Saturday, December 29, 2007

கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்

கண்ணதாசன்.. எளிய வரிகளில், இசையோடு தனது கருத்தை, தேனோடு பாலாக, கலந்து தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்து படைத்தவர்.. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்.. இன்னமும் ஒவ்வொரு நீள் ஒலி குழாய்களிலும் ஒலித்துகொண்டிருக்கும் உன்னத வார்த்தைகளுக்கு வடிவம் தந்தவர்.. இன்னமும் இவரைப் போல, வாழ்க்கைக்கு, வாழ்க்கையோடு ஒன்றிய பாடல்களை தந்தவர் யாரும் இல்லை..

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

இந்த பாடலை, நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் என்று நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் இந்த பாடலை, கேட்டால், யாருக்குத் தான் தெளிவு பிறக்காது.. எந்த மனதிற்குத் தான் ஆறுதல் கிடைக்காது.. இது தான் கண்ணதாசனின் பாடல்களில் இருக்கும் அடிக்கருத்தே..

ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம்.. கேட்க கேட்க படத்தின் நாயகனுக்கு எழுதிய பாட்டில் சிறிது நேரத்தில் நாம் நாயகனாக குதிரை சவாரி செய்வோம்.. வருத்தமென்றாலும், காதல் சொட்டும் வரிகள் என்றாலும், வீரம் என்றாலும், விவேகம் தரும் வேகம் என்றாலும், கண்ணதாசனின் வரிகளுக்கும், அந்த தத்துவதிற்கும் நிகர், அவரின் படைப்புகளே..

எங்கள் ஊர் மைக்-செட்டுகளில் இன்னமும் புதிய பாடல்களை விட அதிகமாய் ஒலித்துக்கொண்டிருப்பது பழைய பாடல்களே.. அதுவும் கண்ணதாசனின் காதல் பாடல்கள் பிரசித்தம்.. கவியரசுவின் காதல் பாடல்களின் கேசட்டுகள் பகுதி பகுதியாய் அடுக்கி வைத்திருப்பார்கள். இங்கே வந்த பிறகு கஷ்டப்பட்டு அதில் பாதியை தான் வலையில் இருந்து இறக்குமதி செய்ய முடிந்தது.

சிவாஜி நடித்த ரத்தத் திலகம் படத்தில் கண்ணதாசனே திரைப்பாத்தில் தோன்றி பாடும் பாடல் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. தன்னை பற்றை அவரே பாடுவது போன்ற ஒரு பாடல்.. வரிகள் எல்லாம் கண்ணாடி போல அவரது நிறைகுறை கொண்ட குணங்களை சொல்லும்..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவிய தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்

இடையில், இப்படி பாடல்கள் படைப்பதால் தன்னை இறைவன் என்று சொல்கிறார் கண்ணதாசன்.. உண்மை தானே

இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்.. இசையில் எல்லா பரிமாணத்தை, உருவி எடுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கையில் இசைத் தேன் மழை பொழிந்தவர். இவரின் ஒவ்வொரு பாடல்களும் ஆராய்ச்சி செய்கின்ற அளவுக்கு ஒரு பெரிய கடல் என்பது ஒவ்வொரு பாடலாக கேட்டவர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும்.

இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. முயற்சி திருவினையாக்கும் என்று முயல்கிறேன்.. கடலில் குதித்து முத்தெடுப்பது என்பது சுலபமில்லை தானே

பாடல்கள் தவிர, இளையராஜவின் படங்களில் பெரிய பலம் பின்ணனி இசை.. அந்த கதாபாத்திரத்தின் துடிதுடிப்பை, உணர்ச்சியை அப்படியே நமக்குள் ஏற்றி, அந்த காட்சியில் நம்மை வைத்து நாம் பதறும் அளவுக்கு, அதற்கு இசை உயிரூட்டியவர் இசைஞானி.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் மடை திறந்து என்று ஒரு பாடல் வரும். அது கிராமத்திலிருந்து இசையப்பாளனாக வந்த ஒருவன், வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னை நினைத்து பாடும் பாடல். கிட்டதட்ட இசைஞானியின் கதை.. அதனால் அதன் பாடல்வரிகளும் அதை ஒத்தே தான் இருக்கும்..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

இங்கே இளையராஜா பற்றிய வரிகளை அழகாக வாலி தந்திருப்பார்.. அதுவும் இந்த வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்துமாறு மேஸ்ட்ரோவே பாடலில் வந்திருப்பார்.. மிகவும் உயிரோட்டமான பாடல்..

இவ்வாறாக, ஒரு இறைவன் பாடல் வரிகளை தந்திருக்க, ஒரு இறைவன் அதற்கு இசை உயிர் தந்திருக்க ஆழ்ந்த அமைதியில் நமக்குள் தெய்வத்தை காண வைக்கும் பாடல், மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்.. இந்த பாடல், தான் இறக்கும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்ணதாசன் எழுதி கடைசிப் பாடல்.

Tuesday, December 18, 2007

கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லா

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் சார்பாக இந்த வாரம் கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லாவை திரையிடுகிறார்கள்.. டிக்கட்களுக்கு, சங்கத்தின் செயலாளர் சரவணகுமாரை (740 549 3707) அணுகவும்.


Saturday, December 15, 2007

சேரன் தேடிய சீதை

பழைய தமிழ் படங்களின் பெயரை மறுபடியும் பயன்படுத்துவதும், பாடலை மட்டுமல்லாமல் கதையையும் அப்படியே எடுப்பது இப்போது கோலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. படத்தின் பெயரை பயன்படுத்துவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. எனக்கு நினைவு தெரிந்து கமலின் சதிலீலாவதி அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லலாம். இப்போது சேரனின் அடுத்த படத்திற்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்து வெற்றி பெற்ற ராமன் தேடிய சீதை தான் தலைப்பு. படத்தை புதிய கீதை, கோடம்பக்கம் படத்தை இயக்கிய ஜெகன்ஜி தான் இயக்குகிறார். இவர் சேரனின் சீடர். புதிய கீதையும் கோடம்பாக்கமும் அந்த அளவுக்கு தியேட்டர்களில் ஓடி கல்லா நிரப்பவில்லை. இந்த படமாவது தனக்கு நல்ல பேரைத் தரும் என்று எதிர்பார்க்கிறார் ஜெகன்ஜி. கோடம்பாக்கம் படம் நல்ல பேரைத் தந்தாலும் தயாரிப்பாளரின் கையை சுட்டதென்னவோ உண்மை.



மாயக்கண்ணாடி எதிர்பார்த்த அளவு ஓடாததாலோ என்னவோ இப்போது கேமராவுக்கு பின்னால் இருப்பதை விட, முன்னால் சில காலம் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டார் போலும். கரு.பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்திற்கு பிறகு, இப்போது ராமன் தேடிய சீதை. சேரன், எப்போ அடுத்த படம் இயக்கப்போறீங்க?



படத்தில் சேரனுடன், இணைந்து சென்னை28 புகழ் நிதின் சத்யாவும், பசுபதியும் நடிக்கிறார்கள். நிதின் சத்யா, சென்னை28 மற்றும் சத்தம் போடாதே பாங்களில் நன்றாக நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார். இந்த படத்திலும் இவருக்கு நல்ல ரோலாக அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்தால், பசுபதி கண்பார்வையற்றவராக வருகிறார். எந்த ரோல் கொடுத்தாலும் வெளுத்து கட்டுபவர், இதையும் நன்றாக செய்வார்.



படத்தில் மூன்று கதாநாயகிகள். தூத்துக்குடி படத்தில் நடித்த கார்த்திகா அதில் ஒருவர். இவர் நான் கடவுள் படதிற்காக பிச்சைகாரியாக ஒரு நாள் முழுவதும் பெரியக்ளத்தில் சுத்தி வந்தார். ஆனால் ஏனோ அந்த படத்தில் நடிக்கவில்லை. அதற்கு, இந்த இந்த படம். நல்ல பிரேக்கை எதிர் பார்க்கிறார். பார்ப்போம் இந்த படம் தருமா என்று.



அடுத்தவர், பொய் படத்தில் நடித்த விமலா ரமணன். பொய்க்கு பிறகு வாய்ப்புகள் வராமல் போகவே மலையாளப் பக்கம் ஒதுங்கினார். மூன்றாவதாக, ரம்யா நம்பீஸன். இவர் ஒரு மலையாள நடிகர். முதன் முதலாக இந்த படத்தில் நடிக்கிறார்.




படத்திற்கு இசை, வித்யாசாகர், அந்த இசைக்கு வரிகளை தருபவர் யுகபாரதி. படத்தை மோசர்பியர் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை படப்பிடிப்பு கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது

Friday, December 14, 2007

முருகனருள் பரப்பும் பில்லாவின் சேவல்கொடி பறக்குதய்யா


பில்லா பாடல்கள் வெளியான பிறகு பல தடவை, எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரமின்மையால் அந்த பாடல்களை பற்றி எழுத முடியவில்லை. சேவல் கொடி பாட்டில் வரும் இரண்டு வரிகளை பற்றி மட்டும் எழுதினேன். இன்று வலையுலகை ஆய்ந்து மேய்ந்து கொண்டிருந்த போது, முழுக்க முழுக்க படத்தின் கதாநாயகன் முருகன் அருள் வேண்டி பாடும் சேவல் கொடி பாட்டை, முருகனருள் பதிவில் அதன் வரி விளக்கங்களோடு படித்து என்னையே நான் மறந்துவிட்டேன்.. இந்த பாடல் முருகனை பற்றி வருவதாலும், நல்ல தாளங்களோடு கேட்பதற்கு இனிமையாய் இருப்பதாலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த பாட்டில் இவ்வளவு மறைமுக அர்த்தங்களா.. கண்ணபிரான் அவர்கள் இந்த பாடலை வரி விளக்கங்களோடு இங்கு எழுதியிருப்பதை படியுங்கள். நிச்சயம் நீங்களும் முருகனருள் பெற்று மெய்சிலிர்ப்பீர்கள்..

நன்றிங்க கண்ணபிரான் ரவிஷங்கர்!



நம்ம பதிவுல தல படத்தை போடலைனா எப்படி!

Thursday, December 13, 2007

குலோப்ஜாமூனும் நானும், சுவைத்த நேரங்களும்

சின்ன வயசுல, நாலாவது படிக்கிறப்போன்னு நினைக்கிறேன்.. காலைல தூங்கி எழுறப்போ, சட்டையெல்லாம் ரத்த திட்டுகளா இருக்கும்.. எல்லாம் சில்லு மூக்கு உடையிறதுனால அப்படின்னு சொன்னாங்க.. மத்தவங்களுக்கு ஏதாவது மேல மோதினா வர்ற மாதிரி நமக்கு இல்லை.. தானா உடையும்..ஒரு தடவை என்னோட பள்ளி வெள்ளை சீருடை கூட இது மாதிரி ரத்தம் பட்டு மறுபடியும் அணிய முடியாதமாதிரி ஆகிடும்.. அடிக்கடி அப்படி நடக்க, பயந்துகிட்டு டாக்டர் கிட்ட காமிச்சாங்க.. அவர், அவர் கல்லா நிரம்ப, தினமும் ஒரு ஊசின்னு பத்து நாளைக்கு ஒரு ஊசி போடணும்னு சொன்னார்.. திண்டுக்கலில் அந்த கிளினிக் எனது பள்ளியின் அருகிலே இருந்ததால் எனக்கும் வசதியா போய்விட்டது. தினமும் மதியம் சாப்பாடு முடிந்த பின், நானும் எனது நண்பர்களும் பொடிநடையாக நடந்து சென்று அந்த டாக்டரிடம் ஊசி போட்டுவிட்டு வந்தோம்.. இப்படி தினமும் செல்வது பெரிதாக இல்லையென்றாலும், தினமும் அந்த டாக்டரிடம் பத்து ரூபாய் கொடுப்பது எங்களுக்கு கடுப்பாகியது. நானும் என் நண்பர்களும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். தனி புரட்சி படையே உருவானது.. டாக்டர் எப்படி இப்படி கொள்ளை அடிக்கலாம்.. என்று அவரை வம்புக்கு இழுத்தோம்.. அப்போது ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் எதுக்கு டாக்டருகிட்ட போகணும்னு நாங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்து முடிவெடுத்தோம்.

அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு ஹோட்டலா ஏறி இறங்கினோம். வேற எதுக்கு குலோப்ஜாமூன் சாப்பிடத் தான். அப்போ இருந்த நண்பர்கள்ல பல பேருக்கு குலோப்ஜாமூன்னா அவ்வளவு உசுரு.. அதனால எல்லாக் கடையிலும் மிச்சம் இருக்க ஐந்து நாள்ல குலோப்ஜாமூன் டேஸ்ட் பண்ணிடணும்னு முடிவெடுத்து படையெடுத்தோம்.. எங்களது புரட்சிப்படை குலோப்ஜாமூன் வேட்டைக்காக கிளம்பியது. இப்படித் தான் குலோப்ஜாமுடன் என் உறவு ஆரம்பமானது.. அப்படி படிக்கும் காலங்களில் இது போன்ற சுவை மிகு பதார்த்தங்கள் சாப்பிடுவது மிகவும் குறைவு. ஏதாவது கல்யாண வீடுகளில் சாப்பிட்டால் உண்டு.

சென்னைக்கு வந்த பிறகு, அடிக்கடி குலோப்ஜாமூன் சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது.. பஃபே மாதிரி சென்றுவிட்டால், வாடா தங்கங்களா என்று இரண்டு கப்பில் பத்து குலோப்ஜாமூனை எடுத்து வருவேன்.. மெயின் ஐயிட்டங்களை ஒரு பிடிபிடித்தாலும், வயிற்றில் எப்போதுமே இவைகளுக்கு தனி இடம் உண்டு. அதுவும் சில சமயம் நண்பர்களோடு போட்டி போட்டு எண்ணிக்கை அளவு தெரியாமல் சாப்பிட்டதுண்டு.

நான் அமெரிக்கா வரும் வரையில், நானும் குலோப்ஜாமூனும் அவ்வளவு நண்பர்கள். வாயோடு வாயாக பழகியவர்கள்.. இங்கே வந்த பிறகு, புதியதாய் ஒரு பழக்கத்தை கற்றுக்கொண்டேன், டயட் என்னும் பெயரில். அதன் பிறகு எதை சாப்பிட்டாலும் மட மடவென்று மனசு கலோரி கணக்கு போட ஆரம்பித்து விடுகிறது. நான் மட்டுமல்ல என்னை சுற்றியிருக்கும் பெரும்பாலானவர்கள் இதை தான் செய்கிறார்கள். இப்படியான, கலோரி கணக்கு பார்க்கும் காலங்களில் குலோப்ஜாமூனை ஒன்றோ இரண்டோ என்று தான் சுவை பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயம் அது இருக்கும் திசை பார்த்து சப்பு கொட்டிவிட்டு எதையும் சாப்பிடாமல் செல்வதும் உண்டு. அமெரிக்க உணவு வகைகளில் ஒரு சின்ன சாக்லேட் எடுத்தால் கூட, அது எதனால் ஆனது, அதில் கொழுப்பு எவ்வளவு, புரதசத்து எவ்வளவு என்று அக்கு வேறு ஆணிவேராக போட்டிருப்பார்கள். ஆனால், நமது இந்திய உணவுகளில் இது அந்த அளவுக்கு விஷயங்கள் இருப்பதில்லை.. ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொழுப்பை குறைக்க பத்து நிமிஷம் ஓடவேண்டும் என்று நண்பனொருவன் பத்து குலோப்ஜாமூன்களை சாப்பிட்டுகொண்டே சொன்னது, அவ்வப்போது ஞாபகத்திற்கு வரும்.

சமீபத்தில் இங்கே வந்த நண்பன் ஒருவனுக்கு, குலோப்ஜாமூன் செய்வதென்றால் அவ்வளவு பிரியம். தீபாவளிக்காக எங்கள் டீமில் நடந்த கூட்டாஞ்சோறுக்காக (பாட்லக்) விடிய விடிய குலோப்ஜாமூன் செய்தவன். யாராவது சும்மா, எங்கே எனக்கு ஜாமூன் என்றால் அடுத்த நாளே கையில் ஜாமூனுடன் வந்து நிற்பான் இவன்.. பாருங்கள், சாப்பிட கணக்கு பார்க்காத காலங்களில் கையில் குலோப்ஜாமூன் இல்லை.. இப்போ கையில் அடிக்கடி கிடைத்தும் சாப்பிட முடியவில்ல.. அட ஆண்டவா..

Monday, December 10, 2007

மலர்களே மலர்களே - PIT புகைப்பட போட்டி

இந்த மாத போட்டிக்கு, மலர்கள் என்று தலைப்பு தந்திருக்கிறார்கள், PIT ஆசிரியர்கள். அமெரிக்காவில் இப்போது, இந்த பனிக் காலத்தில் பூக்களை பார்ப்பதே அரிது. அதனால் நான் முதன் முதலாக கெனான் ரிபல் வாங்கிய சமயத்தில், ஐம்பது நாட்களுக்கு முன்னர் எடுத்த படங்களை பிற்தயாரிப்பில் சற்று மெருகேற்றி போட்டிக்கு சமர்பிக்கிறேன்..




கடந்த மாத சாலைகள் தலைப்பு போட்டியில் முதல் பத்து படங்களில் ஒன்றாக நமதின் இரண்டாம் படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு நன்றி.

Wednesday, November 28, 2007

பில்லா பாடலும் தமிழில் அர்ச்சனையும்

நீண்ட நெடு நாட்களாக எனக்கு சந்தேகம். கோயிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்களே, தமிழிலும் செய்யலாமே என்று. அர்ச்சனை என்னவோ கடவுளுக்குத் தான் செய்கின்றோம், ஆனால் என்ன சொல்லி செய்கிறார்கள் என்று தெரிந்தால், கும்பிட வந்தவர்களுக்கு அதனோடு ஒன்றி, மனசு உருகி சுவாமியை தரிசனம் பண்ணமுடியும். இல்லையென்றால், பூஜை செய்பவர் அவர் பாட்டுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்ல, ஒன்றும் புரியாமல் கை குவித்து நாம் அவரையும் சாமியையும் பார்த்து முழித்து கொண்டிருக்க வேண்டும். சமீப காலங்களில், தமிழில் அர்ச்சனை என்பது ஒரளவுக்கு பரவி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, வேளச்சேரியில் இருக்கும் சிம்ம நரசிம்மர் கோயிலில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்கிறார்கள் (நான் அறிந்த வரையில்). ஆண்டாள் திருப்பாவையெல்லாம் அவர்கள் பாடும் போதும் நமக்கும், நமக்குள்ளும் அந்த பரவசம் தொற்றிக்கொள்கிறது என்பது உண்மை தான். அதில் நான் பல நாட்கள் உருகியதும் உண்மைதான்.

சரி, இதில் எங்கே பில்லா படம் வருகிறது என்று கேட்கின்றீர்களா. விஷயத்திற்கு வருகிறேன். படத்தில் முருகனை போற்றிப் பாடி ஒரு பாடல் இருக்கிறது, விஜய் யேசுதாஸ் குரலில். அதில், பாடல் முடியும் போதும் தமிழ் கடவுள் முருகன், அவருக்கு தமிழில் அர்ச்சனை செய்யலாமே என்று அர்த்தம் தரும் பாடல் வரி வருகிறது. கேட்கும் போதும் சட்டென்று கவனத்தை ஈர்த்த வரிகள். பாடலாசிரியர் பா. விஜய், கிடைத்த தருணத்தை அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். நெஞ்சுருக வேண்டி ஆண்டவனை வழிபடும் ஒரு இடத்தில், புரியாமல் நின்று தலையசைப்பது சரியாகுமா என்று கேட்டால் இல்லை.. தமிழில் அர்ச்சனை என்பதை இன்னும் சற்று அதிகமான குரலில் முழக்கமிட வேண்டும். கிறித்துவ மதம் இந்தியாவில் இவ்வளவு விரைவாக பரவியதற்கு ஒரு காரணம், அதன் மொழியாக்கமும் மக்களை சென்று அவர்கள் விஷயங்களை கொண்டு சேர்த்தவிதமும் தான். மக்களுக்கு, பக்தர்களுக்கு புரிந்தால் தான் அந்த வேண்டுதல், பக்தி மனசுக்குள் நிற்கும். இவ்வாறு நிறைய அர்த்தமுள்ள விஷயங்களை பாடலாசிரியர்கள் பாடல்களில் ஏற்றினால், மக்களை சென்று சுலபமாக கருத்துகள் சென்று சேரும்.

கொசுறு : பில்லா பாடல்கள் அடங்கிய கேசட், சிடிக்கள், சிவாஜிக்கு அடுத்து இந்த வருடத்தில் அதிகமாக விற்று இருக்கின்றன.

Monday, November 19, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 6

நீண்ட நாட்களாய் எழுதாமல் பாதியில் விட்ட இந்த தொடரை மீண்டும் தூசி தட்டு, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...

ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... -
இரண்டாம் பகுதியிலிருந்து...

பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...

சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...

பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். -
ஐந்தாம் பகுதியிலிருந்து


துரத்தி ஓடி வந்தவர்கள், இந்தப் பக்கம் யாராவது ஓடினார்களா என்று எங்களைப் பார்த்து கேட்டார்கள்.. என் நண்பன் கத்தி குத்துபட்டு ஓடியவன் சென்ற திசையை காட்டினான்.. அவர்கள் நான்கு பேரும் அந்தப் பக்கம் ஓட ஆரம்பித்தனர்.. எங்களுக்கெல்லாம் பயங்கர கோபம் வழி சொன்ன நண்பன் மீது.. எங்கள் கோபத்தை புரிந்து கொண்ட அவன், "டேய்! பூச்சியை மாதிரி என்னை பாக்காதீங்கடா... கத்தியில குத்து வாங்கினவர் அங்க இருக்க பாலத்துக்கு கீழ ஓளிஞ்சுகிட்டார்.. அதனால தான் நான் வழி சொன்னேன்..அங்க பாருங்க அந்த நாலு பேரும் அந்த பாலத்தை தாண்டியே போயிட்டாங்க" என்று சொன்னவன், வாங்கடா, நாம வேற வழில ரூமுக்கு சீக்கிரம் போயிடலாம்" என்று எங்களை அவசரப்படுத்தினான்.. அறைக்குள் நுழைந்த பின்னும் ஒருவித பதட்டமும், குத்து பட்ட அந்த ஆளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற கவலையும் இருந்தது எங்களுக்கு.

எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்த போது அவ்வப்போது திடீர் பெண்கள் நடமாட்டமும், பக்கத்து அறைகளில் கண்ணாடி டம்ளர்களின் (பின்னாளில், அவைகள் பயன் படுத்திய பின், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள்) ஓசைகள், சிரிப்பும் கோபம் கலந்த பேச்சுகளுமாய் எதிரொலித்தது. முக்கால்வாசி நாட்களின் இரவுகள் இப்படித் தான் கழிந்தன.. நாங்கள் அப்போது வேலை தேடும் மும்மரத்தில் இருந்ததால், இதை பற்றியெல்லாம் ரொம்பவும் சட்டை செய்ததில்லை.. இரவு நேர சாப்பாடாய், கையேந்தி பவனில் முடித்த பின், அறைக்குள் நுழைந்து விட்டால், அன்றைக்கு நடந்த விஷயங்கள் பற்றிய அரட்டையும், கையில் சீட்டு கட்டுடன் நடு இரவு வரை சீட்டாட்டமும் தொடரும்.. வார இறுதிகளில் திருவல்லிக்கேணியில் இருக்கும் தியேட்டருக்கோ (தியேட்டரின் பெயர் மறந்து விட்டது), இல்லை தேவி, சாந்தி, சத்யம் தியேட்டர்களில் ஏதேனும் படங்களுக்கோ செல்வாதாய் கழிந்தது.. அதுவும் தேவி தியேட்டரில், பிளாக்கில் டிக்கட் விற்கும் பெண்கள், டிக்கட் தரும் நபரிடம் அக்கவுண்ட் வைத்திருந்ததை பார்த்தவுடன் எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. மொத்தமாக பத்து இருபது டிக்கட்டுகள் இது மாதிரி அக்கவுண்ட்டில் வாங்கி சென்று அதை இருபது, முப்பது ரூபாய் அதிகமாய் விற்று அந்த கடனை அடைப்பதாய் அவர்களின் வேலை சென்று கொண்டிருந்தது.,. இதற்கு தியேட்டருக்கு மிகவும் தாமதமாக வரும் குடும்பத்தினரை (பொதுவாக, எல்லோரையும்)சொல்லவேண்டும்.. டிக்கட் கொடுக்க ஆரம்பித்த பின்னர் தான் அவர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள்.. அதுவரை வந்தபின், அவ்வளவு பெரிய வரிசையில் நிற்பதுவும் இயலாத காரியம்.. தியேட்டர் வரை வந்த பின்னர், படம் பார்க்காமல் செல்வதுவும் இழுக்கு.. கடைசியில் கணவனின் வியர்வை, டிக்கட்டை பிளாக்கில் விற்கும் நபரின் வியர்வைக்காக, சினிமா டிக்கட்டாய் தியேட்டர் வாசலில் கிழியும்.. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் சத்யம் தியேட்டரில் இது போன்ற இடைஞ்சல்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.

2002, ஏப்பிரல் மாதம் 13ந்தேதி, திருவல்லிக்கேணி தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்துகொண்டிருந்தோம்.. கலைவாணர் அரங்கத்தின் வழியாகத் தான் புதிய விடுதிக்கு செல்வோம்.. அப்படி செல்கையில் கலைவாணர் அரங்கத்தின் வாயிலில் வண்ண தோரணங்கள் எல்லாம் கட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் செல்ல செல்ல, அங்கிருந்தவர், எங்கோ பார்த்த ஆள் மாதிரி தெரிந்தது.. அட! நம்ம(!) சாபு சிரில்.. பாய்ஸ் படத்தின் பட பூஜை விழாவிற்காக அலங்கார வளைவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள் அவரது குழுவினர்.. எங்களுக்கோ இன்ப அதிர்ச்சி.. இவரையாவது சென்னையில் இருப்பதற்கு நேரில் பார்க்க முடிந்ததே என்று எனக்கு மகிழ்ச்சி.. (மற்றவர்கள் எம்.எல்.ஏ விடுதியில் நடந்த காதல் அழிவதில்லை படத்தின் படப்பிடிப்பை பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியவர்கள்) பக்கத்தில் சென்று அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திகொண்டோம்.. அவசரத்தில் என் நண்பன் பூபாலன் சினிமா டிக்கட்டிலும், கிச்சா ஒரு சிறிய டைரியிலும் கையெழுத்து வாங்கி கொண்டார்கள்.. (என்னிடம் அது கூட இல்லை அந்த நேரத்தில்) அந்த கையெழுத்தை போட்டுவிட்டு "இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. இன்னமும் அந்த சினிமா டிக்கட்டும் டைரியும் அவர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஹேராமின் கல்கத்தா கலவரத் தெரு, கன்னத்தில் முத்தமிட்டாலின் உடைந்த படகு என்று நமக்கு தெரிந்த அவரின் கைவரிசைகள் பற்றி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அவரும் எங்களை பற்றி விசாரித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அவரிடம் பேசிவிட்டு உள் நுழைந்தால், நடிகர் கமலஹாசனின் (முன்னாள்) மனைவி சரிகா நின்று கொண்டிருந்தார். இவர் தான் பாய்ஸ் படத்தின் உடையலங்கார நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடம் சென்று பேசுவதற்கு என்ன இருக்கிறது (ஏன் கமலுக்கும் உங்களுக்கும் சண்டை என்று கேட்பதை தவிர) என்று நினைத்துகொண்டு நாங்கள் எங்களின் அறைக்கு சென்று விட்டோம்.

மறு நாள், தமிழ்ப் புத்தாண்டு.. ஆங்கில புத்தாண்டில் தண்ணியடிக்க இருக்கும் சௌகரியம் தமிழ் புத்தாண்டில் இல்லை.. அன்று கோவிலுக்கு செல்வது தான் முக்கிய விஷயம் போல.. ஒரு நாள் விடுமுறை, சில திரைப்படங்கள் ரிலீஸ் என்று தான் இருக்கப்போகிறது.. ஜனவரி 1 அன்று இருக்கும் சந்தோசம், குதியாட்டம் எதுவும் ஏப்பிரல் 14-இல் ஏனோ இருப்பதில்.. இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த நாள் மறக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.. இது தான் எங்களுக்கு இடையில் முக்கியமான விவாதமாய் இருந்தது அன்று.. தூங்கி எழுந்து, வாலஜா ரோட்டில் இருக்கும் கடையொன்றில் காபியும், தி ஹிந்துவும் வாங்கி வர சென்றோம், நானும் கிச்சாவும். கலைவாணர் அரங்கத்துள் வந்தால் எங்கு பார்த்தாலும் கொடியும் தோரணமும்.. வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்..அட..இன்னைக்கு பாய்ஸ் பட துவக்கவிழா என்பதே மறந்திடுச்சு என்று கூட்டத்தை பார்த்துகொண்டே நடந்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வருக! வருக! என்று பேனர் கட்டப்பட்டிருந்தது.. அட! நம்ம தலைவர் வர்றார்..சொல்லவே இல்லியே யாரும்.. காலை காப்பியையும் ஹிந்துவையும் மறந்தோம்.. கூட்டத்தோடு கூட்டமாக நின்று, வருவோர் போவரையெல்லாம் பார்த்துகொண்டிருந்தோம்.. சத்யராஜ், கார்த்திக், என பலர் காரை விட்டு இறங்கி உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். படத்தை குத்து விளகேற்றி துவக்க ஜோதிகா என்று கூட்டத்தில் யாரோ சொல்ல, ஆஹா.. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று மெல்ல முண்டியடித்து கூட்டதுக்குள் நுழைந்தோம்..

சிவப்பு நிற டி-ஷர்டும், கறுப்பு பேண்டும் அணிந்து ஜோதிகா.. அட அட அடடா.. இதுவல்லோ பாக்கியம் என்று நானும் கிச்சாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துகொண்டோம்.. ரஜினி வருவாரா என்ற ஆவல் பல மடங்கு எகிறியது.. அவரது கார் வந்தது..அவர் வெள்ளை வேஷ்டி, சட்டையில் வந்திருந்தார்.. பாபா முக வெட்டில் இருந்தார்.. சரியாக பார்ப்பதற்குள் "வாம்மா..மின்னல்" வேகத்தில் நுள்ளே நுழைந்துவிட்டார்.. எங்கள் இருவருக்கும் பயங்கர கவலை.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு(?) நின்று ரஜினியை ஒழுங்கா பார்க்க முடியவில்லையே என்று.. அப்போது தான் எங்களுக்கு அந்த இனிய அதிர்ச்சி கிடைக்கும் செய்தி கேட்டது..

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

Wednesday, November 14, 2007

இலை உதிரும் காலம்


ஒவ்வொரு இலைகளாக
உதிர்வதற்கு
தயாராய்
மரத்தில்,
மீன் பிடிக்க
அடுத்தடுத்து
குதிக்க
காத்திருக்கும்
பெங்குவின்
கூட்டம் போல...

பக்கத்து
பாசமிகு
இலைகள்
என்றைக்கோ
வண்ணங்கள் மாறி
உதிர்ந்து
சருகாய்,
மரத்துக்கடியில்..
பாதை வழியில்..

அடாது
மழை பெய்ததால்
நீர் எடை
சுமக்காமல்
கழிந்து
கீழ் கவிழ்பவைகள்
என
சில இலைகளும் உண்டு..

அவைகள்
விழுந்ததையும்
காற்றில்
அலைந்ததையும்
தலை
குப்புற நின்று
பார்க்கிறேன்,
நேற்று பெய்த
மழையின்
நீர் சொட்டு
என்னிலிருந்து
கண்ணீர் திட்டாய்...

என்றைக்கோ ஒருநாள்
நீயும்
இது போலத் தான்
என்று
மனசு மணியடிக்கையில்
இன்னும் உதிர
காத்திருக்கனுமா என்று
உள்ளூர
ஒரு உதறல்...

ஆனாலும்
மரத்தின்
வேர்கள் தரும்
தண்ணீர் மோகங்கள்
ருசியாகவே
என
ஆசை மனதின் சபலம்..

உதிர்ந்து
நாங்கள் போய்விட்டதால்
மரத்திற்கு
வருத்தமில்லை,
உடம்பில்
அம்மை தழும்பாய்
நாங்கள் இருந்த இடங்கள்,
புள்ளி கல்லறைகள்...

அடுத்த பருவத்தில்
புதிதாய்
முளைக்கும்
இன்னும் ஆயிரம்
இலைகள்..

மரமதை
புவியென எண்ணுகையில்
என்னை
கீழ் நின்று
அண்ணாந்து பார்க்கும்
மனிதனை போல
ஆனதோ
என் வாழ்க்கை?

சும்மா போட்டிக்கு படங்களை போட்ட போது, ஏன் கவிதை எழுதக்கூடாது என்று உசுப்பி விட்ட தோழி பிரியாவிற்கு நன்றி

Tuesday, November 13, 2007

ரஜினி பிறந்தநாளன்று பில்லா - இப்போ டிரெய்லர்

தீபாவளி படங்களில் எதுவும் சூப்பர் ஹிட் இல்லை என்று முடிவு செய்த விநியோகஸ்தர்கள், இப்போது ஆவலுடன் எதிர்பார்ப்பது ரஜினியை தனித்து அடையாளம் காட்டிய பில்லாவின் ரீமேக் தான்.. தீபாவளிக்கு வரவிருந்த படம், பிற்தயாரிப்பு (நன்றி : PIT) வேலைகளினால் தற்போது தள்ளிப்போய்விட்டது. இப்போது, ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். படத்தின் முன்னோட்ட வடிவம் தீபாவளி அன்று முதன் முதலாய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.



இதுவரை யாரும் காட்டாத வகையில் அஜித்தை ஸ்டைலாக அமர்க்களமாக காட்டியிருக்கிறார்கள். பிண்னணி இசையில் யுவன் பட்டையை கிளப்பியிருக்கிறார். இந்த வருடத்தில் இந்தப்படமாவது அவருக்கு கைகொடுக்கட்டும்.. நயன் அதிரடியாய் இளமையாய், ஆக்ரோஷ ஆப்பிளாய் ஜொலிக்கிறார்.. படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்திருப்பதாய் சொல்கிறார் விஷ்ணுவர்தன்.

படம் வசூலை குவித்தால், எல்லாப் புகழும் விஷ்ணுவுக்கே..

Monday, November 12, 2007

புகைப்பட போட்டிக்கான சாலை படங்கள்...

தமிழில் புகைப்படக்கலைக்கு முக்கியத்துவம் தந்து, அதில் ஆர்வம் உள்ள அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் பொருட்டு, மாத மாதம் புகைப்பட போட்டி நடத்தி வருகின்றனர்.

இப்போது தான் நான் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தாலும், முயன்று பார்க்கலாமேன்னு இதோ போட்டிக்கான என் படங்கள்..

வாஷிங்டன் மாநகர பிரமாண்ட வீதி...




கொலம்பஸ் நகர ஸ்கியாட்டோ நதியின் கரையில்...



படத்தின் மீது குட்டினால் இன்னும் பெரியதாக படம் விரியும்.

Wednesday, November 07, 2007

தீபாவளி வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

தலை தீபாவளி கொண்டாடும் அம்பி, ப்ரியா, மணிபிரகாஷ், கைப்புள்ள, KK, பொற்கொடி, எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சமீபத்துல கேமராவுல சுட்ட சில படங்கள்..பாத்துட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க மக்களே

Friday, October 26, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 20 [சூடான சினிமா பகுதி]

ஹலோ கார்த்தியா.. நான் ஏஞ்சல் பேசுறேன்..

(ஏஞ்சலா? குரலே தேன்ல குழச்ச மாதிரி இருக்கே.. நம்ம வாழ்கையிலும் வசந்தமா..வெயிட் வெயிட்.. இது எங்கயோ கேட்ட குரலா இருக்கே..ஆஹா.. நம்ம சிட்டுக்குருவி லவ்வர் வாய்ஸ்ல.. அடப்பாவி.. )

எப்படி இருக்க ஏஞ்சல்.. நம்ம சி.குவுக்கு என்ன ஆச்சு.. நீ பேசுற..

கார்த்தி..மொதல்ல சி.குன்னு கூப்பிடறதா நிறுத்துறியா? ஏதோ லக்கிமேன்ல, எமன் வேஷத்துல வர்ற கவுண்டமணி சித்ரகுபதனா வர்ற செந்தில் ஷார்ட்டா சி.குன்னு கூப்பிடுற மாதிரி இருக்கு..

இல்ல ஏஞ்சல்.. பாசமா சுருக்கமா கூப்பிட்டேன்..

அதுக்குத் தான், ப்ரின்ஸ்ன்னு பேர் வச்சிருக்கோம்ல.. அதை வச்சு கூப்டா போதும்..

சொல்லவே இல்ல..

நீ கேக்கவே இல்லியேப்பா..

உன் பிளாக் நண்பர்கள்கிட்ட மட்டும் கேட்ட..எங்க கிட்ட கேட்டியா.. அது தான் நாங்க எங்களுக்கே புது பேர் வச்சிருக்கோம்.. சரி.. அதைவிடு.. இன்னைக்கு சாயந்தரம் உங்க வீட்டுக்கு கும்மி அடிக்க வர்றோம்.. நம்ம ஸ்பெஷல் தெரியும்ல ரெடியா இருக்கணும் என்ன என்று சொல்லிட்டு, என் பதிலுக்கு கூட காத்திருக்காம டொக்குன்னு போனை வச்சது ஏஞ்சல்..

எல்லாம் நம்ம நேரந்தான்னு நினச்சுகிட்டேன்..

சாயங்கால வேளை..

நம்ம சிட்டுக்குருவிகள் ரெண்டு பேருமே வெஜ் ஆளுக.. அதனால இந்த தடவை நம்ம ஊரு பாசி பயறை ஊற வச்சு, குக்கர்ல ஒரு விசில் வச்சு, தேன் ஊத்தி வச்சிருக்கேன்.. இது ஏஞ்சலுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு நம்ம சிட்டுக்குருவி சொல்லியிருக்கு..பேருக்கேத்த மாதிரி தான் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க... ஏஞ்சல், வின்ங்க்-லெஸ் (ஸ்லீவ்-லெஸ்) ரெட் ஜாக்கெட் போட்டுகிட்டு, பாரதிராஜா பட தேவதை மாதிரியும், நம்மாளு கேப், கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுகிட்டு வந்தாங்க.. அப்படியே ஜோதிகா-சூர்யா மாதிரி இருந்தாங்க.. ஆனா அவங்க கிட்ட சொல்லல.. ரொம்ப மேல ஏறிக்குவாங்க ரெண்டு பேரும் (பொறாமைபடாதடா கார்த்தி)

இன்னைக்கு என் டார்லிங் தான் எல்லா சினிநியுஸும் சொல்லப்போறா.. பயங்கர பிரிபரேஷன்ல வந்திருக்கா.. (கல்யாணம் ஆன பிறகு மனுஷங்களை மாதிரி நீயும் பெண்டாட்டி முன்னால பேசுறத நிறுத்திட்டியேப்பா குருவி)

தொண்டையை கனச்சுகிட்டு ஏஞ்சல் மேட்டரை சொல்ல ஆரம்பிச்சது..

ரொம்ப ஆவலா எதிர்பார்த்த ஷங்கர்-ஷாரூக் காம்பினேஷனோட ரோபட் சொத்துன்னு ஆயிடுச்சு.. ஷாரூக் அந்த படத்திலிருந்து விலகிட்டதா சொல்லிட்டார்.. இனி ஷங்கர் அடுத்த நடிகர் கிட்ட போவாரா இந்த கதையோட இல்ல வேற கதை ரெடி பண்ண போறாரான்னு தெரில..

இதை விட பெரிய நியூஸ், நம்ம ஷ்ரேயா (என்னை மாதிரி கியூட்டா இருக்கும்ல அந்த பொண்ணுன்னு ஏஞ்சல் சொல்ல, நம்ம சிட்டு குருவி அதை கொஞ்ச..கட் கட் கட்.. நம்ம ஸ்டொமக் பேர்னிங் சாமி) ஹாலிவுட் படத்துல நடிக்க போறாங்களாம்.. அதுவும் ஹிரோயினா.. அவங்க காட்ல மழை தான்.. தமிழ்நாட்ல சூப்பர் ஸ்டார் முதல் வைகை புயல் வரை ஆட்டம் போட்டாச்சு.. இப்போ அமெரிக்க பக்கம்..ம்ம்

சிம்பு தன்னோட கெட்டவன் படத்தை இப்போதைக்கு தள்ளி வச்சுட்டாராம்.. அடுத்து சிலம்பாட்டம் படத்துல நடிக்க போறாராம்.. அனேகமா வல்லவன் படத்துக்கு பிறகு அவருக்கு எந்த படமும் வரலைனு நினைக்கிறேன்.. காள எப்போ தியேட்டரை முட்ட வருதோ தெரியல..

ஒரு வழியா தசாவதாரம் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது.. இப்போ கடைசி கட்ட தொழில்நுட்ப வேலைகள் நடக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதனால, கமல் தன்னோட அடுத்த படத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.. படத்தோட பேர் மர்மயோகி.. பழைய எம்.ஜி.ஆர் படத் தலைப்பு தான்.. இந்த வரலாற்று படத்தை கமலே இயக்குகிறார், ரிலையன்ஸ் நிறுவனதிற்காக..

ம்ம்..கார்த்தி..உங்க தலயோட பில்லா படம் நவம்பர் 30க்கு தான் வருதாம்..பாட்டெல்லாம் நவம்பர் 15 வெளியிட பிளான் பண்ணியிருக்காங்க.. இன்னைக்கு எல்லா திரைப்பட தளங்கள்லயும் பில்லா படத்தோட ஸ்டைலானா ஸ்டில்கள் தான்.. படமெல்லாம் அசத்தல வந்திருக்காம்.. சந்தோசமா (நான் சிரித்தேன்)

இன்று வெளியான சில பில்லா ஸ்டில்கள்






இன்னைக்கு தான உன் அசினோட பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டியா இல்லியா.. சொல்லாம இருப்பியா.. உன் கனவுல அசின் வந்து முதமெல்லாம் வாங்கி கிட்டதா என் பிரின்ஸ் கிட்ட சொன்னியா.. என் பிரின்ஸ் சரியான ஏமாளி.. நீ சொன்னதை நம்பிகிட்டு ஊரெல்லாம் சொல்லுது.. (உன்னை.. ஏஞ்சலை அடிக்க கை ஓங்கினேன்)

அசின் பிறந்தநாளிற்காக...





பேசிக்கொண்டிருந்த போதே சிட்டுக்குருவி மெதுவா ஏஞ்சலை கிள்ளியது.. என்னடான்னு கேட்டா, அடுத்த அப்பாயிண்ட்மென்ட் அவங்களோட நண்பர் வீட்ல டின்னராம்.. சொல்லிகிட்டே சிறகடிச்சு பறந்து போயின இரண்டும்..ம்ம்.. காதல் பறவைகள்

Wednesday, October 24, 2007

மிலிட்டரி மாமா

இராணுவம் என்றால் மனசுக்குள் ஒரு தேசப்பற்றையும் அவர்களின் தியாக உணர்வையும் வீரத்தையும் என் சின்ன வயசில் என் மனசில் விதைத்தது, என் அப்பாவின் பள்ளி கால நண்பரும், சொந்த முறைகளில் மாமாவுமான சின்னையா மாமா தான். சத்யராஜ் உயரம்.. நல்ல ஆஜாகுபாவான உடம்பு.. ஆனால் மனசு இவருக்கு நிஜமாகவே குழந்தை தான்.. என் மீதும் என் தங்கையின் மீதும் அவ்வளவு பாசமாக இருப்பார்.. தனது பெரிய குடும்பத்தை (மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்) விட்டு எப்படி காஸ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மொத்தமாக இருபது வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். எங்கள் ஊரில் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் எல்லோரும் அவரை பாசமுடனும் மரியாதையுடனும் கேப்டன் சின்னையா என்று தான் அழைப்பார்கள்.

அவர் ஒரு இரண்டு வருட காலங்கள் பெங்களூர் இராணுவ முகாமில் இருந்த போது (அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக்கொந்டிருந்திருக்கலாம்) அரையாண்டு தேர்வு கால விடுமுறைகளில் ஒரு வார காலம் அவருடன் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை படங்களின் மூலமே இராணுவ முகாம்கள் பார்த்து வந்த எனக்கு அந்த பயணம் மிகவும் ஆச்சர்யத்தையும் அவர்கள் மீதான ஒரு மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களூர் குளிரிலும் அவர்கள் அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் பயிற்சி எனக்கும் அவ்வளவு காலையிலே எழுந்து உடல் பயிற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசைய அப்போதே உருவாக்கியது.. அவர்களுக்கு தினமும் ஒவ்வொரு மாநில மொழி திரைப்படங்கள், தனியாக வரிகள் இல்லாத கேண்டீன் (என் மாமா வாயிலாக சில பொருட்கள் வரிகள் இல்லாமல் எங்கள் வீட்டிற்குள் வந்ததும் உண்மை) எப்படி எத்தனையோ சலுகைகள் உண்டு.. உள்ளேயே, இராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்க பள்ளிகளும் இருந்தன. அந்த ஒரு வாரம் எனக்குள் அப்படியோரு மாற்றத்தை தந்தது.. (ஆனால், அந்த வளாகத்தை விட்டு வெளியே இருக்கும் உலகம் இது எதை பற்றியுமே, கார்கில் மாதிரி போர்க்காலங்களைத் தவிர, கண்டுகொள்ளாமல் இருப்பதென்னவோ உண்மை தான்)

நான் சென்னைக்கு வேலைக்கு வரும் சமயத்தில், என் மாமா இராணுவத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று, ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். தினமும் ஊரில் கூட காலையில் எழுந்து ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் ஊரில் இருக்கும் பொழுதுகளில் அவர் கூட சேர்ந்து ஓடியிருக்கிறேன்.. நான் வேலைக்கு சென்ற புதிதில், அவர் பயன்படுத்திய டை எல்லாம் எனக்கு கொடுத்து உதவினார். எப்போது டை கட்டினாலும் அவர் நினைப்பு எனக்கு வராமல் இருந்ததில்லை.. ஊர் கோயிலில் சாமிக்கு திருவிழா எடுக்கும் போது இரண்டு குழுவிற்கு இடையில் பிரச்சனை வந்தபோது இவரும் ஒரு ஆளாக இருந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி தந்தார் இரண்டு வருடமாக. திண்டுக்கலில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தன் மகன்களுடன் நிர்வகித்து வந்தார்..

இங்கே வந்த பிறகு ஒரு முறை அவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.. இரண்டு வாரங்களுக்கு முன்னால், எப்போதும் என் வீட்டிற்கு தொலைபேசினேன்.. அப்போது அவர்கள் சொன்ன செய்தி, ஒரு டன் விறகுகளுக்கு இடையில் சிக்கியதாய் என் இதயம் வலித்தது. குடும்ப பிரச்சனை காரணமாக (இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) திண்டுக்கலிலிருந்து வீட்டிறு தனது இரண்டாவது மகனுடன் வந்த போது, வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த பிரச்சனை நடந்த போது அந்த வழியாக வந்த எங்கள் ஊர் பஸ்ஸிலிருந்தவர்களால் கூட இவர் காப்பாற்ற முடியவில்லை.. இரண்டு மூன்று நாட்களுக்கு நினைப்பெல்லாம் அவராகவே இருந்தது.. என்னடா வாழ்க்கை என்று கூட பல சமயங்களில் என்னை சலிக்க செய்தது.. ஒரு இரணுவ வீரராக அவர் இருந்த காலத்திலே இறந்திருந்தாலோ, இயற்கையாக இறந்திருந்தாலோ இந்த பாதிப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.. கனத்து போயிருந்த இதயத்தை அவர் ஞாபகமாக தந்து விட்டு போன டைகளை தடவி பார்த்து ஆற்றிக்கொண்டேன்..

Monday, October 22, 2007

ஒரு பயணக் குறிப்பும் சில நன்றிகளும் 1

மாதமொருமுறை சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் காலங்களில், சென்னை வந்த புதிதில் பேருந்தில் தான் செல்வேன் (அதன் பிறகு ரயிலில் செல்வது வழக்கமாயிற்று) பெரும்பாலும் அரசு பேருந்துகள் தான். கட்டணங்கள் குறைவு என்பதால் அதை பட்டியலின் முதலில் வைத்திருப்பேன். தனியார் சொகுசு பேருந்துகளை போல, அந்தந்த மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தின் தொலை தூர பேருந்துகள் நன்றாகவே இருக்கும். முக்கியமாக அரசு விரைவு பேருந்துகளை விட இவைகள் பயணிக்க சொகுசாக இருக்கும். பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும். தனியார் பேருந்துகளைப் போலவே அரசு பேருந்துகளிலும் இப்போதெல்லாம் டிவிப் பெட்டிகள் வைத்து படங்கள் ஓட்டுகின்றனர். (தற்போது தனியார் வண்டிகளில் இந்த சௌகரியம் இல்லை என்று நினைக்கிறேன்) இந்த மாதிரி இரவு நேர பேருந்துகளில், பயணிகள் எல்லோரும் தூங்கின பிறகு, எந்த அளவு கண்முழித்து அந்த ஓட்டுநர் கஷ்டப்பட்டு அந்த வண்டியை, அத்தனை பேரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வண்டியை ஓட்டியிருக்க வேண்டும்? (அதற்கு தான் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை இங்கே ஒரு கருத்தாக எடுத்துகொள்ளத் தேவையில்லை என்று நினைகிறேன்) அதுவும் இரண்டு மூன்று மணிக்கெல்லாம் அப்படியொரு தூக்கம் கண்களை தழுவும்.. அடிக்கடி சொக்கி நம்மை விழவைக்கும்.. அதையெல்லாம் பொறுத்துகொண்டு ஓட்டுவது எவ்வளவு சிரமம்? இதையெல்லாம் நான் அந்த வண்டிகளிலே பயணிக்கும் போது கொஞ்சம் கூட நினைத்ததில்லை.. அதுவும் நினைத்த நேரத்தில் இடம் சென்று சேர முடியவில்லை என்றால், எத்தனையோ பேரோடு நானும் அந்த ஓட்டுநரை மனதால் சபித்திருக்கிறேன். (அமெரிக்காவில் ஓடுகின்ற தொலைதூர பேருந்துகள் ஒவ்வொரு ஆறு\எழு மணிநேர பயணத்திற்கும், இரண்டு மணி நேர ஓய்வு எடுப்பது வழக்கம் என்று பயணித்த நண்பர்கள் சொல்லக் கேள்வி)


இந்த சனி ஞாயிறு கிழமைகளில் என் தங்கையை (சித்தி பெண்) பார்க்க விஸ்கான்ஸினில் உள்ள மில்வாக்கி நகரம் சென்றிருந்தேன். கிட்டதட்ட ஏழரை மணி நேர பயணம்.. தனியாளாக கார் ஓட்டி சென்றேன்.. அப்போது தான், என்னை இது வரை சுமந்து சென்ற பேருந்தின் ஓட்டுநர்கள் தெய்வங்களாக கண்முன்னே தெரிந்தார்கள்.. அதுவும் சொகுசான சாலைகள்.. சொன்னபடி கேட்கின்ற புது வண்டிகள் (நான் ஓட்டி சென்றது ஏழு பேர் உட்காரக்கூடிய கிரைஷலர் டவுன் கன்ட்ரி.. மில்வாக்கியில் இருக்கும் தங்கை நண்பர்களோடு சிகாகோ செல்லும் திட்டம் இருந்ததால் பெரிய வண்டியாக எடுத்துக்கொண்டேன்) என்ற சாதகங்கள் இருக்கும் இடத்திலேயே ஏழு மணி நேர பயணம் அலுப்பை கொடுத்தது. நிச்சயமாக, இப்படிப்பட்ட நெடுந்தூர வண்டிகளை இயக்கும் எண்ணற்ற ஓட்டுநர்களுக்கு (குறிப்பாக இந்தியாவில்), இதுவரை நன்றி மனதினுள் கூட சொல்லாமல் இருந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.. அவர்களுக்கு இந்த பதிவின் என் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

இந்த பயணத்தில் என்னுடன், எனக்கு ஆதரவாக என்னுடன் பயணித்தது இசை தான்.. இசையினால் எந்த அளவுக்கு துணையாக, ஆறுதலாக இருக்க முடிகிறது என்பதை கண்கூடாக அனுபவித்து கொண்டேன். எண்பதுகளில் வந்த கொண்டாட்ட பாடல்கள் தனிவகை.. காக்கிச் சட்டை சிங்காரி சரக்கு, சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் மனதிற்கு அவ்வளவு தெம்புகளையும்
உற்சாகத்தையும் தந்தது என்றால் அது மிகையில்லை.. இப்படி குத்தாட்ட பாடல்கள் ஒருவகை என்றால், மனதை மயிலிறகால் வருடும் இளையராஜவின் மெல்லிசை அடுத்த வகை.. ஒரு இசைத்தட்டு முழக்கம் மிகுந்ததாவும், அடுத்தது இப்படி மெல்லிசைகளுமாய் கேட்டவாறே என் பயணம் அமைந்தது..

இப்போது இங்கே இலையுதிர்காலம் என்பதால், மரங்கள் எல்லாம் வண்ணம் மாறி, அருமையாய் தெரிந்தன.. ஒவ்வொரு காட்சிகளும், வண்ண இலைகள், மரம் முழுவதும் இத்தனை பூக்களா என்று வியக்க வைத்து, கண்ணை வாரிச் சென்றது.. விஸ்கான்ஸின், இல்லினாய்ஸ் மாநிலங்களை விட, வடகிழக்கே வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலங்களை இந்த இலையுதிர்காலத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேள்வி.. இந்த முறையும் அங்கெல்லாம் சென்று மகிழ, கொடுத்து வைக்கவில்லை எனக்கு.. நானிருக்கும் ஒஹாயோவில் இப்போது தான் மெல்ல இலைகள் உருமாறி, மாறியவைகள் மரத்தை வண்ணமடித்தது போதும் என்று தரையெல்லாம் வண்ணமடிக்க உதிர்ந்து கொண்டிருக்கின்றன..

இதையெல்லாம் சேமித்து வைக்க என் மூன்றாவது கண்ணை இன்னும் திறக்க வில்லை.. திறந்த பின், சில நிழற்படங்களை (டிஜிட்டல் யுகத்தில் நிழற்படம் என்று சொல்லலாமா) இங்க உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.. பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்களின் கருத்துகள், குடுவையின் கீழ் இருக்கும் தண்ணீரை பருக கற்களை ஒன்றன்பின் ஒன்றாக இட்ட காக்கைகு உதவியதாக இருக்கும்.

எனது பழைய பதிவுகளுக்கும் சென்று, படித்து பின்னூட்டமிட்ட சேதுக்கரசிக்கும் என் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

Friday, October 19, 2007

வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஷ்ரேயா ஆடியது சரியா?

ஷ்ரேயா, சிவாஜி மூலம் தமிழில் முதல் இடத்தில் இருப்பவர்.. அதிக சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோயின்.. இளம் ஹீரோக்களுடன் கதாநாயகியாக (அழகிய தமிழ் மகனில் விஜயுடன், கந்தசாமியில் விக்ரமுடன்) நடித்து வரும் வேளையில் ஒரு மிகப்பெரிய தொகைக்காக இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு ஐயிட்டம் நம்பர் பாடலுக்கு ஆடியிருக்கிறார். தமிழ்நாட்டு ரசிகர்களை பற்றி தெரிந்திருந்தும் (இது போன்ற விஷயங்களை சற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள்) இப்படியொரு பாடலில் நடிப்பதால், அவரின் மற்ற படங்களின் வசூல் குறைய வாய்ப்புள்ளதா? சரி, நமக்கென்ன தலைவலி இதனால்.. அந்த படங்களின் நாயகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தான்.

கீழே சில படங்களை பார்த்து மனம் மகிழுங்கள் இல்லையெனில் பொறாமைப்படுங்கள்...





Wednesday, October 17, 2007

மூன்றாவது கண்

என்னடா திடீர்னு பரமசிவன் மாதிரி பதிவெல்லாம் போடுறியேன்னு நினைக்காதீங்க.. புதுசா ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கியிருக்கேன்.. நான் ஒரு கேமரா வாங்க வேண்டும் என்று நினைத்த பிறகு எதை வாங்கலாம்னு ஒரு குழப்பதுல இருந்தப்ப, இருள் தேசத்தில் டார்ச் அடிச்சு வழி சொன்னவங்க நீங்க.. உங்க ஆலோசனையெல்லாம் கேட்ட பிறகு, கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ வாங்கலாம்னு முடிவு பண்ணினேன்.. கொஞ்ச நாட்களுக்கு முன், நல்லதொரு பேரம் கிடைத்ததால் அதை வாங்கியும் விட்டேன்.. இப்போ எங்க போனாலும் நம்ம தோளுல அது தான் சவாரி செய்யுது.. சுகமான சுமை.. ஏற்கனவே தருமி மாதிரி நாம எடுக்குற புகைப்படங்கள் நல்லாயிருக்குன்னு நம்மளை உசுப்பேத்துற மக்கள் இங்க அநேகம்.. இப்போ இதையும் தோளுல தூக்கி சுமக்க ஆரம்பிச்சதிலிருந்து, நம்ம வீடு பால் காய்ச்சுறோம்.. கொஞ்சம் வந்து போட்டோ எடுத்து தரமுடியுமான்னு மக்கள் கேட்க அராம்பிச்சுட்டாங்க.. ஆயிரம் பேரை கொன்னாத் தான் அரை வைத்தியன் மாதிரி, பத்தாயிரம் போட்டோ எடுத்தா தான் அரை போட்டோகிராபர்னு நம்ம பள்ளிகூடத்துல சொல்றாங்க.. இப்பத் தான் நாம பள்ளில 'அ'னா போட ஆரம்பிச்சிருக்கேன்.. பார்ப்போம், பட்டப்படிப்பு வரை போகமுடியுதான்னு..

அதனால, இனிமேல் அடிக்கடி நாம எடுத்த படங்களை போட்டு உங்களுக்கு சோதனை தரப் போறேன்.. அதுக்கிடையில் வேலைகள் சற்று குறைவாக இருப்பதால், மறுபடியும் நம்ம எழுத்துப் பணியை தொடரலாம்னு நினைக்கிறேன்.. அப்பப்போ உங்க பக்கங்கள்ல நான் தலை காட்டி வந்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவு காட்டி வரும் நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி

நம்ம பிளாக் மக்கள் எல்லோரும் ஒண்ணா கூடி, புகைப்படக்கலைக்குன்னு தமிழ்ல ஒரு தனி பக்கம் ஆரம்பிச்சு, புதிய நுணுக்கமான தகவல்கள், போட்டிக்கள்னு பட்டையை கிளப்புறாங்க.. உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் இந்த பக்கத்தை மேயலாம்.. இந்த பிளாக் பக்கத்திற்கு நான் கியாரண்டி :)

வாங்கின கேமராவை பற்றி (ராம்கி கேட்டதிற்காக):

மாடல் பெயர் : கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ\EOS 400 with 18-55 mm Lens
விலை : $674 (No Tax, Free Shipping)
வாங்கிய இடம் : US1photo.com

சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:







Sunday, October 07, 2007

ஓரம் போன 'ஓரம்போ'

ஆர்யாவின் கடைசி படம் சரணின் வட்டாரம். கடந்த தீபாவளிக்கு வந்து ஓடாமல் படுத்துவிட்ட படம். அதன் பிறகு ஓரம்போ மற்றும் நான் கடவுள் படங்களில் நடிக்க ஓப்பந்தம் ஆனார். ஓரம் போ, புது டைரக்டர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரியினால் இயக்கப்பட்டு படம் ரெடியானது. ஆனாலும் பணப் பிரச்சனையால் படம் வெளிவராமல் இருந்தது. இப்போது அட்லாப்ஸ் நிறுவனம் படத்தை வாங்கி அக்டோபர் 12-ல் வெளியாக முடிவு செய்யப்பட்டது. மறுபடியும் சென்னையை சார்ந்த ஒரு பைனான்சியர் வழக்குப் போட்டதால் படத்தை வெளியிட தடை செய்யப் பட்டது.

நான் கடவுள் - அது அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் என்று வெளியாகும் என்று?

Friday, October 05, 2007

மறுபடியும் ராஜ்கிரண்

வரிசையாக மூன்று (என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான்)மாபெரும் வெற்றிப்படங்களை தந்த ராஜ்கிரண், அதற்கடுத்து மற்றவர்கள் படங்களில் (பாசமுள்ள பாண்டியரே, மாணிக்கம், பொன்னு விளையிற பூமி) கதாநாயகனாக நடித்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார். நீண்ட நாள் ஓய்வின் பின் பாலாவின் நந்தா, சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் ராஜ்கிரணுக்கு நல்ல பெயர் கொடுத்து நிமிர்ந்து உட்கார வைத்தது.

இப்போது ராஜ்கிரண் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சன் கிரியேசன்ஸை தூசிதட்டி, புதிய படங்கள் எடுக்கப் போகிறார். வழக்கம் போல கதாநாயகன், டைரக்க்ஷன் பொறுப்பை இவரே செய்கிறார். இவரது அடுத்த இரு படங்களுக்கு சிந்தாமணி, மலை கள்ளன் என்று பெயரிட்டுள்ளார்.

இவர் நடிக்காமல் படங்கள் (என்னை பெத்த ராசா, ராசாவே உன்னை நம்பி) மட்டும் தயாரித்த காலங்களில் இருந்து இவரது படங்களுக்கு இசைஞானி இசை தான். இப்போது இந்த இரு படங்களுக்கு இசையமைப்பது இசைஞானி தான்.

மறு அவதாரம் எடுத்து வரும் ராஜ்கிரண் வெற்றிகளை குவிப்பார் என்று நம்புவோம்.

Thursday, October 04, 2007

அஜித்தின் பில்லா பட ஸ்டில்கள் - முதன் முறையாக

முதன் முறையாக வெளிவந்துள்ள சில படங்கள்..






நன்றி : அஜித்ஃபேன்ஸ்.காம்

Thursday, September 20, 2007

ஸ்பைடர்மேன் விநாயகர்

பார்க்க ரசிக்க


Saturday, September 08, 2007

என்ன கொடுமை சரவணா இது




இந்த படத்திற்கு தனியாக வசனம் தேவையில்லை.

சற்றுமுன் - சினிமா செய்திகள்

நமது சினிமா ஆர்வம் இந்த பக்கத்தை தொடர்ந்து படிக்கும் எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சினிமா பற்றிய நமது செய்திகள், இப்போது சற்றுமுன் பக்கத்தில் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. திரையுலகம் பற்றிய செய்திகளுக்கு சற்றுமுன்னை படியுங்கள். நமது சொந்த திரையுலக கருத்துகள் வழக்கம் போல இங்கே தொடர்ந்து வெளி வரும்.

சற்றுமுன் பக்கத்தில் எழுத வாய்ப்பளித்த நண்பர் சிறில் அலெக்ஸிற்கு நன்றி. என்னை அவர்களுக்கு அடையாளம் காட்டிய தம்பி நன்றி.

Friday, September 07, 2007

மறுப்பு அறிக்கை

எனக்கு கல்யணம் முடிஞ்சதா ஊரெல்லாம் பேச்சு..எனக்கு தெரியாம எனக்கா.. இதை இப்படியே விட்டா என் குழந்தைக்கு காதுகுத்து விழான்னு பிளாக்கில் போஸ்டர் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம பாசக்கார நண்பர்கள்..இதற்கு நான் மறுப்பு அறிக்கை விட்டுத் தான் ஆகனும்.

பாசமிக்க அன்பு நண்பர்களே, அருண் மாதிரி, மற்ற கல்யாணமாகாத கன்னிபையங்க மாதிரி நான் இன்னும் பிரமச்சாரி தான்.. ஏற்கனவே எனது சொந்த ஊரில் எனக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிவிட்டதா பேச்சு அடிபட்டு என் அப்பா அம்மா லைட்டா ஒரு உதறலோட தான் இருக்காங்க.. நானும் தலைவர் சிவாஜில சொன்ன மாதிரி, தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ண சம்சாரமா ஆக்கிகொள்ள தேடிகிட்டு தான் இருக்கேன்.. உங்களுக்கெல்லாம் சொல்லாம கல்யாண செய்துகொள்ள, நானென்ன நடிகர் ஸ்ரீகாந்தா என்ன? இல்ல இருபது பேரை மட்டும் கூப்பிட்டு கல்யாணம் செய்துகொள்ள அபிஷேக் பாச்சனா (ஹிஹி..சைட்ல ஐஸ் மாதிரி பொண்ணை தேடுறோனோன்னு உங்களுக்கு சந்தேகம் வந்த நான் பொறுபில்லை.) வெள்ளோடு வாழ் குடிமகன்.. அதனால, ஓரத்துல மஞ்சள் வச்ச கல்யாண பத்திரிக்கை வச்சு எல்லோரையும் அழைப்பேன், நண்பர்களே..

ஸ்ஸ்ஸ்.. அறிக்கை விட்டு ரொம்ப நாள் ஆனதால எப்படி விடுறதுங்குறது கூட மறந்து போயிடுச்சுப்பா

Wednesday, September 05, 2007

ஜீரோ ரூபாய் - கொடுக்கமாட்டேன் லஞ்சம்

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க, லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். (இதற்கு ரிசர்வ் பேங்க் எப்படி அனுமதி தந்தது என்பது விளங்காத விஷயம்) ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக "எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)



லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்க



எப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்

Wednesday, August 15, 2007

விடுதலை சிந்தனைகள்

எல்லோரும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்திடனும். நம்ம பள்ளியில தேசிய கொடியேத்தி, மாறுவேடப்போட்டி நடக்கும்னு பள்ளியின் காலை வழிபாட்டில் தமிழாசிரியர் அறிவித்தார்.. வகுப்புக்கு போனவுடனே வகுப்பு ஆசிரியை, நாளைக்கு வருகை பதிவு எடுப்பேன்.. வராதவங்களுக்கு தனியா தண்டனை கொடுப்பேன்.. எல்லோரும் நாளைக்கு காலைல வந்திடுங்கன்னு சொன்னார்.. இப்போதைய சுதந்திர தின கொடியேற்ற நிகழச்சிகள் இப்படித் தான் வலுக்கட்டாயமாக மாணவர்களை வரவைத்து நடத்தப்படுகின்றன. உள்ளத்தில் விடுதலை வேட்கையும் எழுச்சியையும் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் முதல் நம்மை சுற்றியிருக்கிற எல்லோரும் உருவாக்கத் தவறிவிட்டனர்.

அரசு விடுமுறை நாள் கிடைத்தால், விருப்பமான நேரத்தில் காலையில் எழுந்து, தொலைக்காட்சியில் போடுகின்ற நிகழ்சிகளை பார்த்து விட்டு அப்படியே சோபாக்களில் மறுபடியும் ஊறங்கிப்போகும் வழக்கம் என பாரதி சொன்னது வீணிலே அழிகின்றனர் பலர். சிறுவனாக இருக்கும் காலத்திலேயெ இதெல்லாம் அவர்களின் மனதிலே வாழைப்பழத்திலே ஊசி ஏற்றும்விதமாக செய்யப்பட்டிருக்கவேண்டும்.

எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைபள்ளியும் உண்டு. விடுதலை திருநாளின் அன்று, காலை எல்லோரையும் வரவழைத்து கொடியேற்றி, ஊர்வலம் வருவார்கள், கோஷங்கள் முழக்கமிட்டு, கையில் மூவர்ண கொடிகளுடன். அந்த சிறு வயதிலே அவர்கள் அந்த கோஷங்கள் சொல்வதிலும், கொடிகளை ஏந்துவதிலும் அப்படி ஒரு ஆர்வம் இருக்கும். இப்படி பட்டணத்தில் இருக்கும் எத்தனை பள்ளிகள் செய்கின்றன.. பெரும்பாலான பள்ளிகள் விடுதலை நாளன்று கொடியேற்றுகிறதா என்பதே சற்று சந்தேகம் தான். இந்த சிறார்கள் அப்படி ஊர்வலம் சுற்றி வருகையிலே, அவர்கள் பெற்றோர்கள் கொள்ளும் சந்தோசத்தை வார்த்தையில் சொல்ல இயலாது. அன்றைக்கு, தாங்கள் தின்பண்டங்கள் வாங்க வைத்திருக்கும் காசில் கொடி வாங்கி நெஞ்சினில் குத்திகொண்டு அவர்கள் பள்ளிகள் நோக்கி செல்லும் போதும், பார்ப்பவர்களுக்கே சற்று தேசியபற்றின் அளவு மனதில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.

ஏதோ இராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் தேசியப்பற்று இருக்க வேண்டுமென்று எல்லைகள் வகுக்கப்பட்டதை போல் எல்லோரும் வாழ்கிறார்கள். இந்நிலை மறந்து, தேசிய உணர்வை ரத்தங்களில் ஏற்றி எல்லா நாளங்கள் நரம்புகளில் பரவ செய்ய வேண்டும். இந்த அறுபது வருட காலத்திலே வியக்க வைக்கும் முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் பல கோடுகள் இந்திய அன்னையின் முகங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி, தெருவை சுற்றி சுகாதாரமாக, குற்றங்கள் இல்லாத ஒரு இடமாக, சீராக வைத்துகொள்ள ஆரம்பித்தால் அதுவே மெல்ல ஒரு சங்கிலியை போல நமது நாட்டை காக்கும். அதுவே ஒவ்வொரு விடுதலை நாளின் போதும் நாம் ஏற்றுக்கொள்ளும் உறுதி மொழியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2007

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை 2

முதல் பார்வை இங்கே

இப்போது டிவிக்களின் ராஜ்ஜியம் பட்டொளி வீசி பறக்கையில், தியேட்டர்கள் நவீன வசதிகள் கொண்டு எல்லாவித சௌகரியங்களை வைத்திருந்தாலும், லாபத்தில் தான் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். எத்தனையோ நகரங்களில் தியேட்டர்கள் திருமண மஹாலாவது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற விஷயம் தான். அதுவும், சமீபத்தில் மதுரை சிந்தாமணி தியேட்டருக்கும் அப்படியொரு நிலைமை வந்துவிட்டது.. மதுரையில் நான் கல்லூரி படிக்கும் போது இங்கே பார்த்த ஒரே படம், கௌதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. ஆனால், திண்டுக்கலில் எந்தவொரு தியேட்டரும் இப்படி ஒரு நிலைமையை சந்தித்ததில்லை. ஒரு வேளை என்ன தான் டிவி பார்த்தாலும் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை போலும்..

சரி. இனி அடுத்த இரண்டு தியேட்டர்களை பற்றி பார்ப்போம்..

முதன் முதலில் திண்டுக்கல்லில் நவின கட்டிட, ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கட்டப்பட்டது நாகா ஏசி மற்றும் லஷ்மி தியேட்டர் வளாகம் தான். இந்த தியேட்டர் வந்த புதிதில் இதில் படம் பார்ப்பதே மக்களுக்கு பெரிய விஷயமாக பட்டது.. கட்டணம் அல்ல.. சௌகரியம் தான்.. திண்டுக்கலில் சிறுவர்கள் விளையாடும் சிறு பூங்காவுடன் இருக்கும் தியேட்டர் இது தான். அந்த சுற்று வட்டாரதில் குடியிருப்பவர்கள் விடுமுறை நாட்களில் படத்திற்கு வரவில்லையென்றாலும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு இங்கு வருவது உண்டு.. நாகா ஏசி தியேட்டர் மிகவும் சிறியது.. ஐநூறுக்கும் குறைவான பார்வையாளர்களே உட்கார முடியும். லஷ்மி தியேட்டர் கிட்டதட்ட ஆயிரம் பேர் உட்காரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். லஷ்மி, திண்டுகல்லில் இருக்கும் ஒரே 70mm தியேட்டர். இப்போது ராஜேந்திரா, ஆர்த்தி தியேட்டர்களின் வரவினால் இந்த தியேட்டர் கொஞ்சம் ரசிகர்களின் கவனத்தை இழந்திருப்பது நிச்சயம். இதில்விவரம் தெரிய பார்த்தது ரஜினியின் சிவா.. கடைசியாக பார்த்தது புதுகோட்டையிலிருந்து சரவணன்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தை ஓட்டி, ஆர்த்தி தியேட்டரை விட அருகில் இருப்பது கணேஷ் தியேட்டர். ஆரம்பத்தில், இதற்கு முன் சொன்ன மூன்று தியேட்டர்கள் வருவதற்கு முன் இது தான் சிறந்த தியேட்டராக இருந்தது. இடையில் வசதிகள், தரங்கள் நிறைந்த தியேட்டர்கள் வந்த பின், இது மெல்ல மெல்ல தன் பெயரை இழந்துவிட்டது.. இப்போது இடையில், படங்களை திரையிடுவது நிறுத்தபட்டு, உள்ளே மாற்றங்கள் செய்யப்பட்டு, DTS ஒலி அமைக்கப்பட்டு மறுபடியும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால், தனது பழைய பெயரை திரும்ப பெற்றதா என்பது கேள்விக்குறி தான். முதன் முதலில் பார்த்த படம் போக்கிரி ராஜா.. எனக்கு விவரம் தெரிய முதலில் பார்த்ததும் இது தான். பள்ளியில் இருந்து இங்கே எங்களையும் வாழவிடுங்கள் என்னும் குரங்குள் பற்றிய படத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அபிராமி, ஷான், NVGB, சென்ட்ரல், சோலைஹால் ஆகிய தியேட்டர்களை பற்றி அடுத்த பதிவில்

Thursday, August 09, 2007

பில்லா ஷூட்டிங்கில் அஜித் - போட்டோ



தல அஜித்தின் ரசிகர்கள் அவரை பில்லா படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்துள்ளனர். அந்த படம் தான் கீழே.. தல அசத்தலா இருக்கார்ல.. என்ன சொல்றீங்க (கூட இருப்பது ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ்)

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை

இந்தியாவுல இருக்க பெரும்பாலான மக்கள்களுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் பாக்குறது தான். சென்னையிலாவது கடற்கரை அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதி, கிண்டி பூங்கா, கோயில்கள் என்று இடங்கள் அநேகமாக இருக்கலாம். ஆனால் திண்டுக்கல் போன்ற சராசரி நகரங்களுக்கு பெரிதாக அப்படி என்ன இருந்துவிடப் போகிறது தியேட்டர்களை விட. அபிராமி, மாரியம்மன் கோயில்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை (இந்த மலைக்கு போனவர்களின் எண்ணிக்கையை விட போகாதவர்களின் எண்ணிக்கை தான் அதிகமிருக்கும்), மலைக்கோட்டை அடியினில் இருக்கும் நகராட்சி பூங்கா (எப்போதும் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதான்னு தெரில), இது போன்ற சொற்ப இடங்களே.. இதுவிட்டால், நடுத்தர மக்களுக்கு அருகிலிருக்கும் கொடைக்கானல், எல்லோரும் செல்லும்படியான பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் என ஒரு சில இடங்களும் உண்டு. ஆனால், எல்லோரும் போகக்கூடிய ஒரே இடங்கள் தியேட்டர்கள் தான். நான் திண்டுக்கலில் இருக்கின்ற எல்லா தியேட்டர்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆமாம், இருக்கிறதே பதிமூன்று தியேட்டர்கள்..அதிலென்ன எல்லா தியேட்டர்களும் என்று கணக்கு வேறு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இனி ஒவ்வொரு தியேட்டர்களாக பார்ப்போம்..

ஒளி மற்றும் ஒலித் தரத்தில் இப்போது முண்ணனியில் இருப்பது தியேட்டர் ராஜேந்திராவும் அதன் குட்டி அடையாளமான உமா தியேட்டரும் தான். இந்த தியேட்டர் நான் சென்னை வந்த பிறகு தான் திறந்தார்கள் என்பதால் என்னால் அதிக படங்கள் பார்க்க முடியவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் நான் படங்கள் பார்த்திருக்கிறேன். கடைசியாக அந்நியன் பார்த்தேன்.. அதிசயமாக எப்போதும் தியேட்டரில் ஏசி போடப்பட்டிருந்தது. தியேட்டரும் கொஞ்சம் புதுசு என்பதால் பளபளப்பு குறையாமல் தான் இருந்தது. இப்போதைக்கு அதிக விலை கொடுத்து, அதிக பரபரப்பு மிகுந்த படங்களை வாங்கி வெளியிடத் தகுதியான தியேட்டர் ராஜேந்திரா மட்டுமே. சென்னையில் இருந்து திண்டுக்கல் என்ஜினியர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன், தமிழ் நாட்டிலேயே சத்யதிற்கு அடுத்த DTS நன்றாக இருப்பது திண்டுக்கல் ராஜேந்திரா தான், என்று சொல்லக் கேள்வி.. இந்த வளாகம் பஸ் நிலையத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பது இதற்கு ஒரு பின்னடைவே.

இதற்கடுத்த தியேட்டர் ஆர்த்தி மற்றும் சிவா வளாகம். 90-ன் ஆரம்பத்தில் (சரியாக ஞாபகம் இல்லை) கட்டப்பட்டு பளிச்சென்று அப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த தியேட்டர் இது. தியேட்டர் உள்ளமைப்பு நன்றாக இருக்கும். எனக்கு விவரம் தெரிஞ்சு பார்த்த படம் சிப்பிக்குள் முத்து.. கடைசியாக பார்த்தது ஆதி. விஜயின் அதிகப் படங்கள் இதில் தான் வெளியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருப்பதால் எப்படிப் பட்ட படம் போட்டாலும் வசூலை இந்த தியேட்டர் பார்த்து விடும். முதலில் ஆர்த்தி தியேட்டர் கட்டப்பட்டு, சமீபத்தில் தான் கிட்டதட்ட நானூறு இருக்கைகள் கொண்ட சிவா தியேட்டர் கட்டப்பட்டது. சிவாவில் இதுவரை எந்த படமும் நான் பார்த்ததே இல்லை. ஆனால், திண்டுகல்லிலேயே அதிகமாக நான் ஆர்த்தியில் தான் படங்கள் பார்த்திருக்கிறேன்..

இப்போது இந்த நாலு தியேட்டர் படங்கள் தான் அதிகமாக வசூல் குவிக்கும் படங்களை எடுத்து ஓட்டுபவைகள். இங்கு திரையிடப்படும் படங்கள் நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னைக்கு சத்யம், தேவி போல திண்டுக்கலுக்கு இந்த இரு தியேட்டர்களையும் சொல்லலாம்..

மற்ற தியேட்டர்கள் பற்றி அடுத்த பதிவில்..

Wednesday, August 08, 2007

ஆங்கில மொழிமாற்ற தமிழ் படங்களின் நகைச்சுவை தலைப்புகள்




படங்களை அனுப்பி வைத்த தம்பி மகேஷ்குமாருக்கு நன்றி

எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ

இது சொந்த சரக்கு அல்ல.. ஆனா, அதுவா முக்கியம் நமக்கு..

டீல்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ் அனுப்புறேன்.அதே மாதிரி, என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்புறீங்களா?

- போட்டு வாங்குவோர் சங்கம்

சிக்குன் குனியா

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

- சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே யோசிப்போர் சங்கம்

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்

அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்

அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
வாக்-இன் சென்றே சாவார்

- படிப்பவரை கண்டால் வயிரெறிபவர் சங்கம்

பாஸ்ஜி

ரிசல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா லீவு நாளு நரகமாயிரும்.. சந்தோசம்தாங்க முக்கியம்

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்

சங்கத்துல உட்கார்ந்து இதையெல்லாம் கவனிச்சவர், வேல்ராஜ்

Tuesday, August 07, 2007

நான் கடவுளுக்காக நிஜமாவே பிச்சை எடுத்த நடிகை

நான் கடவுள் படத்துல நடிக்கிற நடிகை, படத்துல பிச்சைக்காரியா நடிக்கனும்ங்கிறதுக்காக அந்த பொண்ணை பிச்சைக்காரி மாதிரி வேசம் போட்டு பெரியகுளம் தெருவுல ஒரு நாள் முழுக்க அலையவிட்டாராம் டைரக்டர் பாலா.. அந்த பொண்ணும் ஒரு நாள் முழுக்க பிச்சைக்காரி மாதிரி சுத்தி வந்ததாம்.. இப்படி சுத்தி வந்ததுல அந்த நடிகையை யாருக்குமே அடையாளம் தெரியலையாம்.. அந்த நடிகை வேற யாருமில்லை.. தூத்துக்குடி படத்துல கருவாப்பையான்னு பாடி ஆடிய நடிகை கார்த்திகா தான்.. சும்மா பார்த்தலே அந்த நடிகையை யாருக்கும் அடையாளம் தெரியாது.. டைரக்டர் பாலா அவர்களே, இதென்ன கொடுமை? பிதாமகன்ல விக்ரம் கழுத்தை கடிப்பார்ல, அதுக்கு எப்படி டிரெய்னிங் கொடுத்தீங்க பாலா.. என்னமோ போங்க.. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.. (இப்படி பிச்சை எடுத்ததுல வசூலான தொகை 47.50)

Monday, August 06, 2007

எல்லாம் சோம்பேறித் தனம்

காலைல கண்ணை முழிச்சாலே மடிக்கணினில ஒரு ஆங்கில படத்துல தான் முழிக்கிறது இப்போ எல்லாம். இங்க வந்த புதுசுல மாசத்துக்கு ஒரு படம்னு இருந்தது.. இடைல அது கூட இல்லாம இருந்தது.. இப்போ நாளைக்கு ஒண்ணு.. வரிசையா இந்தூரு நூலகத்துல முன்பதிவு செய்து எல்லாத்தையும் வாங்கி வச்சு வரிசை கட்டி படம் பாக்குறது. இது இல்லாம சின்சினாட்டிக்கு அருண் கூட போனப்ப அருண் நெட்ஃப்லிக்ஸ் பத்தி சொன்னவுடனே அதுலையும் சேர்ந்து தமிழ், ஆங்கிலம்னு விட்ட தொட்ட படத்தை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாசு.. நான் பாத்த படத்தை லிஸ்ட் கொடுத்தாலே வாரம் ஒரு பதிவு போட்ட மாதிரி ஆகிடும் போல அத்தனை படம்.. ஏற்கனவே பார்த்த படம்னாலும் மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சாசு..

இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்
(அடைப்புகுறிக்குள்ள நம்மளோட ரேட்டிங்)

தியேட்டரில் பார்த்தது

டிஸ்டர்பியா (7/10)
ஃபென்டாஸ்டிக் ஃபோர் (5.5/10)
ஷ்ரெக் மூன்று (7.2/10)
டிரான்ஃபார்மர் (6.8/10)
ஹாரி பார்ட்டர் (6.5/10)

டிவிடியில் பார்த்தது

மிஷன் இம்பாஸிபிள் 1
லார்ட் ஆப் தி ரிங்ஸ் - முதல் பாகம்
ஆலீஸ் இன் தி வொன்டர்வேர்ல்ட்
சிக்கன் லிட்டில்
போன் பூத்
கார்ஸ்

இது இல்லாம பிரண்ட்ஸ் நாடகத்தோட ஒன்பதாம் பாக டிவிடியில் சில எபிசோடுகள்.. இப்படி பொழப்பு போகுது நமக்கு.. நண்பர்கள் காறித் துப்பாத கதை தான். என்னடா நொய் நொய்னு முதல்ல எல்லாம் போன் பண்ணுவ.. இப்போ பண்றதில்லியேன்னு.. ஏற்கனவே சொன்னது மாதிரி, நாம மதுரையில இளநிலை படிச்சுகிட்டு இருந்தப்போ கிட்டதட்ட மாசத்துக்கு முப்பது படம் தியேட்டர்லயே பார்த்ததுண்டு.. இப்போ டிவிடியில் பார்த்ததை எல்லாம் சேர்த்தா அந்த நம்பரை தாண்டிடுவேன் போல..

நம்ம நண்பர் மணி தனது திருமணத்திற்காக இந்தியா கிளம்பிட்டார்.. அவரை பிரிய மனசில்லாம அருண் எழுதுன பாட்டை படிச்சா, எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது.. அருண், பட்டையை கிளப்பிட்டேல.. மணி, வாழ்துக்கள் பா

போன தடவை பில்டப் கொடுத்து அப்படி எழுதப்போறேன் இப்படி எழுதப்போறேன்னு பதிவு போட்ட பிறகு ஒண்ணும் எழுத முடியல.. இந்த தடவை நோ பில்டப்..பார்ப்போம் எழுத முடியுதான்னு.. இப்போதைக்கு இந்த பதிவு மூலமா உங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் போட்டுக்குறேன் மக்களே.

Monday, July 30, 2007

அடுத்த ஷங்கர் படம் எப்போ வரும்?

டேய், அடுத்த ஷங்கர் படம் ரோபோவாமுல்ல..

ஆமாடா.. ஷாருக்கான் நடிக்கிறாராம்.. படத்தையும் அவரே தயாரிக்கிறாராம்..

ஆமா.. படம் எப்போடா வரும்..

நான் காலேஜ் போன பிறகு..

அடப்பாவி.. நீ இப்போதானே பத்தாவதே படிக்கிற..

Saturday, July 21, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்

கிட்டதட்ட ஒரு எட்டு மாதங்களுக்கு முன், தமிழ்ல எழுதுறதுக்கு நீங்க என்ன செய்றீங்க, எனக்கு அந்த வழியை சொல்றீங்களான்னு ஒரு இமெயில் வந்தது. நானும் ஐஐடி எழுதிய ஒரு ஃTMள் வழி தமிழாக்கத்தை ஜிப் செய்து கேட்டவங்களுக்கு அனுப்பினேன். அப்படி அவங்க போட்டு ஆரம்பித்த ஒரு புள்ளி இன்றைக்கு ஒரு கோலமா, மலேசியா பற்றி ஒரு தனி பக்கம்,பயமறியா பாவையர் சங்கம் என பல சங்கங்களில் போல சங்கங்களில் துடிப்பான உறுப்பினர்.

இவங்க சித்தார்த் என்னும் நடிகருக்கு கோயில் கட்டாத குறை தான். அவங்க பக்கத்துக்கு போனா, சின்ன சின்ன போட்டோக்களில் இருந்து சித்தார்த் பிரம்மாண்டமாகி உயர்ந்து நிற்பார்.

மலேசியா பற்றி உலகுக்கு படம் போட்டு காண்பிக்க நிறைய பதிவுகளை எழுதியுள்ளார். எழுதிக்கொண்டுள்ளார். மலேய மொழியை எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த கிக்கு (செக்கு) இவங்க.

வ.வா.ச நடத்திய போட்டியில அதிரடி நகைசுவைப் பதிவுகள் தந்து காமெடி குவின் பட்டத்தையும் அள்ளியவர்.

இன்னைக்கும் என்னை பாசமுடன் தல என்று அழைத்து நட்புக்கரம் நீட்டி என்னை பெருமைப்படுத்தியவர்.

இதுக்கு மேலும் அவங்களை யார்னு நீங்க கண்டுபிடிக்கலைனா எப்படி.. அவங்க நம்ம மை பிரண்ட் தான். அவங்களுக்கு இன்னைக்கு பிறந்த நாள் ..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

(நண்பர்களே, இது எனது 500வது பதிவு.. இவ்ளோ டைமிங்கா மை பிரண்ட் பிறந்த நாள் பதிவா மாறும்னு நான் நினைக்கல.. இந்த பதிவுக்கு இது தான் சிறப்பான கருவா இருக்கும்னு நான் நம்புறேன்.. மகிழ்கிறேன்)

(கொஞ்சம் அவசர பதிவு தான்.. ஆனால் அவசிய பதிவு..)

Thursday, July 19, 2007

கிரீடம் - ஒரு பார்வை



நாளை உலகமெங்கும் தல அஜித்தின் கிரீடம் வெளியாகிறது. படம் மலையாளப் படத்தின் மறு வடிவம் என்றாலும், ஏற்கனவே இது ஹிந்தியிலும் தெலுங்கிலும் (எவனாயிருந்தா எனக்கென்ன என்று ராஜசேகர் நடித்து வெளியானது என்று எங்கோ படித்தேன்) மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேவையில்லாத பில்டப், மாஸ் ஹீரோ போன்று பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லாமல் இருக்கும் என்று நம்பலாம். அதுவும் அப்பா வேடத்தில் ராஜ்கிரணும் அம்மா வேடத்தில் சரண்யாவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். அஜித், திரிஷா ஜோடி பார்ப்பதற்கு அழகு.. போட்டோக்களில் பதுமையாக இருக்கிறார் திரிஷா. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும்படி நன்றாக இருக்கிறது. ஆழ்வாரின் சறுக்கலுக்கு பிறகு தன்னை நிமிர்த்திக் கொள்ள அஜித்திற்கு இந்த படம் உதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

எப்போதுமே சிஃபியின் விமர்சனங்களை நான் ரொம்பவும் நம்புவதில்லை. அடி வாங்கிய படங்களுக்கு பைசா வசூல் என்று எழுதுபவர்கள். வரலாறின் முதல் நாள் விமர்சனம் பரவாயில்லை எனவும் மறு நாள் நல்ல படம் என்றும் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கிரீடதிற்கு, இது போன்று ஒரு நல்ல படம் வருவது மிகவும் குறைவு என்று விமர்சனம் தந்திருக்கிறார்கள். சென்னையில், ஏற்கனவே கிட்டதட்ட இந்த வாரயிறுதிக்கான முன் பதிவுகள் முடிந்து கிட்டதட்ட முப்பது லட்சங்கள் வசூலாகி இருக்கின்றன. இது, அஜித், முதல் வார வசூலரசன் என்று அஜித்தை மறுபடியும் நிரூபித்திருக்கிறது.



படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். திருவின் (நீர்களுக்கு நடுவில் அந்த சின்ன இடத்தில் இரண்டு தென்னை மரங்களோடு இவர் எழுதிய அழகான கவிதை பாடல், இவர் பெயர் பேசும் சிறிது நாளைக்கு) கண்களில், ஆன்டனியின் கத்திரியில், நா. முத்துகுமாரின் பாடல் வரிகளில், ஜி.வி.பிரகாஷின் இசையில், விஜய்யின் இயக்கத்தில் கிரீடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இயக்குநர் பிரியதர்ஷனின் சீடர். இந்த படம் சுரேஷ் பாலாஜி மற்றும் ரிலையன்ஸின் அட்லாப்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொசுறு : இந்த படத்திலும் அஜித்தின் மாமாவாக (அக்கா கணவராக) விவேக், சிவாஜியில் ரஜினிக்கு போல..

Tuesday, July 17, 2007

வகுப்பறையில் சில நாய்குட்டிகள்

எட்டாவது நான் படித்த வகுப்பறை, பள்ளியின் மேடை அருகே இருந்தது. கிட்டதட்ட பனிரெண்டிலிருந்து பதினைந்து அடி அகலமும் முப்பதாறு முதல் நாற்பது அடி வரை நீளமும் கொண்டது. வகுப்பின் கரும்பலகை வட மேற்கு நோக்கி இருக்கும். வகுப்பின் வாசப்படி தென்மேற்குப்பக்கம் இருக்கும்.. வாசலின் அருகினில் பெண்கள் உட்காருவதெற்கென்று பெஞ்சுகள் இருக்கும்..அவர்களின் பெஞ்ச் இரண்டு பேர் அமரக்கூடியது.. எதிர்புறம் இருக்கும் ஆண்கள் பெஞ்சில், கிட்டதட்ட நான்கு பேர் அமரலாம். வகுப்பின் பின்னே, சிமெண்டினால் ஆன திறந்த வெளி அலமாரிகள் இருக்கும். வகுப்பில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது, அதில் தான் ஏறி உட்கார்ந்து ஆட்டம் போடுவோம் நாங்கள். அந்த அலமாரியின் கீழ் தட்டின் இடது பக்கம் இருக்கும் அலமாரியில் எப்போதும் மண்கள் தோண்டப்பட்டும் சிதறிக்கிடக்கும். எப்போதோ ஏதோ விலங்கோ, இல்லை வேற ஏதோ காரணத்தினாலோ இப்படி ஆன பின்னும் பள்ளி நிர்வாகம் இன்னும் சரி செய்யாமல் இருந்தது.

ஒரு முறை வகுப்பில் அந்த கீழ்தட்டு அலமாரியில் சில காலியான பான்பராக் பாக்கெட்டுகளை எப்படியோ எனது வகுப்பு ஆசிரியை பார்க்க நேர்ந்தது. அவருக்கோ தூக்கி வாரிப்போட்டது..இந்த சின்ன வயசில் யார் இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று. தனியாக (வகுப்பு தலைவனாக இருந்த காரணத்தால்) என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்து, யார் என்று கண்டுபிடிக்க சொல்லி உத்தரவிட்டார்.. தருமியின் நிலமை எனக்கு. யாரென்றே தெரியாது.. எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று பயங்கர கவலை.. அது நம்ம வகுப்பில் இருக்கும் பையன் தானா இல்லை வேற யாரேனுமா என்று ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டர்கள்..

ஆனால் அந்த மர்மமும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் வகுப்பில் சரசரவென்று சத்தம் கேட்க, பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையே யார் அந்த பையன் என்று கண்டுபிடித்துவிட்டதால் எனது வேலை சுலபமாக, சுபமாக முடிந்துவிட்டது. சிவகாசியில் இருந்து வந்து விடுதியில் தங்கி படித்த சம்பத் என்ற பையனே அந்த பான்பராக் பாக்கெட்டுகளுக்கு காரண கர்த்தா. அவனைப் பற்றி சொல்லும் போது இன்னொரு சம்பவத்தை பற்றியும் சொல்லியேயாக வேண்டும்.

ஒரு முறை வார இறுதி என்பதால் எல்லாப்பாடங்களிலும் அதிக வீட்டுப்பாடங்கள் தந்துவிட்டார்கள். திங்கள் வகுப்பிற்கு வந்த பிறகு தான் இத்தனை வீட்டுப்பாடங்கள் இருப்பது சம்பதிற்கு தெரிந்தது. என்ன செய்வது என்று நினத்து, உடனே ஜாமென்ட்ரி டப்பாவில் இருந்த டிவைடரை வைத்து கையை கிழித்துக்கொண்டான்.ரத்தம் சொட்ட ஆரம்பிக்கும் போது, கைகுட்டையால் அதை கட்டினான்.. ஆசிரியர் வீட்டுப்பாடங்கள் செய்யாதவர்கள் யார் என்று கேட்ட போது, இவன் எழுந்து நின்று, தனக்கு அடி பட்டுவிட்டதால் எழுத முடியவில்லை என்று சொன்னான். இது பற்றி அப்போது தெரிந்த இரண்டு பெஞ்சு பசங்களும் பயங்கர அதிர்ச்சியில் இருந்தோம் சிறிது நேரம்.

அந்த வருடம் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாங்கள் வந்த போது எங்கள் வகுப்பின் எண்ணிக்கை சற்று உயர்ந்திருந்தது. இந்த வகுப்பின் பின்னே கீழ்தட்டு அலமாரியில் ஒரு நாய் தனது குட்டிகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தது. அந்த நாய் அழகாக இருந்தது. கருப்பு வண்ண மூக்கும், வெள்ளையில் சாம்பல் கலந்தும் இருந்தது. அதற்கு ஆறு குட்டிகள். ஒண்ணொன்னும் பொம்மைகள் மாதிரி இருந்தன. வகுப்பில் ஆசிரியர் ரொம்பவும் சுவாரஸ்யமாக ஏதும் நடத்திக்கொண்டிருக்கிற போது, அந்த நாய் தனது குட்டிகளுடன் உள்ளே வருவதும் போவதுமாய் இருக்கும்.. அந்த பிஞ்சு குட்டிகள் அதன் தாயுடன் ஒட்டியவாறு போவது பார்க்க அவ்வளவு ரசிப்பதாய் இருக்கும்.இரண்டு மூன்று நாட்களில் அவைகள் எங்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தன. நாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டை போடுவது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து வர்க்கி, பிஸ்கட் வேறு அவைகளுக்கு தர ஆரம்பித்தோம்.. கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்த பசங்க சில பேர், ஆளுக்கொரு நாய்குட்டிகளுடன், அவைகளை கொஞ்சியவாறே பாடம் கவனிக்க ஆரம்பித்தனர்..

ராஜா என்னும் பையன், அவைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டு ஒன்றை வீட்டிற்கு எடுத்து செல்ல முற்பட்டான். ஆனால் தாய் கிட்ட இருந்த அதை பிரிக்கக்கூடாது என்று எல்லோரும் சொல்லிவிட்டதால் அவன் அந்த எண்ணத்தை கைவிட்டான்.. அதே சமயம், அந்த வருட பொங்கல் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது, அந்த நாயையும், குட்டிகளையும் காணவில்லை..சில நாட்கள் எங்கள் பேச்சில், வகுப்பில் ஒரு அங்கமாக இருந்த நாய்குட்டிகள் எங்கே போயின, எப்படி காணாமல் போயின என்று எங்கள் தெரியவே இல்லை.. எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாக இருந்தது. இரண்டு மூன்று மாதம் கழித்து, ராஜா அந்த நாயும் நாய்குட்டிகளும் தன்னுடைய தோட்டத்தில் தான் வளருவதாக சொன்னான். அவன் தான் தன் ஊர் நண்பர்களுடன் வந்து தாயோடு எல்லா நாய்குட்டிகளையும் எடுத்து சென்றுவிட்டானாம். கேட்ட போது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தது. வகுப்பில் பணம் வசூலித்து சில நாட்கள் அவைகளுக்கு பிஸ்கட் எல்லாம் வாங்கி தந்துகொண்டிருந்தோம்.

Sunday, July 15, 2007

சென்னை நூலகத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்

இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியவில்லை. ஆனால் எனது நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியது. மின்னுது மின்னலுக்கு நன்றி.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை, சென்னை நூலகத்தின் வலைப்பக்கத்தில் இருக்கிறது. ஆற அமர ஒவ்வொரு பக்கமாக நீங்கள் படிக்கலாம். உங்கள் எல்லொருக்கும் யான் பெற்ற இன்பம் பெருக இவையகம் என்று உங்களுக்கும் இதோ..

Friday, July 13, 2007

மன்சூர் அலிகான் அஜித்திற்கு தந்த விளம்பரம்

ஏதாவது விசித்திரமாக பண்ணுவதென்பது மன்சூர் அலிகானின் வேலை.. தனது படத்திற்கு 43 எழுத்துகளில் தலைப்பு வைத்து (ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க கிரிஷ்ண காமராஜன்.. சரியான்னும் தெரில?) இப்படி இவர் செய்த விஷயங்கள் அதிகம். அதை விட, தனியாக சில தவறுகள் செய்து போலீஸில் உதை வாங்கியது தனிப்பட்ட விஷயம். இப்போது இவர் நடித்து தயாரித்து வெளிவந்திருக்கும் படம் 'என்னைப் பார் யோகம் வரும்". நிச்சயம் படம் ஒன்றும் பெரிதாக இருக்கப் போவதில்லை. இந்த தலைப்பையும் பல பேர் நிறைய கடைகளில், இரண்டு கழுதைகள் கொண்ட ஒரு போட்டோவில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.இப்போது இந்த படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களை கவருவதற்காக அவர் அடித்த போஸ்டரை பாருங்களேன்.. பைசா செலவில்லாமல் அஜித்தின் அடுத்த படமான கிரீடதிற்கு கிடைத்த விளம்பரம் இது.


Thursday, July 12, 2007

தனிமையில் கிடைத்த ஞானப்பழம்

கடந்த வாரம் காரை எடுத்துகிட்டு, தனியா ரவுண்டு அடிக்கலாம்னு கிளம்பினேன்.. அப்படி தனியாக சுத்தியதற்கு என்ன காரணம்.. எப்பவும் எங்கேயும் கூட்டதோடு இருக்கவே எனக்கு பிடிக்கும்.. அரட்டைகள் பிடிக்கும்.. நாம அடுத்தவங்களை ஓட்றோமோ, அடுத்தவங்க நம்மளை ஓட்றாங்களோ தெரியாது, ஆனா அந்த அரட்டை கும்மி ஆனந்தம் தரும்.. மொத்தமாக ஒரு வீட்டில் கும்மி அடித்து, ஒரு ஆள் வெங்காயம் நறுக்க, அடுத்த ஆள் தக்காளி அறுக்க, இந்த பக்கம் ஒரு ஆள் கோழியை வெட்டி மஞ்சள் போட்டு கழுவ.. அந்த பக்கம் சமையல் என்ன நடக்குதுன்னு கவனிக்காம டிவில ரெண்டு பேர் தமிழ் படம் பாக்க.. ஒரு சின்ன திருவிழா சந்தோசம் அந்த அறைக்குள்ளே இருக்கும்.. மொத்தமா சேர்ந்து சமைச்சு சாப்பிட்டு, சத்தமா பேசி சிரிச்சு சாப்டா அந்த உணவே அமிர்தம்.. அந்த நாளே திருவிழா.. அந்த இடமே சொர்க்கம்.. இப்படி ஒண்ணா இருந்து பழகிட்டதால, என்னைக்காவது தனிமைல இருக்கின்ற சந்தர்ப்பம், அதாவது எங்கேயாவது போறப்ப வந்தா சமாளிக்கமுடியாதோன்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு.. அதனால தான் அந்த தனி உலா..

கொலம்பஸ்ல ஸ்கியாட்டோ ஆறு ஒண்ணு இருக்கு.. இது கிட்டதட்ட 231 மைல் நீளம் கொண்டது என்று யாரோ சொல்லக்கேள்வி..அது போற வழியெல்லாம் ஆற்றுப்படுகை பூங்காக்கள் நிறைய இருக்கும். கிட்டதட்ட வீட்டிலிருந்து ஒரு முப்பது மைல் தூரத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றேன்.. ஆற்றில் நீர் விளையாட்டுக்கள் பல பேர் செய்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் கூச்சலும், மரங்களின் இலைகள் காற்றோடு பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளும், தூரத்தில் பறவைகள் மெதுவாகப் பாடுவதும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது..

கிட்டதட்ட அம்பது வருடங்களுக்கு முன்னால் வந்த ஆடிப்பெருக்கு படத்தில், ஏ.எம்.ராஜன் இசையமைத்து பாடிய "தனிமையிலே இனிமை காணமுடியுமா' என்ற பாடல் மனசுக்குள் ஓடியது.. இது மாதிரி வம்பாக தனிமை தேடி செல்வது சரியா என்பது தான் நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது எனக்கு தோன்றியது..ஆனால், அதையும் அனுபவிப்போமே.. அமெரிக்கா வந்த பிறகு இது மாதிரி தனியாக எங்கும் சென்றதில்லையே என்ற எண்ணம் மனசை முழுதாக ஆளுமை படுத்தியது.

ஊர்ல இருக்கிறப்போ எப்படித் தான், சில சமயம் நேரத்தை தள்ள முடியாம தள்ள வேண்டியதா இருக்கும். அது மாதிரி நேரத்துல மிதிவண்டியை எடுத்துகிட்டு எங்கேயாவது போயிடுவேன்.. போற இடம் தெரியாது.. கால் வலிக்கிற வரைக்கும் போயிட்டு எங்க வலிக்க ஆரம்பிக்குதோ அங்க உட்கார்ந்துடுவேன்..எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு தெரியாது.. தரையில் கிடக்குற புள்ளை ஒண்ணொன்ணா புடுங்கி ஏறியிறது முதல், வானத்துல மேகம் வரையிற ஓவியங்கள் பார்ப்பது வரை ஏதாவது பண்ணிகிட்டு இருப்பேன்.. எனக்கு இன்னமும் ரொம்ப பிடிக்கிறது மேகத்தை ரசிப்பது.. காற்று அடிக்க அடிக்க அது தன் உருவத்தை மாத்துறது அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். சில சமயம், டைனோசர் மாதிரி உருவமும் இருக்கும்.. சில சமயம் ஓடுகின்ற மனுஷனை போலவும் இருக்கும்.. எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.. ரொம்ப நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பி வருவேன்.. பல சமயங்களில் முழுதாக சக்தியேற்றப்பட்டவனாக உணர்ந்ததுண்டு.

இங்க வந்த பிறகு அது போல், தனிமை அவ்வளவாக வாய்த்ததில்லை.. ஆமாம்.. இது மாதிரி தனிமை தேடி போனால், ஏதோ மனசுக்குத் தான் கஷ்டம் போல என்று எலோரும் பார்ப்பார்கள்.. சந்தோசமாக இருப்பவன் இப்படியெல்லாம் போகக்கூடாதா என்ன என்று தெரியவில்லை.. ஆனால், அன்று நான் அப்படி தனிமை தேடி போன போது, பின்னால் திரும்பி பள்ளி சம்பவங்களையும் அங்கே போட்ட ஆட்டங்களையும் நினைத்து பார்க்க முடிந்தது.. ஏழாவதில் தமிழம்மாவிடம் (ஜெயலலிதா அல்ல) திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், வெளியே நின்று கொண்டிருந்தது, எட்டாவதில் எங்கள் வகுப்பில் ஒரு நாய், குட்டியோடு தங்கி இருந்ததும், மொத்தமாக குட்டிகளோடு அது உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது என பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தது..

இப்படி எல்லாம் நினைத்து பார்க்க அருமையான சந்தர்ப்பம் அன்று அமைந்தது. மறுபடியும் காரினுள் ஏறி முன்னால் கிளம்பியபோது, நான் பதினைந்து வருடங்கள் பின்னால், மென் மீசை வளர்ந்து, சிறுவனாக, டவுசர் போட்டுக்கொண்டு திரிந்த காலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

சிவாஜிக்கும் ஹிந்தி நாயக்-கிற்கும் என்ன சம்பந்தம்

முதல்வனின் ஹிந்தி ரீமேக் படமான நாயக்கில் அனில் கபூரின் பெயர் என்ன?

இதில் என்ன பெரிய விஷயம்னு நினைகிறீங்களா.. பதில் தெரிஞ்சா, இந்நேரம் நீங்க அசந்து போயிடுவீங்க.. இல்லைனா, நாளைக்கு வாங்க ஆச்சர்யத்தில் மூழ்க..

Sunday, July 08, 2007

புத்தன் நான்..

ஒவ்வொரு
செல்லிலும்
ஆயிரம் டன்
ஆசைகள் கொண்ட
புத்தன் நான்..

எல்லாம்
உன்
ஒற்றை பார்வை
ஏற்றி வைத்த
சுமையடி!

இது
கழுதை சுமையல்ல!
தாய்மை!

Friday, July 06, 2007

மார்க்கபோலோ மார்ஷல்

யூ.எஸ் வந்த பிறகு, எங்க யார் பகார்டின்னு சொன்னாலும் டக்குன்னு மனசுல வர்றது நம்ம நாட்டாமை தான். இதே மாதிரி நான் பத்தாவது படிக்கிறப்போ, யார் மார்க்கப்போலோன்னு சொன்னாலும், ஞாபகத்துல வர்றது என் நண்பன் மார்ஷல் தான். சராசரிக்கும் சற்றே உயரம்.. ஒடிசலான தேகம்.. இந்திய நிறம்.. என்ன பேசினாலும் நக்கல் அதுல தூக்கலா இருக்கும்.. பத்தாவது மட்டுமே என் கூட படிச்சான்.. ஆனா, என்னோட மனசு அகராதில மார்க்கபோலோ = மார்ஷல் னு ஒரு பதிவை உண்டாக்கிட்டு போயிட்டான்..

திண்டுக்கல் நகரம் பூட்டுக்கும் திராட்சைக்கும் வெற்றிலைக்கும் பிரசித்தின்னு சினிமா பாட்டு கேக்குற எல்லோருக்கும் சாதாரணமா தெரிஞ்ச விஷயம்.. அதோட தோல் தொழிற்சாலைகளும் அதிகம்ங்கிறது ரொம்ப சில பேருக்குத் தான் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் உண்டு.. நீங்க மதுரைலைல இருந்து திண்டுக்கலுக்கு பஸ்ல வந்தீங்கன்னா, திண்டுக்கலுக்குள்ள நீங்க நுழையிறதுக்கு இந்த துர்வாசனைகள் தான் பன்னீர் மாதிரி.. அப்படியொரு கப்பு அடிக்கும் உள்ள நுழையிறப்போ.. இந்த தொழிற்சாலைகள் அந்தப் பக்கம் இருந்த நிலங்களை எல்லாம் சீரழித்தது ஒரு தனிக்கதை.. அப்படியொரு ஒரு தோல் தொழிற்சாலை முதலாளியின் பையன் தான் என் நண்பன் மார்ஷல்.. முதலாளியின் பையன் சொன்னவுடன் உங்க மனசுல தமிழ் படம் அதிகம் பார்த்ததினாலோ என்னவோ ஒரு சின்ன வில்லன் உருவம் கொடுத்திருப்பீங்களே.. அதை அப்படியே மாத்திக்கோங்க.. வயசுக்கேற்ற குறும்பு இருக்கும்.. ஆனா சற்றும் அந்த பணக்காரத்தனம் இருக்காது. திண்டுக்கல்ல இருந்து வர்ற பசங்க கூட தான் இவனும் பஸ்ல வருவான்.. பார்த்தால் சற்றும் நீங்க அவனை பகட்டு வாழ்க்கை கூடத்துல இருந்து வர்றவனா யோசிக்கவே மாட்டீங்க..

இவனைப் பத்தி சொல்ற நேரத்துல ஒரு மூணு வருஷம் எங்க பள்ளியின் தலைமையாசிரியரா இருந்த ஒருவரை பற்றிச் சொல்லியேயாக வேண்டும். அவர் பெயர் இராமர்.. தடித்த உருவம்.. தலையில் முடிகள் குறைவு.. இவர் பள்ளியில் ஆட்கள் சேர்க்க லஞ்சமெல்லாம் வாங்குவார்.. இல்லைனா மார்க்கபோலோ வாங்குவார்னு கேள்விபட்டிருக்கேன்.. ஆனா எங்க வகுப்பு சும்மா வர்றப்ப எல்லாம் மார்ஷல் கிட்ட, என்ன மார்க்கப்போலோ..ன்னு தான் கூப்பிடுவாரு..அப்பா எனக்குன்னு ஏதும் கொடுத்துவிட்டாரான்னு ஒரு கேள்வி வேற.. அப்போ தான் நாங்க அவன் கிட்ட காரணம் கேட்டப்ப, அவன் எப்படி சீட் வாங்கினோம்ங்கிற கதையெல்லாம் சொன்னான்.. அவர் பற்றி இன்னும் பல புகார்கள் இருந்ததால் சீக்கிரமாவே அந்த பதவியில் இருந்த இறக்கப்பட்டார் பள்ளி நிர்வாகித்தினரால்.. பள்ளியிலேயே பதினோராம் வகுப்பு இருந்தாலும், பத்தாவதில் டி.சி வாங்கிவிட்டு மறுபடியும் சேரணும்.. எல்லாப் பள்ளியிலும் இதே நிலைமை தானா என்று தெரியாது. அதே பள்ளியில் பத்தாவது படித்து நல்ல மதிப்பெண் வாங்கியும், மறுபடியும் சேர எத்தனை நாட்கள் அலைந்தோம் என்று எனக்கும் என் நண்பர்களுக்கும் தான் தெரியும்.. இறுதியில் பள்ளி நிர்வாகம் தலையிட்டு பள்ளியில் படித்தவர்களுக்கே முதலுரிமை என்று, எங்களை சேர்த்துக்கொண்டது..

பத்தாவது படித்து முடித்த பிறகு, அவர்கள் தொழிற்சாலையை கவனித்துக்கொள்ள லெதர் டெச்னாலஜி படிக்கவேண்டும் என்று சென்னைக்கு போய்விட்டான் மார்ஷல்.. இரண்டொரு முறை திண்டுக்கலுக்கு சென்ற போது அவனை பார்த்தேன்.. அதன் பிறகு அவன் சென்னையில் படிப்பதாக கேள்விப்பட்டேன்.. இப்படி வாழ்க்கையில், கண்மூடி நினைத்துப் பார்த்தால் வந்தவர்கள் என்று பல நண்பர்கள் ஒவ்வொரு காலகட்டதிலும் உண்டு. அதுவும் இப்போது ஆர்குட் போன்ற வசதிகள் வந்த பிறகு, நமது முகத்தை எங்கேயோ பார்த்து விட்டு, பள்ளி நண்பர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை தேடி வரும் , உள்ளத்தில் அப்படி ஒரு உன்னத மகிழ்ச்சி ஏற்படுவது நன்றாகத் தெரியும்..

சின்ன வயசில் கேள்விபட்ட மாதிரி, ஆண்களோட நட்பு நீண்ட காலம் நீடித்து இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண் நட்பு, வருகின்ற கணவனை பொறுத்தே அமைகிறது. என் கூட கல்லூரி படித்த பெண், ஒரு மாததிற்குள் நடந்த தனது திருமணதிற்கு கூட, கூட படித்த யாரையும் அழைக்க முடியாத நிலமையில் இருந்தாள்.. இன்று வரை, கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு பின்னாலும், அவளை அவளது பெண் நண்பர்கள் கூட அந்த நட்பை தொடர முடியவில்லை.. ஏனெனில், அவளுக்கு அமைந்த கணவன் அப்படி. இப்படி எத்தனையோ நல்ல நண்பர்களை, அவர்கள் பெண்களாய் இருந்ததால் நாம் தொலைத்திருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக ஒரு இருபது வருடதிற்கு முன்னால் இருந்த நிலைமையை விட இன்று பரவாயில்லை என்று ஆறுதல் கொள்ளமுடிகிறது..

Wednesday, July 04, 2007

வீட்டுக்குள்ளே ரசிகர் சண்டை

சிவாஜி பத்தி போஸ்ட் போடுறதுக்கு முன்னால, நான் ரஜினி படம் பாத்துட்டு வந்தாலோ, இல்ல என் அப்பா கமல் படம் பாத்தாலோ (அவர் பெரும்பாலும் படமே பாக்குறதில்லை.. ஆனா எப்பவாவது அப்படிப் பாத்தா அது கமல் படமாத் தான் இருக்கணும்), வீட்ல ஒரு சின்ன கலவரமே நடக்கும்.. அதை பத்தி சும்மா கதைக்கிறேன்..

சினிமா உலகத்துல, நிறைய நடிகர்கள் இருந்தாலும் எப்பவும் ஒரு ரெண்டு நடிகரை வைத்து தான் ரசிகர் சண்டைகளே இருக்கும்.அந்த காலத்துல பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி தியாகராஜா பாகவதர் தான் எதிரும் புதிருமா இருந்த நடிகர்கள்.. எம்.கே.டியை அந்தகால சூப்பர் ஸ்டார்னு தான் எல்லோரும் அழைப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி.. இந்த இருவரை பற்றி சொல்லவேண்டாம்.. எல்லோருக்கும் தெரிந்திரிக்கும்.. எப்பவும் இப்படி இருக்கிற இரண்டு பேருக்கும் இடையில் அவர்கள் பயன்படுத்தும் பார்முலா, வேறுவேறாகத் தான் இருக்கும். எம்.கே.டியும், எம்.ஜி.யாரும் நடிப்பை ஊறுகாயாக்கி, மக்களை கவர்கின்ற அம்சத்தை நிறைய வைத்திருப்பார்கள். எம்.கே.டி படங்கள் அவ்வளவா பார்த்ததில்லை.. ஆனால் எம்.ஜி.யார் படங்கள் அப்படித்தான். ஆனால், இதற்கு நேர்மாறாக இருக்கும் சிவாஜியின் படங்கள்.. மனித வாழ்க்கையும் அதில் உணர்ச்சிகளும் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.. இவர்கள் இருவருக்கிடையில் யாரும் மற்றவருடையும் பார்முலாவை அதிகம் பயன்படுத்தியதில்லை.. எம்.ஜி.யார் ஒரு போதும் சிவாஜியின் குடும்ப சித்திர பார்முலாவை பயன்படுத்தியதில்லை.. ஒரு வேளை தனக்கு அழுது வடிந்து நடிப்பது வரவில்லை என்பதால் அப்படி ஒரு பார்முலாவை எடுத்தாரா என்பதும் தெரியவில்லை.

அதன் பிறகு வந்தது தான், ரஜினி-கமல் யுகம்.. ஆரம்பத்தில் இவர்களுக்கு இடையில், தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் அப்படி ஒரு வித்தியாசம் இருந்ததில்லை. ரஜினியும் கமல் பாணி படங்களான, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் படங்களில் நடிக்கவே செய்தார். கமலும் ரஜினி பாணி படங்களான, சகலகலா வல்லவன், காக்கி சட்டை போன்ற படங்களிலும் நடித்து வெற்றியை தவறாமல் குவித்தார். ஆனால், இவர்களின் சமீப கால படங்கள் எல்லாமே ஏதோ ஒரு பிரிவுக்குள் அடங்கி போனவையாகத் தான் இருக்கும். கமல் வித்தியாசங்களை காட்டவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கருக்களையே எடுத்துக்கொண்டார்.. ஹே ராம், தேவர் மகன், அன்பே சிவம், குணா, மகாநதி, விருமாண்டி என்று அந்த பட்டியல் சற்றே நீளமானது.. இந்தப் பக்கம் அண்ணாமலையில் தொடங்கி இன்றைய சிவாஜி வரை, சராசரிக்கும் அதிகமான விஷயங்கள் கொண்ட ஒரு மனிதனின் (larger-than-life image?) வாழ்கையை சுற்றியே தானிருக்கிறது.. கதைகளை விட, ரஜினியை நம்பியே படங்கள் எடுக்கப்படுகின்றன..

ரஜினி-கமலுக்கு பிறகு விஜய்-அஜித் வந்துவிட்டாலும் இந்த மாதிரி ஒரு ஒப்புமை செய்யும் அளவிற்கு அவர்கள் படங்கள் நடிக்கவில்லை என்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால், ஒரே மாதிரி, ரஜினி எம்.ஜி.ஆர் பாணி தான், விஜயின் பாணி என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்.

என் அப்பா, அவரது இளமை காலங்கள் தொட்டு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இருப்பவர். நீண்ட வரிசைகளில் நின்றெல்லாம் படம் பார்த்தவர்.. அந்த இள வயது துள்ளல் எப்போது முறுக்கேறி கிடந்த காலங்களில், அதே சுறு சுறு படங்கள் தான் பிடித்திருந்தது.. ஆனால் இப்போது இத்தனை கால வாழ்க்கைக்கு பிறகு அன்று பிடிக்காமல் இருந்த சிவாஜி படங்கள் இன்று கமல் போர்வையில் பிடிக்கிறது. நான் இது போல பல பேரை கண்டதுண்டு.. எம்.ஜி.ஆர் பிடித்தவர்களுக்கு கமல் பிடிப்பதும், ரஜினியை பிடித்தவர்களுக்கு அஜித்தை பிடிப்பதும்..

நான் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் பார்த்துவிட்டு வரும் போது, ஏன்டா..கதையே இருக்காது.. சும்மா ஸ்டையிலுக்காக ஏன் போய் ரஜினி படமெல்லாம் பாக்குறன்னு கேட்பார்..கமல் படமெல்லாம் எப்டி இருக்கு.. நடிப்பும் அதில் சொல்ற விஷயங்களும் அருமையா இருக்குன்னு என்னை கேன்-வாஷ் பண்ணுவார்.. நான் மறுபடியும், அன்றைக்கு உங்களுக்கு ஏன் சிவாஜி படங்கள் பிடிக்கலையோ அதே மாதிரி தான் இதுவும்..னு சொல்லி நான் பேச என் அப்பா பேசன்னு ஒரு சின்ன ரசிகர் சண்டையே நடக்கும்.. ஆனா, அந்த நொடிகள் எல்லாம் நான் என் வாழ்க்கையில் ரொம்ப ரசிச்சது..

ஆமாங்க, உங்களுக்கு இது மாதிரி ஏதாவது அனுபவம் இருக்கா?