முரட்டு வைத்தியம் என்றால் என்ன? - பாக்யா கேள்வி பதில்
கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி பதிலில் படித்தது இது.
கேள்வி : முரட்டு வைத்தியம் என்றால் என்ன?
பதில் : ஒரு தந்தை மகனுக்கு விளையாட்டு சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் மெதுவாக பீரோவில் ஏறி அங்கிருந்து குதிக்க, அப்பா அவனை தாங்கி பிடிப்பார். இது போல மூன்று முறைகள், மகன் குதிக்க அப்பா அவனை அலேக்காக பிடிப்பார். நாலாவது தடவை அவன் குதிக்கும் போது அப்பா பிடிப்பது போல பாவலா செய்து கீழே விட்டுவிட, மகனுக்கு சரியான அடி.. மகனை பார்த்து அப்பா சொல்வார், இது போல யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. நம்பினால் நமக்குத் தான் சேதாரம் என்று சொன்னார். இந்த கருத்தை அந்த அப்பா சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம். ஆனால் மகனுக்கு அது எப்படி இருக்கும் என ஒரு செயலால் (முரட்டுத்தனமான) உணர்த்தினார் அல்லவா.. இதற்குப்பேர் தான் முரட்டு வைத்தியம்.
நான் என் ஞாபகத்தில் இருப்பதை வைத்து இந்த பதிலை எழுதினேன். பாக்யாவின் கேள்வி பதில் பகுதி கொஞ்சம் பிரசித்தமானது. அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் நகைச்சுவை பொதிந்து கருத்துக்கள் சொல்லி, கதையளப்பது பாக்யராஜின் பாணி. அது மக்களையும் சென்று நன்றாகவே சேர்ந்தது. அந்த கேள்வி-பதில்கள் இரண்டு பகுதிகளாக புத்தக வடிவிலே வந்ததாகவும் ஞாபகம். பாக்யராஜின் பாக்யாவை பார்த்து டி.ராஜேந்தரும் டி.ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழை ஆரம்பித்தார். ஆனால் அவரால் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியவில்லை.
பாக்யராஜின் சினிமாக்களை போலவே இதிலும் 'அந்த' மாதிரியான விஷயங்களும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும். ஆனால் எதுவும் எல்லை மீறினதாக எனக்குத் தெரியவில்லை
இன்னும் வெளிவந்துகொண்டிருக்கிறதா பாக்யா..