Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Thursday, June 19, 2008

தசாவதாரம் - ஆராய்ச்சிகள் 1

தசாவதாரம் படத்திற்கு முன், எனக்கொரு சின்ன சந்தேகம் இருந்தது.. இவ்வளவு பணத்தை இறைத்து எடுக்கப்படும் படம் வியாபார ரீதியாக ஓடுமா என்று? ஏனெனெனில் ஆளவந்தான் இது போன்று உரக்க பேசப்பட்டு கடைசியில் உப்பில்லாத ப(ண்)டம் ஆனது. படத்தின் விற்பனைக்கு பெரிதும் உதவிய பத்து வேடங்கள் எந்தவாறு உதவும் என்றும் ஐயமும் இருக்கத் தான் செய்தது. என்னை பொறுத்தவர் படம் நன்றாக இருக்கிறது, முந்தைய பதிவில் சொன்னது போல.. கயாஸ் தியரி மற்றும் பட்டாம்பூச்சி எபெக்ட்களை பற்றி பின்னால் பார்ப்போம். முதலில் பாத்திர படைப்புகளை பற்றி காண்போம்.

படத்தில் மொத்தம் நான்கு கமல்கள்.. என்னடா பத்து வேடங்கள் என்று சொன்னார்களே என்று பார்க்கிறீர்களா? நான் சொன்னது கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று கமல் இந்த படத்தில் எடுத்துக்கொண்ட வெவ்வெறு பரிமாணங்கள் பற்றி. படத்தில் சிறு சிறு விஷயங்கள் கூட சிலாகிக்க தகுந்தவை.. படத்தின் கதை எல்லோருக்கும், படம் பார்க்காதவர்களுக்கு கூட தெரியும் என்பதால் அதை பற்றி பெரியதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை.

படத்தில் நாம் முதலில் எடுத்துக்கொள்வது, மணற் கொள்ளையை எதிர்க்கும் வின்சென்ட் பூவராகன் பாத்திரம். அதில் நான் கவனித்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.

1. பெரும்பாலும் தலித் இன மக்கள், கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட, கிறித்துவ - இந்து கலந்த பெயர் வின்சென்ட் பூவராகன். இதில், நாகர்கோயில்காரராக பூவராகனை வடித்திருப்பதிலும் இது சரியே என்று தெரிகிறது.
2. கே.எஸ்.ரவிகுமார் படம் என்றாலே கற்பழிப்பு காட்சிகள் இருக்கும் என்று எல்லோரும் விமர்சனங்களில் எழுதியிருந்தனர். ஆனால், அந்த விஷயம் கதையில் மிக முக்கியமானது. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். தனது மேலாடை உருவப்படும் போது ஆன்டாள், நாராயணா என்று ஆண்டவனை அழைக்கிறாள். திரௌபதிக்கு சேலை தந்து காத்தது போல், இங்கேயும் நுழைகிறது பூவராகன் கதாபாத்திரம். அங்கே கண்ணன் கறுப்பு.. இங்கே பூவராகனும் அப்படியே. கண்ணனும், பூவராகனும் கனுக்காலில் கூர்மையான ஆயுதம் குத்தியே இறந்து போகின்றனர். கமல், பூவராகன் பாத்திரத்தை கண்ணனோடு ஒப்புமை படுத்திய உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.
3.சந்தான பாரதி, பி. வாசு இருவரும் தவறு செய்பவர்களே.. அதுவும் தப்பு செய்ய தூண்டும் பி.வாசுவே பெரிய குற்றவாளியாக தோன்றுகிறார். ஆனால், கதையில் பி.வாசு சாகாமல் சந்தாபாரதி சுனாமியால் இறப்பது ஏன்? அதற்கான காரணங்கள்
அ) பெண்ணை மானபங்க முயற்சி செய்ததால்
ஆ) பி.வாசு இறந்திருந்தால் சந்தான பாரதி மணற்கொள்ளையை தொடர்ந்திருக்கலாம். இப்போது, பி.வாசுவின் மகன்களை பூவராகன் காப்பாற்றியதால், அவரது கால்களில் விழுந்து மனது மாறுகிறார். இனிமேல் மனற்கொள்ளை நிச்சயம் நடக்காது
இ) பூவராகனை விட சந்தான பாரதி தான் பி.வாசுவுக்கு உறவினர். ஆனால், பூவராகனும் சந்தானபாரதியும் இறந்து கிடக்கும் இடத்தில் அவரது எல்லா உறவினரும் பூவராகனை சுற்றியே. என்னதான் உறவினராய் இருந்தாலும், நல்ல உள்ளங்கள் போற்றப்படுகிறான் என்பது உணர்த்தப்படுகிறது இங்கே
4. கிருஷ்ணவேணி பாட்டி, இறந்த பூவராகனை மகனாக நினைத்து அழும்பொழுது சாதி உணர்வுகள் உடைத்தெரியப்படுகிறது.. அதற்கேற்றார்போல் அங்கே வசனங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

"நம்ம ஆராமுதன் சிவப்பால இருப்பான்"
"உள்ளே சிவப்பு தாண்டா.. உழச்சு உழச்சு கறுப்பாயிட்டான்"

இப்போது பொதுவான சில விஷயங்கள்...

1. இரண்டாம் உலகப்போரில் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு இருந்தது ஜப்பானும் (கடைசியில் சுனாமி என்று கத்தி சொல்வதற்கும் இவர் உதவி உள்ளார். நன்றாக பார்த்தால் இந்த சுனாமிக்கு முன்னர் ஜப்பான் நாட்டை சேர்தவர்கள் தான் அதை பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்தனர்), அமெரிக்காவும்.. அந்த இரண்டும் நாடுகளும் உலகத்தை அழிக்கும் சக்தியை எதிர்த்து நேரடியாகவும் மறைமுகமாகவும் போராடுகின்றன.. இதற்கு வழக்கம்போல் இந்தியா உதவுகிறது
2. இந்தியாவில் பஞ்சாப் (அவ்தார் சிங்), ஆந்திரா (பல்ராம் நாயுடு), தமிழ்நாடு (கோவிந்த்) (நரசிம்மராவ் என்று வரும் அந்த கொரியர் அலுவலக கன்னட இளைஞனையும் சேர்க்கலாம்) என்று மாநிலங்களுக்கு இடையே கதாபாத்திரங்கள் அமைத்து, அவர்களும் தீய சக்தியை அழிக்க மறைமுகமாகவோ நேரடியாகவோ உதவுகின்றனர்
3. மூன்று முக்கிய மதத்தை சார்ந்த கதாபாத்திரங்கள் (கோவிந்த், வின்சென்ட் பூவராகன், கபி ஃபுல்லாகான்)
4. ஒரே மதமாயினும் வேறு வேறு வகுப்பை சார்ந்தவர்கள்

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மெல்ல மெல்ல கதைக்கு ஏற்றவாறு அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.. நன்றாக இன்னும் ஆராய்ந்து பார்த்தால் கமலின் புலமை நமக்கு தெள்ள தெளிவாக தெரியும்..

இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் அடுத்த பதிவில்.. காத்திருங்கள்..

உங்கள் எண்ணங்களையும் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்



பின் குறிப்பு : நான் அக்மார்க் ரஜினி ரசிகன் என்பது நான் பிளாக் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து பதிவுகளை படிப்பவர்களுக்கு தெரியும்

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - எங்கெங்கும் விமர்சனம்

பிளாக் உலகம் ஆரம்பித்த பிறகு, ஒரே படத்திற்கு இத்தனை விமர்சனங்கள் கிடைத்தது தசாவதாரதிற்குத் தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள். விமர்சனங்கள் படித்த பிறகு படத்திற்கு செல்வோர் இவர்களின் விமர்சனங்கள் பார்த்து மண்டை குழம்பி போய் உள்ளனர்.. கயாஸ் தியரி, பட்டர்பிளை இபக்ட் என்று புதுசு புதுசாக சொல்கிறார்கள்.. ஒன்றும் புரியவில்லை.. இரண்டாவது நாளே ஓசி டிக்கட்டில் படம் பாத்தாகிவிட்டது. உண்மையில், எனக்கு படம் பிடித்து தான் இருந்தது.. அப்ப விமர்சனம் எழுதலையா என்று கேட்கிறீர்களா.. இதோ நாளை இரண்டாவது தடவையாக சொந்த காசில் பார்க்க போகிறேன்.. வந்து விரிவாக எழுதுகிறேன்