Showing posts with label அ.வெள்ளோடு. Show all posts
Showing posts with label அ.வெள்ளோடு. Show all posts

Wednesday, October 24, 2007

மிலிட்டரி மாமா

இராணுவம் என்றால் மனசுக்குள் ஒரு தேசப்பற்றையும் அவர்களின் தியாக உணர்வையும் வீரத்தையும் என் சின்ன வயசில் என் மனசில் விதைத்தது, என் அப்பாவின் பள்ளி கால நண்பரும், சொந்த முறைகளில் மாமாவுமான சின்னையா மாமா தான். சத்யராஜ் உயரம்.. நல்ல ஆஜாகுபாவான உடம்பு.. ஆனால் மனசு இவருக்கு நிஜமாகவே குழந்தை தான்.. என் மீதும் என் தங்கையின் மீதும் அவ்வளவு பாசமாக இருப்பார்.. தனது பெரிய குடும்பத்தை (மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்) விட்டு எப்படி காஸ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மொத்தமாக இருபது வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். எங்கள் ஊரில் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் எல்லோரும் அவரை பாசமுடனும் மரியாதையுடனும் கேப்டன் சின்னையா என்று தான் அழைப்பார்கள்.

அவர் ஒரு இரண்டு வருட காலங்கள் பெங்களூர் இராணுவ முகாமில் இருந்த போது (அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக்கொந்டிருந்திருக்கலாம்) அரையாண்டு தேர்வு கால விடுமுறைகளில் ஒரு வார காலம் அவருடன் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை படங்களின் மூலமே இராணுவ முகாம்கள் பார்த்து வந்த எனக்கு அந்த பயணம் மிகவும் ஆச்சர்யத்தையும் அவர்கள் மீதான ஒரு மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களூர் குளிரிலும் அவர்கள் அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் பயிற்சி எனக்கும் அவ்வளவு காலையிலே எழுந்து உடல் பயிற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசைய அப்போதே உருவாக்கியது.. அவர்களுக்கு தினமும் ஒவ்வொரு மாநில மொழி திரைப்படங்கள், தனியாக வரிகள் இல்லாத கேண்டீன் (என் மாமா வாயிலாக சில பொருட்கள் வரிகள் இல்லாமல் எங்கள் வீட்டிற்குள் வந்ததும் உண்மை) எப்படி எத்தனையோ சலுகைகள் உண்டு.. உள்ளேயே, இராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்க பள்ளிகளும் இருந்தன. அந்த ஒரு வாரம் எனக்குள் அப்படியோரு மாற்றத்தை தந்தது.. (ஆனால், அந்த வளாகத்தை விட்டு வெளியே இருக்கும் உலகம் இது எதை பற்றியுமே, கார்கில் மாதிரி போர்க்காலங்களைத் தவிர, கண்டுகொள்ளாமல் இருப்பதென்னவோ உண்மை தான்)

நான் சென்னைக்கு வேலைக்கு வரும் சமயத்தில், என் மாமா இராணுவத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று, ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். தினமும் ஊரில் கூட காலையில் எழுந்து ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் ஊரில் இருக்கும் பொழுதுகளில் அவர் கூட சேர்ந்து ஓடியிருக்கிறேன்.. நான் வேலைக்கு சென்ற புதிதில், அவர் பயன்படுத்திய டை எல்லாம் எனக்கு கொடுத்து உதவினார். எப்போது டை கட்டினாலும் அவர் நினைப்பு எனக்கு வராமல் இருந்ததில்லை.. ஊர் கோயிலில் சாமிக்கு திருவிழா எடுக்கும் போது இரண்டு குழுவிற்கு இடையில் பிரச்சனை வந்தபோது இவரும் ஒரு ஆளாக இருந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் திருவிழாவை நடத்தி தந்தார் இரண்டு வருடமாக. திண்டுக்கலில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து தன் மகன்களுடன் நிர்வகித்து வந்தார்..

இங்கே வந்த பிறகு ஒரு முறை அவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.. இரண்டு வாரங்களுக்கு முன்னால், எப்போதும் என் வீட்டிற்கு தொலைபேசினேன்.. அப்போது அவர்கள் சொன்ன செய்தி, ஒரு டன் விறகுகளுக்கு இடையில் சிக்கியதாய் என் இதயம் வலித்தது. குடும்ப பிரச்சனை காரணமாக (இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) திண்டுக்கலிலிருந்து வீட்டிறு தனது இரண்டாவது மகனுடன் வந்த போது, வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த பிரச்சனை நடந்த போது அந்த வழியாக வந்த எங்கள் ஊர் பஸ்ஸிலிருந்தவர்களால் கூட இவர் காப்பாற்ற முடியவில்லை.. இரண்டு மூன்று நாட்களுக்கு நினைப்பெல்லாம் அவராகவே இருந்தது.. என்னடா வாழ்க்கை என்று கூட பல சமயங்களில் என்னை சலிக்க செய்தது.. ஒரு இரணுவ வீரராக அவர் இருந்த காலத்திலே இறந்திருந்தாலோ, இயற்கையாக இறந்திருந்தாலோ இந்த பாதிப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.. கனத்து போயிருந்த இதயத்தை அவர் ஞாபகமாக தந்து விட்டு போன டைகளை தடவி பார்த்து ஆற்றிக்கொண்டேன்..

Monday, May 07, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 4

மூன்றாம் பகுதி

சின்ன வயசுல நான் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது வழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. எல்லோரும் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது விளையாண்டது கண்ணாமூச்சி விளையாட்டாத்தான் இருக்கும். இதுலயே நான் இன்னும் கொஞ்சம் வித்தியாசமா விளையாடி இருக்கேன். அதுக்கு பேரு பணியார கண்ணாமூச்சி.

ரெண்டு அணியா இருந்தா தான் இது நல்லா இருக்கும். ஒரு அணி ஒரு இடத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் காத்திருக்கணும். இன்னொரு அணி எல்லாப் பக்கமும் போய் பணியாரம் மாதிரி சின்ன சின்ன தாய் மணலை குவிச்சு வச்சுட்டு வருவாங்க. இந்த விளையாட்டுக்கு எல்லையெல்லாம் உண்டு. இந்த தெருக்கள் தான் அப்படின்னு ஒரு வரமுறை வச்சு தான் விளையாடுவாங்க. அப்படி பணியாரம் சுடப் போன அணி வந்து சொன்ன பிறகு, கத்திருந்த அணி அந்த பணியாரத்தை கண்டுபிடிக்கப் போவாங்க. எத்தனை பணியாரத்தை அவங்க கண்டுபிடிக்கிறாங்க அப்படிங்கிறதுல தான் பாயின்டே.

இது இல்லாம பச்சக் குதிரை. இந்த விளையாட்டு ஒரு தடவை விளையாண்டு அப்படியே என் நெஞ்சு தரைல பட நான் விழுந்து.செத்தடா நீன்னு அலறியதெல்லாம் உண்டு. ஒவ்வொரு தடவையும் தாண்டுற உயரம் கூடறப்ப எல்லாம் நம்ம மனசு சேர்ந்து பயத்துல குதிக்கும்.

கோலிகுண்டு எல்லோரும் விளையாடுறது. பெரியவங்க காசு வச்சு பந்தயம் கட்டி விளையாண்டா சின்ன பசங்க எல்லாம் சினிமா பிலிம்க்காகவும், குத்துப் படத்துக்காகவும் விளையாடுவோம். குத்துப்படம் விளையாட்டே தனி தான். தீப்பெட்டி மேல ஒட்டுற அந்த வண்ண பேப்பர், சீட்டு தான் மூலதனம். அதுமாதிரி நிறைய கம்பெனி பேப்பர் விப்பாங்க. அதை எல்லாம் நாம கைல வச்சுக்கனும். எதிராளியும் வச்சு இருப்பான். ஒவ்வொரு படமா எடுத்து வைப்பான். இப்படி எடுத்து வச்சு விளையாடுறப்போ, நாம எடுத்து வைக்கிற படத்தையே எதிராளியும் வச்சா, அதுக்கு கீழ இருக்க எல்லாப் படமும் அவனுக்குத் தான் சொந்தமே. ஆயிரம் சீட்டு இருந்தாலும் சில நேரம் போண்டியா ஆனதெல்லாம் உண்டு.

எல்லோருக்கும் தெரிஞ்ச விளையாட்டு கிட்டி தான்.அதாங்க கில்லி. எங்க ஊர் பக்கம் அதை கிட்டின்னு தான் சொல்வாங்க. அந்த கில்லியை வச்சு அடிக்கிறதுக்குன்னே பல ஸ்டைலே இருக்கும். சில பேர் பின்னால திரும்பி குழில இருந்து தள்ளுவாங்க. சில பேர் சோடா குத்துன்னு, அந்த நீள குச்சியின் முனையை பூமில அழுத்தி நடுல ஓங்கி அடிப்பாங்கா. ஆனா இதுல ஆபத்து நிறைய இருக்கு. இன்னும் தழும்பு இருக்கு ரொம்ப பேருக்கு இது விளையாடினதுல.

பம்பரம் விளையாடாதவங்களே இருக்க முடியாது. பம்பரத்தை கைல வச்சு, சாட்டை சுத்தனும். அதை சுத்தி பம்பரத்தை கீழ சுத்த விட்டு, மறுபடியும் சாட்டையால எடுக்கனும். அப்படி எடுக்காதவங்க பம்பரத்தை ஒரு சின்ன வட்டம் போட்டு நடுல வைப்பாங்க. அந்த பம்பரத்தை, ஆக்கர் குத்தி, அதாங்க ஆணியை வச்சு குத்தி உடைக்கனும். இது தாங்க பந்தயம்.இப்படி எத்தனையோ பேரோட பம்பரம் ரெண்டா எல்லாம் உடஞ்சிருக்கு.

இதெல்லாம் விட ஒரு குரூப் சின்ன பசங்க இருக்காங்க. இந்த பில்லி சூனியம் எங்க ஊர்ல செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க அந்த சூனியத்தை எலுமிச்சம் பழம், மைதா மாவுல உருவம், வெத்தல பாக்கு வச்சு பூஜை பண்ணிட்டு சில சில்லறை காசெல்லாம் வச்சு முச்சந்தில போட்டுட்டு போயிடுவாங்க. இந்த பசங்க என்ன பண்ணுவாங்கன்ன, அந்த பொருட்களை சுத்தி வட்டமா நின்னு ஒரு பெரிய வட்டமா சிறுநீர் கழிச்சுட்டு அந்த காசை எடுத்துட்டு போயிடுவாங்க. ஆனா அவங்களை அந்த சூனியம் ஒண்ணும் பண்ணாது. சில பேர் அதை வெறும் காலால தாண்டி பட்ட அவஸ்தையை நேர்லயே பாத்திருக்கேன். எங்க ஊர்ல சவரம் பண்றவர் காலைல காபி குடிக்க வெறும் காலால நடந்து வந்து அதை மிதிச்சுட்டார். ஒரு நாலு மணி நேரத்துல அவரோட காலு பலூன் மாதிரி வீங்கி போய் தண்ணி தண்ணியா கொட்டுது. அந்த அளவுக்கு அதுக்கு வீரியம் உண்டு. ஆனா நான் பாத்த வகைல இந்த பசங்களொட சிறுநீர் அதை எல்லாம் முறிக்ககூடியாதாகவே இருந்திருக்கு.

எங்க ஊர்ல இந்த மாதிரி செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. இதை சாமி பாக்குறதுன்னு சொல்வாங்க. நிறைய பேர் வெளியூர்ல இருந்து எல்லாம் வந்து பாத்துட்டு போவாங்க. இதை வைத்து லட்சம் லட்சமா சம்பாரிச்சவங்க இருக்காங்க என் ஊர்ல. அவங்க கிட்ட நீங்க உங்களோட எதிர்காலத்தை பத்தியோ, உங்க கஷ்டத்தை போக்கவோ போகணும்னா வெத்தலை பாக்கு, எழுமிச்சை பழம், திருநீரு, பத்தி சூடம் வாங்கிட்டுப் போனா போதும். அவர் நீங்க கேட்டத நடத்திக்கொடுப்பார். இப்படி பல பேருக்கும் பண்ணி பிரசித்தி அடஞ்சவங்க நிறைய சம்பாரிக்கவும் செய்றாங்க.

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Monday, April 30, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 3

இரண்டாம் பகுதி

ஒரு நாள் இரவு, பனிரெண்டு மணி போல எப்போதும் அடிக்கபடும் சர்ச் கோவில் மணியோசை கேட்டது.. ஊரே கண்ணை முழிச்சுகிட்டது.. திருடர்களை பிடிச்சதாகவும், அவங்க நாலஞ்சு பேருன்னும் தெரிஞ்சவுடன் எல்லா வீட்டுல இருந்த உலக்கை, அருவாள் எல்லாம் அந்த வீட்டு ஆண்களோட கைக்கு மாறியது.. அதுக்குள்ள யாரோ போலீசுக்கும் போன் போட்டாங்க.. போலீஸ் வர்றதுக்குள்ள, ஊரே சேர்ந்து அடிச்சதுல, அந்த அஞ்சு பேரும் கிழிஞ்ச துணிமாதிரி ஆகியிருந்தாங்க..போலீஸ் வந்து ஊரை சமாதனப் படுத்தி அந்த அஞ்சு பேரையும் கூட்டிகிட்டு போனாங்க..

போலீஸுக்கு எங்க ஊர்ல இருக்க பாதி பேரோட பேர் தெரியும்.. நிறைய பேர் போலீஸ் தோளுல கை போட்டு பேசுற அளவுக்கு பரிச்சயமானவங்க.. சில பேர் போலீஸ் கிட்ட நண்பர்கள் மாதிரி கூட பழகுவாங்க.. எனக்கெல்லாம் போலீஸ்னா எப்போதுமே ஒரு அலர்ஜி உண்டு.. எங்க ஊரை நம்பி எங்க ஊர் காரவங்க மாட்டும் அல்ல, நிறைய போலீஸ் குடும்பங்கள் அப்போது பிழைத்து கொண்டிருந்தன.. ஆனால் ஒரு சில பேர் பிழைக்க நிறைய குடும்பங்கள் அழிந்ததென்னவோ உண்மை தான்.. சில போலீஸ்காரர்கள் இந்த சாராய வியாபாரிகளுக்கு கூழைகும்பிடு போட்டு பணம் வாங்கி சென்றதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் இரவு ஆறு மணி ஆகிவிட்டால் எங்கள் தெருவே சத்தமும் சண்டையும் கலாட்டாவுமாகத் தான் இருக்கும்.. வேலைக்கு போய்விட்டு வந்து ஒவ்வொருவராக அப்போது தான் சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் பண்ணுவார்கள்.. ஒருவர் வயது கிட்டதட்ட அறுபதை ஒட்டி இருக்கும்..இவர் கிறித்துவர்..தண்ணியை போட்டுவிட்டு வந்தால், எங்கள் ஊர் பெரிய சிலுவைதிண்ணை (இது சர்ச் கிடையாது. ஊரில் இது போன்று சிலுவை திண்ணைகள் நிறைய உண்டு. பத்து வருடங்களுக்கு முன்னால், இங்கே மதிய நேரத்தில் அரட்டை அடிப்பதும் படுத்துக் கிடப்பதுமாய் நிறைய பேர் இருப்பார்கள். ஒரு சிலுவை வைக்கப்பட்டு திணை கட்டப்பட்டிருக்கும். சர்ச் பூட்டி இருக்கும் நேரங்களில் இங்கே தான் எல்லோரும் சாமி கும்பிடுவார்கள்) முன் மண்டியிட்டு பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்.. பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவேன்னு இவர் ஆரம்பித்தால் கிட்டதட்ட இவரது பிரசங்கம் ஒரு மணி நேரதுக்கும் மேலாக இருக்கும்.. மற்ற நாட்களில் இவர் அவ்வளவு சாது.. அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டு போவார்கள்.. இதெல்லாம் எங்கள் ஊர் மனிதர்களுக்கு மிகவும் சகஜம்..

இன்னொருவர்.. இவர் வீடு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் தோட்டத்தில் இருப்பதால் வாரம் ஒரு முறை தான் வருவார்.. கிட்டதட்ட நானூறு அடி தூரம் இருக்கும் எங்கள் வீதியில் வடக்கும் தெற்குமாக கிட்டதட்ட ஒரு முப்பது தடவைக்கு மேல நடப்பார்.. இவர் இந்து என்பதால்..இவருடைய பூஜையும் உண்டு.. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாப்பதிரண்டு ரிஷிமார்களுக்கும் என்ன சொல்லிக்கிறேனா..அப்படின்னு ஆரம்பிச்சார்னா அவர் தோட்டத்துல பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கிறதுல இருந்து காலைல சாப்பிட்ட கஞ்சி வரைக்கும் ஒண்ணு விடாம சொல்லிடுவர்.. ஆனா எவ்வளவு நேரம் பேசினாலும் இவங்க வாயில இருந்து ஒரு கெட்ட வார்த்தை கூட வராது.. இன்னும் சில பேர் இருக்காங்க.. வாயத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள் தான்.. இவங்க பேசுறதை கேட்டாலே காது கூட புளுத்துப்போகும்னு சொல்வாங்க.. ஆனா ஒவ்வருவரும் ஒரு ஒரு ஸ்டைல் வச்சு இருப்பாங்க.. எங்க வீட்டுப்பக்கதுல இருந்த ஒரு முன்னாள் வாத்தியார், தண்ணியை போட்டாலே சின்ன சின்ன கணக்குகள் சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்.. என்ன பண்ணினாய்..என்ன பன்னி நாய்னு சொற்களைப் பிரித்து தமிழ் பாடம் வேற எடுப்பார்..

இரவு நேர எங்கள் ஊர் இப்படித் தான் இருக்கும்.. இது இல்லாமல் எங்கள் ஊரில் இருக்கும் இந்திராகாந்தி சிலை அருகே சில சூதாட்டமெல்லாம் நடக்கும்.. இதுக்கு ஆங்கிலத்துல பிங்கோன்னு பேர் சொல்றாங்க.. ஒரு தகடுல ஒன்பது கட்டங்கள்ல ஒன்பது எண்கள் இருக்கும்.. இந்த விளையாட்டு விளையாட ஒரு ரூபா கொடுத்து இந்த தகட்ட வாங்கி கொள்ளணும்.. இது மாதிரி பல பேர் வாங்கி இருப்பாங்க.. இதை நடத்துறவர் ஒவ்வொரு நம்பரா சொல்வார்.. அது உங்க தகடுல இருந்தா அந்த நம்பர் மேல கொஞ்ச மண்ணை எடுத்து வச்சுக்கணும்.. அப்படி எல்லா நம்பரிலும் நீங்க மண் நீங்க வச்சுட்டீங்கன்னா நீங்க தான் வின்னர்.. இது மாதிரி பல விளையாட்டுக்கள் ஆடுவாங்க.. அதுவும் அந்த தெரு விளக்கின் கீழ் விடிய விடிய நடக்குமே கோலிகுண்டு விளையாட்டு, அதை பாக்கவே அவ்வளவு கூட்டம் கூடி நிக்கும்.. அந்த விளையாட்டுல காசு வச்சு எல்லாம் விளையாடுவாங்க.. பீடியை பத்த வச்சுகிட்டு ஒவ்வொருத்தரும் அவ்வளவு நுணுக்கமா விளையாடுறதை பாக்கணுமே..நமக்கே ரொம்ப த்ரில்லா இருக்கும்.. இது இல்லாம சீட்டு விளையாட்டு படு ஜோரா இருக்கும்.. ஆலமரம், அரசமரம், புளியமரம்னு ஊருக்கு மூணு திசையிலும் பகலெல்லாம் இந்த சூதாட்டம் நடக்கும்.. இது மட்டுமில்லாமல், யாராவது மதியத்துக்கு மேல இறந்து போயிட்டா, அவங்கள அடுத்த நாள் தான் சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போவாங்க.. இறந்து போனவங்களுக்கு இறுதி மரியாதை எல்லாம் அடுத்த நாள் தான் நடக்கும்.. எங்க ஊர்ப் பக்கம், அப்படி இறந்து போனவங்களை அலங்கரிச்சு ஒரு சேர்ல உக்கார வச்சுடுவாங்க.. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான் அந்த நேரம் இருப்பாங்க.. விடிய விடிய கண் முழிச்சு இறந்து போனவங்க கிட்ட இருக்கனும்னு ஒரு பழக்கம் இருக்கு.. அந்த நேரத்துல இறந்து போனவங்க வீட்டு சார்பா சீட்டுக்கட்டு வாங்கித் தருவாங்க.. அதை வச்சு அங்கேயும் காசு வச்சு இந்த விளையாட்டு நடக்கும். இவங்களுக்கு டீயெல்லாம் வேற சப்ளை பண்ணனும்.. இவங்க கூட இறந்தவங்க வீட்டுக்காரவங்களும் கண் முழிச்சு தூங்காம இருப்பாங்க. பத்து வருஷதுக்கு முன்னாடி, இதோட ரெண்டு படம் வேற வீடியோவுல ஓட்டுவாங்க..

இதெல்லாம் பெரியவங்க விளையாட்டுனா, சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு.. அந்த ஒவ்வொரு விளையாட்டையும் இப்போ நினச்சாலும் அதுக்காக போட்ட சண்டை, அந்த சந்தோசம் மனசுல இன்னைக்கும் இன்னிக்கும்.

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Friday, April 20, 2007

சலூன் கடைகள் ஏக்கங்கள்

நான் சின்ன வயசுல தூங்குன இடங்கள்ல சலூன் கடையும் ஒன்று. சின்ன வயசுல எங்க ஊர்ல என்னை எல்லாம் சேர்ல உக்கார வைக்க மாட்டாங்க.. தரை தான். சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து தான் முடிவெட்டிவிடுவாங்க.. தலையில தண்ணியை தெளிச்சு விடுறது தான் தெரியும். முடிவெட்டி விடுறவரே என் தலையை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திருப்பி விட்டு முடிவெட்டிவிடுவார். அப்ப எல்லாம் எப்படி முடிவிட்டா நமக்கென்ன.. ஒண்ணும் தெரியாது. எண்ணெய்யை தடவி அம்மா சீவி விடுவாங்க. மறுபடியும் அடுத்த நாள் சீவி விடுவாங்க..இன்னமும் நான் என்னிக்குமே பாக்கெட்டுகளில் சீப்பையோ, கண்ணாடி பாக்குற இடங்கள்ல சீவுறதோ கிடையாது.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க

என் அப்பா காலத்துல படங்கள்ல பாக்குற மாதிரி மரத்தடி தான் சலூன் கடை. அதுக்குப் பிறகு கூரை வேய்ந்த குடிலில். ஒரு மரச்சேர் இருக்கும். இரண்டாக உடைந்த கண்ணாடி தான் இருக்கும். ஒரு வேளை மான்ய விலையில் வாங்கி வந்திருப்பார்னு நினச்சுக்குவேன். தலையில் தண்ணி அடிக்க எல்லாம் அந்த ஸ்ப்ரேயர் இருக்காது. ஒரு குவளையில் தண்ணீர் வச்சிருப்பாங்க.. தலையில் தண்ணி அவங்க தெளிச்சா முகமெல்லாம் வழியும். கடை முழுக்க எல்லா நடிகர்களோட படங்களும் இருக்கும். பழைய காலெண்டர் பேப்பர்கள் தான் ஷேவிங்க் செய்தால் அந்த சோப்புகளை வழித்து எடுக்க. சாணி போட்டு மெழுகின தரை.. கூரைகளில் அங்கங்கே மழை பெய்தால் வலிக்காமால் தரைக்கு வர சில ஓட்டைகள் இருக்கும். ஒரு கட்டிங், நான் சின்ன வயசுல வெட்டிக்கிட்டப்போ ஒரு ரூபாயில் இருந்து இப்போது பத்து பணிரெண்டு ரூபாய்க்கு வந்திருக்கிறது.

இந்த விலையில் ஹீட்டர், சேவிங் லோசன் எல்லாம் எப்படி வாங்கி வைப்பார்கள். இன்னமும் அந்த கூரைக் குடில் தான்.. எனக்கு சென்னையில் முப்பது அல்லது ஐம்பது ரூபாஇக்கு வெட்டிய பிறகு ஊருக்கு போனால், ஆச்சர்யமாக இருக்கும். எப்படி பத்து ரூபாயில் காலத்தை கடத்துகிறார்கள் என்று. ஒரு முறை நான் முடி வெட்டியதுக்கு இருபது ரூபாய் தர, அதை பார்த்த ஒரு பெரியவர் தனியாக வந்து, தம்பி இப்படி எல்லாம் கொடுத்து பழக்காதீங்க என்று எனக்கு அட்வைஸ் தந்துவிட்டுப் போனார்.

நான் முடிவெட்ட ஆரம்பித்து சில காலங்களுக்கு பின்னாடி தான் பிளேடு கலாச்சாரம் எல்லாம். அதுக்கு முன்னாடி, கத்தி தான்.. சேவிங் பண்றதுக்குள்ள ஒரு நாலு தடவையாவது கத்தியை அந்த சாணைகல்லுல தீட்டிக்குவாங்க.. அப்போ எனக்கு நல்ல வேளை தாடியெல்லாம் இல்லை. பின்னங்கழுத்து, காதோரங்களில் சேவிங் செய்யும் போது பயங்கரமா வலிக்கும், கத்தி படும் போதெல்லாம்.

எப்போது சலூன் கடைக்கு சென்றாலும் எப்படா நாமும் சேவிங் செய்துகொள்வோம் என்று ஆசையா இருக்கும். இந்த ஆசையை தணித்துகொள்ள நண்பர்களுக்குள் காசு போட்டு பிளேடு வாங்கி, தனியா சேவிங் பண்ணிக்கொண்டதுண்டு. அதுவும் மீசை வளர அடிக்கடி நாங்கள் சேவிங் செய்வோம். என் அம்மா திட்டுவார்கள். என் அப்பா சிரித்துவிட்டு கண்டுக்க மாட்டார். அவரும் சின்ன வயசுல இப்படித் தான் பண்ணியிருப்பாரோன்னு நினச்சுக்குவேன். இப்போது வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும். எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.

சின்ன வயசுல ஒரு மூணு நாலு வயசு வரை நான் சடை வைத்திருந்தேன். இன்னமும் சடை வைத்து பூவைத்த போட்டோக்கள் என் அம்மாச்சி வீட்டில் தொங்கிகொண்டிருக்கும். எங்கள் குலதெய்வம் நாலு வருடத்திற்கு ஒரு முறை தான் சாமி கும்பிடுவார்கள். அதனால் அதுவரை முடிவெட்டா கூடாது, முதல் மொட்டை குல தெய்வ சாமிக்குத் தான். நான் அதிக முடிவச்சிருந்தது என் சித்திகளுக்கு ரொம்ப சவுகரியமா போய்விட்டது. அவங்க புதுசு புதுசா காய்ச்சுற எண்ணெய்களை எல்லாம் நம்ம தலைல ஊத்தி தான் டெஸ்ட் பண்ணுவாங்க.. கருவேப்பிலை எண்ணெய் முதல் முயல் ரத்தம், வெட்டிவேர் இப்படி எல்லா வகை எண்ணெய்களையும் நம்ம தலை கண்டிருக்கிறது. அதனால தான் என்னவோ, எங்க ஊர்லயும் சரி, மதுரை, சென்னையிலும் சரி, இப்போ இங்க வந்து கொலம்பஸ்லயும் சரி, உன் முடி ரொம்ப திக்குப்பா என்று தான் நம்ம தலைல கைவைக்கிறவங்க சொல்வாங்க. என் தங்கச்சிக்கு நம்ம முடியை கண்டா கோபம் வேற வரும், எப்படி கரு கருன்னு காடு மாதிரி வளர்ந்திருக்கு பொண்ணுகளுக்கு மாதிரின்னு..

நமக்கு ஒரு கெட்ட பழக்கம், எல்லோருக்கும் அது இருக்கான்னு தெரியாது. ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்.. சென்னையில இருந்தவரை மூணு தடவை வீடு மாறிவிட்டாலும் தலைமுடி வெட்டுற கடையையும் ஆளையும் மாத்தினதே இல்லை.

போன வாரம் சனிக்கிழமை இங்க இருக்க கிரேட் க்ளிப்ஸ்க்கு போயிருந்தேன் முடிவெட்ட. அப்போ வெட்டுறவர் கிட்ட மஷ்ரூம் கட்டிங் பண்ணிவிடுங்கன்னு எல்லா ஸ்பெக்கும் கொடுத்தேன். பாவி மகனுக்கு என்ன சொன்னாலும், அவங்க ஊர் ஸ்டைல ட்ரிம்மரை போட்டு ஒரே சரட் தான். அப்போ நான் முடிவெட்டி கிட்ட கடைகளையும் அந்த மனிதர்களையும் நினச்சுகிட்டேன், கண்கலங்க.. சில சமயம், மனசு தானா, சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமான்னு தானா பாட ஆரம்பிச்சிடுது.

(சொல்ல மறந்துட்டேனே... நமக்கு இன்னமும் சலூன் கடை சேர் ஏறி உக்கார்ந்து தலைல தண்ணி பட்டாலே தானே சொக்க ஆரம்பிச்சிடுது.. அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க..)

Thursday, April 19, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2

முதல் பகுதி

ஒரு பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது..

ஒரு நாள் இரவு, ஊரின் வடக்கு மூலையில் இருக்கும் ஓடு போட்ட வீட்டில் சரமாரியாக கல்மழை பொழிந்தது.. மறு நாள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருகும் மற்றொரு வீட்டில் அதே மாதிரி கல்மழை.. அந்த வீட்டை சுற்றியுள்ள வயல் வெளிகளை பார்த்தால் பெரிய பெரிய காலடி தடங்கள்..

சாதாரண மனிதர்களின் காடலடி தடங்களை விட மிகப் பெரியதாக அந்த காலடி தடங்கள் இருந்தன.. ஊரில் மக்களிடையே ஒருவித கிலி பரவியது.. எங்கள் ஊரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்தாலும், ஊரின் நடுவில் இருக்கும் ஒரு சர்ச்சின் மணி அடிக்கப்படும். அந்த சர்ச் மணி கேட்டால் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அப்படியே போட்டது போட்டபடி எல்லோரும் அங்கே வந்து விடுவார்கள்.. மிகத் தொலைவில் இருப்பவர்கள் கூட எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக அந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள்.. ஒரு முறை ஊரின் அருகே இருந்த தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் திடீரென தீப் பற்றிக்கொண்டது.. பார்த்தவர்கள் உடனே கோயில் மணி அடிக்க, ஊரே சேர்ந்து அந்த தீயை அணைத்தது. எங்க ஊரை போன்ற கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால், போஸ்ட் ஆபீசு மூலம் தீயணைப்பு வண்டிக்கு சொல்லி அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. அதனால் முடிந்தவரை ஊரே சேர்ந்து தான் சமாளிக்கும் இது போன்ற பிரச்சனைகளை..

அன்றும் அது போலவே சர்ச் மணி அடிக்கப்பட்டு ஊரே கூடியது.. தினமும் இது போன்ற கல்விழும் சம்பவம் நடந்து கொண்டிருந்ததால், ஊர் பஞ்சாயத்து கூடியது.. ஊருக்குள்ள வர்ற எல்லா பாதையிலும் செக்-போஸ்ட் வைக்கிறதுன்னு முடிவானது.. செக்-போஸ்ட்னா என்னன்னா உண்மையான செக்-போஸ்ட் மாதிரியே மரமெல்லாம் கட்டி வர்ற வ்ண்டி ஆளுகைளை எல்லாம் விசாரிப்பாங்க.. அங்கேயே ரெண்டு மூணு கட்டிலை போட்டு ஷிப்ட் முறைல படுத்து காவலும் காப்பாங்க.. ஒரு பயலும் அப்போ ஊருக்குள்ள அவ்வளவு சீக்கிரம் வரமுடியாது.. அப்போ சாராயம் விக்கிறது கூட இந்த செக்போஸ்டுக்கு வெளில தான் நடந்தது.. சாராயம் குடிக்கிறேன் பேர்வழின்னு கூட யாரும் உள்ளார வந்துட முடியாது..

அப்படித்தான் ஏதோ ஒரு ஊர்க்காரன் ஊருக்குள்ள வந்து மாட்டிக்கிட்டான். போதைல இருந்த அவன் என்ன கேள்வி கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்லல.. அவனை நாயை விட கேவலமா அடிச்சாங்க.. ரத்தம் வரவர ஊர்ல இருக்க ஒரு கோவில்ல அடச்சு வேற போட்டாங்க.. அப்புறம் அவன் போதை தெளிஞ்சு அவன் வீட்டுக்கு சொல்லிவிட்டு, அவங்க வந்து கூட்டிட்டு போனாங்க.. அவ்வளவு அழகான ரெண்டு பிள்ளைகளாம் அவனுக்கு.. அப்படி என்ன அவனுக்கு சாராய ருசி வேண்டி கிடக்குது.. அவன் பண்ணின பாவமோ என்னமோ..ரெண்டு நாளுல அவன் செத்துப்போனதா ஊர்ல பேசிகிட்டாங்க..

ஊர்ல பேசிகிட்டாங்க அப்படின்னா..திண்ணைப் பேச்சும் டீக்கடை பேச்சும் தான்.. இப்போவெல்லாம் திண்ணை வச்சு யாரும் வீடு கட்றதே இல்லை.. அந்த காலத்துல வழிபோக்கர்கள், இல்லை களைப்பா இருக்கவங்க கொஞ்சம் ஒதுங்க ஓய்வுவெடுக்க இந்த மாதிரி திண்ணக ஒவ்வொரு வீட்டுலையும் இருக்கும்.. இப்போ எல்லாம் எங்க ஊர்ல அப்படி திண்ணை இருக்க வீடுகளை விரல் விட்டு எண்ணிடலாம்.. இந்த மாதிரி திண்ணைல நீங்க உக்கார்ந்தா போதும் ஊர்ல நடக்குற எல்லா விஷயமும் உங்களுக்கு அத்துப்படியாயிடும்.. யார் ரெண்டு பேருக்கும் இடையே சண்டை... யார் யார் கூட ஓடிப்போனா..ஓடிப்போகப் போறாங்க.. எந்த தண்ணிக் குழாய்ல ரெண்டு குடம் தண்ணிக்காக சண்டை போட்டுக்கிட்டாங்கன்னு எல்லா மேட்டாரும் அங்கே வந்து சேர்ற பெண்களோட அரட்டையில தெரிஞ்சுடும். இதை வேற மாதிரி சொன்னா புரணி பேசுறதுப்பாங்க.. எப்படி ஒவ்வொரு டீக்கடையிலும் ஆண்கள் உட்கார்ந்து கதையடிக்கிறாங்களோ..அது மாதிரி பெண்களுக்கு ஏதோ ஒரு வீட்டு திண்ணை.. அடேயேப்பா..அப்பா அவங்க பேசுற பேச்சை பாக்கணும்..ஒரு பக்கம் சிரிப்பாவும் ஒரு பக்கம் எரிச்சலாவும் இருக்கும்..

அடியேய் உனக்கு விஷயம் தெரியுமா.. அந்த உடம்பெல்லாம் நகையா போட்டுகிட்டு மினிமினித்துகிட்டு போவாள்ல, அந்த கண்டக்டர் சம்சாரம்.. அவள அவ புருசன் போட்டு சாத்திட்டானாம் நேத்து ராவுல.. இது ரொம்ப படிக்காம கூலி வேலைக்கு போற பெண்களோட சம்பாஷனை.. ஏங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா.. நகை கடை விளம்பரதுல வர்ற பொண்ணு மாதிரி போவுமே அந்த கண்டக்டர் வைப், அந்த பொண்ணப் போட்டு அவ வீட்டுக்காரர் அடியோ அடின்னு அடிச்சுட்டாராம்..இது எந்த வேலைக்கும் போகாம வீட்லயே இருக்க பொண்ணுக பேச்சு.. இவங்களுக்கு மத்தவங்க விஷயத்தயும் பேசணும்னு ஒரு துறுதுறுப்பு இருக்கும்.. ஆனாலும் ஒரு பயம் வேற உள்ளார..

அப்படி கல்மழை பொழிஞ்ச சமயத்துல எங்க போனாலும் இதே பேச்சு தான்.. எல்லோருக்கும் அதப் பத்தி பேசுறப்போ கண்ணுல ஒரு பயம் இருக்கும்..எங்க ஊரையே தூங்காம கல் எரிஞ்ச மனுசங்க மேல எங்க ஊர்க்காரவங்க அந்த அளவுக்கு கோபத்துல இருந்தாங்க.. எத்தனை பேர் ஒரு வாரமா..அவங்கள பிடிக்க இரவு முழுவதும் முழிச்சுக்கிடந்து காவல் காத்தாங்க... அப்படிபட்ட அந்த திருடங்களே இவங்க கையில கிடச்சிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க..

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Tuesday, April 17, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 1

"வினாயகனே வினை தீர்ப்பவனே" அப்படின்னு காலைல எங்க ஊர் பகவதி அம்மன் கோவிலுல பாடுற பாட்டு தான் எங்க ஊருக்கே அலாரம்.. அதுக்கு பிறகு தான் ஊரே எழும். பகவதி அம்மன் கோவில் பூசாரிக்கு ஒரு எழுபது வயசுக்கு மேல் இருக்கும்.. வீடு, மனைவி மக்கள்னு இருந்தாலும் அவருக்கு கோவில் தான் எல்லாம்.. இந்த பாட்டை போட்ட பின்னாடி தான், டீக்கடையில் காபி டீ எல்லாம் கூட சுடச்சுட தயாராகும். காபி, டீயை குடிச்சுட்டு, பெரும்பாலானவங்க அவங்கவங்க தோட்டத்துக்கு கிளம்புவாங்க.. இனிமே தான் கத்திரிக்கா பொறுக்குறதும், கனகாம்பரம், மல்லிகை பூவெல்லாம் பறிச்சு மார்க்கெட்டுக்கு கொண்டு போறதும் நடக்கும். நானும் சின்ன வயசுல கனகாம்பரம் பூ பொறுக்கப் போவேன், அந்த அதிகாலைல.. நூறு கிராம் பூ பொறுக்குனா ஐம்பது காசு தருவாங்க..

கொஞ்ச நேரத்துல முதல் நடை பேருந்து திண்டுக்கலில் இருந்து வந்துடும். நான் சென்னையில இருந்து ஊருக்கு போனா அந்த பஸ்ல தான் ஊருக்குள்ள போவேன். அந்த பேருந்து, ஊருக்குள்ள ஆட்களை இறக்கிவிட்டுட்டு கோம்பைக்கு போகும்.. கோம்பைங்கிறது மலையடிவாரம். வர்றப்போ அந்த வண்டியே கர்ப்பிணி பெண் மாதிரி தள்ளாடி தள்ளாடி வரும்.. வர்ற வழில எல்லா தோட்டத்துலையும் நின்னு மூட்டைகளை ஏத்தி வரும். எல்லா தோட்டத்துக்காரவங்களும் அதுல தான் எல்லா மூட்டைகளையும் ஏத்திவிடுவாங்க.. அதுக்குன்னே பேருந்துகுள்ள வலது பக்கம் கடைசி ரெண்டு இருக்கையும் முன்னாடி ரெண்டு இருக்கையும் இருக்காது.. இப்போ ஒரு ஐந்து வருசதுக்கு முன்னாடி ஊர்ல இருக்க ரெண்டு பேரு வேன் வாங்கிட்டதால இந்த பேருந்துகாரவங்களுக்கு கொஞ்சம் நஷ்டம் தான். பேருந்து மார்க்கட்குள்ள போக முடியாது. ஆனா இந்த வேன் மார்க்கட் உள்ளார போகும். அதனால எல்லோரும் இதுலையே போக ஆரம்பிச்சுட்டாங்க.

காலைல டீக்கடையில கூடுற கூட்டம் ஒரு மினி சட்டசபை மாதிரி. அரசியலை பத்தி பெரும்பாலும் நாற்பது வயசுக்கு மேல இருக்கவங்க தான் பேசுவாங்க.. என்னை மாதிரி பசங்களுக்கு சினிமா பக்கம் தான்.. புதுசு புதுசா வர்ற படத்தோட விளம்பரங்கள், சுடச்சுட வர்ற கிசுகிசுக்கள் தான் முக்கியம். அப்படியே அந்த செய்தியெல்லாம் படிச்சிட்டு ஒரு அரட்டையை போட்டா.. அன்னிக்கு பொழுது சூப்பரா இருக்கும்.. இப்போ எல்லாம் எங்க ஊர்ல எல்லா டீக்கடைலயும் டிவி வந்திடுச்சு.. அதனால இந்த அரட்டைகள் கொஞ்சம்..கொஞ்சமென்ன ரொம்பவே குறைஞ்சு போயிடுச்சு.. டீ ஆர்டர் பண்ணிட்டு உக்கார்ந்தா.. முழுப்படத்தையும் வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு தான் கிளம்புது மொத்த சனமும்..

எங்க ஊர்ல மொத மொதல்ல பஞ்சாயத்து போர்டுல டிவி வந்தப்போ ஊர்ல இருக்க எல்லோரும் அங்க தான் இருப்போம்.. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தான் ரொம்ப பிரசித்தம்.. அதுக்கடுத்து.. நாலஞ்சு தடவை தடங்கலுக்கு வருந்துகிறோம்னு போட்டாலும் ஞாயிற்றுக்கிழமை படத்தை கண்ணை வேற பக்கம் அகட்டாம டிவியத்தான் பாத்துகிட்டு இருப்போம்.. பல சமயத்துல ஹிந்தி நிகழ்ச்சி தான் ஓடிகிட்டு இருக்கும்.. ஆனாலும் அதையும் பாக்க ஒரு கூட்டம் இருக்கும் புரியாமலேயே தலையசைக்க.. இந்த பஞ்சாயத்து போர்டு டிவி வந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு அதோடதான் வாழ்க்கைனு ஆகிடுச்சு.. அதுக்கு பிறகு சன் டிவி வந்த போது..கேபிள் கனெக்க்ஷன் சில பேர் தான் எடுத்து இருந்தாங்க.. ஏதாவது படம் பாக்கனும்னா கூட நாலணா கொடுத்து தான் அவங்க வீட்டுகுள்ளாற போய் படம் பாக்கமுடியும்.. பெரும்பாலும் கிராம வீடுகளில நடைனு ஒரு பகுதி இருக்கும்..அது வேற ஒண்ணும் இல்ல.. இப்போ நாம ஹால்னு சொல்றோம்ல அது தான். என்ன இந்த நடை மேல கொஞ்சம் திறந்து வானம் பாத்தபடி இருக்கும்.. சுத்தி மத்த அறைகள் இருக்கும்.. அந்த நடைல தான் டிவியை வச்சு இருப்பாங்க.. காசு கொடுத்து அங்க உக்கார்ந்து தான் படத்தை பாக்கணும். பெரும்பாலும் சாராய வியாபாரிகள் வீட்ல தான் அப்போ டிவி இருந்தது.. இப்போ வீட்டுக்கு ஒரு வாசப்படி இருக்கிற மாதிரி டிவி ஆகிபோயிடுச்சு.

ஒரு காலத்துல என் ஊர்ல எல்லார் கையிலும் பணம் தாறுமாறா இருக்கும். நாலு திருவிழா, நாலு ஜல்லிக்கட்டுன்னு எல்லாம் சந்தோசமா தண்ணியடிச்சு ரகளையா இருப்பாங்க.. எல்லாத்துக்கும் காரணம் கள்ளச்சாராயம் தான்.. ஒரு தடவை போலீஸ் ரெய்டுல எங்க ஊர்ல மட்டும் நூறு திருட்டு வண்டிகளை பிடிச்சாங்க.. எல்லாம் விடிய விடிய சாராயத்தை டியூப்ல அடச்சு பக்கத்து ஊருக்கு கொண்டு போவாங்க.. எல்லாம் இந்த மாதிரி வண்டில தான்.. இந்த மாதிரி எங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு கொண்டு போனா, அப்படி கொண்டுபோறவங்களுக்கு ஏகப்பட்ட காசு கிடைக்கும்.. அதனாலயே இந்த வேலைய செய்றதுக்கு பல பேர் இருப்பாங்க.. எல்லாம் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு சின்ன வயசுல இருந்து இந்த மாதிரி வாழ்ந்தவங்க.. இந்த இளைஞர்களோட சின்ன வயசு வாழ்க்கையே ரொம்ப சுவாரஸ்யமானது.. காலைல யுனிபார்ம் டிரஸ் போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போறேன்னு வீட்ல சொல்லிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடுவாங்க.. வகுப்புல இந்த மாதிரி காணலைனா வாத்தியர் நாலு பசங்களை அனுப்பி இந்த பையனை தேடிகொண்டுவரச் சொல்லுவார். அந்த பசங்க வகுப்புலயே கொஞ்சம் முரட்டு பசங்களா இருப்பாங்க... இந்த மாதிரி வகுப்புக்கு வராத பசங்க எங்க இருப்பாங்கன்னு இவங்களுக்கு நல்லாத் தெரியும். ஊருக்கு ஒதுக்குபுறதுல இருக்க புளியமரத்துக்கு கீழ வெட்டி ஆளுங்க சீட்டு விளையாடுவாங்க.. பணத்தை பந்தயமா வச்சு..இது தான் என் ஊரு கிளப்.. ஓடி போற பசங்க இங்கே இருக்கனும் இல்லைனா குளத்து பக்கத்துல எங்கயாவது இருப்பாங்க..

தேடிப் போன பசங்க எப்படியாவது பள்ளிக்கு வராத பையனோட கை கால் எல்லாம் பிடிச்சு ஆளையே செந்தூக்காக பள்ளிக்கூடத்துக்கு தூக்கிட்டு வந்துடுவாங்க.. அதுக்கப்புறம் அந்த பையனுக்கு கிடைக்கிற வெகுமதிகள் தான் மேட்டரே.. பிரம்படிகள் கிடைக்குமே அதுவும் அத்தனை பசங்க பொண்ணுங்க முன்னாடி கிடைக்குமே, அதுக்கு பின்னாடி ஒண்ணு அவன் ஸ்கூலுக்கு ஒழுங்கா வருவான்.. இல்லைனா அதுக்கு பிறகு அவன் ஸ்கூல் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டான்..

(தொடரும்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

Wednesday, March 28, 2007

கன்யாகுமரி கலாட்டக்களும், ஆர்.எஸ்.எஸ் மாநாடும்

பேருந்தில் ஏறிவிட்டாலே, தூங்கி போய்விடுவதென்பது என் பால்ய வயது வேலை.. அது இருபது நிமிட பயணமென்றாலும் சரி, இரண்டு நாள் பயணமென்றாலும் சரி.. அதுவும் எங்கள் ஊரின் மேடு பள்ள சாலையிலே என்னால் சொகுசாக தூங்கமுடிகிறதென்றால், தேசிய நெடுஞ்சாலை பயணத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.. அது சொர்க்கத்தில் தூங்குவது போல இருக்கும். ஆனால் பத்து பனிரெண்டு வயதிற்கு பிறகு, அப்படியெல்லாம் தூங்குவது கிடையாது.. எங்கே போனாலும் வேடிக்கை பார்ப்பதும், கடக்கின்ற ஊர்களை மனத்திலே இருத்திக்கொள்வதும் தான் என் வேலையாக இருந்தது..

மிக முக்கியமாக, சுற்றுலாவில் இரவானாலும் கூட தூங்குவது கிடையாது. கிராமத்தில் இருந்து சுற்றுலா செல்வதென்பது மிகவும் அரிதான விஷயம். ஒரு முறை, நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடப்பதற்காக ஆட்கள் திரட்டும் பணி நடந்துவந்தது. போதுமான ஆட்கள் சேரவில்லை என்பதால், அதை ஒரு சுற்றுலாவாக மாற்றினார்கள். சுற்றுலாவிற்கான பாதி செலவை நாம் போட்டால் போதும் என்று முடிவானது.மதுரை, திருச்செந்தூர், கன்யாகுமரி அங்கேயிருந்து சுசீந்திரம் வழியாக நாகர்கோவில் மாநாடு செல்வதென்று முடிவானது. எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் சற்று அதிகம். அதுவும் 1990-களில், எங்கள் ஊரில் நடந்த சில மத பிரச்சினைகளுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் கொஞ்சம் நன்றாக வேரூன்றிவிட்டது. தினமும் மாலை வேளைகளில் பயிற்சிவகுப்புகள் எல்லாம் கூட நடந்து வந்தது. அப்படியான காலங்களில் தான், நான் சிறிது காலம் சிலம்பம் கற்றுக்கொண்டேன்.. சிலம்பம் எடுத்தும் வணக்கம் சொல்லவும், யாராவது எதிர்த்தால் என்னை காத்துக்கொள்ளும் அளவும் எனக்கு சிலம்பம் கற்றுத்தரப்பட்டது..

எங்கள் ஊரின் மேற்குபகுதியில், ஊர் கிணற்றின் அடியில், தெருவிளக்கின் கீழே தான் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகள் நடந்தது. நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேரவில்லையென்றாலும், எனது அநேக நண்பர்கள் அதில் தான் இருந்தார்கள்.. சகா என்பதும், ஜி என்பதும் தான் அவர்களுக்குள் அழைக்க பயன்படும் வார்த்தைகள்.. பின்னாளில் அது ஊருக்குள் இருக்கும் எல்லோருக்கும் பொதுவானதொரு சொல்லாக மாறிவிட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது கிளைகளை எங்கள் ஊரில் பரப்ப காரணமாய் இருந்தவர்கள், கல்யாணம் செய்துகொண்ட பின்னர், அதனின் தாக்கம் மெதுவாக குறைந்து போய்விட்டது.. இன்னமும் அது இந்துத்துவா மற்றும் பாரதிய ஜனதா கட்சி என்னும் பெயரில் அங்கங்கே சத்தமில்லாமல் தூங்கிகொண்டு தான் இருக்கிறது..

இப்படியாக, அந்த முறை, திருச்செந்தூர், கன்யாகுமரி எல்லாம் சுற்றிப் பார்த்தோம். எங்கள் கூட வந்த எல்லோருக்கும், என்னையும் சேர்த்து, கன்யாகுமரி சென்றது அது தான் முதல் அனுபவம். விவேகானந்தர் பாறைக்கு, படகில் செல்வதற்கு முன், வழியில் ஒருவன் பிளாஸ்டிக்காலானா ஒரு ஃப்லூட்டை விற்றுக்கொண்டிருந்தான்.. அதற்கு முன்னால் மற்றொரு இடத்தில் அதன் விலை கேட்ட போது, முப்பது ரூபாய் என்று சொன்னதால் நாங்கள் வாங்கவில்லை. என் கூட வந்திருந்த என் அண்ணனின் பையன் விடாமல் கேட்டதால் (அழுததால்), நின்று விலை கேட்டால், இவன் அந்த ஃப்லூட்டிற்கு ஐம்பது ரூபாய் என்றான். அடப்பாவிகளா என்று நாங்கள் அதிர்ந்து போனோம்.. என் இன்னொரு அண்ணன் நக்கலாக இப்பத்தான் இதை பத்து ரூபாய்க்கு காந்தி மண்டபதுல சொன்னாங்க என்றார். அதற்கு அவன் சொன்ன பதில் எங்களை ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஒரு சேர உண்டாக்கியது. அப்படியா.. அப்பன்னா ஒரு ரெண்டு ரூபாய் சேர்த்து பனிரெண்டு ரூபாய் வாங்கிக்கோ சார் என்றார். என் அண்ணன் விடாமல் பேசி பத்து ரூப்பாய்க்கு வாங்கி வந்தார். ஏன் இப்படி அநியாய விலை சொல்றீங்கன்னு கேட்டதுக்கு, அப்பத்தானே சார் நீங்க விலை குறைச்சு கேட்குறப்போ எங்களுக்கு கட்டுபடியாகும்னு ரொம்ப அசால்டா பதில் சொல்றான். பத்து ரூபாய் எங்க இருக்கு..ஐம்பது ரூபாய் எங்க இருக்குன்னு நாங்க நினச்சுகிட்டோம். அன்றிலிருந்து,எங்கே இது மாதிரி பாதசாரி கடைல விலை கேட்டாலும் அவன் சொல்ற விலையை விட பாதிக்கும் கீழ தான் கேட்குறதுன்னு முடிவு பண்ணினோம்.

விவேகானந்தர் பாறையில, மண்டபத்திற்கு மேல போற படிக்கட்டுக்கு ரெண்டு பக்கத்திலையும் ரெண்டு யானை சிலைகள் இருந்தன.. நானும் என் தம்பியும் (அண்ணன், தம்பிக எல்லாம் என் சித்தப்பா, பெரியப்பா மக்க.. நம்ம பங்காளிக) ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம். இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க.. ஆஹா. நம்ம மக்கள் இன்னும் மாறலையான்னு நினைத்துகொண்டு, உள்ளே போய்விட்டோம். அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க.. யாராவது வேண்டுதல் வச்சு மொட்டை அடிக்காம இருந்தா சரின்னு நினைச்சு மனசுக்குள் சிரித்துகொண்டோம்.

அங்கிருந்து சுசீந்தரம் சென்று, பிறகு நாகர்கோவில் சென்றடைந்தோம். அன்றைய ஆர்.எஸ்.எஸ் மாநாடு ஒரு ஊர்வலத்தோடு கிளம்பியது.. நாங்களும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். இந்தியாவில் அதிசயமான காரியம் ஒன்று அந்த மாநாட்டில் நடந்தது. சொன்ன நேரத்துக்கு மாநாடு ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட முன்பின் இல்லை. அதே மாதிரி சரியான நேரத்துக்கு முடித்தார்கள். இந்த மாதிரி எல்லோரும் சரியான நேரத்தை கடைபிடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைத்துகொண்டேன். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.. அதை பார்த்தால் ஏதோ இயந்திர மனிதர்களின் அணிவகுப்பு போல இருந்தது, கட்டுகோப்பாக. நாங்கள் எல்லாம் அந்த அணிவகுப்பு நடந்த மைதானத்தை சுற்றியே உட்காரவைக்கப்பட்டோம். இதுபோல அடிக்கடி நடப்பதால் தான், நாகர்கோவிலில் பாரதிய ஜனதா நன்றாக வேறூன்ற முடிந்தது என்று பின்னாளில் அங்கே, அவர்கள் வெற்றிபெற்ற போது நினைத்துகொண்டேன்.

Friday, March 23, 2007

அரசியல் பயணங்களும் அனிதாவின் நினைவுகளும்

முதன் முதலாக நான் தேர்தல் பிரச்சாரம் பண்ணியது என்னுடைய பத்தாவது வயதில். அப்போது என் தாத்தாவின் நண்பர் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். என் தாத்தா பத்திர எழுத்தாளராக இருந்ததால், எங்கள் பஞ்சாயத்து மட்டுமல்ல, திண்டுக்கல்லை சுற்றி இருக்கிற அதிகமான கிராம மக்களுக்கு தெரிந்தவர். அதனால் சனி, ஞாற்றுகிழமைகளில் அவரும் தனது நண்பருக்காக, எங்கள் பஞ்சாயத்தில் இருக்கின்ற எல்லா ஊருக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அவர் கூட நானும் செல்வேன். ஒரு மினி வேனில் தான் அழைத்துசெல்வார்கள். என் கூட, என் வயதையொத்த இன்னும் சில பசங்களும் இருந்தார்கள். வேன் ஒரு ஊரின் எல்லையை தொட்டவுடன் நாங்கள் கத்த ஆரம்பிப்போம் கோஷங்களை. 'இந்த படை போதுமா'விலிருந்து, 'போடுங்கம்மா ஓட்டு பம்பரச் சின்னத்தை பார்த்து' வரை உரக்க சொல்வோம். அந்த அந்த ஊருக்கு எங்கள் வேன் போனவுடன் அந்த ஊரில் இருக்கும் மற்ற சின்ன பசங்களும் எங்கள் கூட சேர்ந்துகொள்வார்கள். மொத்தமாக நாங்கள் ஒன்று கூடி அந்த ஊரின் எல்லா வீதிகளிலும் கோஷங்களை கத்தியபடி செல்வோம். ஒரு சுற்று முடிந்து வந்த பிறகு, எங்களுக்கு காபி, டீயோ, மிக்க்ஷர் பாக்கெட்டோ, உள்ளூர் குளிர்பானங்களோ தருவார்கள். எனக்கு இந்த திண்பண்டங்களில் எல்லாம் எங்கள் கடையிலே இருப்பதால் பெரும் நாட்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பிரச்சாரத்துக்கு சென்ற போது தான், என் பஞ்சாயத்தின் எல்லா ஊரையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.. அதுவரை எனது ஊரும் திண்டுக்கல்லும், இடையில் இருக்கும் சில ஊர்கள் மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.

இந்த ஊர்களைத் தவிர, நான் கான்வென்டில் படித்த போது, என் கூட படித்தவர்களின் ஊர் பேரும் தெரியும். முக்கியமா, ஒடிசலா, கிராப் வெட்டப்பட்டு என்கூட ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த அனிதாவின் ஊர் நல்லாவே தெரியும். முதல் முதலா த்ரிஷாவை லேசா லேசா படப் போஸ்டர்களில் பார்த்தபோது, அவளை பெரிய பிள்ளையாகி பார்த்த மாதிரி இருந்தது. என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள். அவள் என் பக்கத்தில் தான் உட்காருவாள். அப்போ என் வகுப்புல என்னோட சேர்த்து நாலு பேரு பெயர் கார்த்தி. அதனால என்னை எல்லோரும் 'எம்'னு தான் கூப்பிடுவாங்க.. ஏற்கனவே எனக்கு ஆறாம் வகுப்புக்கு மேல 'வி.எம்'னு கிடைத்த இன்னொரு பெயர் தெரியும் உங்க எல்லோருக்கும்.. கார்த்தி என்ற பேர் அவ்வளவு பிரசித்தி என் வயதில்.. அனிதா திண்டுக்கல் பக்கத்தில் இருக்கும் சிலுவத்தூர் என்ற ஊரில் இருந்து பேருந்தில் வந்து செல்வாள். ரொம்ப நல்ல பிரண்ட். நான் கொஞ்சம் சுட்டி. முன்னாடி உட்கார்ந்து இருக்க ரெண்டு பொண்ணுங்க சடையையும் சேர்த்து கட்டிவிட்டுருவேன். யாராவது சண்டைக்கு வந்த, அது கூட தெரியாத அளவுக்கு நீங்க ஏன் இருக்கீங்கன்னு எனக்கு சப்போர்ட்டுக்கு வருவாள்.. அப்போ எல்லாம் பிரியப்போறோம் அப்படிங்கிற சோகம் எல்லாம் கிடையாது. அதனால அப்போ ஒண்ணும் தெரியவில்லை, அஞ்சாவது முடிச்சு திரும்பி வர்றப்போ. அதற்கு பிறகு, ஒரு பதினைந்து வருஷத்துக்கு அப்புறம், தூரத்து சொந்தத்தின் கல்யாணத்திற்காக அந்த ஊருக்கு போனேன். அந்த ஊர் பெயரை பார்த்தவுடன் அவள் முகம் தான் நெஞ்சில் வந்தது.

அப்படி பல ஊர் பெயரை நான், இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் தெரிந்து கொண்டேன். அந்த தேர்தலில் என் தாத்தாவின் நண்பர் தான் வெற்றிபெற்றார். எனக்கெல்லாம் பயங்கர சந்தோசம். நானும் தேர்தல் பிரச்சாரம் பண்ணினோம்ல. என் அப்பா பக்கா அதிமுககாரர். எம்ஜியார் இறந்த பிறகு, ஜானகி எம்ஜியார் தலைமையில் இருந்த அதிமுக(ஜா) பிரிவில் திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். பல கட்சிக்கூட்டங்களுக்கும் செல்வார். ஒரு முறை என்னை காந்திகிராம தம்பித்தோட்டம் பள்ளியில் சேர்த்துவிட்டு, என் அப்பா பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன் (இரண்டு முறை திண்டுக்கல் எம்.பியாக இருந்தவர். சில காலம், அதிமுக பொருளாளராகவும் இருந்தவர்), என் அப்பாவின் பெயர் சொல்லி அழைத்து காரில் ஏற்றிக்கொண்டு, எங்களை எங்களது பிரிவில் இறக்கிவிட்டார். அப்போது தான் எனக்கே தெரியும், என் அப்பாவுக்கு மாவட்ட அளவில் கட்சியில் இருந்த நல்ல பெயர். அதன் பிறகு அடிக்கடி கட்சி கூட்டத்திற்கு சேர அழைப்பு வரும். நாங்கள் கடை வைத்திருப்பதால், அடிக்கடி அப்பா அப்படி செல்வது சிரமமாக இருந்தது. அதன் பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

1996-இல், ரஜினியின் வாய்ஸிற்கு பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பிறகு, கட்சியை பலப்படுத்த எல்லாக் கட்சியிலும் இருப்பதுபோல இளைஞர், மகளிர், மாணவ அணியினை உருவாக்கினர். எங்கள் ஊரில், எனக்குத் தெரிந்து இன்னமும் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருக்கும் ஒருவர், எங்கள் கடைக்கு அடிக்கடி வருபவர் அவர், என்னிடம் வந்து தமிழ் மாநில காங்கிரஸில் சேர ஆர்வமா என்று கேட்டார். அப்போது ரஜினியின் ஆதரவு இருந்தது அந்த கட்சிக்கு. நான் அப்போது கல்லூரியில் பி.எஸ்.சி முதல் வருடம் படித்துகொண்டிருந்தேன். அவர் கேட்டதற்கு சரி என்று பதிலும் அளித்து விட்டேன். அவர் கொடுத்த விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்தும் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு என்னை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் ஒன்றியத் தலைவராக நியமித்து ஜி.கே.மூப்பனார் மற்றும் அப்போது திண்டுக்கல் மாவட்ட மாணவ அணித் தலைவர் (அவர் பெயர் மறந்துவிட்டது) கையெழுத்துடன் கடிதம் வந்திருந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம் ஒரு புறம் சிரிப்பு ஒரு புறம். அடப்பாவிகளா! கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட பதவிகளின் எண்ணிக்கை அதிகம் போலும் என்று நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு இரண்டு கூட்டதிற்கும் சென்று வந்தேன்.. அதன் பிறகு என் அம்மா இதெல்லாம் படிக்கிற காலத்தில் வேண்டாம் என்று சொன்னதால், அழைப்பிதழ்கள் வந்தாலும் போவதை நிறுத்திவிட்டேன். அவர்களும் ஆறு மாதங்களுக்கு பிறகு அழைப்பிதழ் அனுப்புவதை நிறுத்தியும் விட்டனர்.

எனக்கு சினிமா எப்படியோ அது போல தான் அரசியலும். ஒரு நாளிதழை படிக்க எடுத்தால், முதலில் சினிமா செய்திகளையும் அடுத்து அரசியல் செய்திகளையும் படிப்பேன். ஆனால் பெரும்பாலும் அரசியல் பற்றி யாரிடமும் தர்க்கம் செய்யமாட்டேன். ஆனால் நண்பர்களிடம் காரசார விவாதம் இருக்கும். எனது அரசியல் வாழ்க்கை(?) இப்படித்தான் இருந்தது, சென்னைக்கு வந்து ஒரு வேலையில் சேருகின்ற வரை.

Wednesday, March 21, 2007

கிரிக்கெட் ஆடிய வசந்த காலங்கள்

கிரிக்கெட் காய்ச்சல் இப்போ மருத்துவருக்கும் அடிக்கிற மாதம் இது. தோனி தும்முறது முதல் கும்ளே கும்மி அடிக்கிறவரை எல்லாமே இப்போ தலைப்பு செய்திகள். ஆனா இந்த கிரிக்கெட் எங்க ஊருக்குள் நுழையாத காலம் நான் ஆறாவது, ஏழாவது படித்த வருஷங்கள். எங்கள் ஊரிலும் லகான் படத்தை போன்ற அணி ஒன்று இருந்தது.

கிரிக்கெட் விளையாடுவதற்கு உபகரணங்கள் எல்லாமே எங்கள் ஊரில் கிடைக்கும் பொருள்கள் தான்.. ஆரம்ப காலங்களில், தென்னை மட்டை.. பிறகு, எங்கள் ஊர் தச்சரிடம் செய்து வாங்கிய மட்டை.. இந்த மட்டை செய்வதற்கு அந்த தச்சரிடம் பல நாள் தவங்கிடப்போம். அவரும் ஏதாவது வீட்டிற்கு கதவையோ ஜன்னலையோ செய்துகொண்டிருப்பார், நாங்கள் போகும் போதெல்லாம். அவருக்கு வெற்றிலை பாக்கு, அவருக்கு பிடித்த நிறுவனத்தின் மூக்குப்பொடி, புகையிலை, மலபார் பீடி என்று கேட்பதை எல்லாம் வாங்கித் தருவோம். ஆனால் அப்படி வேப்பமரத்தினால் செய்யப்படும் அந்த மட்டை ரொம்பவும் எடை அதிகமாக இருக்கும். வருகிற பாலை தூக்கி அடித்தால் மட்டையின் பளு காரணமாக அது சுலபமாக நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களை தந்துவிடும். இதே வகையில் தான், நாங்கள் ஸ்டெம்புகளையும் செய்வோம்.

அப்போது கிரிக்கெட் என்பது படித்த மக்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக எங்கள் ஊரில் கருதப்பட்டது. அதனால் நாங்கள் விளையாண்டால் அதை சுற்றி நின்று பார்ப்பதற்கு, ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நூறு கேள்விகள் கேட்பதற்கு ஏகப்பட்ட ஆட்கள் இருப்பார்கள். அதுவும், நாங்கள் பெரும்பாலும் பள்ளி சென்று வந்த சாயங்கால வேளைகளிலும் வார இறுதிகளிலும் விளையாடுவதால், எங்கள் ஆட்டத்தை காணவே பெரும் கூட்டம் இருக்கும். அடிக்கின்ற பந்தை பொறுக்குப் போடுவதென்பது நின்று பார்க்கும் ஒவ்வொரு சின்ன வயசுபசங்களுக்கும் பிடித்தமான காரியம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எங்கள் ஊர் கிறித்துவ பேராலய வளாகத்தில் தான். பேராலயத்தை ஒட்டி எங்கள் ஊரின் இடைநிலைபள்ளியும் (எட்டாம் வகுப்புவரை தான் இருக்கும்.) இருப்பதால், அந்த மைதானத்தில் தான் எங்களது ஆட்டங்கள் நடக்கும். இந்த நேரத்தில் எங்களது கிரிக்கெட் ஆட்டத்தை ஊக்குவித்து எங்கள் கூட சேர்ந்து விளையாண்ட பாதிரியார் ஜேம்ஸ் மைக்கேல் ராஜை இங்கே நினைவு கூர்ந்தே ஆகவேண்டும். அவருக்கு கிட்டதட்ட நாற்பதை ஓட்டிய வயது. நாங்கள் பல நாட்கள் விளையாடும் பொழுது, அந்த பந்து பள்ளிக்குள் விழுந்துவிடும். அவரிடம் அனுமதி பெற்றுத்தான் அந்த பந்தை எடுத்து வருவோம். அப்படித் தான் எங்களுக்கு அவர் பழக்கமானார். அதன் பிறகு அவர் எங்கள் கூட சேர்ந்து விளையாடுவார். அவரே பந்துகளையும் வாங்கி வந்து தருவார். கிரிக்கெட் ஆட்டத்தின் சில நுணுக்கமான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். மற்ற நாட்டின் ஆட்டங்களை பார்க்கவைத்து எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும், எதனால் அவர்கள் அவுட் ஆனார்கள் என்பதையும் விளக்குவார். எங்களுக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயரையே அடைமொழியாக வைத்து, (நாங்கள் விளையாடும் பாணியின் அடிப்படையில்) அந்த பேர் சொல்லியே கூப்பிடுவார். அப்படி எனக்கு கிடைத்த பேர், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் பூன் பெயர். நான் மட்டையை சுழற்றினால் அது அவரை போலவே இருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் அவருக்கு பின் வந்த பாதிரியார்கள் யாரும் எங்களுடன் ஒட்டவில்லை. நாங்களும் பேராலய வளாகத்தில் விளையாடுவதை விட்டுவிட்டு ஊரின் வெளியே இருக்கும் பயன்படாத புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்தோம். அப்படி விளையாட நாங்கள் ஆரம்பித்த போது கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது.

எங்கள் ஊரில் இருந்து திண்டுகல்லிற்கு மற்றும் சின்னாளப்பட்டிக்கு படிக்கச் செல்லும் மாணவர்களே கிரிக்கெட் விளையாடினோம். அப்புறம் நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்த போது, மற்றவர்களையும் விளையாட ஊக்குவித்தோம். ஆடு மேய்ப்பவர்களுக்கும் இந்த விளையாட்டை சொல்லிக்கொடுத்தோம். முதலில் அவர்கள் கிரிக்கட் மட்டையை கில்லி விளையாட்டிற்கு பிடிப்பதைப் போலத் தான் பிடிப்பார்கள். மெல்ல அவர்களுக்கு இந்த விளையாட்டு பிடித்து போய், கிரிக்கெட்டோடு ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள். நஞ்சை வயல்களில் அவ்வப்போது உழுவதால் அது ரம்பத்தை போல மெடு பள்ளமாகத் தான் இருக்கும். அதை சமநிலைப் படுத்துவதற்கு தென்னை மரத்தை, உருளையாக பயன்படுத்தினோம். அதில் குடம் குடமாக பக்கத்து வயலில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து ஊற்றி சமனநிலை படுத்தினோம். அந்த கிராமத்து பிட்சை நாங்கள் உருவாக்க எங்களுக்கு கிட்டதட்ட இரண்டு வாரகாலங்கள் ஆனது. வார இறுதிகள் மற்றும் பள்ளிவிட்டு வந்த பின் நாங்களும், மற்ற நேரங்களில் ஊரிலே இருக்கும் மற்ற நண்பர்களும் இந்த வேலையை செய்தோம்.

இப்படியாக கஷ்டப்பட்டு தயார் செய்த பிறகு, ஒரு மாதமோ இரண்டு மாதமோ தான் விளையாடி இருப்போம். அதன் பிறகு தென்மேற்கு பருவமழை பெய்தது. ஒரு நாள் பள்ளி விட்டு நாங்கள் அந்த வயல் மைதானத்தை கடக்கும் போது, அந்த வயலின் சொந்தக்காரர் அதில் டிராக்டர் விட்டு உழுதுகொண்டிருந்தார். எங்களின் மைதானம், இத்தனை காலங்கள் வியர்வை சிந்தி தயார் செய்த மைதானம், சில சோள விதைகளையும் அவரை விதைகளை பயிராக்க அழிக்கப்பட்டுகொண்டிருந்தது. அந்த இனம் புரியாத வயசில் எங்களின் எல்லோருடைய நெஞ்சங்களும் சொல்ல முடியாத சோகத்தில் உடைந்துகிடந்தது. அதன் பிறகு விளையாட இடம் சரிவர கிடைக்காமல் வெவ்வெறு இடங்களில் விளையாடினோம். இதனிடையே, பக்கத்து ஊர்களுக்கும் போட்டிகளுக்காக சென்று வருவோம். பிறகு, எல்லோரும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வேறு வேறு ஊர்களுக்கு கல்லூரி படிக்கச் சென்றதால், எங்கள் ஊரில் நான் கிரிக்கெட் விளையாடி கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போன வருடம், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பையன்கள் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு கோப்பை வாங்கி இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு என் உள்ளம் மகிழ்ந்து போனது. என்னைப் போலவே, அப்போது எங்களது அணியில் இருந்த மற்றவர்களும் இதை கேட்டு மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

[இந்தியாவில் உலககோப்பை நடந்த காலத்தில் தான் எங்கள் ஊரின் மிக அதிகமான நபர்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலம். கிரிக்கெட் பற்ரிய ஆர்வம் அப்போது தான் அதிகமாக பரவியது. இப்போது கிட்டதட்ட முக்கால்வாசி பேர், இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள்]

Monday, March 19, 2007

இது 'CAR'கால கதைகள்

என் கிராமத்தில், சிறு வயதில், மோட்டார் வாகனங்களை பார்ப்பதே அபூர்வம். தினமும் அரைமணிக்கொரு தடவை வரும் பஸ் தான் எங்களுக்கு தெரிந்து மோட்டார் வாகனங்கள். மற்றபடி வேறு எங்கே சென்றாலும் சைக்கிள் தான். சில சமயம் பக்கத்து ஊரில் டூரிங் டாக்கீஸில் படம் பார்க்க, ஒரே சைக்கிளில் நாலு பேர் போன சம்பவம் எல்லாம் உண்டு. அப்போது பைக்குகள் வைத்திருந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான். மற்றபடி திண்டுக்கலிலிருந்து எங்கள் ஊர் கடைகளுக்கு சரக்கு கொண்டு வருவது மாட்டு வண்டிகள் தான். இரண்டு மாடுகள் பூட்டிய, மரத்தினால் ஆன பெரிய சக்கரங்கள் கொண்ட வண்டிகள் இதற்கென பயன்படுத்தபட்டு வந்தன. பின்னாளில் அதெல்லாம் டயர் பொருத்தபட்ட வண்டிகளாக மாறிவிட்டன.. மணல், செங்கல் எடுத்து வரும் சொற்ப வண்டிகளே மர சக்கரங்கள் (தரையில் படும் அதன் வெளிப்புறங்கள் இரும்பினால் ஆனவை) கொண்டவை.. இப்போது அந்த வண்டிகளையும் பார்க்க முடிவதில்லை.

அடுத்து, சைக்கிளுக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள்.. கிராமங்களில் டி.வி.எஸ் 50-யும் M-80 தான் அதிகம் இருக்கும். இவைகள் தான் அசாத்திய சுமைகளையும் சுமந்து செல்ல உதவும்.. கரமுரடான பாதைகளுக்கும் கட்டுறுதியான சவாரி.. நாங்களும் M-80 தான் வைத்திருந்தோம். என் நண்பர்கள் வந்துவிட்டால், லோடு ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அந்த அகல நீளமான கேரியரில் ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு மலைப் பாதைகளில் செல்வோம். எவ்வளவு லோடு அடித்தாலும் மட்டேன் என்று அடம் பிடிக்காமல் எங்களை சுமந்து செல்லும். சொற்ப எண்ணிக்கையில் புல்லட்கள் இருக்கும். தட தடன்னு சத்தத்துடன் இந்த வண்டிகள் என் சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும். இந்த வகை வண்டிகளை ஓட்டுவதற்கு எனக்குள் அதிகமான ஆசைகள் இருந்து வந்தது ஒரு காலத்தில்.. ஆனால் இன்று வரை அது நிறைவு பெறவில்லை. புல்லட்களின் உருவத்தை பார்த்து சற்று பயமாகவும் இருக்கும். ஆனால் இங்கே அமெரிக்கா வந்த பிறகு இங்கு அவர்கள் ஓட்டும் இரு சக்கர வண்டிகளை பார்த்து, புல்லட்டோடு ஓப்புமை செய்கிறேன்.. கட்டெறும்பு பக்கத்தில் சித்தெறும்பு.

சைக்கிள்களும், இரு சக்கர மோட்டார் வாகனங்களும் றெக்கை கட்டி பறந்த காலங்களில், கார்களை பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நேரங்களில், எங்கள் ஊருக்கு அவ்வப்போது வருவது திரைப்பட சுவரொட்டிகளை மூங்கில் தட்டிகள் சுமந்து வருபவை தான். பக்கத்தில் இருக்கும் சின்னாளப்பட்டி மற்றும் திண்டுக்கலில் ஏதேனும் படம் ஐம்பது நாட்களை தாண்டிவிட்டால் இது போன்று கார்களில் வந்து விளம்பரம் செய்வார்கள். அந்த கார்களின் தலையில் இரண்டு ஒலிபெருக்கிகள் இருக்கும். அதில் அந்த படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இடையிடையே பெரிய வீதிகளின் சந்திப்புகளில் காரை நிறுத்தி, ஒலிவாங்கி (மைக் - சமீபத்தில் தெரிந்து கொண்ட ஒரு தமிழாக்க வார்த்தை) பிடித்து படத்தின் அருமை பெருமைகளை பேசுவார்கள். அப்படியே துண்டு பிரசுரங்களையும் தருவார்கள். இப்படி கார்கள் வந்தவுடன் ஊரில் இருக்கும் எல்லா சின்ன பிள்ளைகளும் காரைச் சுற்றித் தான் நிற்பார்கள். கூட்ட கூட்டமாய் அந்த துண்டு பிரசுரங்களை வாங்க பலத்த போட்டியே இருக்கும். கார் கிளம்பும்போது அந்த காரின் பின்னே எல்லோரும் ஓடுவார்கள். அந்த கூட்டத்திலே நான் இருந்திருக்கிறேன் பல முறைகள்.

என்ன இன்று ஒரே கார் கதையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா.. அந்த எம்பெருமான் முருகனின் கருணையினால், கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு காரின் உரிமையாளனாக ஆக்கப்பட்டேன். வாழ்வின் அடுத்த கனவொன்று நிறைவேறியது. கார், நிசான் அல்டிமா 98-ம் வருட மாடல். கிட்டதட்ட 84000 மைல்கள் பயணித்துள்ளது. சிறு வயதில், நடராஜா சர்வீஸ்.. அடுத்து, சைக்கிள்.. அப்புறம், M-80.. சென்னை வந்த பிறகு, ஸ்ப்ளெண்டர்.. இப்போது, கார்.. ஆண்டவன் நம்மை ஒவ்வொரு படிக்கட்டாக மெதுவாக ஏற்றுகிறான் என்று அறிந்து சந்தோசம் கொண்டேன்.. அப்பா, அம்மாவிடம் சொன்ன போது அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

இங்கே அந்த மகிழ்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே! விரைவில் அதன் புகைப்படங்களை இங்கே இடுகிறேன்!

Monday, February 26, 2007

ஜல்லிக்கட்டு

எங்கள் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு கொஞ்சம் பிரபலமானது. ஆனால் அலங்காநல்லூர் அளவுக்கு அல்ல. பொங்கலன்று நடக்கும் ஜல்லிகட்டு மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். அது எங்கள் ஊரில் வளர்க்கப்படுகின்ற மாடுகளை வைத்து மட்டுமே நடத்தப்படும். எங்கள் ஊரில் கிறித்துவ மக்களின் ஜனத் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொரு வீதியில் ஒரு சில குடும்பங்களால் நிர்வகிக்கப்படும் கோயில்களின் (சர்ச்) திருவிழாவும் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு முறையே ஜல்லிகட்டு நடக்கும். ஆனால் எங்கள் ஊரில் கள்ளச்சாராயம் கொடிகட்டி பறந்த காலங்களில் மூன்று ஜல்லிகட்டுகள் கூட ஒரே வருடத்தில் நடந்ததுண்டு.

ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது ஒரு பெரிய வேலை. காளைகள் இருக்கின்ற ஒவ்வொரு ஊருக்கும் சென்று அந்த காளை வைத்திருப்போரை முறையாக அழைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு அன்று இப்படி அழைக்கப்பட்டு வருகின்ற எல்லோருக்கும் அவர்கள் காளையும் அவர்களும் தங்குவதற்கு இடங்களும், சுவையான அசைவ சாப்பாடுகளும் வழங்கப்படும். அன்று எங்கள் ஊரின் எல்லா வீதிகளிலும் இந்த காளைகள் உலா வரும். ஜலங் ஜலங்கென்று கழுத்துமணி ஒலிக்க இவைகள் நடந்து வருவதை பார்ப்பதே அழகாய் இருக்கும். கிட்டதட்ட ஒவ்வொரு காளையுடன் மூன்று பேர் வருவார்கள். உங்களுகெல்லாம் தெரிந்திருக்கும், பெரும்பாலும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு தான் போட்டிருப்பார்கள். அன்று மட்டும் கழுத்துக்கும் கயிறு போட்டு அழைத்து வருவார்கள். காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும்.

சில காளைகள் அப்படி அழைத்து வரப்படும் போது முன்னங்கால்களை முன்னே தூக்கி குதித்து பார்ப்போர் வயிற்றில் புளியையும் கரைக்கும். அந்த காளையை அழைத்து வருவோரையே கீழே தள்ளி விளையாடியும் பார்க்கும். ஒரு காளையுடன் மூன்று பேர் அனுமதி, சாப்பாட்டுக்கு. அவர்களுக்கு தனியாக டோக்கன் கொடுத்திருப்பார்கள். இந்த காளைகளை வேனில் ஏற்றி தான் அழைத்து வருவார்கள். அதோடு இந்த ஜல்லிகட்டை பார்ப்பதற்கு அந்த ஊரில் இருந்தும் இருபது முப்பது பேர் இந்த வேனில் வருவார்கள். இந்த மாதிரி ஜல்லிக்கட்டுகளில் எங்கிருந்து தான் வருமோ, சாராயம் கரைபுரண்டு ஓடும்.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நடக்கும் இடத்தை விட கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு குடுவை போல இருக்கும், இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் வடிவமைப்பு. சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரங்களை வைத்து கிட்டதட்ட ஒரு ஏழடி உயரத்தில் மேடைகள் அமைக்கப்படிருக்கும். அதிலிருந்து தான் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஜல்லிகட்டை பார்ப்பார்கள். இந்த மாதிரி மேடைகள் கிட்டதட்ட ஒரு இருநூறு, முந்நூறு பேர்களை தாங்குவதாக இருக்கும். மற்ற எல்லா இளைஞர்களும் கீழே நின்று தான் பார்ப்பார்கள். மொத்தத்தில் காளையை பிடிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் சில பேர் தான். அவர்களும் துறுதுறு என்று தான் இருப்பார்கள்.

காளையை அந்த மாடு பிடிக்கும் மைதானத்திற்குள் அவிழ்த்துவிடும் இடத்திற்கு பெயர் கிட்டி. மைதானதிற்கு வெளிப்புறம் அந்த கிட்டியின் பக்கத்தில் வந்த பிறகு மாடுகளின் கயிறை எல்லாம் அவிழ்த்துவிடுவார்கள். ஏற்கனவே அவிழ்த்துவிடப்பட்ட மாடு மைதானத்தை விட்டு ஓடிய பிறகு தான் அவர்கள் அடுத்த மாடை அவிழ்த்துவிடுவார்கள். அதுவரை கிட்டியின் கதவுகளுக்கு பின்னே மாடு நின்றுகொண்டிருக்கும். புதிய மாடு வரும் போதும் அந்த மாட்டை பற்றியும் அது எந்த ஊரில் இருந்து வருகிறது என்பதனையும் சொல்வார்கள். இதற்கென மைக்கில் எப்போதும் ஒருவர் உச்சஸ்தாயில் வர்ண்ணைகளை சொல்லிக்கொண்டிருப்பார், விருமாண்டி படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் செய்வதைப் போல.

அந்த மாடு வெளிவரும் போது அதனை சுற்றி மாடுபிடிப்பவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். எந்த மாடைப் பிடித்தாலும் விழாக்குழுவினரின் சார்பாக ஒரு துண்டோ, வேஷ்டியோ தருவார்கள். அது இல்லாமல் பிடிக்கவே முடியாத சில மாடுகளுக்கு பல ஆயிரம் ரூபாயை பந்தயம் வைப்பார்கள். நான் ஒரே ஒரு ஜல்லிக்கட்டை நேரே கீழே நின்று பார்த்திருக்கிறேன். சில மாடுகள் ஆவேசத்துடன் வந்து மெதுவாக சுத்திமுத்தி பார்க்கும். அது அந்த மாடின் தெனாவட்டை காண்பிக்கும். அந்த மாதிரி மாடுகளை லேசில் பிடிக்க முடியாது. சில மாடுகள் கோபத்தில் தனது கொம்புகளை கீழே குத்தி எல்லாப் பக்கமும் வாரி இறைக்கும். சில காளைகள் நேராக கூட்டதிற்குள் நுழையும். அந்த மாதிரி நேரங்களில் காளையை பிடித்து காயப்படுபவரை விட கூட்டத்தில் சிக்கி காயப்படுபவரே அதிகம்.

முதலுதவிக்கென்று ஒரு மருத்துவர் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்கும். இந்த குழுவை அமைக்காமல் ஜல்லிக்கட்டை யாரும் அவ்வளவு எளிதாக நடத்த முடியாது. காவல்துறையிடமும் முறையாக முன் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். காளைகளுக்கு மதுபானங்கள் ஏதும் கொடுக்காமலும், அந்த உயிரனங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாதபடியும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

முந்தைய காலத்தில், காளைகளின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் தங்க சங்கிலி மாட்டப்பட்டு, அதை எடுப்பவர்கள் அதை வைத்து கொள்ளலாமென்றும், தனது பெண்களை மணந்து கொள்ளலாமென்றும் பந்தயங்கள் வைப்பதுண்டு. இந்த கதைகளை கட்டபொம்மன் காலத்திலிருந்து நாம் கண்டு வருகிறோம். உயிரைப் பயணம் வைத்து ஒரு பெண்ணை கட்டிக்கொள்வதற்கு எத்தனையோ பேர் இந்த மாதிரி போட்டிகளில் கலந்துகொள்வதுண்டாம். தான் காதலித்த பெண்ணின் தந்தை தனது காதலியை இது போன்று பந்தயம் வைத்துவிட, அந்த பெண்ணை மணக்க காளையை பிடித்து பழக்கமில்லாத ஒருவன், காளை பிடிக்க போய், தன் உயிரை இழந்தது, நான் சின்ன வயதில் பல தடவை கேட்ட கதை. அதிலும் காதலன் இழந்த துக்கத்தில் அந்த மாட்டின் முன்னே விழுந்து அந்த பெண்ணும் உயிர்நீத்தது மனதை உருக்கிய சோகக் கதை.

Sunday, February 18, 2007

சாராயம் காய்ச்சுவதை கற்றுக்கொண்ட கதை

என் நண்பனின் அக்கா கல்யாணத்திற்காக எனது நண்பர்கள் எல்லோரும் திண்டுக்கல்லிற்கு வந்திருந்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கல்யாணம் முடிந்த பிறகு அதற்கு அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் மணக்க மணக்க கல்யாண சாப்பாடு சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து எங்கள் ஊர், பக்கம் என்பதால் என் நண்பர்களை என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். நான் விடுதியில் தங்கியே இளநிலை எல்லாம் முடித்திருந்ததால், நான் எல்லா நண்பர்கள் வீட்டிற்கும் பல தடவை சென்றிருக்கிறேன். ஆனால் அவர்கள் என் வீட்டிற்கு வருதுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.

எல்லோரும் திண்டுக்கலிலிருந்து எங்கள் ஊருக்கு பஸ் ஏறினோம். என் நண்பர்களில் இருவர் எப்போதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், இது போன்று பயணங்களின் போது மட்டும் பிடித்து வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான பிராண்டுகளை பிடிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். அதைப் பிடித்துவிட்டு மற்ற பிராண்டோடு விமர்சனமும் செய்வார்கள். அதனால் திண்டுக்கல்லில் ஏறும் போதே இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டனர்.

ஏற்கனவே தொலைப்பேசியில் நண்பர்கள் வருவது பற்றி சொல்லிருந்ததால் வீட்டில் தடபுடலாக சமையல் ரெடி ஆகி இருந்தது. போய் சேர்ந்தவுடன் என் ஊர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மோட்டர் பைக்குகள் வாங்கிகொண்டு சிறுமலைக்கு போவதாக பிளான் இருந்தது. நாங்கள் வீடு சேர்ந்த போது வண்டியெல்லாம் ரெடியாக இருந்ததால் வண்டிகள் ரெடியாக இருந்ததால், என் அப்பாவிடம் எல்லோரையும் அறிமுகம் செய்துவிட்டு கிளம்பினோம். என் அம்மா பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிவதால் அப்போது அவர்கள் வீட்டில் இல்லை. எங்களுக்கான சாப்பாடு என் அம்மாச்சி வீட்டில் தான் ரெடியாகி கொண்டிருந்தது.

எங்கள் ஊரில் இருந்து சிறுமலை அடிவாரம் கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர் இருந்தது. வண்டியில் நாங்கள் அடிவாரத்தை நோக்கிச் செல்ல செல்ல சில்லென்று காற்று, எங்களை வரவேற்றது. சிறுமலை அடிவாரத்தில் ஒரு கிறிஸ்த்துவ பாதிரியார் குடியிருந்து வந்தார். அவர் பங்களாவில் தான் எங்களது வண்டிகளை பத்திரமாக நிறுத்திவிட்டு மலையேறக் கிளம்பினோம்.

நான் ஏற்கனவே சாராயக்கதைகள்னு எங்கள் ஊரில் காய்ச்சப்படுகின்ற சாராயம் பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன். இந்த மலையில் தான் சாராயம் காய்ச்சுவார்கள். கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் ராமர் கல் என்னும் இடம் வரும். அங்கே பெரிய பாறையில் நீர் தேங்கி கிடக்கும். அங்கே இருக்கும் ஒரு வழுக்குப் பாறையில் மூன்று கோடுகள் இருப்பதால் அதை ராமர் கல் என்று சொல்லுவார்கள். நாங்கள் அந்த இடத்தை நோக்கி நடக்க நடக்க சாரயாம் காய்ச்சப்படுவதற்கான வாசனைகள் வர ஆரம்பித்தன.

நாங்கள் அந்த இடத்தை அடையவும் அங்கே சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த எங்கள் ஊர் ஆட்கள் அலறி அடித்து ஓடவும் சரியாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதும் காட்டு மிருகங்கள் வந்துவிட்டதா என எங்களுக்குள் பயம் வேற. அப்படி ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் பின்னாடி திரும்பி பார்த்தார். கூட்டத்தில் என்னைக் கண்டவுடன் "அட! கடக்கார முத்துராசு மவன்!" என்று கத்த ஓடிய எல்லோரும் திரும்ப வந்தார்கள். என் நண்பர்கள் கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருந்ததால் போலீஸ் தான் மப்டியில் வந்துவிட்டார்கள் என தலைதெறிக்க ஓடியுள்ளனர். என்னைக் கண்டவுடன் தான் அவர்களுக்கு உயிர் வந்துள்ளது.

அதன் பிறகு என் நண்பர்களுடன் அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டார்கள். சாராயம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை செயல் முறையில் காட்டினார்கள். என் நண்பர்கள் கல்லூரி கெமிஸ்டரி லேபை விட இது பரவாயில்லை என்று குஷியாகிவிட்டனர். மூன்று பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அதிலிருந்து வரும் நீராவியை இன்னொரு பானையில் ஒரு சிறிய குழாய் மூலம் சேமிக்கின்றனர். கீழிருக்கும் பானையில் தான் ஒரு வாரமாக வெல்லம், பட்டை முதலிய பொருள் எல்லாம் போட்டு ஊறவைத்த திரவம் இருக்கும். அதை காய்ச்சும் போது வரும் நீராவி தான் சாராயமாக வெளிவருகிறது.

அப்படி காய்ச்சுகின்ர சாரயம் நம் உடலை அரிப்பதற்கான காரணத்தையும் ஒருவர் செயல் முறையில் காட்டினார். ஒரு குவளையில் சாரயத்தை எடுத்து வானத்தை நோக்கி ஊற்றினார். அந்த சாரயம் கீழ் நோக்கி வரும் போது ஒரு தீப்பந்தத்தை அதில் காட்ட, அப்படியே அது பற்றி எரிந்தது. ஒரு பெட்ரோலை குடிப்பதைப் போலத்தன் இந்த சாரயத்தை குடிப்பது என்று சொன்னார்கள். அப்படி பிடிக்கப்பட்ட சாராயத்தை ஒரு பெரிய டியூபில் போட்டு அடைத்து அந்த இடத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

நேரம் ஆனதாலும் எல்லோருக்கும் பசியெடுக்க ஆரம்பித்ததாலும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு நாங்கள் கிளம்பினோம். என் நண்பர்கள் எல்லோரும் இந்த சிறுமலை ட்ரிப் வித்தியாசமானது என்று சந்தோசப்பட்டார்கள். விட்ட இடத்தில் வண்டிகளை எடுத்துகொண்டு, வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்கான விருந்து சுடச்சுட ரெடியாகி இருந்ததால் களைப்பினால் சாப்பாடி டபுளாக உள்ளே இறங்கியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நடந்த கதையை என் அப்பாவிடம் கூறிக் கொண்டிருந்தேன். என் அப்பா சற்று பயந்து போய்விட்டார். சாராயம் காய்ச்சுபவர்கள் சில சமயம் போலீஸை தாக்கிய சம்பவத்தை எல்லாம் சொன்னார். இப்போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்று சந்தோசப்பட்டார். எங்களுக்கு உள்ளே ஒரு சின்ன பயம் வந்து சென்றது. சாப்பிட்ட கோழி வயிற்றுக்குள் கொக்கரக்கோ என்று கூவியது எங்களுக்கு மட்டும் மெல்லக் கேட்டது.

டீக்கடை சம்பவமும், பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்தின செய்தியும்

எங்க ஊர் டீக்கடையில் காலையில நடக்கிற கூத்து பாக்கவே சிரிப்பா இருக்கும். அப்படி நான் கவனித்த ஒரு கூத்தை இப்ப உங்களுக்கு சொல்றேன். காலைல ஒரு ஐந்து மணிக்கு எங்க ஊர் பூசாரி கோயில்ல ரேடியோ போடுறப்பவே, எல்லா டீக்கடையும் ஓபன் ஆகிடும். எங்க ஊருல ஒரு நாலஞ்சு டீக்கடைகள் இருக்கு. அதுல முக்கல்வாசி அந்த கோயிலை சுத்தியே இருக்கு. முந்தி காலத்துல டீக்கடையில பாட்டு மட்டும் தான் ரேடியோவிலோ டேப்லயோ போடுவாங்க. இப்போ எல்லாம் ரேடியோ மாதிரி டிவி ஆகிடுச்சு. காலைல கே டிவில போடுற பாட்டோட ஆரம்பிச்சா நைட் படம் வரை தொடர்ந்து ஓடும். ஒரு ஆள் வந்து டீக்கடையில உட்கார்ந்தா முதல் காபி குடிச்சுட்டு, வர்ற பேப்பரை படிச்சுட்டு, அங்க போடுற வடை பஜ்ஜியை சாப்பிட்டு பத்து மணிவாக்குல தான் அந்த டீக்கடையையே விட்டு கிளம்புவாங்க.

அப்படி வந்து ஒரு நாள் நம்ம முருகன் உட்கார்றார். இவருக்கு வேலையே டீ குடிச்சிட்டு டீக்கடையிலே அரட்டை அடிக்கிறது தான். இவர் ஒரு குறிப்பட்ட கட்சியை சார்ந்தவர். என்ன ஆனாலும் அந்த கட்சியை விட்டுக் கொடுக்காதவர்.

"தம்பி, ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போடப்பா"

இவர் கடை பாய்லர்ல நிக்கிற டீ மாஸ்டர் கிட்ட சொல்லி முடிக்க அந்தப் பக்கம் இவரோட பங்காளி பழநின்னு ஒருத்தர் போறார்.

"யோவ் பங்கு.. என்னையா நான் உட்கார்ந்து இருக்கதை பார்த்தும் பாக்காத மாதிரி போற.. வாய்யா.. ஒரு காப்பியை குடிச்சிட்டு போகலாம்"

வேலில போற ஓணானை மடியை விடுற மாதிரிங்கிற பழமொழி இவங்களை பார்த்த பிறகு தான் சொல்லி இருப்பாங்க போல.

"தம்பி, மொதச் சொன்ன காப்பியோட இன்னொரு காப்பியை போடப்பா.. பாதி சக்கரை போட்டாப் போதும். நம்ம பங்குக்கு சக்கரை (நோய்) இருக்குல்ல.. என்ன பங்கு.. நான் சொல்றது சரி தான"

இப்படி இவர் சொன்னதுமே மெல்ல பழிநிக்கு உள்ளாற ஷூட் ஆகி இருக்கும். இத்தனை பேர் மத்தில சக்கரை பத்தி கத்தி சொன்னதுல. இருந்தாலும் கொஞ்சம் அமைதியா இருப்பார்.

அந்த நேரம் பாத்து காலைல தினசரி வரும். ஆளுக்கொரு பேப்பரா எடுத்துப் படிக்க ஆரம்பிப்பாங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நக்கல்ப்பட்ட பழநி எப்படா காலை வாரணும்னு கங்கணம் கட்டிகிட்டு இருப்பாரு. இப்போ முருகனோட கட்சியை பத்தி இன்னொரு கட்சி பேச்சாளர் மட்டரகமா பேசி இருக்கதை பேப்பர்ல இவர் படிக்க மனுஷனுக்கு குஷியாகிடும். இந்த நேரத்துல சூடா காப்பியை டீக்கடைக்கார பையன் இவங்களுக்கு தர, அந்த சூடு மெல்ல இவங்க கிட்டயும் ஏறுது.

"யெம்பா பங்கு, என்ன அந்த கட்சிக்காரன் உன் கட்சியை இப்படி பேசி இருக்கான். எவ்வளவு தைரியமா இருந்தா உன் கட்சிகாரன் எல்லாம் நாக்கை புடுங்கி செத்து போகமாட்டீங்களான்னு கேக்குறான்"

மெல்ல பழநி திரியை கொளுத்தி போடுறார்.

"அவன் கிடக்கிறான், காசுக்கு மாரடிக்கிற பய.. ஒரு தடவை என்னதான் பேசுறானானு பாக்க திண்டுக்கல்ல நடந்த மீட்டிங்கு போயிருந்தேன்.. இவன் பேச்சை கேக்க மைக் செட் போடுறவன் மட்டும் தான் இருக்கான்.. கேக்குறதுக்கே ஆள் இல்லாதப்போ எப்படி பேசுறான் பாரு"

மனுஷன் டென்ஷனாகி நாலஞ்சு கெட்ட வார்த்தைகளை அந்த பேச்சாளர் மீது விட்டிருப்பார்.

பழநிங்கிறவர் இருக்காரே, அவர் அப்பக்கூட விடமாட்டார்.

"அட பங்கு, நல்லா யோசிச்சு பாரப்பா.. அது உன் கட்சி மீட்டிங் தான"

"என்ன நக்கலா உனக்கு..ம்ம்.. நம்ம பங்காளியேன்னு உன்னை கூப்பிட்டு காப்பி வாங்கி கொடுத்தா, நான் கொடுத்த காபித் தண்ணி உள்ளாற இறங்கினவுடனே நம்மளையே நக்கல் அடிக்கிற..ம்"

முருகன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்து இருப்பார்.

"யோவ்.. சும்மா போறவன கூப்பிட்டு சக்கரை..கிக்கரைனு நீ நக்கலடிப்ப, ஒத்த ரூவா காப்பிக்கு அத நா நாக்க தொங்க போட்டு கேட்டுகிட்டு இருக்கணுமா உன் கட்சிகாரன மாதிரின்னு"

பழநி அவர் வாய்க்கு வந்தபடி பேச, அந்த இடத்துல அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு எல்லோரும் காதை பொத்துற அளவுக்கு சண்டையும் தடித்த வார்த்தையுமாத் தான் இருக்கும்.

இப்படித்தான் நிறைய நேரங்களில் டீக்கடை பஞ்சாயத்துகள் இருக்கும். இந்த சண்டைகள் சில நேரம் அடுத்த தடவை டீக்கடையில் பார்க்கும் வரை தான் இருக்கும். இல்லையென்றால், ஜென்மபகையாகி விடும்.

இதைவிட பெரியது, குழாயடி சண்டைகள் தான். இந்த வம்பு சண்டைகள் பெண்களில் இருந்து ஆரம்பிப்பதால் பெரும்பாலும் ஜென்ம பகையாகவே மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

அப்புறம், நேற்று படித்த ஒரு நகைச்சுவையான செய்தி. புரோட்டாவுக்காக மதுரையில் ஒரு குடிமகன் பஸ்ஸையே கடத்தினாராம்!

Thursday, January 25, 2007

என் பள்ளியில் நடந்த குடியரசு தின விழா

'நீராருங் கடலெடுத்த' என்று மொத்த கூட்டமும் பாட ஆரம்பிக்க அந்த பாடலின் கீதத்தை தவிர வேற எதுவும் கேக்கவில்லை. ராணுவ வீரர்கள் மொத்தமாக நடந்தால் எப்படி ஒரே ஒலி வருமோ அவர்களின் காலடி தடத்திலே, அது போல, இந்த பாடலை எல்லோரும் பாடி, அன்றைய நாளை ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால், இந்த பாட்டு பாடி முடிக்கும் போது தான் நான் பள்ளியின் சுற்றுபுறச் சுவரை தாண்டி பள்ளிக்குள் குதித்திருப்பேன். ஆனால் இன்று குடியரசு தினம். எப்போதும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் காலை வழிபாடு அன்று எட்டு மணிக்கே. என் மொத்த பள்ளிக்கூடமும் பளீர் வெள்ளை சட்டையிலும், நீலநிற டிரவுசர்களிலும் இருந்தனர். அந்த வெள்ளை நிறத்தில் பட்டுத் தெறித்த சூரிய ஓளி அங்கே ஏதோ ஒளித் திருவிழா நடக்கிறது என்று ஊருக்கு சொல்லிகொண்டிருந்தது.

முதல் நாளே சொல்லிவிடுவார்கள் அடுத்த நாள் கட்டாயம் காலை குடியரசு நாள் விழாவுக்கு வந்துவிடவேண்டுமென்று.. வரவில்லை என்றால் அவர்கள் தனியாக கவனிக்கப் படுவார்கள் என்று ஒரு மறைமுக மிரட்டல் வேறு இருக்கும். இல்லையென்றால் யாரும் வரமாட்டார்கள். ஆனால் இப்படி எல்லாம் சொல்லித்தான் இப்படிபட்ட தேசப் பற்று விழாக்களை நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். அதுவும் தொலைக்காட்சிகள் பெருகிய இந்த நாட்களில் அதில் காண்பிக்கப்படும் படங்களும் திரை நாயக நாயகியரின் நேர்முக பேட்டியும் தான் குடியரசு விழாக்களை பெருமைப்படுத்துகின்றன. தேசிய தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் தேசியப் பற்றினை தனியாக குறும் படங்களையோ, இந்தியாவின் பெருமைகளையோ வைத்து சொல்லுகின்றன. ஆனால் எனக்கு தெரிந்து, அறிந்து, அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எந்த தமிழ் நாட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் நடத்துவதில்லை. தேர்தலின் போது மாற்றி மாற்றி தூற்றிகொள்ள மட்டுமே உபயோகப்படுத்தப் படுகின்றன.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர், எங்கள் தலைமையாசிரியரின் உரை இருக்கும். அவர் போன வருடம் என்ன பேசினாரோ அதையே மறுபடியும் பேசுவதாக இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் எல்லோரையும் அமரச் சொல்லிவிடுவார்கள். காலை வெயிலில் அவரின் பேச்சு எங்களுக்குள் உற்சாகம் கிளப்புவதை விடுத்து, கொஞ்சம் சோர்வையே எழுப்பும். அதற்கு அடுத்து வரும் எங்கள் தமிழய்யா உரை தான் எங்கள் ரத்தங்களை சூடேற்றும். அவரின் சொல் விளையாடல் எங்களுக்கு ஒரு மந்திரம் போலவே இருக்கும். எங்கள் தலைகள் அந்த மந்திரத்துக்கு தலையாட்டிக் கொண்டிருக்கும்.

ஆனால் எத்தனை பேர் உரையாற்றினாலும் குடியரசு தினம் என்றால் என்ன என்பதை யாரும் சொல்லமாட்டார்கள். சில மாணவர்களுக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ரெண்டும் நாம் 1947-இல் பெற்றதாகத் தான் நினைத்துகொள்வார்கள். எங்கள் தமிழய்யாவின் உரைக்கு பிறகு, அருகில் இருக்கும் காந்திகிராம பல்கலைகழகத்தில், இன்னும் கதராடையையே உடுத்திகொண்டு இருக்கும் பெரியவர் யாராவது வந்து தேசியக் கொடியை உயர்த்துவார். அந்த மூவர்ண கொடியை பறக்கையில் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் கொடி காத்த குமரனின் பிம்பமும், அவரது தேசபக்தியும் தான் தெரியும். அந்த மூவர்ண கொடியின் பின்னே எத்தனை எத்தனை பேர்களின் சுதந்திர மூச்சும், ரத்தமாய் உறைந்து போய்விட்ட தேச பக்தியும் பதுங்கி கிடக்கிறது.

எங்கள் ஊரில், ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. இந்த குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடியேற்றிவிட்ட பிறகு, எல்லோரும் ஊரின் முக்கிய தெருக்கலில் ஊர்வலமாக வருவார்கள். அந்த பிஞ்சுக் கரங்களில் உயர்த்திப் பிடித்த கொடியும், கொஞ்சும் குரலில் தேசியப் பற்றும் எங்கள் ஊரின் ஒட்டுவீட்டையும் ஓட்டையாக்கும் வேகமும் பொங்கும் உணர்ச்சியும் இருக்கும். இந்த ஊர்வலத்தை ஊரே நின்று பார்க்கும். டீக்கடையிலும் வெட்டிபேச்சு திண்ணைகளிலும் மக்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள். எனக்கு தெரிந்து கிராமங்களில் கொண்டாடுவது போலக் கூட நகரத்து பள்ளிகளில் குடியரசு விழா கொண்டாடப் படுவதில்லை. அதனால் தான் என்னவோ என் ஊரை போன்ற கிராமங்களில் இருந்து தான் நிறைய பேர் ராணுவத்தில் சென்று சேருகிறார்கள். எங்கள் ஊரின் அருகில் இருக்கும் நி.பஞ்சம்பட்டி என்ற கிராமத்திலிருந்து தான் அதிகபேர் ராணுவத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் தகவல் சொன்னார்கள் அந்த ஊரில் இருக்கும் மக்களிடம் பேட்டியெடுத்து.

என் பள்ளியில் கொடியேற்றியதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். முக்கியமாக மாறுவேடப் போட்டி. இந்த மாறுவேடப்போட்டியில் மட்டும், ஒரே மாணவன் ஒவ்வொரு வருஷமும் கட்டபொம்மன் மாதிரி வேசம் போட்டுவந்து தொடர்ந்து மூன்று வருடம் பரிசினை தட்டிச் சென்றிருக்கிறான். இதெல்லாம் முடிந்து வீட்டுக்கு சென்றால், தலைநகரில் நடக்கும் அணிவகுப்புக்கு ஜனாதிபதி தலைமை தாங்கி கொண்டிருப்பார். இந்த அணிவகுப்பை பார்க்காதவர் ஒருவர் கூட இருக்க முடியாது. அப்படி ஒரு நேர்த்தி இருக்கும்.

ஒன்றே ஒன்று இந்த நன்னாளில்.. எல்லோரும் சொல்வதை போல, நாடென்ன்ன செய்தது நமக்கு என்னும் கேள்விகளை கேட்பதை விடுத்து, நாமென்ன செய்தோம் அதற்கு என்று நினையுங்கள். இரண்டு தலைமுறைக்கும் முன்னர், எல்லோரும் என்னென்ன கஷ்டங்கள் பட்டோம் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இந்த சுதந்திரம் சும்மா வரவில்லை. எத்தனையோ இந்தியர்களின் கல்லறையில் தான் இந்த சுதந்திர பூ பூத்திருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துகொள்வோம்.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!

ஜெய்ஹிந்த்!!!

Friday, January 12, 2007

கிராமத்துப் பொங்கல்

இப்போது இந்த நேரம் எனது ஊரில் இருந்திருந்தால், காணும் பொங்கலுக்கு வருடாவருடம் நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு பண்ணிகொண்டிருப்பேன் என் நண்பர்கள் கூட சேர்ந்து.. காலை பத்து மணி முதல் இரவு பதினொரு மணி வரை போட்டிகள் நடக்கும். ஐந்து வயது குழந்தைகள் முதல் எழுபது வயது குமரன் வரை எல்லோருக்கும் போட்டிகள் உண்டு.. இதில் மாலை நான்கு மணிக்கு மேல நடக்கும் போட்டிகள் தான் சுவராஸ்யமானவை. கண்ணை கட்டிக்கொண்டு கயிற்றில் தொங்கும் மஞ்சள் தண்ணீர் நிரம்பிய பானையை உடைத்தல் போட்டி ரொம்ப ரசிக்க வைப்பதாய் இருக்கும். சில பேர், கண்ணை கட்டி விட்ட பிறகு பானையை நோக்கி நடக்காமல் கூட்டத்தை நோக்கி தடியோடு நடப்பதை பார்த்தால் ரொம்ப சிரிப்பாய் இருக்கும்.. நாங்கள் என் சென்னை டைடல் அலுவலகத்தில் இதே மாதிரி போட்டியை, பானைக்கு பதிலாக பலூனை வைத்து விளையாடினோம்.. அதை தொடர்ந்து கபடி போட்டி நடக்கும்.. இது மெல்ல சூரியன் அடிவனத்தில் தஞ்சமடையும் நேரம் நடக்கும்.. வேலைக்கு போய் திரும்பிய மக்கள் எல்லோரும் இதில் பார்க்கும் கூட்டதில் இருப்பதால் கூட்டம் இதற்கு மட்டும் அதிகமாக இருக்கும். கபடி போட்டியை பத்தி ஏற்கனவே கதைத்து விட்டதால் அதற்கு பிறகு வரும் மாறுவேடப் போட்டி பற்றி பார்ப்போம்..

எனக்கு இந்த மாறுவேட போட்டிகள் மிகவும் பிடிக்கும்.. இதற்கு வயது வரம்பு கிடையாது.. எல்லோருடைய திறமைகளையும் காட்ட கிடைக்கும் அற்புதமான களம். அதுவும் கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற போட்டிகள் தான் தங்களை கூராக்கி கொள்ள உதவும். இதில் போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் நிறைய பேர் கலந்துகொள்வார்கள்.. அவர்கள் கண்ணனாக, ராணுவ வீரனாக, கட்டபொம்மனாக வேடமிட்டு செய்யும் குறும்புகள் நம்மை பூமி விட்டு தனி உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.. இந்த மாதிரி போட்டிகளிலும் சில பிரச்சினைகள், வம்புகள் உண்டு.. சில பசங்க சினிமாவில் வரும் ஐயிட்டம் நம்பர் பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஆபாசமாக வேற ஆட முயற்சிப்பார்கள்.. அவர்களையும் முகம் கோணாமல் சமாளிக்க வேண்டும்.. இல்லையெனில் அவ்வளவு தான். அதுவும் இந்த மாதிரி போட்டிகளை காண குறைந்தபட்சம் ஊர் ஜனமே கூடி இருக்கும் அங்கே. அப்பொழுது இது போல முகம் சுழிக்க வைக்கும் செய்கைகளை அனுமதிக்கக்கூடாது..

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.. எங்கள் ஊரில் இருக்கும் எல்லா மாடுகளும் கழுவப்படும். கொம்புகள் மெருகூட்டப்பட்டு வண்ண வண்ண பெயிண்டுகள் அடிக்கப்படும். இதிலும் ஒரு கவனிக்கதக்க விஷயம் உண்டு. அந்த மாடுகளும் தங்கள் கொம்புகளில் முதலாளி கட்சியின் கொடி நிறத்தை சுமந்திருக்கும். ஜல்லிக்கட்டு காளைகள் கிட்டதட்ட ஒரு இருபது எங்கள் ஊரில் உண்டு. அந்த மாடுகளின் கொம்புகள் கூராக சீவப்பட்டிருக்கும். எப்படி பள்ளீயில் படிக்கும் போதும் ஒவ்வொரும் பென்சிலையும் ஆசை ஆசையா, கூரா சீவி வச்சிருப்போமோ அது மாதிரி அந்த கொம்புகளை சீவி வைத்திருப்பார்கள். மாடு வைத்திருக்கும் எல்லோர் வீடுகளிலும் பொங்கல் வச்சு சாமி கும்பிட்ட பின்னாடி, கிறித்தவர்கள் சர்சுக்கும் இந்துக்கள் கோவிலுக்கும் மாடுகளை அழைத்துச் செல்வார்கள். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின், அன்றைக்கு சிறிய அளவில் எங்க ஊரில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

எங்க ஊர் மாடுகளும் மற்ற இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு போய் வரும். அப்படி போவதற்கு முன், எங்க ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதாத விதி. ஒரு முறை அப்படி எங்க ஊர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளாமல் வெளியூருக்கு மாடுகளை அழைத்து சென்றதால் அந்த மாடுகளுக்கு ரத்தம் வருமளவு காயங்கள் உண்டாகின.. ஜல்லிக்கட்டு அன்றைக்கு எங்கள் கையில் ஒரு முழு நீள கரும்பு இருக்கும்.. தோகை சீவப்பட்டு, அடி வேருள்ள கணுக்கள் நீக்கப்பட்ட பெரிய கரும்பு இருக்கும்.. ஜல்லிகட்டு முடியும் முன் எப்படியும் இது மாதிரி மூன்று நான்கு கரும்புகளை தின்று தீர்த்திருப்போம். இவ்வளவு பெரிய கரும்பு வைத்திருப்பதிலும் ஒரு காரணம் உண்டு. ஏதாவது மாடுகள் அப்போது பக்கத்தில் வந்தால் இந்த கரும்பு உதவட்டுமே என்று தான்.

இந்த பொங்கல் விழாவை ஆரம்பித்தவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். வருடம் முழுக்க, மண்ணை பிளந்து, ஏரில் ஏறி, விதைகள் விதைத்து, அது முளை விடும் வரை கண் முழித்து, வாய்க்கால் வரப்புகளில் படுத்துக் கிடந்து இந்த உலகம் உய்ய வாழ்பவன் விவசாயி. எனக்கு தெரிந்து எந்த விவசாயியும் நல்ல சட்டை போட்டதில்லை. பணக்காரன் ஆனதில்லை. (பணக்காரன் ஆனதெல்லாம் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து விவசயம் செய்யும் மிட்டா மிராசுதார்கள் மட்டுமே) நான் சின்ன வயசுல் எப்படி பார்த்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறான். வற்றிய குளங்களை போலவே அவன் வயிறு இருக்கிறது.. இன்னும் அதே கூரை வீடுகள் தான் அவன் உறங்க, சமைக்க, அடுத்த தலைமுறையை விதைக்க அவனுக்காய் இருக்கிறது.. ஆனால் எவ்வளவு நடந்தாலும் அவன் விவசாயம் செய்வதை விட்டுவிட வில்லை.

இதில் இயற்கை வேறு அவனை பயமுறுத்துவதுண்டு.. ஒரு வருடம் மழையே இல்லாமல், நிலங்கள் வெடிக்க, அடுத்த வருடம் வரும் மழை அவன் பயிரை எல்லாம் குடித்து போனது.. இவ்வளவு கஷ்டப்பட்டு அவன் செவ்வந்தி தோட்டத்தில் சம்பாரித்தால், வாழை தோட்டத்தில் அந்த பணம் எல்லாமே போயிருக்கும், நேற்று அடுத்த காற்றீளோ, வாய்க்குள் நுழையாத பூச்சியின் காரணமாகவோ.. நெல் பயிரிடும் விவசாயி அதை சாப்பிடுவதே இல்லை. சோளமும் கம்பும் தான் அவன் பசியாற்றுகின்றன.. இப்படி அவன் உழைத்து உருகி போகும் வேலையில், அவன் கூடவே வாழ்ந்து, அவை வாழ வைப்பது இந்த மாடுகள் தான்.. அதற்கும் நன்றிகள் சொல்கிறான்.. சூரியனுக்கும் நன்றி சொல்கிறான்.. கிணற்று தண்ணீருக்கு, அந்த வயல்வெளி தோட்டத்துக்கு என்று எல்லாவற்றுக்கும் அவன் நன்றி சொல்கிறான்..

மாறி மாறி வரும் அரசுகள் அவனுக்காய் என்ன செய்கின்றன.. முறையான உதவிகள், ஆலோசனைகள், அவன் கேள்விகளை தீர்த்து வைக்கும் கருத்தரங்குகள்..ஏதேனும் ஒழுங்காய் நடத்துகிறதா.. நான் இதுவரை, எங்கள் ஊரில் இப்படி நிகழ்ச்சிகள் நடந்ததை விரல் விட்டு எண்ணிவிடுவேன்.. ஆனால் எப்போது அடித்துகொண்டாலும் அவனை பற்றி தான் அடித்துகொள்கிறார்கள். விவசாயியின் காவலனாய் காட்டிகொள்வதிலே குறியாய் இருக்கிறார்கள். இவனது வாழ்க்கையை யாருமே பார்ப்பதில்லை, பொங்கல் அன்று வாழ்த்து செய்தி விடவும், தேர்தலின் பொழுது வாக்குகள் பெற வாக்குறுதி தரவும் பயன்படுத்துகின்றன..

ஒரு பக்கம் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தொழிற்சாலைகள், மற்றும் வெள்ளை காலர் நிறுவனங்கள் எழுகின்றன.. அதை கொண்டு வருவதற்கு செய்யும் முயற்சிகளை, விளம்பரங்களை விவசாயத்திற்கு செய்வதில்லை..

இந்த பொங்கலிலாவது, எல்லோரும் சொல்வது போல, விவசாயிக்கு, தை பிறந்து வழி பிறக்குமா?

நண்பர்கள் அனைவருக்கும்,தமிழகம் மட்டுமல்ல, உலகம் எல்லாம் உழைக்கும் விவசாய மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்