Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Saturday, May 22, 2010

பலே ஜெயலலிதா மேடம்

மின்சார வெட்டுக்கள், விலைவாசி உயர்வுகள், குள ஆக்கிரமிப்புகள், காலாவதி அதிர்ச்சிகள் என்று மக்களுக்கு நாளுக்கு நாள் அதிர்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்க, புதியதாய் மாபெரும் விஷயத்தை கையெலெடுத்து போரட்டம் செய்ய தன் படைகைளை ஏவியிருக்கிறார், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியின் தலைவர், தமிழ் நாட்டை இரு முறை ஆண்ட செல்வி ஜெயலலிதா அவர்கள். என்ன போராட்டம், தலைமைசெயலக ஊழியர்கள் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பது..(ஏனைய பெரும் போராட்டங்கள் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்துகொண்டிருப்பீர்கள்)

இன்னமும் குளிர் அறையில் இருந்து உலகம் பார்த்து அரசியல் நடத்துகிறார் பாவம், கடந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் கூட இன்னும் சுட்டிக்காட்டபடவில்லையோ என்னவோ.

சிறிதாவூர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா அவர்களை விடுவித்திருக்கிறார்கள். தாசில்தாரர் இடம் மாற்றிய போது, ஆட்சியில் யார் இருந்தார்கள்? அவனவன் ஒரு கார்பரேட் கம்பெனி போல ஒவ்வொரு ஆண்டு தனது நிறுவனத்தின் மதிப்பை கூட்ட 'என்னவெல்லாமோ' செய்துகொண்டிருக்க, இன்னும் காக்கை உட்கார பனம் பழம் விழுமா, ராஜிவ் இறப்பில் மகுடம் சூட்டியது போல காத்திருப்பது விந்தைக்குறியது.

தனெக்கென்று ஒரு சேனல் வைத்துகொண்டு அதில் தன்னை பற்றியே பேசிக்கொண்டு, கிணற்று தவளை மாதிரி இருப்பது, இப்படியொரு ஆலமர கட்சி அடிசாய போகிறதே என்று, லட்சக்கணக்கான அநுதாபிகள் கண்ணீர் விடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதை தான் குறிக்கிறது.

எதிர்கட்சி சிறந்திருந்தால்,செயல்பாட்டோடு இருந்தால் நிச்சயம் மக்கள் நலம் பெறுவர். பெறுவோமா?

Wednesday, June 04, 2008

MGM - என்ன நிலையிலிருக்கிறது

கடந்த வாரம் ஊரிலிருந்து அப்பா, அம்மா, எனது சித்தி பசங்க எல்லோரும் விடுமுறைக்கு வந்ததால், சனிக்கிழமை MGM சென்றோம்.. கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு, அங்கே சென்றேன். எனக்கு அதிர்ச்சி நுழைவு கட்டணம் தரும் இடத்திலிருந்து ஆரம்பித்தது. இதற்குமுன் சென்ற போது, குறைந்தபட்ச நுழைவு கட்டணம் (இதை பெற்ற பிறகு உள்ளிருக்கும் சில விளையாட்டுகளுக்கு தனியாக பணம் கட்டவேண்டும்),எல்லா ரெய்டுகளும் விளையாடும் நுழைவு கட்டணம், சிறுவர்-சிறுமிகளுக்கு என்று மூன்று வகையான கட்டணங்கள் இருக்கும். ஆனால் இப்போது குறைந்தபட்ச நுழைவு கட்டணம் என்ற ஒன்றை எடுத்திருந்தனர். பெரியவர்களுக்கு என்று ஒரே கட்டணம் வசூலித்தனர். இதையெல்லாம் சரியாக வசூல் செய்யும் இவர்கள், உள்ளிருக்கும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் கூப்பாடு போடுவதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். பல மாதங்களாக, ஏதோ ஒரு விளையாட்டு இயந்திரம் அந்து விழுந்து உயிர் சேதம் நிகழ்ந்ததால் மூடி கிடந்ததாக கேள்விப்பட்டேன். அதன் பிறகாவது நன்றாக பராமரித்திருப்பார்கள் என்று நம்பினால் இன்னும் மோசம். பணம் மட்டும் சரியாக வசூல் செய்துவிட்டு உள்ளே ஒன்றும் உருப்படியாக இல்லை.

MGM பற்றி அவர்கள் தரும் வரைபடம் மகா கேவலம். ஏதோ கடமைக்காக தருகிறார்கள் போலும். அந்த பிட்-நோட்டிஸ்ஸில் நமக்கு ஒரு விஷயமும் உருப்படியாக இருப்பதில்லை. கழிவறைகள், குடிநீர் இடங்கள், எந்தெந்த ரெய்டுகள் எங்கெங்கே என்று ஒரு விவரமும் இல்லை. அரசாங்கம் தரும் பட்டாவில் இருக்கும் வரைபடம் மாதிரி இருந்தது. நிச்சயமாக அந்த ஒரு வரைபடம் அச்சடிக்க அவர்களுக்கு ஐம்பது காசு கூட செலவாகி இருக்காது.. அதை ஏன் தருகிறார்கள் என்று புரியவில்லை.

நிச்சயமாக நான் சென்று வந்த பிறகு, MGM போய் வாருங்கள் என்று மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு MGM ஒன்றும் விசேஷமானதாகவோ தரமானதாகவோ பாதுகாப்பானதாகவோ இல்லை என்பது தான் உண்மை. மற்ற நாடுகளில் இருக்கும் இது போன்ற பார்க்குகளோடு ஒப்புமை படுத்தும் அளவிற்கு இல்லை என்றாலும் இன்னும் நன்றாக மக்களுக்கு தரலாமே? ஏன் எப்படி காசை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொழில் ரீதியாக பார்கிறார்களோ தெரியவில்லை (உள்ளே கிடைக்கும் சாப்படு, ஒவ்வொரு ரெஇடிலும் இருக்கும் நபர்களின் அணுகுமுறை என்று மைனஸ் விஷயங்கள் பல.. சிலவற்றை மட்டுமே ஆதங்கத்தில் சொல்கிறேன்). மார்க் போடும் காலம் என்பதால் பத்திற்கு நான்கை மட்டுமே கஷ்டப்பட்டு தரமுடிகிறது இந்த பார்கிற்கு

Friday, January 18, 2008

சாலை நெரிசலை தவிர்க்க.. ஒரு எளிய வழி

சென்னை மட்டுமல்ல, எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் எட்டரையிலிருந்து ஒன்பதரை மணிக்குள் ஏகப்பட்ட நெரிசல் இருக்கும் சாலையில்.. அண்ணா சாலையில் ஒவ்வொரு சிக்னலையும் கடப்பதே பெரிய வேலையாக இருக்கும்.. பஸ்ஸில் கழைக்கூத்தாடி போல் படியில் பயணம், மின்சார ரெயிலில் வாசல் கம்பியை சுற்றி இருபது பேர் பிரயாணம்..இது தின நிகழ்வு..இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அலுவலகத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும்.. ஆனால் நமது அலுவலகத்தில் சீக்கிரம் வந்தாலும் ஆறு மணிவரை கட்டாயம் இருக்குவேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறது.. நேரத் தளர்வு கிடையாது. அதனால் சீக்கிரம் வந்து, இந்த கூட்ட நெரிசலில் சிக்காமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று நினைப்பதற்கும் தோன்றாது. எட்டு மணி நேரம் இருந்தால் போதும், கொடுத்த வேலையை முடித்தால் போதும் என்ற கொள்கை இருந்தாலும் நன்றாக தான் இருக்கும்.. ஆனால் அதற்கும் வழி இல்லை.. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அமெரிக்க வசதியும் கிடையாது.. அலுவலகத்தில் விட்டாலும் இன்னும் அந்த அளவுக்கு நமது ஊரில் நெட் வசதிகளும் பெருகவில்லை.. (நெட் கனெக்க்ஷன் புலம்பல்களை தனியாக கீதா மேடம் பதிவில் படிக்கலாம்)

மேல சொன்ன வழிகளை நிறைவேற்ற பல நாட்களும், பல விஷயங்களும் தேவைப்படும். அப்புறம் இந்தக் கதை தெரிந்தால் ஷன்கர் அவர்களுக்கு புது படத்திற்கான கதை கிடைத்துவிடும். அதெல்லாம் விட, அரசாங்கம்
நினைத்தால் நடக்கக் கூடிய இன்னொரு எளிய வழி இருக்கிறது. ஒவ்வொரு சாலைகளிலும் ஐநூறுக்கும் மேற்பட்டவர் பணிபுரியும் நிறுவனங்களுக்கு உரிமம் தரும் போதும் அந்த நிறுவனம் எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். எல்லா நிறுவனங்களின் இயங்கும் நேரமும், 8-5, 9-6, 10-7 என்னும் மூன்று நேரங்களில் ஏதாவது ஒன்றில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரே சாலையில் இருக்கும் நிறுவனங்கள் மேற்சொன்ன நேரங்களில் சமமாக பிரிக்கப்பட்டு இயங்க வேண்டும். இப்படி ஒரு ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களும் மாற்றப்பட்டால் சாலைகளில் போக்குவரத்தும் பிரிக்கப்பட்டு, நெரிசல் குறைந்து விடும். இதன் முதல் வெள்ளோட்டமாக எல்லா அரசாங்க அலுவலகத்தின் நேரங்களும் இது போல் மாற்றலாம்.

டைடல் போன்ற பெரிய வளாகத்தில் இருக்கும் நிறுவனங்கள் இது போல நேர பிரிவுகளில் உள்ளடக்கினால் அந்த வளாகத்துள் வண்டிகள் நிறுத்தும் இடங்களிலும், முக்கிய சாலையிலிருந்து அந்த வளாகத்துள் பிரியும் இடங்களும் நெரிசல் தவிர்க்கப் படும். ஏற்கனவே நிறைய பள்ளிகளின் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டுவிட்டன (அரசாங்க பள்ளிகள் தவிர்த்து) இதெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் நெரிசல் 30 முதல் 50 சவிகிதம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த அளவுக்கு இந்த உத்தி ஒத்துவரும், வெற்றிபெறும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு முயற்சியில் சற்றே சாலை நெரிசல் குறையும் என்பது எண்ணம்.. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இது மாதிரி வேற ஏதும் கருத்துகள் உங்களிடம் இருக்கிறதா? இருக்கவே இருக்கு பின்னூட்டம்.. பகிர்ந்துகொள்ளுங்களேன்

Wednesday, September 05, 2007

ஜீரோ ரூபாய் - கொடுக்கமாட்டேன் லஞ்சம்

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க, லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். (இதற்கு ரிசர்வ் பேங்க் எப்படி அனுமதி தந்தது என்பது விளங்காத விஷயம்) ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக "எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)



லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்க



எப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்

Wednesday, May 23, 2007

கொலைகாரனை கண்டுபிடிக்க உதவிய ஆர்குட்

இந்த செய்தியை பற்றி வளவள கொழகொழன்னு நான் பேசுறதை விட, நேரா இந்த இடத்துக்கு போய் நீங்களே படிச்சுக்குங்க நண்பர்களே..

Sunday, February 18, 2007

டீக்கடை சம்பவமும், பரோட்டாவுக்காக பஸ்ஸை கடத்தின செய்தியும்

எங்க ஊர் டீக்கடையில் காலையில நடக்கிற கூத்து பாக்கவே சிரிப்பா இருக்கும். அப்படி நான் கவனித்த ஒரு கூத்தை இப்ப உங்களுக்கு சொல்றேன். காலைல ஒரு ஐந்து மணிக்கு எங்க ஊர் பூசாரி கோயில்ல ரேடியோ போடுறப்பவே, எல்லா டீக்கடையும் ஓபன் ஆகிடும். எங்க ஊருல ஒரு நாலஞ்சு டீக்கடைகள் இருக்கு. அதுல முக்கல்வாசி அந்த கோயிலை சுத்தியே இருக்கு. முந்தி காலத்துல டீக்கடையில பாட்டு மட்டும் தான் ரேடியோவிலோ டேப்லயோ போடுவாங்க. இப்போ எல்லாம் ரேடியோ மாதிரி டிவி ஆகிடுச்சு. காலைல கே டிவில போடுற பாட்டோட ஆரம்பிச்சா நைட் படம் வரை தொடர்ந்து ஓடும். ஒரு ஆள் வந்து டீக்கடையில உட்கார்ந்தா முதல் காபி குடிச்சுட்டு, வர்ற பேப்பரை படிச்சுட்டு, அங்க போடுற வடை பஜ்ஜியை சாப்பிட்டு பத்து மணிவாக்குல தான் அந்த டீக்கடையையே விட்டு கிளம்புவாங்க.

அப்படி வந்து ஒரு நாள் நம்ம முருகன் உட்கார்றார். இவருக்கு வேலையே டீ குடிச்சிட்டு டீக்கடையிலே அரட்டை அடிக்கிறது தான். இவர் ஒரு குறிப்பட்ட கட்சியை சார்ந்தவர். என்ன ஆனாலும் அந்த கட்சியை விட்டுக் கொடுக்காதவர்.

"தம்பி, ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போடப்பா"

இவர் கடை பாய்லர்ல நிக்கிற டீ மாஸ்டர் கிட்ட சொல்லி முடிக்க அந்தப் பக்கம் இவரோட பங்காளி பழநின்னு ஒருத்தர் போறார்.

"யோவ் பங்கு.. என்னையா நான் உட்கார்ந்து இருக்கதை பார்த்தும் பாக்காத மாதிரி போற.. வாய்யா.. ஒரு காப்பியை குடிச்சிட்டு போகலாம்"

வேலில போற ஓணானை மடியை விடுற மாதிரிங்கிற பழமொழி இவங்களை பார்த்த பிறகு தான் சொல்லி இருப்பாங்க போல.

"தம்பி, மொதச் சொன்ன காப்பியோட இன்னொரு காப்பியை போடப்பா.. பாதி சக்கரை போட்டாப் போதும். நம்ம பங்குக்கு சக்கரை (நோய்) இருக்குல்ல.. என்ன பங்கு.. நான் சொல்றது சரி தான"

இப்படி இவர் சொன்னதுமே மெல்ல பழிநிக்கு உள்ளாற ஷூட் ஆகி இருக்கும். இத்தனை பேர் மத்தில சக்கரை பத்தி கத்தி சொன்னதுல. இருந்தாலும் கொஞ்சம் அமைதியா இருப்பார்.

அந்த நேரம் பாத்து காலைல தினசரி வரும். ஆளுக்கொரு பேப்பரா எடுத்துப் படிக்க ஆரம்பிப்பாங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நக்கல்ப்பட்ட பழநி எப்படா காலை வாரணும்னு கங்கணம் கட்டிகிட்டு இருப்பாரு. இப்போ முருகனோட கட்சியை பத்தி இன்னொரு கட்சி பேச்சாளர் மட்டரகமா பேசி இருக்கதை பேப்பர்ல இவர் படிக்க மனுஷனுக்கு குஷியாகிடும். இந்த நேரத்துல சூடா காப்பியை டீக்கடைக்கார பையன் இவங்களுக்கு தர, அந்த சூடு மெல்ல இவங்க கிட்டயும் ஏறுது.

"யெம்பா பங்கு, என்ன அந்த கட்சிக்காரன் உன் கட்சியை இப்படி பேசி இருக்கான். எவ்வளவு தைரியமா இருந்தா உன் கட்சிகாரன் எல்லாம் நாக்கை புடுங்கி செத்து போகமாட்டீங்களான்னு கேக்குறான்"

மெல்ல பழநி திரியை கொளுத்தி போடுறார்.

"அவன் கிடக்கிறான், காசுக்கு மாரடிக்கிற பய.. ஒரு தடவை என்னதான் பேசுறானானு பாக்க திண்டுக்கல்ல நடந்த மீட்டிங்கு போயிருந்தேன்.. இவன் பேச்சை கேக்க மைக் செட் போடுறவன் மட்டும் தான் இருக்கான்.. கேக்குறதுக்கே ஆள் இல்லாதப்போ எப்படி பேசுறான் பாரு"

மனுஷன் டென்ஷனாகி நாலஞ்சு கெட்ட வார்த்தைகளை அந்த பேச்சாளர் மீது விட்டிருப்பார்.

பழநிங்கிறவர் இருக்காரே, அவர் அப்பக்கூட விடமாட்டார்.

"அட பங்கு, நல்லா யோசிச்சு பாரப்பா.. அது உன் கட்சி மீட்டிங் தான"

"என்ன நக்கலா உனக்கு..ம்ம்.. நம்ம பங்காளியேன்னு உன்னை கூப்பிட்டு காப்பி வாங்கி கொடுத்தா, நான் கொடுத்த காபித் தண்ணி உள்ளாற இறங்கினவுடனே நம்மளையே நக்கல் அடிக்கிற..ம்"

முருகன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்து இருப்பார்.

"யோவ்.. சும்மா போறவன கூப்பிட்டு சக்கரை..கிக்கரைனு நீ நக்கலடிப்ப, ஒத்த ரூவா காப்பிக்கு அத நா நாக்க தொங்க போட்டு கேட்டுகிட்டு இருக்கணுமா உன் கட்சிகாரன மாதிரின்னு"

பழநி அவர் வாய்க்கு வந்தபடி பேச, அந்த இடத்துல அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு எல்லோரும் காதை பொத்துற அளவுக்கு சண்டையும் தடித்த வார்த்தையுமாத் தான் இருக்கும்.

இப்படித்தான் நிறைய நேரங்களில் டீக்கடை பஞ்சாயத்துகள் இருக்கும். இந்த சண்டைகள் சில நேரம் அடுத்த தடவை டீக்கடையில் பார்க்கும் வரை தான் இருக்கும். இல்லையென்றால், ஜென்மபகையாகி விடும்.

இதைவிட பெரியது, குழாயடி சண்டைகள் தான். இந்த வம்பு சண்டைகள் பெண்களில் இருந்து ஆரம்பிப்பதால் பெரும்பாலும் ஜென்ம பகையாகவே மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

அப்புறம், நேற்று படித்த ஒரு நகைச்சுவையான செய்தி. புரோட்டாவுக்காக மதுரையில் ஒரு குடிமகன் பஸ்ஸையே கடத்தினாராம்!

Saturday, February 17, 2007

யாஹூவின் சென்னைப் பக்கம் - சூப்பர் புகைப்படங்களுடன்

யாஹூ இந்தியாவில் இருக்கும் மாநகரங்களுக்கென புதியதாக தனித்தனியான பக்கங்களை உருவாக்கி உள்ளது. அங்கே நீங்கள் சென்றால் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழச்சிகள் மற்றும் சென்னையை சுற்றி எடுத்த புகைப்படங்கள் என்று பல கலவையான செய்திகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

அங்கே இருந்து சுட்டது தான் கீழே உள்ள படங்கள் சில.. அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அப்படியே ஒரு ரவுண்டு சென்னையை சுற்றி வந்தது போல இருந்தது..

இது திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் இருக்கும் ஒரு கடை


பச்சை விளக்குகிற்காக வெயிட்டிங்


சென்னை சென்ட்ரல் உள்ளே


சென்னைக்கு வராதவங்க கூட திரைப்படங்களில் பார்த்திருக்கும் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் ஒரு சின்னம் (?)


நம்ம மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்


போய்த்தான் பாருங்களேன் யாஹூ சென்னை பக்கத்துக்கு

Friday, February 16, 2007

தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது

தர்மபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நீதித் துறையின் காலர்களை உயரவைத்துள்ளது. எந்த கட்சியினர் என்றும் பார்க்காமல், கழுத்தை சுற்றிய அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இந்த வழக்கில் சரியானதொரு தீர்ப்பு கிடைக்க வழிவகைகள் செய்த காவல்துறையினருக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். (அந்த காவல்துறையினருக்கு பதவி உயர்வு கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)

இந்த வழக்கில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருபதுக்கு மேற்பட்ட சாட்சிகள் பயமுறுத்தலால் பல்டி அடித்ததும், குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்போதைய அரசும் உடந்தையாய் இருந்தது என்பதும் நாடறிந்த விஷயம். இந்த சமயத்திலே, இறந்து போன மாணவிகளின் தந்தை ஒருவர் வழக்கை இடமாற்றம் செய்ய சொல்லி கொடுத்த மனு வழக்கையே திசை மாற்றி, இப்போது மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கப்படக்கூஒடியதே. இனிமேல், அரசியல் என்னும் பெயரால் வன்முறைகள் நடக்காது இதன் மூலம் என்று நம்புவோமாக.

ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் பஸ்ஸை எரிப்பது, கடைகளை உடைப்பது என்பது சாதாரண ஒரு நிகழ்சியாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அப்படி ஒரு பெரிய சம்பவங்களும் நடக்காமல் தமிழகம் இருப்பது வரவேற்கத்தக்கதே. முதலீட்டாளர்களை இது மகிழ்வித்து தொழில் வாய்ப்புகள் பெருக இது வழிவகுக்கும், நல்ல விஷயமே.

ஆனால் இவ்வளவு பெரிய சம்பவத்தை பற்றி இந்த சம்பவங்களுக்கு மறைமுக காரணமாக இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா (இவருக்கு கொடைக்கானல் பிளசன்ட் டே ஹோட்டல் விவகாரத்தில் தண்டனை கிடைத்ததற்காக நடந்த கோர சம்பவமே இது) இதைப் பற்றி ஒரு மன்னிப்புகூட கேட்காமல் (குறைந்த பட்சம் அந்த கட்சியின் தலைவி என்பதால் கூட) இருப்பது எந்த அளவுக்கு அவர் அரசியல் நடத்துகிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதையெல்லாம் விட, இந்த கோர சம்பவம் நடந்த போது, மேடைக்கு மேடை புயலென பொருமித் தள்ளிய திருவாளர் வைகோ இதைப் பற்றி இப்போது மூச்சுக் கூடவிட முடியாமல் மயான அமைதியில் இருப்பது அவர் அரசியலில் இரண்டறக் கலந்து நிறம் மாறிவிட்டர் என்பதையே தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்த துயர சம்பவத்தில் உயிர் நீத்த மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி ஆகியோரின் ஆன்மா, ஏழு ஆண்டுகளுக்கும் பின் இப்போதாவது சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புவோமாக.