மாசக் கடைசில ஜோதிகா அம்மா ஆகிறார்.. சூர்யா அப்பாவாகிறார்.. அடுத்த மாதம் தி.நகர்ல இருக்க அவங்க வீட்ல ஜோதிகாவுக்கு வளைகாப்பு நடக்குது.. இந்த நிகழ்ச்சில பாட்டு பாடுவாரா சூர்யா?

யாரு இது புதுசா நியூஸ் சொல்றதுன்னு பார்த்தா, அட நம்ம சிட்டுக்குருவியோட லவ்வர்.. அதுவும் சினி நியூஸ் சொல்ல ஆரம்பிச்சிடுச்சேன்னு ஒரு சந்தோசம் (எப்படி அது மனசு மாறுச்சுன்னு கேட்கப்படாது.. கிளைமாக்ஸ் வந்திடுச்சுல..)

இப்ப நான் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னென்னா, சிவாஜி படம் மே 17-இல் ரிலீஸ் ஆகுறது உங்க எல்லோருக்கும் தெரியும்.. நம்ம கொலம்பஸ்லயும் படம் அதே நாள் ரிலீஸ் ஆகுது.. (ஷங்கர் மறுபடியும் டேட்டை தள்ளி வைக்காம இருந்தா) அருண், டிக்கட் வேணுமா.. இப்பவே சொல்லுப்பா.. சூடம் ஏத்தி தேங்காய் உடச்சு அமர்க்களம் பண்ணிடலாம், தலைவர் படத்துக்கு..

நாங்களும் வர்றோம் தலைவர் படம் பாக்கன்னு சி.குவோட லவ்வர் சொன்னுச்சு உற்சாகமா.. கொஞ்ச நேரம் மூணு பேரும் அரட்டை அடிச்சோம்.. இந்த தடவை சிட்டுக்குருவி ஜோடியா வந்ததுனால ரெண்டு பேருக்கும் செர்ந்து இந்தியன் ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தேன்.. ஹிஹிஹி.. மாப்ள பரணி, கவலைப்படாதே.. பில்லை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.. நீ ரொம்ப நல்லவன்டாடாடாடாடா

Monday, April 23, 2007

ஆட்டை திருமணம் செய்துகொண்ட சூடான் வாலிபர்

இது போல சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. சூடானில் ஒரு மனிதன் ஆட்டை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். ஏன்? இதை நான் விளக்குவதை விட, பிபிசி செய்தியை படித்தே நீங்களும் விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நிச்சயமா, நீங்களும் என்ன கொடுமை இது சரவணா என்று சொல்லத்தான் போகிறீர்கள்!
இந்த சுட்டியை தந்த நண்பன் வெங்கிட்டிற்கு நன்றி!

Sunday, April 22, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 5

நாலாம் பகுதியிலிருந்து...

அப்போது தான் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பயன்படுத்தியிருந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் இருந்து முடிந்தவரை சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.

இனிமேல்...

எங்கள் ஆறு பேரின் மனசிலும், அடுத்து தங்க என்ன செய்வதென்பது தான் ஒரே யோசனையாய் இருந்தது. அந்த அறை எங்களது சொந்த அறையை போலவே எங்களுக்கு தோன்றியது. அப்போது கூட தங்கியிருந்த நண்பன் பூபாலன் எங்கள் நெஞ்சில் பால் வார்த்தான். அவனுக்கும், தேனி மாவட்ட எம்.எல்.ஏவை தெரியும் என்றும் அவரிடம் சொல்லி புது அறைக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். பட்டென்று யாரோ ஒருவர் வெளிச்சம் காண்பித்தது போன்று ஒரு சந்தோசம் எங்களுக்குள்.

நான் தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் நிறுவனதிற்கு தினமும் மின்சார ரயிலில் தான் செல்வேன். எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து எழும்பூர் ரயில் நிலையதிற்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் சானிடோரியம் சென்று, அங்கிருந்து கம்பெனியின் வேன் மூலம் ஆபீஸ் செல்வேன். ரயில் வாழ்க்கை ஒரு வித்யாசமான அனுபவம். காலேஜிற்கு கிட்டதட்ட ஒரு வருடம் சென்ற அனுபவம் இருந்தாலும் இது அதை காட்டிலும் மிற்றுலும் வித்யாசமான அனுபவம்.

நான் திண்டுக்கல்லில் இருந்து ரயில் செல்லும் போதும் பெண்களுக்கென தனி பெட்டி இருக்கும். தினமும் வந்து செல்லும் பெண்கள் அதில் பயணம் செய்வதைத் தான் விரும்புவார்கள். அதிலும் ஒரு சில காதல் கதைகள் இருக்கத்தான் செய்கிறது. என் கூட சிறிது காலத்திலேயே நண்பனாய் அமைந்த விஜய், அந்த மாதிரி ஒரு காதலில் சிக்கி, கலகலப்பு விஜய் சோக விஜய் ஆனாது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ஆனால் அது காதலா, சிறிது கால நட்பை காதலென நினைத்தாரா என்ற சந்தேகம் இன்னும் எனக்குள் இருக்கிறது. ஆனால் கிட்டதட்ட ஒரு நான்கு வருடம் கழித்து அவரை சந்தித்த போது அதே பழைய கலகலப்பு இருந்தது. அவரை பாக்கவே சந்தோசமா இருந்தது.
சென்னை ரயிலிலும் அது போன்றே பெண்களுக்கென தனிப் பெட்டி இருக்கிறது. அதிலும் காலை பரபரப்பு நேரத்தில் அதில் தொங்கிகொண்டு போகும் பெண்கள் என்னை ஆச்சரியப்படுத்தவே செய்தனர். சுடிதார் அணிந்த பெண்களும் சரி, புடவைகள் அணிந்த பெண்களும் சரி எல்லோருமே அப்படித் தான் சென்றார்கள். அதுவும் செங்கல்பட்டிலிருந்து வரும் ரயிலில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். நான் நகரை விட்டு போகும் ரயிலில் செல்வதால் அந்த அளவு கூட்டம் இருக்காது, உள்ளே வரும் ரயில்களைப் போல.

ரயில்களில் வியாபரிகள் கூட்டமும் தர்மம் கேட்கும் கும்பலும் இருக்கும். ரயிலினுள் வியாபாரம் செய்பவர்கள் பலரும் விழியிழந்தோர் தான். சிறிய அளவு கூண்டுசி முதல், ரேஷன் கார்டு அட்டை, காது குடையும் பஞ்சு முதல் எல்லாவற்றையும் விற்பார்கள். சில பேருக்கும், கண்கள் சரியாக இருந்தாலும், இரக்கத்தில் வியாபாரம் நடக்கும் என்பதால், விழிகளை இழந்தது போலவே தங்களது வியாபாரங்களை செய்வார்கள். ஒரு பக்கம் அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

ஒரு சில பேர் நல்ல பாடவும் செய்வார்கள். அவர்களின் சோகம் அந்த குரலில் ஏறி நம்மையும் மூழ்கடிக்கும். ஒன்றை குறைத்த ஆண்டவன் மற்ற ஒரு வரபிரசதத்தை தந்திருக்கானே என்று பல சமயங்களில் நினைத்துகொள்வேன். சென்னை ரயில் பயணங்களில் எனக்கும் சொல்லிக்கொள்ளும்படி எந்த நண்பர்களும் அமையவில்லை. ஆனால் பயணம் எனக்கும் பிடித்தே இருந்தது. தினமும் காலையில் கிளம்பி, அங்கே இருக்கும் VLR ஸ்டாலில் நான்கு இட்லிகளையோ, இரண்டு தோசைகளையோ சாப்பிடுவேன். அதன் ருசியே தனி தான்.

ரயிலில் நான் கவனித்தது, கண்டது கேட்டது எல்லாம் ஒரு தனிக்கதை.. நிறைய விஷயங்களை அது எனக்குச் சொல்லித் தந்தது. அதப் பற்றி பின்னால் சொல்கிறேன்..

பூபாலன் அந்த எம்.எல்.ஏவிடம் பேசி, புதிய அறையை வாங்கினான். அது புதிய எம்.எல்.ஏ ஹாஸ்டல். பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து நாங்கள் அங்கே ஜனவரி மாத கடைசியில் குடிபெயர்ந்தோம்.. புதிய அறை கொஞ்சம் விசாலமானது. அறை எண் 420. நாலாவது மாடியில். அங்கிருந்து பார்த்தால் அலைகள் இரவிலும் கரையில் இருப்போரை தொட முயற்சி செய்வதை பார்க்கலாம். தொரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கப்பல்கள் விளக்குகள் போட்டு நிற்பதை காணலாம். எனக்கும் இந்த அறை மிகவும் பிடித்திருந்தது. மனசு லேசான மாதிரி இருக்கும் ஜன்னலை திறந்து அமர்ந்தால்..

இரவு நேரங்களில் சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது வழக்கம். அன்று சேப்பாக்கம் வரை நடந்து சென்றோம். தூரத்தில் ஒருவன் வேகமாக ஓடி வருவது தெரிந்தது. கைலியை மடித்து கட்டியிருந்தான். பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். எங்கள் நண்பன் வேகமாக எங்களை நடக்கச் சொன்னான். நாங்கள் வளைந்து வாலாஜா ரோட்டில் வலது பக்கம் திரும்ப, தூரத்தில் நான்கு பேர் இடது பக்கத்தில் ஓடிவருவது அந்த அடர்ந்த இருட்டில் தெரிந்தது.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Friday, April 20, 2007

திரைப்பட வினாடி-வினா 3

இந்த வாரம் போன வாரத்தை விட கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிலோடு சொல்லுங்கள்.

1. இவர் ஒரு டைரக்டர். கமெர்ஷியல் மன்னர் என்று பெயர் வாங்கியவர். தனது படங்களில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிடுவார். இவர் எல்லா முன்ணனி நடிகர்களையும் வைத்து படம் எடுத்துவிட்டார். இவர் கேப்டனை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?

2.கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே மர்லின் மன்றோ போல ஒரு பாடலுக்கு ஆடிய இந்த தொடையழகி நடிகை, தயாரித்த படத்தில் நடித்த நடிகைகள் யார் யார்? இவர் நடித்த முதல் படத்தின் டைரக்டர், சரத்குமாரை வைத்து இயக்கிய படத்தின் பெயர் என்ன?

3. பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக முதலில் நடித்த படத்தின் இன்னொரு கதாநாயகி, சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடித்த படத்தின் பெயர் என்ன?

4. இவர் ஒரு பிரபலமான நடிகை, ஒரு காலத்தில். இவர் பெயரில் பெண்களின் ஆபரண பொருட்கள் எல்லாம் விற்றன. அவ்வளவு பிரபலமான காலத்திலும் கூட இவர் கமல் கூட ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் கூட ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். இவர் ரஜினியின் ஜோடியாக நடித்த படத்தை இயக்கிய டைரக்டர், விஜயை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?

எல்லாமே ஈசியா? அட அப்படின்னா பதிலை சொல்லுங்க நண்பர்களே.. வழக்கம் போல தங்களுடைய பதில்கள் திங்கள் காலை இந்திய நேரப்படி..

சலூன் கடைகள் ஏக்கங்கள்

நான் சின்ன வயசுல தூங்குன இடங்கள்ல சலூன் கடையும் ஒன்று. சின்ன வயசுல எங்க ஊர்ல என்னை எல்லாம் சேர்ல உக்கார வைக்க மாட்டாங்க.. தரை தான். சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து தான் முடிவெட்டிவிடுவாங்க.. தலையில தண்ணியை தெளிச்சு விடுறது தான் தெரியும். முடிவெட்டி விடுறவரே என் தலையை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திருப்பி விட்டு முடிவெட்டிவிடுவார். அப்ப எல்லாம் எப்படி முடிவிட்டா நமக்கென்ன.. ஒண்ணும் தெரியாது. எண்ணெய்யை தடவி அம்மா சீவி விடுவாங்க. மறுபடியும் அடுத்த நாள் சீவி விடுவாங்க..இன்னமும் நான் என்னிக்குமே பாக்கெட்டுகளில் சீப்பையோ, கண்ணாடி பாக்குற இடங்கள்ல சீவுறதோ கிடையாது.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க

என் அப்பா காலத்துல படங்கள்ல பாக்குற மாதிரி மரத்தடி தான் சலூன் கடை. அதுக்குப் பிறகு கூரை வேய்ந்த குடிலில். ஒரு மரச்சேர் இருக்கும். இரண்டாக உடைந்த கண்ணாடி தான் இருக்கும். ஒரு வேளை மான்ய விலையில் வாங்கி வந்திருப்பார்னு நினச்சுக்குவேன். தலையில் தண்ணி அடிக்க எல்லாம் அந்த ஸ்ப்ரேயர் இருக்காது. ஒரு குவளையில் தண்ணீர் வச்சிருப்பாங்க.. தலையில் தண்ணி அவங்க தெளிச்சா முகமெல்லாம் வழியும். கடை முழுக்க எல்லா நடிகர்களோட படங்களும் இருக்கும். பழைய காலெண்டர் பேப்பர்கள் தான் ஷேவிங்க் செய்தால் அந்த சோப்புகளை வழித்து எடுக்க. சாணி போட்டு மெழுகின தரை.. கூரைகளில் அங்கங்கே மழை பெய்தால் வலிக்காமால் தரைக்கு வர சில ஓட்டைகள் இருக்கும். ஒரு கட்டிங், நான் சின்ன வயசுல வெட்டிக்கிட்டப்போ ஒரு ரூபாயில் இருந்து இப்போது பத்து பணிரெண்டு ரூபாய்க்கு வந்திருக்கிறது.

இந்த விலையில் ஹீட்டர், சேவிங் லோசன் எல்லாம் எப்படி வாங்கி வைப்பார்கள். இன்னமும் அந்த கூரைக் குடில் தான்.. எனக்கு சென்னையில் முப்பது அல்லது ஐம்பது ரூபாஇக்கு வெட்டிய பிறகு ஊருக்கு போனால், ஆச்சர்யமாக இருக்கும். எப்படி பத்து ரூபாயில் காலத்தை கடத்துகிறார்கள் என்று. ஒரு முறை நான் முடி வெட்டியதுக்கு இருபது ரூபாய் தர, அதை பார்த்த ஒரு பெரியவர் தனியாக வந்து, தம்பி இப்படி எல்லாம் கொடுத்து பழக்காதீங்க என்று எனக்கு அட்வைஸ் தந்துவிட்டுப் போனார்.

நான் முடிவெட்ட ஆரம்பித்து சில காலங்களுக்கு பின்னாடி தான் பிளேடு கலாச்சாரம் எல்லாம். அதுக்கு முன்னாடி, கத்தி தான்.. சேவிங் பண்றதுக்குள்ள ஒரு நாலு தடவையாவது கத்தியை அந்த சாணைகல்லுல தீட்டிக்குவாங்க.. அப்போ எனக்கு நல்ல வேளை தாடியெல்லாம் இல்லை. பின்னங்கழுத்து, காதோரங்களில் சேவிங் செய்யும் போது பயங்கரமா வலிக்கும், கத்தி படும் போதெல்லாம்.

எப்போது சலூன் கடைக்கு சென்றாலும் எப்படா நாமும் சேவிங் செய்துகொள்வோம் என்று ஆசையா இருக்கும். இந்த ஆசையை தணித்துகொள்ள நண்பர்களுக்குள் காசு போட்டு பிளேடு வாங்கி, தனியா சேவிங் பண்ணிக்கொண்டதுண்டு. அதுவும் மீசை வளர அடிக்கடி நாங்கள் சேவிங் செய்வோம். என் அம்மா திட்டுவார்கள். என் அப்பா சிரித்துவிட்டு கண்டுக்க மாட்டார். அவரும் சின்ன வயசுல இப்படித் தான் பண்ணியிருப்பாரோன்னு நினச்சுக்குவேன். இப்போது வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும். எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.

சின்ன வயசுல ஒரு மூணு நாலு வயசு வரை நான் சடை வைத்திருந்தேன். இன்னமும் சடை வைத்து பூவைத்த போட்டோக்கள் என் அம்மாச்சி வீட்டில் தொங்கிகொண்டிருக்கும். எங்கள் குலதெய்வம் நாலு வருடத்திற்கு ஒரு முறை தான் சாமி கும்பிடுவார்கள். அதனால் அதுவரை முடிவெட்டா கூடாது, முதல் மொட்டை குல தெய்வ சாமிக்குத் தான். நான் அதிக முடிவச்சிருந்தது என் சித்திகளுக்கு ரொம்ப சவுகரியமா போய்விட்டது. அவங்க புதுசு புதுசா காய்ச்சுற எண்ணெய்களை எல்லாம் நம்ம தலைல ஊத்தி தான் டெஸ்ட் பண்ணுவாங்க.. கருவேப்பிலை எண்ணெய் முதல் முயல் ரத்தம், வெட்டிவேர் இப்படி எல்லா வகை எண்ணெய்களையும் நம்ம தலை கண்டிருக்கிறது. அதனால தான் என்னவோ, எங்க ஊர்லயும் சரி, மதுரை, சென்னையிலும் சரி, இப்போ இங்க வந்து கொலம்பஸ்லயும் சரி, உன் முடி ரொம்ப திக்குப்பா என்று தான் நம்ம தலைல கைவைக்கிறவங்க சொல்வாங்க. என் தங்கச்சிக்கு நம்ம முடியை கண்டா கோபம் வேற வரும், எப்படி கரு கருன்னு காடு மாதிரி வளர்ந்திருக்கு பொண்ணுகளுக்கு மாதிரின்னு..

நமக்கு ஒரு கெட்ட பழக்கம், எல்லோருக்கும் அது இருக்கான்னு தெரியாது. ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்.. சென்னையில இருந்தவரை மூணு தடவை வீடு மாறிவிட்டாலும் தலைமுடி வெட்டுற கடையையும் ஆளையும் மாத்தினதே இல்லை.

போன வாரம் சனிக்கிழமை இங்க இருக்க கிரேட் க்ளிப்ஸ்க்கு போயிருந்தேன் முடிவெட்ட. அப்போ வெட்டுறவர் கிட்ட மஷ்ரூம் கட்டிங் பண்ணிவிடுங்கன்னு எல்லா ஸ்பெக்கும் கொடுத்தேன். பாவி மகனுக்கு என்ன சொன்னாலும், அவங்க ஊர் ஸ்டைல ட்ரிம்மரை போட்டு ஒரே சரட் தான். அப்போ நான் முடிவெட்டி கிட்ட கடைகளையும் அந்த மனிதர்களையும் நினச்சுகிட்டேன், கண்கலங்க.. சில சமயம், மனசு தானா, சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமான்னு தானா பாட ஆரம்பிச்சிடுது.

(சொல்ல மறந்துட்டேனே... நமக்கு இன்னமும் சலூன் கடை சேர் ஏறி உக்கார்ந்து தலைல தண்ணி பட்டாலே தானே சொக்க ஆரம்பிச்சிடுது.. அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க..)

Thursday, April 19, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2

முதல் பகுதி

ஒரு பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது..

ஒரு நாள் இரவு, ஊரின் வடக்கு மூலையில் இருக்கும் ஓடு போட்ட வீட்டில் சரமாரியாக கல்மழை பொழிந்தது.. மறு நாள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருகும் மற்றொரு வீட்டில் அதே மாதிரி கல்மழை.. அந்த வீட்டை சுற்றியுள்ள வயல் வெளிகளை பார்த்தால் பெரிய பெரிய காலடி தடங்கள்..

சாதாரண மனிதர்களின் காடலடி தடங்களை விட மிகப் பெரியதாக அந்த காலடி தடங்கள் இருந்தன.. ஊரில் மக்களிடையே ஒருவித கிலி பரவியது.. எங்கள் ஊரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்தாலும், ஊரின் நடுவில் இருக்கும் ஒரு சர்ச்சின் மணி அடிக்கப்படும். அந்த சர்ச் மணி கேட்டால் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அப்படியே போட்டது போட்டபடி எல்லோரும் அங்கே வந்து விடுவார்கள்.. மிகத் தொலைவில் இருப்பவர்கள் கூட எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக அந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள்.. ஒரு முறை ஊரின் அருகே இருந்த தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் திடீரென தீப் பற்றிக்கொண்டது.. பார்த்தவர்கள் உடனே கோயில் மணி அடிக்க, ஊரே சேர்ந்து அந்த தீயை அணைத்தது. எங்க ஊரை போன்ற கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால், போஸ்ட் ஆபீசு மூலம் தீயணைப்பு வண்டிக்கு சொல்லி அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. அதனால் முடிந்தவரை ஊரே சேர்ந்து தான் சமாளிக்கும் இது போன்ற பிரச்சனைகளை..

அன்றும் அது போலவே சர்ச் மணி அடிக்கப்பட்டு ஊரே கூடியது.. தினமும் இது போன்ற கல்விழும் சம்பவம் நடந்து கொண்டிருந்ததால், ஊர் பஞ்சாயத்து கூடியது.. ஊருக்குள்ள வர்ற எல்லா பாதையிலும் செக்-போஸ்ட் வைக்கிறதுன்னு முடிவானது.. செக்-போஸ்ட்னா என்னன்னா உண்மையான செக்-போஸ்ட் மாதிரியே மரமெல்லாம் கட்டி வர்ற வ்ண்டி ஆளுகைளை எல்லாம் விசாரிப்பாங்க.. அங்கேயே ரெண்டு மூணு கட்டிலை போட்டு ஷிப்ட் முறைல படுத்து காவலும் காப்பாங்க.. ஒரு பயலும் அப்போ ஊருக்குள்ள அவ்வளவு சீக்கிரம் வரமுடியாது.. அப்போ சாராயம் விக்கிறது கூட இந்த செக்போஸ்டுக்கு வெளில தான் நடந்தது.. சாராயம் குடிக்கிறேன் பேர்வழின்னு கூட யாரும் உள்ளார வந்துட முடியாது..

அப்படித்தான் ஏதோ ஒரு ஊர்க்காரன் ஊருக்குள்ள வந்து மாட்டிக்கிட்டான். போதைல இருந்த அவன் என்ன கேள்வி கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்லல.. அவனை நாயை விட கேவலமா அடிச்சாங்க.. ரத்தம் வரவர ஊர்ல இருக்க ஒரு கோவில்ல அடச்சு வேற போட்டாங்க.. அப்புறம் அவன் போதை தெளிஞ்சு அவன் வீட்டுக்கு சொல்லிவிட்டு, அவங்க வந்து கூட்டிட்டு போனாங்க.. அவ்வளவு அழகான ரெண்டு பிள்ளைகளாம் அவனுக்கு.. அப்படி என்ன அவனுக்கு சாராய ருசி வேண்டி கிடக்குது.. அவன் பண்ணின பாவமோ என்னமோ..ரெண்டு நாளுல அவன் செத்துப்போனதா ஊர்ல பேசிகிட்டாங்க..

ஊர்ல பேசிகிட்டாங்க அப்படின்னா..திண்ணைப் பேச்சும் டீக்கடை பேச்சும் தான்.. இப்போவெல்லாம் திண்ணை வச்சு யாரும் வீடு கட்றதே இல்லை.. அந்த காலத்துல வழிபோக்கர்கள், இல்லை களைப்பா இருக்கவங்க கொஞ்சம் ஒதுங்க ஓய்வுவெடுக்க இந்த மாதிரி திண்ணக ஒவ்வொரு வீட்டுலையும் இருக்கும்.. இப்போ எல்லாம் எங்க ஊர்ல அப்படி திண்ணை இருக்க வீடுகளை விரல் விட்டு எண்ணிடலாம்.. இந்த மாதிரி திண்ணைல நீங்க உக்கார்ந்தா போதும் ஊர்ல நடக்குற எல்லா விஷயமும் உங்களுக்கு அத்துப்படியாயிடும்.. யார் ரெண்டு பேருக்கும் இடையே சண்டை... யார் யார் கூட ஓடிப்போனா..ஓடிப்போகப் போறாங்க.. எந்த தண்ணிக் குழாய்ல ரெண்டு குடம் தண்ணிக்காக சண்டை போட்டுக்கிட்டாங்கன்னு எல்லா மேட்டாரும் அங்கே வந்து சேர்ற பெண்களோட அரட்டையில தெரிஞ்சுடும். இதை வேற மாதிரி சொன்னா புரணி பேசுறதுப்பாங்க.. எப்படி ஒவ்வொரு டீக்கடையிலும் ஆண்கள் உட்கார்ந்து கதையடிக்கிறாங்களோ..அது மாதிரி பெண்களுக்கு ஏதோ ஒரு வீட்டு திண்ணை.. அடேயேப்பா..அப்பா அவங்க பேசுற பேச்சை பாக்கணும்..ஒரு பக்கம் சிரிப்பாவும் ஒரு பக்கம் எரிச்சலாவும் இருக்கும்..

அடியேய் உனக்கு விஷயம் தெரியுமா.. அந்த உடம்பெல்லாம் நகையா போட்டுகிட்டு மினிமினித்துகிட்டு போவாள்ல, அந்த கண்டக்டர் சம்சாரம்.. அவள அவ புருசன் போட்டு சாத்திட்டானாம் நேத்து ராவுல.. இது ரொம்ப படிக்காம கூலி வேலைக்கு போற பெண்களோட சம்பாஷனை.. ஏங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா.. நகை கடை விளம்பரதுல வர்ற பொண்ணு மாதிரி போவுமே அந்த கண்டக்டர் வைப், அந்த பொண்ணப் போட்டு அவ வீட்டுக்காரர் அடியோ அடின்னு அடிச்சுட்டாராம்..இது எந்த வேலைக்கும் போகாம வீட்லயே இருக்க பொண்ணுக பேச்சு.. இவங்களுக்கு மத்தவங்க விஷயத்தயும் பேசணும்னு ஒரு துறுதுறுப்பு இருக்கும்.. ஆனாலும் ஒரு பயம் வேற உள்ளார..

அப்படி கல்மழை பொழிஞ்ச சமயத்துல எங்க போனாலும் இதே பேச்சு தான்.. எல்லோருக்கும் அதப் பத்தி பேசுறப்போ கண்ணுல ஒரு பயம் இருக்கும்..எங்க ஊரையே தூங்காம கல் எரிஞ்ச மனுசங்க மேல எங்க ஊர்க்காரவங்க அந்த அளவுக்கு கோபத்துல இருந்தாங்க.. எத்தனை பேர் ஒரு வாரமா..அவங்கள பிடிக்க இரவு முழுவதும் முழிச்சுக்கிடந்து காவல் காத்தாங்க... அப்படிபட்ட அந்த திருடங்களே இவங்க கையில கிடச்சிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க..

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Wednesday, April 18, 2007

பற்றியெரிந்தேன் நான்...

ஆயிரம் மெழுகுவர்த்திகள்
இருந்தும்
அந்த
அறையில்
வெளிச்சம் இல்லை..

அவள் வந்தாள்
பிரகாசமானது
அறை..

பற்றியெரிந்தேன்
நான்..

காதல் இலையுதிர்காலம்

காதல்.. பள்ளித் தலைமையாசிரியர் டேபிளில் ஒரு சின்ன கம்பியில் நின்று பூமியுருண்டை சுத்திகொண்டு இருக்கின்ற மாதிரி, இந்த பூமியை பிடித்திருக்கின்ற ஒரு மெல்லிய உணர்வுக் கம்பி. தி.நகர் ரெங்கநாதன் வீதியில் நின்றுகொண்டு, உள்ள வர்ற எல்லோரிடமும் இதுவரைக்கும் நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களான்னு கேட்டா கிட்டதட்ட எல்லோருக்குள்ளும், கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் உறங்கி கொண்டிருக்கும் ஒரு முத்தை போல, ஒரு அழகான கதை இருக்கும். ஆனா, உலகத்துல சொல்லப்பட்ட காதல்களைவிட சொல்லாத காதல்கள் கோடிகள். அப்படிச் சொன்ன காதலில் கல்யாண மேடையில் அருந்ததி பார்க்கின்ற காதல்கள் மிகவும் குறைவு. அதில், சில ரெஜிஸ்டர் அலுவலகத்தின் கோடு போட்ட தாள்களிலே கூட ஆரம்பிக்கின்றது.

உலகத்தில் ஜெயித்த காதலை விட, தோற்ற காதல்கள் தான் அதிகம் மக்களால் பேசப்பட்டிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. இதில் ஒரு தலை காதல்களும் அடங்கும். இப்பொழுது நான் சொல்லப்போவது, நான் பள்ளிகளில் படித்த போது, மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்தது. ஒரே ஊரை சேர்ந்த ஒரு பையனும், பெண்ணும் அந்த கல்லூரியில் படித்து வந்தார்கள். அந்த பையன் மூன்றாம் வருடம் படிக்கும் போது தான் அந்த பெண் முதல் வருடத்தில் சேர்ந்திருக்கிறாள். ஒரு நாள் ஒரே பேருந்தில் பயணிக்கும் போது தான் அவனுக்கு, அந்த பெண் தன் ஊர் என்று தெரிந்திருக்கிறது. எப்படியோ காலப்போக்கில் இவனுக்குள் காதல் வளர, ஆனால் அந்த பெண்ணின் மனதில் அப்போதைக்கு எதுவும் இல்லை. இவனும் பலமுறை அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறான். அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்க சென்னை வந்துவிட்டான். விட்டது தொல்லை என்று இந்த பெண் இருந்திருக்கிறாள். ஆனால் முதல் மாத சம்பளம் வாங்கிய கையோடு இந்த பெண்ணை பார்க்க கல்லூரிக்கே வந்துவிட்டான் அவன். வாங்கிய சம்பளத்தை சொல்லி, என்னை ஏற்றுக்கொள். நான் கை நிறைய சம்பளம் வாங்குறேன் என்றெல்லாம் அவளிடம் கேட்டிருக்கிறான். அவள் முடியவே முடியாது என்று ஒரேடியாக மறுத்துவிட்டாள். இவனுக்கு கோபம் தலைக்கேற, கையில் பேப்பரில் சுருட்டி வைத்த அரிவாளால் அந்த பெண்ணின் தலையில் ஒரே போடாக போட்டுவிட்டான். அரிவாள் பட்டவுடன் அந்த பெண் மயங்கி விழ, இறந்துவிட்டாளோ என்ற பயத்தில் இவன் பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.

அப்பா, அம்மா சொன்ன பெண்ணை கட்டிக்கொண்டு, இந்நேரம் அந்த கம்பெனியில் உயரிய நிலைக்கு வந்திருக்க வேண்டிய ஒருவன், காதல் என்பது என்ன என்பதை முழுதாக புரிந்து கொள்ளாமல் தனது வாழ்க்கையையே அழித்துக்கொண்டான். இப்படித் தான் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன், திருச்சியிலும் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் அந்த சம்பவத்தில் அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ஒரு பக்கம் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால், தற்கொலை செய்துகொள்கின்ற காதல்கள் ஒரு புறம் என்றால் இப்படி ஒரு தலை காதல் தற்கொலை மற்றும் கொலைகளும் மறுபுறம். ம்ம்.. இன்னும் எத்தனை உயிரை குடிக்கப்போகிறதோ இந்த காதல் அரக்கன்.

நீங்கள் ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கிறாய் படம் பார்த்து இருக்கிறீர்களா. அதன் டைட்டில் போடும் போது, இது போன்ற ஏகப்பட்ட சம்பவங்களின் நாளிதழ் கட்டிங்குகள் காண்பிப்பார்கள். அது போலவே படத்திலும், ராஜீவ் கிரிஷ்ணா காதலையும், அதற்கு அவன் தேடிக்கொள்ளும் வழிகளையும், ஷாம் தன் காதல் தோற்ற பிறகு நடந்து கொள்ளும் விதத்தையும் அழகாக சொல்லியிருப்பார் டைரக்டர் வஸந்த். இது, ஷாமை காதலிக்கும் ஸ்வப்னா என்ற ஒரு பெண்ணின் குணத்தையும் அவள் அவளது காதல் தோற்றதற்கா செய்யும் வேலைகளையும் என்று நன்றாக இந்த சூழ்நிலைகள் விளக்கப்பட்டிருக்கும். படம் சரியாக ஓடவில்லையென்றாலும், அதில் ஒவ்வொரு காதல்களும், அதன் முடிவுகளை எப்படி அந்த காதலர்கள் மனதலவில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நன்றாக காட்டியிருப்பார் வஸந்த். ஷாம், அதற்காக சொல்லும் விளக்கங்கள் எல்லாமே எனக்கும் சரியென்றே படும் அந்த படம் பார்க்கும் போதெல்லாம். பொறுமையாக மூன்று முறை பார்த்திருக்கிறேன் .

படங்களில் காதல் தோல்விகளை பார்க்கும் போது நமக்கு ரசிப்பதாய் இருந்தாலும் நேரில் அது மிகவும் கொடுரமானது. எனது நெருங்கிய நண்பனொருவன் இப்படியான ஒரு துயரத்தில் இருந்த போது நாங்கள் அனைவரும் அவனுக்கு உறுதுணையாய் இருந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. தவறான மன அபிப்பிராயத்தில் நமக்குள்ளே ஒரு தாஜ்மஹாலை கட்டுவதெல்லாம் தவறு. இரண்டு நாட்களுக்கு முன்னால் எனது நண்பனின் நண்பன், காதலினால் சோகத்தில் ரயிலில் தலை வைத்து உயிரை இழக்கும் தருவாயில் காப்பாற்றப்பட்டான். அந்த சம்பவத்தை நினைத்த போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.. வேறெந்த தோல்வி என்றாலும் தாங்கிகொள்ளும் மனசு, இதில் மட்டும் முரண்பட்டு நிற்பதேன்.. எதையும் எதிர்த்து போராடுங்கள் காதலர்களே!

Tuesday, April 17, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 1

"வினாயகனே வினை தீர்ப்பவனே" அப்படின்னு காலைல எங்க ஊர் பகவதி அம்மன் கோவிலுல பாடுற பாட்டு தான் எங்க ஊருக்கே அலாரம்.. அதுக்கு பிறகு தான் ஊரே எழும். பகவதி அம்மன் கோவில் பூசாரிக்கு ஒரு எழுபது வயசுக்கு மேல் இருக்கும்.. வீடு, மனைவி மக்கள்னு இருந்தாலும் அவருக்கு கோவில் தான் எல்லாம்.. இந்த பாட்டை போட்ட பின்னாடி தான், டீக்கடையில் காபி டீ எல்லாம் கூட சுடச்சுட தயாராகும். காபி, டீயை குடிச்சுட்டு, பெரும்பாலானவங்க அவங்கவங்க தோட்டத்துக்கு கிளம்புவாங்க.. இனிமே தான் கத்திரிக்கா பொறுக்குறதும், கனகாம்பரம், மல்லிகை பூவெல்லாம் பறிச்சு மார்க்கெட்டுக்கு கொண்டு போறதும் நடக்கும். நானும் சின்ன வயசுல கனகாம்பரம் பூ பொறுக்கப் போவேன், அந்த அதிகாலைல.. நூறு கிராம் பூ பொறுக்குனா ஐம்பது காசு தருவாங்க..

கொஞ்ச நேரத்துல முதல் நடை பேருந்து திண்டுக்கலில் இருந்து வந்துடும். நான் சென்னையில இருந்து ஊருக்கு போனா அந்த பஸ்ல தான் ஊருக்குள்ள போவேன். அந்த பேருந்து, ஊருக்குள்ள ஆட்களை இறக்கிவிட்டுட்டு கோம்பைக்கு போகும்.. கோம்பைங்கிறது மலையடிவாரம். வர்றப்போ அந்த வண்டியே கர்ப்பிணி பெண் மாதிரி தள்ளாடி தள்ளாடி வரும்.. வர்ற வழில எல்லா தோட்டத்துலையும் நின்னு மூட்டைகளை ஏத்தி வரும். எல்லா தோட்டத்துக்காரவங்களும் அதுல தான் எல்லா மூட்டைகளையும் ஏத்திவிடுவாங்க.. அதுக்குன்னே பேருந்துகுள்ள வலது பக்கம் கடைசி ரெண்டு இருக்கையும் முன்னாடி ரெண்டு இருக்கையும் இருக்காது.. இப்போ ஒரு ஐந்து வருசதுக்கு முன்னாடி ஊர்ல இருக்க ரெண்டு பேரு வேன் வாங்கிட்டதால இந்த பேருந்துகாரவங்களுக்கு கொஞ்சம் நஷ்டம் தான். பேருந்து மார்க்கட்குள்ள போக முடியாது. ஆனா இந்த வேன் மார்க்கட் உள்ளார போகும். அதனால எல்லோரும் இதுலையே போக ஆரம்பிச்சுட்டாங்க.

காலைல டீக்கடையில கூடுற கூட்டம் ஒரு மினி சட்டசபை மாதிரி. அரசியலை பத்தி பெரும்பாலும் நாற்பது வயசுக்கு மேல இருக்கவங்க தான் பேசுவாங்க.. என்னை மாதிரி பசங்களுக்கு சினிமா பக்கம் தான்.. புதுசு புதுசா வர்ற படத்தோட விளம்பரங்கள், சுடச்சுட வர்ற கிசுகிசுக்கள் தான் முக்கியம். அப்படியே அந்த செய்தியெல்லாம் படிச்சிட்டு ஒரு அரட்டையை போட்டா.. அன்னிக்கு பொழுது சூப்பரா இருக்கும்.. இப்போ எல்லாம் எங்க ஊர்ல எல்லா டீக்கடைலயும் டிவி வந்திடுச்சு.. அதனால இந்த அரட்டைகள் கொஞ்சம்..கொஞ்சமென்ன ரொம்பவே குறைஞ்சு போயிடுச்சு.. டீ ஆர்டர் பண்ணிட்டு உக்கார்ந்தா.. முழுப்படத்தையும் வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு தான் கிளம்புது மொத்த சனமும்..

எங்க ஊர்ல மொத மொதல்ல பஞ்சாயத்து போர்டுல டிவி வந்தப்போ ஊர்ல இருக்க எல்லோரும் அங்க தான் இருப்போம்.. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தான் ரொம்ப பிரசித்தம்.. அதுக்கடுத்து.. நாலஞ்சு தடவை தடங்கலுக்கு வருந்துகிறோம்னு போட்டாலும் ஞாயிற்றுக்கிழமை படத்தை கண்ணை வேற பக்கம் அகட்டாம டிவியத்தான் பாத்துகிட்டு இருப்போம்.. பல சமயத்துல ஹிந்தி நிகழ்ச்சி தான் ஓடிகிட்டு இருக்கும்.. ஆனாலும் அதையும் பாக்க ஒரு கூட்டம் இருக்கும் புரியாமலேயே தலையசைக்க.. இந்த பஞ்சாயத்து போர்டு டிவி வந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு அதோடதான் வாழ்க்கைனு ஆகிடுச்சு.. அதுக்கு பிறகு சன் டிவி வந்த போது..கேபிள் கனெக்க்ஷன் சில பேர் தான் எடுத்து இருந்தாங்க.. ஏதாவது படம் பாக்கனும்னா கூட நாலணா கொடுத்து தான் அவங்க வீட்டுகுள்ளாற போய் படம் பாக்கமுடியும்.. பெரும்பாலும் கிராம வீடுகளில நடைனு ஒரு பகுதி இருக்கும்..அது வேற ஒண்ணும் இல்ல.. இப்போ நாம ஹால்னு சொல்றோம்ல அது தான். என்ன இந்த நடை மேல கொஞ்சம் திறந்து வானம் பாத்தபடி இருக்கும்.. சுத்தி மத்த அறைகள் இருக்கும்.. அந்த நடைல தான் டிவியை வச்சு இருப்பாங்க.. காசு கொடுத்து அங்க உக்கார்ந்து தான் படத்தை பாக்கணும். பெரும்பாலும் சாராய வியாபாரிகள் வீட்ல தான் அப்போ டிவி இருந்தது.. இப்போ வீட்டுக்கு ஒரு வாசப்படி இருக்கிற மாதிரி டிவி ஆகிபோயிடுச்சு.

ஒரு காலத்துல என் ஊர்ல எல்லார் கையிலும் பணம் தாறுமாறா இருக்கும். நாலு திருவிழா, நாலு ஜல்லிக்கட்டுன்னு எல்லாம் சந்தோசமா தண்ணியடிச்சு ரகளையா இருப்பாங்க.. எல்லாத்துக்கும் காரணம் கள்ளச்சாராயம் தான்.. ஒரு தடவை போலீஸ் ரெய்டுல எங்க ஊர்ல மட்டும் நூறு திருட்டு வண்டிகளை பிடிச்சாங்க.. எல்லாம் விடிய விடிய சாராயத்தை டியூப்ல அடச்சு பக்கத்து ஊருக்கு கொண்டு போவாங்க.. எல்லாம் இந்த மாதிரி வண்டில தான்.. இந்த மாதிரி எங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு கொண்டு போனா, அப்படி கொண்டுபோறவங்களுக்கு ஏகப்பட்ட காசு கிடைக்கும்.. அதனாலயே இந்த வேலைய செய்றதுக்கு பல பேர் இருப்பாங்க.. எல்லாம் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு சின்ன வயசுல இருந்து இந்த மாதிரி வாழ்ந்தவங்க.. இந்த இளைஞர்களோட சின்ன வயசு வாழ்க்கையே ரொம்ப சுவாரஸ்யமானது.. காலைல யுனிபார்ம் டிரஸ் போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போறேன்னு வீட்ல சொல்லிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடுவாங்க.. வகுப்புல இந்த மாதிரி காணலைனா வாத்தியர் நாலு பசங்களை அனுப்பி இந்த பையனை தேடிகொண்டுவரச் சொல்லுவார். அந்த பசங்க வகுப்புலயே கொஞ்சம் முரட்டு பசங்களா இருப்பாங்க... இந்த மாதிரி வகுப்புக்கு வராத பசங்க எங்க இருப்பாங்கன்னு இவங்களுக்கு நல்லாத் தெரியும். ஊருக்கு ஒதுக்குபுறதுல இருக்க புளியமரத்துக்கு கீழ வெட்டி ஆளுங்க சீட்டு விளையாடுவாங்க.. பணத்தை பந்தயமா வச்சு..இது தான் என் ஊரு கிளப்.. ஓடி போற பசங்க இங்கே இருக்கனும் இல்லைனா குளத்து பக்கத்துல எங்கயாவது இருப்பாங்க..

தேடிப் போன பசங்க எப்படியாவது பள்ளிக்கு வராத பையனோட கை கால் எல்லாம் பிடிச்சு ஆளையே செந்தூக்காக பள்ளிக்கூடத்துக்கு தூக்கிட்டு வந்துடுவாங்க.. அதுக்கப்புறம் அந்த பையனுக்கு கிடைக்கிற வெகுமதிகள் தான் மேட்டரே.. பிரம்படிகள் கிடைக்குமே அதுவும் அத்தனை பசங்க பொண்ணுங்க முன்னாடி கிடைக்குமே, அதுக்கு பின்னாடி ஒண்ணு அவன் ஸ்கூலுக்கு ஒழுங்கா வருவான்.. இல்லைனா அதுக்கு பிறகு அவன் ஸ்கூல் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டான்..

(தொடரும்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Sunday, April 15, 2007

சிவாஜியின் ரகசியங்கள்

புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஷங்கர், சிவாஜி பற்றி சிவாஜியின் ரகசியங்கள் என்ற தலைப்பில் சன் டிவிக்கு அளித்து பேட்டியின் தொகுப்பு..

படத்தின் சில ஷாட்களும் இந்த தொகுப்பில் இருக்கின்றன.. தலைவர் நடந்து வந்தாலே ஸ்டைல் தானே..

Friday, April 13, 2007

திரைப்பட வினாடி-வினா 2

இன்னைக்கு கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமான பாணில கேட்டிருக்கேன். எப்படி இருக்கிறதுன்னு தங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்க. முடிந்தவரை கேள்வி பெருசா இருந்தாலும் அதில் க்ளூ இருக்கும். இதற்கான பதிலோட உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

1. இவர் ஒரு டைரக்டர். இப்போதைய இளம் நடிகரின் தந்தையும் கூட. இவரது படங்களில் கோர்ட் சீன்கள் இல்லாமல் இருக்காது. கேப்டனுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுத்தது இவரது படங்கள் தான். இதற்காக கேப்டன் இவரின் சமீப படங்களில் கூட நடித்தார். ஒரு படத்தில் இவர் மகன் கூட, அண்ணனாக நடித்தார். அந்த மகன் நடிகரும், கேப்டனும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன? அதில் கேப்டனின் ஜோடியாக நடித்த நடிகை யார்?

2. இவரும் ஒரு மாபெரும் நடிகரின் மகன் தான். இவர் மற்ற பெரும்பாலான நடிகர்கள் கூட இணைந்து நடித்தவர். இவரும் பெரியார் படத்தில் பெரியாராக நடிக்கும் நடிகரும் சேர்ந்து அண்ணன் தம்பியாக நடித்த படத்தின் பெயர் என்ன? படத்தின் டைரக்டர் யார்?

3.இவர்கள் இரண்டு பேர். இரண்டு பேரும் நடிகர்களின் மகன்கள் தான். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்கள். இதில் ஒருவரின் 100வது படத்தையும், இவர்கள் இணைந்து நடித்த படத்தையும் இயக்கி உள்ளார் ஒரு டைரக்டர். இவர் ஒரு பாடலாசிரியரும் கூட. பெரும்பாலான இவரின் படங்களுக்கு இவரே பாடல் எழுதியுள்ளார். அவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி போன்றோரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ளார். அந்த டைரக்டர் சமீபத்தில் ஒரு நடிகரின் தம்பி முறை நடிகரை கதாநாயகனாக வைத்து டைரெக்ட் செய்தார். கேள்வி, அவர் மேல சொன்ன நடிகர்கள் ஒருவரின் 100 வது படத்தை இயக்கினார் அல்லவா. அந்த படத்தின் பெயர் என்ன? அவர் கடைசியாக இயக்கிய படத்தின் பெயரும், ரஜினியை வைத்து இயக்கிய படத்தின் பெயரும் என்ன?

நண்பர்கள், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் தங்களுக்கு எல்லா வளங்களையும் மகிழ்வையும் மன நிம்மதியையும் தர வேண்டுகிறேன்.

உலகத்தில் வெள்ளை பூக்கள் மலரட்டும். மகிழ்ச்சி கானங்கள் ஒலிக்கட்டும்!

சிவாஜி - பஞ்ச் டயலாக் ரிங்டோன்ஸ்

சிவாஜி படத்தின் துள்ளல் பாடல்கள் இப்போது தமிழ்நாடின் காற்றின் ஒரு அங்கமாகிவிட்டது. காதுகுத்து, கல்யாணம் முதல் திருவிழா வரை, மைக்-செட் போட்டாலே, போடுகிற முதல் பாடல் சிவாஜி தான். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ஆர் இணைப்பில் கிடைத்திருக்கும், எல்லா தரப்பு ரசிகர்களையும், தலையாட்டவும் காலாட்டவும் வைக்கும் இசை தொகுப்பு சிவாஜி பாடல்கள்.

இதுமட்டுமல்லாமல், சிவாஜி பாடல்களின் ரிங்டோன்கள் இப்போது அதிகமாக தரையிறக்கம் செய்யப்படும் ரிங்டோன்கள் தமிழகத்தில். அதில் அதிரடி என்னும் பாடல் அதிகபட்சம். அதற்கடுத்து வாஜி வாஜி-யும், ஒரு கூடை சன்லைட் பாடலும் பட்டியலில் இருக்கிறது.

இதையெல்லாம் விட, இன்னும் சில நாட்களில், யாராவது உங்களை கால் செய்தால், நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரின்னு ரஜினி குரலில் ரிங்டோன்கள் உங்களை அழைக்கப்போகிறது. சிவாஜி படத்தின் பஞ்ச் டயலாக்குகளும் இதில் அடங்கும்.

இந்த ரிங்டோன்கள் வந்தால், தமிழகத்தில் மூன்றில் ஒருவர் இதைத்தான் வைத்திருப்பார்கள் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. அட! பஸ்ஸில் ஏறிவிட்டால் பத்து பேருக்கு கால் வந்தால், போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்குன்னு எல்லாப்பக்கமும் ரிங்டோன் அலற போகுது.. சிவாஜி ஜுரம் பரவ ஆரம்பிச்சிடுச்சுப்பா..

சிவாஜி பாடல்களின் வரிகள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா.. உங்களுக்காகத் தான் நம்ம சுப.செந்தில் அதையெல்லாம் படமா போட்டிருக்கார். ஒரு கூடை சன்லைட் பாடலுக்கும், அதிரடி பாடலுக்கு இந்நேரம் நீங்க எல்லா வரிகளை சரியா கண்டுபிச்சிருந்தா, ஒரு சபாஷ் உங்களுக்கு.. இல்லைன்னா, செந்தில் பதிவை எட்டி பாத்து, அவருக்கு ஒரு சபாஷ் போடுங்க.

சிவாஜி படத்தை எதிர்பாக்குற பரபரப்போட, பதிவுலக மக்கள் ஆவலா எதிர்பார்த்து படிச்சது, பிரியமான பிரியா எழுதின காதல் யானைங்கிற ஒரு தொடர்கதையை.. நான் சீட்டு நுனில தான் உட்கார்ந்து இந்த பதிவையெல்லாம் படிச்சேன். நீங்களும் பரபரப்பை அனுபவிக்க வேண்டுமா?

Thursday, April 12, 2007

அழகுகள் ஆயிரம்.. ஆயிரத்தில் ஆறு இங்கே

இன்று காலை அழகு அழகுன்னு CVR ஒரு பதிவை போட்டிருந்தார். அழகாய் தானே எழுதியிருக்கிறார் என்று பார்த்தால், தல, நீங்களும் எழுதுங்க நம்மளையும் எழுதச் சொன்னார். மறுபடியும் நம்ம நண்பர் அமிழ்தும் இந்த தொடரை எழுத சொல்லியிருந்தார். ஆறு தான் எழுதப் போறோம் ரெண்டு பேருக்கும் பிரிச்சு தந்தா, அதெல்லாம் முடியாது, ஞானபழத்தை முழுதா சாப்பிட்டா தான் நல்லதுன்னு சொல்லிடுவாங்களோன்னு தெரியல. இருந்தாலும் நண்பர்கள் ஆளுக்கு மூன்றா பிரிச்சுக்குவாங்கங்கிற நம்பிக்கைல இதோ நம்ம வண்டி தயார்...

இதோ நமக்கு பிடிச்ச அழகுகள் ஆறு..

முருகன்

அழகெல்லாம் முருகனே-ல ஆரம்பிச்சு அழகென்ற சொல்லுக்கு முருகா வரை அவன் அழகு பற்றி சொல்லாத பாடல்கள் கிடையாது. காலெண்டரோ, ஓவியமோ, எதுவாய் இருந்தாலும் முருகனோட முகத்துல தெய்வீக அழகை தவிர, சுண்டியிழுக்கும் ஒரு இளமை அழகும் இருக்கும். சின்ன வயதில் முருகனோட படங்கள் பார்த்து, இப்படி வரையும் ஓவியர்கள் யாரின் முகத்தை முன்மாதிரியா எடுத்துக்குவாங்க.. இல்லை வரையும் போதே அவர்களின் முன்னே முருகன் வருவானோ என்று எண்ணி எண்ணி வியக்கும் அப்படியொரு அழகு முருகனோட முகத்துல இருக்கும். பழநி மலை போனால், ராஜா வேஷத்துல, ஆனந்தமான ஒரு புன்னகையோட அவரை காண கண்கோடி வேண்டும். அதுவும், வடபழநி கோவிலில், சில அர்ச்சனை பொழுதுகளில், திருநீறு, திணை, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால் என்று பல அபிஷேகங்களில் முருகனை காண என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அழகு அப்படின்னு சொன்னாலே எனக்கும் சித்திரம் முதல் சிலை வரை முதல்ல மனசுல வந்து நிற்பது முருகன் தான். மொத்த அழகு ஆறையும் முருகன்னே சொல்லலாம். ஆனால், மேல CVRக்கும் அமிழ்துக்கும் வாக்கு கொடுத்து விட்டதால் முருகன் முதல் இடத்தில் மட்டும்.

தமிழ்

ஒவ்வொரு எழுத்தும் ஒரு அழகு. அதிலிலிருந்து எழும் ஓசைகளும் அழகு. தமிழை கரைத்து குடித்தவர்கள், அதோடு பக்கத்தில் அமர்ந்து வாழ்ந்தவர்கள், அதனை அமிழ்தென்றும் அழகென்றும் சொல்லிவிட்ட பிறகு, நான் மட்டும் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது.

நான் பிறந்தவுடன் வடமாநிலத்தில் இருந்தேன், கிட்டதட்ட எனது நான்கு வயது வரை. அப்போது அங்கு தமிழர் பிரச்சனை எழுந்து, தமிழரெல்லாம் பயந்து தமிழகம் வந்தடைந்த போது, போதும் இந்த வாழ்க்கை என்று நாங்களும் வந்துவிட்டோம். அப்போது கிளி மாதிரி தத்துபித்துன்னு நான் தமிழ் பேசுவேனாம். ஆனால் ஹிந்தி வெளுத்துகட்டுவேனாம். என் ஊருக்கு வந்த பிறகு யார் கேள்வி கேட்டாலும் நான் ஹிந்தியில் தான் பதில் தருவேனாம். இன்னமும் ஊர் பெருசுகள் என்னை கண்டால் சொல்லும் விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்போது ஹிந்தியா அப்படின்னா என்று கேட்கும் நிலையில் தான் நான் என்றாலும், அப்போது அப்படி ஹிந்தி பேசியதில் பல சமயங்களில் பேசும் போது, 'ழ'வை ல என்று உச்சரித்து விடுவதுண்டு. ஆனால் எழுதும் போது அந்த மாதிரி பிழைகள் இருக்கவே இருக்காது. இந்த ஒரு விஷயதிற்காக எத்தனையோ முறை நான் வருந்தியதுண்டு என்றால், தமிழ் மேலும், அதன் ஏகாந்த அழகின் மீதும் நமக்கிருக்கும் பற்று தெரிந்திருக்குமே. தமிழ் இங்கே இரண்டாவது அழகு..

நிலா

ஆடை கட்டி வந்த நிலவு என்று பட்டுகோட்டை முதல், வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்று வைரமுத்து வரை நிலவை, அதன் அழகை, அதன் பரந்த வெளிச்ச வெளிகளை பாடாத கவிஞர்கள் உண்டா.. நிலா, என்றுமே அழகு. அது தேய்வதும் அழகு.. வளர்வதும் அழகு.. சின்ன வயசில் நிலாவை காட்டி நமக்கு நெய்ச்சோறு போட்டதெல்லாம் மறக்கமுடியாதது. (அப்பவே நிலாவ சைட் அடிக்காம இந்த ஷ்யாமுக்கும், அம்பிக்கும் சோறே உள்ள இறங்காதாம்.) அந்த சின்ன வயதில் மனதில் ஒரு இளவரசியாக பதிந்துவிட்ட நிலா, இன்று அழகான ஒரு தேவதையாக மனசுக்குள் உருவெடுத்து நிற்கிறது. பரந்து விரிந்து கிடக்கின்ற இருண்ட வானத்தில் ஒரு வெளிச்ச பொட்டு, இந்த நிலா. உலக காதலர்களின் உன்னத நண்பன் இந்த நிலா. நமக்கும் எங்கே போனாலும் கூடவே வர்ற காதலி. இவள் இருப்பது மூன்றாம் இடத்தில்.

புன்னகை

கொஞ்சம் சிரிங்க என்று புகைப்பட நிபுணர் முதல், எப்படி சிரிச்ச முகத்தோட மகாலெட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு என்று பெண் பார்க்கும் இடத்தில் பெரியவர்களும், டேய், எப்போதுமே உன் உதட்டுல லிப்ஸ்டிக் மாதிரி இருக்கிற அந்த ஸ்மைல் தாண்டா என்னை கவுத்தினது என்று பூங்காவில் காதலனிடம் கதைக்கும் காதலியும், பொக்கை வாய்னாலும் என் தாத்தா சிரிச்சா அது அழகு என்று சொல்லும் பேரன்களும், அமுல் பேபி மாதிரி அழகா சிரிக்கிறான் பாரு குழந்தை என்று பக்கத்து வீட்டு குழந்தைகளை கொஞ்சுவது வரை புன்னகையில் அழகு, வர்ணமடித்த வானம் மாதிரி முகத்துக்கு ஒரு அழகு. இந்த சிரிப்பு முகத்துக்கு மட்டும் இல்ல, உள்ள இருக்க மனசையும் படம்பிடித்து காட்டும் அழகு.. அதனால நமக்கு சிரித்த முகம் ரொம்ப பிடிச்ச விஷயம்.

மழை

ஒரு மழை பெய்தால் போதும், அது மனிதர் முதல் புல், பூங்கா வரை எல்லோரையும் மகிழ்விக்கும். இந்த பூமியே குளித்தது போல அப்படி ஒரு அழகு வழிந்தோடும் இந்த மழையினால். நமக்கு மழை ரொம்ப பிடித்த விஷயம். மனசு நனையிற வரை மழையில் ஆடுவேன். நம்புங்கள், பயந்து ஒளிந்த போதெல்லாம் பிடிக்கும் வியாதிகள் மழையோடு கைகோர்த்து ஆடும் போது வருவதே இல்லை. நான் மழையை பொருத்தவரை, ஆண்பால் ஷ்ரேயா. கண்ணை மூடிக்கொண்டு இதை கற்பனை செய்து பாருங்கள். மழை முடிந்த நேரத்தில், மரங்கள் சூழ்ந்த ஒரு சாலையில், ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல, சேர்த்த துளிகளை தரைக்கு இலைகள் அனுப்பும் அந்த ஆனந்த கணத்திலே என்னை மறந்து நடப்பேன். ஒரு மரத்தை போல ஒளிந்து கொள்ளாமல் மழையில் குளித்து, காற்றில் தலைவாரிக் கொள்வேன். மழை, என் ஐந்தாவது அழகு.

நல்ல மனிதர்கள்

வானில் கருமேகம் சூழ்ந்தது. இதை கண்டாலே மழை பெய்யும் சந்தோசத்தில், தரை புற்கள் கூட தலையாட்டி ஆடும். மயிலுக்கு சொல்லவும் வேண்டுமோ. தன் அழகு தோகைவிரித்து நடனமாடியது. இதை கண்ட பேகன் என்னும் மன்னன், அடடா, குளிரில் வாடுகிறதே இந்த பொன்மயிலென்றெண்ணி போர்வை போர்த்துகிறான். பார்ப்பதற்கு அறிவற்ற செயல் என்று தோன்றினாலும், அதுவும் ஒரு உன்னத செயல் என்கிறது நாலடியார். இதைப் போல பசியென்று வந்த புறாவிற்கு தன் தொடை அரிந்து தந்தான் ஒரு மன்னன். இப்படி, வாய்விட்டு சொல்லமுடியாத உயிருக்கே பதறியடித்து உதவும் இவர்கள் மனிதர்களுக்கு எப்படி உதவியிருப்பர்கள். இந்த அளவு இல்லையெனினும், நம்மால் முடிந்த அளவு முடியாதோர்க்கு உதவி செய்யலாம். முடியாதோர் என்றதும் எல்லோரும் பிச்சை போடுவது ஒன்று தான் என்று நினைகிறார்கள். ஆனால், அதுவல்ல.. வெயில் காலங்களில் பழநிக்கு பாதயாத்திரை நடந்து போவோருக்கு மோர், தண்ணீர் பந்தல் அமைத்து அவர்தம் தாகம் தணித்தல், கல்வி கற்க வழியிருந்தும் நிதி இல்லாததால் பள்ளி போக முடியாதோர்..இப்படி எத்தனையோ பேர் வாழ நெஞ்சில் உரம் இருந்தும் திசைகாட்ட ஆள் இல்லாததால் பாய்மரம் போலத் தவிக்கின்றனர். நல்ல மனிதர்கள் சமுதாயதிற்கு அழகு.

இது போல படித்து முடித்துவிட்டு, புராஜெக்ட் அல்லது வேலை இருக்கும் இடங்கள் தெரியாமல் எத்தனையோ மனிதர்கள் பரிதவிக்கின்றனர். அப்படி வழியிழந்தோர்க்கு உதவ அம்பி-யும், DD மேடமும் புதியதாய் ஒரு வழிமுறையோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள். சமுதாயம் புன்னகை பூக்க, சோர்ந்த நெஞ்சங்களில் மகிழ்ச்சி மழை பொழிய, இந்த தமிழின் உதவியோடு, இருட்டை ஒழிக்க வந்திருக்கும் மனித நிலாக்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றி பேற வாழ்த்துக்கள்.

என்னின் ஆறை எழுதி முடித்தாகிவிட்டது. அப்போ நாமும் மற்றவர் அழகை தெரிந்து கொள்ளவேண்டாமா. இதோ நான் டேக் செய்யும் நண்பர்கள்

1. அம்பி
2. DD மேடம்
3. ACE
4. ப்ரியமான ப்ரியா
5. பில்லு பரணி
6. G3
(விதிகளை மீறி ஆறு பேரை கூப்பிட்டாச்சு.. இனிமே இதுல மூணு பேரை குறைக்க முடியாது.. இந்த சங்கிலியை ஆரம்பித்த கொத்ஸ் மன்னிப்பாராக)

உங்க அழகை தெரிந்துகொள்ள நான் தயார். எழுத தயாராகுங்கள்.

Tuesday, April 10, 2007

எனது அல்டிமா..

முல்லைக்கு
தேர் கொடுத்தானாம்
பாரி..

இது நம்ம
நாகரீக தேர்..
கொஞ்சம் பாரீர்!
ஆணிகள் அதிகம்..
அதனால்
இது
வெறும்
புகைப்பட பதிவு மட்டுமே..
இங்கே நம்பர் பிளேட் நமக்கு பிடித்த வகையில் வைத்துகொள்ளலாம்.
சண்முகா என்பது முருகனின் மறுபெயர்.. அம்மா பெயர் சந்திரா, அப்பா பெயர் முத்துராஜன், தங்கை பெயர் காயத்ரி மூன்று கலந்து வந்தது தான் இந்த பெயர் சண்முகா.. அட! நம்ம பேரும் முருகனோட இன்னொரு பேர் தானே!

Sunday, April 08, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 4

மூன்றாம் பகுதி

அருமையான வாய்ப்பு தவறிப் போய்விட்டதே என்று எனக்கு பெரும் கவலை.. இந்த வேளையில் சென்னையில் புராஜெக்ட் தேடி அலுத்துவிட்ட என் நண்பனும் தனியாக வீட்டிலேயே சென்று செய்கிறேன் என்று மதுரைக்கு கிளம்பிவிட்டான்.. பக்கத்தில் சொல்லி அரற்ற நண்பனும் இல்லை. எனது இருபத்திமூன்று வருட வாழ்க்கையில் கிடைத்ததெல்லாம், முருகன் அருளால் தான். மனசு நிம்மதியடைய வடபழநி முருகன் கோயிலுக்கு சென்று வந்தேன்.. முதல் முறை சென்றதிலேயே நல்ல தரிசனம். மனதுக்குள், நாலு பாட்டில் பூஸ்ட்டை மொத்தமாக குடித்துவிட்டு, முருகன் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று சொன்னது போல் இருந்தது. அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை வந்ததால் ஊருக்கு சென்று வரலாம் என்று கிளம்பினேன். சென்று வந்தால் மனசுக்குள் இன்னும் நம்பிக்கை பிறக்கும் என்று எண்ணம்.

ஊரில் இருந்தபோது, திண்டுக்கலில் இருக்கும் அபிராமி அம்மன் கோவிலுக்கு போனேன்.. வெள்ளிக்கிழமை ஊரில் இருந்தால் அபிராமி அம்மன் கோவிலுக்கு பெரும்பாலும் போய்விடுவேன்.. அங்கே தெற்கு வாசப்படியில், புதுசாய் வாங்கின உயரம் கூடிய செருப்பை ஐம்பது பைசாவுக்கு அங்க இருக்கும் காலணிகளை பாதுகாப்பில் வைத்துவிட்டுச் சென்றேன்.. செருப்புகள் வைப்பதற்கு என்று எந்த அலமாரிகளும் இல்லை.. எல்லாமே அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்திருந்தார்கள். உள் சென்று அம்மனை தரிசித்துவிட்டு அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, செருப்பை காணல.. பாதுகாக்குறவங்க கிட்ட கேட்டா, நாங்க என்ன சார் பண்றது.. யாரோ மாத்தி எடுத்துட்டு போயிட்டாங்க போல என்று அசால்டா பதில் சொன்னாங்க.. எனக்கு சுர்ருன்னு கோபம் ஏறிடுச்சு. செருப்பு காணாம போனதை விட அதுக்கு அவங்க சொன்ன பதில் தான் கோபத்துக்கு காரணம். யாரோட செருப்பை யார் வேணும்னாலும் எடுத்துட்டுப் போனா அப்புறம் எதுக்கு அதை பாதுகாக்கன்னு இவங்க வேற தனியா.. ஒருவேளை புது செருப்புங்கிறதால அவங்களே கூட எடுத்திருக்கலாம்.. ஆனாலும் என்ன பண்றது, அப்படியே வீட்டுக்கு வந்தேன்.. மனசே சரியில்லை.. கம்பெனிலயிருந்து அனுபின லெட்டர் வரல.. புது செருப்பு கோயில்ல காணல.. மெல்ல சனி தலைல சம்மணம் போட்டு உட்கார்ந்ததா ஒரு கவலை..

ஆனா, செருப்பு காணாம போனதுக்கு வீட்ல சொன்ன காரணமோ உல்டாவா இருந்தது. கோயில்ல செருப்பு தொலஞ்சா நல்லதாம்.. அட..யாரோ ஒரு கூடை ஐஸை எடுத்து தலைல வச்ச மாதிரி ஜில்லுன்னு இருந்தது. அந்த ஜில்லிப்போட மெட்ராஸ் வந்து, அந்த தங்கைக்கு போனைப் போட்ட, "அண்ணா, உங்களை ஜனவரி ரெண்டாம் தேதி டைரக்டா கம்பெனிக்கு வந்திடச் சொன்னாங்க.. அன்னைக்கே லெட்டரையும் நேர்ல தந்திடுறாங்களாம்.." அப்படி ஒரு சந்தோசம் மனசுக்குள்.. நாம எல்லாம் கம்பெனில போய் புராஜெக்ட் பண்ண போறோமா.. ஆஹா! செருப்பு தொலஞ்சது நல்லதுக்குத் தான் போலன்னு நினச்சுகிட்டேன்..

அந்த 2002 ஆரம்ப காலங்களில், நமக்கு ஆங்கில புலமை எல்லாம் அவ்வளவா இல்லை. ஏதோ பேசத் தெரியும். யார் பேசினாலும் அதை புரிஞ்சுக்க முடியும். காலேஜ்ல இருக்க வரைக்கும், எப்படியோ நாளை நகத்தியாச்சு. கிளாஸ்ல செமினார் எடுக்கச் சொன்னா எடுக்கச் சொன்ன ஆளையே கிண்டல் பண்ணிட்டு அமைதியா உட்கார்ந்துடுவோம். அதுக்கு எல்லாம் மொத்தமா உள்ளுக்குள்ள உளறல். எப்படி போய் ஒரு கம்பெனில நாம எல்லாம் வேலை பாக்க போறோம். ஜனவரி 2-ம் தேதி, அந்த கம்பெனியோட ரிசப்சன்ல திருட்டு முழியோட தான் உட்கார்ந்து இருந்தேன். அதே நாள், அதுக்கு பிறகு என் கூட புராஜெக்ட சேர்ந்து வேலை செய்த ஒரு தோழியும் அங்க உட்கார்ந்து இருக்காங்க. இன்னைக்கும் அந்த முழியை சொல்லி சொல்லியே நம்மளை கலாய்ப்பாங்க. என்ன கேள்வி கேட்டா என்ன மாதிரி பதில் சொல்லணும் நான் மனசுக்குள்ளயே ஒரு சின்ன நாடகம் மாதிரி போட்டு பாத்துகிட்டேன்.. ஆனா, உள்ளே போன பிறகு தான் தெரிந்தது வாய்ப்பு கிடைக்கிறவரை சச்சின் கூட ரஞ்சி பிளேயர் தான்னு.. நமக்குள்ள இந்த அளவுக்கு தெளிவான ஒரு ஆள் உட்கார்ந்து இருக்கான்னா அப்போ தான் எனக்கும் தெரிஞ்சது..

இந்தப் பக்கம், புராஜெக்ட் தேடி சென்னை வந்த என் நண்பர்கள் தங்க இடம் கிடைக்காமல் இருக்க, அவர்களும் என் கூட, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்க வந்தார்கள். அப்போது நான் ஒருவன் மட்டுமே இருந்ததால், இன்னும் ஐந்து நண்பர்கள் என்னுடன் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் என் கூட எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்தவர்கள். ஆக மொத்தம் அந்த சின்ன அறையில் ஆறுபேருடன் சேர்த்து இனிதாக ஆரம்பமானது 2002. நான் தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் MஏPZ-இல் இருக்கும் கணினி நிறுவனத்திலும், என் நண்பன் கிச்சா சென்னை தலைமைசெயலகத்தில் இருக்கும் நீC-யிலும், மற்ற மூன்று நண்பர்கள் அண்ணா சாலையில் இருக்கும் ஒரு நிறுவனத்திலும் மற்றொரு நண்பன் செந்தில் சைதையில் இருக்கும் ஒரு நிறுவனத்திலும் புராஜெக்ட் செய்ய ஆரம்பித்தோம். தினமும் கம்பெனி போய்விட்டுவந்தால் ஆரம்பிக்கும் அரட்டை இரவு பனிரெண்டு மணிக்கும் மேலும் நீடித்தது. பல நாட்கள் சீட்டுகட்டை எடுத்துப் போட்டால், ரம்மி, கழுதை என்று ஆட்டம் கலகலப்பாய் போகும். மொத்தத்தில் இன்னொரு கல்லூரி வாழ்க்கையை நாங்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருந்தோம், கல்லூரியில் அல்லாமல்.

அப்போது தான் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பயன்படுத்தியிருந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் இருந்து முடிந்தவரை சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Saturday, April 07, 2007

விழுதுகளே வேராக...

தானிருக்கும்
வரை
விழுதுகளில்
வாழாது
ஆலமர வேர்..

தவ்வியோடும் வரை
தரையில்
தன்
குட்டிகளை
விடுவதில்லை
கங்காரு...

தானாக
பாய்ந்தோடும் வரை
தன் குட்டியை
தூக்கி செல்லுமாம்
குரங்கு!

அறிவு,
ஆறுக்கும்
ஒன்று
குறைவாக பெற்றாலும்,
பெற்றதால்
இவைகள்
தன்
பிள்ளைகளை
பிழைப்புக்கு
அனுப்புவதில்லை!

குழந்தையிவன்,
பென்சில்
பிடிக்கும்
கரங்களில்
பீடி சுற்றுகிறான்!

அவன் அப்பனோ
அதை
புகையாய்
விடுகிறான்!

பஞ்சாய்
இருக்கும்
பிஞ்சு
கரங்கள்
நஞ்சு
போகின்றன,
உளிகள்
பிடித்தும்
கயிறுகள்
இழுத்தும்...

பக்கத்து வீட்டு
பையன்
கான்வென்ட் போக
இவன்
கனவுகள் கூட
கழுவுகின்ற
டீ கிளாஸை சுற்றியே!

சுத்தியல்
தூக்குகின்றன
பூக்கள்..
இதை
புத்தியில்
புரிவார்களா
மாக்கள்?

இவர்கள்
வளரும் முன்
தேய ஆரம்பித்த
பாக்கெட் சைஸ் நிலவுகள்..

மலரும் முன்
வாட ஆரம்பித்த
மெக சைஸ் பூக்கள்..

நிலவுகளையும்
பூக்களையும்
ரசிக்காமல்
இப்படியா
பழுதுபடுத்துவது?

இப்படி
தன்
குழந்தையை
வேலைக்கு
அனுப்புவோரை
என்னவென்று சொல்வது?

முதுகில்
எலும்பு
இல்லாதவர்கள்..
கண்ணிருந்தும்
குருடர்கள்..

இல்லை..
இல்லவே இல்லை..

அடுத்த
செடியின் மீது
படர்ந்து
அது
சமைக்கும்
ஆகாரத்தை
உறிந்து
தானுன்டு
வாழும்
மனித ஒட்டுண்ணிகளே
இவர்கள்..
பதர்கள்..

குறைந்த
சம்பளம்
என்பதால்
குழந்தைகளை
வேலைக்கு
வைப்பதையும்
தவிருங்கள்..

அவர்கள்
படிக்கட்டும்...
எந்த
படிக்கட்டும்
ஏறி
அவர்கள்
தொடட்டும்
வானத்து
நிலவை..
என்னும்
எதிர்கால
வசந்த வாழ்க்கையை..

எங்காவது
குழந்தை
தொழிலாளர்கள்
இருந்தால்
காவல்துறைக்கு
சொல்லுங்கள்..

எப்படியாவது
அவர்தம்
வாழ்க்கையில்
இருளை போக்க
நல்ல
விளக்கொன்று
ஏற்றுங்கள்..

இப்போது
வேண்டுமானால்
அவர்கள்
அகல் விளக்கு..
பாரதியின்
அக்னிகுஞ்சு போல,
நாளை
இந்தியாவின்
ஒளி விளக்கு..

Friday, April 06, 2007

முரட்டு வைத்தியம் என்றால் என்ன? - பாக்யா கேள்வி பதில்

கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி பதிலில் படித்தது இது.

கேள்வி : முரட்டு வைத்தியம் என்றால் என்ன?

பதில் : ஒரு தந்தை மகனுக்கு விளையாட்டு சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் மெதுவாக பீரோவில் ஏறி அங்கிருந்து குதிக்க, அப்பா அவனை தாங்கி பிடிப்பார். இது போல மூன்று முறைகள், மகன் குதிக்க அப்பா அவனை அலேக்காக பிடிப்பார். நாலாவது தடவை அவன் குதிக்கும் போது அப்பா பிடிப்பது போல பாவலா செய்து கீழே விட்டுவிட, மகனுக்கு சரியான அடி.. மகனை பார்த்து அப்பா சொல்வார், இது போல யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. நம்பினால் நமக்குத் தான் சேதாரம் என்று சொன்னார். இந்த கருத்தை அந்த அப்பா சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம். ஆனால் மகனுக்கு அது எப்படி இருக்கும் என ஒரு செயலால் (முரட்டுத்தனமான) உணர்த்தினார் அல்லவா.. இதற்குப்பேர் தான் முரட்டு வைத்தியம்.

நான் என் ஞாபகத்தில் இருப்பதை வைத்து இந்த பதிலை எழுதினேன். பாக்யாவின் கேள்வி பதில் பகுதி கொஞ்சம் பிரசித்தமானது. அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் நகைச்சுவை பொதிந்து கருத்துக்கள் சொல்லி, கதையளப்பது பாக்யராஜின் பாணி. அது மக்களையும் சென்று நன்றாகவே சேர்ந்தது. அந்த கேள்வி-பதில்கள் இரண்டு பகுதிகளாக புத்தக வடிவிலே வந்ததாகவும் ஞாபகம். பாக்யராஜின் பாக்யாவை பார்த்து டி.ராஜேந்தரும் டி.ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழை ஆரம்பித்தார். ஆனால் அவரால் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியவில்லை.

பாக்யராஜின் சினிமாக்களை போலவே இதிலும் 'அந்த' மாதிரியான விஷயங்களும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும். ஆனால் எதுவும் எல்லை மீறினதாக எனக்குத் தெரியவில்லை

இன்னும் வெளிவந்துகொண்டிருக்கிறதா பாக்யா..

Wednesday, April 04, 2007

மொத்தப் பூக்களின் ஒத்த உருவமே..

நானும்
ஒரு
கைதிதான்..
உன்
இதயத்தில்
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..

உன் காதோரம்
வளைந்து
கிடக்கும்
முடிகற்றைகளில்
எப்போதும்
என் மனம்
ஊஞ்சலாடுது..

அப்படி
ஆடுகையில்,
உன்
காதில்
காதலை
சொல்ல வருகிறேன்..

பக்கத்தில்
வந்ததும்
என்னோடு
சேர்ந்து
மனசும்
ஆடுகிறது
ஊஞ்சல்..

மொத்தப் பூக்களின்
ஒத்த உருவமே..
நீ தான்
பூக்களுக்கு
இரவல் தந்தாயோ
மென்மையை..

ஆப்பிளுக்கு
தந்தாயோ
வண்ணத்தை..

பறக்கும்
பறவையை கூட
மயக்கி
கடிக்க சொல்லுது
உன் கன்னங்கள்..

பறவைக்கே
அப்படி என்றால்
பாமரன்
எனக்கு..
சொல்வதற்குள்ளே
அந்த
கன்னங்களில்
வழுக்கி விழுகிறது
என் இதயம்!

அப்படி
விழுந்த இடம்
உன் இதயம்!

அங்கே
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..

(ப்ரியா.. இப்போது சந்தோசமா.. கவிதை எழுதியாச்சு.. எனக்கும் என் கனவு பெண்ணுக்கும் எந்த ஊடலும் இல்லை..)

Tuesday, April 03, 2007

லெட்சுமி கிளியும் ஜானி நாயும்

இந்த சம்பவம் நான் பிறப்பதற்கு முன்னாடி நடந்த ஒரு உண்மை சம்பவம். அப்போ, என்னுடைய அப்பா ITI படிச்சு முடிச்சிட்டு, சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்த சமயம். அப்போது அவருக்கு கிடைத்த சம்பளமான முந்நூறு ரூபாயில் அவரின் செலவுகள் போக வீட்டிற்கும் அதிகமாக அனுப்பவேண்டும் என்பதால், கம்பெனியில் உள்ளேயே தரப்பட்டிருந்த வீட்டில் (கூரை வேய்ந்த) தங்கி இருந்தார். வீட்டை விட்டு தனித்து இருப்பவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். என் அப்பாவிற்கு அப்போது அதுவும் கூடாத காரியம். எங்கே நண்பர்கள் வைத்துக் கொண்டால் செலவுகள் அதிகமாகும் என்றோ என்னவோ அதிகமான நண்பர்கள் வைத்துக்கொள்ளவில்லை. அவருக்கு ஏற்ற ஒரு சில நண்பர்களுடன் பழக்கம் வைத்திருந்தார். அத்துடன், அழகிய பச்சைக் கிளியையும் வைத்திருந்தார். வீட்டிற்குள் வந்துவிட்டால் நண்பன், சொந்தக்காரன் எல்லாமே அந்த பச்சைக்கிளி தான். அதற்கென்று அவர் கூண்டொன்றும் வைத்துக்கொள்ளவில்லை. எனக்கு தெரிந்து இவ்வளவு பெரிய கூடு கிடைத்த கிளி அது ஒன்றாகத் தான் இருக்கும்.

அந்த கிளிக்கு என் அப்பா வைத்திருந்த பெயர் லெட்சுமி. அந்த பெயரை சொன்னாலே போதும். அது தலையை தூக்கி என் அப்பாவை ஒரு லுக் விடுமாம். அவர் ஷிப்ட் முடித்து வரும் நேரம் எல்லாமே அதற்கு முன்கூட்டியே தெரிந்து விடும். சரியான நேரத்திற்கு அந்த கூரையின் மீது நின்றுகொண்டிருக்கும். என் அப்பாவிற்கும், அதற்கும் இடையில் அப்படியொரு இனம் பிரியா பாசம் இழையோடி இருந்தது. என் அப்பாவை கண்டதும் முத்து என்று அதன் இனிய குரலில் கூப்பிடுமாம்.. ஒரு நாள் என் அப்பா, இரண்டாவது ஷிப்ட் முடித்துவிட்டு அலுப்பில் கயிற்றுக்கட்டிலில் தூங்கிகொண்டிருந்திருக்கிறார். இடையில் உஸ்ஸ்..உஸ்ஸ் என்னும் சத்தமும் கிளியின் சத்தமும் கேட்டிருந்திருக்கிறது. இவர் அலுப்பில் லெட்சுமி சும்மா இரு என்று சொல்லிவிட்டு அசதியில் தூங்கிவிட்டார். காலையில் லட்சுமி லட்சுமி என்று கூப்பிட்டிருக்கிறார். கிளியை காணவில்லை. அது கட்டிலுக்கு கீழே வாய் நிறைய ரத்தத்தோடு செத்துக் கிடந்திருக்கிறது. பக்கத்தில் கிடந்த பாம்பை பார்த்தவுடன், என் அப்பாவிற்கு ஒரு நிமிஷம் உயிரே இல்லை. அப்போது தான் அவருக்கு இரவு கேட்ட உஸ்ஸ்..உஸ்ஸ் சத்ததிற்கு அர்த்தம் புரிந்தது.

என் சிறிய வயதில் நான் இந்த கதையை (தொட்டிலுக்கு காவல் காத்த நாயின் வாயில் ரத்தம் இருப்பதை பார்த்த ஒரு கோபக்கார தாய், தன் குழந்தையை தான் நாய் தின்றுவிட்டதோ என்று நாயை கொன்றுவிடுவார். அதன்பிறகு தொட்டிலுக்கு கீழே செத்துகிடந்த பாம்பை பார்த்தவுடன் தான் அவளுக்கு உண்மை எல்லாம் விளங்கும் என்றொரு கதை ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதை விளக்கி சொல்ல ஏற்படுத்தபட்ட கதை.) படித்துக்கொண்டிருந்தேன். அதை நான் படித்துக்கொண்டிருந்த போது என் அப்பா இந்த கதையை என்னிடம் சொன்னார்.

நான் எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்த போது எங்கள் வீட்டில் ஜானி என்றொரு நாய் இருந்தது. சிறு வயதில் இருந்து எங்கள் வீட்டிலேயே வளர்ந்தது. நல்ல பாசமாய் இருக்கும். நான் புதுச் சட்டை ஏதும் போட்டால், என்னை கொஞ்சாமல் விடாது. பாசத்தில் என் சட்டையை கறையாக்குகிறது என்று அதற்கென்ன தெரியும்.. நாயிற்கு நாங்கள் வைத்து அழைக்கும் பெயர் ஜானி.. ஜானி அப்படின்னு ஒரு சத்தம் போட்டால் போதும், எங்க இருந்தாலும் ஓடோடி வந்திடும். ஒரு நாள் நான் காலேஜ் விட்டு வீட்டிற்கு வந்தால், ஒரு மூலையில் படுத்துக் கிடக்கிடந்தது. காலையில் இருந்து ஒன்னுமே சாப்பிடலை ஜானின்னு என் அம்மா கவலையோடு சொன்னார்கள். நான் ஒரு டம்ளரில் பாலோடு சென்று அதன் வாயை திறந்து நான் அதற்கு ஊட்டினேன். ஒரு பக்கத்திலிருந்து ஊற்றினால் அது மறுபக்கதில் வெளியேறியது. எனக்கு பயங்கர கஷ்டமாயிடுச்சு.

அடுத்த நாள் காலையிலும் ஜானியின் நிலமை அப்படித் தான் இருந்தது. திடீர்னு நல்லா இருந்தது எப்படி எவ்ளோ மோசமா போச்சுன்னு ஒரு பக்கம் எனக்கு ஒரே விந்தை.. அந்த கவலையோடவே காலேஜ் போயிட்டு திரும்பி வந்தேன் சாயந்தரம். இரவு வந்தால், தூரத்திலேயே என்னை பார்த்துவிட்டு, துள்ளிக்குதித்தி ஓடி வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம். என் அம்மாவிடம் கேட்டால், என்னமோ தெரிலைடா.. சாயந்தரம் ஆறு மணி போல அதுவா எந்திருச்சு ஓடியாடி விளையாட ஆரம்பிச்சது.ன்னு சொன்னாங்க.. இதை அவர்கள் சொல்ல, என் தூரத்து ஐயாவின், ஊரில் இருந்து என் ஐயா இறந்து விட்டதாக செய்தி வந்தது. எப்படி இறந்தார் என்று விசாரித்த போது, எங்கள் வீட்டு நாய் எப்போது உடம்பு சரியில்லாமல் போனதோ, அதே நேரத்தில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. எங்கள் வீட்டு நாயிற்கு சரியான நேரத்தில் அதே நேரத்தில் அவர் இறந்துவிட்டிறுக்கிறார். நாங்கள் வீடு கட்டிய ஒரு வருட காலங்கள் எங்கள் வீட்டில் தான் இருந்தார் அவர். இதை கேட்டுகொண்டிருந்த பலர், இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று சொன்னார்கள். ஜானி இறந்திருந்தால் என் ஐயா பிழைத்திருப்பார் எனவும், என் ஐயா இறந்துவிட்டதால் ஜானி பிழைத்துகொண்டதாகவும் அவர்கள் கூறினார்கள். எனக்கும் இது எப்படி சாத்தியமாகும் என்று ஒரே ஆச்சர்யம்.

வீட்டுப் பிராணிகள் எந்த அளவிற்கு அதன் எஜமானர்களோடு ஒன்றாக, உயிராக கலந்துவிடுகின்றன என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் ஆயிரம் உண்டு உலகில்

Sunday, April 01, 2007

திரைப்பட வினாடி-வினா 1 - விடைகள்

முதல் தடவையா, வினாடி-வினா போட்டி நடத்தினதுக்கு, ஆதரவு கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு.. இம்புட்டு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இனிமேல் வாரவாரம் மக்களோட சினிமா ஞானத்தோட விளையாண்டு பாத்துடவேண்டியது தான்..சரி.. இப்போ அந்த கேள்விக்கான பதில்கள்..

1.சமீபத்தில், மாயக்கண்ணாடி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இளையராஜாவை பற்றி பாலுமகேந்திரா பேசிய போது, சொன்ன விஷயத்தை வைத்து தான் இந்த கேள்வியே. இளையராஜாவும் பாலு மகேந்திராவும் இணைந்த முதல் படம், அது இளையராஜாவின் நூறாவது படம், அது தான் மூடுபனி.. பாலுமகேந்திரா இயக்கிய கடைசிப் படம், தனுஷ்-ப்ரியாமணி நடித்த அது ஒரு கனாக்காலம். இது தான் முதல் கேள்விக்கான பதில்.

இந்த கேள்விக்கு பதில் சொன்னவர்களில், மணிகண்டன் பாரதிராஜா-கண்களால் கைது செய் எனவும், ஹரிஷ் மூடுபனியா என்ற கேள்வியோடும் நின்று விட்டனர். ஹரிஷ் அதே சந்தேகத்தோடு பாலுவின் கடைசி படத்தையும் சொல்லியிருக்கலாம். வினையூக்கி, பாக்யராஜ்-பாரிஜாதம் எனவும், DD மேடம் குரு எனவும் பதில் சொல்லி இருக்காங்க. சுப.செந்தில் மூடுபனி என்பது சரியாக சொல்லிவிட்டு அதோட டைரக்டர் ப்ரதாப் போத்தன் என்று முடிவு செய்து தவறான பதிலை தந்துள்ளார். நாகை சிவா பொய் என்றும், கோபிநாத் குரு-மணிரத்னம் எனவும் தவறானதொரு பதிலை தந்துள்ளார்கள்..

2. இரண்டாவது கேள்விக்கான பதில் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கு. ஒரு காலத்தில் டிடி-1-இல் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது கே.ஜே.ஜேசுதாஸின் பேட்டி ஒன்று. அப்போ தான் எனக்கும் இந்த விஷயம் தெரியும். சரியான விடை பொம்மை என்னும் படம்.

பதில் அளித்தவர்களில், வினையூக்கி பொம்மலாட்டம் என்றும், ராகவன் பொம்மையா காதலிக்க நேரமில்லையா என்றும் தடுமாறியும் இருக்கின்றனர்.

3. இது மிகவும் கடினமான கேள்வி என்று பதில் சொன்னவர்களை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது. இதற்கு சரியான விடை ரஜினி, படம்-உழைப்பாளி. உழைப்பாளி படத்தின் எல்லா பாடலுக்கும் மெட்டுக்கள் இட்டவர் இளையராஜா தான். ஆனால் அப்போது அவர் முதல் முறையாக மேஸ்ட்ரோ இசையமைக்க சென்றுவிட்டதால் இந்த படத்தின் பிண்ணனி இசையை மட்டும் செய்தவர் கார்த்திக்ராஜா.

பெரும்பாலானவர்கள் பாண்டியன்-ரஜினி (CVற், வினையூக்கி, அமர், நாகை சிவா, கோபிநாத்) எனவும், சிலபேர் அலெக்க்ஷாண்டர் (ஜோ, DD, சுப.செந்தில்,ப்ரியா) எனவும் பதில் தந்துள்ளார்கள். ராகவன் பொன்னுமணி கார்த்திக்கா என்று சந்தேகத்தோடு பதில் தந்துள்ளார். மணிகண்டனும் ஹரிஷும் யுவன் ஷங்கர் ராஜவின் முதல் படமான அரவிந்தன் என்றும், அனலைஸ்ட் அஜித்-உல்லாசம் என்றும், பதில் தந்துள்ளார். சிலபேர் (கானா பிரபா)படத்தின் பெயரை சொல்லாமல் ரஜினி என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் பதில் சரியாக இருந்தாலும், படத்தின் பெயரையும் சேர்த்து சொன்னவர்களுக்கே வெற்றிபெறுவதில் முன்னுரிமை.. கார்த்திக்பிரபு மாதவனோ கார்த்திக்கோ என்று புதியதொரு பதிலை தந்துள்ளார். பாலராஜன்கீதாவும் டும் டும் டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த கேள்விக்கு, மாணிக்கம் என்று நினைத்து ராஜ்கிரன் பெயர் சொல்லியிருக்கிறார் மாப்ள பரணி.

பாண்டியன் கார்த்திக்ராஜா படலுக்கான இசையமைத்த முதல் படம். அந்த படத்திற்கு இளையராஜா தான் BGM செய்தார்.

4. இதற்கு, (படம்-நாயகன்-கடைசிப்படம்) மெல்ல திறந்தது கதவு-மோகன்-அன்புள்ளா காதலுக்கு, செந்தமிழ்ப் பாட்டு-பிரபு-குஸ்தி, செந்தமிழ்ச் செல்வன்-பிரசாந்த்-தகப்பன் சாமி, விஷ்வதுளசி-மம்மூட்டி-விஷ்வதுளசி, இதில் எந்த பதிலை சொல்லியிருந்தாலும் பாஸ் தான். இது கேள்வியை சரியாக நான் கேட்கமறந்ததால், உங்களுக்கு இந்த நாலு ஆப்சன்கள்.

ஜோவும் அனலிஸ்டும், மோகன் நடித்த உருவம் படத்தின் பெயரை சொல்லி இருக்கின்றார்கள். கானா பிரபு, படத்தின் பெயரை கணித்துவிட்டு கடைசி பெயரை சொல்ல மறந்துவிட்டார்.

5. இந்த கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல், சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பும் முன், விமான நிலயத்தில் வைத்து இந்த பாடலை கவியரசு எழுதியதாக ஒரு குறிப்பு இருக்கிறது.

ஏப்ரல் மாத பிளாக் தலைப்பு கவிதை

அவள் வரும் வழியெல்லாம் மலர் தூவி வைக்கிறேன்.. என்னை பார்த்து அவ்வழி மரங்கள் இலையடித்து சிரிக்கின்றன, பேதையென்று.. பூங்கா வலம் வர யாராவது பூக்களால் பாதையமைப்பார்களா என்று..

மரங்களுக்கென்ன தெரியும், அவள் தான் என்னை பேதையாக்கி இப்படி பாதையமைக்கச் சொன்னதென்று..