ஏதேச்சையாகத் தான் அமைந்தது. இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று வேப்பமரத்தின் கீழே கட்டிலில் படுத்து மேலிருக்கும் இலைகளை எண்ணிக்கொண்டிருந்த அந்த பொழுதும் சரி, வீட்டில் விட்டத்தை பார்த்து பெயர்ந்த சுவர்களை கவனித்து கொண்டிருந்த அந்த மீசை முளைத்த காலத்திலும் சரி நினைத்ததில்லை நான். அது கல்லூரியில் இருந்து போன சுற்றுலா தான். ஆனால் அது ஏதோ தனியாக நானும் அவளும் நடத்திய ஊர்வலமாகத்தான் எனக்கு நெஞ்சில் பதிந்து போனது.
முதல் நாள் கிளம்பும்போதே, அவள் சொன்னாள்.. மற்றவர்களுக்காக, மற்றவர்கள் நம்மளைப் பற்றி கதைப்பார்கள் என்பதற்காக உன் கூட நான் இதுவரை, நான் நினைத்த வண்ணம் பழகியதில்லை. எல்லா உணர்ச்சிகளையும் இலை மறைத்த காயை போலவே மனதுள் அடக்கி இருந்தேன். ஆனால் பழுத்த பின், பறவைகளுக்கு தெரியாமலா போய் விடும். இதோ இன்னும் முப்பது நாட்கள் தான் இந்த கல்லூரி வாழ்க்கை. அதற்கடுத்து, நாம் இருவரும் பேசிக்கொள்வது கூட, கடவுள் பக்தன் உறவு மாதிரி தான். உன் அருகே இருக்க நினைத்த இந்த இரண்டு வருடங்களும் தூரமாய் இருந்தேன்.. ஆனால் எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமலா போய் விடும், உனது சில்லென்ற பார்வை போல.. அந்த சில்லான பார்வை தான் எனது இதயத்தை உருக்கி, ஒரு வேதியியல் அதிசயத்தை நடத்தியே விட்டது.
இந்த சுற்றுலாவில் மட்டுமாவது உன் அருகிலே நான் அமர்ந்து இந்த உலகத்தை ரசிக்கிறேன். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்து இளகிய சுவர்களை இறுக்கமாக்கி, அவசரமாய் பதிப்பித்துகொண்டது.. இன்று அதனை படிப்பதற்காக நான் அன்று அச்சிட்டுக் கொண்ட புத்தகப் பக்கங்கள் அவை.
மனசுக்குள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், நடக்காத சில விஷயங்களுக்காக அந்த ஆசைகளை எரித்துக்கொண்டோம், எங்களுக்குள் சொல்லாத காதல் முளைவிட்ட போது. இப்போது பிரிகின்ற வேளையில், வேருக்கு வேறிடம் போவது பிடிக்காமல் அந்த மண்ணோடு சில பொழுது மயங்கிகிடக்க விரும்புகிறது..
சுற்றுலாவும் இனிதே தொடங்கியது.. போகும் வழியில் ஆட்டமும் பாட்டமும், கூத்தும் கும்மாளமும் நிகழ்ந்தது. அவள் அவள் தோழியுடனும், நான் எனது நண்பர்களுடனும், எனது நண்பர்கள் அவள் தோழியுடனும் என்று ஒரு தனியுலக இளமைகொண்டாட்டங்களே அங்கு நடந்தது.. அவ்வளவு கும்மாளம் அங்கே கூத்தடித்தாலும், நானும் அவளும் மட்டும் தனித்தே கிடந்தோம். தரையில் பட்ட பாதரசம் அதன் மீது ஓட்டாதவாறு.. தாமரை இலையில் பட்ட நீர்த்துளி அதில் பட்டு நழுவுமாறு.. அவ்வப்போது அவள் என்னை பார்வையால் மென்றாள். அந்த பார்வையில் நான் மெழுகாய் உருகிப்போனேன்.
போகும் வழியில், சாப்பிட உட்கார்ந்த போது கூட, எதிர் எதிரே தான்.. அவள் ஒரு மெல்ல, மல்லிகைப்பூ இட்லி என்று சொல்வதாலோ என்னவோ, மல்லிகை பறிப்பது போல, அதை பறித்தெடுத்து, குவித்த விரல்களில் பிடித்து, இதழ் படாமல் சுவைத்தாள்.. அதை பார்த்ததாலே ஒரு தட்டு இட்லிக்கு எக்ஸ்ட்ராவாக பில்லைக் கட்டினேன்..
அவள் சொன்ன திட்டம் விதி என்னும் ஆளுக்கு கேட்டதோ என்னவோ.. அவன் வந்து பசைபோட்டு அவளருகில் அமர்ந்திருந்தான். அவளுக்கோ சுற்றியுள்ளோரை கண்டு பயம். முருங்கை மரம் ஏறி எத்தனையோ முறை வேதாளத்தை நான் பிடித்து வந்தாலும், அது மறுபடியும் மரமேறி, தலைகீழாய் ஊஞ்சலாடி, என்னை பார்த்து இளித்தது. அவள் மனதுக்குள் ஒரு தராசில் காதல் உணர்வும் மற்றொன்றில் சமுதாய பயம், பெற்றோர் பாசம், போன்றவை மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டிருந்தன.
எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கூட நாங்களிருவரும் இரண்டு ஓரத்திலும் தான்.. நான் அவளது தோழிகளுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துகொண்டேன்..அவள் என் நண்பர்களுடன் எடுத்துகொண்டாள்.. இருவரும் சேர்ந்து ஒன்று கூட இல்லை. அவள் என்னை எடுத்தாள்.. நான் அவளை எடுத்தேன்.. இப்படியே போனது அந்த பகலெல்லாம்..
சுற்றுலா சுற்றுலா என்று எல்லா இடமும் சுற்றியே வந்தோம். ஆனால் அவள் சொன்னது போல் அவளருகில் நானோ என்னருகில் அவளோ அமரவில்லை. எங்களுக்கு பதில் விதி இருவருக்கிடையில் கால் நீட்டி படுத்துக்கொண்டிருந்தது. அப்புறம் எங்கே மன்மதன் வந்து பாணமெய்வது.. ரதி வந்து நாணம் கொள்வது. திரும்பப் போகும் வழியில், சூரியன் அமெரிக்காவுக்கு வெளிச்சம் தர போயிருந்த வேளை, எங்கள் வாகனம் புறப்பட்ட இடத்தை நோக்கி பின்னால் புகைவிட்டு போய் கொண்டிருந்தது. மெல்ல என்னை சைகையால் அழைத்தாள் அவள். நானும் என் இருக்கை விட்டு, மெல்ல எழுந்தேன், அவள் அருகில் அமர..
(நான் அமர்ந்தேனா, படுத்து கிடந்த விதியை தள்ளிவிட்டு.. நாளை தொடரும்)