இன்று காலை அழகு அழகுன்னு CVR ஒரு பதிவை போட்டிருந்தார். அழகாய் தானே எழுதியிருக்கிறார் என்று பார்த்தால், தல, நீங்களும் எழுதுங்க நம்மளையும் எழுதச் சொன்னார். மறுபடியும் நம்ம நண்பர் அமிழ்தும் இந்த தொடரை எழுத சொல்லியிருந்தார். ஆறு தான் எழுதப் போறோம் ரெண்டு பேருக்கும் பிரிச்சு தந்தா, அதெல்லாம் முடியாது, ஞானபழத்தை முழுதா சாப்பிட்டா தான் நல்லதுன்னு சொல்லிடுவாங்களோன்னு தெரியல. இருந்தாலும் நண்பர்கள் ஆளுக்கு மூன்றா பிரிச்சுக்குவாங்கங்கிற நம்பிக்கைல இதோ நம்ம வண்டி தயார்...
இதோ நமக்கு பிடிச்ச அழகுகள் ஆறு..
முருகன்
அழகெல்லாம் முருகனே-ல ஆரம்பிச்சு அழகென்ற சொல்லுக்கு முருகா வரை அவன் அழகு பற்றி சொல்லாத பாடல்கள் கிடையாது. காலெண்டரோ, ஓவியமோ, எதுவாய் இருந்தாலும் முருகனோட முகத்துல தெய்வீக அழகை தவிர, சுண்டியிழுக்கும் ஒரு இளமை அழகும் இருக்கும். சின்ன வயதில் முருகனோட படங்கள் பார்த்து, இப்படி வரையும் ஓவியர்கள் யாரின் முகத்தை முன்மாதிரியா எடுத்துக்குவாங்க.. இல்லை வரையும் போதே அவர்களின் முன்னே முருகன் வருவானோ என்று எண்ணி எண்ணி வியக்கும் அப்படியொரு அழகு முருகனோட முகத்துல இருக்கும். பழநி மலை போனால், ராஜா வேஷத்துல, ஆனந்தமான ஒரு புன்னகையோட அவரை காண கண்கோடி வேண்டும். அதுவும், வடபழநி கோவிலில், சில அர்ச்சனை பொழுதுகளில், திருநீறு, திணை, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால் என்று பல அபிஷேகங்களில் முருகனை காண என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அழகு அப்படின்னு சொன்னாலே எனக்கும் சித்திரம் முதல் சிலை வரை முதல்ல மனசுல வந்து நிற்பது முருகன் தான். மொத்த அழகு ஆறையும் முருகன்னே சொல்லலாம். ஆனால், மேல CVRக்கும் அமிழ்துக்கும் வாக்கு கொடுத்து விட்டதால் முருகன் முதல் இடத்தில் மட்டும்.
தமிழ்
ஒவ்வொரு எழுத்தும் ஒரு அழகு. அதிலிலிருந்து எழும் ஓசைகளும் அழகு. தமிழை கரைத்து குடித்தவர்கள், அதோடு பக்கத்தில் அமர்ந்து வாழ்ந்தவர்கள், அதனை அமிழ்தென்றும் அழகென்றும் சொல்லிவிட்ட பிறகு, நான் மட்டும் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது.
நான் பிறந்தவுடன் வடமாநிலத்தில் இருந்தேன், கிட்டதட்ட எனது நான்கு வயது வரை. அப்போது அங்கு தமிழர் பிரச்சனை எழுந்து, தமிழரெல்லாம் பயந்து தமிழகம் வந்தடைந்த போது, போதும் இந்த வாழ்க்கை என்று நாங்களும் வந்துவிட்டோம். அப்போது கிளி மாதிரி தத்துபித்துன்னு நான் தமிழ் பேசுவேனாம். ஆனால் ஹிந்தி வெளுத்துகட்டுவேனாம். என் ஊருக்கு வந்த பிறகு யார் கேள்வி கேட்டாலும் நான் ஹிந்தியில் தான் பதில் தருவேனாம். இன்னமும் ஊர் பெருசுகள் என்னை கண்டால் சொல்லும் விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்போது ஹிந்தியா அப்படின்னா என்று கேட்கும் நிலையில் தான் நான் என்றாலும், அப்போது அப்படி ஹிந்தி பேசியதில் பல சமயங்களில் பேசும் போது, 'ழ'வை ல என்று உச்சரித்து விடுவதுண்டு. ஆனால் எழுதும் போது அந்த மாதிரி பிழைகள் இருக்கவே இருக்காது. இந்த ஒரு விஷயதிற்காக எத்தனையோ முறை நான் வருந்தியதுண்டு என்றால், தமிழ் மேலும், அதன் ஏகாந்த அழகின் மீதும் நமக்கிருக்கும் பற்று தெரிந்திருக்குமே. தமிழ் இங்கே இரண்டாவது அழகு..
நிலா
ஆடை கட்டி வந்த நிலவு என்று பட்டுகோட்டை முதல், வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்று வைரமுத்து வரை நிலவை, அதன் அழகை, அதன் பரந்த வெளிச்ச வெளிகளை பாடாத கவிஞர்கள் உண்டா.. நிலா, என்றுமே அழகு. அது தேய்வதும் அழகு.. வளர்வதும் அழகு.. சின்ன வயசில் நிலாவை காட்டி நமக்கு நெய்ச்சோறு போட்டதெல்லாம் மறக்கமுடியாதது. (அப்பவே நிலாவ சைட் அடிக்காம இந்த ஷ்யாமுக்கும், அம்பிக்கும் சோறே உள்ள இறங்காதாம்.) அந்த சின்ன வயதில் மனதில் ஒரு இளவரசியாக பதிந்துவிட்ட நிலா, இன்று அழகான ஒரு தேவதையாக மனசுக்குள் உருவெடுத்து நிற்கிறது. பரந்து விரிந்து கிடக்கின்ற இருண்ட வானத்தில் ஒரு வெளிச்ச பொட்டு, இந்த நிலா. உலக காதலர்களின் உன்னத நண்பன் இந்த நிலா. நமக்கும் எங்கே போனாலும் கூடவே வர்ற காதலி. இவள் இருப்பது மூன்றாம் இடத்தில்.
புன்னகை
கொஞ்சம் சிரிங்க என்று புகைப்பட நிபுணர் முதல், எப்படி சிரிச்ச முகத்தோட மகாலெட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு என்று பெண் பார்க்கும் இடத்தில் பெரியவர்களும், டேய், எப்போதுமே உன் உதட்டுல லிப்ஸ்டிக் மாதிரி இருக்கிற அந்த ஸ்மைல் தாண்டா என்னை கவுத்தினது என்று பூங்காவில் காதலனிடம் கதைக்கும் காதலியும், பொக்கை வாய்னாலும் என் தாத்தா சிரிச்சா அது அழகு என்று சொல்லும் பேரன்களும், அமுல் பேபி மாதிரி அழகா சிரிக்கிறான் பாரு குழந்தை என்று பக்கத்து வீட்டு குழந்தைகளை கொஞ்சுவது வரை புன்னகையில் அழகு, வர்ணமடித்த வானம் மாதிரி முகத்துக்கு ஒரு அழகு. இந்த சிரிப்பு முகத்துக்கு மட்டும் இல்ல, உள்ள இருக்க மனசையும் படம்பிடித்து காட்டும் அழகு.. அதனால நமக்கு சிரித்த முகம் ரொம்ப பிடிச்ச விஷயம்.
மழை
ஒரு மழை பெய்தால் போதும், அது மனிதர் முதல் புல், பூங்கா வரை எல்லோரையும் மகிழ்விக்கும். இந்த பூமியே குளித்தது போல அப்படி ஒரு அழகு வழிந்தோடும் இந்த மழையினால். நமக்கு மழை ரொம்ப பிடித்த விஷயம். மனசு நனையிற வரை மழையில் ஆடுவேன். நம்புங்கள், பயந்து ஒளிந்த போதெல்லாம் பிடிக்கும் வியாதிகள் மழையோடு கைகோர்த்து ஆடும் போது வருவதே இல்லை. நான் மழையை பொருத்தவரை, ஆண்பால் ஷ்ரேயா. கண்ணை மூடிக்கொண்டு இதை கற்பனை செய்து பாருங்கள். மழை முடிந்த நேரத்தில், மரங்கள் சூழ்ந்த ஒரு சாலையில், ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல, சேர்த்த துளிகளை தரைக்கு இலைகள் அனுப்பும் அந்த ஆனந்த கணத்திலே என்னை மறந்து நடப்பேன். ஒரு மரத்தை போல ஒளிந்து கொள்ளாமல் மழையில் குளித்து, காற்றில் தலைவாரிக் கொள்வேன். மழை, என் ஐந்தாவது அழகு.
நல்ல மனிதர்கள்
வானில் கருமேகம் சூழ்ந்தது. இதை கண்டாலே மழை பெய்யும் சந்தோசத்தில், தரை புற்கள் கூட தலையாட்டி ஆடும். மயிலுக்கு சொல்லவும் வேண்டுமோ. தன் அழகு தோகைவிரித்து நடனமாடியது. இதை கண்ட பேகன் என்னும் மன்னன், அடடா, குளிரில் வாடுகிறதே இந்த பொன்மயிலென்றெண்ணி போர்வை போர்த்துகிறான். பார்ப்பதற்கு அறிவற்ற செயல் என்று தோன்றினாலும், அதுவும் ஒரு உன்னத செயல் என்கிறது நாலடியார். இதைப் போல பசியென்று வந்த புறாவிற்கு தன் தொடை அரிந்து தந்தான் ஒரு மன்னன். இப்படி, வாய்விட்டு சொல்லமுடியாத உயிருக்கே பதறியடித்து உதவும் இவர்கள் மனிதர்களுக்கு எப்படி உதவியிருப்பர்கள். இந்த அளவு இல்லையெனினும், நம்மால் முடிந்த அளவு முடியாதோர்க்கு உதவி செய்யலாம். முடியாதோர் என்றதும் எல்லோரும் பிச்சை போடுவது ஒன்று தான் என்று நினைகிறார்கள். ஆனால், அதுவல்ல.. வெயில் காலங்களில் பழநிக்கு பாதயாத்திரை நடந்து போவோருக்கு மோர், தண்ணீர் பந்தல் அமைத்து அவர்தம் தாகம் தணித்தல், கல்வி கற்க வழியிருந்தும் நிதி இல்லாததால் பள்ளி போக முடியாதோர்..இப்படி எத்தனையோ பேர் வாழ நெஞ்சில் உரம் இருந்தும் திசைகாட்ட ஆள் இல்லாததால் பாய்மரம் போலத் தவிக்கின்றனர். நல்ல மனிதர்கள் சமுதாயதிற்கு அழகு.
இது போல படித்து முடித்துவிட்டு, புராஜெக்ட் அல்லது வேலை இருக்கும் இடங்கள் தெரியாமல் எத்தனையோ மனிதர்கள் பரிதவிக்கின்றனர். அப்படி வழியிழந்தோர்க்கு உதவ அம்பி-யும், DD மேடமும் புதியதாய் ஒரு வழிமுறையோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள். சமுதாயம் புன்னகை பூக்க, சோர்ந்த நெஞ்சங்களில் மகிழ்ச்சி மழை பொழிய, இந்த தமிழின் உதவியோடு, இருட்டை ஒழிக்க வந்திருக்கும் மனித நிலாக்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றி பேற வாழ்த்துக்கள்.
என்னின் ஆறை எழுதி முடித்தாகிவிட்டது. அப்போ நாமும் மற்றவர் அழகை தெரிந்து கொள்ளவேண்டாமா. இதோ நான் டேக் செய்யும் நண்பர்கள்
1. அம்பி
2. DD மேடம்
3. ACE
4. ப்ரியமான ப்ரியா
5. பில்லு பரணி
6. G3
(விதிகளை மீறி ஆறு பேரை கூப்பிட்டாச்சு.. இனிமே இதுல மூணு பேரை குறைக்க முடியாது.. இந்த சங்கிலியை ஆரம்பித்த கொத்ஸ் மன்னிப்பாராக)
உங்க அழகை தெரிந்துகொள்ள நான் தயார். எழுத தயாராகுங்கள்.