Monday, July 30, 2007

அடுத்த ஷங்கர் படம் எப்போ வரும்?

டேய், அடுத்த ஷங்கர் படம் ரோபோவாமுல்ல..

ஆமாடா.. ஷாருக்கான் நடிக்கிறாராம்.. படத்தையும் அவரே தயாரிக்கிறாராம்..

ஆமா.. படம் எப்போடா வரும்..

நான் காலேஜ் போன பிறகு..

அடப்பாவி.. நீ இப்போதானே பத்தாவதே படிக்கிற..

Saturday, July 21, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்

கிட்டதட்ட ஒரு எட்டு மாதங்களுக்கு முன், தமிழ்ல எழுதுறதுக்கு நீங்க என்ன செய்றீங்க, எனக்கு அந்த வழியை சொல்றீங்களான்னு ஒரு இமெயில் வந்தது. நானும் ஐஐடி எழுதிய ஒரு ஃTMள் வழி தமிழாக்கத்தை ஜிப் செய்து கேட்டவங்களுக்கு அனுப்பினேன். அப்படி அவங்க போட்டு ஆரம்பித்த ஒரு புள்ளி இன்றைக்கு ஒரு கோலமா, மலேசியா பற்றி ஒரு தனி பக்கம்,பயமறியா பாவையர் சங்கம் என பல சங்கங்களில் போல சங்கங்களில் துடிப்பான உறுப்பினர்.

இவங்க சித்தார்த் என்னும் நடிகருக்கு கோயில் கட்டாத குறை தான். அவங்க பக்கத்துக்கு போனா, சின்ன சின்ன போட்டோக்களில் இருந்து சித்தார்த் பிரம்மாண்டமாகி உயர்ந்து நிற்பார்.

மலேசியா பற்றி உலகுக்கு படம் போட்டு காண்பிக்க நிறைய பதிவுகளை எழுதியுள்ளார். எழுதிக்கொண்டுள்ளார். மலேய மொழியை எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த கிக்கு (செக்கு) இவங்க.

வ.வா.ச நடத்திய போட்டியில அதிரடி நகைசுவைப் பதிவுகள் தந்து காமெடி குவின் பட்டத்தையும் அள்ளியவர்.

இன்னைக்கும் என்னை பாசமுடன் தல என்று அழைத்து நட்புக்கரம் நீட்டி என்னை பெருமைப்படுத்தியவர்.

இதுக்கு மேலும் அவங்களை யார்னு நீங்க கண்டுபிடிக்கலைனா எப்படி.. அவங்க நம்ம மை பிரண்ட் தான். அவங்களுக்கு இன்னைக்கு பிறந்த நாள் ..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

(நண்பர்களே, இது எனது 500வது பதிவு.. இவ்ளோ டைமிங்கா மை பிரண்ட் பிறந்த நாள் பதிவா மாறும்னு நான் நினைக்கல.. இந்த பதிவுக்கு இது தான் சிறப்பான கருவா இருக்கும்னு நான் நம்புறேன்.. மகிழ்கிறேன்)

(கொஞ்சம் அவசர பதிவு தான்.. ஆனால் அவசிய பதிவு..)

Thursday, July 19, 2007

கிரீடம் - ஒரு பார்வை



நாளை உலகமெங்கும் தல அஜித்தின் கிரீடம் வெளியாகிறது. படம் மலையாளப் படத்தின் மறு வடிவம் என்றாலும், ஏற்கனவே இது ஹிந்தியிலும் தெலுங்கிலும் (எவனாயிருந்தா எனக்கென்ன என்று ராஜசேகர் நடித்து வெளியானது என்று எங்கோ படித்தேன்) மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேவையில்லாத பில்டப், மாஸ் ஹீரோ போன்று பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லாமல் இருக்கும் என்று நம்பலாம். அதுவும் அப்பா வேடத்தில் ராஜ்கிரணும் அம்மா வேடத்தில் சரண்யாவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். அஜித், திரிஷா ஜோடி பார்ப்பதற்கு அழகு.. போட்டோக்களில் பதுமையாக இருக்கிறார் திரிஷா. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும்படி நன்றாக இருக்கிறது. ஆழ்வாரின் சறுக்கலுக்கு பிறகு தன்னை நிமிர்த்திக் கொள்ள அஜித்திற்கு இந்த படம் உதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

எப்போதுமே சிஃபியின் விமர்சனங்களை நான் ரொம்பவும் நம்புவதில்லை. அடி வாங்கிய படங்களுக்கு பைசா வசூல் என்று எழுதுபவர்கள். வரலாறின் முதல் நாள் விமர்சனம் பரவாயில்லை எனவும் மறு நாள் நல்ல படம் என்றும் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கிரீடதிற்கு, இது போன்று ஒரு நல்ல படம் வருவது மிகவும் குறைவு என்று விமர்சனம் தந்திருக்கிறார்கள். சென்னையில், ஏற்கனவே கிட்டதட்ட இந்த வாரயிறுதிக்கான முன் பதிவுகள் முடிந்து கிட்டதட்ட முப்பது லட்சங்கள் வசூலாகி இருக்கின்றன. இது, அஜித், முதல் வார வசூலரசன் என்று அஜித்தை மறுபடியும் நிரூபித்திருக்கிறது.



படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். திருவின் (நீர்களுக்கு நடுவில் அந்த சின்ன இடத்தில் இரண்டு தென்னை மரங்களோடு இவர் எழுதிய அழகான கவிதை பாடல், இவர் பெயர் பேசும் சிறிது நாளைக்கு) கண்களில், ஆன்டனியின் கத்திரியில், நா. முத்துகுமாரின் பாடல் வரிகளில், ஜி.வி.பிரகாஷின் இசையில், விஜய்யின் இயக்கத்தில் கிரீடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இயக்குநர் பிரியதர்ஷனின் சீடர். இந்த படம் சுரேஷ் பாலாஜி மற்றும் ரிலையன்ஸின் அட்லாப்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொசுறு : இந்த படத்திலும் அஜித்தின் மாமாவாக (அக்கா கணவராக) விவேக், சிவாஜியில் ரஜினிக்கு போல..

Tuesday, July 17, 2007

வகுப்பறையில் சில நாய்குட்டிகள்

எட்டாவது நான் படித்த வகுப்பறை, பள்ளியின் மேடை அருகே இருந்தது. கிட்டதட்ட பனிரெண்டிலிருந்து பதினைந்து அடி அகலமும் முப்பதாறு முதல் நாற்பது அடி வரை நீளமும் கொண்டது. வகுப்பின் கரும்பலகை வட மேற்கு நோக்கி இருக்கும். வகுப்பின் வாசப்படி தென்மேற்குப்பக்கம் இருக்கும்.. வாசலின் அருகினில் பெண்கள் உட்காருவதெற்கென்று பெஞ்சுகள் இருக்கும்..அவர்களின் பெஞ்ச் இரண்டு பேர் அமரக்கூடியது.. எதிர்புறம் இருக்கும் ஆண்கள் பெஞ்சில், கிட்டதட்ட நான்கு பேர் அமரலாம். வகுப்பின் பின்னே, சிமெண்டினால் ஆன திறந்த வெளி அலமாரிகள் இருக்கும். வகுப்பில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது, அதில் தான் ஏறி உட்கார்ந்து ஆட்டம் போடுவோம் நாங்கள். அந்த அலமாரியின் கீழ் தட்டின் இடது பக்கம் இருக்கும் அலமாரியில் எப்போதும் மண்கள் தோண்டப்பட்டும் சிதறிக்கிடக்கும். எப்போதோ ஏதோ விலங்கோ, இல்லை வேற ஏதோ காரணத்தினாலோ இப்படி ஆன பின்னும் பள்ளி நிர்வாகம் இன்னும் சரி செய்யாமல் இருந்தது.

ஒரு முறை வகுப்பில் அந்த கீழ்தட்டு அலமாரியில் சில காலியான பான்பராக் பாக்கெட்டுகளை எப்படியோ எனது வகுப்பு ஆசிரியை பார்க்க நேர்ந்தது. அவருக்கோ தூக்கி வாரிப்போட்டது..இந்த சின்ன வயசில் யார் இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று. தனியாக (வகுப்பு தலைவனாக இருந்த காரணத்தால்) என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்து, யார் என்று கண்டுபிடிக்க சொல்லி உத்தரவிட்டார்.. தருமியின் நிலமை எனக்கு. யாரென்றே தெரியாது.. எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று பயங்கர கவலை.. அது நம்ம வகுப்பில் இருக்கும் பையன் தானா இல்லை வேற யாரேனுமா என்று ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டர்கள்..

ஆனால் அந்த மர்மமும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் வகுப்பில் சரசரவென்று சத்தம் கேட்க, பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையே யார் அந்த பையன் என்று கண்டுபிடித்துவிட்டதால் எனது வேலை சுலபமாக, சுபமாக முடிந்துவிட்டது. சிவகாசியில் இருந்து வந்து விடுதியில் தங்கி படித்த சம்பத் என்ற பையனே அந்த பான்பராக் பாக்கெட்டுகளுக்கு காரண கர்த்தா. அவனைப் பற்றி சொல்லும் போது இன்னொரு சம்பவத்தை பற்றியும் சொல்லியேயாக வேண்டும்.

ஒரு முறை வார இறுதி என்பதால் எல்லாப்பாடங்களிலும் அதிக வீட்டுப்பாடங்கள் தந்துவிட்டார்கள். திங்கள் வகுப்பிற்கு வந்த பிறகு தான் இத்தனை வீட்டுப்பாடங்கள் இருப்பது சம்பதிற்கு தெரிந்தது. என்ன செய்வது என்று நினத்து, உடனே ஜாமென்ட்ரி டப்பாவில் இருந்த டிவைடரை வைத்து கையை கிழித்துக்கொண்டான்.ரத்தம் சொட்ட ஆரம்பிக்கும் போது, கைகுட்டையால் அதை கட்டினான்.. ஆசிரியர் வீட்டுப்பாடங்கள் செய்யாதவர்கள் யார் என்று கேட்ட போது, இவன் எழுந்து நின்று, தனக்கு அடி பட்டுவிட்டதால் எழுத முடியவில்லை என்று சொன்னான். இது பற்றி அப்போது தெரிந்த இரண்டு பெஞ்சு பசங்களும் பயங்கர அதிர்ச்சியில் இருந்தோம் சிறிது நேரம்.

அந்த வருடம் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாங்கள் வந்த போது எங்கள் வகுப்பின் எண்ணிக்கை சற்று உயர்ந்திருந்தது. இந்த வகுப்பின் பின்னே கீழ்தட்டு அலமாரியில் ஒரு நாய் தனது குட்டிகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தது. அந்த நாய் அழகாக இருந்தது. கருப்பு வண்ண மூக்கும், வெள்ளையில் சாம்பல் கலந்தும் இருந்தது. அதற்கு ஆறு குட்டிகள். ஒண்ணொன்னும் பொம்மைகள் மாதிரி இருந்தன. வகுப்பில் ஆசிரியர் ரொம்பவும் சுவாரஸ்யமாக ஏதும் நடத்திக்கொண்டிருக்கிற போது, அந்த நாய் தனது குட்டிகளுடன் உள்ளே வருவதும் போவதுமாய் இருக்கும்.. அந்த பிஞ்சு குட்டிகள் அதன் தாயுடன் ஒட்டியவாறு போவது பார்க்க அவ்வளவு ரசிப்பதாய் இருக்கும்.இரண்டு மூன்று நாட்களில் அவைகள் எங்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தன. நாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டை போடுவது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து வர்க்கி, பிஸ்கட் வேறு அவைகளுக்கு தர ஆரம்பித்தோம்.. கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்த பசங்க சில பேர், ஆளுக்கொரு நாய்குட்டிகளுடன், அவைகளை கொஞ்சியவாறே பாடம் கவனிக்க ஆரம்பித்தனர்..

ராஜா என்னும் பையன், அவைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டு ஒன்றை வீட்டிற்கு எடுத்து செல்ல முற்பட்டான். ஆனால் தாய் கிட்ட இருந்த அதை பிரிக்கக்கூடாது என்று எல்லோரும் சொல்லிவிட்டதால் அவன் அந்த எண்ணத்தை கைவிட்டான்.. அதே சமயம், அந்த வருட பொங்கல் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது, அந்த நாயையும், குட்டிகளையும் காணவில்லை..சில நாட்கள் எங்கள் பேச்சில், வகுப்பில் ஒரு அங்கமாக இருந்த நாய்குட்டிகள் எங்கே போயின, எப்படி காணாமல் போயின என்று எங்கள் தெரியவே இல்லை.. எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாக இருந்தது. இரண்டு மூன்று மாதம் கழித்து, ராஜா அந்த நாயும் நாய்குட்டிகளும் தன்னுடைய தோட்டத்தில் தான் வளருவதாக சொன்னான். அவன் தான் தன் ஊர் நண்பர்களுடன் வந்து தாயோடு எல்லா நாய்குட்டிகளையும் எடுத்து சென்றுவிட்டானாம். கேட்ட போது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தது. வகுப்பில் பணம் வசூலித்து சில நாட்கள் அவைகளுக்கு பிஸ்கட் எல்லாம் வாங்கி தந்துகொண்டிருந்தோம்.

Sunday, July 15, 2007

சென்னை நூலகத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்

இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியவில்லை. ஆனால் எனது நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியது. மின்னுது மின்னலுக்கு நன்றி.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை, சென்னை நூலகத்தின் வலைப்பக்கத்தில் இருக்கிறது. ஆற அமர ஒவ்வொரு பக்கமாக நீங்கள் படிக்கலாம். உங்கள் எல்லொருக்கும் யான் பெற்ற இன்பம் பெருக இவையகம் என்று உங்களுக்கும் இதோ..

Friday, July 13, 2007

மன்சூர் அலிகான் அஜித்திற்கு தந்த விளம்பரம்

ஏதாவது விசித்திரமாக பண்ணுவதென்பது மன்சூர் அலிகானின் வேலை.. தனது படத்திற்கு 43 எழுத்துகளில் தலைப்பு வைத்து (ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க கிரிஷ்ண காமராஜன்.. சரியான்னும் தெரில?) இப்படி இவர் செய்த விஷயங்கள் அதிகம். அதை விட, தனியாக சில தவறுகள் செய்து போலீஸில் உதை வாங்கியது தனிப்பட்ட விஷயம். இப்போது இவர் நடித்து தயாரித்து வெளிவந்திருக்கும் படம் 'என்னைப் பார் யோகம் வரும்". நிச்சயம் படம் ஒன்றும் பெரிதாக இருக்கப் போவதில்லை. இந்த தலைப்பையும் பல பேர் நிறைய கடைகளில், இரண்டு கழுதைகள் கொண்ட ஒரு போட்டோவில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.இப்போது இந்த படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களை கவருவதற்காக அவர் அடித்த போஸ்டரை பாருங்களேன்.. பைசா செலவில்லாமல் அஜித்தின் அடுத்த படமான கிரீடதிற்கு கிடைத்த விளம்பரம் இது.


Thursday, July 12, 2007

தனிமையில் கிடைத்த ஞானப்பழம்

கடந்த வாரம் காரை எடுத்துகிட்டு, தனியா ரவுண்டு அடிக்கலாம்னு கிளம்பினேன்.. அப்படி தனியாக சுத்தியதற்கு என்ன காரணம்.. எப்பவும் எங்கேயும் கூட்டதோடு இருக்கவே எனக்கு பிடிக்கும்.. அரட்டைகள் பிடிக்கும்.. நாம அடுத்தவங்களை ஓட்றோமோ, அடுத்தவங்க நம்மளை ஓட்றாங்களோ தெரியாது, ஆனா அந்த அரட்டை கும்மி ஆனந்தம் தரும்.. மொத்தமாக ஒரு வீட்டில் கும்மி அடித்து, ஒரு ஆள் வெங்காயம் நறுக்க, அடுத்த ஆள் தக்காளி அறுக்க, இந்த பக்கம் ஒரு ஆள் கோழியை வெட்டி மஞ்சள் போட்டு கழுவ.. அந்த பக்கம் சமையல் என்ன நடக்குதுன்னு கவனிக்காம டிவில ரெண்டு பேர் தமிழ் படம் பாக்க.. ஒரு சின்ன திருவிழா சந்தோசம் அந்த அறைக்குள்ளே இருக்கும்.. மொத்தமா சேர்ந்து சமைச்சு சாப்பிட்டு, சத்தமா பேசி சிரிச்சு சாப்டா அந்த உணவே அமிர்தம்.. அந்த நாளே திருவிழா.. அந்த இடமே சொர்க்கம்.. இப்படி ஒண்ணா இருந்து பழகிட்டதால, என்னைக்காவது தனிமைல இருக்கின்ற சந்தர்ப்பம், அதாவது எங்கேயாவது போறப்ப வந்தா சமாளிக்கமுடியாதோன்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு.. அதனால தான் அந்த தனி உலா..

கொலம்பஸ்ல ஸ்கியாட்டோ ஆறு ஒண்ணு இருக்கு.. இது கிட்டதட்ட 231 மைல் நீளம் கொண்டது என்று யாரோ சொல்லக்கேள்வி..அது போற வழியெல்லாம் ஆற்றுப்படுகை பூங்காக்கள் நிறைய இருக்கும். கிட்டதட்ட வீட்டிலிருந்து ஒரு முப்பது மைல் தூரத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றேன்.. ஆற்றில் நீர் விளையாட்டுக்கள் பல பேர் செய்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் கூச்சலும், மரங்களின் இலைகள் காற்றோடு பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளும், தூரத்தில் பறவைகள் மெதுவாகப் பாடுவதும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது..

கிட்டதட்ட அம்பது வருடங்களுக்கு முன்னால் வந்த ஆடிப்பெருக்கு படத்தில், ஏ.எம்.ராஜன் இசையமைத்து பாடிய "தனிமையிலே இனிமை காணமுடியுமா' என்ற பாடல் மனசுக்குள் ஓடியது.. இது மாதிரி வம்பாக தனிமை தேடி செல்வது சரியா என்பது தான் நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது எனக்கு தோன்றியது..ஆனால், அதையும் அனுபவிப்போமே.. அமெரிக்கா வந்த பிறகு இது மாதிரி தனியாக எங்கும் சென்றதில்லையே என்ற எண்ணம் மனசை முழுதாக ஆளுமை படுத்தியது.

ஊர்ல இருக்கிறப்போ எப்படித் தான், சில சமயம் நேரத்தை தள்ள முடியாம தள்ள வேண்டியதா இருக்கும். அது மாதிரி நேரத்துல மிதிவண்டியை எடுத்துகிட்டு எங்கேயாவது போயிடுவேன்.. போற இடம் தெரியாது.. கால் வலிக்கிற வரைக்கும் போயிட்டு எங்க வலிக்க ஆரம்பிக்குதோ அங்க உட்கார்ந்துடுவேன்..எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு தெரியாது.. தரையில் கிடக்குற புள்ளை ஒண்ணொன்ணா புடுங்கி ஏறியிறது முதல், வானத்துல மேகம் வரையிற ஓவியங்கள் பார்ப்பது வரை ஏதாவது பண்ணிகிட்டு இருப்பேன்.. எனக்கு இன்னமும் ரொம்ப பிடிக்கிறது மேகத்தை ரசிப்பது.. காற்று அடிக்க அடிக்க அது தன் உருவத்தை மாத்துறது அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். சில சமயம், டைனோசர் மாதிரி உருவமும் இருக்கும்.. சில சமயம் ஓடுகின்ற மனுஷனை போலவும் இருக்கும்.. எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.. ரொம்ப நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பி வருவேன்.. பல சமயங்களில் முழுதாக சக்தியேற்றப்பட்டவனாக உணர்ந்ததுண்டு.

இங்க வந்த பிறகு அது போல், தனிமை அவ்வளவாக வாய்த்ததில்லை.. ஆமாம்.. இது மாதிரி தனிமை தேடி போனால், ஏதோ மனசுக்குத் தான் கஷ்டம் போல என்று எலோரும் பார்ப்பார்கள்.. சந்தோசமாக இருப்பவன் இப்படியெல்லாம் போகக்கூடாதா என்ன என்று தெரியவில்லை.. ஆனால், அன்று நான் அப்படி தனிமை தேடி போன போது, பின்னால் திரும்பி பள்ளி சம்பவங்களையும் அங்கே போட்ட ஆட்டங்களையும் நினைத்து பார்க்க முடிந்தது.. ஏழாவதில் தமிழம்மாவிடம் (ஜெயலலிதா அல்ல) திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், வெளியே நின்று கொண்டிருந்தது, எட்டாவதில் எங்கள் வகுப்பில் ஒரு நாய், குட்டியோடு தங்கி இருந்ததும், மொத்தமாக குட்டிகளோடு அது உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது என பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தது..

இப்படி எல்லாம் நினைத்து பார்க்க அருமையான சந்தர்ப்பம் அன்று அமைந்தது. மறுபடியும் காரினுள் ஏறி முன்னால் கிளம்பியபோது, நான் பதினைந்து வருடங்கள் பின்னால், மென் மீசை வளர்ந்து, சிறுவனாக, டவுசர் போட்டுக்கொண்டு திரிந்த காலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

சிவாஜிக்கும் ஹிந்தி நாயக்-கிற்கும் என்ன சம்பந்தம்

முதல்வனின் ஹிந்தி ரீமேக் படமான நாயக்கில் அனில் கபூரின் பெயர் என்ன?

இதில் என்ன பெரிய விஷயம்னு நினைகிறீங்களா.. பதில் தெரிஞ்சா, இந்நேரம் நீங்க அசந்து போயிடுவீங்க.. இல்லைனா, நாளைக்கு வாங்க ஆச்சர்யத்தில் மூழ்க..

Sunday, July 08, 2007

புத்தன் நான்..

ஒவ்வொரு
செல்லிலும்
ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..

எல்லாம்
உன்
ஒற்றை பார்வை
ஏற்றி வைத்த
சுமையடி!

இது
கழுதை சுமையல்ல!
தாய்மை!

Friday, July 06, 2007

மார்க்கபோலோ மார்ஷல்

யூ.எஸ் வந்த பிறகு, எங்க யார் பகார்டின்னு சொன்னாலும் டக்குன்னு மனசுல வர்றது நம்ம நாட்டாமை தான். இதே மாதிரி நான் பத்தாவது படிக்கிறப்போ, யார் மார்க்கப்போலோன்னு சொன்னாலும், ஞாபகத்துல வர்றது என் நண்பன் மார்ஷல் தான். சராசரிக்கும் சற்றே உயரம்.. ஒடிசலான தேகம்.. இந்திய நிறம்.. என்ன பேசினாலும் நக்கல் அதுல தூக்கலா இருக்கும்.. பத்தாவது மட்டுமே என் கூட படிச்சான்.. ஆனா, என்னோட மனசு அகராதில மார்க்கபோலோ = மார்ஷல் னு ஒரு பதிவை உண்டாக்கிட்டு போயிட்டான்..

திண்டுக்கல் நகரம் பூட்டுக்கும் திராட்சைக்கும் வெற்றிலைக்கும் பிரசித்தின்னு சினிமா பாட்டு கேக்குற எல்லோருக்கும் சாதாரணமா தெரிஞ்ச விஷயம்.. அதோட தோல் தொழிற்சாலைகளும் அதிகம்ங்கிறது ரொம்ப சில பேருக்குத் தான் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் உண்டு.. நீங்க மதுரைலைல இருந்து திண்டுக்கலுக்கு பஸ்ல வந்தீங்கன்னா, திண்டுக்கலுக்குள்ள நீங்க நுழையிறதுக்கு இந்த துர்வாசனைகள் தான் பன்னீர் மாதிரி.. அப்படியொரு கப்பு அடிக்கும் உள்ள நுழையிறப்போ.. இந்த தொழிற்சாலைகள் அந்தப் பக்கம் இருந்த நிலங்களை எல்லாம் சீரழித்தது ஒரு தனிக்கதை.. அப்படியொரு ஒரு தோல் தொழிற்சாலை முதலாளியின் பையன் தான் என் நண்பன் மார்ஷல்.. முதலாளியின் பையன் சொன்னவுடன் உங்க மனசுல தமிழ் படம் அதிகம் பார்த்ததினாலோ என்னவோ ஒரு சின்ன வில்லன் உருவம் கொடுத்திருப்பீங்களே.. அதை அப்படியே மாத்திக்கோங்க.. வயசுக்கேற்ற குறும்பு இருக்கும்.. ஆனா சற்றும் அந்த பணக்காரத்தனம் இருக்காது. திண்டுக்கல்ல இருந்து வர்ற பசங்க கூட தான் இவனும் பஸ்ல வருவான்.. பார்த்தால் சற்றும் நீங்க அவனை பகட்டு வாழ்க்கை கூடத்துல இருந்து வர்றவனா யோசிக்கவே மாட்டீங்க..

இவனைப் பத்தி சொல்ற நேரத்துல ஒரு மூணு வருஷம் எங்க பள்ளியின் தலைமையாசிரியரா இருந்த ஒருவரை பற்றிச் சொல்லியேயாக வேண்டும். அவர் பெயர் இராமர்.. தடித்த உருவம்.. தலையில் முடிகள் குறைவு.. இவர் பள்ளியில் ஆட்கள் சேர்க்க லஞ்சமெல்லாம் வாங்குவார்.. இல்லைனா மார்க்கபோலோ வாங்குவார்னு கேள்விபட்டிருக்கேன்.. ஆனா எங்க வகுப்பு சும்மா வர்றப்ப எல்லாம் மார்ஷல் கிட்ட, என்ன மார்க்கப்போலோ..ன்னு தான் கூப்பிடுவாரு..அப்பா எனக்குன்னு ஏதும் கொடுத்துவிட்டாரான்னு ஒரு கேள்வி வேற.. அப்போ தான் நாங்க அவன் கிட்ட காரணம் கேட்டப்ப, அவன் எப்படி சீட் வாங்கினோம்ங்கிற கதையெல்லாம் சொன்னான்.. அவர் பற்றி இன்னும் பல புகார்கள் இருந்ததால் சீக்கிரமாவே அந்த பதவியில் இருந்த இறக்கப்பட்டார் பள்ளி நிர்வாகித்தினரால்.. பள்ளியிலேயே பதினோராம் வகுப்பு இருந்தாலும், பத்தாவதில் டி.சி வாங்கிவிட்டு மறுபடியும் சேரணும்.. எல்லாப் பள்ளியிலும் இதே நிலைமை தானா என்று தெரியாது. அதே பள்ளியில் பத்தாவது படித்து நல்ல மதிப்பெண் வாங்கியும், மறுபடியும் சேர எத்தனை நாட்கள் அலைந்தோம் என்று எனக்கும் என் நண்பர்களுக்கும் தான் தெரியும்.. இறுதியில் பள்ளி நிர்வாகம் தலையிட்டு பள்ளியில் படித்தவர்களுக்கே முதலுரிமை என்று, எங்களை சேர்த்துக்கொண்டது..

பத்தாவது படித்து முடித்த பிறகு, அவர்கள் தொழிற்சாலையை கவனித்துக்கொள்ள லெதர் டெச்னாலஜி படிக்கவேண்டும் என்று சென்னைக்கு போய்விட்டான் மார்ஷல்.. இரண்டொரு முறை திண்டுக்கலுக்கு சென்ற போது அவனை பார்த்தேன்.. அதன் பிறகு அவன் சென்னையில் படிப்பதாக கேள்விப்பட்டேன்.. இப்படி வாழ்க்கையில், கண்மூடி நினைத்துப் பார்த்தால் வந்தவர்கள் என்று பல நண்பர்கள் ஒவ்வொரு காலகட்டதிலும் உண்டு. அதுவும் இப்போது ஆர்குட் போன்ற வசதிகள் வந்த பிறகு, நமது முகத்தை எங்கேயோ பார்த்து விட்டு, பள்ளி நண்பர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை தேடி வரும் , உள்ளத்தில் அப்படி ஒரு உன்னத மகிழ்ச்சி ஏற்படுவது நன்றாகத் தெரியும்..

சின்ன வயசில் கேள்விபட்ட மாதிரி, ஆண்களோட நட்பு நீண்ட காலம் நீடித்து இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண் நட்பு, வருகின்ற கணவனை பொறுத்தே அமைகிறது. என் கூட கல்லூரி படித்த பெண், ஒரு மாததிற்குள் நடந்த தனது திருமணதிற்கு கூட, கூட படித்த யாரையும் அழைக்க முடியாத நிலமையில் இருந்தாள்.. இன்று வரை, கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு பின்னாலும், அவளை அவளது பெண் நண்பர்கள் கூட அந்த நட்பை தொடர முடியவில்லை.. ஏனெனில், அவளுக்கு அமைந்த கணவன் அப்படி. இப்படி எத்தனையோ நல்ல நண்பர்களை, அவர்கள் பெண்களாய் இருந்ததால் நாம் தொலைத்திருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக ஒரு இருபது வருடதிற்கு முன்னால் இருந்த நிலைமையை விட இன்று பரவாயில்லை என்று ஆறுதல் கொள்ளமுடிகிறது..

Wednesday, July 04, 2007

வீட்டுக்குள்ளே ரசிகர் சண்டை

சிவாஜி பத்தி போஸ்ட் போடுறதுக்கு முன்னால, நான் ரஜினி படம் பாத்துட்டு வந்தாலோ, இல்ல என் அப்பா கமல் படம் பாத்தாலோ (அவர் பெரும்பாலும் படமே பாக்குறதில்லை.. ஆனா எப்பவாவது அப்படிப் பாத்தா அது கமல் படமாத் தான் இருக்கணும்), வீட்ல ஒரு சின்ன கலவரமே நடக்கும்.. அதை பத்தி சும்மா கதைக்கிறேன்..

சினிமா உலகத்துல, நிறைய நடிகர்கள் இருந்தாலும் எப்பவும் ஒரு ரெண்டு நடிகரை வைத்து தான் ரசிகர் சண்டைகளே இருக்கும்.அந்த காலத்துல பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி தியாகராஜா பாகவதர் தான் எதிரும் புதிருமா இருந்த நடிகர்கள்.. எம்.கே.டியை அந்தகால சூப்பர் ஸ்டார்னு தான் எல்லோரும் அழைப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி.. இந்த இருவரை பற்றி சொல்லவேண்டாம்.. எல்லோருக்கும் தெரிந்திரிக்கும்.. எப்பவும் இப்படி இருக்கிற இரண்டு பேருக்கும் இடையில் அவர்கள் பயன்படுத்தும் பார்முலா, வேறுவேறாகத் தான் இருக்கும். எம்.கே.டியும், எம்.ஜி.யாரும் நடிப்பை ஊறுகாயாக்கி, மக்களை கவர்கின்ற அம்சத்தை நிறைய வைத்திருப்பார்கள். எம்.கே.டி படங்கள் அவ்வளவா பார்த்ததில்லை.. ஆனால் எம்.ஜி.யார் படங்கள் அப்படித்தான். ஆனால், இதற்கு நேர்மாறாக இருக்கும் சிவாஜியின் படங்கள்.. மனித வாழ்க்கையும் அதில் உணர்ச்சிகளும் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.. இவர்கள் இருவருக்கிடையில் யாரும் மற்றவருடையும் பார்முலாவை அதிகம் பயன்படுத்தியதில்லை.. எம்.ஜி.யார் ஒரு போதும் சிவாஜியின் குடும்ப சித்திர பார்முலாவை பயன்படுத்தியதில்லை.. ஒரு வேளை தனக்கு அழுது வடிந்து நடிப்பது வரவில்லை என்பதால் அப்படி ஒரு பார்முலாவை எடுத்தாரா என்பதும் தெரியவில்லை.

அதன் பிறகு வந்தது தான், ரஜினி-கமல் யுகம்.. ஆரம்பத்தில் இவர்களுக்கு இடையில், தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் அப்படி ஒரு வித்தியாசம் இருந்ததில்லை. ரஜினியும் கமல் பாணி படங்களான, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் படங்களில் நடிக்கவே செய்தார். கமலும் ரஜினி பாணி படங்களான, சகலகலா வல்லவன், காக்கி சட்டை போன்ற படங்களிலும் நடித்து வெற்றியை தவறாமல் குவித்தார். ஆனால், இவர்களின் சமீப கால படங்கள் எல்லாமே ஏதோ ஒரு பிரிவுக்குள் அடங்கி போனவையாகத் தான் இருக்கும். கமல் வித்தியாசங்களை காட்டவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கருக்களையே எடுத்துக்கொண்டார்.. ஹே ராம், தேவர் மகன், அன்பே சிவம், குணா, மகாநதி, விருமாண்டி என்று அந்த பட்டியல் சற்றே நீளமானது.. இந்தப் பக்கம் அண்ணாமலையில் தொடங்கி இன்றைய சிவாஜி வரை, சராசரிக்கும் அதிகமான விஷயங்கள் கொண்ட ஒரு மனிதனின் (larger-than-life image?) வாழ்கையை சுற்றியே தானிருக்கிறது.. கதைகளை விட, ரஜினியை நம்பியே படங்கள் எடுக்கப்படுகின்றன..

ரஜினி-கமலுக்கு பிறகு விஜய்-அஜித் வந்துவிட்டாலும் இந்த மாதிரி ஒரு ஒப்புமை செய்யும் அளவிற்கு அவர்கள் படங்கள் நடிக்கவில்லை என்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால், ஒரே மாதிரி, ரஜினி எம்.ஜி.ஆர் பாணி தான், விஜயின் பாணி என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்.

என் அப்பா, அவரது இளமை காலங்கள் தொட்டு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இருப்பவர். நீண்ட வரிசைகளில் நின்றெல்லாம் படம் பார்த்தவர்.. அந்த இள வயது துள்ளல் எப்போது முறுக்கேறி கிடந்த காலங்களில், அதே சுறு சுறு படங்கள் தான் பிடித்திருந்தது.. ஆனால் இப்போது இத்தனை கால வாழ்க்கைக்கு பிறகு அன்று பிடிக்காமல் இருந்த சிவாஜி படங்கள் இன்று கமல் போர்வையில் பிடிக்கிறது. நான் இது போல பல பேரை கண்டதுண்டு.. எம்.ஜி.ஆர் பிடித்தவர்களுக்கு கமல் பிடிப்பதும், ரஜினியை பிடித்தவர்களுக்கு அஜித்தை பிடிப்பதும்..

நான் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் பார்த்துவிட்டு வரும் போது, ஏன்டா..கதையே இருக்காது.. சும்மா ஸ்டையிலுக்காக ஏன் போய் ரஜினி படமெல்லாம் பாக்குறன்னு கேட்பார்..கமல் படமெல்லாம் எப்டி இருக்கு.. நடிப்பும் அதில் சொல்ற விஷயங்களும் அருமையா இருக்குன்னு என்னை கேன்-வாஷ் பண்ணுவார்.. நான் மறுபடியும், அன்றைக்கு உங்களுக்கு ஏன் சிவாஜி படங்கள் பிடிக்கலையோ அதே மாதிரி தான் இதுவும்..னு சொல்லி நான் பேச என் அப்பா பேசன்னு ஒரு சின்ன ரசிகர் சண்டையே நடக்கும்.. ஆனா, அந்த நொடிகள் எல்லாம் நான் என் வாழ்க்கையில் ரொம்ப ரசிச்சது..

ஆமாங்க, உங்களுக்கு இது மாதிரி ஏதாவது அனுபவம் இருக்கா?

Monday, July 02, 2007

பிறந்தநாள் அபிஷேக வீடியோ

கிட்டதட்ட ரெண்டு மாசமா என்னுடைய பிறந்த நாள் வீடியோவை போடுறேன் போடுறேன்னு ஒரு சின்ன ஹைப் கொடுத்துகிட்டே இருந்தேன். நான் கொடுத்த ஹைப்புல டென்ஷன் ஆகி என் நண்பன் ஒருத்தன் தொலைபேசிலயே காறித் துப்பிட்டான்.. என்னடா சிவாஜி படத்துக்கு கொடுத்த விளம்பரத்தை விட உன் வீடியோவுக்கு அதிகமா கொடுக்குறேன்னு கோபமாகி, அடுத்து அனுப்பின ஒவ்வொரு மெயிலிலும், கத்தி, வீச்சருவா, ஏ.கே 47ன்னு ஒவ்வொரு சமாச்சாரத்தையும் அனுப்பி வயித்துல புளியை கரச்சுட்டான்.. விடுங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்படித்தான்னு சொல்லிட்டு, இதோ வீடியோவை கூகிள போட்டாச்சு..



வீடியோவ பாத்துட்டு, முட்டையால அடிக்கப்போறீங்களா.. அட போங்க தம்பி..வீடியோவுல சலிக்காமா வாங்குறோமுல..சும்மா ஒரு முட்டையை கையில வச்சுகிட்டு பயமுறுத்துறீங்களா..

இந்த வீடியோவை பொறுமையாய் எடுத்ததும், அதற்கு பிண்ணனி குரல் தந்ததும் நண்பன் கணேஷ் ரெங்கநாதன். ஆனா, எடுத்து முடிச்சப் பிறகு தான் தெரிந்தது, இவன் இந்த விடியோவுலயே இல்லைன்னு. நன்றி நண்பா!