Saturday, December 29, 2007

கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்

கண்ணதாசன்.. எளிய வரிகளில், இசையோடு தனது கருத்தை, தேனோடு பாலாக, கலந்து தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்து படைத்தவர்.. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்.. இன்னமும் ஒவ்வொரு நீள் ஒலி குழாய்களிலும் ஒலித்துகொண்டிருக்கும் உன்னத வார்த்தைகளுக்கு வடிவம் தந்தவர்.. இன்னமும் இவரைப் போல, வாழ்க்கைக்கு, வாழ்க்கையோடு ஒன்றிய பாடல்களை தந்தவர் யாரும் இல்லை..

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

இந்த பாடலை, நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் என்று நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் இந்த பாடலை, கேட்டால், யாருக்குத் தான் தெளிவு பிறக்காது.. எந்த மனதிற்குத் தான் ஆறுதல் கிடைக்காது.. இது தான் கண்ணதாசனின் பாடல்களில் இருக்கும் அடிக்கருத்தே..

ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம்.. கேட்க கேட்க படத்தின் நாயகனுக்கு எழுதிய பாட்டில் சிறிது நேரத்தில் நாம் நாயகனாக குதிரை சவாரி செய்வோம்.. வருத்தமென்றாலும், காதல் சொட்டும் வரிகள் என்றாலும், வீரம் என்றாலும், விவேகம் தரும் வேகம் என்றாலும், கண்ணதாசனின் வரிகளுக்கும், அந்த தத்துவதிற்கும் நிகர், அவரின் படைப்புகளே..

எங்கள் ஊர் மைக்-செட்டுகளில் இன்னமும் புதிய பாடல்களை விட அதிகமாய் ஒலித்துக்கொண்டிருப்பது பழைய பாடல்களே.. அதுவும் கண்ணதாசனின் காதல் பாடல்கள் பிரசித்தம்.. கவியரசுவின் காதல் பாடல்களின் கேசட்டுகள் பகுதி பகுதியாய் அடுக்கி வைத்திருப்பார்கள். இங்கே வந்த பிறகு கஷ்டப்பட்டு அதில் பாதியை தான் வலையில் இருந்து இறக்குமதி செய்ய முடிந்தது.

சிவாஜி நடித்த ரத்தத் திலகம் படத்தில் கண்ணதாசனே திரைப்பாத்தில் தோன்றி பாடும் பாடல் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. தன்னை பற்றை அவரே பாடுவது போன்ற ஒரு பாடல்.. வரிகள் எல்லாம் கண்ணாடி போல அவரது நிறைகுறை கொண்ட குணங்களை சொல்லும்..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவிய தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்

இடையில், இப்படி பாடல்கள் படைப்பதால் தன்னை இறைவன் என்று சொல்கிறார் கண்ணதாசன்.. உண்மை தானே

இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்.. இசையில் எல்லா பரிமாணத்தை, உருவி எடுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கையில் இசைத் தேன் மழை பொழிந்தவர். இவரின் ஒவ்வொரு பாடல்களும் ஆராய்ச்சி செய்கின்ற அளவுக்கு ஒரு பெரிய கடல் என்பது ஒவ்வொரு பாடலாக கேட்டவர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும்.

இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. முயற்சி திருவினையாக்கும் என்று முயல்கிறேன்.. கடலில் குதித்து முத்தெடுப்பது என்பது சுலபமில்லை தானே

பாடல்கள் தவிர, இளையராஜவின் படங்களில் பெரிய பலம் பின்ணனி இசை.. அந்த கதாபாத்திரத்தின் துடிதுடிப்பை, உணர்ச்சியை அப்படியே நமக்குள் ஏற்றி, அந்த காட்சியில் நம்மை வைத்து நாம் பதறும் அளவுக்கு, அதற்கு இசை உயிரூட்டியவர் இசைஞானி.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் மடை திறந்து என்று ஒரு பாடல் வரும். அது கிராமத்திலிருந்து இசையப்பாளனாக வந்த ஒருவன், வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னை நினைத்து பாடும் பாடல். கிட்டதட்ட இசைஞானியின் கதை.. அதனால் அதன் பாடல்வரிகளும் அதை ஒத்தே தான் இருக்கும்..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

இங்கே இளையராஜா பற்றிய வரிகளை அழகாக வாலி தந்திருப்பார்.. அதுவும் இந்த வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்துமாறு மேஸ்ட்ரோவே பாடலில் வந்திருப்பார்.. மிகவும் உயிரோட்டமான பாடல்..

இவ்வாறாக, ஒரு இறைவன் பாடல் வரிகளை தந்திருக்க, ஒரு இறைவன் அதற்கு இசை உயிர் தந்திருக்க ஆழ்ந்த அமைதியில் நமக்குள் தெய்வத்தை காண வைக்கும் பாடல், மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்.. இந்த பாடல், தான் இறக்கும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்ணதாசன் எழுதி கடைசிப் பாடல்.

Tuesday, December 18, 2007

கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லா

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் சார்பாக இந்த வாரம் கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லாவை திரையிடுகிறார்கள்.. டிக்கட்களுக்கு, சங்கத்தின் செயலாளர் சரவணகுமாரை (740 549 3707) அணுகவும்.


Saturday, December 15, 2007

சேரன் தேடிய சீதை

பழைய தமிழ் படங்களின் பெயரை மறுபடியும் பயன்படுத்துவதும், பாடலை மட்டுமல்லாமல் கதையையும் அப்படியே எடுப்பது இப்போது கோலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. படத்தின் பெயரை பயன்படுத்துவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. எனக்கு நினைவு தெரிந்து கமலின் சதிலீலாவதி அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லலாம். இப்போது சேரனின் அடுத்த படத்திற்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்து வெற்றி பெற்ற ராமன் தேடிய சீதை தான் தலைப்பு. படத்தை புதிய கீதை, கோடம்பக்கம் படத்தை இயக்கிய ஜெகன்ஜி தான் இயக்குகிறார். இவர் சேரனின் சீடர். புதிய கீதையும் கோடம்பாக்கமும் அந்த அளவுக்கு தியேட்டர்களில் ஓடி கல்லா நிரப்பவில்லை. இந்த படமாவது தனக்கு நல்ல பேரைத் தரும் என்று எதிர்பார்க்கிறார் ஜெகன்ஜி. கோடம்பாக்கம் படம் நல்ல பேரைத் தந்தாலும் தயாரிப்பாளரின் கையை சுட்டதென்னவோ உண்மை.மாயக்கண்ணாடி எதிர்பார்த்த அளவு ஓடாததாலோ என்னவோ இப்போது கேமராவுக்கு பின்னால் இருப்பதை விட, முன்னால் சில காலம் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டார் போலும். கரு.பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்திற்கு பிறகு, இப்போது ராமன் தேடிய சீதை. சேரன், எப்போ அடுத்த படம் இயக்கப்போறீங்க?படத்தில் சேரனுடன், இணைந்து சென்னை28 புகழ் நிதின் சத்யாவும், பசுபதியும் நடிக்கிறார்கள். நிதின் சத்யா, சென்னை28 மற்றும் சத்தம் போடாதே பாங்களில் நன்றாக நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார். இந்த படத்திலும் இவருக்கு நல்ல ரோலாக அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்தால், பசுபதி கண்பார்வையற்றவராக வருகிறார். எந்த ரோல் கொடுத்தாலும் வெளுத்து கட்டுபவர், இதையும் நன்றாக செய்வார்.படத்தில் மூன்று கதாநாயகிகள். தூத்துக்குடி படத்தில் நடித்த கார்த்திகா அதில் ஒருவர். இவர் நான் கடவுள் படதிற்காக பிச்சைகாரியாக ஒரு நாள் முழுவதும் பெரியக்ளத்தில் சுத்தி வந்தார். ஆனால் ஏனோ அந்த படத்தில் நடிக்கவில்லை. அதற்கு, இந்த இந்த படம். நல்ல பிரேக்கை எதிர் பார்க்கிறார். பார்ப்போம் இந்த படம் தருமா என்று.அடுத்தவர், பொய் படத்தில் நடித்த விமலா ரமணன். பொய்க்கு பிறகு வாய்ப்புகள் வராமல் போகவே மலையாளப் பக்கம் ஒதுங்கினார். மூன்றாவதாக, ரம்யா நம்பீஸன். இவர் ஒரு மலையாள நடிகர். முதன் முதலாக இந்த படத்தில் நடிக்கிறார்.
படத்திற்கு இசை, வித்யாசாகர், அந்த இசைக்கு வரிகளை தருபவர் யுகபாரதி. படத்தை மோசர்பியர் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை படப்பிடிப்பு கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது

Friday, December 14, 2007

முருகனருள் பரப்பும் பில்லாவின் சேவல்கொடி பறக்குதய்யா


பில்லா பாடல்கள் வெளியான பிறகு பல தடவை, எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரமின்மையால் அந்த பாடல்களை பற்றி எழுத முடியவில்லை. சேவல் கொடி பாட்டில் வரும் இரண்டு வரிகளை பற்றி மட்டும் எழுதினேன். இன்று வலையுலகை ஆய்ந்து மேய்ந்து கொண்டிருந்த போது, முழுக்க முழுக்க படத்தின் கதாநாயகன் முருகன் அருள் வேண்டி பாடும் சேவல் கொடி பாட்டை, முருகனருள் பதிவில் அதன் வரி விளக்கங்களோடு படித்து என்னையே நான் மறந்துவிட்டேன்.. இந்த பாடல் முருகனை பற்றி வருவதாலும், நல்ல தாளங்களோடு கேட்பதற்கு இனிமையாய் இருப்பதாலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த பாட்டில் இவ்வளவு மறைமுக அர்த்தங்களா.. கண்ணபிரான் அவர்கள் இந்த பாடலை வரி விளக்கங்களோடு இங்கு எழுதியிருப்பதை படியுங்கள். நிச்சயம் நீங்களும் முருகனருள் பெற்று மெய்சிலிர்ப்பீர்கள்..

நன்றிங்க கண்ணபிரான் ரவிஷங்கர்!நம்ம பதிவுல தல படத்தை போடலைனா எப்படி!

Thursday, December 13, 2007

குலோப்ஜாமூனும் நானும், சுவைத்த நேரங்களும்

சின்ன வயசுல, நாலாவது படிக்கிறப்போன்னு நினைக்கிறேன்.. காலைல தூங்கி எழுறப்போ, சட்டையெல்லாம் ரத்த திட்டுகளா இருக்கும்.. எல்லாம் சில்லு மூக்கு உடையிறதுனால அப்படின்னு சொன்னாங்க.. மத்தவங்களுக்கு ஏதாவது மேல மோதினா வர்ற மாதிரி நமக்கு இல்லை.. தானா உடையும்..ஒரு தடவை என்னோட பள்ளி வெள்ளை சீருடை கூட இது மாதிரி ரத்தம் பட்டு மறுபடியும் அணிய முடியாதமாதிரி ஆகிடும்.. அடிக்கடி அப்படி நடக்க, பயந்துகிட்டு டாக்டர் கிட்ட காமிச்சாங்க.. அவர், அவர் கல்லா நிரம்ப, தினமும் ஒரு ஊசின்னு பத்து நாளைக்கு ஒரு ஊசி போடணும்னு சொன்னார்.. திண்டுக்கலில் அந்த கிளினிக் எனது பள்ளியின் அருகிலே இருந்ததால் எனக்கும் வசதியா போய்விட்டது. தினமும் மதியம் சாப்பாடு முடிந்த பின், நானும் எனது நண்பர்களும் பொடிநடையாக நடந்து சென்று அந்த டாக்டரிடம் ஊசி போட்டுவிட்டு வந்தோம்.. இப்படி தினமும் செல்வது பெரிதாக இல்லையென்றாலும், தினமும் அந்த டாக்டரிடம் பத்து ரூபாய் கொடுப்பது எங்களுக்கு கடுப்பாகியது. நானும் என் நண்பர்களும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். தனி புரட்சி படையே உருவானது.. டாக்டர் எப்படி இப்படி கொள்ளை அடிக்கலாம்.. என்று அவரை வம்புக்கு இழுத்தோம்.. அப்போது ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் எதுக்கு டாக்டருகிட்ட போகணும்னு நாங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்து முடிவெடுத்தோம்.

அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு ஹோட்டலா ஏறி இறங்கினோம். வேற எதுக்கு குலோப்ஜாமூன் சாப்பிடத் தான். அப்போ இருந்த நண்பர்கள்ல பல பேருக்கு குலோப்ஜாமூன்னா அவ்வளவு உசுரு.. அதனால எல்லாக் கடையிலும் மிச்சம் இருக்க ஐந்து நாள்ல குலோப்ஜாமூன் டேஸ்ட் பண்ணிடணும்னு முடிவெடுத்து படையெடுத்தோம்.. எங்களது புரட்சிப்படை குலோப்ஜாமூன் வேட்டைக்காக கிளம்பியது. இப்படித் தான் குலோப்ஜாமுடன் என் உறவு ஆரம்பமானது.. அப்படி படிக்கும் காலங்களில் இது போன்ற சுவை மிகு பதார்த்தங்கள் சாப்பிடுவது மிகவும் குறைவு. ஏதாவது கல்யாண வீடுகளில் சாப்பிட்டால் உண்டு.

சென்னைக்கு வந்த பிறகு, அடிக்கடி குலோப்ஜாமூன் சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது.. பஃபே மாதிரி சென்றுவிட்டால், வாடா தங்கங்களா என்று இரண்டு கப்பில் பத்து குலோப்ஜாமூனை எடுத்து வருவேன்.. மெயின் ஐயிட்டங்களை ஒரு பிடிபிடித்தாலும், வயிற்றில் எப்போதுமே இவைகளுக்கு தனி இடம் உண்டு. அதுவும் சில சமயம் நண்பர்களோடு போட்டி போட்டு எண்ணிக்கை அளவு தெரியாமல் சாப்பிட்டதுண்டு.

நான் அமெரிக்கா வரும் வரையில், நானும் குலோப்ஜாமூனும் அவ்வளவு நண்பர்கள். வாயோடு வாயாக பழகியவர்கள்.. இங்கே வந்த பிறகு, புதியதாய் ஒரு பழக்கத்தை கற்றுக்கொண்டேன், டயட் என்னும் பெயரில். அதன் பிறகு எதை சாப்பிட்டாலும் மட மடவென்று மனசு கலோரி கணக்கு போட ஆரம்பித்து விடுகிறது. நான் மட்டுமல்ல என்னை சுற்றியிருக்கும் பெரும்பாலானவர்கள் இதை தான் செய்கிறார்கள். இப்படியான, கலோரி கணக்கு பார்க்கும் காலங்களில் குலோப்ஜாமூனை ஒன்றோ இரண்டோ என்று தான் சுவை பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயம் அது இருக்கும் திசை பார்த்து சப்பு கொட்டிவிட்டு எதையும் சாப்பிடாமல் செல்வதும் உண்டு. அமெரிக்க உணவு வகைகளில் ஒரு சின்ன சாக்லேட் எடுத்தால் கூட, அது எதனால் ஆனது, அதில் கொழுப்பு எவ்வளவு, புரதசத்து எவ்வளவு என்று அக்கு வேறு ஆணிவேராக போட்டிருப்பார்கள். ஆனால், நமது இந்திய உணவுகளில் இது அந்த அளவுக்கு விஷயங்கள் இருப்பதில்லை.. ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொழுப்பை குறைக்க பத்து நிமிஷம் ஓடவேண்டும் என்று நண்பனொருவன் பத்து குலோப்ஜாமூன்களை சாப்பிட்டுகொண்டே சொன்னது, அவ்வப்போது ஞாபகத்திற்கு வரும்.

சமீபத்தில் இங்கே வந்த நண்பன் ஒருவனுக்கு, குலோப்ஜாமூன் செய்வதென்றால் அவ்வளவு பிரியம். தீபாவளிக்காக எங்கள் டீமில் நடந்த கூட்டாஞ்சோறுக்காக (பாட்லக்) விடிய விடிய குலோப்ஜாமூன் செய்தவன். யாராவது சும்மா, எங்கே எனக்கு ஜாமூன் என்றால் அடுத்த நாளே கையில் ஜாமூனுடன் வந்து நிற்பான் இவன்.. பாருங்கள், சாப்பிட கணக்கு பார்க்காத காலங்களில் கையில் குலோப்ஜாமூன் இல்லை.. இப்போ கையில் அடிக்கடி கிடைத்தும் சாப்பிட முடியவில்ல.. அட ஆண்டவா..

Monday, December 10, 2007

மலர்களே மலர்களே - PIT புகைப்பட போட்டி

இந்த மாத போட்டிக்கு, மலர்கள் என்று தலைப்பு தந்திருக்கிறார்கள், PIT ஆசிரியர்கள். அமெரிக்காவில் இப்போது, இந்த பனிக் காலத்தில் பூக்களை பார்ப்பதே அரிது. அதனால் நான் முதன் முதலாக கெனான் ரிபல் வாங்கிய சமயத்தில், ஐம்பது நாட்களுக்கு முன்னர் எடுத்த படங்களை பிற்தயாரிப்பில் சற்று மெருகேற்றி போட்டிக்கு சமர்பிக்கிறேன்..
கடந்த மாத சாலைகள் தலைப்பு போட்டியில் முதல் பத்து படங்களில் ஒன்றாக நமதின் இரண்டாம் படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு நன்றி.