Wednesday, October 24, 2007

மிலிட்டரி மாமா

இராணுவம் என்றால் மனசுக்குள் ஒரு தேசப்பற்றையும் அவர்களின் தியாக உணர்வையும் வீரத்தையும் என் சின்ன வயசில் என் மனசில் விதைத்தது, என் அப்பாவின் பள்ளி கால நண்பரும், சொந்த முறைகளில் மாமாவுமான சின்னையா மாமா தான். சத்யராஜ் உயரம்.. நல்ல ஆஜாகுபாவான உடம்பு.. ஆனால் மனசு இவருக்கு நிஜமாகவே குழந்தை தான்.. என் மீதும் என் தங்கையின் மீதும் அவ்வளவு பாசமாக இருப்பார்.. தனது பெரிய குடும்பத்தை (மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்) விட்டு எப்படி காஸ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மொத்தமாக இருபது வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். எங்கள் ஊரில் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் எல்லோரும் அவரை பாசமுடனும் மரியாதையுடனும் கேப்டன் சின்னையா என்று தான் அழைப்பார்கள்.

அவர் ஒரு இரண்டு வருட காலங்கள் பெங்களூர் இராணுவ முகாமில் இருந்த போது (அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக்கொந்டிருந்திருக்கலாம்) அரையாண்டு தேர்வு கால விடுமுறைகளில் ஒரு வார காலம் அவருடன் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை படங்களின் மூலமே இராணுவ முகாம்கள் பார்த்து வந்த எனக்கு அந்த பயணம் மிகவும் ஆச்சர்யத்தையும் அவர்கள் மீதான ஒரு மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களூர் குளிரிலும் அவர்கள் அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் பயிற்சி எனக்கும் அவ்வளவு காலையிலே எழுந்து உடல் பயிற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசைய அப்போதே உருவாக்கியது.. அவர்களுக்கு தினமும் ஒவ்வொரு மாநில மொழி திரைப்படங்கள், தனியாக வரிகள் இல்லாத கேண்டீன் (என் மாமா வாயிலாக சில பொருட்கள் வரிகள் இல்லாமல் எங்கள் வீட்டிற்குள் வந்ததும் உண்மை) எப்படி எத்தனையோ சலுகைகள் உண்டு.. உள்ளேயே, இராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்க பள்ளிகளும் இருந்தன. அந்த ஒரு வாரம் எனக்குள் அப்படியோரு மாற்றத்தை தந்தது.. (ஆனால், அந்த வளாகத்தை விட்டு வெளியே இருக்கும் உலகம் இது எதை பற்றியுமே, கார்கில் மாதிரி போர்க்காலங்களைத் தவிர, கண்டுகொள்ளாமல் இருப்பதென்னவோ உண்மை தான்)

நான் சென்னைக்கு வேலைக்கு வரும் சமயத்தில், என் மாமா இராணுவத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று, ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். தினமும் ஊரில் கூட காலையில் எழுந்து ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் ஊரில் இருக்கும் பொழுதுகளில் அவர் கூட சேர்ந்து ஓடியிருக்கிறேன்.. நான் வேலைக்கு சென்ற புதிதில், அவர் பயன்படுத்திய டை எல்லாம் எனக்கு கொடுத்து உதவினார். எப்போது டை கட்டினாலும் அவர் நினைப்பு எனக்கு வராமல் இருந்ததில்லை.. ஊர் கோயிலில் சாமிக்கு திருவிழா எடுக்கும் போது இரண்டு குழுவிற்கு இடையில் பிரச்சனை வந்தபோது இவரும் ஒரு ஆளாக இருந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி தந்தார் இரண்டு வருடமாக. திண்டுக்கலில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தன் மகன்களுடன் நிர்வகித்து வந்தார்..

இங்கே வந்த பிறகு ஒரு முறை அவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.. இரண்டு வாரங்களுக்கு முன்னால், எப்போதும் என் வீட்டிற்கு தொலைபேசினேன்.. அப்போது அவர்கள் சொன்ன செய்தி, ஒரு டன் விறகுகளுக்கு இடையில் சிக்கியதாய் என் இதயம் வலித்தது. குடும்ப பிரச்சனை காரணமாக (இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) திண்டுக்கலிலிருந்து வீட்டிறு தனது இரண்டாவது மகனுடன் வந்த போது, வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த பிரச்சனை நடந்த போது அந்த வழியாக வந்த எங்கள் ஊர் பஸ்ஸிலிருந்தவர்களால் கூட இவர் காப்பாற்ற முடியவில்லை.. இரண்டு மூன்று நாட்களுக்கு நினைப்பெல்லாம் அவராகவே இருந்தது.. என்னடா வாழ்க்கை என்று கூட பல சமயங்களில் என்னை சலிக்க செய்தது.. ஒரு இரணுவ வீரராக அவர் இருந்த காலத்திலே இறந்திருந்தாலோ, இயற்கையாக இறந்திருந்தாலோ இந்த பாதிப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.. கனத்து போயிருந்த இதயத்தை அவர் ஞாபகமாக தந்து விட்டு போன டைகளை தடவி பார்த்து ஆற்றிக்கொண்டேன்..

10 பின்னூட்டங்கள்:

said...

வருத்தமான செய்தி :(

said...

migavum negizha cheitha padivu...
:(

said...

ம்ம்ம்... என்ன சொல்ல.

said...

அன்புள்ள அண்ணனுக்கு,
“Death ends a life, not a relationship” they say. My deepest condolences.Take care

said...

படிக்க வருத்தமாய் இருக்கிறது.. ஆழ்ந்த அனுதாபங்கள்..

//கனத்து போயிருந்த இதயத்தை அவர் ஞாபகமாக தந்து விட்டு போன டைகளை தடவி பார்த்து ஆற்றிக்கொண்டேன்..//

காலம் உங்கள் காயத்தை ஆற்றட்டும்.. :(

Anonymous said...

Manathai thotta nalla pathivu .

said...

வருத்தமாய் இருக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு கடவுள் உறுதுணையாக இருப்பார்.

said...

ஆழ்ந்த அனுதாபங்கள். பிரச்னையே இல்லாத மனிதன் பிரச்னை காரணமாக கொலை செய்யப்படுவது நடக்கக் கூடாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்

Anonymous said...

I feel so sad after reading this. My deepest condolences. Take care.

Rumya

said...

Deepest condolences..