Tuesday, January 30, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில் 2

முதல் பகுதி

காதல் என்ற வானத்தில் பறவைகள் ஏராளம். நாங்கள் மட்டுமல்ல, என் வகுப்பில் இன்னும் சில பறவைகளும் இருந்தன. எங்களை போல காதலை மண்ணுக்குள் புதைத்து வளர்க்காமல், தேசிய கொடியை போல உயரத்தில் பறக்க விட்டு வாழ்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் அவர்கள் இருவரும் விளையாட்டுபிள்ளைகள். தினமும் நூறு முறை சண்டையிடுவார்கள். ஆயிரம் முறை சேர்ந்துகொள்வார்கள். அவர்களும் அந்த சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.

அவள் என்னை கையசைத்து அழைக்க, டிரைவரின் எதிர்புறம் அமர்ந்திருந்த நான் அவள் இருக்கை நோக்கி நடந்தேன். ஓடிய திருடனை பிடிக்க போலீஸ் போகும் போது இடையில் திடீரென ரயில் வண்டி வந்துவிடுவதை போல, திடீரென்று என் நண்பனின் காதலி, எனக்கும் தோழி தான், கோபமாக வந்தாள் பின்னிருக்கையில் இருந்து. நான் என்னவளின் இருக்கை பக்கத்தில் வர, அவள் பக்கத்தில் இவள் வந்து அமர்ந்தாள். விதி என்பதன் சதங்களையும், அது அடிக்கும் நாலையும் ஆறையும் பார்த்து கை தட்டுவதா, தலையில் கொட்டுவதா என்று தெரியாமல், வந்த வழியே திரும்பினேன். அவள் என்னைப் பார்த்தாள். அதில் என்றையும் விட ஏமாற்றமும், கண்களின் ஓரம் ஒரு துளி நீரும் தேங்கி நின்றது. முதன் முதலாய் எனக்காய் அவள் இதயத்தின் கூட சேர்ந்து கண்களும் அழ ஆரம்பித்தது. தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன. மறுபடியும் என் இருக்கையில் அமர்ந்து இருக்கையில், வேகமாக வந்த என் நண்பன், அவளின் காதலன், அவள் இருக்கையின் கீழே அமர்ந்து, அவள் மடியில் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தான். நான் என்னவளை பார்த்தேன்.

எதிர்புறம் வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்தில், அவள் முகம் மறைந்து மறைந்து தெரிய ஆரம்பித்தது. மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவை போல அந்த இருட்டான வாகனத்தில் எனக்கு அவள் தெரிந்தாள். இடுப்பேறி அமர்ந்து பருப்பு சாதம் சாப்பிட்டு நிலவை கண்டு ஏமாந்து போகும் கைகுழந்தையை போல நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள்-

நேற்று நடந்த ஏமாற்றங்கள் நெஞ்சில் நிறைந்து கிடந்தாலும், அதற்கு அவள் காரணமில்லை என்று புரிந்திருந்தது மனசுக்கு. காலையில் வழக்கம் போல கேன்டீனில் நான் சாப்பிட, அவளை துணைக்கு அழைத்தேன். அவளும் வந்தாள். நான் என்றும் போலவே அவள் கூட பேசிக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கூட நடந்து வருவதை நிறுத்தினாள்.

கோபமா என்று கேட்டாள்.. உன் மீதில்லை என்றேன்.. சுற்றுலாவை விடு. இன்னும் இருக்கும் முப்பது நாட்களும் நான் உன்னருகே தான் இருப்பேன். நானென்ன செய்வது. நான் உன்னை அழைத்த போது, விதியை அழைத்ததாக அது வந்து என்னருகில் அமர்ந்து கொண்டது என்றாள். நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள். அதைப் பார்த்த, பக்கத்தில் இருந்த மரத்தின் இலைகளெல்லாம் மலராக மாறியது. இலையே மாறும் போது, நாமென்ன என்று நினைத்ததோ என்னவோ, அதன் வேர்களும் பூவாய் விரிந்தது.

அடுத்து வந்த அத்தனை நாட்களும் என் கூடத் தான் இருந்தாள். வகுப்பின் இருக்கையில் இருவரும் சேர்ந்தே அமர்ந்தோம். எனக்காய் ஏடுகளில் அவள் எழுதினாள். அவளுக்காய் நான் அவளை ரசித்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது பிறப்பாய் தெரிந்தது. நானும் தினமும் மூழ்கி முத்தெடுத்தேன். முத்தாய் அவளே மறுபடி மறுபடியும் கிடைத்தாள். இப்படியாக சென்ற ஒரு நாளில், மழை பெய்து தரையெல்லாம் புது வண்ணமடித்த நாளில், வகுப்பில், யாருமே இல்லாத ஒரு பொழுதில், ஜன்னலில் முகம் தேய்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் அவள். நானும் எழுதிய ஏட்டை மூடிவைத்து அவளருகில் சென்று நின்றேன். மெல்ல அவள் இடை பற்றி, பின்னால் இருந்து அணைத்தேன். நான் அணைத்தவுடன் அவளுள் இருந்த பெண்மை பிரகாசமாய் விளக்கேற்றி வைத்தது. என் மூச்சுகாற்று தான் அந்த விளக்கை ஏற்றி வைத்ததோ. மெல்ல திரும்பி, என்னைப் பார்த்து நாணமாய் சிரித்து, எனது கைகளை விடுவித்தாள். ஆனால் அதை பற்றி அவள் ஏதும் கேட்கவில்லை. நானும் ஏதும் தொடங்கவில்லை.

கடைசி நாள்-

இருவரும் ஒரே பெஞ்சில்.. அவன் கைகளை பற்றிக்கொண்டே அவள் இருந்தாள், கடலடியில் மண்ணைப் பிடித்த நங்கூரம் போல.. எதுவும் பேசவில்லை. கடிகாரத்தின் முட்கள் மட்டும் மணிக்கொரு தடவை பேசிக்கொண்டன. முத்தமிட்டுக்கொண்டன. மௌனமாகவே காற்று கூட நடை போட்டது. சூரியன் கூட என்ன செய்கிறோம் என்று எட்டி பார்த்துவிட்டு சென்றான். அன்றைய பொழுது எழுந்து செல்கையில், அவள் என் கை பிடித்து கொடுத்த முத்தமும், காதில் சொன்ன ஐ லவ் யூவும் தான் இன்று வரை என் இதயதில் உலராமலும், லப் டப் ஓசைக்கு பதிலாகவும் உயிரூட்டுகிறது

(இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது)

Monday, January 29, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில்

ஏதேச்சையாகத் தான் அமைந்தது. இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று வேப்பமரத்தின் கீழே கட்டிலில் படுத்து மேலிருக்கும் இலைகளை எண்ணிக்கொண்டிருந்த அந்த பொழுதும் சரி, வீட்டில் விட்டத்தை பார்த்து பெயர்ந்த சுவர்களை கவனித்து கொண்டிருந்த அந்த மீசை முளைத்த காலத்திலும் சரி நினைத்ததில்லை நான். அது கல்லூரியில் இருந்து போன சுற்றுலா தான். ஆனால் அது ஏதோ தனியாக நானும் அவளும் நடத்திய ஊர்வலமாகத்தான் எனக்கு நெஞ்சில் பதிந்து போனது.

முதல் நாள் கிளம்பும்போதே, அவள் சொன்னாள்.. மற்றவர்களுக்காக, மற்றவர்கள் நம்மளைப் பற்றி கதைப்பார்கள் என்பதற்காக உன் கூட நான் இதுவரை, நான் நினைத்த வண்ணம் பழகியதில்லை. எல்லா உணர்ச்சிகளையும் இலை மறைத்த காயை போலவே மனதுள் அடக்கி இருந்தேன். ஆனால் பழுத்த பின், பறவைகளுக்கு தெரியாமலா போய் விடும். இதோ இன்னும் முப்பது நாட்கள் தான் இந்த கல்லூரி வாழ்க்கை. அதற்கடுத்து, நாம் இருவரும் பேசிக்கொள்வது கூட, கடவுள் பக்தன் உறவு மாதிரி தான். உன் அருகே இருக்க நினைத்த இந்த இரண்டு வருடங்களும் தூரமாய் இருந்தேன்.. ஆனால் எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமலா போய் விடும், உனது சில்லென்ற பார்வை போல.. அந்த சில்லான பார்வை தான் எனது இதயத்தை உருக்கி, ஒரு வேதியியல் அதிசயத்தை நடத்தியே விட்டது.

இந்த சுற்றுலாவில் மட்டுமாவது உன் அருகிலே நான் அமர்ந்து இந்த உலகத்தை ரசிக்கிறேன். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்து இளகிய சுவர்களை இறுக்கமாக்கி, அவசரமாய் பதிப்பித்துகொண்டது.. இன்று அதனை படிப்பதற்காக நான் அன்று அச்சிட்டுக் கொண்ட புத்தகப் பக்கங்கள் அவை.

மனசுக்குள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், நடக்காத சில விஷயங்களுக்காக அந்த ஆசைகளை எரித்துக்கொண்டோம், எங்களுக்குள் சொல்லாத காதல் முளைவிட்ட போது. இப்போது பிரிகின்ற வேளையில், வேருக்கு வேறிடம் போவது பிடிக்காமல் அந்த மண்ணோடு சில பொழுது மயங்கிகிடக்க விரும்புகிறது..

சுற்றுலாவும் இனிதே தொடங்கியது.. போகும் வழியில் ஆட்டமும் பாட்டமும், கூத்தும் கும்மாளமும் நிகழ்ந்தது. அவள் அவள் தோழியுடனும், நான் எனது நண்பர்களுடனும், எனது நண்பர்கள் அவள் தோழியுடனும் என்று ஒரு தனியுலக இளமைகொண்டாட்டங்களே அங்கு நடந்தது.. அவ்வளவு கும்மாளம் அங்கே கூத்தடித்தாலும், நானும் அவளும் மட்டும் தனித்தே கிடந்தோம். தரையில் பட்ட பாதரசம் அதன் மீது ஓட்டாதவாறு.. தாமரை இலையில் பட்ட நீர்த்துளி அதில் பட்டு நழுவுமாறு.. அவ்வப்போது அவள் என்னை பார்வையால் மென்றாள். அந்த பார்வையில் நான் மெழுகாய் உருகிப்போனேன்.

போகும் வழியில், சாப்பிட உட்கார்ந்த போது கூட, எதிர் எதிரே தான்.. அவள் ஒரு மெல்ல, மல்லிகைப்பூ இட்லி என்று சொல்வதாலோ என்னவோ, மல்லிகை பறிப்பது போல, அதை பறித்தெடுத்து, குவித்த விரல்களில் பிடித்து, இதழ் படாமல் சுவைத்தாள்.. அதை பார்த்ததாலே ஒரு தட்டு இட்லிக்கு எக்ஸ்ட்ராவாக பில்லைக் கட்டினேன்..

அவள் சொன்ன திட்டம் விதி என்னும் ஆளுக்கு கேட்டதோ என்னவோ.. அவன் வந்து பசைபோட்டு அவளருகில் அமர்ந்திருந்தான். அவளுக்கோ சுற்றியுள்ளோரை கண்டு பயம். முருங்கை மரம் ஏறி எத்தனையோ முறை வேதாளத்தை நான் பிடித்து வந்தாலும், அது மறுபடியும் மரமேறி, தலைகீழாய் ஊஞ்சலாடி, என்னை பார்த்து இளித்தது. அவள் மனதுக்குள் ஒரு தராசில் காதல் உணர்வும் மற்றொன்றில் சமுதாய பயம், பெற்றோர் பாசம், போன்றவை மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டிருந்தன.

எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கூட நாங்களிருவரும் இரண்டு ஓரத்திலும் தான்.. நான் அவளது தோழிகளுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துகொண்டேன்..அவள் என் நண்பர்களுடன் எடுத்துகொண்டாள்.. இருவரும் சேர்ந்து ஒன்று கூட இல்லை. அவள் என்னை எடுத்தாள்.. நான் அவளை எடுத்தேன்.. இப்படியே போனது அந்த பகலெல்லாம்..

சுற்றுலா சுற்றுலா என்று எல்லா இடமும் சுற்றியே வந்தோம். ஆனால் அவள் சொன்னது போல் அவளருகில் நானோ என்னருகில் அவளோ அமரவில்லை. எங்களுக்கு பதில் விதி இருவருக்கிடையில் கால் நீட்டி படுத்துக்கொண்டிருந்தது. அப்புறம் எங்கே மன்மதன் வந்து பாணமெய்வது.. ரதி வந்து நாணம் கொள்வது. திரும்பப் போகும் வழியில், சூரியன் அமெரிக்காவுக்கு வெளிச்சம் தர போயிருந்த வேளை, எங்கள் வாகனம் புறப்பட்ட இடத்தை நோக்கி பின்னால் புகைவிட்டு போய் கொண்டிருந்தது. மெல்ல என்னை சைகையால் அழைத்தாள் அவள். நானும் என் இருக்கை விட்டு, மெல்ல எழுந்தேன், அவள் அருகில் அமர..

(நான் அமர்ந்தேனா, படுத்து கிடந்த விதியை தள்ளிவிட்டு.. நாளை தொடரும்)

Saturday, January 27, 2007

தேன்குட்டையில் ஒரு சுள்ளெறும்பு

எனது கிராமத்தை பற்றியும், அங்கு நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் எத்தனையோ பதிவுகளில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த பதிவுகளை நான் தமிழ்மணத்தில் ஏற்றம் செய்யும் பொழுது, கவனித்த தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழு, இவனின் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்டு, குருவியின் தலையில் பனங்காய் வைப்பது போன்றொரு பணியினை தந்தார்கள். தமிழ்மண பூங்காவில் வாரந்தோறும் வெளியிடுமாறு ஒரு தொடர், கிராமத்தை பற்றியும் மக்களின் பழக்க வழக்கங்களை பற்றியும் எழுதி தருமாறு ஒரு வாய்ப்பினை தந்தார்கள்.

எனக்கு இது ஒரு பெரிய வேலை. எப்படி ஆரம்பிப்பது, எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பம். கணினியில் எழுதியதால் ஆயிரம் தாள்கள் வீணாகவில்லை. அத்தனை முறை அடித்து திருத்தி எழுதினேன். எழுதி முடித்த பிறகு மனசுக்கள் சந்தோசப் பூ இருந்தது. ஆனால் திருப்தி இல்லை. இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்போது தான் எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. உள்ளத்தில் தேடல் உள்ளவனுக்கு எந்த விஷயத்திலும் எல்லை இல்லை என்று. மனதை சமாதானபடுத்திவிட்டு, எழுதியதை நானே இருபது தடவை படித்துவிட்டு அனுப்பி வைத்தேன் பூங்கா குழுவினருக்கு.

இப்போது அந்த தொடரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறையென பூங்கா பொங்கல் முதல் வெளியிட்டு வருகிறது. கடவுளையும் காதலையும் கவிதையாக சொன்ன பதிவை அவர்கள் வெளியிட்ட அந்த நாளிலே தான் எனது தொடரும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அதனை கவனிக்கவில்லை. இன்று காலையில் தான் பார்த்தே. பார்த்தவுடன், இரை தேடி சுவற்றின் மீதும், நீரைக் கடந்தும் படையெடுக்கும் ஒரு சுள்ளெறும்பை மெதுவாக பிடித்து, ஒரு தேன் குட்டையில் விட்டால் எப்படியொரு மகிழ்வு கொள்ளுமோ, அதன் மனசு எப்படி உவகை கொள்ளுமோ, அந்த ஒரு சந்தோசம் எனது இதயத்திலும் பரவிக்கிடக்கிறது.

இந்த ஜனவரி மாதம் என் உள்ளத்தில் புதுவித சந்தோசங்களையும், எனக்குள் புத்துணர்ச்சியையும் தந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை பாராட்டி, என்னை உற்சாகப்படுத்தியது எல்லாம் எனது நண்பர்களாகிய நீங்கள் தான். இப்படி ஒரு நண்பர் கூட்டம் வாய்த்தவனுக்கு, இமயமும் தொட்டுவிடும் தூரம் தான். நன்றி நண்பர்களே.

கிராமத்தை எழுதிய அந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்க நீங்கள் இங்கே சுட்டுங்கள்.

இந்த தொடரை வெளியிட்ட தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள். பூங்கா இதழ் தொடங்கப்பட்ட நேரத்தில் நமது பதிவுகள் அதில் வரும் காலம் என்னாளோ என்று ஏங்கிய காலம் உண்டு. அந்த ஏக்கத்தை துடைத்துவிட்டதற்கு நன்றி.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் விஜயகாந்த்

மடியில் கனமில்லை என்றால் யாரும் யாருக்கும் பயப்படத் தேவை இல்லை.இது கிராமங்களில் பொதுவாக சொல்லும் ஒரு சொற்றொடர். இது இப்போது புதிய அரசியல்வாதி விஜயகாந்திற்கு சாலப் பொருந்தும். கல்யாண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க ஒன்றும் நான் அரசியலுக்கு வரவில்லை என்றார் விஜயகாந்த். அவர் அப்படிச் சொன்னது பொய் என்று ஊருக்கே தெரியும். தனது கல்யாண மண்டப இடிப்பை தவிர்க்கவே அங்கே அவர் கட்சி அலுவலகத்தை நடத்துகிறார் என்றும், இப்போது நீதிமன்றத்தில் அதையே தான் காரணமாக கூறியும் இருக்கிறார் திருவாளர் விஜயகாந்த். அய்யா, அங்கே பாலம் வரப் போகிறது என்று உங்களுக்கு 2005-ன் மே மாதத்திலேயே தெரியும். அதற்காக நீங்கள் கருணாநிதி சந்தித்தது கையெழுத்து பத்திரிக்கை தவிர, எல்லாவற்றிலும் வந்துவிட்டது. அதற்கு பிறகு கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு தான் கட்சி ஆரம்பித்த நீங்கள் சிக்கலில் இருக்கிறது என்று தெரிந்தும் கல்யாண மணடபத்தை கட்சி அலுவலகமாக மாற்றியது ஏன்? உங்கள் கல்யாண மண்டபம் இடிபடுவதை தவிர்ப்பதற்காக நீங்கள் போட்டுகொடுத்த மாற்று வரைதிட்டத்தில் எதிர்புறம் இருக்கும் முப்பது கடைகள் காலியாகும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

சரி, விடுங்கள்.. இது பழைய கதை. புதியதற்கு வருகிறேன். வருமானவரி அதிகாரிகள் சோதனைக்கு வந்தது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்கிறீர்கள். நாங்களும் அதை ஒத்துகொள்கிறோம். ஆனால் அப்படி வந்தால் என்ன? எல்லா கணக்கு வழக்கையும் நீங்கள் ஒழுங்காக வைத்திருக்கும் பட்சத்தில் யார் வந்தால் உங்களுக்கென்ன? எல்லா கணக்கையும் ஒழுங்காக காண்பித்துவிட்டு, காலரை தூக்கி காண்பிக்க வேண்டியது தானே. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாய் இருந்தாலும், நீங்கள் எல்லாவற்றிலும் பக்காவாய் இருக்கும் பட்ச்சத்தில் யாருக்கும் பயப்பட வேண்டும். ஆனால் வந்த முடிவு அப்படி இல்லையே.. நீங்கள் வேட்பாளராக பிரகனபடுத்தும் போது கொடுத்த சொத்து விவரத்திற்கும் இப்போது கைபற்றிய ஆவணங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும் போலத் தெரிகிறதே.. ஐந்து வருடங்களாய் சொத்து வரிகள் கூட கட்டவில்லையே, உண்மையா?

இது உண்மையா பொய்யா என்பது உங்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீங்களும் எல்லாம் கற்றுக்கொண்ட தெளிந்த அரசியல்வாதியாகி விட்டீர்கள் என்று. நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இது போலத்தான், இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் போலத்தான் நடந்து கொள்ளப் போகிறீர்கள்..

நன்றாகத் தான் அரசியல் நடத்துகிறார்கள். சொந்தப் பிரச்சினை வந்த பிறகு, மக்கள் பிரச்சனை பற்றி பேச விஜயகாந்துக்கு இப்போ நேரம் கிடையாது. எல்லப் பத்திரிக்கையிலும் கல்யாண மண்டபமும், வருமான வரி ரெய்டும் தான் செய்திகளாய் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு இப்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் புதிய வெள்ளைசொக்காய் அரசியல்வாதி கிடைத்து விட்டார். தண்ணியடித்து விட்டு தான் சட்டசபைக்கு வந்தார் என்று ஒருவர் கூறினால், ஆமாம் அவரா ஊத்திகொடுத்தார் என்று கேட்பார். லஞ்சம் விஜயகாந்த் வாங்கினார் என்று யாராவது சொன்னார், ஆமாம் அவரா எண்ணிக்கொடுத்தார் என்று கேட்கப் போகிறார். வேறு என்ன புதியதாக செய்யப் போகிறார் இவர். ஆமாம், எல்லோரும் ஜோராய் ஒரு தடவை கை தட்டுங்கள். நமக்கெல்லாம் இப்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் புதிய வெள்ளைசொக்காய் அரசியல்வாதி விஜயகாந்த் கிடைத்து விட்டார்.

Thursday, January 25, 2007

என் பள்ளியில் நடந்த குடியரசு தின விழா

'நீராருங் கடலெடுத்த' என்று மொத்த கூட்டமும் பாட ஆரம்பிக்க அந்த பாடலின் கீதத்தை தவிர வேற எதுவும் கேக்கவில்லை. ராணுவ வீரர்கள் மொத்தமாக நடந்தால் எப்படி ஒரே ஒலி வருமோ அவர்களின் காலடி தடத்திலே, அது போல, இந்த பாடலை எல்லோரும் பாடி, அன்றைய நாளை ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால், இந்த பாட்டு பாடி முடிக்கும் போது தான் நான் பள்ளியின் சுற்றுபுறச் சுவரை தாண்டி பள்ளிக்குள் குதித்திருப்பேன். ஆனால் இன்று குடியரசு தினம். எப்போதும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் காலை வழிபாடு அன்று எட்டு மணிக்கே. என் மொத்த பள்ளிக்கூடமும் பளீர் வெள்ளை சட்டையிலும், நீலநிற டிரவுசர்களிலும் இருந்தனர். அந்த வெள்ளை நிறத்தில் பட்டுத் தெறித்த சூரிய ஓளி அங்கே ஏதோ ஒளித் திருவிழா நடக்கிறது என்று ஊருக்கு சொல்லிகொண்டிருந்தது.

முதல் நாளே சொல்லிவிடுவார்கள் அடுத்த நாள் கட்டாயம் காலை குடியரசு நாள் விழாவுக்கு வந்துவிடவேண்டுமென்று.. வரவில்லை என்றால் அவர்கள் தனியாக கவனிக்கப் படுவார்கள் என்று ஒரு மறைமுக மிரட்டல் வேறு இருக்கும். இல்லையென்றால் யாரும் வரமாட்டார்கள். ஆனால் இப்படி எல்லாம் சொல்லித்தான் இப்படிபட்ட தேசப் பற்று விழாக்களை நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். அதுவும் தொலைக்காட்சிகள் பெருகிய இந்த நாட்களில் அதில் காண்பிக்கப்படும் படங்களும் திரை நாயக நாயகியரின் நேர்முக பேட்டியும் தான் குடியரசு விழாக்களை பெருமைப்படுத்துகின்றன. தேசிய தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் தேசியப் பற்றினை தனியாக குறும் படங்களையோ, இந்தியாவின் பெருமைகளையோ வைத்து சொல்லுகின்றன. ஆனால் எனக்கு தெரிந்து, அறிந்து, அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எந்த தமிழ் நாட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் நடத்துவதில்லை. தேர்தலின் போது மாற்றி மாற்றி தூற்றிகொள்ள மட்டுமே உபயோகப்படுத்தப் படுகின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர், எங்கள் தலைமையாசிரியரின் உரை இருக்கும். அவர் போன வருடம் என்ன பேசினாரோ அதையே மறுபடியும் பேசுவதாக இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் எல்லோரையும் அமரச் சொல்லிவிடுவார்கள். காலை வெயிலில் அவரின் பேச்சு எங்களுக்குள் உற்சாகம் கிளப்புவதை விடுத்து, கொஞ்சம் சோர்வையே எழுப்பும். அதற்கு அடுத்து வரும் எங்கள் தமிழய்யா உரை தான் எங்கள் ரத்தங்களை சூடேற்றும். அவரின் சொல் விளையாடல் எங்களுக்கு ஒரு மந்திரம் போலவே இருக்கும். எங்கள் தலைகள் அந்த மந்திரத்துக்கு தலையாட்டிக் கொண்டிருக்கும்.

ஆனால் எத்தனை பேர் உரையாற்றினாலும் குடியரசு தினம் என்றால் என்ன என்பதை யாரும் சொல்லமாட்டார்கள். சில மாணவர்களுக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ரெண்டும் நாம் 1947-இல் பெற்றதாகத் தான் நினைத்துகொள்வார்கள். எங்கள் தமிழய்யாவின் உரைக்கு பிறகு, அருகில் இருக்கும் காந்திகிராம பல்கலைகழகத்தில், இன்னும் கதராடையையே உடுத்திகொண்டு இருக்கும் பெரியவர் யாராவது வந்து தேசியக் கொடியை உயர்த்துவார். அந்த மூவர்ண கொடியை பறக்கையில் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் கொடி காத்த குமரனின் பிம்பமும், அவரது தேசபக்தியும் தான் தெரியும். அந்த மூவர்ண கொடியின் பின்னே எத்தனை எத்தனை பேர்களின் சுதந்திர மூச்சும், ரத்தமாய் உறைந்து போய்விட்ட தேச பக்தியும் பதுங்கி கிடக்கிறது.

எங்கள் ஊரில், ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. இந்த குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடியேற்றிவிட்ட பிறகு, எல்லோரும் ஊரின் முக்கிய தெருக்கலில் ஊர்வலமாக வருவார்கள். அந்த பிஞ்சுக் கரங்களில் உயர்த்திப் பிடித்த கொடியும், கொஞ்சும் குரலில் தேசியப் பற்றும் எங்கள் ஊரின் ஒட்டுவீட்டையும் ஓட்டையாக்கும் வேகமும் பொங்கும் உணர்ச்சியும் இருக்கும். இந்த ஊர்வலத்தை ஊரே நின்று பார்க்கும். டீக்கடையிலும் வெட்டிபேச்சு திண்ணைகளிலும் மக்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள். எனக்கு தெரிந்து கிராமங்களில் கொண்டாடுவது போலக் கூட நகரத்து பள்ளிகளில் குடியரசு விழா கொண்டாடப் படுவதில்லை. அதனால் தான் என்னவோ என் ஊரை போன்ற கிராமங்களில் இருந்து தான் நிறைய பேர் ராணுவத்தில் சென்று சேருகிறார்கள். எங்கள் ஊரின் அருகில் இருக்கும் நி.பஞ்சம்பட்டி என்ற கிராமத்திலிருந்து தான் அதிகபேர் ராணுவத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் தகவல் சொன்னார்கள் அந்த ஊரில் இருக்கும் மக்களிடம் பேட்டியெடுத்து.

என் பள்ளியில் கொடியேற்றியதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். முக்கியமாக மாறுவேடப் போட்டி. இந்த மாறுவேடப்போட்டியில் மட்டும், ஒரே மாணவன் ஒவ்வொரு வருஷமும் கட்டபொம்மன் மாதிரி வேசம் போட்டுவந்து தொடர்ந்து மூன்று வருடம் பரிசினை தட்டிச் சென்றிருக்கிறான். இதெல்லாம் முடிந்து வீட்டுக்கு சென்றால், தலைநகரில் நடக்கும் அணிவகுப்புக்கு ஜனாதிபதி தலைமை தாங்கி கொண்டிருப்பார். இந்த அணிவகுப்பை பார்க்காதவர் ஒருவர் கூட இருக்க முடியாது. அப்படி ஒரு நேர்த்தி இருக்கும்.

ஒன்றே ஒன்று இந்த நன்னாளில்.. எல்லோரும் சொல்வதை போல, நாடென்ன்ன செய்தது நமக்கு என்னும் கேள்விகளை கேட்பதை விடுத்து, நாமென்ன செய்தோம் அதற்கு என்று நினையுங்கள். இரண்டு தலைமுறைக்கும் முன்னர், எல்லோரும் என்னென்ன கஷ்டங்கள் பட்டோம் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இந்த சுதந்திரம் சும்மா வரவில்லை. எத்தனையோ இந்தியர்களின் கல்லறையில் தான் இந்த சுதந்திர பூ பூத்திருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துகொள்வோம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!

ஜெய்ஹிந்த்!!!

'தல'யின் கிரீடம் 'இளையதளபதி'யின் அழகிய தமிழ்மகன்



பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் நிறுவனம் புதியதாக அவரின் மகன் சுரேஷ் பாலாஜியின் கீழ், மும்பை அட்லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், கிரீடம். இதில் ஜி படத்திற்கு பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேருகிறார். அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக சரண்யாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் வி.எல். அழகப்பனின் மகன் விஜய் இயக்குகிறார். இந்தப் படம் மலையாளத்தில் திலகன், மோஹன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் படத்தின் தழுவல்.



இந்த படம் கிட்டதட்ட 60% ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்துக்கு வெயில் அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பை திரு ஏற்று இருக்க, எடிட்டிங்கை ஆண்டனி செய்கிறார்.



ஒரு தந்தை மகனுக்கு இடையிலான பாசத்தை சொல்லும் அழகான குடும்ப, ஆக்க்ஷன் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது கிரீடம்.

போக்கிரியின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகனின் ஷூட்டிங் நேற்றிலிருந்து தொடங்கியது. படத்தை மசாலா இயக்குநர் தரணியின் அசிஸ்ட்டண்ட் பரதன் இயக்க, படத்திற்கு இசை அலங்காரம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்க, இன்னொரு நாயகியாக நமீதா வேஷம் கட்டுகிறார்.



இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

Wednesday, January 24, 2007

சிறுமலை பயணம் - கல்லூரி கால பயணத் தொடர் 1

எனது கல்லூரியில், முதுநிலையான எம்.சி.ஏ படிக்கும் போது இருந்த பிரிய நண்பர்களில் கிரிஷ்ணசாமியும் குமரனும் மிக முக்கியமானவர்கள். கிராமத்தில் இருந்து வந்திருந்த எனக்கு, பல விஷயங்கள் பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல தான் இருக்கும். அதுவும் அப்போது என் ஊரில் இருந்து தினமும், கிட்டதட்ட ஐம்பத்தைந்து கிலோமீட்டர் வந்து செல்வதால், மனசு, போகும் ரயில்வண்டியின் கால அட்டவணை மேலேயே தான் கவனத்தோடு இருக்கும். அந்த இடைப்பட்ட நேரங்களில் கூட அரட்டைகள், ஆட்டங்கள், கடலை என தான் என் வாழ்க்கை அதிகம் கழிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த கணினி பற்றி அதிகம் சொல்லி, புதுப் புது விஷயங்கள் எல்லாம் எனக்கு புகட்டியவர்கள் அவர்கள் தான். எங்களுக்குள் அப்படியொரு சொல்லாத இணைப்பு இருந்திருக்கிறது.. இன்னமும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

செமஸ்டருக்கு முன்னால் படிக்க கிடைக்கும் அந்த இருபது நாட்கள் தான், நாங்கள் ஆறு மாசமாய் படிக்காமல் விட்டதை படிக்கும் நாட்கள். குமரனின் வீடு தான் நாங்கள் படிக்கும் இடம். விடிய விடிய படித்து விட்டு விடியற்காலையில் தான் தூங்குவோம். என்னமோ தெரியவில்லை, ஆந்தையை போலவே அந்த காலங்களில் இரவுகளில் தான் முழித்து கிடப்போம் படிப்பதற்காக. இன்னமும் கிரிஷ்ணாபுரம் காலனி பஸ்ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஹோட்டல் நட்சத்திராவின் முட்டை தோசையும், நன்றாக அடித்து செய்யப்பட்ட கொத்து புரோட்டாவையும் நாங்கள் மறக்க முடியாது. அதுவும் அந்த இரண்டு கரண்டிகளும் அந்த புரோட்டா கல்லின் மீது ஒற்றை கால்கலை தூக்கி போடும் ஆட்டங்களும் விடுகின்ற சத்தங்களும், பாக்காமலும் கேக்காமலும் இருந்ததில்லை.

ஒரு செமஸ்டர் விடுமுறையில், சிறுமலையில் இருக்கும் எனது பெரியப்பா தோட்டத்துக்கு செல்லலாம் என்று எனது நண்பர்களை அழைத்துகொண்டு கிளம்பினோம், நானும், எனது அண்ணன்கள் சிவாவும், குட்டியும், முருகனும். முருகன் எனது அப்பாவின் பங்காளி முறை. அதாவது எனக்கு சித்தப்பா முறை. ஆனால் எனக்கும் அவருக்கும் ஒரு மூன்று வயது தான் வித்தியாசங்கள். அதுவும் அவர் கொஞ்சம் குட்டையாக இருப்பதால் அவரது முருகன் என்ற பெயர் மறந்து பெரியண்ணன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அது போல தான் குட்டி அண்ணனும். அவருக்கு சந்திரலால் என்ற பெயர் இருந்தாலும் அவரை குட்டியண்ணன் என்று தான் நாங்கள் அழைப்போம்.

கிராமத்தில் இப்படி முதற் பேர் மறந்து இட்ட பட்ட பெயரே நிலைத்துவிட்ட பலபேர் இருக்கின்றனர். அதுவும் ஒரு வீட்டில் ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் என்று நினைத்து பெண்பிள்ளையாய் பிறந்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு போதும்பெண் என்று பெயர் வைப்பார்கள். அப்படி பெயர் வைத்தால் அடுத்து கட்டாயம் ஆண்பிள்ளை தான் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படியே தான் பெரும்பாலும் நடந்து விடுகிறது. எனக்கு தெரிந்தவரை அப்படித் தான் மூன்று நான்கு குடும்பங்களில் ஆண்பிள்ளை பிறந்திருக்கிறது. இது போன்ற நம்பிக்கைகள் அதிகமுண்டு கிராமங்களில்.

பெரும்பாலும் மலைகளில் செல்லும் பேருந்துகள் சின்னதாக தான் இருக்கும். அப்போதான் சுலபமாக வளைவுகளில் திருப்ப முடியும் என்று. அதுவும் இது போன்ற அதிகம் மக்கள் வந்து செல்லாத இடங்களுக்கு பாதையோ மிகவும் சிறியதாகத் தான் இருக்கும். அப்படிபட்ட சிறுமலைக்கு செல்லும் ஒரு சிறி பஸ்ஸில் ஏறி, கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்தோம். இந்த பேருந்தில் தான் காலை வேலைகளில் பலாப்பழம் முதல் மாங்காய் வரை பலவகை பழங்கள் கொண்டு வருவார்கள். இதற்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மார்க்கெட்டே இருக்கிறது.

எங்கள் ஊரில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தான் நாங்கள் இருக்கும் இடம் இருக்கிறது. ஆனாலும் அந்த சற்றுக்கல் மலைபாதையில் போகவேண்டாம் என்று எனது பெற்றோர் சொல்லிவிட்டதால் தான் இந்த பேருந்து பயணம். இல்லையெனில் அந்த மலைப் பாதையிலே நடந்தே போய் விடலாம் என்பது தான் எங்களது திட்டம். ஒரு பேருந்தில் இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் இது வரை, அப்படி எந்த பேருந்திலும் கணக்கு வைத்து ஏற்றியதாக நான் பார்த்ததில்லை. பத்து புத்தகங்கள் வைக்கப்படும் பள்ளிச் சிறுவனின் பையிலே இருபது புத்தகங்களை திணிப்பதை போல, அந்த பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது.

(பயணம் தொடரும்)

உள்ளமெல்லாம் இன்ப மயம்

இந்த வாரம் எப்பவும் படிப்பது போல் தமிழ்மணத்தின் பூங்கா இதழைத் திறந்தால் இன்ப அதிர்சியாய் இங்கே எழுதிய கிராமத்து பொங்கல் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாட்டங்கள் என்னும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கபட்டுள்ளது.

இந்த புது வருசத்தில் அதிகம் சினிமாவை பற்றி எழுதக்கூடாது என்று முடிவு செய்து, எழுத்து நடையை மாற்றியது நல்ல பலனை கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்குள் உறங்கி கிடந்த ஆற்றலை வெளிகொண்டு வந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவுக்கு நன்றி..நன்றி..நன்றி

Tuesday, January 23, 2007

போதும் நிறுத்திக்குவோம் வைகைபுயல் வடிவேலு

இந்த வார விடுமுறையில் போக்கிரி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. படம் எப்படி இருந்ததுங்கிறதை விட முக்கியமான விஷயம் படத்துல. படத்தின் நகைச்சுவை காட்சிகள். வடிவேலுவின் நகைச்சுவைகள் இப்போ எல்லாம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

வின்னரில் கைப்புள்ளையாய் வந்தபோது கைதட்டி, சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வர பார்த்து பார்த்து ரசித்ததுண்டு. இப்போதும் இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை எங்கே கண்டாலும் சலிக்காமல் பார்ப்பதுண்டு. ஆனால் இந்த படம் வந்து கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆயிடுச்சு. இன்னமும் இவர் விதவிதமாக அடிவாங்குவது வாத்தியார், கிரி, தலைநகரம் போன்ற சில படங்களில் ரசிக்க வைப்பதாக இருந்தாலும், இப்படியான ஒரு வித்தையை தொடர்ந்து பார்த்து வந்தால் ஒரு நேரத்தில் சலித்துவிடும். அடச்சே.. என்னப்பா ஒரே மாதிரி இருக்கு என்று மனசு புலம்பித் தள்ளும்.

கவுண்டமணி-செந்தில் காமெடிகளும் இப்படித் தான், ஆரம்பத்தில், உதயகீதம், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களில் ஆரம்பித்து கரகாட்டக்காரன், சின்னவர் படங்கள் வரை தொடர்ந்தாலும், ஒரு நேரத்தில் ரசிகர்களுக்கு களைத்து போனது. அதுவும் கவுண்டமணி, கார்த்திக், சத்யராஜ் படங்களில் கதாநாயகனின் இணையாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து செந்திலுக்கு வேலை இல்லாமல் போனது. அந்த இடத்தை மெல்ல வடிவேலுவும் விவேக்கும் ஆக்கிரமித்துகொண்டனர். முந்தையோருக்கும் வேற வழியில்லாமல் போனது.

இப்போது வடிவேலுவும் மெல்ல கதாநாயகனாக இம்சை அரசன் படத்தில் வெற்றி பெற்று, இப்போது இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்திலும் கதாநாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. மெல்ல அவருக்குள் நாயகன் வேடம் என்னும் வேதாளம் முருங்கை மரம் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லை. விவேக்கும் 2004-இல் விட்ட இடத்தை இன்னமும் பிடிக்க முடியவில்லை. போன வருடம் பொங்கலுக்கு வந்த மூன்று படங்களில் (ஆதி, பரமசிவன், சரவணா) நடித்தும், சொல்லிகொள்ளும்படியாக இல்லை. அதனால் வடிவேலுவை எதிர்ப்பதற்கு கஞ்சா கருப்பு, முத்துகாளை போன்றவர்கள் மட்டுமே முயன்றனர். அதுவும் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. புதிதாக வந்த தாமிரபரணி படத்தை பார்த்த பிறகு, வடிவேலுவின் ரிபீட் காமடிகளே மேல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

மதுர அண்ணாச்சி வடிவேலு அவர்களே, கொஞ்சம் உங்கள் காமெடி ஸ்டைலை மாற்றுங்கள். நாங்கள் உங்களின் மதுரை வட்டார பேச்சுகளையும், உங்கள் சட்சட்டென மாறும் பாடி லேங்குவேஜையும் பெரிதும் ரசிக்கிறோம். ஆனால் இது அப்படியே திடர்ந்தால் சிறிது காலத்தைல் எங்களுக்கு புதிதாக, புதிய ரசிக்கக்கூடிய சரக்குடன் வருபவர்களை கவனிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒவ்வொரு இடமாக நீங்கள் அடி வாங்குபவதில் இருந்து உங்களின் எல்லாவிதமான அடிவாங்கும் வகைகளையும் பார்த்து ரசித்துவிட்டோம். கொஞ்சம் புதியதாக ஏதாவது செய்யுங்கள். நாங்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம் வடிவேலு..

உங்களுக்கு ரசிகர்கள் வைகைப்புயல் என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். அதற்காக இப்படி சீக்கிரம் கற்பனா சக்தி வறண்டு போக வேண்டாம் உங்களிடம். நல்ல ரசிக்கக்கூடிய வின்னர் பட காமெடியை போன்று வித்தியாசமான காமெடியை முயற்சி செய்யுங்கள். இன்னும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வைகைபுயல் வடிவேலுவே.

Sunday, January 21, 2007

புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது

டேய் கார்த்தி.. எழுந்திரு.. என்ஜாய் பண்ணனும்னா வெளிய பாரு.. சரியான உறக்கத்தில் இருந்தேன். நண்பனின் குரல் என்னை எழுப்பியது. சோம்பலுடன் எழுந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே பனி மழை.. அதுவும் ஏற்கனவே தரையெல்லாம் மூடி மரத்தில் வெள்ளைப்பூ பூக்க ஆரம்பித்தது. இத்துணை நாட்களாய் வெளியேறாத பனிக் குருவி கீச் கீச்சென்று மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருந்தது.. தானாகவே கண்கள் அந்த முதல் விழிப்பிலேயே பிரகாசமானது. அவசர அவசரமாய் குளித்து விட்டு வழக்கம் போல போட்டோ செசனுக்கு கிளம்பினோம்.



எப்பவும் டிசம்பர் மாதம் 15 முதலே பனி பெய்ய ஆரம்பித்துவிடும். இங்கிருக்கும் மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் வெள்ளை கிறிஸ்துமஸ்னு பனியோடு கொண்டாடுவார்கள். இந்த தடவை அப்படி கொண்டாட முடியவில்லை என்று எல்லோருக்கும் ஒரு வருத்தம். ஜனவரி ஆகியும் பனி பெய்ற மாதிரி தெரிவதில்லை. சரி.. அடுத்த வருசம் இங்கே இருப்போமான்னு தெரில.. இந்த தடவை பனியை பார்க்காமலே இந்திய போற மாதிரி ஆகிடுமோன்னு பார்த்தா, இப்படி நல்லா தூங்குற காலை நேரத்துல சட்டுன்னு வானத்தை பொத்துக்கொண்டு பனி மழை.. அந்த பனி மழையை பார்க்கவே சிறு குழந்தையாகி பனியோடி விளையாட வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் பரவியது..



குடியிருக்கும் அபார்ட்மன்ட்டை விட்டு வெளியே வந்தால், கிட்டதட்ட நாலு, அஞ்சு இஞ்ச் உயரத்துக்கு பனி பெய்திருந்தது. இன்னமும் இறகு போல பனி மழை பெய்து காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது.. அந்த பனியில் இறங்கியது தான் தாமதம்.. மனசுக்குள் அப்படி ஒரு உற்சாக ஊற்று ஓடியது.



கிட்டதட்ட ஒரு மணி நேரம் பனியில் பந்து விளையாடினோம். பனியையே எறிந்தும் விளையாடினோம். பார்க்கும் சின்ன சின்ன இடங்களில் எல்லாம் பனி அப்படி அப்பிகிடந்தது. ரொம்ப நாள் ஏக்கம் மனசுக்குள் தீர்ந்த ஒரு திருப்தி இருந்தது.

அந்த என் உற்சாக போட்டோக்களை இங்கே உங்கள் மனசுக்குள் கண் வழியே ஏற்றுகிறேன் நண்பர்களே.

கோப்பன் பொரியுருண்டை

எனக்கு பள்ளியில் படிக்கும் போது தமிழ் பாடம் என்றால் கொள்ளை பிரியம். எனக்கு, நான் தம்பிதோட்டத்தில் எட்டு, ஒன்பது, பத்தாவது படிக்கும் போது தமிழ் பால் ஊட்டியவர் த.கதிர்வேல் ஐயா அவர்கள். அவருக்கு என்னை கண்டாலும், எனக்கு அவரை கண்டாலும் அப்படி ஒரு சொல்லொணா பாசம். வகுப்புக்கு வந்தால் தமிழ் வகுப்புகளில் உரைநடை புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிப்பதிலிருந்து, தமிழ் கட்டுரைகளை வாசிக்கும் வரை என்னை தான் செய்ய சொல்வார். அவரிடம் திட்டு வாங்குவதும், தலையில் நறுக்கென்று குட்டு வாங்குவதும் தினமும் நடக்கும் செயல். ஆனால் என்னமோ தெரியவில்லை, அவர் என்னை திட்டியதில்லை. ஒரு முறை, அவர் தமிழ் கட்டுரை வாசிக்க வாசிக்க நாங்கள் எழுதிக்கொண்டிருந்தோம். அப்போது நான் பெஞ்சின் ஓரத்தில் தான் உட்கார்ந்திருப்பேன். அவர் நடந்து கொண்டே வாசிக்கும் போது ஏதோ ஒன்றுக்கு நான் சந்திப் பிழை விட்டுவிட்டேன். அவ்வளவு தான் நறுக்கென்று தலை ஒரு குட்டு விழுந்தது. அப்போது தான் வகுப்பில் மற்றவர்கள் அடி வாங்கும் வலி எனக்குப் புரிந்தது. அது தான் அவர் என்னை முதலும் கடைசியுமாய் தலையில் கொட்டியது.

நான் எட்டாவது பயிலும் போது, முதல் முறையாக அவர் எனக்கு படம் எடுத்த அழகு இன்னமும் ஞாபகப் பெட்டகத்தில் இருக்கிறது. பெரும்பாலும் பேண்ட் சட்டை தான் அணிந்திருப்பார். என்றாவது ஒரு நாள் வெள்ளை வேட்டி சட்டை அணிவார். சைக்களில் தான் வந்து போவர். அதன் செயின் மர்காடில் அவரது பெயரும், வாங்கிய பட்டங்களும், பள்ளியின் பெயரும் இருக்கும். தமிழ் வாத்தியார் என்பதால் எப்போதும் வைரமுத்து பேசுவது போல் எல்லாம் பேசமாட்டார். வாலியின் வரிகளை போல எளிமையாய் இருக்கும். ஆனால் சொல்ல வந்த விஷயத்தையும் எங்களுக்கு அழகாக விளக்குவார். செய்யுளை அவர் பிரித்து பொருள் சொல்லும் அழகே அழகு. அதை ஒரு முறை கேட்டாலே, பரீட்சையில், அன்பில்லாதவர்களை பற்றி வள்ளுவர் என்ன கூறுகிறார் என்றால் நாலு பக்கங்களுக்கு மிகாமல் எழுதலாம்.

கொஞ்சம் முற்போக்கான சிந்தனை உள்ளவர். அதை தனது வாழ்க்கையிலும் நடத்தி, கடைபிடித்தவர். எனது நாடக, நடிக்கிற எண்ணங்களுக்கு நெஞ்சில் விதை விதைத்து, அறுவடை பார்த்து உச்சி மோர்ந்தவர். இன்னும் எந்தன் நெஞ்சில் இப்படி தமிழை பச்சை குத்தியிருக்கிறேன் என்றால் அது அவர் எனக்குள் விழுத ஏர் தான். இப்போது பட்டி மன்றங்களில் நடுவராக, தனது எண்ணங்களை சின்னாளபட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் பரப்புபவர்.

இன்று வரை எனக்கு புரியாத ஒன்று, எங்கு கேட்டும் அர்த்தம் கிடைக்காதது, அவர் கோபத்தில் எங்களை திட்டும் போது பயன்படுத்தும் வார்த்தை. அது 'கோப்பன் பொரியுருண்டை'. என்ன அர்த்தம் என்று தெரியவே இல்லை. ஆனால் யாரை திட்டும் போதும் இப்படித் தான் சொல்வார். முதல் முறை அவர் திட்டும் போது, இந்த சொல்லை பயன்படுத்தும் போது, எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவர் அடிக்கடி பயன் படுத்தும் போதெல்லாம் கேட்டு கேட்டு, சேது படத்தில் சீயான் பெயரின் அர்த்தத்தை எல்லோரும் தேடுவது போல் நான் தேடி இருக்கிறேன். யார் யாரிடமோ கேட்டிருக்கிறேன். விடை தான் கிடைத்தபாடில்லை. உங்கள் யாருக்காவது இதன் அர்த்தம் தெரியுமா.. தெரிந்தால் சொல்லுங்களேன்.. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

Saturday, January 20, 2007

அஜித்துக்கு மட்டும் ஏனிப்படி?

இப்போதெல்லாம் தமிழ் சினிமா படத்துக்காக இல்லாமல், அந்த படத்தில் நடித்த நடிகருக்காகவும், அதற்கு தரப்படுகிற விளம்பரத்துக்காகவும் தான் ஓடுகிறது.. அந்த படத்திற்காக செலவு செய்த, உழைக்கின்ற பலபேரை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நான் இப்படி சொல்வதற்கு சில எடுத்துக்காட்டுகள்..



தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வெளிவந்தது. அதற்கு உலக தொலைக்கட்சியில் முதன் முறையாக என்று மார்தட்டி நிகழ்ச்சிகள் நடத்தும் சன் தொலைக்கட்சி கடைசி வரை வல்லவனை முதலிடத்திலும் வரலாறை இரண்டாம் இடத்திலும் வைத்தது. போன வருடம் 2006-இன் அதிக வசூலை குவித்தது என்று இந்தியா டுடே நாளிதழும் விநியோகஸ்தர்களும் சொன்ன ஒரு படம், சன் தொலைக்காட்சியில் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுகிறது.. இது நியாயமா.. இதே, சன் டிவியை தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்கள் தொடர்பு கொண்ட படமாய் இருந்தால், அது எப்பேர்ப்பட்ட படமாய் இருந்தாலும் முதலிடம் தான்.. அது தெலுங்கு படத்தை அப்படியே அச்சு அசலாக நகலெடுத்த இளையதளபதி விஜயின் படமாக இருந்தாலும் சரி, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படமாக இருந்தாலும் சரி, சர் சரென்று கைகளால் கபடி விளையாடி நடிக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் படமாக இருந்தாலும் சரி.. முதலிடம் தான்.. ஏகபோக பாராட்டுக்கள் தான்.. இது தான் நடுநிலைமை தவறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சியா..

இது மட்டுமல்ல, மாதம் இரண்டு முறை படித்துவிட்டீர்களா குங்குமம் புத்தகத்தில் தும்மினால் கூட போட்டு விளம்பரங்கள் செய்வதுவும் நடக்கிறது. இதெல்லாம் செய்வது தவறில்லை. ஆனால் இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வராத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி அவர்கள் எழுதியது தன் செய்திகள், அவர்களின் செய்தி தரும் ஊடகங்களில்..

இதற்கு அடுத்து நெட்டில் புகழ் பரப்பும் நம்ம சிஃபி இணையதளம். வரலாறை வெற்றி என்று அறிவிக்க அவர்களுக்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால் போக்கிரியை மூன்று நாட்களில் வெற்றி என்று பறைசாற்றி இருக்கிறார்கள். வரலாறைவிட குறைந்த லாபமே ஈட்டிய வேட்டையாடு விளையாடு கடைசியில் பிளாக்பஸ்டர் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி வரை வரலாறு சூப்பர் ஹிட்டாகவே இருந்தது.

இப்போது தான் ஆழ்வார் படம் பார்த்தேன். இ-மெயில்களிலும் வார்த்தை வழிகளிலும் சொல்லப்படுகின்ற மாதிரி..இல்லை இல்லை.. பரப்பப்படுகின்ற அளவு படம் மோசம் இல்லை. முதல் முறை இயக்குவதால் இயக்குநர் செல்லா சில தவுறுகளை செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் சொல்வது போல் இல்லை. அஜித் இது போன்று புது இயக்குநர்களுக்கு ஆதரவு தந்தது போன்று வேறு யாராவது தந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.. கிட்டதட்ட பதினெட்டு படங்கள் அஜித்திற்கு புது இயக்குநர்கள் இயக்கியது தான். சும்மா அடுத்தவர் ஜெயித்ததிலே, அவர்களை நகலெடுத்து நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தன்னை போன்றே வெற்றி பெற துடிக்கும் பல பேருக்கு வாய்ப்பு தந்தவர் அஜித். எஸ்.ஜே.சூர்யா முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை புதுமுகங்கள் தான், அவர்கள் முதல் படங்களை எடுக்கும் போது. இவர்களை எல்லாம் நம்பிக்கையோடு அரவணைத்திருக்காவிட்டால் இவர்கள் இன்று முகம் காட்டியிருக்க முடியுமா? அப்படி கொடுத்தது தான் செல்லாவுக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பையும் அவர் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். (படத்தின் விமர்சனம் தனியாக)

எனது ஊர் நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோது, பொங்கலன்று, போக்கிரி சரியில்லை என்றார்கள். ஆழ்வார் நன்றாக இருக்கிறது என்றார்கள்.. மற்ற எல்லா நண்பர்களும் போக்கிரி விமர்சனத்தில் குறியிருப்பது போல், தெலுங்கு போக்கிரி படத்தை மட்டுமல்ல, அதன் நாயகனின் நடை உடை பாவனையையும் அப்படியே காப்பி அடித்திருக்கிறார்களாம்.. நான் மற்றவர்களை குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி தனியாக எந்த விளம்பரங்களும் இல்லாமல் முன்னேறும் ஒருவருக்கு இப்படியா வதந்திகள் மூலம் படத்தை ஓடவிடாமல் செய்வது.

இதற்கு மேல் வாதம் செய்தால் அது ஏதோ தனிமனித துவேஷம் ஆகிவிடும். விமர்சனம் எழுதும் நண்பர்களே, உண்மையை எழுதுங்கள். உங்கள் நடைக்கேற்ப சுவைபட எழுதுங்கள். ஆனால் உன்மையை எழுதுங்கள்.

நான் அஜித்தின் ரசிகன் என்பது உலககுக்கே தெரியும். அதனால் தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் கேட்டால் அஜித்தின் தன்னம்பிக்கையும், அவருக்கும் மட்டும் ஏனிப்படி நடக்கிறது என்ற கவலையும் உண்டு. எனக்கும் தான். நிச்சயம் விரைவில் தலை நிமிர்ந்து நிற்பார். அவரை பாக்க எல்லோரும் கழுத்து சுளுக்கி பாக்காணும். இது ஏதோ எப்பவும் பேசும் வசனங்கள் இல்லை. ஒரு நம்பிக்கை.

Thursday, January 18, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (இரண்டாம் பகுதி)

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)



லிங்கன் அவர்களின் நினைவு மண்டபத்தை பார்த்து வியந்தவாறே நாம், வலது பக்கம் நடந்தால் அங்கே கொரியா போரின் நினைவிடம் ஒன்று இருக்கிறது.. அங்கே கைகளில் துப்பாக்கி ஏந்திய, கண்களில் அந்த வீரம் மின்ன, பதினைந்துக்கும் மேற்பட்ட வீரர்களின் சிலைகள் உள்ளன. தினமும் இங்கே கொரியா நாட்டு தூதரகத்தின் சார்பாக மலர்வளையம் வைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தின் பக்கவாட்டில் கறுப்புக்கலர் கற்களால் ஒரு சுவர் அமைக்கப்பட்டு அதில் பல வீரர்களில் உருவங்கள் பதிக்கப்பட்டிருகின்றன. இது மட்டுமில்லாமல் "சுதந்திரம் சும்மா கிடைப்பதில்லை" என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.



இதன் மறுபுறத்தில், லிங்கன் மண்டபத்தின் இடது பக்கத்தில் வியட்னாம் போரின் நினைவிடமும் இருக்கிறது. இங்கே போரில் போராடிய பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தினமும் அன்றைய தேதியில் மறந்து போன வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக மலர்ச்செண்டு வைக்கிறார்கள். நாட்டின் தலைநகரம் என்பதால் எல்லா இடங்களில் தேசப்பற்று சார்ந்த விஷயங்களே மிகுதியாக தெரிகிறது. இந்த நினைவு இடங்களுக்கு எல்லாம் நாம் சென்று திரும்பும் போது, காதுகளில் துப்பாக்கி ஓசையும் பீரங்கி முழக்கங்களும், கண்களில் போர்க்களத்தின் காட்சிகளும், இதயத்தில் அவர்களின் நாட்டுபற்றும் அதற்கு அவர்கள் தந்த விலையும் இமயமாக எழுந்து நிற்கிறது..

(நம்ம ஊரில் இன்னமும் தலைவர்கள் சிலைக்காக அடித்துக் கொள்வதை கண்ட அந்த கணங்கள் இந்த மாதிரி இடங்களில் ஞாபகம் வர மிகவும் வருந்தினேன்..)



இந்த இடத்திலிருந்து அப்படியே நேரா நடந்து போனால், எலிப்ஸ் பூங்கா வரும்.. அதன் மேல்பக்கத்தில் தான் வெள்ளை மாளிகை. உள்ள விட மாட்டாங்கன்னு தெரியும்.. அதனால வெளில இருந்தே பார்த்தோம்.. வெளியில் இருந்து பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒன்றும் பெரிய விஷயங்கள் இதில் இருப்பதாக தெரியவில்லை.. ஜனாதிபதி இருக்கிறார் என்பதை தவிர. ஆனால் வெள்ளைமாளிகையை நமது ராஷ்ட்ரபதி பவனோடு ஒப்பீடு செய்தால் எனக்கு ராஷ்ட்ரபதி பவன் தான் பிடித்திருக்கிறது.. ஒவ்வொரு முறையும் ராஷ்ட்ரபதி பவனில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்று வந்தவர்கள், அதை பற்றிச் சொல்லும் போதும் அவர்களுடன் நாமும் சென்று வந்ததை போல இருக்கும். ஆனால் அதெல்லாம் வெள்ளை மாளிகையில் இருக்கிறதா என்று பக்கத்தில் குடியிருக்கும் நமது நாட்டாமை தான் சொல்ல வேண்டும். ஆனால் நம்ம ஊருக்கு போனால் எல்லோரிடமும் காட்ட வேண்டுமே அதனால்.. வெள்ளை மாளிகை முன்பு சராமாரியாக புகைபடங்கள் எடுத்துக் கொண்டேன். அதை எடுத்துக் கொண்டு ஊரில் காண்பித்தால் தான் நான் அங்கே சென்று வந்ததாக நம்புவார்கள். நான் நியுயார்க் மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் அடங்கிய டிவிடி எங்கள் ஊரில் வீடு வீடாய் சுத்திக்கொண்டிருக்கிறது. என்னை பாக்கவில்லை என்றாலும் அமெரிக்காவின் பல இடங்களை பார்க்கலாமே என்று தான் அவர்கள் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



வெள்ளை மாளிகையை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, அமெரிக்க பாராளுமன்றத்தை பார்க்க கிளம்பினோம். அதன் போகும் வழிகளில் இருந்த கட்டிடங்கள் எல்லாம் மிரட்டலாய் இருந்தன. அழகாய் வடிவமைக்கப் பட்டு, உயரமாய், நமது மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களை போல எல்லாக் கட்டிடங்களிலும் தூண்கள் நின்று அந்த கட்டிடங்களை தாங்கி கொண்டிருந்தன. சிவப்பு நிற வண்ணத்தில் சில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாய் இருந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தின் அருகில் செல்ல சில பாதுகாப்பு காரணங்களால் போக முடியவில்லை என்பதால் தூரத்தில் இருந்தே பார்த்து வழக்கம் போல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். என்னதான் வெயில் காலங்களில் ஊரை சுத்தி பார்த்தாலும் இந்த மாதிரி ஒரு அழகிய ரசிப்பதற்கேற்ப வானம் கருப்பு ஆடை அணிந்து கிடக்கும் இந்த வேலையில் நகரின் தெருக்களில் நடப்பது சுகமானது.



அதுவும் வருடத்தின் முதன் நாளில் இப்படியொரு இனிய பயணம் அந்த வருடமெல்லாம் வசந்தமே என்று நெஞ்சுக்கள் ஒரு சந்தோச விதயை தூவின. அந்த சந்தோச விதை இன்று மரமாய் விளைந்து நிற்கின்றன. அப்படியே பரவி இனிய பூக்களை தூவுகின்றன ஒவ்வொரு நாட்களிலும் நடகின்ற பாதையில் பரப்புகின்றன. அந்த சந்தோச வாசனை படிக்கின்ற எல்லோர் மனசிலும் கலந்து வாழ்வு செழிக்க, காற்றில் கலந்து எங்கும் குடியிருக்கும் இறைவனின் அருளால் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

வீராசாமி விமர்சனம் - ரவியின் ரவுசான பதிவு

செந்தழல் ரவியின் ரவுசான பதிவு.. படித்தவர்கள் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி ஒரு நையாண்டி பதிவு.. எதைப் பற்றி என்று தானே கேட்கிறீர்கள். நமது அகில உலக அடுக்கு மொழி வேந்தன் விஜய.டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தின் விமர்சனம் (ஏதோ ஒரு காரணத்தால் லிங்க் முதலில் வேலை செய்யவில்லை. இப்போது வேலை செய்கிறது.) தான்.

சோர்வாக இருப்போர் படித்தால் குதுகலமாவீர்கள்.. படம் எப்படியும் இருக்கட்டும். இது போன்ற பதிவுகளை படிக்கும் போது படத்தை இதற்காகவாவது பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது..

நல்ல பதிவுங்க ரவி.

வீராசாமி படத்தின் புதுமையான இந்த போஸ்டரையும் இங்கே பாருங்களேன்

Wednesday, January 17, 2007

கனவே கலையாதே...

இரண்டு மூன்று நாட்களாக சரியான அலுப்பு.. வீட்டிற்கு வந்தால் தலையணை தேடி, படிக்கச் சொல்லுது மனசு.. அந்த அளவுக்கு அலுப்பாக இருக்கிறது.. எல்லோருடைய பதிவுகளுக்கும் செல்ல முடியாமலும் இருக்கிறேன்..

நண்பர்களே, பொறுத்தருங்கள்.

போன வாரமெல்லாம் இரவு 1 மணி வரை முழித்திக் கிடந்தேன்.. இந்த வாரம் 10 மணிகெல்லாம் கண்கள் சொருகுகின்றன.. எனக்கு வருகின்ற கனவுகள் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். நேற்று காலை ஒரு ஐந்து மணி அளவில், பயங்கரமான ஒரு கெட்ட கனவு. அதற்கு பிறகு தூங்கவே முடியாத ஒரு கொடூர கனவு.

என் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு காலி இடத்தில் ஒதுங்க முடியா கூட்டம். என்னவென்று பார்த்தால் வரிசையாக பூமியில் இருந்து பிணங்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன.. அவை எல்லாம் எனக்கு தெரிந்த ஏதோ சில முகங்கள்.. அதன் பிறகு தூங்கவே பிடிக்கவில்லை.. என் அறையின் ஜன்னலுக்கு வெளியே காற்றில் இரண்டு மனைதர்கள் காலில்லாமல் நடப்பது போல ஒரு பிம்ப உணர்வு.

எப்பவோ பார்த்த, நினைத்த சங்கதிகள் தான் ஆழ்மனசில் இருந்து ஒரு நாள் கனவுகளாக வரும் என்று சொல்வார்கள்.. எப்படி இந்த கனவு வந்தது என்று யோசித்துப் பார்த்ததில், முன்னுக்கு முந்திகொண்டு வந்தது கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படம். அதில் வரிசையாக பிணங்களை தோண்டி எடுப்பார்களே, அது தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் பார்த்துவிட்டு வந்த பின், கிட்டதட்ட இரண்டு நாட்களுக்கு அந்த பாதிப்பு இருந்தது.. அதில் காட்டப்பட்ட கொலைகளும், அதை செய்த விதமும் அந்த அளவுக்கு மனதை பாதித்தது. அது இப்போதுதான் மனதில் இருந்து வடிந்து ஓடியிருக்கிறது போலும்..

அதே போல், இன்று காலை ஒரு கனவு. முற்றிலும் மாறானா கனவு. நான் ஒரு திரைப்படத்தின் அறிமுகப்பாடலில் நடிக்கிறேன்.. இரு கைகளையும் மேலே தூக்கி ஆடுகிறேன் பாடுகிறேன்.. மழை பெய்கிறது.. வானம் நோக்கி கைகளை உயர்த்தி ஏதோ பாடுகிறேன்.. கேமரா வேறு என்னை புதுப்புது கோணங்களில் என்னை பதிவு செய்கிறது.. நான் உயரப் பறக்கிறேன்.. கீழே என் பாட்டியும், தங்கை மற்றும் தங்கையின் தோழி கூட சேர்ந்து ஆடுகிறார்கள்.. இந்த கனவு வந்ததால் என் கண்களை திறக்காமல் தூங்கியதில், அலுவலகத்துக்கு இன்று கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றேன்.

இந்த கனவு எப்படி வந்தது.. ஏன் வந்தது.. இன்று முழுவதும் மனசில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம்.. ஏனிப்படி? என்னுள் சின்ன வயசுல இருந்து இருக்கும் சினிமா ஆசைகளா.. தெரியவில்லை. ஆனால் இன்றைய பொழுது நன்றாகவே போனது..

சில சமயங்களில் வாழ்க்கையில் நடக்காத பல விஷயங்கள் இப்படி கனவிலே நடந்து மனசை சாந்தப்படுத்துகின்றன.

என் கனவுகளுக்கு நன்றி.. அது தான் என் கற்பனையையும் திறன்களையும் வளர்த்து விடுகிறது என்பது என்னுள் விதைக்கப்பட்ட ஒன்று.

எனது ஏனைய கனவுகள்

Monday, January 15, 2007

பொங்கல் போனஸ்

நண்பர்களே, பொங்கல் போனஸ் செய்தியா இங்கே பதிவிடப்பட்ட கவி கட்டுரையை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள் தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழுவினர். அந்த பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

என்றும் இவனை ஆதரித்து எழுத்துகளை படித்து, மனசுக்கு உற்சாக பின்னூட்டங்கள் தந்து வரும் எனது நண்பர்களாகிய, உங்கள் அனைவருக்கும் எனது இமயம் தொட்டு இதயம் தொடும் இதமான நன்றிகள்.. இந்த இடத்தை, இவனை அடைய வைத்தது தங்களின் நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் தான் நண்பர்களே.

சிறிய எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி அவர்களின் தரமான எழுத்துக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.. மேலும் இந்த பதிவை வெளியிட தேர்ந்தெடுத்தற்கு அவர்களுக்கு என் மகிழ்வான நன்றிகள்..

Sunday, January 14, 2007

ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்

(சற்றே பெரிய பதிவு)

தினமும் நான் அவ்வழியே தான் அலுவலகம் செல்வேன்.. புகை கக்கிய பேருந்துகளும் முகமூடி அணிந்த மனிதர்களும் இருபுறமும் சென்றுகொண்டிருப்பார்கள். நானும் அப்போது பேருந்து பயணி தான். எப்போதும் என் பையில் சில சில்லறை காசுகள் இருக்கும். ஒரு முறை அப்படி புளிமூட்டைக்குள், நசுங்கிய புளியாக நான் நின்றுகொண்டிருந்த போது, சில்லறை இல்லை என்பதால் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டேன். அப்படி, தேய்த்த சட்டை கசங்கி நான் வெளியே துப்பப்பட்ட போது தான் எனக்கு அவன் அறிமுகமானான். சில சமயம், படிகளிலும், சில சமயம் ஜன்னலோரமும் பயணிக்கையில் நான் அவனை பார்த்திருக்கிறேன்.. அவனது சடை முடியும் தாடியும் பார்த்து காவி அணியாத சாமியார் என்று நினைத்தேன், முதல் முறை கவனித்த போது.. மனதை கவ்வுகிற ஆளாக இல்லையென்றாலும், அவனை விட்டு என் மனம் அகலவே இல்லை. என் வயது தான் இருக்கும். அவ்வளவு சிறிய வயதில் ஏனிந்த கோலம் என்று நான் நினைத்து வியந்ததுண்டு.. வருத்தப்பட்டதுண்டு.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வராமல் ஒரு மனிதன் வாழ முடியுமா.. அப்படி கஷ்டங்கள் வந்தவர்கள் எல்லாம் இவனைப் போல இருந்தால் நாடே இப்படி பட்டவர்களின் முதுகில் தான் எழுந்து நிற்கும்.. ஒரு வேளை, கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது போல, ரயில் பெட்டிகள் போல அடுத்தடுத்து இடர்கள் இவனுக்கு மாலை போட்டு ஆட்டி எடுத்திருக்குமோ.. அதில் கண்ணதாசன் சொல்லியிருப்பார்.. ஒருவனுக்கு அடுத்தடுத்து துன்பங்கள் நடக்கிறது.. அடாது பெய்த மழையில் அவனது மாடுகள் இறந்து போகின்றன.. பரந்து விரிந்த வயல்வெளியெல்லாம் தண்ணீரில் மூழ்கி போகின்றன.. வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. விளையாடிய மகனை பாம்பு கடித்து விட்டது.. வாசலிலே கடன் கொடுத்தவர்கள் கொடுத்த காசுக்காக கழுத்தை நெருக்க காத்திருக்கிறார்கள்.. இப்படி ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், ஒரே நாளில் ஏற்பட்டால் இப்படித்தான் ஆகியிருப்போனோ.. இளவயதில் சாமியாராக ஆகுபவர்கள் எவரும் உண்மையான பற்றற்வர்களாக பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் மனசு அந்த லௌகீக வாழ்க்கையை மட்டுமே சுற்றி சுழலும். அதனால் தான் பிரேமானந்தா போன்ற சாமியர்கள் உருவாகிறார்கள். கௌதம புத்தரும் கல்யாணம் பண்ணிய பிறகு, வாழ்வை அனுபவித்த பிறகு தான், ஆசையை விடு என்றார். இல்லையென்றால் அவருக்கும் அந்த ஏக்கங்கள் இருக்கத்தான் செய்திருக்குமோ..

அவனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இப்படித்தான் பல நினைவுகள் மனச் சுவர்களில் அலையாய் மோதி செல்லும். இவனை பார்க்கவே சில சமயம் நான் தூரமாய் இருந்தாலும் அந்த பேருந்து நிறுத்ததிற்கு வருவது உண்டு.. இப்போதெல்லாம் என்னை பார்த்து அவன் மீசைக்குள் புன்னகைப் பூ பூப்பதுண்டு.. தாடி புதர் சில சமயம் பூங்காவாய் மாறுவதுண்டு.. கிழிந்த ஆடை.. அது அவனது ஏழ்மையை காட்டுகிறதா... இல்லை உள்ளத்தின் கதவுகளா தெரியவில்லை.. எத்தனையோ பிச்சைக்காரர்கள், நான் அவர்களுக்கு கால் ரூபாயை போட்ட போதெல்லாம் என்னை செல்லாகாசை பார்ப்பதுப் போல் பார்ப்பார்கள். இவனோ என்ன போட்டாலும் சிரித்து கொண்டே ஏற்றுக்கொள்கிறான்.. அதோடு ஒரு சின்ன புன்னகையையும் நன்றியாக செலுத்துகிறான்.

எப்படி அவன் மீது எனக்கு அப்படி ஒரு பாசம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு பூர்வ ஜென்மத்து பந்தம் போல அது இருந்தது.. பக்கத்தில் வைத்திருக்கும் அந்த அழுக்கு மூட்டைக்குள் என்ன வைத்திருப்பான் என்னும் கேள்வி என்னை குடைந்துகொண்டே இருக்கும். அவனை பற்றிய ஏதேனும் உண்மைகள் அதற்குள் இருக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் ஏனோ அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும் மனதுக்குள் அதிகமாகி கொண்டே போனது.. அவனை அந்த பிச்சைக்கார உலகில் இருந்து மீட்டு வர மனம் எண்ணியது.. எனது நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.. எனக்கு ஏனிந்த விபரீத ஆசை என்று கிண்டல் செய்தார்கள்.. ஆனால் எனக்கு மனதுக்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே இருந்தது..

ஒரு நாள் சனிக்கிழமை அவனிருக்கும் அந்த பேருந்து நிறுத்ததற்கு சென்றேன்.. எப்பவும் போல போய்வரும் மக்களையே அண்ணாக்க பார்த்து அவனுக்குள் பேசிக்கொண்டிருந்தான்.. அந்த பேருந்து நிறுத்ததில் ஆட்கள் குறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவனும் என்னை பார்த்து வழக்கம் போல சிரித்து விட்டு, மற்றவர்கள் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.. யாராவது மனைவி, குழந்தைகளோடு வந்தால் அவர்களை மட்டும் அவர்களை இவன் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு அரைமணி நேரம் நான் பொறுமையாக காத்திருந்தது வீண் போகவில்லை. அந்த பேருந்து நிறுத்தம் வெறிச்சோடி கிடந்தது.. அவன் பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டு கண்களை மூடி இருந்தான். நான் அவன் அருகில் சென்று மெதுவாக, எச்சில் விழுங்கி மெல்ல ஹாய் என்றேன்.. அவன் சின்ன அதிர்ச்சியோடு கண் விழித்தான். நான் தான் கூப்பிட்டேன் என்று தெரிந்ததும் ஸ்னேகமாய் சிரித்தான். உங்க கூட பேசணும்.. வாங்க அப்படியே நடந்து பேசலாம்.. மதிய உணவையும் முடிக்கலாம் என்று அழைத்தவுடன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. அப்படியே எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான்..

என்ன யோசிக்கிறீங்க.. வாங்க போகலாம் என்று கொஞ்சம் மனசுல தைரியத்தை வளர்த்து கொண்டு கூப்பிட்டேன்.. இப்போ மெல்ல ஆச்சர்யமும், கொஞ்சம் கேள்விக்குறியோடும் பார்த்தான். எழுவதா, என் அழைப்பை மறுப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை.. கண்களில் சின்ன பயமும் தொற்றிக்கொண்டது. கொஞ்ச நேர குழப்பத்திற்கு பிறகு, தனது அழுக்கான அந்த பையை எடுத்துகொண்டு கிளம்பினான்.. எனக்கு மனசுக்குள் சின்ன சந்தோசம் எழுந்தது.. அவனை அப்படியே பக்கத்தில் இருந்த கட்டண குளியலறைக்கு அழைத்து சென்று அவனுக்கு குளிக்க சோப்பும், கையோடு எடுத்து வந்த புதிய உடைகளையும் கொடுத்தேன்.. என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.. கொடுத்ததெல்லாம் வாங்கி கொண்டான். பேருந்து நிறுத்ததில் இருந்து இந்த குளியலறை வரை அவன் என் கூட ஒரு மாதிரி கூச்சப்பட்டே நடந்து வந்தான். எதுவும் பேசவில்லை.. என்னை விட்டு கொஞ்சம் பின்னாலும், ஒதுங்கியும் தான் நடந்து வந்தான். யாரை பற்றியும் கவலை படாமல் நான் நடந்து வர, அவன் சுற்றி முற்றி எல்லோரையும் பார்த்த வாறே நடந்து வந்தான்.. இந்த சின்ன விசயத்தில் தான் அவனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..

அரை மணி நேரம் அவன் வரும் வரை காத்திருந்தேன்.. என் நண்பர்களிடம் மொபைலில் பேசி விஷயத்தை சொன்னேன்.. கூப்பிட்ட ஆறு பேரில் நான்கு பேர் என் கூட அந்த ஹோட்டலில் வந்து சேர்ந்து கொள்வதாக சொன்னார்கள். அவர்களுக்கு சொல்லமுடியாத ஆச்சர்யம். குளித்து விட்டு அவன் வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்தான்.. நன்றாக குளித்துவிட்டு அழகாக இருந்தான்.. நான் எடுத்திருந்த சட்டை அவனுக்கு கொஞ்சம் தொளதொள என்று தான் இருந்தது.. ஆனால் அவன் அதை ரசித்தான்.. கைகூப்பி நன்றி சொன்னான்.. அவனது கண்களில் இப்போது கண்ணீர் கசிந்தது.. நான் வைத்து இருந்த சென்னை சில்க்ஸ் பையில் அவனது அழுக்கு மூட்டையை வைத்துகொள்ளச் சொன்னேன்.. அப்படியே வைத்துகொண்டான்.. இப்போது நான் எதை சொன்னாலும் செய்கின்ற நிலைக்கு வந்திருந்தான்.. நண்பனிடம் ஓசி வாங்கி வந்திருந்த டூ-வீலரில் அவனை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றேன்..

அவனை பற்றிக் கேட்டேன்.. எந்த கேள்விக்கும் அவன் வாயை திறக்கவில்லை.. கடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.. நீண்ட நேரம் கழித்து அவனது அழுக்கு மூட்டையில் இருந்து ஒரு கசங்கிய லேமினேட் செய்த ஒன்றை வெளியில் எடுத்து என்னிடம் கொடுத்தான்.. அதில் அவன் பொருளாதாரத்தில் இளநிலை படித்திருக்கிறான் எனவும் அவனது பெயர் ரஞ்சித் எனவும் இருந்தது.. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.. அதற்கு மேல் எதுவும் அவன் சொல்லவில்லை.. எனக்கும் முதல் நாளிலே அவனிடம் எல்லாம் கேட்டுபெறுவது சரியல்ல என்று நினைத்து விட்டுவிட்டேன்.. என் நண்பர்களுடன் மதிய உணவு முடித்துவிட்டு, அவனுக்கு எப்படியும் நல்ல வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினோம்.. முதலில் கிண்டலடித்த நண்பர்களும் இப்போ அவனை பற்றி தெரிந்து கொள்ள, நல்ல வேலையில் அமர்த்த என் கூட உறுதுணையாய் இருப்பதாக கூறினார்கள்.. அவனை எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டும் எங்கள் அறைக்கு மட்டும் வரமுடியாது என்று சொல்லிவிட்டான்.. அவனை மறுபடியும், விட மனமில்லாமல் அந்த பேருந்து நிறுத்ததில் இறக்கிவிட்டு கிளம்பினோம்.

அடுத்த நாள், எப்பவும் போல அலுவலகம் கிளம்பினேன்.. பேருந்து அந்த நிறுத்தத்தை கடக்கும் போது அவனை தேடினேன்.. எப்போதும் அமரும் இடத்தில் அவனை காணவில்லை.. என்ன ஆனான் என்று குழம்பியவாறே அலுவலகம் சென்றேன்.. திரும்பி வரும் போது, அந்த நிறுத்ததில் இறங்கினேன்.. சுற்றி முற்றி எங்கு தேடியும் அவனை காணவில்லை.. ஒருவித குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.. அதன் பிறகு அந்த இடத்தில் அவனை எப்போதுமே பார்க்கமுடியவில்லை.. அவன் காணாமல் போன நான்கு நாட்களுக்கு பிறகு, என் அலுவலக் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது அவனிடம்.. இப்படி ஒரு நண்பன் கிடைப்பான் என்று தான் நினைத்தே பார்க்கவில்லை என்றும், அன்றைய ஒரு நாள் வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்தும், ஏனோ எனக்கு உங்களுக்கு சிரமமாய் இருக்க தோன்றாததால் எங்கோ கண்காணாத இடத்திற்கு செல்வதாகவும் எழுதி இருந்தான்.. எனது அலுவலக கார்டை அன்று அவனுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.. நாம் தான் அவனது வாழ்க்கையை மாற்றிவிட்டோமோ என்று நினைத்தேன்.. ஏனோ தெரியவில்லை.. என்னை அறியாமல் ஒரு குன்றை தூக்கி இதயத்தில் வைத்தது போல மனம் சுமையாய் இருந்தது.. மெல்ல கண்ணீர் கன்னங்களை உழ ஆரம்பித்தது..

Friday, January 12, 2007

கிராமத்துப் பொங்கல்

இப்போது இந்த நேரம் எனது ஊரில் இருந்திருந்தால், காணும் பொங்கலுக்கு வருடாவருடம் நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு பண்ணிகொண்டிருப்பேன் என் நண்பர்கள் கூட சேர்ந்து.. காலை பத்து மணி முதல் இரவு பதினொரு மணி வரை போட்டிகள் நடக்கும். ஐந்து வயது குழந்தைகள் முதல் எழுபது வயது குமரன் வரை எல்லோருக்கும் போட்டிகள் உண்டு.. இதில் மாலை நான்கு மணிக்கு மேல நடக்கும் போட்டிகள் தான் சுவராஸ்யமானவை. கண்ணை கட்டிக்கொண்டு கயிற்றில் தொங்கும் மஞ்சள் தண்ணீர் நிரம்பிய பானையை உடைத்தல் போட்டி ரொம்ப ரசிக்க வைப்பதாய் இருக்கும். சில பேர், கண்ணை கட்டி விட்ட பிறகு பானையை நோக்கி நடக்காமல் கூட்டத்தை நோக்கி தடியோடு நடப்பதை பார்த்தால் ரொம்ப சிரிப்பாய் இருக்கும்.. நாங்கள் என் சென்னை டைடல் அலுவலகத்தில் இதே மாதிரி போட்டியை, பானைக்கு பதிலாக பலூனை வைத்து விளையாடினோம்.. அதை தொடர்ந்து கபடி போட்டி நடக்கும்.. இது மெல்ல சூரியன் அடிவனத்தில் தஞ்சமடையும் நேரம் நடக்கும்.. வேலைக்கு போய் திரும்பிய மக்கள் எல்லோரும் இதில் பார்க்கும் கூட்டதில் இருப்பதால் கூட்டம் இதற்கு மட்டும் அதிகமாக இருக்கும். கபடி போட்டியை பத்தி ஏற்கனவே கதைத்து விட்டதால் அதற்கு பிறகு வரும் மாறுவேடப் போட்டி பற்றி பார்ப்போம்..

எனக்கு இந்த மாறுவேட போட்டிகள் மிகவும் பிடிக்கும்.. இதற்கு வயது வரம்பு கிடையாது.. எல்லோருடைய திறமைகளையும் காட்ட கிடைக்கும் அற்புதமான களம். அதுவும் கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற போட்டிகள் தான் தங்களை கூராக்கி கொள்ள உதவும். இதில் போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் நிறைய பேர் கலந்துகொள்வார்கள்.. அவர்கள் கண்ணனாக, ராணுவ வீரனாக, கட்டபொம்மனாக வேடமிட்டு செய்யும் குறும்புகள் நம்மை பூமி விட்டு தனி உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.. இந்த மாதிரி போட்டிகளிலும் சில பிரச்சினைகள், வம்புகள் உண்டு.. சில பசங்க சினிமாவில் வரும் ஐயிட்டம் நம்பர் பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஆபாசமாக வேற ஆட முயற்சிப்பார்கள்.. அவர்களையும் முகம் கோணாமல் சமாளிக்க வேண்டும்.. இல்லையெனில் அவ்வளவு தான். அதுவும் இந்த மாதிரி போட்டிகளை காண குறைந்தபட்சம் ஊர் ஜனமே கூடி இருக்கும் அங்கே. அப்பொழுது இது போல முகம் சுழிக்க வைக்கும் செய்கைகளை அனுமதிக்கக்கூடாது..

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. எங்கள் ஊரில் இருக்கும் எல்லா மாடுகளும் கழுவப்படும். கொம்புகள் மெருகூட்டப்பட்டு வண்ண வண்ண பெயிண்டுகள் அடிக்கப்படும். இதிலும் ஒரு கவனிக்கதக்க விஷயம் உண்டு. அந்த மாடுகளும் தங்கள் கொம்புகளில் முதலாளி கட்சியின் கொடி நிறத்தை சுமந்திருக்கும். ஜல்லிக்கட்டு காளைகள் கிட்டதட்ட ஒரு இருபது எங்கள் ஊரில் உண்டு. அந்த மாடுகளின் கொம்புகள் கூராக சீவப்பட்டிருக்கும். எப்படி பள்ளீயில் படிக்கும் போதும் ஒவ்வொரும் பென்சிலையும் ஆசை ஆசையா, கூரா சீவி வச்சிருப்போமோ அது மாதிரி அந்த கொம்புகளை சீவி வைத்திருப்பார்கள். மாடு வைத்திருக்கும் எல்லோர் வீடுகளிலும் பொங்கல் வச்சு சாமி கும்பிட்ட பின்னாடி, கிறித்தவர்கள் சர்சுக்கும் இந்துக்கள் கோவிலுக்கும் மாடுகளை அழைத்துச் செல்வார்கள். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின், அன்றைக்கு சிறிய அளவில் எங்க ஊரில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

எங்க ஊர் மாடுகளும் மற்ற இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு போய் வரும். அப்படி போவதற்கு முன், எங்க ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதாத விதி. ஒரு முறை அப்படி எங்க ஊர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளாமல் வெளியூருக்கு மாடுகளை அழைத்து சென்றதால் அந்த மாடுகளுக்கு ரத்தம் வருமளவு காயங்கள் உண்டாகின.. ஜல்லிக்கட்டு அன்றைக்கு எங்கள் கையில் ஒரு முழு நீள கரும்பு இருக்கும்.. தோகை சீவப்பட்டு, அடி வேருள்ள கணுக்கள் நீக்கப்பட்ட பெரிய கரும்பு இருக்கும்.. ஜல்லிகட்டு முடியும் முன் எப்படியும் இது மாதிரி மூன்று நான்கு கரும்புகளை தின்று தீர்த்திருப்போம். இவ்வளவு பெரிய கரும்பு வைத்திருப்பதிலும் ஒரு காரணம் உண்டு. ஏதாவது மாடுகள் அப்போது பக்கத்தில் வந்தால் இந்த கரும்பு உதவட்டுமே என்று தான்.

இந்த பொங்கல் விழாவை ஆரம்பித்தவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். வருடம் முழுக்க, மண்ணை பிளந்து, ஏரில் ஏறி, விதைகள் விதைத்து, அது முளை விடும் வரை கண் முழித்து, வாய்க்கால் வரப்புகளில் படுத்துக் கிடந்து இந்த உலகம் உய்ய வாழ்பவன் விவசாயி. எனக்கு தெரிந்து எந்த விவசாயியும் நல்ல சட்டை போட்டதில்லை. பணக்காரன் ஆனதில்லை. (பணக்காரன் ஆனதெல்லாம் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து விவசயம் செய்யும் மிட்டா மிராசுதார்கள் மட்டுமே) நான் சின்ன வயசுல் எப்படி பார்த்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறான். வற்றிய குளங்களை போலவே அவன் வயிறு இருக்கிறது.. இன்னும் அதே கூரை வீடுகள் தான் அவன் உறங்க, சமைக்க, அடுத்த தலைமுறையை விதைக்க அவனுக்காய் இருக்கிறது.. ஆனால் எவ்வளவு நடந்தாலும் அவன் விவசாயம் செய்வதை விட்டுவிட வில்லை.

இதில் இயற்கை வேறு அவனை பயமுறுத்துவதுண்டு.. ஒரு வருடம் மழையே இல்லாமல், நிலங்கள் வெடிக்க, அடுத்த வருடம் வரும் மழை அவன் பயிரை எல்லாம் குடித்து போனது.. இவ்வளவு கஷ்டப்பட்டு அவன் செவ்வந்தி தோட்டத்தில் சம்பாரித்தால், வாழை தோட்டத்தில் அந்த பணம் எல்லாமே போயிருக்கும், நேற்று அடுத்த காற்றீளோ, வாய்க்குள் நுழையாத பூச்சியின் காரணமாகவோ.. நெல் பயிரிடும் விவசாயி அதை சாப்பிடுவதே இல்லை. சோளமும் கம்பும் தான் அவன் பசியாற்றுகின்றன.. இப்படி அவன் உழைத்து உருகி போகும் வேலையில், அவன் கூடவே வாழ்ந்து, அவை வாழ வைப்பது இந்த மாடுகள் தான்.. அதற்கும் நன்றிகள் சொல்கிறான்.. சூரியனுக்கும் நன்றி சொல்கிறான்.. கிணற்று தண்ணீருக்கு, அந்த வயல்வெளி தோட்டத்துக்கு என்று எல்லாவற்றுக்கும் அவன் நன்றி சொல்கிறான்..

மாறி மாறி வரும் அரசுகள் அவனுக்காய் என்ன செய்கின்றன.. முறையான உதவிகள், ஆலோசனைகள், அவன் கேள்விகளை தீர்த்து வைக்கும் கருத்தரங்குகள்..ஏதேனும் ஒழுங்காய் நடத்துகிறதா.. நான் இதுவரை, எங்கள் ஊரில் இப்படி நிகழ்ச்சிகள் நடந்ததை விரல் விட்டு எண்ணிவிடுவேன்.. ஆனால் எப்போது அடித்துகொண்டாலும் அவனை பற்றி தான் அடித்துகொள்கிறார்கள். விவசாயியின் காவலனாய் காட்டிகொள்வதிலே குறியாய் இருக்கிறார்கள். இவனது வாழ்க்கையை யாருமே பார்ப்பதில்லை, பொங்கல் அன்று வாழ்த்து செய்தி விடவும், தேர்தலின் பொழுது வாக்குகள் பெற வாக்குறுதி தரவும் பயன்படுத்துகின்றன..

ஒரு பக்கம் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தொழிற்சாலைகள், மற்றும் வெள்ளை காலர் நிறுவனங்கள் எழுகின்றன.. அதை கொண்டு வருவதற்கு செய்யும் முயற்சிகளை, விளம்பரங்களை விவசாயத்திற்கு செய்வதில்லை..

இந்த பொங்கலிலாவது, எல்லோரும் சொல்வது போல, விவசாயிக்கு, தை பிறந்து வழி பிறக்குமா?

நண்பர்கள் அனைவருக்கும்,தமிழகம் மட்டுமல்ல, உலகம் எல்லாம் உழைக்கும் விவசாய மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Wednesday, January 10, 2007

நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும்

ஐந்து காலண்டர்களை மாற்றிவிட்டேன்.. இன்னும் இதயத்தில் இருக்கும் அவளை மாற்ற மனதால் முடியவில்லை. எப்போது முயற்சித்தாலும், சுவற்றில் ஒட்டிய போஸ்டரை கிழிக்கும் போது, சுவரும் சின்னதாக பெயர்வதை போலவே என்னை பாதிக்கிறாள்.. ஆனாலும் என்னை விட்ட பாடில்லை.. சூரியனின் வட்டபாதையை சுற்றியே பழக்கப்பட்ட பூமி பந்து போல, அவளையே சுற்றுகிறது என் காற்றாடி மனம்.. அதிலும் ஒரு அதிசயம். பூமி இங்கே சூரியனை சுற்ற மறந்து நிலவைத் தான் சுற்றுகிறது.. அப்படி சுற்றி சுற்றியே தலை சுற்றி மயக்கப்பட்டாலும், மறுபடியும் கனவாக விரிகிறது அவள் பற்றிய எனது நினைவுகள்..

நீண்ட அந்த நெடுஞ்சாலையிலே, மரங்கள் வரவேற்பு வளையம் போட்டுக் கவிழ்ந்து கிடந்த சோலையிலே, நடந்து நடந்து அந்த தார் ரோடு பழுதடைந்துபோனது.. ஆனால் இத்தனை காலமும் அவளை நினைத்து நினைத்து என் இதயம் என்னவோ மெருகேறியே கிடக்கிறது, தேய்த்து போட்ட தங்கம் போல.. ஒவ்வொரு முறையும் இலை உதிரும் போதெல்லாம் சின்ன சின்ன காயம்பட்ட அவ்வழி மரங்கள், நான் தனியே, அவள் இல்லாமல், அந்த சாலையிலே நடந்து செல்வதை பார்த்து தன் கிளைகளை ஒடித்துக் கொண்டது..

கண்ணாடி முன்னால், தனியாக, அன்று மலர்ந்த மலர்களின் காதுகளில், பூஞ்சோலை கிளிகளின் இசைக்கு பாட்டாய், அவளிடம் பேசுவதற்காக எத்தனை முறை, நான் பயின்றிருப்பேன். எல்லாம் அவள் வந்து இதழால் சிரித்து, செவியோர முடிகற்றைகளை ஒதுக்கியவாறே, வளைந்து என்னருகே அமர்ந்த போது, அந்த பயிற்சி பெற்ற வார்த்தைகள் சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு நடக்க ஆரம்பித்தன. அமர்ந்த பின், மெல்ல வில்லிமை தூக்கி, செவ்விதழ் சுழித்து, புருவத்தால் அவள் செய்த சைகையில் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. என் இதயத்தில் நடந்த அதிர்ச்சியில், ஏதோ பிரளயம் நடந்ததாய் நினைத்துக்கொண்டு மரத்து பறவையெல்லாம் அடித்து பிடித்து அங்கிருந்து பறந்து சென்றன..

அவளருகில் அமர்ந்து மௌனங்களை மட்டுமே நான் பரிமாற, அவள் வார்த்தை விருந்தே வைக்கிறாள் எனக்கு.. இடைவிடாத அந்த பரிமாறல்களின் முடிவில், எழுகையில் எனக்கு இன்னும் பசிக்கிறது, அவளுக்கோ விருந்தே கொண்டது போல் நிம்மதி இருக்கிறது.. இப்படித்தான் இருக்குமோ காதல்.. ஊரே என்னைச் சுற்றி இயங்கி கொண்டிருக்க, நானோ அவளை சுற்றி ஊர்வலம் போகிறேன். அப்படியொரு ஓய்யார பயணத்திலே, ஓரிடத்தில் ஓய்வுக்காய் நான் அமரும் வேளை கவனிக்கிறேன், அவள் என்னில் ஊர்வலம் போன பாத சுவடுகளை..

இன்னும் என் காலக்குறிப்பேடின் காகிதப் பக்கங்களில், அவள் கூந்தல் வாழ்ந்து விழுந்த மலர்களின் வாசமும், அவள் சிந்திவிட்டு போன சிவப்புதட்டின் சின்னத் தடங்களும், நேரான பக்கக்கோடுகளில் வளைந்து வளைந்து அவள் என்னில் விளையாடிய தடங்களுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.. என் நான்கு இதய அறைகளிலும் தாறுமாறாய் கிடக்கிற சின்ன பெரிய புத்தகங்களில் எல்லாம் அவளை பற்றிய குறிப்புகளே அதிகமாய் விளைந்து கிடக்கின்றன.. அதனையெல்லாம் எத்தனை முறை படித்ததோ, சிவந்து போய் கிடக்கிறது என்னிதயம்.

அவள் இதழ் சொல்லித்தான் என் பெயரின் சுவை தெரிந்தது. அவளின் அருகாமை சொல்லித்தான் என்னின் காந்தம் புரிந்தது. அவள் புன்னகை எழுதிய குறிப்பில் தான் என் அருமை எனக்கே புரிந்தது.அவள் தலைசாய்த்து பார்க்கும் பார்வையில் என் மீதான கர்வம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இன்னமும் இருக்கிறது.. அதே அளவு காதல்.. கிரிஷ்ணனுக்கு மட்டுமா அட்சய பாத்திரம் சொந்தம். இதோ என் இதயமும் ஒரு அட்சய பாத்திரம் தான்.. எடுக்க எடுக்க குறையாமல் வருகிறது அவளைப்பற்றிய எல்லா நினைவுகளும்.. அவள் கேர்பின் குத்தியதிலிருந்து கைகுட்டை ஒற்றிய அந்த தருணங்கள் வரை அப்படியே இருக்கிறது என்னுள் மழையில் நனைத்த மரத்தின் பச்சை இலைகளை போல.. என் மூளையில் முளைத்து கிடக்கும் கோடிக்கணக்கான நியுரான்களெல்லாம் அவளின் நினைவுகளை அடைத்து வைத்தே நிம்மதி அடைகின்றன.. அதெல்லாம் பற்றாமல் போய், உடம்பு ரத்தங்கள் ஆக்சிஜனை கடத்த மறந்து இவளின் நினைவுகளை, உச்சிக்கும் உள்ளங்காலுக்கும் தூக்கி கொண்டு ஒடுகின்றன.. வெட்ட வெட்ட முளைக்குமாம் மரம்..அட.. இவளின் நினைவுகள் கூட எனக்குள்ளே வளர்ந்தது அவ்வாறு தான்.

இன்றும் நான் நடந்து செல்கையில் அவள் என்னுடன் நடப்பதாய் நினைக்கிறேன்.. தனிமையில் தனித்துக் கிடந்த காலங்களில் அவள் என் தோளில் கை போட்டு என் தாவாங்கட்டையை, அவளின் குவித்த விரல்களால் பிடித்து கொஞ்சுவதாய் நினைக்கிறேன்.. தலையணை எல்லாம் அவள் மடியாய் எனக்கு உருவகம் ஆகிறது..

என்ன சொல்லி என்ன புண்ணியம்.. இப்படி காற்றில் மட்டுமே கவிதை பாட, வெறுங்கையால் மட்டுமே முழம் போட, எனக்கு பழகிவிட்டது. இதிலும் ஒரு சுகம்.. உணர்ந்த கடவுளை, பார்க்க முடியவில்லை என்பதால் பாடாமல் இருக்க முடியுமா?

Tuesday, January 09, 2007

நானும் சிம்புவும் மாமன் மச்சான் - தனுஷ் சிலிர்ப்பு

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17

அப்பப்போ நாட்டுல சில வயிறு வலிக்க சிரிக்கிற மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்னு சொல்லிகிட்டே பலமா சிரிச்சுகிட்டே வந்தது சிட்டுக்குர்வி.. நல்லா ஆள் சைஸ் ஏறி குண்டாகி வந்திருக்கு.. இருபது நாள் லீவுல வீட்ல உட்கார்ந்து ஒரு கட்டு கட்டியிருக்கும் போல.. போலீஸ்காரன் தொப்பை வேற.. பறக்க முடியாம பறந்து வந்திருக்கு..

என்ன சிட்டுக்குருவி வந்தவுடனே பயங்கர பீடிகை எல்லாம் போடுற.. என்ன நம்ம ஜனதா கட்சி சுப்ரமணியசுவாமி பத்தின நியுஸா.. ன்னு நான் கேக்க டென்ஷனாயிடுச்சு சிட்டுக்குருவி..

ஒரு இருபது நாள் வரலைனா போதுமே.. நான் யாரு.. என்ன சப்ஜெக்ட் பேசுவேன்னு எல்லாம் மறந்துடுமேன்னு ஒரு கோபப்பார்வை விட்டது, சிட்டுக்குருவி..

அட.. அப்படியெல்லாம் இல்ல சிட்டுக்குருவி.. ஆள் வேற இப்படி நல்லா உடம்பேறி வந்திருக்கியா.. அதுனால அரசியலும் பேசுவியோன்னு ஒரு சந்தேகம் அது தான்.. ஆமா.. என்ன இப்படி ஒரு சிலிண்டர் மாதிரி வந்திருக்கன்னு நான் கேள்வி கேட்டது தான் தாமதம்.. என்னை வந்து ரெண்டு கொத்து கொத்திவிட்டுப் போனது..

அடப்பாவி.. கண்ணு வைக்காத.. எல்லாம் என் லவ்வர் சமையலில் வளர்ந்த உடம்பு இதுன்னு டக்குன்னு ஒரு குண்டை தூக்கி போட்டது..

(ஆஹா.. மெல்ல இது அந்தப் பக்கம் போகுதே.. நமக்கு சிக்கலான ஏரியா அது.. கடைசில நமக்கே ஆப்பு வைக்கும்..) சிட்டுக்குருவி வர்றப்போ ஏதோ சொல்லிகிட்டு வந்தியே என்ன அது.. (ஸ்ஸ்..அப்பாடா தப்பியாச்சு.. பேச்சையும் மாத்தியாச்சு)


(மகனே தப்பிக்கிறியா.. உன்னை இரு கடைசில வச்சுக்கிறேன்..) அது ஒண்ணும் இல்ல.. சூப்பர் ஸ்டார் மருமகன் விட்ட டயலாக் தான் இப்போ ஊரெல்லாம் ஒரே பேச்சு.. இப்போ தான் ஒரு கல்யாணத்துல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுகிட்டு போனாங்க.. இப்போ கேட்டா மாமன் மச்சான்னு ஒரு ஸ்டண்ட் வேற.. பங்காளின்னு சொன்னாக்கூட பரவா இல்ல.. (களுக்ன்னு சிரிச்சது சிட்டுக்குருவி) மாமன் மச்சானாம்.. ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா.. சிம்புகிட்ட கேட்டா.. ஆமா நாங்க அப்படித்தான்னு ஒரு ஜால்ரா வேற.. அடப்பாவிகளா.. பொறி பட பாடல் கேசட் வெளியிட வந்தோமா..போனமான்னு இல்லாம இந்தப் பொறி தேவையா இந்த தனுஷுக்கு.. கேட்டா இவர் திருவிளையாடல் ஆரம்பிச்சுட்டாராம். ஒரு படம் ஓடிடக்கூடாதே.. என்று மூச்சு விடாமல் பேசிக்கிட்டே தலையில் அடித்துக்கொண்டது சிட்டுக்குருவி..

அது மட்டுமில்ல.. சூப்பர்ஸ்டார் நடிக்கிற சிவாஜி படத்தின் கேரளா உரிமை மட்டும் 3.10 கோடிக்கு வித்திருக்கிறதா கோலிவுட்ல ஒரே பேச்சு.. ரஜினியின் விசிறியான பாலக்காடு கோவிந்தன் தான் இதை வாங்கியிருப்பதாக பெரிய புரளிப் புயல் ஒண்ணு பயங்கரமா சுத்திகிட்டு இருக்கு.. இது கேரளா சூப்பர்ஸ்டார்கள் மம்மூட்டி, மோஹன்லால் படங்களை விட அதிக விலை என்பதால் எல்லோரும் ஆச்சரியத்துடன் பாக்குறார்கள்.. இந்த ஓப்பந்தத்தில் படம் மே 11 அல்லது ஜூன் 8 வெளியாகும் என்று குறிப்பிடபட்டிருக்கிறதாம். அட.. படம் அப்போ தமிழ் புத்தாண்டுக்கு இல்ல போல என்று பெருமூச்சு விட்டுக்கொண்டது..

சிட்டுக்குருவியின் முன்னால் நான் வைத்திருந்த திராட்சை பழங்கள் சுவைத்து கொண்டே சவுகரியமாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டது.. கார்த்தி.. உனக்கு தெரியுமா.. என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தது சிட்டுக்குருவி.. சிட்டு..இப்படி விஷயத்தை சொல்லாமல் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்று நான் முழிக்க.. அட..இதுக்கெதுக்குப்பா பேய்முழி முழிக்கிற என்று என்னை வம்பிழுத்து அடுத்த சேதியை ஆரம்பித்தது சிட்டுக்குருவி.

இப்போவெல்லாம் இந்த விஷால் அருவாளை கட்டிப்பிடிச்சு தான் தூங்குகிறாராம். அவர் அருவாள் தூக்காம நடிச்ச சிவப்பதிகாரம் ஊத்திகிட்டதால அருவாள் தான் தனக்கு ராசின்னு முடிவு பண்ணிட்டாராம்.. அதுவும் அடுத்து வர்ற ஹரியோட தாமிரபரணியில் அருவாள் இல்லாம சீனே இல்லியாம்.. எப்பா.. இந்த சினிமாக்காரவங்களோட சென்டிமென்டுக்கு அளவே இல்லியேப்பா.. என்று அலுத்துகொண்டது..

இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.. சில படங்கள் வெளியாக.. பொங்கலுக்கு வரும் அஜித்தின் ஆழ்வார் A சர்டிபிகேட்டும், போக்கிரியும் பருத்திவீரனும் UA சர்டிபிகேட்டும் வாங்கியுள்ளன.. அதுவும் ஹரியின் தாமிரபரணியும் இதில் தான் அடங்கும் என்பதால் இந்த பொங்கல் ஒரே கலவரப் பொங்கலாக இருக்கும் என்று கோலிவுட் மக்கள் சொல்கிறாங்க..

எப்படி வேண்டுமனாலும் இருக்கட்டும்..எனக்கு என் ரோஸ் (சிட்டுக்குருவியின் லவ்வர் பேர்) தான் பொங்கல் செய்யப்போறா.. என்று சிட்டுக்குருவி தம்பட்டம் அடித்துக்கொண்டது.. அதோட விட்டிருக்கலாம்.. போற நேரத்துல வந்து என் காதுல.. என்ன பொழப்புய்யா உன் பொழப்பு.. இன்னும் நீயே சமச்சுகிட்டு.. சே.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே.. ன்னு ஒரு அட்டாக்கை வேற போட்டுட்டு போகுது.. அட்டாக் பொறுக்காமல் சிட்டுக்க்க்க்க்க்குருவிவிவிவிவிவிவிவிவி.. என்று கத்தினேன்.. அது அப்படியே ஒரு டைவ் அடிச்சு ராக்கெட் மாதிரி பறந்து விட்டது.

பளபளக்கும் பழைய மஹாபலிபுர சாலை - படங்களுடன்

அய்யோ.. பக்கத்து வீடு பார்வதிக்கு திடீர்னு இடுப்புவலி வந்திடுச்சே.. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்..ஒரு ஆட்டோ புடிங்கப்பா என்று கத்தியவாறே வந்தாள் சரோஜா.. அப்படி அவசர அவசரமாக நாவலூரில் இருந்து ஆட்டோ பிடித்து ராயப்பேட்டை போவதற்குள் ஆட்டோகுள்ளேயே குழந்தை பிறந்து விடும்.. ஒரு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், பழைய மஹாபலிபுரம் சாலையில் மருத்துவமனை சென்ற பல கர்ப்பிணி பெண்களின் நிலைமை இது தான். அதற்கு பிறகு மழைகாலத்து புற்றீசல் போல கணினி நிறுவனங்கள் வந்த பிறகு அதற்கு செல்லும் ஒவ்வொரு நிறுவன பேருந்துகளில் பயணித்தே முதுகெலும்பு வளைந்து போனது எத்தனையே மக்களுக்கு.. ஆனால் அவர்கள் கனவெல்லாம் நனவாக போகிறது. மத்திய கைலாசத்தில் ஏறினால் எவ்வித பிரச்சனையும் இன்றி நாவலூர் போகலாம்..

டைடல் பார்க்கின் புதிய முகப்பு



இனிமேல் அவர்கள் முதுகெலும்பெல்லாம் அப்பாடா..என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளும்.. ஆமாம்.. பளபளக்கும் ரோடுகள்.. இருபுறமும் கண்ணை கவரும் கருதுச் செறிந்த, பார்த்தால் மனதை இறகு போல் லேசாக்கும் வகையிலான விஷயங்கள்.. சிலை உருவாக்கங்கள்.. சுவற்றுசித்திரங்கள் என்று பக்காவா ஒரு நவீன சாலை உருவாகி வருகிறது..

அழகிய பேருந்து நிறுத்தம்




முதலில் இந்த சாலை போட ஆரம்பிக்கும் போது..அட போடவைப்பது போல மாதிரி படங்கள் வைத்திருப்பார்கள்.. ஆச்சரியமாய் இருக்கும்.. இப்படி எல்லாம் இருக்குமா என்று அதிசயப்பட்டதுண்டு.. ஆனால் இன்று அங்குள்ள பேருந்து நிறுத்தங்களை காணுகையில்..எல்லாம் நனவாகும் தூரம் எட்டும் பக்கத்தில் தான் இருக்கிறது. அதிலும் இந்த மாதிரி சிலை மற்றும் கலை வடிவங்கள் எல்லாம், எப்படி இப்படி எல்லாம் என்று கண்களை அகல வைக்கிறது.

சாலையின் பக்கவாட்டுகளில் நடனமாடும் சிலைகள்




வருக.. எங்கள் புதிய கனவுச் சாலையே.. அதிலே பயணிக்கபோறவன் என்ற வகையில் அதனை வரவேற்க கையில் மாலையுடன் முதல் வரிசையில் நிற்கிறேன்.. ஆனால் இவ்வளவு அருமையான சாலையை தந்த பின், அதை ஒழுங்காக பராமரிப்பார்களா என்ற எண்ணம் கொஞ்சம் மனதை அழுத்தவே செய்கிறது.. ரோடு போட அரசாங்கத்தை நாம் எப்படி வற்புறுத்துகிறோமோ அவ்வாறே அதை பரமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் முயல வேண்டும்.. அரசுக்கு உதவ வேண்டும்.. சும்மா சிகரெட் துண்டுகளையும், தின்பண்ட பெட்டி மற்றும் காகிதங்களையும் சாலையிலே விட்டெறிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த சாலையின் ஒரு அடி உங்களுக்கு சொந்தம் என்று நினையுங்கள். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு சென்றால் மட்டும் சலையிலே குப்பை போடாமல் தவிர்க்கும் நீங்கள், சரியான வேகத்தில் வண்டியை ஓட்டும் நீங்கள், இந்தியா போனவுடன் 'பழைய குருடி கதவை திறடி' என்று மாறும் மாற்றத்தை ஒழியுங்கள்..

சாலையோர சுவர் ஓவியங்கள்


நாட்டை காப்போம்.. சாலையை காப்போம்.. எல்லாவித சக்திகளை சரியாக உபயோகிப்போம்.. என்று எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள்.. இல்லையெனில் அடுத்து வரும் எதிர்கால சந்ததியினர், நமது பேரக்குழந்தைகள் தான் அல்லாடுவார்கள்.


படங்கள் அனைத்தும் சென்னையை காதலிக்கும் அவியுக்தா கீர்த்திவாசனின் பொக்கிஷத்திலிருந்து... நன்றி கீர்த்தி

இது அவர் உருவாக்கிய அடையாளம்

Sunday, January 07, 2007

மடை திறந்து பாயும் நதியலை நான் - ரவுசான புதுசு

சில சமயம் காலத்திற்கு ஏற்ப சில பழைய விஷயங்கள் மாற்றப்படும் போது, அதுவும் ரசிக்க வைக்கும் வகையில் பரிமாறப்படும் போது, நமக்கு ஏனோ அந்த புது விஷயங்கள் பிடித்துவிடுகின்றன.இது இட்லியை வைத்து கொண்டு சுடச்சுட இட்லி உப்புமாவாய் தருவதை போல சில சமயங்களில் இருக்கிறது. ரீமேக் பற்றி பல கருத்துகள் இருந்தாலும், சில சமயம் அந்த முரண்பாடான கருத்துக்களை முதுகுக்கு பின்னால் அனுப்பிவிட்டு, இதை எல்லாம் ரசிக்கவே மனம் விரும்புகிறது.

நிழல்கள் படத்தின் மடை திறந்து பாயும் நதியலை நான் பாட்டின் காட்சி



நிழல்கள் படத்தில் பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று வண்ணக் கனவுகளுடன் வாழும் சந்திரசேகருக்கு, ஒரு தயாரிப்பாளருக்கு மெட்டுக்கள் போட்டு காட்டும் வாய்ப்பு தரப்படுகிறது. அப்போது மடை திறந்த வெள்ளம் போல மனதில் பிரவாகமெடுத்து, வருகிறது மடை திறந்து பாயும் நதியலை நான் என்னும் பாடல். அப்போது புழக்கத்தில் இருந்த கருவிகளை வைத்தே அருமையாக தந்திருப்பார் இசைஞானி. உற்சாக பிரவாகம் எடுக்கும், துள்ளல் இசை பாடல். இப்போது கேட்டாலும் நமது இதயம் அந்த இசையினால் துள்ளுவதென்னவோ உண்மை. இளையராஜா அவர்களின் இசைக்கு இது போன்ற பாடல்கள் மிகப் பெரும் எடுத்துக்காட்டு. அதுவும் அந்த பாடலில் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்னும் வரிகளுக்கு இளையராஜாவே முகம் காட்டுவது இன்னும் சிறப்பாய் இருக்கும். இந்த பாடலை கேட்கும் போது, அந்த மடை திறந்த வெள்ளத்தில் நானும் அடித்து செல்வதை போல் உணர்வேன். மேல உள்ள அந்த படத்தின் பாடல் காட்சியை பார்க்கும் போது, நானே அந்த பாடலில் குதிப்பதாய், பறப்பதாய் கனவில் வாழ்கிறேன்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த பாடலை அமெரிக்காவில் வாழும் சில நண்பர்கள் (அவர்களை பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியது) மேற்கத்திய இசை வடிவத்தில் அருமையாக மாற்றி இருந்தனர். மிகவும் ரசிக்க வைத்த அந்த வீடியோ தான் கீழே உள்ளது. இங்கே இருக்கும் மக்கள் போல நடனம், செய்கைகள் கொண்டு அருமையாக எடுத்துள்ளனர். அவர்கள் இதற்காக எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது இதை பார்த்தலே புரியும்.

புது வடிவ பாட்டும் அதன் காட்சியும்




இது போன்ற இளங்கலைஞர்களுக்கு, இன்னும் சிறப்பாய் தனித்துவ இசைகள் தந்து, புது இசை வடிவங்களை தந்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மேல உள்ள பாடல் மலேசியாவைச் சேர்ந்த யோகி.B மற்றும் நட்சத்திரா வெளியிட்ட 'வல்லவன்' என்ற ஆல்பத்தில் உள்ளது - இதை பற்றிய தகவல் தந்த பெத்தராயுடுவிற்கு நன்றி.

Saturday, January 06, 2007

வாஷிங்டன் - ஒரு நகர்வலம் (முதல் பகுதி)

இன்னும் சொட்டுச் சொட்டாய் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெளியில் அல்ல.. என் மனதுக்குள்.. வெளியில் சற்று முன் பெய்த மழை இன்னும் உள்ளே அந்த பாதிப்பை தந்து கொண்டுதான் இருந்தது. காலையில் புது வருஷத்தில் வாஷிங்டன் நகரமே அந்த மழையினால் கழுவப்பட்டிருந்தது.. வானம், ஆரெம்கேவியின் எந்த கலரில் பட்டுவில் ஜோதிகா கேட்பது போல் அருபத்தி ஐந்தாயிரம் வண்ணங்களில், லேசான கறுப்பும், சாம்பல் வண்ணமும் சேர்ந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தது.. எனக்கு இந்த மாதிரி மழைக்கு முன்னோ பின்னோ ஒரு வித இளங்குளிரில் உலகம் இருக்கும் அந்த நேரங்கள் ரொம்ப பிடித்தவை..ரம்மியமானவை.. இந்த மாதிரி பருவ நேரத்தை அவ்வளவு எளிதாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.. ஒவ்வொரு துளியாக மரங்கள் பூமிக்கு அனுப்பும் அந்த பொழுது வைரமுத்து பொன்மாலை பொழுது என்று எழுதிய அந்த பாட்டின் தருணத்தை விட ரசிக்க வைப்பது. ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு, ஊர் சுத்த கிளம்ப ஆரம்பித்த சமயமே வானம் மழை சாரல் மலர்களோடு எங்களை வறவேற்க தயாராய் இருந்தது. முதலில் ஒயிட் ஹவுஸை பார்க்க வேண்டும் என்று கூகிளில் எடுத்த மேப்பை கையில் வைத்துகொண்டு ஆரம்பித்தோம்..


(பிரதிபலிப்பு குளத்தில் தெரியும் வாஷிங்டன் நினைவுச் சின்னம்)

நீண்ட தூர நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவதை விட இது மாதிரி நகரச் சாலைகளில் ஓட்டுவது சற்று சிரமம். ஒரு இடத்தில் திரும்ப மறந்தாலும் அந்த வீதியின் பெயரை கவனிக்காமல் விட்டாலும், மறுபடியும் அந்த இடத்துக்கு வருவதற்கு, நமது கார் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும். வழக்கம் போல எப்படியோ எங்கேயோ வழியை தொலைத்துவிட்டோம். ஆனால் ஹோட்டலில் எடுத்த சிட்டி மேப் கைகொடுத்தது. எப்போதும் இது மாதிரி புதிய நகரத்துக்கு சென்றால் அங்கு ஓட்டலின் வரவேற்பறையில் இருக்கும் எல்லாவிதமாத கையேடுகளையும் எடுத்துக்கொள்ளுதல் இந்த மாதிரி நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.. அதை வைத்து ஓயிட் ஹவுஸ் சென்று சேர்ந்தோம். அங்கே புஷ் நம்மை வறவேற்க தயாராய் காலை மழை போலவே காத்து கிடந்தார் என்று சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை. என்ன என்ன இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அதெல்லாம் நடக்கும் தூரத்திலே இருந்ததால் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கிளம்பினோம்.


(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தெரியும் லிங்கன் நினைவு மண்டபம்)

முதலில் வாஷிங்டன் நினைவுச் சின்னம். தனது முதல் ஜனாதிபதிக்காக அமெரிக்கா எழுப்பிய அழகான, அமெரிக்காவின் பழைய கட்டிட கலைக்கு சான்றாக விண்ணை துளைக்குமாறு வானளாவ நிற்கிறது, இந்த வெள்ளைவண்ண நினைவுச் சின்னம். உள்ளே செல்லும் முன் எல்லாவகையிலான பாதுகாப்பு சோதனைகளுக்கும் நம்மை உட்படுத்துகின்றனர். இது கிட்ட தட்ட 160 மீட்டர் உயரம் கொண்டது. உள்ளே உச்சிவரை செல்லுமாறு லிப்ட் வசதியும் உண்டு. இதன் உச்சியில் இருந்து வாஷிங்டன் நகரத்தின் எல்லா பழம் பெரும் சின்னங்களையும் காணலாம். இந்த உயரிய நினைவு சின்னத்தை வெறும் கற்களை அடுக்கியே கட்டி உள்ளனர். முழுப் பூச்செல்லாம் கிடையாது. ஒரு தொழிற்சாலை புகைகூண்டு வடிவத்தை ஒத்து இது இருக்கிறது. உள்ளே, உச்சியிலே பார்ப்பதற்காக நான்கு திசைகளிலும் பாதுகாப்பான கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன. அதுவும் நாங்கள் போயிருந்த போது அப்போதிருந்த வானிலை காரணம நன்றாக எதனையும் அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. ஆனால் கண்களை உரசியவாறு சென்றது மேக மூட்டங்கள். இந்த உயர்ந்த சின்னத்தின் பக்கவாட்டில் செயற்கை முறையிலும் வெண்புகைகளை உருவாக்குகின்றனர். உள்ளே லிப்ட் மூலம் இறங்கும் போதும் பக்கவாட்டு சுவர்களில் சில நினைவு சின்னங்களையும் சில கற் ஓவியங்களையும் பதித்திருப்பதை நாம் காணலாம். அதுவும் 150 வருஷதுக்கு முன்னலேயே இப்படி ஒரு அற்புத, வாயை பிளந்து வியக்க வைக்கிற சின்னத்தை உருவாக்கிய, பெயர் மறந்து போன அந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில்.. பின்னே பசிபிக் கடல் தூண்.. அதனை சுற்றிய மாநிலத் தூண்கள்)

இந்த நினைவு சின்னத்தின் வடக்கு பக்கம் ஓயிட் ஹவுஸும், கிழக்கு பக்கம் அமெரிக்க பாராளுமன்றமும், தெற்கு பக்கம் ஜெப்பர்சன் நினைவு கட்டிடமும், மேற்கு பக்கம் லிங்கன் நினைவு மண்டபமும் இருக்கிறது. இந்த நான்கு திசைகளையும் உயரத்தில் இருந்து, வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து நீங்கள் பார்க்கலாம். நாங்கள் வழக்கம் போல இந்த சின்னத்தை சுற்றி ஒரு நடை வந்து, எங்களது போட்டோ செஷன்களை முடித்தோம். ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாம் சென்று வந்ததற்கு அடையாளங்கள் இந்த புகைபடங்கள் தானே. அங்கிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நடந்தால் அழகிய நீரூறுக்களுடன் இரண்டாம் உலகப் போருக்கான நினைவிடம் இருக்கிறது. இது வாஷிங்டன் நினைவு சின்னத்திலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலும், லிங்கன் நினைவு மண்டபத்திற்கு இருநூறு அடி முன்னாலும் உள்ளது. இந்த இடத்தை சுற்றி அமெரிக்காவின் எல்லா மாநிலத்துக்கும் தனித் தனியான தூண்கள் ஒரு அரை வட்ட வடிவத்தில் எழுப்பப்பட்டுள்ளது. எல்லா தூண்களிலும் அந்த மாநீலத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தூண்களையும் முறுக்கேறிய மாதிரி கற்கயிறுகளாலேயே இணைத்தும் உள்ளனர். இந்த அரை வட்டத்தின் கிழக்கு முடிவில் பசிபிக் என ஒரு பெரிய தூணும் கிழக்கில் அட்லாண்டிக் என்னும் தூணும் கட்டப்பட்டு ஒரு முழுமையான அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நீரூறிலும் நீர் கீழிலிருந்து மேல் சென்று மறுபடியும் கீழ் விழுவதை காணுகையில், இரண்டாம் உலகப் போரில் போரிட்ட ஒவ்வொரு போர் வீரனின் வேகத்தையும், அவனது துடிப்பையும் அவனது எழுச்சியையும் பறைசாற்றுவதாகவே உள்ளது.

(அந்த அழகான நடைபாதையில்)

இரண்டாம் உலகப்போரின் நினைவிடத்தை கடந்து, லிங்கன் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஒரு நீளமான பாதை ஒன்று வளைந்து வளர்ந்த மரங்களால் சூழப்பட்டு, இரு பக்கமும் உயர வெள்ளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த மரங்கள் இலைகளை பூமிக்கு அனுப்பிவிட்டு குளிர்காலத்துக்காக மொட்டை அடித்துவிட்டு வேண்டுதலுடன் நிற்பது போல் இருந்தாலும், நாங்கள் சென்றிருந்த அந்த நேரத்தில் அழகாய் தெரிந்தது. அந்த நடைபாதையில் நடந்து போகையில் அப்ப கைபிடித்து குழந்தை வயதில் நடந்த அந்த காலத்தை நினைவூட்டியது எனக்கு.

(இரண்டாம் உலகப் போர் நினைவிடத்திலிருந்து தண்ணீரில் லிங்கன் மண்டபம் மிதப்பது போல் எடுத்த ஒரு புகைப்படம்)

இந்த நினைவிடத்தில் இருந்து, வளர்ந்து விரிந்த மரங்களிடையே அமைந்த நடைபாதையில் நடந்தால் லிங்கன் நினைவிடத்தை அடையலாம். இந்த இரண்டு நினைவிடத்தையும் இணைப்பது ஒரு பெரிய செவ்வகக் குளம். லிங்கன் நினைவிடம், இந்த குளம், வாஷிங்டன் நினைவுச் சின்னம் மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை பிரதிபலிப்பு குளம் அதாவது ரிப்லெக்டிங் பூல் என்று பெயரிட்டுள்ளார்கள். போசாக்கான யானையின் கால்களை விட கிட்டதட்ட பதினைந்து மடந்கு பெரிதான பத்திற்கும் மேற்பட்ட தூண்களால் கட்டபட்டுள்ள இந்த லிங்கன் நினைவு மண்டபத்திலிருந்து பார்த்தால் வாஷிங்டன் நினைவுச் சின்னம் இந்த குளத்தில் படுத்துகிடப்பது போல் பிரதிபலிக்கும். லிங்கன் நினைவு மண்டபத்தில் அவர் அமர்ந்த நிலையில் உள்ள சிலையும் அவரது மற்றும் அவரை பற்றிய வாசகங்களும் உட்கட்டிட சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடமும் அமெரிக்க கட்டிட கலையை இறுமாப்பு கொண்ட கர்வம் கொண்ட ஒரு துறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

படங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டுங்கள்

(தொடரும்)

Thursday, January 04, 2007

ஆபீசுல இல்லாத ஆளை கண்டுபிடிக்க எளிய வழி

இப்படி எல்லாம் எதிர்காலத்துல நடக்குமோ.. பாவம் வர்ற சந்ததிகள்.. ஆனா இதுலையும் நம்ம நாட்டாமை மாதிரி டகால்டி காமிக்கிற ஆட்கள் இருக்கத்தான் செய்வாங்க

Tuesday, January 02, 2007

சூடமாய் கரையும் நினைவுகள்

எழுதாத பேப்பரை கையில் வைத்து கொண்டு என்ன எழுதலாம், எப்படி எழுதலாம், எப்படி எழுதினால் சுவையா இருக்கும் என்று பலவாறான யோசனைகள். இப்படி எத்தனை கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்பதில் மட்டும் ஒரு சின்ன எல்லையை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். அத்தனை பக்கங்களில் அவனே முதலில் எழுதுகிறான். நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான். உலகில் அத்தனை பேருக்குமாய் அவன் எழுதுகிறான். நாம் நமக்கே எழுத சிரமப்படுகிறோம். இப்படித்தான் வருடத்தின் முதல் நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்படுகின்றன.

நடந்தது எல்லாம் இப்போது நினைக்கையில் மங்கலான கனவுகளாய் தெரிகிறது. நடக்கபோவது எல்லாம் இழுக்க இழுக்க நீளும் ரப்பராய் நீண்ட கனவுகளாய் இருக்கிறது. முன்னாலும் பின்னாலும் கனவுகளை சுமக்கும் மனிதன்,வாழ்க்கை எல்லாம் கனவுகளை போலவே போகிறது, முன்னால் நகரும் போது பின்னால் ஓடி கரைகின்ற புகைவண்டி புகைகளாய்.

ஓசோன் மண்டலம் ஒரு பக்கம் கிழிந்து போய் மழைக்காலங்களில் வெய்யிலையும் வெய்யில் காலங்களில் குளிரையும் மாற்றித் தந்து தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. ஒரு பக்கம் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் காடுகள் கான்கிரீட் சுவர்களாகிறது. இப்படியே காடுகள் இடிக்கப்பட்டால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் இந்த கான்கிரீட் கட்டடங்களை கண்டு மழைபெய்யுமா இந்த வானம்? ஓசோ சொன்னதை போல இயற்கையை நாம் மதித்தால் அது நம்மை அரவணைக்கும். முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள். இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.

புதியதாய் பிறக்கும் ஒரு வருடம் நமக்கு ஒரு வயதை மட்டுமா தருகிறது. புதிதாய் போடப்பட்ட ஒரு சாலையிலே போகின்ற வண்டிகள் தரும் தடங்களை போல எத்தனை எத்தனை படிப்புகளை சொல்லித் தருகிறது. அடுத்தவரின் தவறுகளை இங்கே பட்டியலிட்டுகொண்டே தனதை பூஜை அறையின் அடியிலே சமாதியாக்குகின்றனர். பதவிகளை ஏற்கும் போதும் கொள்ளப்படும் பிரமாணங்களை போல வாழும் ஒவ்வொருவரும் ஒன்றை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். அது புதிய ஒன்றை கண்டுபிடிக்க இல்லையென்றாலும் பழையதை அழிக்காமல் இருத்தல் பெரியது.

யாருமே இல்லாத ஒரு நாளிலே உக்கார்ந்து யோசித்தால் இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள் தூளியில் ஆடுது. சில சமயம் நமக்கு முன்னால் நடக்கும் சில விதி மீறல்கள், படி தாண்டல்கள் நமக்கு இதயத்தின் அதிகபட்ச துடிப்புகள் கணக்கிட உதவுகிறது. அன்னியன் விக்ரமாய் தலைவிரித்து கற்பனையில் குதிரையோடு பறக்கிறது.

நமக்கு நாமே கோடுகளை இட்டு, உற்றோர் உறவினர் என்று இல்லாமல் எல்லோரும், உலகில் வாழும் ஒற்றை ஜாதி மலரிலிருந்து அதை பிறக்க வைக்கும் சூரிய பிரபு வரை சுகத்தோடு இருக்க, ஆசை கோபம் களவு தெரிந்தவன் பேசத் தெரிந்த மிருகம் என்று ஆண்டவனின் ஆறு கட்டளையின் ஒன்றாய் இல்லாமல், பல வண்ண அரிதரங்கள் பூசி நாலு பேரை அழ வைப்பதை போல, க்ளுகென முகிழ்க்கும் உதட்டு மலரின் புன்னகை கொண்டு நெஞ்சமெலாம் வாழ்த்தி, புறாக்களில் மட்டுமல்ல இதயங்களிலும் அமைதியை, இமயம் தொட்டு விடும் ஆகாச எண்ணங்களுக்கு இந்த வருடத்தில் புது வண்ணம் பூசுவோம்.

போகும் வழியெல்லாம் காற்று உங்களுக்கு வாசனை தந்து தடையென நிற்பவை எல்லாம் தடமில்லாமல் போகிட, போகியில் தீயிட, பரமபத ஏணிகளில் ஏறி, பாம்புகளில் தப்பித்து, வாழ்க்கை தாயத்தில் வாகை மலரது சூடி, எனக்கு அறுபது அடுத்தோற்கு நாப்பது என எல்லாம் ஒதுக்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மனத்தில் எழுச்சி எண்ணி என்றும் சிறப்பாய் வாழ இந்த ஆண்டு வேண்டும் என வேண்டியது எல்லாம் கிடைத்து உங்களை வாழ வைக்க வேண்டுகிறேன்