Friday, October 26, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 20 [சூடான சினிமா பகுதி]

ஹலோ கார்த்தியா.. நான் ஏஞ்சல் பேசுறேன்..

(ஏஞ்சலா? குரலே தேன்ல குழச்ச மாதிரி இருக்கே.. நம்ம வாழ்கையிலும் வசந்தமா..வெயிட் வெயிட்.. இது எங்கயோ கேட்ட குரலா இருக்கே..ஆஹா.. நம்ம சிட்டுக்குருவி லவ்வர் வாய்ஸ்ல.. அடப்பாவி.. )

எப்படி இருக்க ஏஞ்சல்.. நம்ம சி.குவுக்கு என்ன ஆச்சு.. நீ பேசுற..

கார்த்தி..மொதல்ல சி.குன்னு கூப்பிடறதா நிறுத்துறியா? ஏதோ லக்கிமேன்ல, எமன் வேஷத்துல வர்ற கவுண்டமணி சித்ரகுபதனா வர்ற செந்தில் ஷார்ட்டா சி.குன்னு கூப்பிடுற மாதிரி இருக்கு..

இல்ல ஏஞ்சல்.. பாசமா சுருக்கமா கூப்பிட்டேன்..

அதுக்குத் தான், ப்ரின்ஸ்ன்னு பேர் வச்சிருக்கோம்ல.. அதை வச்சு கூப்டா போதும்..

சொல்லவே இல்ல..

நீ கேக்கவே இல்லியேப்பா..

உன் பிளாக் நண்பர்கள்கிட்ட மட்டும் கேட்ட..எங்க கிட்ட கேட்டியா.. அது தான் நாங்க எங்களுக்கே புது பேர் வச்சிருக்கோம்.. சரி.. அதைவிடு.. இன்னைக்கு சாயந்தரம் உங்க வீட்டுக்கு கும்மி அடிக்க வர்றோம்.. நம்ம ஸ்பெஷல் தெரியும்ல ரெடியா இருக்கணும் என்ன என்று சொல்லிட்டு, என் பதிலுக்கு கூட காத்திருக்காம டொக்குன்னு போனை வச்சது ஏஞ்சல்..

எல்லாம் நம்ம நேரந்தான்னு நினச்சுகிட்டேன்..

சாயங்கால வேளை..

நம்ம சிட்டுக்குருவிகள் ரெண்டு பேருமே வெஜ் ஆளுக.. அதனால இந்த தடவை நம்ம ஊரு பாசி பயறை ஊற வச்சு, குக்கர்ல ஒரு விசில் வச்சு, தேன் ஊத்தி வச்சிருக்கேன்.. இது ஏஞ்சலுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு நம்ம சிட்டுக்குருவி சொல்லியிருக்கு..பேருக்கேத்த மாதிரி தான் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க... ஏஞ்சல், வின்ங்க்-லெஸ் (ஸ்லீவ்-லெஸ்) ரெட் ஜாக்கெட் போட்டுகிட்டு, பாரதிராஜா பட தேவதை மாதிரியும், நம்மாளு கேப், கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுகிட்டு வந்தாங்க.. அப்படியே ஜோதிகா-சூர்யா மாதிரி இருந்தாங்க.. ஆனா அவங்க கிட்ட சொல்லல.. ரொம்ப மேல ஏறிக்குவாங்க ரெண்டு பேரும் (பொறாமைபடாதடா கார்த்தி)

இன்னைக்கு என் டார்லிங் தான் எல்லா சினிநியுஸும் சொல்லப்போறா.. பயங்கர பிரிபரேஷன்ல வந்திருக்கா.. (கல்யாணம் ஆன பிறகு மனுஷங்களை மாதிரி நீயும் பெண்டாட்டி முன்னால பேசுறத நிறுத்திட்டியேப்பா குருவி)

தொண்டையை கனச்சுகிட்டு ஏஞ்சல் மேட்டரை சொல்ல ஆரம்பிச்சது..

ரொம்ப ஆவலா எதிர்பார்த்த ஷங்கர்-ஷாரூக் காம்பினேஷனோட ரோபட் சொத்துன்னு ஆயிடுச்சு.. ஷாரூக் அந்த படத்திலிருந்து விலகிட்டதா சொல்லிட்டார்.. இனி ஷங்கர் அடுத்த நடிகர் கிட்ட போவாரா இந்த கதையோட இல்ல வேற கதை ரெடி பண்ண போறாரான்னு தெரில..

இதை விட பெரிய நியூஸ், நம்ம ஷ்ரேயா (என்னை மாதிரி கியூட்டா இருக்கும்ல அந்த பொண்ணுன்னு ஏஞ்சல் சொல்ல, நம்ம சிட்டு குருவி அதை கொஞ்ச..கட் கட் கட்.. நம்ம ஸ்டொமக் பேர்னிங் சாமி) ஹாலிவுட் படத்துல நடிக்க போறாங்களாம்.. அதுவும் ஹிரோயினா.. அவங்க காட்ல மழை தான்.. தமிழ்நாட்ல சூப்பர் ஸ்டார் முதல் வைகை புயல் வரை ஆட்டம் போட்டாச்சு.. இப்போ அமெரிக்க பக்கம்..ம்ம்

சிம்பு தன்னோட கெட்டவன் படத்தை இப்போதைக்கு தள்ளி வச்சுட்டாராம்.. அடுத்து சிலம்பாட்டம் படத்துல நடிக்க போறாராம்.. அனேகமா வல்லவன் படத்துக்கு பிறகு அவருக்கு எந்த படமும் வரலைனு நினைக்கிறேன்.. காள எப்போ தியேட்டரை முட்ட வருதோ தெரியல..

ஒரு வழியா தசாவதாரம் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது.. இப்போ கடைசி கட்ட தொழில்நுட்ப வேலைகள் நடக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதனால, கமல் தன்னோட அடுத்த படத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.. படத்தோட பேர் மர்மயோகி.. பழைய எம்.ஜி.ஆர் படத் தலைப்பு தான்.. இந்த வரலாற்று படத்தை கமலே இயக்குகிறார், ரிலையன்ஸ் நிறுவனதிற்காக..

ம்ம்..கார்த்தி..உங்க தலயோட பில்லா படம் நவம்பர் 30க்கு தான் வருதாம்..பாட்டெல்லாம் நவம்பர் 15 வெளியிட பிளான் பண்ணியிருக்காங்க.. இன்னைக்கு எல்லா திரைப்பட தளங்கள்லயும் பில்லா படத்தோட ஸ்டைலானா ஸ்டில்கள் தான்.. படமெல்லாம் அசத்தல வந்திருக்காம்.. சந்தோசமா (நான் சிரித்தேன்)

இன்று வெளியான சில பில்லா ஸ்டில்கள்






இன்னைக்கு தான உன் அசினோட பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டியா இல்லியா.. சொல்லாம இருப்பியா.. உன் கனவுல அசின் வந்து முதமெல்லாம் வாங்கி கிட்டதா என் பிரின்ஸ் கிட்ட சொன்னியா.. என் பிரின்ஸ் சரியான ஏமாளி.. நீ சொன்னதை நம்பிகிட்டு ஊரெல்லாம் சொல்லுது.. (உன்னை.. ஏஞ்சலை அடிக்க கை ஓங்கினேன்)

அசின் பிறந்தநாளிற்காக...





பேசிக்கொண்டிருந்த போதே சிட்டுக்குருவி மெதுவா ஏஞ்சலை கிள்ளியது.. என்னடான்னு கேட்டா, அடுத்த அப்பாயிண்ட்மென்ட் அவங்களோட நண்பர் வீட்ல டின்னராம்.. சொல்லிகிட்டே சிறகடிச்சு பறந்து போயின இரண்டும்..ம்ம்.. காதல் பறவைகள்

Wednesday, October 24, 2007

மிலிட்டரி மாமா

இராணுவம் என்றால் மனசுக்குள் ஒரு தேசப்பற்றையும் அவர்களின் தியாக உணர்வையும் வீரத்தையும் என் சின்ன வயசில் என் மனசில் விதைத்தது, என் அப்பாவின் பள்ளி கால நண்பரும், சொந்த முறைகளில் மாமாவுமான சின்னையா மாமா தான். சத்யராஜ் உயரம்.. நல்ல ஆஜாகுபாவான உடம்பு.. ஆனால் மனசு இவருக்கு நிஜமாகவே குழந்தை தான்.. என் மீதும் என் தங்கையின் மீதும் அவ்வளவு பாசமாக இருப்பார்.. தனது பெரிய குடும்பத்தை (மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்) விட்டு எப்படி காஸ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மொத்தமாக இருபது வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். எங்கள் ஊரில் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் எல்லோரும் அவரை பாசமுடனும் மரியாதையுடனும் கேப்டன் சின்னையா என்று தான் அழைப்பார்கள்.

அவர் ஒரு இரண்டு வருட காலங்கள் பெங்களூர் இராணுவ முகாமில் இருந்த போது (அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக்கொந்டிருந்திருக்கலாம்) அரையாண்டு தேர்வு கால விடுமுறைகளில் ஒரு வார காலம் அவருடன் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை படங்களின் மூலமே இராணுவ முகாம்கள் பார்த்து வந்த எனக்கு அந்த பயணம் மிகவும் ஆச்சர்யத்தையும் அவர்கள் மீதான ஒரு மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களூர் குளிரிலும் அவர்கள் அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் பயிற்சி எனக்கும் அவ்வளவு காலையிலே எழுந்து உடல் பயிற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசைய அப்போதே உருவாக்கியது.. அவர்களுக்கு தினமும் ஒவ்வொரு மாநில மொழி திரைப்படங்கள், தனியாக வரிகள் இல்லாத கேண்டீன் (என் மாமா வாயிலாக சில பொருட்கள் வரிகள் இல்லாமல் எங்கள் வீட்டிற்குள் வந்ததும் உண்மை) எப்படி எத்தனையோ சலுகைகள் உண்டு.. உள்ளேயே, இராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்க பள்ளிகளும் இருந்தன. அந்த ஒரு வாரம் எனக்குள் அப்படியோரு மாற்றத்தை தந்தது.. (ஆனால், அந்த வளாகத்தை விட்டு வெளியே இருக்கும் உலகம் இது எதை பற்றியுமே, கார்கில் மாதிரி போர்க்காலங்களைத் தவிர, கண்டுகொள்ளாமல் இருப்பதென்னவோ உண்மை தான்)

நான் சென்னைக்கு வேலைக்கு வரும் சமயத்தில், என் மாமா இராணுவத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று, ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். தினமும் ஊரில் கூட காலையில் எழுந்து ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் ஊரில் இருக்கும் பொழுதுகளில் அவர் கூட சேர்ந்து ஓடியிருக்கிறேன்.. நான் வேலைக்கு சென்ற புதிதில், அவர் பயன்படுத்திய டை எல்லாம் எனக்கு கொடுத்து உதவினார். எப்போது டை கட்டினாலும் அவர் நினைப்பு எனக்கு வராமல் இருந்ததில்லை.. ஊர் கோயிலில் சாமிக்கு திருவிழா எடுக்கும் போது இரண்டு குழுவிற்கு இடையில் பிரச்சனை வந்தபோது இவரும் ஒரு ஆளாக இருந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி தந்தார் இரண்டு வருடமாக. திண்டுக்கலில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தன் மகன்களுடன் நிர்வகித்து வந்தார்..

இங்கே வந்த பிறகு ஒரு முறை அவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.. இரண்டு வாரங்களுக்கு முன்னால், எப்போதும் என் வீட்டிற்கு தொலைபேசினேன்.. அப்போது அவர்கள் சொன்ன செய்தி, ஒரு டன் விறகுகளுக்கு இடையில் சிக்கியதாய் என் இதயம் வலித்தது. குடும்ப பிரச்சனை காரணமாக (இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) திண்டுக்கலிலிருந்து வீட்டிறு தனது இரண்டாவது மகனுடன் வந்த போது, வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த பிரச்சனை நடந்த போது அந்த வழியாக வந்த எங்கள் ஊர் பஸ்ஸிலிருந்தவர்களால் கூட இவர் காப்பாற்ற முடியவில்லை.. இரண்டு மூன்று நாட்களுக்கு நினைப்பெல்லாம் அவராகவே இருந்தது.. என்னடா வாழ்க்கை என்று கூட பல சமயங்களில் என்னை சலிக்க செய்தது.. ஒரு இரணுவ வீரராக அவர் இருந்த காலத்திலே இறந்திருந்தாலோ, இயற்கையாக இறந்திருந்தாலோ இந்த பாதிப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.. கனத்து போயிருந்த இதயத்தை அவர் ஞாபகமாக தந்து விட்டு போன டைகளை தடவி பார்த்து ஆற்றிக்கொண்டேன்..

Monday, October 22, 2007

ஒரு பயணக் குறிப்பும் சில நன்றிகளும் 1

மாதமொருமுறை சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் காலங்களில், சென்னை வந்த புதிதில் பேருந்தில் தான் செல்வேன் (அதன் பிறகு ரயிலில் செல்வது வழக்கமாயிற்று) பெரும்பாலும் அரசு பேருந்துகள் தான். கட்டணங்கள் குறைவு என்பதால் அதை பட்டியலின் முதலில் வைத்திருப்பேன். தனியார் சொகுசு பேருந்துகளை போல, அந்தந்த மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தின் தொலை தூர பேருந்துகள் நன்றாகவே இருக்கும். முக்கியமாக அரசு விரைவு பேருந்துகளை விட இவைகள் பயணிக்க சொகுசாக இருக்கும். பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும். தனியார் பேருந்துகளைப் போலவே அரசு பேருந்துகளிலும் இப்போதெல்லாம் டிவிப் பெட்டிகள் வைத்து படங்கள் ஓட்டுகின்றனர். (தற்போது தனியார் வண்டிகளில் இந்த சௌகரியம் இல்லை என்று நினைக்கிறேன்) இந்த மாதிரி இரவு நேர பேருந்துகளில், பயணிகள் எல்லோரும் தூங்கின பிறகு, எந்த அளவு கண்முழித்து அந்த ஓட்டுநர் கஷ்டப்பட்டு அந்த வண்டியை, அத்தனை பேரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வண்டியை ஓட்டியிருக்க வேண்டும்? (அதற்கு தான் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை இங்கே ஒரு கருத்தாக எடுத்துகொள்ளத் தேவையில்லை என்று நினைகிறேன்) அதுவும் இரண்டு மூன்று மணிக்கெல்லாம் அப்படியொரு தூக்கம் கண்களை தழுவும்.. அடிக்கடி சொக்கி நம்மை விழவைக்கும்.. அதையெல்லாம் பொறுத்துகொண்டு ஓட்டுவது எவ்வளவு சிரமம்? இதையெல்லாம் நான் அந்த வண்டிகளிலே பயணிக்கும் போது கொஞ்சம் கூட நினைத்ததில்லை.. அதுவும் நினைத்த நேரத்தில் இடம் சென்று சேர முடியவில்லை என்றால், எத்தனையோ பேரோடு நானும் அந்த ஓட்டுநரை மனதால் சபித்திருக்கிறேன். (அமெரிக்காவில் ஓடுகின்ற தொலைதூர பேருந்துகள் ஒவ்வொரு ஆறு\எழு மணிநேர பயணத்திற்கும், இரண்டு மணி நேர ஓய்வு எடுப்பது வழக்கம் என்று பயணித்த நண்பர்கள் சொல்லக் கேள்வி)


இந்த சனி ஞாயிறு கிழமைகளில் என் தங்கையை (சித்தி பெண்) பார்க்க விஸ்கான்ஸினில் உள்ள மில்வாக்கி நகரம் சென்றிருந்தேன். கிட்டதட்ட ஏழரை மணி நேர பயணம்.. தனியாளாக கார் ஓட்டி சென்றேன்.. அப்போது தான், என்னை இது வரை சுமந்து சென்ற பேருந்தின் ஓட்டுநர்கள் தெய்வங்களாக கண்முன்னே தெரிந்தார்கள்.. அதுவும் சொகுசான சாலைகள்.. சொன்னபடி கேட்கின்ற புது வண்டிகள் (நான் ஓட்டி சென்றது ஏழு பேர் உட்காரக்கூடிய கிரைஷலர் டவுன் கன்ட்ரி.. மில்வாக்கியில் இருக்கும் தங்கை நண்பர்களோடு சிகாகோ செல்லும் திட்டம் இருந்ததால் பெரிய வண்டியாக எடுத்துக்கொண்டேன்) என்ற சாதகங்கள் இருக்கும் இடத்திலேயே ஏழு மணி நேர பயணம் அலுப்பை கொடுத்தது. நிச்சயமாக, இப்படிப்பட்ட நெடுந்தூர வண்டிகளை இயக்கும் எண்ணற்ற ஓட்டுநர்களுக்கு (குறிப்பாக இந்தியாவில்), இதுவரை நன்றி மனதினுள் கூட சொல்லாமல் இருந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.. அவர்களுக்கு இந்த பதிவின் என் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

இந்த பயணத்தில் என்னுடன், எனக்கு ஆதரவாக என்னுடன் பயணித்தது இசை தான்.. இசையினால் எந்த அளவுக்கு துணையாக, ஆறுதலாக இருக்க முடிகிறது என்பதை கண்கூடாக அனுபவித்து கொண்டேன். எண்பதுகளில் வந்த கொண்டாட்ட பாடல்கள் தனிவகை.. காக்கிச் சட்டை சிங்காரி சரக்கு, சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் மனதிற்கு அவ்வளவு தெம்புகளையும்
உற்சாகத்தையும் தந்தது என்றால் அது மிகையில்லை.. இப்படி குத்தாட்ட பாடல்கள் ஒருவகை என்றால், மனதை மயிலிறகால் வருடும் இளையராஜவின் மெல்லிசை அடுத்த வகை.. ஒரு இசைத்தட்டு முழக்கம் மிகுந்ததாவும், அடுத்தது இப்படி மெல்லிசைகளுமாய் கேட்டவாறே என் பயணம் அமைந்தது..

இப்போது இங்கே இலையுதிர்காலம் என்பதால், மரங்கள் எல்லாம் வண்ணம் மாறி, அருமையாய் தெரிந்தன.. ஒவ்வொரு காட்சிகளும், வண்ண இலைகள், மரம் முழுவதும் இத்தனை பூக்களா என்று வியக்க வைத்து, கண்ணை வாரிச் சென்றது.. விஸ்கான்ஸின், இல்லினாய்ஸ் மாநிலங்களை விட, வடகிழக்கே வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலங்களை இந்த இலையுதிர்காலத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேள்வி.. இந்த முறையும் அங்கெல்லாம் சென்று மகிழ, கொடுத்து வைக்கவில்லை எனக்கு.. நானிருக்கும் ஒஹாயோவில் இப்போது தான் மெல்ல இலைகள் உருமாறி, மாறியவைகள் மரத்தை வண்ணமடித்தது போதும் என்று தரையெல்லாம் வண்ணமடிக்க உதிர்ந்து கொண்டிருக்கின்றன..

இதையெல்லாம் சேமித்து வைக்க என் மூன்றாவது கண்ணை இன்னும் திறக்க வில்லை.. திறந்த பின், சில நிழற்படங்களை (டிஜிட்டல் யுகத்தில் நிழற்படம் என்று சொல்லலாமா) இங்க உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.. பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்களின் கருத்துகள், குடுவையின் கீழ் இருக்கும் தண்ணீரை பருக கற்களை ஒன்றன்பின் ஒன்றாக இட்ட காக்கைகு உதவியதாக இருக்கும்.

எனது பழைய பதிவுகளுக்கும் சென்று, படித்து பின்னூட்டமிட்ட சேதுக்கரசிக்கும் என் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

Friday, October 19, 2007

வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஷ்ரேயா ஆடியது சரியா?

ஷ்ரேயா, சிவாஜி மூலம் தமிழில் முதல் இடத்தில் இருப்பவர்.. அதிக சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோயின்.. இளம் ஹீரோக்களுடன் கதாநாயகியாக (அழகிய தமிழ் மகனில் விஜயுடன், கந்தசாமியில் விக்ரமுடன்) நடித்து வரும் வேளையில் ஒரு மிகப்பெரிய தொகைக்காக இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு ஐயிட்டம் நம்பர் பாடலுக்கு ஆடியிருக்கிறார். தமிழ்நாட்டு ரசிகர்களை பற்றி தெரிந்திருந்தும் (இது போன்ற விஷயங்களை சற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள்) இப்படியொரு பாடலில் நடிப்பதால், அவரின் மற்ற படங்களின் வசூல் குறைய வாய்ப்புள்ளதா? சரி, நமக்கென்ன தலைவலி இதனால்.. அந்த படங்களின் நாயகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தான்.

கீழே சில படங்களை பார்த்து மனம் மகிழுங்கள் இல்லையெனில் பொறாமைப்படுங்கள்...





Wednesday, October 17, 2007

மூன்றாவது கண்

என்னடா திடீர்னு பரமசிவன் மாதிரி பதிவெல்லாம் போடுறியேன்னு நினைக்காதீங்க.. புதுசா ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கியிருக்கேன்.. நான் ஒரு கேமரா வாங்க வேண்டும் என்று நினைத்த பிறகு எதை வாங்கலாம்னு ஒரு குழப்பதுல இருந்தப்ப, இருள் தேசத்தில் டார்ச் அடிச்சு வழி சொன்னவங்க நீங்க.. உங்க ஆலோசனையெல்லாம் கேட்ட பிறகு, கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ வாங்கலாம்னு முடிவு பண்ணினேன்.. கொஞ்ச நாட்களுக்கு முன், நல்லதொரு பேரம் கிடைத்ததால் அதை வாங்கியும் விட்டேன்.. இப்போ எங்க போனாலும் நம்ம தோளுல அது தான் சவாரி செய்யுது.. சுகமான சுமை.. ஏற்கனவே தருமி மாதிரி நாம எடுக்குற புகைப்படங்கள் நல்லாயிருக்குன்னு நம்மளை உசுப்பேத்துற மக்கள் இங்க அநேகம்.. இப்போ இதையும் தோளுல தூக்கி சுமக்க ஆரம்பிச்சதிலிருந்து, நம்ம வீடு பால் காய்ச்சுறோம்.. கொஞ்சம் வந்து போட்டோ எடுத்து தரமுடியுமான்னு மக்கள் கேட்க அராம்பிச்சுட்டாங்க.. ஆயிரம் பேரை கொன்னாத் தான் அரை வைத்தியன் மாதிரி, பத்தாயிரம் போட்டோ எடுத்தா தான் அரை போட்டோகிராபர்னு நம்ம பள்ளிகூடத்துல சொல்றாங்க.. இப்பத் தான் நாம பள்ளில 'அ'னா போட ஆரம்பிச்சிருக்கேன்.. பார்ப்போம், பட்டப்படிப்பு வரை போகமுடியுதான்னு..

அதனால, இனிமேல் அடிக்கடி நாம எடுத்த படங்களை போட்டு உங்களுக்கு சோதனை தரப் போறேன்.. அதுக்கிடையில் வேலைகள் சற்று குறைவாக இருப்பதால், மறுபடியும் நம்ம எழுத்துப் பணியை தொடரலாம்னு நினைக்கிறேன்.. அப்பப்போ உங்க பக்கங்கள்ல நான் தலை காட்டி வந்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவு காட்டி வரும் நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி

நம்ம பிளாக் மக்கள் எல்லோரும் ஒண்ணா கூடி, புகைப்படக்கலைக்குன்னு தமிழ்ல ஒரு தனி பக்கம் ஆரம்பிச்சு, புதிய நுணுக்கமான தகவல்கள், போட்டிக்கள்னு பட்டையை கிளப்புறாங்க.. உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் இந்த பக்கத்தை மேயலாம்.. இந்த பிளாக் பக்கத்திற்கு நான் கியாரண்டி :)

வாங்கின கேமராவை பற்றி (ராம்கி கேட்டதிற்காக):

மாடல் பெயர் : கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ\EOS 400 with 18-55 mm Lens
விலை : $674 (No Tax, Free Shipping)
வாங்கிய இடம் : US1photo.com

சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:







Sunday, October 07, 2007

ஓரம் போன 'ஓரம்போ'

ஆர்யாவின் கடைசி படம் சரணின் வட்டாரம். கடந்த தீபாவளிக்கு வந்து ஓடாமல் படுத்துவிட்ட படம். அதன் பிறகு ஓரம்போ மற்றும் நான் கடவுள் படங்களில் நடிக்க ஓப்பந்தம் ஆனார். ஓரம் போ, புது டைரக்டர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரியினால் இயக்கப்பட்டு படம் ரெடியானது. ஆனாலும் பணப் பிரச்சனையால் படம் வெளிவராமல் இருந்தது. இப்போது அட்லாப்ஸ் நிறுவனம் படத்தை வாங்கி அக்டோபர் 12-ல் வெளியாக முடிவு செய்யப்பட்டது. மறுபடியும் சென்னையை சார்ந்த ஒரு பைனான்சியர் வழக்குப் போட்டதால் படத்தை வெளியிட தடை செய்யப் பட்டது.

நான் கடவுள் - அது அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் என்று வெளியாகும் என்று?

Friday, October 05, 2007

மறுபடியும் ராஜ்கிரண்

வரிசையாக மூன்று (என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான்)மாபெரும் வெற்றிப்படங்களை தந்த ராஜ்கிரண், அதற்கடுத்து மற்றவர்கள் படங்களில் (பாசமுள்ள பாண்டியரே, மாணிக்கம், பொன்னு விளையிற பூமி) கதாநாயகனாக நடித்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார். நீண்ட நாள் ஓய்வின் பின் பாலாவின் நந்தா, சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் ராஜ்கிரணுக்கு நல்ல பெயர் கொடுத்து நிமிர்ந்து உட்கார வைத்தது.

இப்போது ராஜ்கிரண் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சன் கிரியேசன்ஸை தூசிதட்டி, புதிய படங்கள் எடுக்கப் போகிறார். வழக்கம் போல கதாநாயகன், டைரக்க்ஷன் பொறுப்பை இவரே செய்கிறார். இவரது அடுத்த இரு படங்களுக்கு சிந்தாமணி, மலை கள்ளன் என்று பெயரிட்டுள்ளார்.

இவர் நடிக்காமல் படங்கள் (என்னை பெத்த ராசா, ராசாவே உன்னை நம்பி) மட்டும் தயாரித்த காலங்களில் இருந்து இவரது படங்களுக்கு இசைஞானி இசை தான். இப்போது இந்த இரு படங்களுக்கு இசையமைப்பது இசைஞானி தான்.

மறு அவதாரம் எடுத்து வரும் ராஜ்கிரண் வெற்றிகளை குவிப்பார் என்று நம்புவோம்.

Thursday, October 04, 2007

அஜித்தின் பில்லா பட ஸ்டில்கள் - முதன் முறையாக

முதன் முறையாக வெளிவந்துள்ள சில படங்கள்..






நன்றி : அஜித்ஃபேன்ஸ்.காம்