சேரன், கடந்த பத்து வருடங்களில் ஏழு படங்கள் தான் இயக்கி இருந்தாலும், அவரின் எல்லாப் படங்களும் தியேட்டர்களில் வசூலை குவிக்கவில்லை என்றாலும், தன்னுடைய பாணி இயக்கத்தில் (கமர்ஷியல் என்னும் வட்டத்துக்குள் இருந்தாலும் ஆபாசம் என்பதை கொஞ்சம் கூட கலக்காதவர்), கருத்துக்கள் சொல்லி சமுதாயத்துக்கும் இந்த மனித சமுதாயத்தின் உறவுகளை புரிந்து கொள்ளும் திறனையும் கொண்ட அருமையான படங்களை தந்துள்ளார். தேசிய கீதம் என்ற படத்திற்கு பிறகு இளையராஜா இசை இயக்கத்தில் மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், சேரன். படத்தின் இதர இறுதி வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பாடல்கள் கடந்தவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையை விமர்சனம் பண்ணும் அளவுக்கு நமக்கு இசையில் ஞானம் கிடையாது. ஆனால் இளையராஜா என்னும் இசை ஊற்றில் தான் இத்தனை காலங்கள் நம் வாழ்க்கை வளர்ந்தது என்பதும் அதை தேடி நாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இது மயிலின் அழகை பார்த்து விக்கித்து நின்ற ஒரு காக்கை மயிலின் அழகை சொல்வதை போலத் தான்.
இன்ட்ரோடக்க்ஷன் (அறிமுகம்) - இளையராஜா
இது முழுக்க முழுக்க படத்தை பற்றியும் சேரன் பற்றியும் இளையராஜா தனது சொந்த கருத்துகளை கூறுகிறார்.. படத்தின் இசை அமைக்கப்படும் போது நடந்த சுவையான விஷயங்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். முதன் முதலாக இப்படி ஒரு படத்தை பற்றி, தொலைக்காட்சிகளில் படத்தை பற்றி விளம்பரம் மற்ற நடிகர்கள் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர் பேட்டி கொடுப்பது போல, இதில் இளையராஜா பேசியிருக்கிறார். இது இந்த படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இளையராஜாவை பொறுத்தவரை புதுமையான விஷயம்.
காதல் இன்று - இளையராஜா
இன்றைய காதலை பற்றிய பாடல்.. அழகான வரிகள்.. இளையராஜாவின் குரலில் இது போன்று பாடல்கள் கேட்டு நீண்ட நெடு நாட்களாகிவிட்டது. இசையும் பாடலுடன் அருமையாக ஒத்துப் போகிறது. இசையை விட பாடுபவரின் குரல் வலிமையாக இருக்கும் ஒரு சில பாடல்களில். அது இளையராஜா பாடும்போது நன்றாக தெரியும், ஒரு வேளை அவர் இசை என்பதாலா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் பார்லர்களிலும் ஏசி தியேட்டர்களிலும் முடிந்துவிடுகின்ற இன்றைய காதலையும் கல்லில் செதுக்கியதாய் இருக்கும் அன்றைய காதலையும் பற்றி சொல்கிறது இந்தப் பாடல்.
காசு கையில் - இளையராஜா
முதல் பாடலான "காதல் இன்று"வின் அதே இசை படிவத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. அது காதலை பற்றிச் சொன்னால், இந்த பாடல் காசு இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றும் இல்லை என்று சொல்லும் பாடல். இதையும் இசைஞானியே பாடியுள்ளார். இசைஞானிக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை என்று நமக்கு புரிய வைக்கும் பாடல். அப்படி ஒரு தனி ஆவர்த்தனம் செய்கிறார் பாடலில்.
ஒரு மாயலோகம் - திப்பு மற்றும் மஞ்சரி
ஆழ்மனசை கொள்ளையடிக்கும் கிதாரின் ஒலியில், மேற்கத்திய இசையின் வடிவத்தில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த படத்தின் ஏனைய பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்டினத்து வாடை அதிகம் கலந்ததாய் இருக்கிறது. திப்புவும் மஞ்சரியும் அருமையாய் பாடியிருக்கிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சம் - கார்த்திக் மற்றும் ஷ்ரேயா கோஷல்
மெலடி என்றால் மேஸ்ட்ரோ தான்.. அவரை அடித்துகொள்ள ஆளே கிடையாது. இந்த கூற்றை மறுபடியும் நிரூபிக்கும் பாடல் இது. கார்த்திக்கின் குரலும் ஷ்ரேயாவின் குரலும் ஒரு புல்லாங்குழலில் வழிந்தோடும் காற்றை போல நமது காதுகளில் வழிகிறது, இந்த புத்தம் புதிய இசை. தாளங்கள் சரியான அளவில் அமைக்கப்பட்டு இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் வகை இசை அமைந்துள்ளது. இந்த பாடல் முழுக்க அழகன் படத்தில் மம்மூட்டி, பானுப்பிரியா மாதிரி செல்போனை பேசிக்கொண்டே இருப்பதை போல இருக்கும் என்பது என் சின்ன கூற்று, இளையராஜா பேசியதிலிருந்து.
உலகிலே அழகி - விஜய் யேசுதாஸ் மற்றும் நந்திதா
காதுகளுக்கு வலிக்காமல், மெல்ல அப்படியே தேன் வழிந்து ஓடி இதயம் தொடுவது போல் இருக்கிறது விஜய் யேசுதாஸின் குரல். அவர் கூட, இணைந்து பாடியிருக்கிறார் குயில் நந்திதா. மெல்ல மெல்ல படர்ந்து காலை நேரத்தை பனியது மூடுவது போல், நம்மை மூழ்கடிக்கிறது இந்தப் பாடல். இந்த பாடலில், தபேலாவும் வீணையும் நம் மனசை மகுடியாய் ஆட வைக்கிறது. முந்திகாலத்தில் KJ யேசுதாசுக்கு இருக்கும் வலிமை இப்போது விஜய்க்கும் மெல்ல தொற்றிக்கொண்டது. இன்னும் சில காலங்களுக்கும எல்லோர் மனதையும் வருடும் இந்த இசை மயிலிறகு.
ஏலே எங்க வந்த - இளையராஜா மற்றும் குழுவினர்
நடிகனாகி உலகை ஆள வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்திறங்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கான பாடல். வேகத்திலான இசையுடன் கால்களை நடனமாட விடும் இந்த பாடல் இந்த இசை ஆல்பத்தில் முதலில் இருக்கிறது. இந்த பாடலையும் இசைஞானியே பாடியுள்ளார். இந்த மாதிரி பாடல்களை மேஸ்ட்ரோ பாடி மாமாங்கம் ஆகிவிட்டது. முதன் முதலாய் இந்த பாடலை கேட்ட போது, சிவாஜி, சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு படத்தில் வரும் ஹே ராஜ ஒன்றானோம் இன்று என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் கேட்க கேட்க மனது முழுவதும் மெல்ல ஒருவித துள்ளலை நிரப்புகிறது இந்த பாடல்.
மாயக்கண்ணாடி ஆரம்பித்த நாளில் இருந்தே எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இந்த இசை ஆல்பம் அதில் இன்னும் நிறைய எண்ணெய் ஊற்றியுள்ளது. இந்த தொகுப்பு நிச்சயமாய் இளையராஜாவுக்கு உள்ளுக்குள் ஒரு புதிய தெம்பைத் தரும். இதில் அவர் தன்னை இன்னும் புதுப்பித்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகள் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இசைஞானி சொல்வதை போல சில இடங்களில் வெற்று வார்த்தைகள் வைத்து கவிஞர்கள் நிரப்புவது போல, இதில் ஒன்றும் இல்லை.. அதை சேரனும் அனுமதிக்கவில்லை. (உதாரணம் : பாட்ஷா படத்தின் ஆரம்ப பாட்டில் வரும் ஜுமுக்குயின்னா ஜுமுக்குத் தான்) ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதே வீரியத்தை படத்திலும் நாம் பார்க்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.