இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்.. வெளியில் சற்று முன் பெய்த மழை இன்னும் உள்ளே அந்த பாதிப்பை தந்து கொண்டுதான் இருந்தது. காலையில் புது வருஷத்தில் வாஷிங்டன் நகரமே அந்த மழையினால் கழுவப்பட்டிருந்தது.. வானம், ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை.. இந்த மாதிரி பருவ நேரத்தை அவ்வளவு எளிதாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.. ஒவ்வொரு துளியாக மரங்கள் பூமிக்கு அனுப்பும் அந்த பொழுது வைரமுத்து பொன்மாலை பொழுது என்று எழுதிய அந்த பாட்டின் தருணத்தை விட ரசிக்க வைப்பது. ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு, ஊர் சுத்த கிளம்ப ஆரம்பித்த சமயமே வானம் மழை சாரல் மலர்களோடு எங்களை வறவேற்க தயாராய் இருந்தது. முதலில் ஒயிட் ஹவுஸை பார்க்க வேண்டும் என்று கூகிளில் எடுத்த மேப்பை கையில் வைத்துகொண்டு ஆரம்பித்தோம்..
(பிரதிபலிப்பு குளத்தில் தெரியும் வாஷிங்டன் நினைவுச் சின்னம்)
நீண்ட தூர நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவதை விட இது மாதிரி நகரச் சாலைகளில் ஓட்டுவது சற்று சிரமம். ஒரு இடத்தில் திரும்ப மறந்தாலும் அந்த வீதியின் பெயரை கவனிக்காமல் விட்டாலும், மறுபடியும் அந்த இடத்துக்கு வருவதற்கு, நமது கார் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும். வழக்கம் போல எப்படியோ எங்கேயோ வழியை தொலைத்துவிட்டோம். ஆனால் ஹோட்டலில் எடுத்த சிட்டி மேப் கைகொடுத்தது. எப்போதும் இது மாதிரி புதிய நகரத்துக்கு சென்றால் அங்கு ஓட்டலின் வரவேற்பறையில் இருக்கும் எல்லாவிதமாத கையேடுகளையும் எடுத்துக்கொள்ளுதல் இந்த மாதிரி நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.. அதை வைத்து ஓயிட் ஹவுஸ் சென்று சேர்ந்தோம். அங்கே புஷ் நம்மை வறவேற்க தயாராய் காலை மழை போலவே காத்து கிடந்தார் என்று சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை. என்ன என்ன இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அதெல்லாம் நடக்கும் தூரத்திலே இருந்ததால் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கிளம்பினோம்.
(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தெரியும் லிங்கன் நினைவு மண்டபம்)
முதலில் வாஷிங்டன் நினைவுச் சின்னம். தனது முதல் ஜனாதிபதிக்காக அமெரிக்கா எழுப்பிய அழகான, அமெரிக்காவின் பழைய கட்டிட கலைக்கு சான்றாக விண்ணை துளைக்குமாறு வானளாவ நிற்கிறது, இந்த வெள்ளைவண்ண நினைவுச் சின்னம். உள்ளே செல்லும் முன் எல்லாவகையிலான பாதுகாப்பு சோதனைகளுக்கும் நம்மை உட்படுத்துகின்றனர். இது கிட்ட தட்ட 160 மீட்டர் உயரம் கொண்டது. உள்ளே உச்சிவரை செல்லுமாறு லிப்ட் வசதியும் உண்டு. இதன் உச்சியில் இருந்து வாஷிங்டன் நகரத்தின் எல்லா பழம் பெரும் சின்னங்களையும் காணலாம். இந்த உயரிய நினைவு சின்னத்தை வெறும் கற்களை அடுக்கியே கட்டி உள்ளனர். முழுப் பூச்செல்லாம் கிடையாது. ஒரு தொழிற்சாலை புகைகூண்டு வடிவத்தை ஒத்து இது இருக்கிறது. உள்ளே, உச்சியிலே பார்ப்பதற்காக நான்கு திசைகளிலும் பாதுகாப்பான கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன. அதுவும் நாங்கள் போயிருந்த போது அப்போதிருந்த வானிலை காரணம நன்றாக எதனையும் அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. ஆனால் கண்களை உரசியவாறு சென்றது மேக மூட்டங்கள். இந்த உயர்ந்த சின்னத்தின் பக்கவாட்டில் செயற்கை முறையிலும் வெண்புகைகளை உருவாக்குகின்றனர். உள்ளே லிப்ட் மூலம் இறங்கும் போதும் பக்கவாட்டு சுவர்களில் சில நினைவு சின்னங்களையும் சில கற் ஓவியங்களையும் பதித்திருப்பதை நாம் காணலாம். அதுவும் 150 வருஷதுக்கு முன்னலேயே இப்படி ஒரு அற்புத, வாயை பிளந்து வியக்க வைக்கிற சின்னத்தை உருவாக்கிய, பெயர் மறந்து போன அந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..
(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில்.. பின்னே பசிபிக் கடல் தூண்.. அதனை சுற்றிய மாநிலத் தூண்கள்)
இந்த நினைவு சின்னத்தின் வடக்கு பக்கம் ஓயிட் ஹவுஸும், கிழக்கு பக்கம் அமெரிக்க பாராளுமன்றமும், தெற்கு பக்கம் ஜெப்பர்சன் நினைவு கட்டிடமும், மேற்கு பக்கம் லிங்கன் நினைவு மண்டபமும் இருக்கிறது. இந்த நான்கு திசைகளையும் உயரத்தில் இருந்து, வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து நீங்கள் பார்க்கலாம். நாங்கள் வழக்கம் போல இந்த சின்னத்தை சுற்றி ஒரு நடை வந்து, எங்களது போட்டோ செஷன்களை முடித்தோம். ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாம் சென்று வந்ததற்கு அடையாளங்கள் இந்த புகைபடங்கள் தானே. அங்கிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நடந்தால் அழகிய நீரூறுக்களுடன் இரண்டாம் உலகப் போருக்கான நினைவிடம் இருக்கிறது. இது வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலும், லிங்கன் நினைவு மண்டபத்திற்கு இருநூறு அடி முன்னாலும் உள்ளது. இந்த இடத்தை சுற்றி அமெரிக்காவின் எல்லா மாநிலத்துக்கும் தனித் தனியான தூண்கள் ஒரு அரை வட்ட வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது. எல்லா தூண்களிலும் அந்த மாநீலத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தூண்களையும் முறுக்கேறிய மாதிரி கற்கயிறுகளாலேயே இணைத்தும் உள்ளனர். இந்த அரை வட்டத்தின் கிழக்கு முடிவில் பசிபிக் என ஒரு பெரிய தூணும் கிழக்கில் அட்லாண்டிக் என்னும் தூணும் கட்டப்பட்டு ஒரு முழுமையான அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நீரூறிலும் நீர் கீழிலிருந்து மேல் சென்று மறுபடியும் கீழ் விழுவதை காணுகையில், இரண்டாம் உலகப் போரில் போரிட்ட ஒவ்வொரு போர் வீரனின் வேகத்தையும், அவனது துடிப்பையும் அவனது எழுச்சியையும் பறைசாற்றுவதாகவே உள்ளது.
(அந்த அழகான நடைபாதையில்)
இரண்டாம் உலகப்போரின் நினைவிடத்தை கடந்து, லிங்கன் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஒரு நீளமான பாதை ஒன்று வளைந்து வளர்ந்த மரங்களால் சூழப்பட்டு, இரு பக்கமும் உயர வெள்ளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த மரங்கள் இலைகளை பூமிக்கு அனுப்பிவிட்டு குளிர்காலத்துக்காக மொட்டை அடித்துவிட்டு வேண்டுதலுடன் நிற்பது போல் இருந்தாலும், நாங்கள் சென்றிருந்த அந்த நேரத்தில் அழகாய் தெரிந்தது. அந்த நடைபாதையில் நடந்து போகையில் அப்ப கைபிடித்து குழந்தை வயதில் நடந்த அந்த காலத்தை நினைவூட்டியது எனக்கு.
(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தண்ணீரில் லிங்கன் மண்டபம் மிதப்பது போல் எடுத்த ஒரு புகைப்படம்)
இந்த நினைவிடத்தில் இருந்து, வளர்ந்து விரிந்த மரங்களிடையே அமைந்த நடைபாதையில் நடந்தால் லிங்கன் நினைவிடத்தை அடையலாம். இந்த இரண்டு நினைவிடத்தையும் இணைப்பது ஒரு பெரிய செவ்வகக் குளம். லிங்கன் நினைவிடம், இந்த குளம், வாஷிங்டன் நினைவுச் சின்னம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பிரதிபலிப்பு குளம் அதாவது ரிப்லெக்டிங் பூல் என்று பெயரிட்டுள்ளார்கள். போசாக்கான யானையின் கால்களை விட கிட்டதட்ட பதினைந்து மடந்கு பெரிதான பத்திற்கும் மேற்பட்ட தூண்களால் கட்டபட்டுள்ள இந்த லிங்கன் நினைவு மண்டபத்திலிருந்து பார்த்தால் வாஷிங்டன் நினைவுச் சின்னம் இந்த குளத்தில் படுத்துகிடப்பது போல் பிரதிபலிக்கும். லிங்கன் நினைவு மண்டபத்தில் அவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலையும் அவரது மற்றும் அவரை பற்றிய வாசகங்களும் உட்கட்டிட சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடமும் அமெரிக்க கட்டிட கலையை இறுமாப்பு கொண்ட கர்வம் கொண்ட ஒரு துறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.
படங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டுங்கள்
(தொடரும்)