சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 2
இந்த பயணத்தின் முதல் பகுதி
எங்கள் ஊர்ப் பக்கமெல்லாம் (பெரும்பாலும் எந்த கிராமத்துக்கு போகும் பேருந்துகளும்) பேருந்துகள் நிற்பதற்கென்று ஒரு இடம் இருந்தாலும் எங்கே யார் குறுக்கே கையை நீட்டினாலும் பேருந்து நிற்கும். சிறிய ஊரான எங்கள் ஊரிலேயே, ஊரை விட்டு வெளியேறுவதற்குள் ஐந்து நிறுத்தங்கள் இருக்கும். எங்களை சுமந்து கொண்டு சென்ற அந்த சிறுமலைக்கு போகும் வண்டியும், கைகாட்டி நிற்போருக்கெல்லாம் நின்று அவர்களை உள்ளே திணித்துகொண்டு சென்றது. ஆசை உள்ளவன் கல்யாணப் பந்திக்கு சென்றால் மூக்கில் எட்டிப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவது போல வெளியில் நாலும் பேர்,இரண்டு பக்க படிகளில் தொங்கி வர, ஆடி ஆடி குலுங்கி குலுங்கி மலை ஏற ஆரம்பித்தது பேருந்து.
ஜன்னல் ஓர இருக்கைகள் தான், இந்த மாதிரி பயணங்களில் நன்று. எனக்கும் அது தான் ரொம்ப பிடிக்கும். மெல்ல மலயேற ஆரம்பித்த போது சில்லென்று சுகந்தமான தென்றல் மூஞ்சியில் அடித்தது. என் தலை முடியெல்லாம் அந்த காற்றோடு போக ஆசை பட்டு எல்லாப் புறமும் கலைந்தது. கடந்து சென்ற பாறைகளும் அதில் எழுதப்பட்ட ஜோடிப் பெயர்களும், காதலை இன்னும் உலகுக்கு சொல்லிகொண்டிருந்தன. தூரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை சின்ன தலையணை போல தெரிய ஆரம்பித்தது. அட! சொல்ல மறந்துவிட்டேனே. திண்டுக்கல் என்பதற்கு கல்லினாலானா தலையணை என்று பொருள். திண்டு என்றால் தலையணை. திப்பு சுல்தான் மன்னர்கள் இங்கிருந்து தான் ஆட்சி செய்தனர். இந்த மலைக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் சிவகங்கைக்கும், நாமக்கல் மலைக்கோட்டைக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாக சொல்வதுண்டு. அந்த சுரங்கத்தின் வாசல் வரை நான் சென்று வந்ததுண்டு, எனது சிறிய வயதில். மருது சகோதரர்கள் உதவி கேட்டு திப்புசுல்தானை தேடி அப்படித் தான் வந்ததாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய சிவகங்கை சீமை படத்தில் பார்த்த ஞாபகம் இன்னமும் உண்டு.
என் நண்பர்களுக்கு இந்த மாதிரி பயணமெல்லாம் கொஞ்சம் புதுசு. சுற்றியுள்ள மனிதர்களும் அவர்களின் மண் வாசனையும் ரொம்ப புதுசு. தோளில் துண்டு போட்டு கொண்டு வெறும் வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு இதுவெல்லாம் ரொம்ப சாதாரணம். பஸ்ஸில் ஏறினாலோ பக்கத்து தெரு பாமா முதல் பக்கத்து ஊரு பரிமளா வரை, ஆலை இயந்திரங்கள் போல சத்தமாக பேசிக்கொண்டே வருவது பெண்கள் இயல்பு. நடத்துநர்களை பற்றிச் சொல்லவே வேண்டாம். இளவயது நடத்துநர்கள் பாதி பேர் காதலித்து, குறிப்பாக பேருந்தில் வந்த பெண்களையே, கல்யாணம் செய்து கொள்வார்கள். நான் ஒன்பதாவது படிக்கும் போது, என் கல்யாணமாகாத சித்தியோடு பேருந்தில் ஏறினேன். அதுவரை பழைய தத்துவ பாட்டு பாடிக்கொண்டிருந்த பேருந்தில், நடத்துநர் வேகமாக கேசட்டை மாற்றி, கோபுர வாசலிலே படத்தில் தேவதை போலொரு பெண்ணிங்கே வந்தது தம்பி என்ற பாட்டை போட்டார். இப்படித்தான் பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்த காலங்களில் பல பாடல்களில் உள்ளர்த்தத்தை தெரிந்துகொண்டேன். குறிப்பாக சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில் வரும் வாசக் கருவேப்பிலையே, அடிக்கடி பேருந்துகளில் கேட்ட பாடல்.
எனக்கு தெரிந்தவரை, ஊட்டி மலைப் பாதையை விட, எங்கள் சிறுமலை பேருந்து பாதை கொஞ்சம் அபாயகரமானது. அதிகமான இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளும் உண்டு இங்கே. அதிகமான போக்குவரத்து இல்லாததால் ஒரு வழி பாதை மட்டுமே. எதிர் பேருந்தோ மற்ற வேன் போன்ற வாகனமோ வந்து விட்டால் இரண்டும் கடந்து கொள்வது சற்று சிரமமான விஷயம். ஏதாவது ஒரு வண்டி மற்ற வண்டிக்காக கொஞ்சம் அகலமான இடத்தில் காத்திருந்து அப்புறம் தான் கடந்து போகும். வெளிப்புற மலைகளை கடந்து மெல்ல மலைக்கூட்டத்துள் பேருந்து புகுந்தது. அதுவரை கொஞ்சம் பொட்டல் காடாய் இருந்த மலைத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாக அடர் காடாய் மாறியது. வானத்தை தாங்கள் தான் தாங்கி பிடிப்பதாய் கர்வம் கொண்டு தலை நிமிர்ந்த மரங்கள். அதில் அதனை சுற்றி படர்ந்து கிடந்த மிளகு கொடிகள். அந்த இலைகளின் வாசனையே சொன்னது தாங்கள் மிளகு கொடியின் பிள்ளைகள் என்று.
முக்கனி என்று சொல்லப்படுகின்ற மா, பலா, வாழையெல்லாம் இங்கே தான் வழியெல்லாம் விளைந்து கிடந்தது. தனது குலைகளை தாங்க முடியாமல், அதிக அறிவு இருந்தாலும் செருக்கு கொள்ளக்கூடாது தங்களை மாதிரி என்று ஊருக்கு தத்துவம் சொல்லிகொண்டிருந்தன பணிந்து கிடந்த வாழை மரங்கள். சிறுமலை வாழைப்பழத்தின் சுவையினை நாக்கினால் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், காதுகள் வழி கேட்டீர்ப்பீர்கள். அந்த சுவை தந்தது இந்த மண் தான். இது மட்டுமல்லாமல், கொய்யா, மாதுளை போன்ற பழங்களும் சங்க காலத்தில் மட்டுமே படித்த கேட்ட பழங்களான அத்திப்பழம் போன்ற வகைகளும் இங்கே ரொம்ப பிரசித்தி.
(இன்னும் பல சுவையான தகவலுடன், பயணம் தொடரும்)