Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Sunday, June 03, 2007

பயண பாதையில் ஒரு மைல்கல்

சென்னையில இருந்தப்போ ஒரு மூணு நாள் லீவ் கிடச்சா உடனே சொந்த ஊருக்குத் தான்.. வேற எந்த யோசனையும் மனசுல வராது.. ஆனா இங்க, அமெரிக்கா வந்த பிறகு, மாசத்துக்கு ரெண்டு வாரமாவது வெளில சுத்துறதே வேலையாயிடுச்சு எனக்கு.. அதுவும், இப்போ கொலம்பஸை மையமா வச்சு ஸ்கைபஸ்னு ஒரு புதிய ஏர்லன்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க.. அதுல தொடக்க டிக்கட் விலை பத்து டாலர் தான்.. அப்புறம் ஒவ்வொரு பத்து டிக்கட்டிற்கும் பத்து டாலார் ஏத்துறாங்கன்னு நினைக்கிறேன்.. முதல் நாள் காலைல இதை செய்தில கேட்டவுடனே, மடமடன்னு நண்பர்கள் கூட ஒரு கூட்டத்தை போட்டு லாஸ் ஏஞ்சல்ஸ், புளோரிடா, சான் பிரான்ஸிஸ்கோன்னு ரெண்டு வார கேப்ல டிக்கட் புக் பண்ணி, அதுல லாஸ் ஏஞ்சல்ஸும் போயிட்டு வந்தாச்சு.. நம்மளோட அதிர்ஷடம் நாம வந்த சமயத்துல இப்படி ஒரு ஏர்லன்ஸ் ஆரம்பிச்சு, நம்ம நெஞ்சுல, நாட்டாமை சொல்ற மாதிரி பீர் ஊத்திருக்காங்க..இவ்வளவு கம்மியான விலைல கொடுத்தாலும், மத்த எல்லாமே காசு தான்.. உங்களுக்குன்னு ஒரு சீட் நம்பர் சொல்ல மாட்டாங்க.. அங்க போய் க்யூவுல நிக்கணும்.. அப்புறம் உள்ள போய் எந்த சீட் கிடைக்குதோ அதுல உட்காரணும்.. அப்படி நான் வரிசைல நின்னு சீட்ல உட்கார்ந்தப்போ, நம்ம ஊர் பஸ்ல சீட் பிடிக்கிறது தான் ஞாபகம் வந்தது.

எங்க ஊருக்கு அரை மணிக்கொரு பஸ் தான் இருக்கும் திண்டுக்கல்ல இருந்து. அதனால ஒரு பஸ், பஸ்ஸ்டாண்டை விட்டு கிளம்பின பிறகு, அடுத்த பஸ் வர்றதுக்குள்ள நல்ல கூட்டம் சேர்ந்திடும். பஸ், பஸ்ஸ்டாண்டுக்குள்ள நுழையிறதுக்குள்ள, எல்லோரும் ஓடிப்போய், ஜன்னல் வழியா, கர்ச்சீப்-லயிருந்து, துண்டு, வயர்கூடை, சாக்கு வரை எல்லாத்தையும் வச்சு இடம் பிடிப்பாங்க.. சில சமயம் வாய்க்கா வரப்பு தகராறைவிட இந்த சீட் பிடிக்கிற தகராறு பெருசா இருக்கும். சீட்டு பிடிக்க பஸ் கூடவே ஓடி வர்ற கூட்டத்துக்குள்ள நிதானமா பஸ் ஓட்ற அந்த டிரைவர்களை பாராட்டியே ஆகணும்.. அப்படி ஒரு கொல வெறி நம்ம மக்கள்கிட்ட இருக்கும் சீட் பிடிக்க..

இந்த ஸ்கைபஸ் ஏர்லைன்ஸ் விமானத்துல ஏறிட்டா, உள்ளாற எல்லாமே காசு தான்.. தண்ணில இருந்து பர்கர், ஸ்நாக்ஸ் எல்லாமே உள்ளாற விக்கிறாங்கா.. நீங்க வேணும்னா தலையணை போர்வைகூட உள்ள வாங்கிக்கலாம். அதை உங்க வீட்டிற்கும் எடுத்துட்டு போகலாம். என்ன வாங்கினாலும் நமக்கு ஒரு இருபது டாலர் எக்ஸ்ட்ராவாகாது.. அப்புறமென்ன, அதுவும் நாலரை மணி நேர பயணத்துல அப்படி என்ன நாம சாப்பிட்டுவிடப்போகிறோம்.

இந்தியாவில் இருக்கும் போது பெரும்பாலான பயணங்கள் எல்லாமே பஸ்ஸில் தான் இருக்கும். ரொம்பவும் அரிதாக, ரயிலில் இருக்கும். பஸ் பயணங்கள் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்களையே தந்திருக்கு.. அதுவும் அப்போவெல்லாம் வீடியோ இருக்க பஸ்ல போறது தான் பிடிக்கும்.. அடுத்த நாள் ஆபீஸ் இருந்தாலும், ஏற்கனவே பலதடவை பார்த்த படமா இருந்தாலும், அது எவ்வளவு மொக்கப்படமா இருந்தாலும் நைட்டு ரெண்டு மணிவரையாவது படம் பாக்காம இருக்க முடியாது.. நானும் எப்படியாவது தூங்கிடணும்னு கஷ்டப்பட்டு கண்ணைமூடுவேன்.. கொஞ்ச நேரத்துல என்னையும் அறியாம அந்த படத்தை பாத்துக்கிட்டு இருப்பேன்.. கண்டக்டரா வீடியோவை நிப்பாட்டாதவரை, நமக்கு தூக்கம் கிடையாது.

ஒரு முறை என் சித்தி பொண்ணு கல்யாணத்திற்காக ரெண்டு நாளைக்கு முன்னாடியே டிக்கட் புக் பண்ணியும், ஆபீசுல வேலை இருந்ததால என்னால போக முடியல. அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி.. வேளச்சேரில இருந்து பஸ் பிடிச்சு தாம்பரம் போயாச்சு.. வர்ற எந்த பஸ்லயும் இடமே இல்லை.. ஒரு பஸ்ல சீட் இல்ல.. தரைல தான் உட்காரணும், ஆனா டிக்கட் விலை ஒண்ணுதான்னெல்லாம் மனசாட்சியே இல்லாம கேக்க ஆரம்பிச்சுட்டான். கூட்டத்தை பாத்துட்டு அங்கிருந்த வேன் வச்சிருக்கவங்க, திருச்சிக்கு ட்ரிப் கூட அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நமக்கு இந்த மாதிரி வேன்ல போறதுலையும் இஷ்டம் இல்லை.. கடைசியா, பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் வந்தது.. அதுல ஏறினா, நிக்கக் கூட இடமில்லாத அளவு பயங்கர கூட்டம்.. வேற வழியில்லாம் நைட்டு முழுக்க தூங்காம அந்த ஏழு மணிநேரமும் நின்னுகிட்டு தான் திருச்சி போய் சேர்ந்தேன். இன்னொரு தடவை, வேற வழியே இல்லாம புஷ்-பேக் இல்லாத ஒரு அரசு பஸ் தான் கிடச்சது.. பரவாயில்லைன்னு நினச்சு உட்கார்ந்தா, இன்னொரு மாப்பெரிய மனிதர் என் பக்கத்துல உட்கார்ந்தார்.. சென்னை வந்து சேர்றதுக்குள்ள, ஜூஸ் ஆகாம தப்பிக்க என்னென்னமோ பண்ணவேண்டியிருந்தது..

இப்படி பயணங்கள் எல்லாமே நமக்கு வித்தியாசமான அனுபவத்தை தான் தந்திருக்கிறது.. இப்படியான ஒரு நிலா வெளிச்ச பயணத்துல தான் நான் அந்த சுடிதார் நிலாவை சந்தித்தேன்.. இரு கண்கள் போதாதுன்னு அவசர அவசரமாக என் உடம்பெல்லாம் இந்திரன் போல கண்கள் முளைக்க வைத்தவள் அவள். அந்த அனுபவம் பற்றி, அவளை பற்றி பின்னாடி ஒரு நாள் வேறோரு பதிவுல சொல்றேனே..

Sunday, February 25, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 3

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2

எனது சிறு வயதில், எங்கள் சிறுமலை பற்றியும் அதன் வளத்தை பற்றியும் ஏகப்பட்ட கதைகளை கேட்டுருக்கிறேன். அந்த அளவுக்கு வளங்கள் இப்போ அங்க இருக்கா, மனிதர்கள் காட்டை அழிக்க ஆரம்பித்த இந்த காலத்துலன்னு தெரியல. இப்பவே அந்த கதைகளைச் சொல்லாம என் நண்பர்களுக்கு நான் எப்போ அந்த கதைகளை இந்த பயணத்துல சொன்னேனோ அப்பவே உங்களுக்கும் சொல்றேன்.

மெல்ல சூரியன் கீழ் வானத்தில் தலையை சாய்க்க ஆரம்பித்து இருந்தான். எங்கள் பேருந்து ஆடி அசைந்து சிறுமலைபுதூர்ங்கிற ஊருக்கு வந்தது. அது தான் பஸ் போற கடைசி இடம். அங்க இருந்து மறுபடியும் திண்டுக்கல் நோக்கி கிளம்பிடும். வரும் வழியில் களைப்பில் எனது நண்பர்கள் சின்ன தூக்கத்தை போட்டிருந்தனர். நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கி பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். மக்கள் இங்கே சீக்கிரம் கூட்டுக்குள் பறவைகள் மாதிரி போய்விடுவார்களோ என்னவோ, வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.

எங்களுக்கான சில நொறுக்கு தீனிகளையும் சுடச் சுட போட்டு வைக்கப்பட்டிருந்த வெங்காய பக்கோடாவையும் வாங்கிகொண்டோம். என் அண்ணன் இரண்டு பாக்கெட் ஊறுகாயை வாங்கி வைத்துகொண்டார். ஊரை விட்டு போகும் ஒரு ஒற்றையடி பாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். அது அமாவாசையை ஒட்டிய இரவு என்று நினைக்கிறேன். அப்படியே கருப்பு வண்ணத்தை இறைத்தது போல எங்களுக்கு முன்னே இருட்டு கவிழ்ந்து கிடந்தது. நாங்கள் வைத்திருந்த டார்ச் லைட்டை பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். அருகில் நீர் ஓடும் சிறிய வாய்க்கால் தெரிந்தது. உடனே எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த என் அண்ணன் அதனருகே நின்று, தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த குவாட்டர் பாட்டலை எடுத்தார்.

அவர் ஊறுகாய் வாங்கும் போதே நினைத்தேன். இப்படி ஏதாவது 'நாட்டாமை' மேட்டர் வைத்திருப்பார் என்று. எங்கள் பையில் இருந்த பிளாஸ்டிக் டம்ளரில் குளிர்ந்த தண்ணீரை பிடித்து அதனோடு குவாட்டரை கலந்து, என் இரு அண்ணன்கள் குடிக்க ஆரம்பித்தனர். நானும் எனது நண்பர்கள் அந்த இருட்டில் வெங்காய பக்கோடாவை கொறிக்க ஆரம்பித்தோம்.

இங்கே தான் இந்த மலையின் ரகசியத்தை என் நண்பர்களுக்கு நான் சொல்ல ஆரம்பித்தேன். இது கிட்டதட்ட ஒரு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால நடந்தது. எங்கள் ஊரில் வாழும் ஒரு தச்சர், ஊர் பண்ணையார் வீட்டுக்கு பெரியதொரு கட்டில் செய்ய வேண்டுமென்று தோதான மரங்கள் பார்ப்பதற்காக சிறுமலை காட்டிற்கு சென்றார். அவர் அப்படி சென்று மரங்கள் பார்த்து வருகின்ற வேளையில் ஏதோ ஒரு கட்டை அவரது முழங்காலை கிழித்துவிட்டது. அந்த காட்டில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊருக்குள் சீக்கிரம் வந்துவிட வேண்டுமென்று, வேகமாக நடக்க ஆரம்பித்தவர், வழியில் ஏதோ ஒரு செடியின் இலையை பறித்து வழிந்த ரத்தத்தை துடைத்து வந்திருக்கிறார். அப்படி துடைத்து வந்தவர், அடிவாரம் வரும்போது பார்த்தால் அவரின் முழங்காலில் இப்போது அடிபட்ட காயத்திற்கு பதில் காயத்தோட தழும்பு தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு எவ்வளவோ கஷ்டப்பட்டும் அவரால் சரியான அந்த இலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏற்கனவே சொன்னது போல, அனுமார் லட்சுமணனுக்காக சஞ்சிவீ மலையை தூக்கி சென்ற போது அதனோட சிறப்பம்சம் வாய்ந்த மூலிகைகள் சில எங்கள் சிறுமலையில் விழுந்ததாக கதைகளுண்டு..

அங்கே அந்த இரவு நேரத்தில் நாங்கள் மறுபடியும் எங்கள் பயணத்தை தொடங்கினோம். நான் வந்து ரொம்ப காலமானதால், எனக்கு வழி ஞாபகம் இல்லை. என் அண்ணனுக்கு மட்டுமே தெரியும். அவரும் இப்போது வழி சொல்லக்கூடிய நிலமையில் இல்லை.

Thursday, February 01, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2

இந்த பயணத்தின் முதல் பகுதி

எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் (பெரும்பாலும் எந்த கிராமத்துக்கு போகும் பேருந்துகளும்) பேருந்துகள் நிற்பதற்கென்று ஒரு இடம் இருந்தாலும் எங்கே யார் குறுக்கே கையை நீட்டினாலும் பேருந்து நிற்கும். சிறிய ஊரான எங்கள் ஊரிலேயே, ஊரை விட்டு வெளியேறுவதற்குள் ஐந்து நிறுத்தங்கள் இருக்கும். எங்களை சுமந்து கொண்டு சென்ற அந்த சிறுமலைக்கு போகும் வண்டியும், கைகாட்டி நிற்போருக்கெல்லாம் நின்று அவர்களை உள்ளே திணித்துகொண்டு சென்றது. ஆசை உள்ளவன் கல்யாணப் பந்திக்கு சென்றால் மூக்கில் எட்டிப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவது போல வெளியில் நாலும் பேர்,இரண்டு பக்க படிகளில் தொங்கி வர, ஆடி ஆடி குலுங்கி குலுங்கி மலை ஏற ஆரம்பித்தது பேருந்து.

ஜன்னல் ஓர இருக்கைகள் தான், இந்த மாதிரி பயணங்களில் நன்று. எனக்கும் அது தான் ரொம்ப பிடிக்கும். மெல்ல மலயேற ஆரம்பித்த போது சில்லென்று சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது. என் தலை முடியெல்லாம் அந்த காற்றோடு போக ஆசை பட்டு எல்லாப் புறமும் கலைந்தது. கடந்து சென்ற பாறைகளும் அதில் எழுதப்பட்ட ஜோடிப் பெயர்களும், காதலை இன்னும் உலகுக்கு சொல்லிகொண்டிருந்தன. தூரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை சின்ன தலையணை போல தெரிய ஆரம்பித்தது. அட! சொல்ல மறந்துவிட்டேனே. திண்டுக்கல் என்பதற்கு கல்லினாலானா தலையணை என்று பொருள். திண்டு என்றால் தலையணை. திப்பு சுல்தான் மன்னர்கள் இங்கிருந்து தான் ஆட்சி செய்தனர். இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவகங்கைக்கும், நாமக்கல் மலைக்கோட்டைக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாக சொல்வதுண்டு. அந்த சுரங்கத்தின் வாசல் வரை நான் சென்று வந்ததுண்டு, எனது சிறிய வயதில். மருது சகோதரர்கள் உதவி கேட்டு திப்புசுல்தானை தேடி அப்படித் தான் வந்ததாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய சிவகங்கை சீமை படத்தில் பார்த்த ஞாபகம் இன்னமும் உண்டு.

என் நண்பர்களுக்கு இந்த மாதிரி பயணமெல்லாம் கொஞ்சம் புதுசு. சுற்றியுள்ள மனிதர்களும் அவர்களின் மண் வாசனையும் ரொம்ப புதுசு. தோளில் துண்டு போட்டு கொண்டு வெறும் வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு இதுவெல்லாம் ரொம்ப சாதாரணம். பஸ்ஸில் ஏறினாலோ பக்கத்து தெரு பாமா முதல் பக்கத்து ஊரு பரிமளா வரை, ஆலை இயந்திரங்கள் போல சத்தமாக பேசிக்கொண்டே வருவது பெண்கள் இயல்பு. நடத்துநர்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். இளவயது நடத்துநர்கள் பாதி பேர் காதலித்து, குறிப்பாக பேருந்தில் வந்த பெண்களையே, கல்யாணம் செய்து கொள்வார்கள். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் கல்யாணமாகாத சித்தியோடு பேருந்தில் ஏறினேன். அதுவரை பழைய தத்துவ பாட்டு பாடிக்கொண்டிருந்த பேருந்தில், நடத்துநர் வேகமாக கேசட்டை மாற்றி, கோபுர வாசலிலே படத்தில் தேவதை போலொரு பெண்ணிங்கே வந்தது தம்பி என்ற பாட்டை போட்டார். இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன். குறிப்பாக சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில் வரும் வாசக் கருவேப்பிலையே, அடிக்கடி பேருந்துகளில் கேட்ட பாடல்.

எனக்கு தெரிந்தவரை, ஊட்டி மலைப் பாதையை விட, எங்கள் சிறுமலை பேருந்து பாதை கொஞ்சம் அபாயகரமானது. அதிகமான இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளும் உண்டு இங்கே. அதிகமான போக்குவரத்து இல்லாததால் ஒரு வழி பாதை மட்டுமே. எதிர் பேருந்தோ மற்ற வேன் போன்ற வாகனமோ வந்து விட்டால் இரண்டும் கடந்து கொள்வது சற்று சிரமமான விஷயம். ஏதாவது ஒரு வண்டி மற்ற வண்டிக்காக கொஞ்சம் அகலமான இடத்தில் காத்திருந்து அப்புறம் தான் கடந்து போகும். வெளிப்புற மலைகளை கடந்து மெல்ல மலைக்கூட்டத்துள் பேருந்து புகுந்தது. அதுவரை கொஞ்சம் பொட்டல் காடாய் இருந்த மலைத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாக அடர் காடாய் மாறியது. வானத்தை தாங்கள் தான் தாங்கி பிடிப்பதாய் கர்வம் கொண்டு தலை நிமிர்ந்த மரங்கள். அதில் அதனை சுற்றி படர்ந்து கிடந்த மிளகு கொடிகள். அந்த இலைகளின் வாசனையே சொன்னது தாங்கள் மிளகு கொடியின் பிள்ளைகள் என்று.

முக்கனி என்று சொல்லப்படுகின்ற மா, பலா, வாழையெல்லாம் இங்கே தான் வழியெல்லாம் விளைந்து கிடந்தது. தனது குலைகளை தாங்க முடியாமல், அதிக அறிவு இருந்தாலும் செருக்கு கொள்ளக்கூடாது தங்களை மாதிரி என்று ஊருக்கு தத்துவம் சொல்லிகொண்டிருந்தன பணிந்து கிடந்த வாழை மரங்கள். சிறுமலை வாழைப்பழத்தின் சுவையினை நாக்கினால் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், காதுகள் வழி கேட்டீர்ப்பீர்கள். அந்த சுவை தந்தது இந்த மண் தான். இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் சங்க காலத்தில் மட்டுமே படித்த கேட்ட பழங்களான அத்திப்பழம் போன்ற வகைகளும் இங்கே ரொம்ப பிரசித்தி.

(இன்னும் பல சுவையான தகவலுடன், பயணம் தொடரும்)

Tuesday, January 30, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில் 2

முதல் பகுதி

காதல் என்ற வானத்தில் பறவைகள் ஏராளம். நாங்கள் மட்டுமல்ல, என் வகுப்பில் இன்னும் சில பறவைகளும் இருந்தன. எங்களை போல காதலை மண்ணுக்குள் புதைத்து வளர்க்காமல், தேசிய கொடியை போல உயரத்தில் பறக்க விட்டு வாழ்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் அவர்கள் இருவரும் விளையாட்டுபிள்ளைகள். தினமும் நூறு முறை சண்டையிடுவார்கள். ஆயிரம் முறை சேர்ந்துகொள்வார்கள். அவர்களும் அந்த சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.

அவள் என்னை கையசைத்து அழைக்க, டிரைவரின் எதிர்புறம் அமர்ந்திருந்த நான் அவள் இருக்கை நோக்கி நடந்தேன். ஓடிய திருடனை பிடிக்க போலீஸ் போகும் போது இடையில் திடீரென ரயில் வண்டி வந்துவிடுவதை போல, திடீரென்று என் நண்பனின் காதலி, எனக்கும் தோழி தான், கோபமாக வந்தாள் பின்னிருக்கையில் இருந்து. நான் என்னவளின் இருக்கை பக்கத்தில் வர, அவள் பக்கத்தில் இவள் வந்து அமர்ந்தாள். விதி என்பதன் சதங்களையும், அது அடிக்கும் நாலையும் ஆறையும் பார்த்து கை தட்டுவதா, தலையில் கொட்டுவதா என்று தெரியாமல், வந்த வழியே திரும்பினேன். அவள் என்னைப் பார்த்தாள். அதில் என்றையும் விட ஏமாற்றமும், கண்களின் ஓரம் ஒரு துளி நீரும் தேங்கி நின்றது. முதன் முதலாய் எனக்காய் அவள் இதயத்தின் கூட சேர்ந்து கண்களும் அழ ஆரம்பித்தது. தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன. மறுபடியும் என் இருக்கையில் அமர்ந்து இருக்கையில், வேகமாக வந்த என் நண்பன், அவளின் காதலன், அவள் இருக்கையின் கீழே அமர்ந்து, அவள் மடியில் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தான். நான் என்னவளை பார்த்தேன்.

எதிர்புறம் வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்தில், அவள் முகம் மறைந்து மறைந்து தெரிய ஆரம்பித்தது. மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவை போல அந்த இருட்டான வாகனத்தில் எனக்கு அவள் தெரிந்தாள். இடுப்பேறி அமர்ந்து பருப்பு சாதம் சாப்பிட்டு நிலவை கண்டு ஏமாந்து போகும் கைகுழந்தையை போல நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள்-

நேற்று நடந்த ஏமாற்றங்கள் நெஞ்சில் நிறைந்து கிடந்தாலும், அதற்கு அவள் காரணமில்லை என்று புரிந்திருந்தது மனசுக்கு. காலையில் வழக்கம் போல கேன்டீனில் நான் சாப்பிட, அவளை துணைக்கு அழைத்தேன். அவளும் வந்தாள். நான் என்றும் போலவே அவள் கூட பேசிக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கூட நடந்து வருவதை நிறுத்தினாள்.

கோபமா என்று கேட்டாள்.. உன் மீதில்லை என்றேன்.. சுற்றுலாவை விடு. இன்னும் இருக்கும் முப்பது நாட்களும் நான் உன்னருகே தான் இருப்பேன். நானென்ன செய்வது. நான் உன்னை அழைத்த போது, விதியை அழைத்ததாக அது வந்து என்னருகில் அமர்ந்து கொண்டது என்றாள். நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள். அதைப் பார்த்த, பக்கத்தில் இருந்த மரத்தின் இலைகளெல்லாம் மலராக மாறியது. இலையே மாறும் போது, நாமென்ன என்று நினைத்ததோ என்னவோ, அதன் வேர்களும் பூவாய் விரிந்தது.

அடுத்து வந்த அத்தனை நாட்களும் என் கூடத் தான் இருந்தாள். வகுப்பின் இருக்கையில் இருவரும் சேர்ந்தே அமர்ந்தோம். எனக்காய் ஏடுகளில் அவள் எழுதினாள். அவளுக்காய் நான் அவளை ரசித்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது பிறப்பாய் தெரிந்தது. நானும் தினமும் மூழ்கி முத்தெடுத்தேன். முத்தாய் அவளே மறுபடி மறுபடியும் கிடைத்தாள். இப்படியாக சென்ற ஒரு நாளில், மழை பெய்து தரையெல்லாம் புது வண்ணமடித்த நாளில், வகுப்பில், யாருமே இல்லாத ஒரு பொழுதில், ஜன்னலில் முகம் தேய்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் அவள். நானும் எழுதிய ஏட்டை மூடிவைத்து அவளருகில் சென்று நின்றேன். மெல்ல அவள் இடை பற்றி, பின்னால் இருந்து அணைத்தேன். நான் அணைத்தவுடன் அவளுள் இருந்த பெண்மை பிரகாசமாய் விளக்கேற்றி வைத்தது. என் மூச்சுகாற்று தான் அந்த விளக்கை ஏற்றி வைத்ததோ. மெல்ல திரும்பி, என்னைப் பார்த்து நாணமாய் சிரித்து, எனது கைகளை விடுவித்தாள். ஆனால் அதை பற்றி அவள் ஏதும் கேட்கவில்லை. நானும் ஏதும் தொடங்கவில்லை.

கடைசி நாள்-

இருவரும் ஒரே பெஞ்சில்.. அவன் கைகளை பற்றிக்கொண்டே அவள் இருந்தாள், கடலடியில் மண்ணைப் பிடித்த நங்கூரம் போல.. எதுவும் பேசவில்லை. கடிகாரத்தின் முட்கள் மட்டும் மணிக்கொரு தடவை பேசிக்கொண்டன. முத்தமிட்டுக்கொண்டன. மௌனமாகவே காற்று கூட நடை போட்டது. சூரியன் கூட என்ன செய்கிறோம் என்று எட்டி பார்த்துவிட்டு சென்றான். அன்றைய பொழுது எழுந்து செல்கையில், அவள் என் கை பிடித்து கொடுத்த முத்தமும், காதில் சொன்ன ஐ லவ் யூவும் தான் இன்று வரை என் இதயதில் உலராமலும், லப் டப் ஓசைக்கு பதிலாகவும் உயிரூட்டுகிறது

(இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது)

Monday, January 29, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்

ஏதேச்சையாகத் தான் அமைந்தது. இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று வேப்பமரத்தின் கீழே கட்டிலில் படுத்து மேலிருக்கும் இலைகளை எண்ணிக்கொண்டிருந்த அந்த பொழுதும் சரி, வீட்டில் விட்டத்தை பார்த்து பெயர்ந்த சுவர்களை கவனித்து கொண்டிருந்த அந்த மீசை முளைத்த காலத்திலும் சரி நினைத்ததில்லை நான். அது கல்லூரியில் இருந்து போன சுற்றுலா தான். ஆனால் அது ஏதோ தனியாக நானும் அவளும் நடத்திய ஊர்வலமாகத்தான் எனக்கு நெஞ்சில் பதிந்து போனது.

முதல் நாள் கிளம்பும்போதே, அவள் சொன்னாள்.. மற்றவர்களுக்காக, மற்றவர்கள் நம்மளைப் பற்றி கதைப்பார்கள் என்பதற்காக உன் கூட நான் இதுவரை, நான் நினைத்த வண்ணம் பழகியதில்லை. எல்லா உணர்ச்சிகளையும் இலை மறைத்த காயை போலவே மனதுள் அடக்கி இருந்தேன். ஆனால் பழுத்த பின், பறவைகளுக்கு தெரியாமலா போய் விடும். இதோ இன்னும் முப்பது நாட்கள் தான் இந்த கல்லூரி வாழ்க்கை. அதற்கடுத்து, நாம் இருவரும் பேசிக்கொள்வது கூட, கடவுள் பக்தன் உறவு மாதிரி தான். உன் அருகே இருக்க நினைத்த இந்த இரண்டு வருடங்களும் தூரமாய் இருந்தேன்.. ஆனால் எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமலா போய் விடும், உனது சில்லென்ற பார்வை போல.. அந்த சில்லான பார்வை தான் எனது இதயத்தை உருக்கி, ஒரு வேதியியல் அதிசயத்தை நடத்தியே விட்டது.

இந்த சுற்றுலாவில் மட்டுமாவது உன் அருகிலே நான் அமர்ந்து இந்த உலகத்தை ரசிக்கிறேன். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்து இளகிய சுவர்களை இறுக்கமாக்கி, அவசரமாய் பதிப்பித்துகொண்டது.. இன்று அதனை படிப்பதற்காக நான் அன்று அச்சிட்டுக் கொண்ட புத்தகப் பக்கங்கள் அவை.

மனசுக்குள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், நடக்காத சில விஷயங்களுக்காக அந்த ஆசைகளை எரித்துக்கொண்டோம், எங்களுக்குள் சொல்லாத காதல் முளைவிட்ட போது. இப்போது பிரிகின்ற வேளையில், வேருக்கு வேறிடம் போவது பிடிக்காமல் அந்த மண்ணோடு சில பொழுது மயங்கிகிடக்க விரும்புகிறது..

சுற்றுலாவும் இனிதே தொடங்கியது.. போகும் வழியில் ஆட்டமும் பாட்டமும், கூத்தும் கும்மாளமும் நிகழ்ந்தது. அவள் அவள் தோழியுடனும், நான் எனது நண்பர்களுடனும், எனது நண்பர்கள் அவள் தோழியுடனும் என்று ஒரு தனியுலக இளமைகொண்டாட்டங்களே அங்கு நடந்தது.. அவ்வளவு கும்மாளம் அங்கே கூத்தடித்தாலும், நானும் அவளும் மட்டும் தனித்தே கிடந்தோம். தரையில் பட்ட பாதரசம் அதன் மீது ஓட்டாதவாறு.. தாமரை இலையில் பட்ட நீர்த்துளி அதில் பட்டு நழுவுமாறு.. அவ்வப்போது அவள் என்னை பார்வையால் மென்றாள். அந்த பார்வையில் நான் மெழுகாய் உருகிப்போனேன்.

போகும் வழியில், சாப்பிட உட்கார்ந்த போது கூட, எதிர் எதிரே தான்.. அவள் ஒரு மெல்ல, மல்லிகைப்பூ இட்லி என்று சொல்வதாலோ என்னவோ, மல்லிகை பறிப்பது போல, அதை பறித்தெடுத்து, குவித்த விரல்களில் பிடித்து, இதழ் படாமல் சுவைத்தாள்.. அதை பார்த்ததாலே ஒரு தட்டு இட்லிக்கு எக்ஸ்ட்ராவாக பில்லைக் கட்டினேன்..

அவள் சொன்ன திட்டம் விதி என்னும் ஆளுக்கு கேட்டதோ என்னவோ.. அவன் வந்து பசைபோட்டு அவளருகில் அமர்ந்திருந்தான். அவளுக்கோ சுற்றியுள்ளோரை கண்டு பயம். முருங்கை மரம் ஏறி எத்தனையோ முறை வேதாளத்தை நான் பிடித்து வந்தாலும், அது மறுபடியும் மரமேறி, தலைகீழாய் ஊஞ்சலாடி, என்னை பார்த்து இளித்தது. அவள் மனதுக்குள் ஒரு தராசில் காதல் உணர்வும் மற்றொன்றில் சமுதாய பயம், பெற்றோர் பாசம், போன்றவை மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டிருந்தன.

எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கூட நாங்களிருவரும் இரண்டு ஓரத்திலும் தான்.. நான் அவளது தோழிகளுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துகொண்டேன்..அவள் என் நண்பர்களுடன் எடுத்துகொண்டாள்.. இருவரும் சேர்ந்து ஒன்று கூட இல்லை. அவள் என்னை எடுத்தாள்.. நான் அவளை எடுத்தேன்.. இப்படியே போனது அந்த பகலெல்லாம்..

சுற்றுலா சுற்றுலா என்று எல்லா இடமும் சுற்றியே வந்தோம். ஆனால் அவள் சொன்னது போல் அவளருகில் நானோ என்னருகில் அவளோ அமரவில்லை. எங்களுக்கு பதில் விதி இருவருக்கிடையில் கால் நீட்டி படுத்துக்கொண்டிருந்தது. அப்புறம் எங்கே மன்மதன் வந்து பாணமெய்வது.. ரதி வந்து நாணம் கொள்வது. திரும்பப் போகும் வழியில், சூரியன் அமெரிக்காவுக்கு வெளிச்சம் தர போயிருந்த வேளை, எங்கள் வாகனம் புறப்பட்ட இடத்தை நோக்கி பின்னால் புகைவிட்டு போய் கொண்டிருந்தது. மெல்ல என்னை சைகையால் அழைத்தாள் அவள். நானும் என் இருக்கை விட்டு, மெல்ல எழுந்தேன், அவள் அருகில் அமர..

(நான் அமர்ந்தேனா, படுத்து கிடந்த விதியை தள்ளிவிட்டு.. நாளை தொடரும்)

Wednesday, January 24, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 1

எனது கல்லூரியில், முதுநிலையான எம்.சி.ஏ படிக்கும் போது இருந்த பிரிய நண்பர்களில் கிரிஷ்ணசாமியும் குமரனும் மிக முக்கியமானவர்கள். கிராமத்தில் இருந்து வந்திருந்த எனக்கு, பல விஷயங்கள் பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல தான் இருக்கும். அதுவும் அப்போது என் ஊரில் இருந்து தினமும், கிட்டதட்ட ஐம்பத்தைந்து கிலோமீட்டர் வந்து செல்வதால், மனசு, போகும் ரயில்வண்டியின் கால அட்டவணை மேலேயே தான் கவனத்தோடு இருக்கும். அந்த இடைப்பட்ட நேரங்களில் கூட அரட்டைகள், ஆட்டங்கள், கடலை என தான் என் வாழ்க்கை அதிகம் கழிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த கணினி பற்றி அதிகம் சொல்லி, புதுப் புது விஷயங்கள் எல்லாம் எனக்கு புகட்டியவர்கள் அவர்கள் தான். எங்களுக்குள் அப்படியொரு சொல்லாத இணைப்பு இருந்திருக்கிறது.. இன்னமும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

செமஸ்டருக்கு முன்னால் படிக்க கிடைக்கும் அந்த இருபது நாட்கள் தான், நாங்கள் ஆறு மாசமாய் படிக்காமல் விட்டதை படிக்கும் நாட்கள். குமரனின் வீடு தான் நாங்கள் படிக்கும் இடம். விடிய விடிய படித்து விட்டு விடியற்காலையில் தான் தூங்குவோம். என்னமோ தெரியவில்லை, ஆந்தையை போலவே அந்த காலங்களில் இரவுகளில் தான் முழித்து கிடப்போம் படிப்பதற்காக. இன்னமும் கிரிஷ்ணாபுரம் காலனி பஸ்ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஹோட்டல் நட்சத்திராவின் முட்டை தோசையும், நன்றாக அடித்து செய்யப்பட்ட கொத்து புரோட்டாவையும் நாங்கள் மறக்க முடியாது. அதுவும் அந்த இரண்டு கரண்டிகளும் அந்த புரோட்டா கல்லின் மீது ஒற்றை கால்கலை தூக்கி போடும் ஆட்டங்களும் விடுகின்ற சத்தங்களும், பாக்காமலும் கேக்காமலும் இருந்ததில்லை.

ஒரு செமஸ்டர் விடுமுறையில், சிறுமலையில் இருக்கும் எனது பெரியப்பா தோட்டத்துக்கு செல்லலாம் என்று எனது நண்பர்களை அழைத்துகொண்டு கிளம்பினோம், நானும், எனது அண்ணன்கள் சிவாவும், குட்டியும், முருகனும். முருகன் எனது அப்பாவின் பங்காளி முறை. அதாவது எனக்கு சித்தப்பா முறை. ஆனால் எனக்கும் அவருக்கும் ஒரு மூன்று வயது தான் வித்தியாசங்கள். அதுவும் அவர் கொஞ்சம் குட்டையாக இருப்பதால் அவரது முருகன் என்ற பெயர் மறந்து பெரியண்ணன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது போல தான் குட்டி அண்ணனும். அவருக்கு சந்திரலால் என்ற பெயர் இருந்தாலும் அவரை குட்டியண்ணன் என்று தான் நாங்கள் அழைப்போம்.

கிராமத்தில் இப்படி முதற் பேர் மறந்து இட்ட பட்ட பெயரே நிலைத்துவிட்ட பலபேர் இருக்கின்றனர். அதுவும் ஒரு வீட்டில் ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் என்று நினைத்து பெண்பிள்ளையாய் பிறந்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு போதும்பெண் என்று பெயர் வைப்பார்கள். அப்படி பெயர் வைத்தால் அடுத்து கட்டாயம் ஆண்பிள்ளை தான் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படியே தான் பெரும்பாலும் நடந்து விடுகிறது. எனக்கு தெரிந்தவரை அப்படித் தான் மூன்று நான்கு குடும்பங்களில் ஆண்பிள்ளை பிறந்திருக்கிறது. இது போன்ற நம்பிக்கைகள் அதிகமுண்டு கிராமங்களில்.

பெரும்பாலும் மலைகளில் செல்லும் பேருந்துகள் சின்னதாக தான் இருக்கும். அப்போதான் சுலபமாக வளைவுகளில் திருப்ப முடியும் என்று. அதுவும் இது போன்ற அதிகம் மக்கள் வந்து செல்லாத இடங்களுக்கு பாதையோ மிகவும் சிறியதாகத் தான் இருக்கும். அப்படிபட்ட சிறுமலைக்கு செல்லும் ஒரு சிறி பஸ்ஸில் ஏறி, கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்தோம். இந்த பேருந்தில் தான் காலை வேலைகளில் பலாப்பழம் முதல் மாங்காய் வரை பலவகை பழங்கள் கொண்டு வருவார்கள். இதற்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மார்க்கெட்டே இருக்கிறது.

எங்கள் ஊரில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தான் நாங்கள் இருக்கும் இடம் இருக்கிறது. ஆனாலும் அந்த சற்றுக்கல் மலைபாதையில் போகவேண்டாம் என்று எனது பெற்றோர் சொல்லிவிட்டதால் தான் இந்த பேருந்து பயணம். இல்லையெனில் அந்த மலைப் பாதையிலே நடந்தே போய் விடலாம் என்பது தான் எங்களது திட்டம். ஒரு பேருந்தில் இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் இது வரை, அப்படி எந்த பேருந்திலும் கணக்கு வைத்து ஏற்றியதாக நான் பார்த்ததில்லை. பத்து புத்தகங்கள் வைக்கப்படும் பள்ளிச் சிறுவனின் பையிலே இருபது புத்தகங்களை திணிப்பதை போல, அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது.

(பயணம் தொடரும்)

Thursday, January 18, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (இரண்டாம் பகுதி)

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)



லிங்கன் அவர்களின் நினைவு மண்டபத்தை பார்த்து வியந்தவாறே நாம், வலது பக்கம் நடந்தால் அங்கே கொரியா போரின் நினைவிடம் ஒன்று இருக்கிறது.. அங்கே கைகளில் துப்பாக்கி ஏந்திய, கண்களில் அந்த வீரம் மின்ன, பதினைந்துக்கும் மேற்பட்ட வீரர்களின் சிலைகள் உள்ளன. தினமும் இங்கே கொரியா நாட்டு தூதரகத்தின் சார்பாக மலர்வளையம் வைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தின் பக்கவாட்டில் கறுப்புக்கலர் கற்களால் ஒரு சுவர் அமைக்கப்பட்டு அதில் பல வீரர்களில் உருவங்கள் பதிக்கப்பட்டிருகின்றன. இது மட்டுமில்லாமல் "சுதந்திரம் சும்மா கிடைப்பதில்லை" என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.



இதன் மறுபுறத்தில், லிங்கன் மண்டபத்தின் இடது பக்கத்தில் வியட்னாம் போரின் நினைவிடமும் இருக்கிறது. இங்கே போரில் போராடிய பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தினமும் அன்றைய தேதியில் மறந்து போன வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக மலர்ச்செண்டு வைக்கிறார்கள். நாட்டின் தலைநகரம் என்பதால் எல்லா இடங்களில் தேசப்பற்று சார்ந்த விஷயங்களே மிகுதியாக தெரிகிறது. இந்த நினைவு இடங்களுக்கு எல்லாம் நாம் சென்று திரும்பும் போது, காதுகளில் துப்பாக்கி ஓசையும் பீரங்கி முழக்கங்களும், கண்களில் போர்க்களத்தின் காட்சிகளும், இதயத்தில் அவர்களின் நாட்டுபற்றும் அதற்கு அவர்கள் தந்த விலையும் இமயமாக எழுந்து நிற்கிறது..

(நம்ம ஊரில் இன்னமும் தலைவர்கள் சிலைக்காக அடித்துக் கொள்வதை கண்ட அந்த கணங்கள் இந்த மாதிரி இடங்களில் ஞாபகம் வர மிகவும் வருந்தினேன்..)



இந்த இடத்திலிருந்து அப்படியே நேரா நடந்து போனால், எலிப்ஸ் பூங்கா வரும்.. அதன் மேல்பக்கத்தில் தான் வெள்ளை மாளிகை. உள்ள விட மாட்டாங்கன்னு தெரியும்.. அதனால வெளில இருந்தே பார்த்தோம்.. வெளியில் இருந்து பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒன்றும் பெரிய விஷயங்கள் இதில் இருப்பதாக தெரியவில்லை.. ஜனாதிபதி இருக்கிறார் என்பதை தவிர. ஆனால் வெள்ளைமாளிகையை நமது ராஷ்ட்ரபதி பவனோடு ஒப்பீடு செய்தால் எனக்கு ராஷ்ட்ரபதி பவன் தான் பிடித்திருக்கிறது.. ஒவ்வொரு முறையும் ராஷ்ட்ரபதி பவனில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்று வந்தவர்கள், அதை பற்றிச் சொல்லும் போதும் அவர்களுடன் நாமும் சென்று வந்ததை போல இருக்கும். ஆனால் அதெல்லாம் வெள்ளை மாளிகையில் இருக்கிறதா என்று பக்கத்தில் குடியிருக்கும் நமது நாட்டாமை தான் சொல்ல வேண்டும். ஆனால் நம்ம ஊருக்கு போனால் எல்லோரிடமும் காட்ட வேண்டுமே அதனால்.. வெள்ளை மாளிகை முன்பு சராமாரியாக புகைபடங்கள் எடுத்துக் கொண்டேன். அதை எடுத்துக் கொண்டு ஊரில் காண்பித்தால் தான் நான் அங்கே சென்று வந்ததாக நம்புவார்கள். நான் நியுயார்க் மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் அடங்கிய டிவிடி எங்கள் ஊரில் வீடு வீடாய் சுத்திக்கொண்டிருக்கிறது. என்னை பாக்கவில்லை என்றாலும் அமெரிக்காவின் பல இடங்களை பார்க்கலாமே என்று தான் அவர்கள் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



வெள்ளை மாளிகையை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, அமெரிக்க பாராளுமன்றத்தை பார்க்க கிளம்பினோம். அதன் போகும் வழிகளில் இருந்த கட்டிடங்கள் எல்லாம் மிரட்டலாய் இருந்தன. அழகாய் வடிவமைக்கப் பட்டு, உயரமாய், நமது மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களை போல எல்லாக் கட்டிடங்களிலும் தூண்கள் நின்று அந்த கட்டிடங்களை தாங்கி கொண்டிருந்தன. சிவப்பு நிற வண்ணத்தில் சில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாய் இருந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தின் அருகில் செல்ல சில பாதுகாப்பு காரணங்களால் போக முடியவில்லை என்பதால் தூரத்தில் இருந்தே பார்த்து வழக்கம் போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். என்னதான் வெயில் காலங்களில் ஊரை சுத்தி பார்த்தாலும் இந்த மாதிரி ஒரு அழகிய ரசிப்பதற்கேற்ப வானம் கருப்பு ஆடை அணிந்து கிடக்கும் இந்த வேலையில் நகரின் தெருக்களில் நடப்பது சுகமானது.



அதுவும் வருடத்தின் முதன் நாளில் இப்படியொரு இனிய பயணம் அந்த வருடமெல்லாம் வசந்தமே என்று நெஞ்சுக்கள் ஒரு சந்தோச விதயை தூவின. அந்த சந்தோச விதை இன்று மரமாய் விளைந்து நிற்கின்றன. அப்படியே பரவி இனிய பூக்களை தூவுகின்றன ஒவ்வொரு நாட்களிலும் நடகின்ற பாதையில் பரப்புகின்றன. அந்த சந்தோச வாசனை படிக்கின்ற எல்லோர் மனசிலும் கலந்து வாழ்வு செழிக்க, காற்றில் கலந்து எங்கும் குடியிருக்கும் இறைவனின் அருளால் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.