Tuesday, October 31, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 2

முதல் பகுதியை படிக்காதவர்களுக்கு, கதையின் முதல் பகுதி இங்கே

J2 போலீஸ் ஸ்டேசன்..
அன்றைக்கு எந்த கம்பிளைன்டும் வராததால பழைய வழக்கு ஒன்றை பார்த்துகொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் இன்பவேலன். ஐஜி முதல் எல்லோரும் பாராட்டும் திறமை மிக்கவர். தனது நாணயத்தாலும் துடிப்பான செயல்களாலும் நல்ல பேர் வாங்கியவர். தமிழ் நாட்டு போலிஸ்ல மக்களுக்கு நல்லா தெரிஞ்ச சில பேர்ல இவனும் ஒருவன். போலீஸ் வேலைக்கு சேர்ந்த மூணே வருஷத்துல இன்ஸ்பெக்டர் ஆனவன்.

வயசு இருபத்திஏழு. போலீஸ் உயரம். தொப்பை இல்லாத அதிசய போலீஸ்காரன். போலீஸ் உடைல இவர் நடந்து வந்தாலே அட போடவைக்கும் மிடுக்கானவன்.

டிரிங்..டிரிங்..
சிவப்பு நிறத்தில் இருந்த அந்த டெலிபோன் டிரிங்கியது.

"ஹலோ.. இன்ஸ்பெக்டர் இன்பவேலன் பேசுறேன்."
"சார்.. நான் ஏட்டு பெருமாள் பேசுறேன் சார்.."
"சொல்லுங்க பெருமாள்..எங்க இருக்கீங்க"
"சார். இங்கே மார்கெட்டுல அந்த சண்முகம் பழம் விக்கிற பாண்டியை அரிவாளால வெட்டிட்டான் சார்.. அவன துரத்தினேன் சார்.. பிடிக்க முடில.. அவன் வழக்கம் போல ஆட்டோல தப்பிச்சுட்டான் சார்.. ஆட்டோ நம்பர் Tந்02 - 4545 சார்"
ஏட்டு சொன்ன நம்பரை பேப்பரில் குறித்துக் கொண்டே "பெருமாள்..வெட்டு வாங்கினவன் உயிரோட இருக்கானா இல்ல செத்துட்டானா.."
"சார்..நான் அவனை இப்போ தான் இன்னொரு ஆட்டோவுல ஏத்தி அனுப்பினேன் சார்.. நான் ஸ்டேசனுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன் சார்.."
"சரி..வாங்க" என்றவாறு போனை வைத்த இன்பவேலன் வேற ஒரு நம்பரை டயல் செய்தான்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஏட்டு J2 போலீஸ் ஸ்டேசன்ல இருந்தார். அதற்குள் இன்பவேலன் அந்த ஆட்டோ நம்பரை கண்டுபிடிக்க முயற்சி செய்து..வழக்கம் போல அது போலியான நம்பர் என்று கண்டுபிடித்திருந்தார்.

"சார்..வர வர இந்த சண்முக பயலோட பெரிய ரோதனையா போச்சு.
அவனுக்கு ஒரு முடிவு கட்டாட்டி இந்த மாதிரி அடிக்கடி நடக்கும் சார்" தனது கண்ணாடியை சரி செய்தவாறே ஏட்டு பெருமாள் சொன்னார்.

தனது கைத்துப்பாக்கியை தொட்டவாறே "பெருமாள்.. அவனுக்கு வலை விரிச்சாச்சு.. இந்த மாதிரி பொடியனுக்கெல்லாம் மேலிடத்துல கேக்க எல்லாம் வேண்டாம். பாத்தோமா.. பட்டுன்னு ரெண்டு குண்ட வேஸ்ட் பண்ணி போட்டோமான்னு இருக்கணும்... என்று கர்ஜித்தான் இன்பவேலன்.

"இன்னும் ஒரு வாரத்துல அவன் சோலிய முடிக்கிறேன்.. முதல்ல அந்த அட்டோக்காரனை போடுறேன்.. ஜான், வண்டிய எடுங்க..எம்ஜியார் நகருக்கு.." என்றவாறு போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான் இன்பவேலன்.


சென்னை முழுவதும் வெளிச்சத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
வேளச்சேரியில் இருக்கும், அந்த கால் சென்டரில் 24 மணி நேரச் சேவை..அதனால் மூன்று ஷிப்ட்ல எல்லோரும் வேலை செய்வாங்க..

பாவனாவும் பவித்திராவும் நல்ல தோழிகள்.. இந்த கால் சென்டருல வேலைக்கு சேர்ந்த பிறகு தான் நண்பர்கள் ஆனார்கள்.. ஆனாலும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் மாதிரி ஆகிவிட்டனர்.

"பாவனா..நான் கிளம்புரேண்டி.. இப்பவே நேரமாச்சு.. கொட்டிவாக்கம் போற வேன் போயிடும்.. நீ வர்றியா இல்லியா.. கம்பெனிக்காக ரொம்ப உழைக்காதேடி.. வா போகலாம்" என்றவாறே அவள் பதிலுக்கு காத்திராமல்
அவளுடைய ஹேன்ட்-பேக்கை எடுத்து சென்றாள் பவித்ரா.. அவள் ஹேன்ட்-பேக்கை எடுத்து செல்வதை பார்த்து பாவனாவும் பின்னாலயே சென்றாள்.

பாவனா.. மதுரையில் இருந்து இங்கே வந்து கொட்டிவாக்கதில் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பவள். ஒரே வார்த்தையில் சொன்னால் மதுரை அழகு. எல்லா அலங்காரமும் செய்து நிற்கவைத்தால் அந்த மீனாட்சி அம்மனே வந்தது போல் இருக்கும். அப்படி ஒரு அழகு. மாதம் ஒரு முறை வீட்டிற்கு சென்று வருவாள். எப்போ போனாலும் அம்மாவும் அப்பாவும் கல்யாண பேச்சை தான் எடுப்பார்கள். இவளுக்கோ இப்போதைக்கு வேண்டாமென்று தப்பித்து ஓடி வந்துவிடுவாள். ஆபீஸ்லயும் எத்தனையோ பேர் நூல் விட்டு பாத்தாங்க. ம்ஹிம்..ஒண்ணும் நடக்கல..

பவித்ரா.. அப்பா அம்மாவோட சென்னை கொட்டிவாக்கத்துல தங்கி இருக்கா.. அண்ணன் இன்ஸ்பெக்டர் இன்பவேலன், J2 போலீஸ் ஸ்டேசன்ல டூட்டி. கொஞ்சம் மாடர்னான பொண்ணு. அது சென்னைல இருந்ததால வந்தது. மாநிற பதுமை இவள்.

இவங்க ரெண்டு பேரும் நடந்து போனா சுத்தி இருக்க பசங்க பாத்து ஏங்காம இருக்க மாட்டாங்க. அடிக்கடி பாவனா பவித்ரா வீட்டுக்கு போய் வருவாள். அப்படி போய் வந்ததுல இன்ஸ்பெக்டர் இன்பவேலன் மனசை கொஞ்சம் பறிகொடுத்து விட்டான். இருந்தாலும் தங்கை தோழிகிட்ட எப்படி இதை போய் சொல்றதுன்னு ஒரு தயக்கம்..பயம்.. பாவனாவுக்கும் ஒரு பற்று இருக்கு இந்த காக்கி சட்டைகாரன் மீது.. அது காதலான்னு இன்னும் அவளுக்கே தெரில.. ஆனா எப்போ இன்பவேலனை பாத்தாலும் இவ மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு ஓடும்..

வழக்கமான குளக்கரை..
மொத்த போதையும் தலைக்கேற சண்முகம் மயக்கத்தில் கிடந்தவாறு டேய் காளிதாசு.. இன்னிக்கு புதன்கிழமை. அடுத்த திங்கள் நம்மளோட ஆபரேஷனை நடத்துறோம். ஸ்பாட்டும் குறிச்சாச்சு.. அது வேளச்சேரி பஸ்-ஸ்டான்ட். ரெடியா இரு.. சவாரிக்கு போயிடாதா..சரியா.. அந்த பிளான் முடிச்சவுடனே, அடுத்த நாள், நான் அந்த இன்ஸ்பெக்டர் இன்பவேலனை போடுறேன்.. ரொம்பத் தான் தண்ணி காட்டுறான். நேற்று என் நைனாவை வந்து ஏதோ மிரட்டி இருக்கான்னு காளிதாசுகிட்ட உளறிகிட்டு இருந்தான்.. காளிதாஸ் எப்பவோ போதை ஏறி மயங்கி கிடந்தான்..

தூரத்தில் இன்ஸ்பெக்டர் இன்பவேலன் தனது ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார்.

கதையின் மூன்றாம் பகுதி அடுத்த திங்கட்கிழமை (இந்த முறை கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால நேற்று எழுத முடியவில்லை நண்பர்களே.. தாமதத்துக்கு மன்னிக்கவும்)

லகலக லாப்டாப்

ஆசை ஆசையா இருந்த ஒரு விஷயம் நேற்று நிறைவேறியது. காலேஜ்ல படிக்கிறப்போ அறிமுகமான விஷயம்.. ஏதாவது ஒரு கம்பெனில இருந்து வர்றவங்க சூட்கேஸ் மாதிரி கொண்டு வந்து, விரிச்சு வச்சு சில பல பிரசென்டேஷன் கொடுப்பாங்க.. அப்போ வெல்லாம் அந்த மாதிரி வர்ற லேப்டாப்பை ரசிக்கிறதே ஒரு பெரிய வேலையா இருந்து.. இப்படி இதுக்குள்ள எல்லாத்தையும் அடக்குனாங்கன்னு வியந்ததுண்டு.. இப்போ இங்கே அமெரிக்கா வந்த பிறகு எல்லோருக்கும் அது அவசியமானதால வாங்க வேன்டியதாயிடுச்சு..

நேற்று தான் வந்தது.. புத்தம் புது பொண்ணு மாதிரி பளபளான்னு.. எப்படியும் ரெண்டு வருஷம் கழிச்சு "டேய்..உன்னோட லாப்டாப் ரொம்ப பழசுப்பா.. கான்ஃபிகரேஷன் எல்லாம் ரொம்ப பழசுன்னு எல்லாம் சொல்ல போறாங்கனாலும் வாங்குறப்பவே உருப்படியா ஹை-என்ட் ல வாங்கிடலாம்னு முடிவு பண்ணி ஆர்டர் பண்ணினேன். உனக்கு லாப்டாப் வந்து சேர எப்படியும் ஒரு 15 நாள் ஆகும்னு சொன்னதால அப்படியே ஆர்டர் பண்ணினதையே மறந்துட்டேன்..

இந்த வார இறுதிக்கு, SMOKY MOUNTAINS (in Tenesse state) அப்படின்னு ஒரு இடத்துக்கு போயிருந்தோம். நம்ம ஊர் ஊட்டி கொடைக்கானல் மாதிரி இங்கே ஒரு மலை பகுதி. அதுவும் இப்போ, எங்களை அழிக்க வரும் குளிர்காலமே போ போ என்று எல்லா இலைகளும் சிவப்பு, மஞ்சள் நிறத்தை காட்டி நிற்பதை பார்ப்பதே கொள்ளை அழகு. சூரிய வெளிச்சமெல்லாம் பட்டுத் தெரிப்பதில் அந்த காடே பற்றி எரிவது போல தெரியும். அதுவும் காற்று வேற சிலு சிலுன்னு..இல்ல இல்ல..குளுகுளுன்னு அடிக்க எந்த இடத்திலும் ஜெர்கின் இல்லாம நிற்க முடிவதில்லை..

ரெண்டு நாள் நல்லா ஆட்டம் போட்டுட்டு திரும்பி வந்து ஜிமெயில் பாத்தா தம்பி..உன் லாப்டாப் டெலிவர் பண்ணியாச்சுன்னு மெயில்.. ஓடிப்போய் பாத்தா பிரவுன் கலர் பெட்டிக்குள் அழகா தூங்கிகிட்டு இருந்தது. நான் வாங்கியிருப்பது HP Pavillion dv6000t.. இது தான் இப்போ டாப்-1 அப்படின்னு நிறைய பேர் சொல்லி இருந்ததால..வாங்கியாச்சு.. ரொம்ப நாள் ஆசை.. நாம எப்போ இப்படி வாங்குவோம்..இதோ இப்போ என் மடில தான் அது உக்கார்ந்து இருக்கு.. (அதனால தான் அதை பொண்ணுன்னு சொன்னியான்னு குசும்பா கேள்வி எல்லாம் கேக்கப்படாது மக்களே).. சந்தனமும் குங்குமமும் வைத்து, சாமிகிட்ட ஆசியும் வாங்கி அம்சமா இருக்கு லப்டாப்.. அது என்னமோ தெரில..இது மாதிரி ஒரு பொருளை வாங்கினா அந்த சந்தனமும் குங்குமமும் வைக்கலைன்னா மனசுக்கு ஒரு திருப்தியே இருக்கமாட்டேங்குது.. நல்ல வளைவுகள்.. நிறைய விஷயங்கள்.. வெப்-கேம், மைக்ரோ போன், 2.0 GஃZ பிராசசர்ன்னு, பக்காவா இருக்கு லாப்டாப்..கிட்டதட்ட ஆயிரத்து நானூறு டாலர் ஆனது.. அப்பா..அம்மா கிட்ட சொன்னேன்..அவங்களுக்கும் ஒரு சந்தோசம்.. வாழ்க்கைல ஒவ்வொரு சின்ன விஷயமும் இந்த மாதிரி நடக்குறப்போ, ஒரு பெரிய விஷயத்தை சாதித்த திருப்தி இருக்கு மனசுக்குள்ள..

என் முதல் பதிவு புதிய லாப்டாபிலிருந்து :-))

Monday, October 30, 2006

கோலிவுட் 'கில்லி'

நீண்ட காலமாய், பல்வேறு விமர்சனதுக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டு, இப்போதும் அஜித்தை பற்றி சொல்லும் போதெல்லாம் குறிப்பிடுவது போல, பினீக்ஸ் பறவையாய் பறக்கிறார், தீபாவளிக்கு வெளியான வரலாறு படம் மூலமாய்.

2003ல் ஆஞ்சநேயா படம் வெளிவருவதற்கு முன்னால், ஏதோ ஒரு பேட்டியில் அஜித், தனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி மீது ஆசை என்று சொன்னதை கேட்டு எல்லோரும் தாம் தூம் என்று குதித்தார்கள்.. ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு ஆசை, லட்சியம் இருப்பதை போல அவருக்கு இருந்தது தவறா என்ன.. எனக்கு இப்படியாக ஆசை என்று சொன்னால் யாராவது தவறு என்று சொல்வார்களா.. அஜித்துக்கு மட்டும் ஏனிந்த நிலமை.. மீடியாக்களுக்கு சோப்பு போடத் தெரியாததாலா.. இல்லை அடிக்கடி மீடியாக்களில் தோன்றி அவர்களின் வருமானத்தை உயர்த்தாததாலா.. இப்போக் கூட மற்ற முன்ணனி நடிகர்கள் மாதிரி டிவில வரலாறு படத்திற்க்காக அஜித் வந்து விளம்பரம் செய்யவே இல்லை. அஜித் செய்த ஒரே தப்பு சினிமாவில் நாட்டம் செலுத்தாமல் ரேஸ் சவாரியும் ஒரே நேரத்தில் செய்ததும் தான்.

SIFY.com பற்றி ஒரு கருத்து இருக்கிறது. அது எப்போதும் விஜயையும் விஜய் படங்களையும் தான் தூக்கிவைத்து கொண்டாடுகிறது என்று. வரலாறு விமர்சனத்தை பாத்தாலே தெரியும். முதல் நாள் Above Average என்று போட்டவர்கள், பிறகு Average என்றும், அவர்களின் பாக்ஸ் ஆபீஸ் கட்டுரையில் Hit என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஏனிந்த தடுமாற்றம். இப்போது வரலாறின் வசூலைப் பார்த்து அஜித்தை கோலிவுட் கில்லி என்கிறார்கள். கிரிக்கட்டில் ஓபனிங் இறங்கி குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கும் ஆஸ்திரேலியாவின் கில்கிரிஸ்ட் போல, கோலிவுட்டுக்கு அஜித் என்கிறார்கள். முதல் பத்து ஐந்து நாட்களிலேயே போட்ட காசை எடுத்துவிட்டனராம் தயாரிப்பாளரும், விநியோக தியேட்டர் உரிமையாளர்களும்.

மறுபடியும் இப்படி அஜித் திரும்ப வருவார்னு எதிர்பார்த்தேன்.. ஆனா இது கொஞ்சம் லேட். இனிமேல் நல்ல கதைகளை கேட்டு, தனக்கு அது ஏற்றது தானா, கமர்ஷியலா ஹிட் ஆகுமான்னு பார்த்து நடிச்ச நல்லா இருக்கும். மேலும் அவர் படங்கள் ஆழ்வார், கிரீடம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

(ரொம்ப நாளா எழுதணும்னு நினச்சுகிட்டு இருந்தது.. ஒரு படம் நல்ல ஹிட்டான பிறகு எழுதலாம்னு இருந்தேன்.. வரலாறு நல்லாவே ஓடுறதால இப்போ எழுதுறேன்)

Saturday, October 28, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 12

சிட்டுக்குருவி, அதுக்கு நீங்க செலெக்ட் பண்ணின பேரை எல்லாம் இப்போதைக்கு தொடாதாம். ஏன்னா தன்னோட லவ்வர் அதோட பிரண்டு கல்யாணதுக்காக பாஸ்டன் சிட்டிக்கு போயிடுச்சாம்.. எப்பா, என் கூட சினிமா விஷயத்தை பேசுறப்ப கூட அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை போனை போட்டு, ஒரு இச் கொடுக்குது..ஒரு இச் வாங்குது.. சிட்டுக்குருவி லவ்வுங்குற பேர்ல பண்ற ரவுசு தாங்க முடியலப்பா..

சிட்டுக்குருவிக்கு தோள்ல அடிபட்டப்போ ஹாஸ்பிடலுல இருந்தது.. அங்கே சிட்டுகுருவியை கவனுச்சுக்க நர்ஸா வந்தது இந்த லவ்வர் குருவி.. அங்கே இருந்த ஏழு நாள்ல குருவிக்கு தோள்வலி குறைஞ்சதோ இல்லியோ, இவங்க காதல் யாரும் தண்ணி ஊத்தாம வளர்ந்தது.. இப்போ இப்படி இவங்க உறவு விட்டுப்பிரியாம இருக்கு.

நாம வேற சிங்கிளா இருக்கிறதால, அப்பப்போ நம்மளை ஓரக் கண்ணுல பாத்து லுக்கை போடுது..எல்லாம் நேரந்தான்..

நீங்க வாய்விட்டு சிரிக்கிற மாதிரி ஜோக் படிச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னா அருண்குமார் பதிவுல போட்டிருக்க தர்மபுரி விமர்சனத்தை படிங்க.. கேப்டனுக்கு இது தேவையா.. இந்த படம் மட்டும் தேர்தலுக்கு முன்னாடி வந்திருந்த கிடச்ச ஓட்டுகூட இல்லாம போயிருக்கும் போல..

ஓகே..இப்போ கொஞ்சம் சினிமா நியுஸ் பார்ப்போம்..

மாதவன், ரீமாசென் நடிக்க தனது மனைவி தயாரிப்பில் எடுக்கும் ரெண்டு படத்துக்கு பிறகு யாழ்ப்பாணம் என்ற திரைப்படத்தில் சுந்தர்.சி நடிக்கிறார். இதில் கோபிகா அவருக்கு ஜோடியாக நடிக்க, ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன் படத்தை டைரெக்ட் செய்கிறார். டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

சர்வம் படத்தை சூர்யா நடிக்க பட்டியல் விஷ்ணுவர்தன் இயக்க போவதாக செய்திகள் முன்னே வெளியானது. இப்போ இருவரும் நட்பாக கைகுலுக்கி அந்த பிராஜெக்டில் இருந்து பிரிந்தனர். சூர்யா முன்னமே முடிவான படி கௌதம் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு கதைக்கு ஏற்ற அடுத்த நடிகரை தேடுகிறார் (விஷ்ணு.. இங்க நான் இருக்கேன்..ஹிஹிஹி)

செல்வராகவன் சூர்யாவோட தம்பி கார்த்தியை வச்சு படம் எடுக்க போறாருன்னு சொல்லி இருந்தோம்ல.. இப்ப அந்த படத்துக்கு பேர் வச்சாச்சு.. எல்லாம் இப்போ இருக்க டிரண்ட்.. நீளமான தலைப்பு.. இது மாலை நேரத்து மயக்கம்.. காதல் சந்தியா தான் ஜோடி.. விஷாலுக்காகவும் படம் எடுக்க டிஸ்கஷன் போயிகிட்டு இருக்கு..

தசாவதாரம் படத்துல கமல் பத்து வேஷம் போடுறது உங்களுக்கெல்லாம் தெரியும். அதுல ஒண்ணு அவர் ஒரு அழகிய இளம்பெண்ணாய் நடிக்கிறார்ங்கிறது தான்.. அதுமட்டும் அல்ல, டூரிஸ்ட் கைடா உதார் மணிங்கிற வேஷத்துல வேற வர்றார், நம்ம உலக நாயகன்...

வழக்கம் போல, ரஜினிக்கு சிவாஜில ஓபனிங்க் பாட்டு உண்டுன்னு முடிவு பண்ணி அந்த பாட்டுக்கு மட்டும் நயன்தாரா ஆடப்போறது எல்லோருக்கும் தெரியும்.. இப்போ நா. முத்துக்குமார் எழுதுற அந்த பாட்டை, SPB பாடி இருக்கார். இந்த பாட்டை புனே மற்றும் சுற்றியுள்ள கிரமாங்கள்ல ஷூட்டிங் எடுத்துகிட்டு இருக்காங்க..

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் னு சிட்டுக்குருவி, சிணுங்கிய மொபைல எடுத்து, அது லவ்வருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தது.. நான் இப்போ ஒரு லுக்கை போட..டார்லிங்க் இந்த கார்த்தி பொறாமைல பாக்குறான்..நான் வெளில வந்து பேசுறேன்னு ரூமை விட்டு பறந்தது..

Friday, October 27, 2006

தீபாவளி படங்கள் விகடன் ரேட்டிங்

இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட ப்ரியாவுக்கு ஒரு ஜோரானா ஓ..










Thursday, October 26, 2006

அமெரிக்கா கனவுகளும் ராக்கெட் கேள்விகளும்

இந்தியாவின் தென்கோடியில் இருக்க ஒரு சின்ன ஊர்ல நான் பிறந்தப்பவும் சரி, அதுக்கபுறம் வளர்ந்து ஆறாவது படிச்சிகிட்டு இருந்தப்பவும் சரி.. எனக்கு அமெரிக்கான்ன என்னானு தெரியாது.. அப்போதைக்கு சென்னையும் அடிக்கடி காட்டுற அந்த உயரமான எல்.ஐ.சியும் தான் அதிசயமா தெரியும். டெல்லி பத்தி பேப்பருல படிக்கிறப்ப, அது எட்டாத கனியாவே இருக்கும்.. அந்த வயசுல மதுரைக்கு போறதே போறதே ஒரு பெரிய லட்சியமா இருக்கும்.

ஐந்தாவது படிச்சப்போ, திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர்ல , முதல் ஆங்கில படமா, சில்வஸ்டர் ஸ்டேலோன் நடிச்ச FIRST BLOOD படம் பாத்தேன். அப்போ என் நண்பன் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.. டேய்..இந்த படம் அமெரிக்காவுல எடுத்ததுடா..அங்கே எல்லாம் சினிமா எடுக்க கோடி கோடியா பணத்தை கொட்டுவாங்களாம்.. எனக்கு ஞாபகம் இருந்து நான் முதல்ல அமெரிக்கான்னு கேள்விப்பட்து அப்போ தான்.

அதுக்கப்புறம் காந்திகிராமத்துல ஏழாவது சேர்ந்தப்போ, அப்பப்போ உலக வரைபடத்துல உலகத்துல இருக்க கண்டங்கள்ல ரெண்டு வட அமெரிக்கா தென் அமெரிக்கான்னு படிச்சப்போ, அது இந்தியவுல இருந்து எவ்ளோ தூரம் இருக்கும்னு வெறுங்கையால முழம் போட்டதுண்டு. அப்புறம் டவுன் நண்பர்கள் கிடச்சப்புறம், கிளின்டன் பத்தி கொஞ்சம் செய்திகளில் பாக்குறப்போ.. ஓ..அமெரிக்கா.. உன்னை பாக்க நான் எவ்வளவு செலவு பண்ணி வர்றது.. ஒரு ஆயிரம் ரூபாய் ஆகுமா..கையில டார்ச் வச்சுகிட்டு நிக்கிற அந்த அம்மாவை எல்லாம் எப்போ பாக்குறது..ன்னு சும்மா என்னிக்காவது மனசுல பேசிகிட்டதுண்டு.. சொந்த செலவுல மதுரை போறதே நடக்காத விஷயம் அப்போ..

என்னோட அய்யா (அப்பாவோட அப்பா), இளைய வயசுல கொஞ்ச நாள் பினாங்குல இருந்தார். பினாங்கு மலேசியாவுல இருக்க ஒரு ஊர்.. அதனால அவர் அங்க போனதையும், இருந்ததையும் பத்தி அடிக்கடி நிறைய கதை சொல்வார். அது தான் நான் கேள்விப்பட்ட முதல் வெளிநாடு பற்றிய சுற்றுலா கதை. அவருடைய காலத்துல நிறைய பேர் பினாங்கு போனாங்க, என் ஊர்ல இருந்தே.. நாம எப்படி அங்க எல்லாம் போகப்போறோம்னு நினச்சுகிட்டதுண்டு..

அப்போ எல்லாம் பஸ் பிடிச்சு திண்டுக்கலுக்கு போய் படம் பாக்குறதே ஒரு பெரிய விஷயம். ஏதாவது படம் வந்து அது நல்ல ஓடுறப்போ யார்கூடவாவது தொத்திக்கிட்டு போனா உண்டு. எங்க ஊர்ல திருவிழான்னா திரையில படம் ஓட்டுவாங்க.. ஒரு எம்ஜியார் படம்..ஒரு சிவாஜி படம்..ரெண்டு படம் உறுதி.. ஊர்ல இருக்க பெரிய தெருவுல படத்தை ஓட்டுவாங்க.. ரெண்டு பக்கமும் பெரிய கம்பத்தை நட்டு, அதுக்கு இடையில திரையை கட்டி, அந்த கம்பத்துல ஒலி பெருக்கிய கட்டி படம் போடுவாங்க.. கிட்டதட்ட ஒரு ஆயிரம் பேர் உக்கார்ந்து பார்ப்போம் அந்த படத்தை.. அப்படி பாத்ததுதான் எம்ஜியாரோட உலகம் சுற்றும் வாலிபன் படம்.. நாடு நாடா அவர் சுத்த கூடவே என் ஆசைகளும்..

முதல்ல மதுரையில கல்லூரிக்கு போனப்போ என்னுடைய மிகப் பெரும் சிறு வயசு ஆசை நிறைவேறியது.. அப்புறம் அடுத்த ஆசையா சென்னைக்கு போறது.. அதுவும் வேலைக்கு வந்த பிறகு நினைவாச்சு. அடுத்த கனவாய் டெல்லி வந்தது.. ஒரு முறை பிராஜெக்ட் விஷயமா டெல்லி போய் இருபது நாள் இருந்தப்போ அந்த கனவும் பலிச்சது.. இப்போ அமெரிக்க கனவும் நினைவாகி.. நடந்துகிட்டு இருக்கு.. எல்லாம் அந்த ஆண்டவனால நடக்குறது..

ஆனா நான் காலேஜ் முடிச்சு, வேலை சேர்ந்த வரைக்கும் கூட, ஒரு நாள்கூட நினைச்சதே இல்ல. இப்படி அமெரிக்கால வசிப்பேன், இந்த காத்தை சுவாசிப்பேன்னு.. இப்போ நினைச்சாலும் அடிக்கடி நானே என்னை கிள்ளி பாத்துக்கொள்வதுண்டு..

என்னுடைய இந்த வளர்ச்சி பாதைல நான் ரொம்ப நாளா கவனிச்சது என்னன்னா.. எனக்கும் என் கூட இருக்க, நகர பகுதிகள்ல இருந்த வந்து படிச்ச பசங்களுக்கும் இடையே இருந்த ஒரு இடைவெளி.. நான் அப்போ தான் போன்ல பேசவே ஆரம்பிச்ச சமயம்.. பயந்து பயந்து ஒவ்வொரு பட்டனையும் அமுக்கிய நேரம்.. என் நண்பர்கள் பலர் செல்போன்ல பேச ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் முதல் முறை சென்னை வந்து ஸ்பென்சர் பிளாசா போனப்போ, உள்ளார போறப்பவே ஒரு பயம் இருந்தது.. ஏதோ நான் மட்டும் தனி உலகத்துல இருக்கிறத உணர்வு.. எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு பிரமை. சொல்ல முடியாத உணர்சியாய் இருந்தது அப்போ..

எவ்வளவோ புது விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டாலும் என் ஊர்ல அதை பத்தி யார்கிட்டயாவது பேசினா அது விழியிழந்தோர்க்கு யானையை பத்தி விவரிக்கிற மாதிரி இருக்கும் ஆனாலும் ஏதாவது ஒரு புது விஷயத்தை அவங்க கிட்ட சொல்றத நான் என்னிக்கும் விடவே இல்ல. ஒரு தடவை ராக்கெட் மற்றும் ஏவுகணை பத்தி சொல்லிகிட்டு இருந்தப்போ, எவ்வளவு பெரிய திரி வேண்டும் அந்த ராக்கெட்டை அனுப்பன்னு ஒருத்தர் தீபாவளி ராக்கெட்டை மனசுல வச்சு கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கு..

Wednesday, October 25, 2006

அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தங்கத் தலைவி அசினுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


என் இதயம் கவர்ந்த பெண்ணிற்கு
வயதொன்று கூடுகிறது..
ஆப்பிள் அசினிற்கு இதயம் கவர்ந்த
வாழ்த்துக்கள்


இப்படி ஒரு அழகை இந்த வானம் பார்த்ததில்லை..
இந்த பூமி கண்டதில்லை..
தமிழ்நாட்டின் இளைஞர்களை கல்பனாவாய் வசீகரித்தவள் நீயே..
அசினே, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அசின்..
வாழ்க என்றென்றும் வாழ்க

தீபாவளி பட தர வரிசை

இந்த தீபாவளி, மெயிலில் என் எல்லா நண்பர்களின் வாழ்த்தை பெற்று, பின்னூட்டத்துல உங்க எல்லோருடைய வாழ்த்தும் பெற்று, போன்ல என் மாப்ள பரணி வாழ்த்த (இந்த போட்டோ எடுத்தது தான்), ப்ரியா போஸ்ட்ல ஸ்வீட்ஸ கண்ணுல சாப்பிட்டு, ஊருக்கு போன் பண்றப்போ வெடிச்சத்தம் கேட்டு நல்ல படியா முடிஞ்சது..

ஊர்ல இருந்திருந்தா மொத ஷோவே தல படத்தை பாத்து, ஒரு பதிவையும் போட்டு இருக்கலாம். ஆனா அந்த பாக்கியம் கொடுத்து வைக்கல.. தல, கட்-அவுட் வச்சு பாலபிஷேகம் எதுவும் செய்ய வேண்டாம்..உங்க தெருவை சுத்தமாக்கி வச்சுக்கோங்க அப்படின்னு சொன்னாலும், மதுரை திருச்சி ரசிகர்கள் பாலபிஷேகத்தையும் தாண்டி 'ஜின்'னபிஷேகமும், பான்பராக் பாக்கெட்டை வச்சு ஆரத்தியும் எடுத்து இருக்காங்க.. இதெல்லாம் இருக்கட்டும் படம் ஹிட்டான்னு கேக்குறீங்க..
சொல்றேன் சொல்றேன்.. பொறுமை..

ரஜினிக்கு அடுத்து கிங் ஆஃப் ஓபனிங்னு பேர் வாங்குன தல, வரலாறு படத்தோட மூலமா இன்னொரு வரலாறையும் படைச்சிருக்கார். முதல் இரண்டு நாட்களில் படம் 110% கலெக்க்ஷனாம்.. அஜித்தோட ரசிகர்கள் தியேட்டரோட தரையில் உக்கார்ந்தும், நின்றும் பாத்ததுல படம் பயங்கர வசூலாம்..படம் ஹிட்டுன்னு ஏற்கனவே வினியோகஸ்தர்களும் தியேட்டர் ஓனர்களும் சொல்லியாச்சு. இந்த வார கலக்க்ஷன் நிலவரத்தை இங்கே பாருங்கோ

வரலாறை பாத்துட்டு வர்ற ஒவ்வொருத்தரும் படத்துல அஜித்தோட நடிப்பை பாராட்டோ பாராட்டுன்னு பாராட்டுறாங்கோ.. அதுவும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சில வர்ற அஜித்தோட நடிப்பு அவ்ளோ சூப்பராம். ரொம்ப நாள் கழிச்சு தலைக்கு சூப்பரா ஓடற படமா வரலாறு இருக்குமாம்.

தீபாவளி படங்களின் தர வரிசையை பற்றி சிட்டுக்குருவி என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

6. தர்மபுரி - விஜயகாந்த் கட்சியோட கொள்கை பரப்பு செயலாளரா டைரக்டர் பேரரசு சீக்கிரம் ஆகிவிடுவார் போல.. படம் அப்படி ஒரு பிரச்சாரப் படமாம்.. படம் முழுக்க அரசியல் நெடி தூக்கலா இருக்குதாம். விஜயகாந்த் ரசிகர்களுக்கும், கட்சியினருக்கும் வேண்டுமானால் படம் நல்லா இருக்கலாம்..

தர்மபுரி - சோதனைபுரி

5. தலைமகன் - சரத்தோட நூறாவது படம். ரேடான் தயாரிப்புல வந்திருக்க இந்தப் படம், நிறைய குறைபாடுகளால் வசூல்ல முதல் மகனாகுறது ரொம்பக் கஷ்டமாம்.

தலைமகன் - சொதப்பல்மகன்

4. வட்டாரம் - கதையிலும் காட்சியிலும் புதுமை ஏதும் இல்லாததால, ஆர்யாவோட இந்த மசாலா படம் தீபாவளி பட வரிசைல நாலாவது இடத்தைத் தான் பிடிக்க முடிஞ்சது. பாடல்களும் எதிர்பார்த்த மாதிரி இல்லாதது படத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு. இதயத்திருடன் படத்தை போல எதுவும் சரணுக்கு ஒரு தோல்வி படமா இல்லையாங்குறது மத்த படங்களோட ஓட்டதை பொறுத்தே இருக்குமாம்.

வட்டாரம் - சின்னது

3. வல்லவன் - சிம்புவின் டைரக்க்ஷனில், மூன்று கதாநாயகிகளுடன் வந்திருக்கும் இந்தப் படம், இளைஞகர்களை கவருகின்ற எல்லா அம்சைத்தயும் கொண்டுள்ளது. ஆனால் இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் தாய்குலங்களை தியேட்டருக்கும் கொண்டு வருமா என்பது சந்தேகமே. சிம்பு டைரக்க்ஷனில் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. திரைக்கதையில் படம் பார்ப்பவர்களை ரொம்பவே சோதிக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் எடுத்த விதத்தில் சிம்புவை பாராட்டியே ஆக வேண்டும்

வல்லவன் - திணறுவான்

2. ஈ - யாரும் சமீபத்தில் தொடாத கதையை, நல்ல திரைக்கதையின் மூலம் மிக அழகாக சொல்லி இருக்கிறார் திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கிய SP ஜனநாதன். கொடுத்த வேடத்தில் நன்றாக நடித்துள்ள ஜீவா, வேற யாராலும் இப்படி நடிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் சில அருமையான உணர்சிகளால் உணர்த்தி இருக்கிறார். புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமான கதை என்பதால் B மற்றும் C ஏரியாக்களில் படம் ஓடுமா என்பது சந்தேகமே. அப்படி ஓடினால் இது தான் தீபாவளி படங்களின் முதல்வனாக இருக்கும்.

ஈ - கழுகு

1. வரலாறு - பினீக்ஸ் பறவையாய் அஜித் மீண்டு வன்திருக்க படம். ஒவ்வொரு கேரக்டருக்கும் இடையே நல்லதொரு வித்தியாசத்தை காண்பித்து பார்ப்பவர்களை அசத்துற படம். படத்தில் மைனஸ் என சில விஷயங்கள் இருந்தாலும் கே எஸ் ரவிகுமாரோட சென்டிமெண்ட் காட்சிக்காக தாய்குலங்களையும் கவரும். அதுவும் அஜித் பரதநாட்டிய கலைஞரா வர்ற சீன்ல தியேட்டருல விசில் பறக்குது. எதிர்த்து நிக்க எந்த படமும் தீபாவளி ரேஸ்ல இல்லாததால இந்த தீபாவளி தல தீபாவளி தான்

வரலாறு - காட்டாறு

இந்த வாரம் எந்தெந்த படம் எந்தெந்த இடத்துல இருக்குன்னு பாத்தோம்.. ஈ படம் B மற்றும் C ஏரியாக்களில் ஓடினால் முதல் இடத்தில வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அடுத்த வார தமிழ் பட தர வரிசை பதிவில் உங்களையெல்லாம் சந்திக்கும் வரை.. வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் சிட்டுக்குருவி.
(சிட்டுக்குருவியோட ஜோடி கொஞ்சம் பிஸியா இருக்கிறதால நீங்க அதுக்கு சொன்ன எந்த பேரையும் அது இன்னும் செலெக்ட் செய்யல, நண்பர்களே)

Thanks : Behindwoods

Monday, October 23, 2006

வெடி வச்ச விஜயகாந்த்

கஷ்டப்பட்டு எம்ஜியார் வளர்த்த கட்சியை கூடிய சீக்கிரம் ஜெயலலிதா இழக்கபோகிறார். சும்மா கிடந்த சங்கை ஊதிகெடுத்தானாம் ஆண்டி கதையாய், அவர் விஜயகாந்தை குடிகாரன் என்று கூறி இருப்பது, ஒரு சின்ன சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.. இது மேலும் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு சறுக்கலே தவிர, முன்னேற்றம் அல்ல..

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மதுரை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக ஓட்டுக்கள் வாங்கி இருப்பது, அதிமுகவில் கண்டுகொள்ளப்படாமல், ஒதுக்கப்பட்டு கிடக்கும் எம்ஜியார் விஷுவாசிகள் ஜெயலலிதாவின் ஆணவ போக்கை கண்டு மனம் வெதும்பி விஜயகாந்தை தலைவராக ஏற்று கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர் என்று காட்டு கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிக்கையை ஜெயலலிதா விட்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இத்தனை காலம் அவர் அரசியலில் ஒன்றும் பெரிதாக கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. எம்ஜியார் இருந்திருந்தால் இதை போன்ற சம்பவம் நடந்திருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுருப்பார். இப்படி சீண்ட சீண்ட தான் எதிராளி பலமாகிறான் என்பது கூட இத்தனை ஆண்டு காலம் இருந்த ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை.. இது விஜயகாந்திற்க்கு மேலும் வலுசேர்க்கும் என்பது உண்மை தான்


இது போலவே ஜெயலலிதா நடந்து கொண்டால், சீக்கிரம் அதிமுக கூடாரம் காலியாக போகிறது.. ஆனாலும் உள்ளாச்சி தேர்தல்களை வைத்து மட்டுமே ஒரு கட்சியை எடை போட்டு விட முடியாது.. பத்திரிக்கைகளும் ரொம்ப ஒவராகத் தான் விஜயகாந்தை முன்னிறுத்தி செய்திகளை போடுவதாகவே நான் நினைக்கிறேன்..

இந்த பக்கமும் கலைஞர் கூடுமானவரை நல்ல ஆட்சி தருகிறாரோ இல்லியோ தருவது போல் வெளியில் காட்டிக்கொள்கிறார். மேலும் அவர் ஆட்சி மீதும் மக்களுக்கு பெரிதாக சொல்லிகொள்ளும்படியாக ஒரு குறையும் இல்லை. விஜயகாந்த் திமுகவை எதிர்க்க எதிர்க்க, அது மறைமுகமாக அதிமுகவினரை சஞ்சலப்படுத்தி, அவரின் பக்கம் சாய்க்கிறது. பெரும்பாலான அதிமுகவினருக்கு திமுகவை எதிர்த்தல் தான் பிடிக்கும்.. அப்படியே அவர்கள் பழக்கப் பட்டுவிட்டனர். இப்போது விஜயகாந்தும் அதே வேலையை செய்வதால் அதிமுகவினரை இழுப்பது ரொம்பச் சுலபமாகிவிட்டது.

ஆனாலும் விஜயகாந்தும் கற்றுக்கொள்ள வெண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. கடந்த சட்டசபை தேர்தலில் நெய்வேலியில் குடித்துவிட்டு விஜயகாந்த் பிரச்சரம் செய்ததாக ஒரு செய்தி படித்த ஞாபகம் உண்டும்.. ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றி கொள்ளாவிட்டல், அதிமுக அவரின் கண்ணேதிரிலேயே காணாமல் போகும் என்பது மட்டும் நிச்சயம்..

Sunday, October 22, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 1

(சென்னையில் சமீபத்தில நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதின கதை.. இது ஒரு வார தொடர்கதை..கதைக்குள்ளே போறதுக்கு முன்னாடி, உங்க வலது பக்கம் கொஞ்சம் பாருங்க.. பிரதமர் கூட அரசியல் விஷயங்களை பற்றி பேசிகொண்டிருந்த போது எடுத்த போட்டோ)

அந்த குளக்கரையோரம், எப்பவும் ஆள் நடமாட்டம் இல்லாம வெறிச்சோடி கிடக்கும்.. வெறும் கருவேல முள்காடாய் இருக்கும்.. சின்ன வயசுல சண்முகம் வீட்டுக்குத் தெரியாம பீடி குடிக்க ஆரம்பிச்ச நாள் முதலா அவனுக்கு இது தான் சொர்க்கம்.. இப்போ ஆட்டோ ஓட்ற தன் நண்பன் காளிதாஸோட இங்க அடிக்கடி வருவான்.. டாஸ்மாக்ல சரக்கெல்லாம் வங்கிட்டு ராவுத்தர் பாய் கடைல சிக்கன் பிரியாணியும் ரெண்டு முட்டை வருவலும் வாங்கிட்டு இங்க, சூரியன் உச்சில இருக்கப்ப வந்தாங்கன்ன, சூரியன் டாட்டா கம்மிக்கிற வரை கும்மாளம் தான்..

சண்முகம் பக்கா பொறுக்கி.. காசு கொடுத்து எதை செய்ய சொன்னாலும் செய்வான்.. சில சமயம் சில பேர் இவன் போதைக்கு ஊறுக்காய் ஆகி ரத்தம் சிந்தியதெல்லாம் உண்டு.. அம்மா கிடையாது.. அப்பா மட்டும் தான்.. எவ்வளவு கண்டிச்சு பாத்தும் திருந்தாதனால அப்படியே விட்டுட்டார்.. இப்போ அந்த முள்செடி மரமா வளர்ந்து காளிதாஸுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கு.. வந்த புதுசுல களிதாஸுக்கு இவனைப் பாத்தாலே ரொம்ப பயமா இருக்கும்.. ஆனா ஒரு தடவை இவனுக்காக சண்முகம் ஒருத்தவனை அடிசிட்டான்.. அதில இருந்து, சண்முகம் என்ன சொன்னாலும் அது இவனுக்கு வேத வாக்கு..

அப்படித்தான் இன்னிக்கும் தண்ணியடிக்க வந்தாங்க.. காசுகொடுத்து பொம்பள சுகத்த அனுபவிக்கிறதெல்லாம் இவனுக்கு புளிச்சு போச்சு.. காளிதாஸ்.. நீ என்ன சொன்னாலும் பரவாயில்ல.. இன்னிக்கு நான் அதை செய்யத்தான் போறேன்.. கழுத.. இதைக் கூட செய்யலைனா அப்புறம் ஊருக்குள்ள நான் என்னடா சண்டியரு.. எவளையாவது இன்னிக்கு தொடணும்.. என்னமா வர்றாளுக ஒவ்வொருத்தியும்.. சண்முகதுக்கு இப்போ போதை தலைகேறிவிட்டது.. நான் சொல்ற மாதிரி நீ செய்..அது போதும்.. நீ வரலைனா கூட பரவாயில்ல.. உன் ஆட்டோவை மட்டும் கொடு.. நான் பாத்துக்குறேன்.. காளிதாஸுக்கு பயம் ஒரு பக்கம் இருந்தலும் இந்த மாதிரி த்ரில் ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நேரம் போராடி, வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டான்.. சண்முகம் பிளான் என்னன்னா.. நாளைக்கு காலைல உங்களுக்கு பேப்பர் படிச்சாலே தெரியும்.. ஆபீஸ் முடிந்து வீடு திரும்பிய கால்சென்டர் பெண் மாயம்னு நியுஸ் படிச்சா அதுக்கு காரணம் இந்த சண்முகம் தான் தெரிஞ்சுக்கோங்க.

கதிர்..நீதான் என் வாழ்க்கை.. நீ இல்லாம என்னால இனிமே இருக்க முடியாது.. நீ சொன்ன மாதிரி நான் தோத்துட்டேன்..பந்தயத்துல தோத்துட்டேன்..நீ இல்லாம என்னால வாழமுடியாதுங்கிறதை நான் ஒத்துக்குறேன்.. டேய்..டேய்.. உன்னோட இந்த கருகரு மீசை தாண்ட என்னை விழவச்சது.. கதிரும் காவியாவும் ஒரே கம்பெனில, ஒரே டீம்ல வேலை பாக்குறவங்க.. லஞ்ச் முதல் டீ வரை ரெண்டு பேரும் சேர்ந்தே தான் போவாங்க.. சும்மா டீம் மெம்பரா இருந்த பழக்கம் மெல்ல நண்பர்களாகி, இப்போ காதல்ல நிக்குது. கதிருக்கும் காவியான்னா உசுரு..கதிர் தன்னோட வீட்லயும் சொல்லிட்டான்.. இடையில கொஞ்ச உரசல்கள்..ஊடல்கள்.. அதுக்கு பிறகு காவிய பேசின வார்த்தை தான் மேல இருக்கிறது..

கதிர் காலேஜ் படிக்கிறப்போ தன்னோட கூட படிச்ச அமுதாகிட்ட ஏற்பட்ட காதலை கடைசி வரை சொல்லாம கடைசில அவள் கல்யாணதிற்கு போய் தோழனாவே ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்தவன்..கூட படிக்கிற தோழிகிட்ட எப்படி சொல்றது.. கையில வேலையும் இல்லை.. அமுதா தன்னை காதலிக்கிறாளான்னு தெரியாதுன்னு பல குழப்பதிலேயே காலம் கடத்தினவன்.. அந்த சொல்லாத காதலை ஒரு நாள் காவ்யாகிட்ட சொல்லிகிட்டு இருந்தப்போ தான் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு தீ பரவி காதலில் முடிந்தது.. அப்போ.. என்னன்ன நினைச்சானோ அதெல்லாம் இப்போ கையில இருக்க, மனசுல அப்படியொரு உணர்வு வந்தவுடனே காவ்யா கிட்ட காதலை சொல்ல, இதுக்குத்தான் காத்திருந்ததை போல காவ்யாவும் அதை ஒத்துக்கொண்டாள்..

கடவுள் எழுதுற கதைல ஒரு பிரச்சனையும் இல்லாம காதல் ரொம்ப சுலபமா நிறைவேறிடுமா என்னா...


இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் திங்கட்கிழமை...

Friday, October 20, 2006

தீபாவளிப் படங்கள் - அஜித்தின் வரலாறு

தீபாவளி..பட்டாசும், புத்தாடை ஸ்வீட்டும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு புதுப் படங்கள்.

எல்லா புதுப் படங்களும் பாருங்கோ.. நம்ம தலையோட படம் ரிலீசாகுது.. அடுத்த வாரம் வரைக்கும் எல்லா தியேட்டருலையும் படத்தோட அட்வான்ஸ் புக்கிங்க்ல ஹவுஸ்-புல் ஆயிடுச்சு..

படம் ரொம்ப நல்ல இருக்கிறதா பிரிவியூ ஷோ பாத்த என் நண்பன் சொன்னான்.. இருந்தாலும் ஒரு நாள் காத்திருந்தா தமிழ்நாடே என்ன சொல்லுதுன்னு பாக்காலம்.. எல்லா தீபாவளி படங்களோட முன்னோட்டமும் இங்கே இருக்கு.. படிச்சுக்கோங்கோ..

வழக்கம் போல தல படத்துக்கு ஒரு சின்ன விளம்பரம்.





எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Wednesday, October 18, 2006

கன்னா பின்னான்னு ஒரு பதிவு.. தீபாவளி ஸ்பெஷல்



நம்ம ஆன்மீக ஆசிர்வாதானந்தா இப்படி உங்களை ஆசிர்வதிக்கிறார்..

என்னப்பன் முருகன் பெரிய ரவுண்டா போட்டு மிஸ் பண்ணின பழத்தை.. சின்ன ரவுண்டலயே வாங்கினாரு கணபதி சாமி.. அது மாதிரி வாழ்க்கைல ஜெயிக்கனும்னா வின்டோஸ்ல மாதிரி ஷார்ட்கட் பயன்படுத்தி, சிறப்பா தீபாவளி கொண்டாடுங்க..

இந்த வருட தீபாவளி மலர்ல கருத்து கந்தசாமி என்ன சொல்றாருன்னா...
பொய் சொல்றவன்
பொய் சொல்லாதவனை
பொய் சொல்றான்னு
பொய் சொன்னா
பொய் சொல்லாதவனையும்
பொய் சொன்னான்னு
பொய் சொல்லும் ஊர்.

போட்டிக்கு தத்துவ தாண்டவராயன் இப்படி சொல்றார்...
கதாநாயகனுக்கு வில்லன் வில்லன்
வில்லனுக்கு கதாநாயகன் வில்லன்.

இந்த தீபாவளிக்கு நயன்தாராவோட மூன்று படங்கள் வருது.. அதனால நச்சுன்னு நயன்ங்கிற ப்ரோகிராமுக்காக நயனுடன் ஒரு பேட்டி..ஹிஹி..சிம்பு இல்லாத நேரத்துல தான்..

நான் : இந்த தீபாவளிக்கு மக்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க, நயன்..
நயன் : என்னோட படங்கள் மூணு வருது.. நல்லா பாத்து தீபாவளியை என்ஜாய் பண்ணுங்க..
நான் : சிம்பு..?
நயன் : நல்ல நண்பர்.. என் ஹீரோ..வல்லவன்ல.. நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ்.. நான் கூட எல்லாம அவர் காபி கூட குடிக்க மாட்டார்
நான் : எங்க நட்டாமை பத்தி..?
நயன் : நாட்டாமை..?ஓ..சரத்குமாரா?
நான் : இல்ல..ஷ்யாம் பத்தி..
நயன் : ஷ்யாம்..ஓ..எங்க போனாலும் என் பின்னாடி வந்து சிம்புகிட்ட அடிவாங்கினாரே..அவரா..பாவம்..நல்ல ரசிகர்.. மேக்-அப் இல்லாம நான் எடுத்த போட்டோல கூட அழகா இருக்கேன்னு, எல்லோர் கூடவும் சண்டை போடுவார்..

இப்போ அசின் பத்தி நான் என்ன சொல்றேன்னா

காபியில் கூட
நீ
சக்கரை போடுவதில்லையாமே..
நான்
உன் உதடுகள்
இனிப்பாய் இருக்கிறதென்று
சொன்ன பிறகு..

கூட்டமாய் கிடக்கும்
கூந்தல் முடிகள்
ஜிம்னாடிக்ஸ் பழகிய
சீனத்து பெண்கள்..
என்னமாய் வளைகின்றன
தினமும்....

குதிரை வாலாய் ஒரு நாள்
தூக்கிச் சொருகியபடி மறுநாள்
மேலேழுந்து இறக்கப்பட்டு
கீழ் விழும் நீர்விழ்ச்சி போல் சில நாள்..

அந்த
கூந்தல் கூட்டத்தில் தான்
ஒரு நாள்
நான் காணாமல் போனேன்.

அரியப் புகைப்படம்..
பரமசிவன் ஷூட்டிங்கும், சரவண ஷூட்டிங்கும் அடுத்தடுத்து நடந்த போது, இவர்கள் சந்தித்த போது எடுத்த படம்..



அப்படியே எல்லோரும் கொலம்பஸ் வந்தீங்கன்னா.. நம்ம
தீபாவளி பாட்டை போட்டு சிறப்பாய் கொண்டாடலாம்..
டிக்கட் அனுப்பி வையுங்கன்னு வேதா கேக்குறது தெரியுது..

அதனால..நண்பர்களே..எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, தெய்வங்களை கும்பிட்டு ,இனிப்பெல்லாம் சுவைத்து, டிவில இந்திய தொலக்காட்சிகளிலேயேன்னு புது படம் பாத்து,
நண்பர்களோட போன்ல பேசி, ஓசி SMS அனுப்பி
பட்டாசா, ரகளையா தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்..

எல்லா புத்தகங்களும் தீபாவளி மலர் போடுறாங்களேன்னு ஆசைபட்டு இங்கே நாம் போட்ட பதிவு இது.. இன்னும் என்னன்ன பகுதிகள் இருந்தா இது முழுமை அடையும்னு உங்க ஆலோசனைகளை பின்னூட்டமா போடுங்க.. ஒவ்வொரு பின்னூட்டதுக்கும் ஒரு எண் கொடுத்து, அதை குலுக்கல் முறைல செலெக்ட் பண்ணி பரிசு எல்லாம் கொடுப்போம்.. பின்னூட்டம் போடத் தயாரா.. பரிசு தர நான் ரெடி..

Tuesday, October 17, 2006

படம் பார்த்த கதைகள்

ஒரு மாசத்துக்கு எத்தனை படம் நீங்க சாராசரியா பார்ப்பீங்க.. நான் மதுரையில படிச்சுகிட்டு இருந்தப்போ, மாசத்துக்கு குறைந்தது பதினைந்து முதல் இருபது படமாவது பார்ப்பேன். சில சமயம் வேற வழி இல்லாம பாத்த மொக்கை படங்களையே ரெண்டு தடவை பாத்த கொடுமை எல்லாம் உண்டு. என் நண்பன் மணி இருக்கானே, அடுத்த நாள் செமஸ்டர் இருந்தாக்கூட இன்னிக்கு ரெண்டு படம் பாத்துடுவான். பெரும்பாலும் ஹாஸ்டல்ல நைட் சப்பாட்டை முடிச்சுட்டு கிளம்பினா, ஏதாவது ஒரு படத்தை பாத்துட்டு தான் திரும்புவோம்..மதுரையில இருக்க பெரும்பாலான தியேட்டர்கள் எங்களுக்கு அத்துப்படி.. போறப்ப ரொம்ப ஈசியா போயிடுவோம். திரும்பி வர்றதுதான் சிரமம். எங்க காலேஜ் கொஞ்சம் சிட்டியை விட்டு தூரமா இருக்கிறதால நைட் பஸ் கிடைக்கிறது ரொம்ப சிரமம். ஏதாவது நியுஸ் பேப்பர் வேனோ, பால் வேனோ தான் பிடிச்சு ஹாஸ்டல் வருவோம்.

காதலா காதலா படம் பாக்க சைக்கிள் ஓசி வாங்கிட்டு எட்டு கிலோமீட்டர் போனோம், திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை குரு தியேட்டர் வரை.. படம் நல்லா இருந்தாக் கூட அழுப்பு தெரிஞ்சிருக்காது.. திரும்பி வர்றப்போ படம் கொத்து கொத்துன்னு கொத்துனதுல எங்களுக்கு 'சொத்'துன்னு இருந்தது..

அப்போ உயிரே படம் ரிலீஸ் ஆகி இருந்தது.. என் நண்பர்கள் பலருக்கு ஷாருக்கானின் என்றால் உயிர். எனக்கு என்னமோ ஹிந்தி நடிகர்களோட ரசிகன் கிடையாது. ஆனாலும் மணிரத்தினதுக்காகவும், ரகுமானுக்காகவும் போனோம். இந்த கூட்டத்துல அடிச்சு பிடிச்சு படம் பாக்குறதே ஒரு த்ரில் தான்.. மதுரை அபிராமி தியேட்டருல அந்த படம் போட்டு இருந்தான்..நாங்க போனப்ப ரொம்ப கூட்டம் எல்லாம் இல்லை. கவுண்டர்ல நின்னுகிட்டு இருந்தோம்.. சிகரெட் வாடையும் வெற்றிலை சாறுமாய் கவுண்டர் அதுக்கே உரிய வாடையோட இருந்தது.டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சவுடனே, எங்க தோள் மேல நாலு பேர் நடந்து போறான். ரெண்டு பேர் பின்னாடி இழுக்குறான். நான் முன்னாடி இருக்க கம்பியை இறுக்கமா பிடிச்சுகிட்டேன்.. பிடிச்சுகிட்டு என் நண்பர்களை உள்ளே ஒவ்வொரு ஆளா அனுப்பினேன்..அவங்க எல்லோரும் போன பிறகு கடைசியா நான் போனேன். சில பேர் வரிசை கடைசில இருப்பாங்க.. சத்தம் போட்டு சத்தம் போட்டே முதல்ல வந்துடுவாங்க.. அவங்களை போய் நாம என்ன பண்ண முடியும்.. கொஞ்சம் பேசினா பிளேடுல கீறிட்டு போய்டுவாங்க..நமக்கெதுக்கு வம்பு.. உயிரே படம் பாக்க வந்தோமா..உயிரே போறதுக்கு வந்தோமா..கையெல்லாம் சிவந்து கிடந்தது.. கொஞ்சம் எரியவும் செய்தது. என் நண்பர்கள் எல்லோருக்கும் டிக்கட் கிடைச்சது..என்னோட டிக்கட் முடிஞ்சது.. என்னடா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு விட்டுட்டோமேன்னு வருத்தமா இருந்தது.. அப்புறம் இருபது ரூபாய் டிக்கட்டை எண்பது ரூபாய் கொடுத்து வாங்கி அந்த படத்தை பாத்தோம்..

இதே மாதிரி தளபதி படம் வந்த நாலாவது நாள். நானும் என் ஊர் நண்பனும் படத்துக்கு போனோம். நாலு காட்சிதானேன்னு ஒரு மணிக்கு போனா, அன்னிக்கு ஐந்து காட்சி.. பனிரெண்டரை மணிக்கே படத்தை போட்டுட்டான். அடப்பாவிகளா.. இன்னிக்கே படத்தை பாக்கனும்னா ஒரு ரெண்டு மணிநேரம் இங்கியே இருக்கனுமேன்னு நினச்சு குழம்பி கிடந்தோம்.. நாமளோ தலைவரோட ரசிகர்கள்.. படத்தை பாக்காம போனா, பாத்தவங்க கதை சொல்லியே கடுப்பேத்துவாங்க.. எவ்வளவு நேரம்னாலும் பரவாயில்ல.. இருந்து படத்தை பாக்காம போகக்கூடாதுன்னு கவுண்டர்ளையே தவம் இருக்க ஆரம்பிச்சோம்.. நாங்க தான் மொத ஆளுக.. இந்த திண்டுக்கல் தியேட்டர்ல மோசம் என்னன்னா இங்க மொத ஆளுக்கு டிக்கட் கொடுக்கறப்பவே அங்க படத்தை போட்டுடுவாங்க.. மொத ஆளா டிக்கட் வாங்கினாலும் தியேட்டர்குள்ள போறப்ப கதை, திரைகதைன்னு மணிரத்னம் பேரை போட்டுட்டான்..

ஏன் இப்படி முதல் ரெண்டு நாள்ல படத்தை பாக்கணும்னு தவியாத் தவிக்கிறோம்னா, நானும் என் நண்பன் மணி வந்து படம் நல்லா இருக்குன்னு சொன்னா தான் ஹாஸ்டல்ல இருக்க பல பேர் அந்த படத்தை பாப்பாங்க.. அதனால அவங்களுக்காக தான்.. பல நாள் இந்த மாதிரி நைட் செகண்டு ஷோ பாத்துட்டு கிளாஸ்ல சாமியாட்டம் ஆடினது உண்டு.

காதலுக்கு மரியாதை வந்தப்போ தியேட்டருல மட்டும் படத்தை ஏழு தடவை பாத்தேன்.. ஹாஸ்டல்ல பொழுது போகலையா..கிளம்பு படத்துக்குன்னு அதை அத்தனை தடவை பாத்திருக்கேன்.. ஒரு தடவை என் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு போனேன். வரிசைல தான் நின்னுகிட்டு இருந்தோம்.. எங்க மூஞ்சில என்ன தான் எழுதி இருந்ததோ தெரில.. சும்மா நின்ன போலீஸ்காரர் ஒதுங்கு ஒதுங்குன்னு சொல்லிகிட்டு வந்தபடியே நாங்க நின்ன இடத்துல வந்து லத்தியை ஓங்கினாரு.. அடடா..இதுக்கு அடிக்கிறாருன்னு தெரிலயே.. பவம் இந்த சின்ன பசங்களுக்கு அடிவிழப்போகுதேன்னு நான் கையை இடையில நீட்ட அந்த லத்தி என் வலது கை விரல்ல விழுந்தது.. விழுந்த அடில லத்தியே உடஞ்சிடுச்சு.. அந்த போலீஸ்காரர் திரும்பி பாக்குறதுகுள்ள கவுண்டர்ல நுழைஞ்சு எஸ்கேப் ஆயிட்டேன்..

பல சமயங்கள்ல பாத்த படம் ஞாபகம் இருக்கிறதை விட இந்த மாதிரி சம்பவம் தான் ஞாபகம் இருக்கு. அது ஒரு வாழ்க்கைங்க.. அழுதாலும் திரும்ப கிடைக்காது அந்த அருமையான கலகலப்பான வாழ்க்கை

Monday, October 16, 2006

சிட்டுக்குருவிக்கு பக்காவா ஒரு பேர் வைங்க

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 11

நல்ல ஊர் சுத்திட்டு ஒரு முப்பது கிராம் வெயிட் ஏறி கொழுக் மொழுக்குன்னு வந்திருக்கு சிட்டுக்குருவி. நான் அதை அப்படியே பாத்துகிட்டு இருக்க, ஓய்..கண்ணு போடாதேப்பா.. இப்போ தான் நான் ரொம்ப கியூட்டா இருக்கேன்னு என் டார்லிங் சொல்லியிருக்கா..ன்னு சந்தோசத்துல எகிற ஆரம்பிச்சது குருவி.. அப்பா, பெரியப்பா கூட இங்க செட்டில் ஆகிட்டாலும் அதுக்கு இந்தியாவுல நிறைய நண்பர்களும் சொந்தங்களும் உண்டாம்.. அதனால ஒவ்வொரு வருஷமும் இந்தியா போயிட்டு வந்திடுமாம் சிட்டுக்குருவி. இந்த தடவை தன் ஆசை காதலியோட.. அதானல இந்த டிரிப் அதுக்கு ரொம்ப விஷேசமானது. தாரை தப்பட்டை எல்லாம் அடித்து, மாலை எல்லாம் போட்டு அது பிரண்ட்ஸ் அமர்களப்படிதீட்டாங்களாம்.. ஒரே சந்தோசம் அதுக்கு.. அந்த பச்சப் பயிறு, நெல்லுமணி, குருனை அரிசின்னு மெனு வேற தினமும் ஒண்ணாம்.. நம்ம சிட்டுக்குருவோட காதலி அமெரிக்காவுலயே பிறந்து வளர்ந்ததால அதுக்கு இதெல்லாம் ரொம்பவே புதுசாம்.. நல்லா என்ஜாய் பண்ணிச்சாம்.. கூடவே வகை வகையான பழங்களை பாத்து ரொம்ப குஷியாகிடுச்சாம்.. தமிழ்க் குருவிகளோட உபசரிப்புல ரொம்பவே உச்சிகுளிர்ந்து போச்சாம்.. அய்யோ.. குருவியோட டிரிப் கதையை கேக்க கேக்க எனக்கு காதுல ரத்தம் வர ஆரம்பிச்சது.. இதை பாத்தவுடன் குருவி முறைத்து பாத்தபடி வந்த வேலையை ஆரம்பித்தது..

அஜித்தோட அடுத்த படமான கிரீடம் படத்துல திரிஷா தான் ஜோடியாம். இந்த படத்தின் மூலமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வசனகர்த்தா ஆகிறாராம்.

கமலோட தசாவதாரம் படத்துல கமல் பத்து வேடத்துல நடிக்கிறது தெரியும். அசின் ரெட்டை வேடத்துல நடிக்கிறாராம்.. உனக்கு தெரியுமா.. (எனக்கே அசின் பத்தின நியுஸா.. சிட்டுக்குருவி இதெல்லாம் ரொம்ப ஓவர்)

ரஜினியோட சிவாஜில ஓப்பனிங் பாட்டுல ஆடுறதுக்கு நயன்தாராவுக்கு சான்ஸ் கிடைச்சிருக்காம்.. ரொம்ப பேர் போட்டி போட்டதுல இப்போ நயனுக்கு தான் லக்காம்.

சொல்லிவிட்டு சிட்டுக்குருவி இரும, ஒரு டம்ளரில் சீரகம் போட்டு காய்ச்சின தண்ணியை ஊற்றிக் கொடுத்தேன்.. ஒரே கல்பில் அதை குடித்த குருவி மறுபடியும் ஆரம்பித்தது.

மணிரத்தினதுக்கு மதுரை திருமலை நாயக்கர் மஹால் மேல எப்பவுமே ஒரு பாசம் இருக்கும். கண்ணாளனே ன்னு மனிஷா பாடினது இங்கே தான்..அவர் தயாரிப்புல, சிம்ரன் மனம் விரும்புதேன்னு நேருக்கு நேர் சூர்யாவை பாத்து பாடினதும் இங்கே தான்.. இருவர் படத்துல மோஹன்லாலும் பிரகாஷ்ராஜும், எம்ஜியார் கருனாநிதியாய் வாழ்ந்ததும் இங்கே தான்.. இப்போ தன்னோட அடுத்த படமான குருவுக்காகவும் திருமலை நாயக்கர் மஹால்ல சில காட்சிகளை ஷூட் பண்றாராம் மணிரத்னம்.

அமீரோட பருத்திவீரன் படத்துல நடிச்சுகிட்டு இருக்க சூர்யாவோட தம்பி கார்த்தி, அடுத்து நடிக்க போற படம், செல்வராகவனோட படம். செல்வராகவன், யுவன், ஒளிப்பதிவாளர் அர்விந்த்கிருஷ்ணா, மூன்று பேரும் சேர்ந்து ஒயிட் எலிஃபான்ட்ஸ் ஒரு பட நிறுவனத்தை கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சாங்கள்ல அதுக்காக செல்வா இயக்குற படம்..

டிசம்பர் 15-இல் ரஜினியோட தலைமையில் நடக்க போற செல்வா-சோனியா கல்யாணாதுக்கு பிறகு, இந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குமாம்.

கார்த்தி, இன்னும் ஜெட்லாக்ல இருந்து வெளில வரல..ரொம்ப டயர்டா இருக்கு..அதுவும் இல்லாம சென்னைல நடந்த தேர்தல் வன்முறைல மாட்டி அப்படி இப்படின்னு பறந்து, பிளைட் பிடிச்சு இங்கே வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. நீ ரொம்ப எதிர்பார்ப்பியேன்னு உடனே வந்தேன்.. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறம் வர்றேன்..ஓகேயா..பைன்னு சொல்லிட்டு இறக்கையை விரித்து வானத்துல பறக்க ஆரம்பித்தது, நம்ம சிட்டுக்குருவி..

(நண்பர்களே.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவின்னு சொல்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு..அதுவும் தனக்கு ஒரு நல்ல பேர் இல்லியேன்னு அதுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சுக்குள்ள இருக்கு.. அதனால, நம்ம சிட்டுக்குருவிக்கும் அதோட லவ்வருக்கும் நீங்களே நல்ல பேரா வையுங்க..பாக்கலாம்.. பேர் கொஞ்சம் ஹீரோயிசமா இருந்தா நல்லா இருக்கும்னு சிட்டுக்குருவி ஃபீல் பண்ணுது.. நல்ல பேர் வச்சவங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தரப்படும்.. குருவியின் தீர்ப்பே இறுதியானது)

Sunday, October 15, 2006

மகாஜனங்களே.. ராதிகாவே சொல்லியாச்சு.. கோக்ககோலா குடிங்க..

ஏதேச்சையா சன் டிவி பாக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ எல்லாம் சீரியல் மற்றும் மற்ற சினிமா நிகழ்ச்சிகளை எல்லாம் பாக்குறதை விட விளம்பரமே பாக்கலாம்னு பாத்துகிட்டு இருந்தேன்..

இதுவரைக்கும் தனது விளம்பரங்களை வித்தியாசமா எடுத்துகிட்டு இருந்த கோகோ-கோலா விளம்பரத்துல ராதிகா.. கோக்ல வேற எந்த மாதிரியான வேதியியல் பொருளும் சேக்கல.. எல்லாம் முறையா பரிசோதித்து தான் தர்றாங்க.. அதனால தைரியமா நீங்க கோக்கை நம்பி குடிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. நமக்கு இதுல ஏதாவது சந்தேகம் இருந்தா நாமும் கோக் தயாரிக்கிற தொழிற்சாலைக்கு போகலாமாம்.

எனக்கு பொது அறிவு ரொம்பக் கம்மி.. ராதிகா, யாருக்கும் தெரியாம ஏதும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்காங்களா.. இனிமேல் காய்ச்சல் தலைவலின்னு வந்தா அவங்க கிட்ட போய் மருந்து கேக்கலாமா.. ஏங்க பணத்துக்காக தான் நடிக்கிறீங்க.. கொஞ்சம் பொதுநலத்தையும் மனசுல வச்சு நடிங்க.. யாராவது கொஞ்சம் அழுத்தி கேட்டாலோ, பிரச்சனையை பண்ணினாலோ, அய்யோ.. எனக்கு ஏதும் தெரியாது.. நான் சும்மா விளம்பரத்துக்காக தான் நடிச்சேன்னு ரொம்ப கூலா சொல்லப்போறீங்க..

ஆமா, பொழப்பை கெடுத்து நாலஞ்சு ஆராய்ச்சியாளர்கள் டெஸ்ட் பண்ணி ஒரு லிஸ்ட் போட்டாங்களே, கோக்ல என்ன என்ன மோசமான கிருமிகள் இருக்குன்னு.. அப்போ அதெல்லாம் பொய்யா.. கோக்கை டாய்லெட் கிளீனரா எல்லாம் பயன்படுத்துற அளவுக்கு வேதியியல் பொருள் இருக்குன்னு சொன்னாங்களே.. அப்போ அதென்ன..

ஏதோ ஆரோக்கிய நாலரை பால் குடிங்கன்னு விளம்பரத்துல சொன்னீங்க.. அதுக்காக நீங்க சொல்றதை எல்லாம் நம்புவாங்கன்னு நினச்சீங்களா.. ஏதோ ஒரு டிவி கம்பெனியை நடத்தினோமா, நாலு காசு சம்பாரிச்சோமா அப்படின்னு இல்லாம இதெல்லாம் நமக்கு தேவையா.. ஏதோ சொல்றதை சொல்லிட்டோம்.. கோக் குடிச்சு யாருக்காவது ஏதுன்னா, இனிமே நாம ராதிகா வீட்டுக்கு தாராளமா போகலாம். சம்பாரிச்ச காசுல நமக்கு மருத்துவம் பார்ப்பாங்க..

Friday, October 13, 2006

அடி பாவனா கையத்தட்டு...

நம்ம நண்பர்களோட தீபாவளி கொண்டாடினா எப்படி இருக்கும்னு நினச்சு, மனசுல ராக்கம்மா கையத்தட்டு மெட்டுல ஒரு பாட்டு.. பரணி மாப்பிளை வேற பாவனா பாவனான்னு உயிரை விடுறார். அவருக்கிட்ட பாவனா தன்னோட லவ்வை சொன்ன பிறகு வர்ற தீபாவளின்னால, அவங்களுக்கு இது டூயட் பாட்டும் கூட.. மனசுல ராக்கம்மா கையத் தட்டு பாட்டை ஞாபகப் படுத்திட்டு பாடுங்க..

பரணி: அடி பாவனா கையத்தட்டு
பாவனா : பரணி நீ தாலியக் கட்டு
பரணி: அடி கமென்ட்ஸ் நூறு வந்தா ஹிட்டு
பரணி: சொர்க்கம் போலம் வாடா கிட்ட...

பாவனா : அட கார்த்தியே நன்றி யுனக்கு
என் ராசாவை அமைச்சராக்கி
கூட என்னை பியே யாக்கி
ஆபீஸ்ல அடிச்சோம் கூத்து

(இந்த டூயட் பாத்தவுடனே அம்பிக்கு பொறுக்கலை..உள்ள நுழையறரு)
அம்பி: இது பஞ்சாப் குதிர இது ஒத்துக்காது
இதை கட்டிகொள்ள ஒரு சூரன் நானே..
(அம்பி கூட அம்பியோட பஞ்சாப் குதிரையும், ஆட்டத்துல கலந்துக்குறாங்க)

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா

(பரணி: அடி பாவனா)

பரணி: சொந்த ஊரில் பாத்த சிட்டு எல்லாம் இப்போ
உனக்கு ஈடு ஆகுமா நீ சொல்லு
அட ஊட்டியெல்லாம் போவோம் காஷ்மீர்கூட போவோம்
ஊர சுத்தி எல்லாம் நீ பாரு

கார்த்தி: பூரிகட்ட ஸவுண்டு எட்டு ஊருதான்
எட்டனும் பஞ்சாப் அடி ஜோராக
வக்கிற அடி நம்ம அம்ம்ம்பிய
தைக்கனும் பஞ்சாப் கொடு கட்டயால
அட வேணுமுன்னா நானும்கூட வர்ரேன்னே
ஏ..அசின்பெண்ணே முத்தம் சிந்து
பனி முத்துப்போல் நித்தம் வந்து

அசின்: அட மாமாவே ஜல்லிக்கட்டு
நீ கிட்டவந்து என்னைகட்டு

கார்த்தி: அடி பக்கம் நீதான் ஒரு ஏசிகூலு
அடி அப்ப தாண்டி எனக்கு திருநாளு

(பரணி: அடி பாவனா)

பிரியா : வாசலுக்கு வாசல் குப்பையெல்லாம் கூட்டி ஊரை நீ தான் சுத்தமாக்கு..

அசின்: அட குப்பையெல்லாம் போச்சு இது ஆச மச்சான்
ஆட்சி இன்பம் என்று நீ கூறு..

நாட்டாமை: நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
எங்க ஆட்சிலதான் வந்து சேராதா
பிளாகரெல்லாம் ஒன்று கூடினால்
தீவாளி தான் அன்னிக்கு தெரியாதா
அட ஆலமரம் அரசமரம்
நல்ல இடந்தான்
ஊரெல்லாம் கூடி வந்து
புது நாட்டாம்ம வாழ்க கூறு

பாவனா :: பூமால எடுத்துகிட்டு
என் அண்ணனுக்கு மாலை சூட்டு

(கீதா மேடம் தலைமையில் வேதா, சசி, பொற்கொடி, தீக்க்ஷன்யா,பொன்னரசி, பிரியா, உஷா, சண்டக்கோழி, எல்லோரும் பட்டுச்சேலை சரசரக்க விளக்கு எடுத்திட்டு இந்த பாட்டை பாடிட்டு போறாங்க)
குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
மனித்த பிறவியும் வேண்ந்டுவதே இம்மாநிலத்தே

பரணி: அடி பாவனா கையத்தட்டு
கிட்ட வந்து பக்கம் நில்லு

பாவனா : ஆட ராசாவே தாலியக் கட்டு
சொர்க்கம் போலம் வாடா கிட்ட

கார்த்தி: அசின் உன்னப்போல இங்கு நானுன்தாண்டி
ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா

(நம்ம இந்திய தேவதையும் கோபாலும் அப்படியே ஜாயின் பண்ணிக்கிறாங்க)

இந்திய தேவதை : அட எல்லோரும் தான் கிட்ட வாங்க
சந்தோசமா ஆட்டம் போட

கோபால்: அட கார்த்தியே கம்பம் நட்டு
நாட்டை ஆளு கொடியை தூக்கி

(பரணி: அடி பாவனா)
எப்படி இருக்கும் நாம இப்படி தீபாவளி கொண்டானினா..

Thursday, October 12, 2006

ஆசையாய் ஒரு கொலை

அந்த இருட்டுக்கு பயந்து அன்று நிலா கூட வானத்தில் வாக்கிங் போகல.. அந்த நேசனல் ஹை-வே, கழட்டி போட்ட பெல்ட் மாதிரி நீண்டு இருந்தது..

அந்த ரோட்டோர மரமெல்லாம் தலைவிரி கோலமா காத்துக்கு தலை ஆட்டிகிட்டு இருந்தன.. தூரத்துல சில வீடுகள்ல விளக்குகள் எரிஞ்சுகிட்டு இருந்தன..

ரொம்ப தொலைவுல, ஒரு சாம்பல் நிற ஃபோர்ட் கார் மிதமான ஸ்பீடுல வந்துகிட்டு இருந்தது. முன்னாடி வர்ற வண்டிக்கு ஏத்தமாதிரி அந்த காரோட ஹெட்-லைட் கீழும் மேலுமா மாறி மாறி ஒளி அடித்துக்கொண்டு இருந்தது. கார் டிரைவர் சீட்டில் உக்கார்ந்து இருந்தவனுக்கு வயது இருபத்தேழில் இருந்து முப்பதுக்குள் இருக்கலாம். பணக்காரத்தனம் அவன்கிட்ட தெரிந்தது..கையில் பிரேஸ்லெட், மிடுக்கான விலையுயர்ந்த ஆடைன்னு இருந்தான். இடப்பக்கம் வகிடெடுத்து, தலை வாரப்பட்டிருந்தது. மீசை அழகா சிறிதாக வெட்டப்பட்டு இருந்தது.. ஒரு வரில சொல்லனும்னா கஜினி பட சூர்யா மாதிரி இருந்தான்.

நியுயார்க் நகரம் உறங்கும் போதுன்னு FMல ரகுமான் பாடிகொண்டு இருந்தார்..ஏசி போட்டு கார் சில்லுன்னு இருந்தது.. பின்னாடி சீட்ல ஒரு பெண்.. மார்பு துணியெல்லாம் கோனல் மானலாக விலகி கிடந்தது.. ஒவ்வொரு முறையும் எதிரில் வர்ற காரின் வெளிச்சம் அவள் முகத்தில் பட்டுச் சென்றது..ஆடை எல்லாம் இப்படி இருக்கிறதே என்ற சுயநினைவு கூட இல்லாமல் அவள் அப்படி கிடந்தாள்.அவள் ..இல்லை..அது ஸ்வப்னா..படித்த காலேஜுல எல்லோரையும் சொக்க வைத்தவள்.. இவள் வருகிறாளான்னு வழி பாத்து கிடந்தவர்களில், காரை ஓட்டுகின்ற இவனும் ஒருத்தன்..இவன் திலக்.. ஆசை ஆசையா ரெண்டு பேரும் காதலித்தார்கள்.. வீட்டை எல்லாம் எதிர்த்து கல்யாணமும் பண்ணிகொண்டாகள்.. ஆனா என்ன பண்ணுவது..ரெண்டு மாதத்திற்கு முன்னாடி ஆபீஸில் சேர்ந்த அனிதா ஸ்வப்னாவை விட அளகாய் தெரிந்தாள் திலக்கிற்கு..திலக்கிற்கு அனிதா தேவைப்பட்டாள்..இதோ இப்போ ஸ்வப்னா பிணமாக காரில்..

அந்த மெயின் ரோட்டை விட்டு இடது பக்கம் திரும்பிய ஒரு மண்சாலையில் காரை திருப்பினான். ரொம்ப தூரம் உள்ளே போன பிறகு மறுபடியும் இடது பக்கம் திரும்பி காரை நிறுத்தினான். அது ஒரு பெரிய குளம்.. அதன் கரை வரை அவளை..ஸ்வப்னாவை..அதை இழுத்துகொண்டு சென்றான்..கீழே படுக்க வைத்தான்..நடு வயிற்றில் அரைமுழ கத்தி சொருகிக்கிடந்தது.. அந்த இடத்தில் இருந்து ரத்தம் அவள் வயிற்றுப் பகுதி முழுவதும் பரவிக்கிடந்தது. ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை அவள் மேல் ஊற்றினான்.. திரவம் பட்டவுடன் அவள் பாதி தண்ணியாகவும், மீதி ஆவியாகவம் வேக ஆரம்பித்தாள்.. இவன் காலால் அவளை எட்டி உதைத்தான்.. அவள் மெல்ல உருண்டு, குளத்தின் தண்ணீரோடு...

டேய்..குமாரு..தூங்குடா.. மணி இப்போ ரெண்டு ஆகுது.. யெப்பா.. ஒரு புத்தகத்த எடுத்தா படிக்காம உள்ள வைக்கமாட்டியே என்று அறை நண்பன் திட்டியதால் இதுவரை படித்துகொண்டிருந்த அழிக்கவந்தாள் அனிதா என்ற க்ரைம் நாவலை மூடிவைத்து தூங்கப் போனான் குமார்.

[இந்தக் கதையை நான் என் கல்லூரி ஆண்டு விழா புத்தகத்திற்காக எழுதினேன். வரிக்கு வரி கதை மறந்து விட்டதால் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு மறுபடியும் புதிதாக எழுதியுள்ளேன்]

Wednesday, October 11, 2006

நல்லவரா கெட்டவரா - விளம்பரதாரர் பதிவு

உங்களுக்கு இந்த பதிவை வழங்குவோர் அஜித் ரசிகர்கள்..வரலாறு படத்திற்காக..The Story of the Godfather.. A Diwali release...

நீங்க நல்லவரா கெட்டவரான்னு நாயகனின் உச்சகட்டதுல (அதாம்பா, கிளைமாக்ஸ்) கமலிடம் ஒரு குட்டி குழந்தை கேக்குற மாதிரி, சுத்த பித்து, எங்கள் சொத்து, சுத்த சிகாமணி பிரியா கேட்டதால இப்படி ஒரு பதிவு..

ஆமா நான் நல்லவனா கெட்டவனா.. சம்பவத்தை எல்லாம் நான் சொல்றேன்.. கேள்விகேட்ட தோழி பிரியாவே பதில் சொல்லட்டும்..

பாட்ஷா படத்துல அந்த கம்பத்துல ரஜினியை கட்டிப் போட்டு அடிப்பாங்க.. அப்படி நீங்க என்னை யாராவது அடிச்சாக் கூட பொறுமையா இருப்பேன்.. என்கிட்ட எந்த குணத்தை பாத்து நீங்க அதிசயப்படுறீங்கன்னு கேட்ட, பொறுமைன்னு எல்லோரும் சொல்வாங்க.. வாழ்க்கைல எந்த பிரச்சனை வந்தாலும் அவ்ளோ பொறுமையா இருப்பேன்.. அதுவே ரொம்ப நாள் ஒரு விஷயம் நடந்தா, சாது மிரண்டா காடு கொள்ளதுங்கிற மாதிரி, ஒரே துவம்சம் தான்.. எந்த அளவுக்கு பொறுமைசாலியோ அந்த அளவுக்கு கோபக்காரன்..

இந்த முறை மே மாசம் எங்க ஊர்ல பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.. நைட்ல, ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது..அப்போ..மாமா பையன் ஒருத்தன் நல்லா தண்ணி அடிச்சிட்டு ரவுசு பண்ணிக்கிட்டு இருந்தான்..அங்க ஆணு பொணுகன்னு நிறைய பேர் உக்கார்ந்து அந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பாத்துகிட்டு இருந்தான்.. எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்..ஆனா அவனோ அந்த இடத்தை விட்டுப் போகாம ரொம்ப சவுண்டு விட்டுகிட்டு இருந்தான் அரைமணி நேரமா.. நானும் ரொம்ப பொருமையா அவன்கிட்ட சொல்லி பாத்தேன்.. அந்த பையனோட மனைவி கூட வந்து கூப்பிடுது.. அந்த பொண்ணை வேற கெட்ட கெட்டவார்த்தை சொல்லி திட்ட ஆரம்பிச்சான்..எப்படித் தான் எனக்கு கோவம் வந்ததுன்னு தெரில.. பிடிச்சு ஒரே தள்ளு.. பத்தடி தள்ளி போய் விழுந்தான்.. அப்புறம் அந்த பொண்ணு அவனை கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு போயிடுச்சு..அடுத்த நாள் அந்த பையன் வந்து மன்னிப்பு கேட்டான்.. கட்டுன மனவியை இந்த மாதிரி விஷயத்துக்காக ரோட்டுக்கு வரவைக்கிறவன் புருஷனே இல்ல.. (பஞ்ச் டயலாக்பா) அப்போ இதை எல்லாம் பாத்துகிட்டு இருந்த என் மாமா சொன்னார்..கார்த்திக்கும் அவங்க அப்பாவுக்கும் கோவம் வராது..அப்பாடி வந்துச்சு அப்புறம் யாரலும் தடுக்க முடியாது..

இப்போ சொல்லுங்க பிரியா, நான் நல்லவனா கெட்டவனா..

சிறிது இடைவேளைக்கு பிறகு நல்லவனா கெட்டவனா தொடரும்...

இந்த தீபாவளி தல தீபாவளி.. தல அஜித் மூணு வேஷத்துல கலக்கி இருக்க படம்.. இசைப்புயல் கைவண்ணத்துல உலகின் எட்டாவது அதிசயம்னு வெளிவந்த பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டு.. பாருங்க வரலாறு.. அஜித் படைக்க போறாரு வரலாறு..

நான் நல்லவனா கெட்டவனா தொடர்கிறது..

மத்தவங்களுக்கு என் சக்திக்கு ஏத்த மாதிரி உதவுறதுன்னா ரொம்ப பிடிக்கும். அது எந்த விஷயமா இருந்தாலும் சரி.. எங்க ஊர்ல எழுத சிலேட், நோட்டு, பென்சில், பேனா வாங்க கூட காசு இல்லாம எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்கு போறாங்க.. அவங்களுக்கு அந்த பொருள் எல்லாம் வாங்கி தர்றது ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு பிள்ளைகளும் அந்த கடை முன்னாடி வந்து அது வேணும், இது வேணும்னு கேக்குறதும், அதுக்கு அவங்க அப்பா ஏதோ ஒரு சாக்கு சொல்லி சமாதானம் பண்றதும் பாக்கவே கஷ்டமா இருக்கும்.. ஆனா சில பேர் இருக்காங்க.. நம்மள விட நிறையா சம்பாதிப்பாங்க.. வெளில எங்கேயாவது போனா போதும், நம்ம தலைல தான் மிளகாய் அரைப்பாங்க.. வேற யாருக்கும் எதுவும் நகத்த கூட மாட்டாங்க.. அந்த மாதிரி ஆளுகளை கண்டா எனக்கு உள்ளார கோவம் வரும்.. ஆனா முதல்ல சொன்ன பொறுமையின் காரணமா பேசாம இருந்துடுவேன்.

இப்போ சொல்லுங்க பிரியா, நான் நல்லவனா கெட்டவனா..

சிறிது இடைவேளைக்கு பிறகு நல்லவனா கெட்டவனா தொடரும்...

அமெரிக்காவுல நியுஜெர்சி மற்றும் போஸ்டன் ல வரலாறு ரிலீஸ் ஆகுது.. தல அஜித் ஒவ்வொரு கேரக்டர்லயும் பின்னி பெடல் எடுத்து இருக்க படம்.. படத்தை பார்த்து வெற்றி படமாக்க வேண்டுகிறோம்.. படம் வேணா லேட்டா வரலாம்.. ஆன நிச்சயம் ஹிட்டா தான் ஆகும்.

நான் நல்லவனா கெட்டவனா தொடர்கிறது...

நண்பர்கள்..இவ்வளவு நண்பர்கள் கிடைக்க நான் நிச்சயம் கொடுத்து வச்சிருக்கனும்.. வாழ்கைல இன்ப துன்பம் எது நடந்தாலும் கூடவே இருக்கிறவங்க.. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் நான் இவங்களை விட்டுகொடுத்ததே இல்லை.. பட்டைய கிளப்பி ஆட்டம் போட்ட காலத்துலயும் சரி, சுதி இறங்கி கிடந்த சமயமும் சரி அவங்க தான் உற்சாக டானிக்.. ஆனா யாராவது என்னை பத்தி சந்தேகமா பேசிட்டாலோ, மத்தவங்க கிட்ட சொல்லிட்டாலோ மறுபடியும் அவங்க கூட பழைய மாதிரி பேசுற, பழகுற அந்த அன்னியோன்யம் வர்றது ரொம்பக் கஷ்டம்.. இந்த பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரில.. ஆனா விட முடியல...

இப்போ சொல்லுங்க பிரியா, நான் நல்லவனா கெட்டவனா..

சிறிது இடைவேளைக்கு பிறகு நல்லவனா கெட்டவனா தொடரும்...

சூப்பர் ஸ்டாரே தல நடிப்பு சூப்பர்ன்னு பாராட்டின படம் வரலாறு.. தீபாவளிக்கு சென்னை சத்யம், ஆல்பர்ட், அபிராமி, பாரத், காசி, ரோகினி, மாயாஜால் தியேட்டர்களில் வெளி வருகிறது வரலாறு.
வரலாறின் ஸ்பெஷல் பஞ்ச்..

நடந்ததை அப்பபோ நினைச்சு பாத்தா தான், நடக்க போறது நல்லபடியா நடக்கும்

நான் நல்லவனா கெட்டவனா தொடர்கிறது...

இந்த விஷயதுக்கு பொறுத்தமா வள்ளுவர் ஒரு குறளே சொல்லி இருக்கார்..
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

அதாவது ஒருத்தரை எப்படி நல்லவர்னோ கெட்டவர்னோ சொல்றதுன்ன, அவர் செய்த நல்ல விஷயம், கெட்ட விஷ்யம ரெண்டையும் எடுத்துகிட்டு அதுல எது அதிகமோ அது தான் அவரோட குணம் னு நாம நினச்சுக்கனும்..

அதனால பிரியா..இப்போ சொல்லுங்க நான் நல்லவன கெட்டவனா..

கார்த்தி..தெரியாம உங்களை இந்த தொடரை எழுதச் சொல்லிட்டேன்..அதுக்குன்னு இப்படியான்னு பிரியா கேள்வி கேட்பது தெரியுது..எல்லாம் உங்க பதிவுகளை விளம்பரப்படுத்தும் ஒரு முயற்சிதான்.. நீங்களும் அஜித் ரசிகர்..அதனால தலைவர் படம் விளம்பரம் பண்றதோட உங்க பதிவுக்கும் ஒரு விளம்பரம்..இனிமே ஹிட் ரேட் ஏறும் பாருங்கோ பிரியா..

மாப்ள பரணி..உங்க பதிவுல நம்மள பத்தி சொன்னாலும் சொன்னீங்க.. உங்க பதிவை பாக்குறவங்க எல்லாம் நம்மளோடதை பாக்குறாங்க..

ரொம்ப நன்றிறிறிறிங்கோ மாப்ள..

உங்களுக்கு இந்த பதிவை வழங்கியோர் அஜித் ரசிகர்கள்..வரலாறு படத்திற்காக..The Story of the Godfather.. A Diwali release...

[பி.கு : மற்ற எல்லா நடிகர்களும் டிவில வந்து அவங்க படத்தை விளம்பரம் செய்வாங்க.. நம்ம தல அப்படி இல்லை.. அதனால இந்த தடவை தல படத்தை நாமளே விளம்பரம் செய்யனும்னு என் அஜித் ரசிக தோழர் லியோ கேட்டதுக்காக இந்த பதிவின் இடையில் வரலாறு படத்தின் விளம்பரம் படிச்சிருப்பீங்க..]

Tuesday, October 10, 2006

ஆலமரம் இல்ல.. சொம்பும் இல்ல..

ஆலமரம் இல்ல.. பக்கத்துல எந்த சொம்பும் இல்ல.. ஆனா பஞ்சாயத்து செய்ய ஊர் ஆளுக உண்டு... கூடி நின்னு கதை கேக்க மக்களும் உண்டு.. ஒவ்வொரு தெருவுக்கும் சூரின்னு ஒரு ஆள் இருப்பாரு.. அதாவது, அவர் தான் அந்த தெருவுக்கு இன்சார்ஜ்.. இவர் தான் அந்த தெருவுல வரி வசூல் செய்றவரு.. மொத்தல்ல நமக்கு ஏதும் பிரச்சினைனா, இவர் கிட்ட தான் சொல்லனும். இவர் போய், மற்ற பஞ்சாயத்து ஆளுக கிட்ட சொல்லி அடுத்த தடவை பஞ்சாயத்து கூடறப்போ, இந்த வழக்கை ஆரம்பிச்சு வைப்பார். இந்த சூரிகள் தெருவுக்கு ரெண்டு பேர் இருப்பாங்க.. அதாவது, கிறித்துவ மக்களுக்கு ஒரு ஆள், இந்து மக்களுக்கு ஒரு ஆள்.. கிறித்துவ, இந்து மக்களுக்குன்னு தனிதனியாத் தான் பஞ்சாயத்து நடக்கும்.

ஆனா இதுவரை நான் எந்த பஞ்சயத்துலயும் முழுசா நின்னு வேடிக்கை பாத்ததில்ல.. ஆனா, எங்க வீடு பக்கத்துல தான் ரெண்டு பஞ்சாயத்துக்களும் நடக்கும்.. எப்பா.. பஞ்சாயத்து நடக்கிறப்போ..பயங்கர சவுண்டு அப்பப்போ வரும்.. ஆனா, இது சின்னகவுண்டர் படத்துல விஜயகாந்த் பண்ற மாதிரி ரொம்ப நடுநிலைமையாவெல்லாம் இருக்காது.. யார் அதிக சத்தம் தரமுடியுமோ, யாரு பெரிய ஆளுககிட்ட கொஞ்சம் நெருங்கினவரோ அவங்களுக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்.. பாவப்பட்ட அப்பிராணி மக்களுக்கு, ஒண்ணும் கிடைக்காது.. மிஞ்சிப் போனா அவங்க சோகத்தோட போவாங்க.. இல்லைனா படத்துல எல்லாம் நீங்க பாக்குற மாதிரி புழுதி (மணல்) வாரி தூத்திட்டு போவாங்க. அப்போ அவங்களை பாக்கவே பாவமா இருக்கும்.

இந்த மாதிரி பஞ்சாயத்துன்னு இல்லாம, திருவிழாக்கூட்டமுன்னு ஒண்ணு நடக்கும்.அதாவது இதுல எப்போ திருவிழா வச்சுக்கலாம்..எவ்வளவு வரி வசூலிக்கலாம்னு முடிவு பண்ணுவாங்க. இந்த கூட்டம் எப்பவுமே இரவு பத்து மணி போலத்தான் நடக்கும்.. அப்போதாதான் வேலைக்கு போற எல்லோரும் வரமுடியும்னு.. இதுலயும் பல சண்டைகள் நடக்கும்.. ஊர் பெரிய ஆளுக, மணியாரு, நாட்டாமைன்னு (நம்ம ஷ்யாம் இல்ல) இருப்பாங்க.. அவங்களை பிடிக்காத கோஷ்டி (பெரும்பாலும் பஞ்சாயத்துல தங்களுக்கு சாதகமா தீர்ப்பு கிடைக்காம போனவங்க).. ஏதாவது பிரச்சினைய கூட்டுவாங்க.. அப்புறம் அங்க அங்க சலசலன்னு ஒரே சவுண்டா இருக்கும்.. அந்த நேரத்துல கூட்டதுல இருந்து ஒருத்தர் எந்திரிச்சு, ஏப்பா..இப்படி எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமா பேசிக்கிட்டே போனா என்ன ஆகுறது..சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. அப்படின்னு சொல்வாரு.. இன்னொருத்தர்..ஏப்பா..இப்போ இங்கே பொழப்பகெடுத்துகிட்டு எல்லோரும் வந்தது இதுக்கா..திருவிழா பத்தி பேசுங்கப்பான்னு சொல்வாரு.. உடனே கூட்டம் அமைதியாகி, திருவிழா தேதி, வரிப்பணம் எல்லாம் பேசி கலஞ்சுடும்..

சினிமாவுல தான் பஞ்சாயத்து எல்லாம் பெருசு.. இப்போ எல்லாம் பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்குது.. பாவம்.. எப்பவுமே பாத்திக்கப் படுறது என்னவோ ஒண்ணுமில்லாத ஏழை சனங்க தான்..

Monday, October 09, 2006

நீண்ண்ண்ண்ட தலைப்பு புதிய தமிழ் படங்கள்

[சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 10]

அழகிய தமிழ்மகன்


ஏற்கனவே வசீகராவுல எம்ஜியார் பாலிசில நடிச்சார் விஜய். பாடல்களில் நடனம் எல்லாம் எம்ஜியார் ஸ்டைல இருக்கும். புதிய கீதைல 'அண்ணாமலை தம்பி'ன்னு ஆடிப் பாடினாரு..இப்போ தன்னோட அடுத்த படத்துக்கு அழகிய தமிழ்மகன்னு பேர் வச்சிருக்கர், விஜய். இது ரிக்க்ஷாக்காரன் படத்துல எம்ஜியார் ஆடிப்பாடின பாட்டு. பச்சைக்கிளி முத்துச்சரம், அழகிய தமிழ்மகன் னு ஒரே எம்ஜியார் பாட்டுலையா தலைப்பு வைக்கிறாங்க.. ஆனா தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்கு தர்றேன்னு சொன்னது கலைஞர். பாத்துங்க முதல்வர் கோவிச்சுக்கபோறாரு..

தீவிர திமுக அனுதாபியான விஜய் இப்படி எம்ஜியார் இமேஜை படத்துக்காக பயன்படுத்துறார். ஒரு பக்கம் சன் டிவி, குங்குமம் என எல்லாத்துலையும் மாறி மாறி இவரோட பேட்டி, படச் செய்தின்னு வருது. இன்னொரு பக்கம் ரசிகர்களை கவர எம்ஜியார் இமேஜ்.

இதுவரை விஜய் இரட்டை வேடத்துல நடிச்சதில்லை.. அட! அப்ப இதை என்னான்னு சொல்றது.. அண்ணா, கலக்குறீங்கண்ணா..

பரட்டை என்கிற அழகுசுந்தரம்



தனுஷ் நாயகனா நடிக்கும், இந்த படத்தை நட இயக்குனர் ராஜூ சுந்தரம் டைரக்ட் பண்றதா இருந்தது. ஆனா, அவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கவே நேரம் போதாததால, இப்போ இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்றாரு.

கருப்பசாமி குத்தகைகாரன்

கொக்கி படத்துக்கு பிறகு, ஹீரோவாத் தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சு கரண் ஹீரோவா நடிக்கிற இந்த படத்துல, வடிவேல் காமெடி..கீமடிகளை செய்யப் போறாரு.

பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10:30 வரை



என்ன நினைச்சு இந்த மாதிரி படத்து பேர் வைக்கிறாங்கன்னு தெரில.. அதுவும் எல்லோரும் புது முகங்கள். பாரதிராஜா கிட்ட அசிஸ்டண்ட்டா இருந்தவர் இயக்குற படம். அள்ளி தந்த வானம் படத்துல சென்னை பட்டினம்னு ஆடி பாடுன அந்த சின்ன புள்ள இதுல ஹீரோயின்.. படத்துல டைட்டிலையும் இந்த பொண்ணையும் தவிர வேற எதுவும் விஷேசமா இல்லை

வெகசன்ல போயிருக்க சிட்டுக்குருவி பொறுப்பா சில செய்திகளை அனுப்புது. கலக்குது குருவி..

Sunday, October 08, 2006

பச்சைக்கிளி முத்துச்சரம்


நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன், டைரக்டர் கௌதம் தனது படங்களுக்கு, ஏற்கனவே வந்து பிரசித்தி பெற்ற பாடல்களையே தலைப்பாய் வைக்கிறார் என்று.. மின்னலே (மே மாதம் படப் பாடல்), காக்க காக்க (கந்த ஷஸ்டி கவசம்), வேட்டையாடு விளையாடு (எம்ஜியாரின் அரசிளங்குமரி படப்பாடல்) என எல்லமே அதே மாதிரி தான். இப்போ சரத்குமார் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்துக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் னு பேர் மாத்தி வச்சிருக்கார். படம் ஆரம்பித்த சமயத்தில் விலை உயிரென்றாலும் னு வச்சு..அப்புறம் சிலந்தின்னு மாத்துனாங்க.. நானும் ஒரு வேலை கௌதம் தனது ஃபார்முலாவை மாத்திட்டாரோன்னு நினைச்சேன்.. இப்போ வேட்டையாடு விளையாடு வெற்றிக்குப் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம்னு (இதுவும் எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடல்) மாத்தி வச்சிருக்கார்..



ஏற்கனவே வச்சிருந்த விலை உயிரென்றாலும் தலைப்புக்கும் இப்போ வச்சிருக்க பச்சைக்கிளி முத்துச்சரம் தலைப்புக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே.. சரி..பரவாயில்லை.

அதனால, உலக சினிமா ரசிகர்களுக்கு சொல்ல விரும்புறது என்னன்ன நாம ஏற்கனவே ஒரு பதிவுல சொன்னது தப்பா போகல என்பது தான்.. என்னிக்கும் நம்பகமான சினி தகவல்களை தருவது நம்ம சிட்டுக்குருவி தான்..

படித்துவிட்டீர்களா சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ்..
இந்த வாரம் இன்னும் சிறப்பான செய்திகளோடு..

Friday, October 06, 2006

முதலமைச்சர் மு.கார்த்திகேயன்

எங்க ஊர்ல எல்லா கட்சிக்காரவங்களும் இருக்காங்க.. எல்லா நடிகருக்கும் ரசிகர் மன்றம் இருக்கு.. இதை எல்லாம் தினமும் பாத்து பாத்து வளர்ந்த நான், இங்கே சொன்ன மாதிரி (முழுசா படிங்க..கடைசில தான் மேட்டரே இருக்கு), விதி வலியதுன்னு எல்லோரும் நினைக்கிற மாதிரி, ஒரு நாள் தமிழக மக்களோட தலை எழுத்தை நிர்ணயிக்கிற முதல்வரானால்...

யார் யாருக்கு என்ன என்ன அமைச்சர் பதவி தருவேன்னு ஒரு பட்டியல் போட்டேன்.. ஏன் இவங்களுக்கு இந்த துறைன்னு யாருக்கும் சந்தேகம் வந்தா பின்னூட்டத்துல போடுங்க.. விளக்கம் தர்றேன். அதுமட்டும் இல்ல.. இன்னும் வேற யாருக்காவது நீங்க வேற துறை பரிந்துரையும் செய்யலாம்.

இந்த என் சிந்தனையில என் சொந்த பந்தங்களோட குறுக்கீடு எதுவும் கிடையாது. கட்சிக்காக இது வரை ஓடாய் தேய்தவங்களுக்கும், மக்களுக்காக உயிரை தர துடிப்பாய் இருக்கும் என் தொண்டர்களுக்கும் தான் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளுன்ன..

முதலமைச்சர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சித் துறை, கனிணித் துறை): கார்த்திகேயன்... அது நானே தான் (எல்லா முதல்வரும் பண்ற மாதிரி காவல்துறை என் வசமே இருக்கும்..மத்தவங்களுக்கு கொடுத்தது போக வேற என்னன்ன இருக்கோ எல்லாம் நம்ம கிட்ட தான்)

நிதி அமைச்சர் : என் மாப்ள பரணி..

கல்வி அமைச்சர் : தி ரா சா சார் (இவரை நினைத்தவுடன் அன்பழகன் நினைவுக்கு வருவதால்)

சட்டம் மற்றும் வருவாய் : நாட்டாமை ஷ்யாம் (இனிமே எல்லா வழக்குகளும் ஆலமரத்தடியில் தான் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை ஷ்யாம் மற்றும் நான் பதிவியேற்ற மேடையிலே கையெழுத்து போடுவோம்)

உள்ளாட்சி, கலை, விளம்பரம் மற்றும் செய்தி, உணவுத் துறை அமைச்சர் : எல்லோருக்கும் ஆப்பு அடிப்பவர், என் மச்சான் அம்பி (என் மச்சானுக்கு பதவி தருகிறேன் என்று யாராவது முணுமுணுத்தால், ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன்..இவர் சிறு வயது முதலே கட்சிக்காக உழைப்பவர், பலமுறை சிறை சென்றவர், இப்போது பஞ்சாப் குதிரையின் மனச் சிறையில் இருப்பவர்)

சுகாதாரத்துறை அமைச்சர் : சுத்த சிகாமணி, சுண்டல் மஹாராணி பிரியா (இவர் தமிழ்நாட்டுக்கே பினாயில் அடிச்சு சுத்தப்படுத்துவார்ன்னு நம்புறேன்)

மின்சாரத் துறை : என் மச்சினிச்சி பொற்கொடி (இவரும் பல்லாண்டு காலம் கட்சிப் பணியிலே இருந்து, இப்போது மகளிர் அணி தலைவராய் இருப்பவர்.. என் மச்சினிச்சி என்பதால் மட்டுமே நான் பதவி கொடுப்பவன் அல்ல.. உண்மை, நேர்மை, மக்களுக்காக அயராது உழைப்பவர் தமக்கே இந்தக் கழகம் உருவானது என்பதை சொல்லிகொள்ள நான் விரும்புகிறேன்)

போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் : இமயம் கண்டாள், குதிரையை வென்ற நல்லாள், கட்சியின் மூத்த உறுப்பினர் கீதா

அறநிலையத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் : சொல்லின் செல்வி, கவிதாயினி வேதா

வீட்டுவசதி மற்றும் சுங்க இலாகாத் துறை அமைச்சர் : என் அருமை தங்கை தீக்க்ஷன்யா

பொதுப்பணித்துறை அமைச்சர் : இந்தியனேஞ்சல் தம்பி பிரசன்னா (தவறாமல் அவர் தரும் பின்னூட்டதிற்கான பரிசு)

பால் மற்றும் மீன்வளத் துறை : கோல்மால் கோபால் (இனிமே இவரை பால்மீன் கோபால்ன்னு கூப்பிடலாம்)

இன்னும் வேற யாருக்காவது பதவி வேணும்னா, பின்னூட்டம் வழியா என் மச்சான் மச்சினிச்சியை கேளுங்க.. அவங்களைத் தான் கேக்கனும்னு அவங்க அக்கா அசின் சொல்லியாச்சு.. அதுக்கு மேல அப்பீலே கிடையாது.

இந்த சசி பொண்ணுக்கு ஏதேனும் பதிவு கொடுக்கலாம்னு பாத்தா, இப்போதைக்கு ஊர் பக்கம் இல்ல..

பல கொடுமைகளை அனுபவித்து வரும் தோழி உஷாவுக்கு ஏதேனும் கொடுக்கலாம்னு பாத்தா, அம்மாணி ரொம்ப நாள காணோம்..அவங்களுக்கு எப்போ வந்தாலும் பதவி உண்டு என்று கூறிக்கொள்கிறேன்..

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் நிறைய போடுறவங்களுக்கு வாரியப் பதிவு கொடுக்கப்படும்.. என்ன ரெடியா?

யெப்பா சாமிகளா, நான் ஏதோ ஆர்வத்துல இந்த பதிவை போட்டுட்டேன்.. சட்டுபுட்டுன்னு என்கிட்ட பதவியை கொடுத்துடாதீங்க..நான் இன்னும் சின்ன பையன் தான்... ஹி..ஹி..ஹி..

கடைசி நேரத் தகவல்
நமது கட்சியின் பிரச்சார பீரங்கி சசி அவர்களை சபாநாயகர் பதவிக்கு கட்சித் தலைமை பரிந்துரை செய்கிறது.. இவர் சட்டசபையில் எல்லா பிரச்சனைகளையும் நாட்டமை உதவி கொண்டு அடக்கி சபையின் மானத்தை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறோம்...

உஷா, ஒவ்வொரு வார இறுதிகள் கட்டாயம் வருவதாக உறுதி அளித்து இருப்பதால் அவங்களுக்கு கொடுமை ஒழிப்பு துறை பதவியும், லண்டன் மாதிரி சென்னையையும் மாற்றும் லகலக லண்டன் திட்டத்திற்கு தலைவியாகவும் நியமிக்கிறேன்.

Thursday, October 05, 2006

இரண்டு தெய்வங்கள்

தீபாவளி வருது.. வீட்டுக்கு போன் போட்டா, அப்பா அம்மா ரெண்டு பேரும், மகனே..தீவாளிக்கு நல்ல துணி மணி எடுத்துக்கோப்பா.. வேட்டு எல்லாம் பாத்து வெடிப்பா.. ன்னு சொன்னாங்க

நாம எங்கிருந்தாலும் நம்மள உயிரோட்டமா வாழ வைக்கிறது இந்த வார்த்தைகள் தான்.. அந்த பாசமிகுந்த வார்த்தைகளுக்கு என்ன ஒரு உன்னதமான சக்தி..

இதை எழுதறப்போ எனக்கு ஃபார்வர்டா வந்த ஒரு மெயில் தான் ஞாபகம் வருது..வீட்ல வயதான அப்பாவும் மகனும் உக்கார்ந்து இருக்காங்க.. ஜன்னல்ல காக்கா வந்து உக்காருது.. அப்பா மகனை பாத்து கேக்குறாரு.. அது என்னாப்பா.. மகன் அதுவா..அது காக்காப்பான்னு பதில் சொல்றாரு.. பத்து செகண்டுக்கு பிறகு மறுபடியும் கேக்குறாரு.. மகன் கொஞ்சம் பொருமை இழந்து அது காக்காப்பாங்கிறான்.. மறுபடியும் அத கேள்வியை அப்பா கேக்குறாரு..மகனுக்கு வந்ததே கோபம்.. ஏப்பா எத்தனை தடவை சொல்றது.. காக்கா காக்கா ன்னு..சே..உயிரை எடுக்குறீங்களே ன்னு மகன் கத்துறான்..

ஒண்ணும் பேசாம ரூமுக்குள் போய் ஒரு பழைய டைரியை எடுத்து வந்து ஒரு பக்கத்தை காட்டுறாரு..

அதுல "இன்னிக்கு என் மகன் என்கிட்ட ஜன்னலில் வந்து உக்கார்ந்த காக்காயை பாத்து, அது என்னன்னு 44 தடவை கேட்டான்.. நானும் அவனுக்கு ஒவ்வொரு முறையும் அது காக்கான்னு பதில் சொன்னேன்.. அவனோட கத்துக்குற ஆர்வத்தை பாத்து எனக்கே ரொம்ப சந்தோசமா இருந்தது"ன்னு போட்டு இருந்தது..

இதே மாதிரி அந்த மகனோட பிள்ளை கேட்டு இருந்த இப்படி அந்த மகன் கோபப்பட்டு இருப்பானா? வயதான அப்பா அம்மாவும் நமக்கு குழந்தைகள் தான்.. அவங்களோட தியாகங்கள் எந்த ஒரு விஷயத்துக்கும் ஈடாகாது.

அப்பா அம்மாவை போற்றுவோம்.. அவங்களை என்னிக்கும் சந்தோசமா பாத்துக்குவோம்..அவங்க நம்மளை வாழ்த்துனா கடவுளே ஆசிர்வாதம் பண்ணுன மாதிரி...

Wednesday, October 04, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் - தொகுப்பு

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 9
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 8
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 7
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 6
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 5
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 4
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 3
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 2
சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 1

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு முன்னோட்டம்


தர்மபுரி
சட்டம் ஒரு இருட்டறை படத்துல நான் விஜயகாந்துக்கு மேக்-அப் போட்டேன். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதுக்கு பிறகு நாங்கள் இருவரும் இந்த படத்துல தான் ஒண்ணு சேர்கிறோம்னு சொல்ற ஏ.எம்.ரத்னம் தயாரிப்புல, பஞ்ச் டயலாக் மன்னன் பேரரசு இயக்கத்துல கேப்டன் நடிக்கிற படம் தர்மபுரி. படத்துல பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமில்ல.. கேப்டன் வேற ஒண்ணு ரெண்டு மூணுன்னு வரிசை கட்டி பட்டைய கிளப்ப போறாரு.. படத்தோட இப்போதைய ஹைலைட், டைரக்டர் பேரரசு ஒரு பாட்டை சொந்த குரலில் பாடியிருப்பது தான். (ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்)



வரலாறு
புலி வருது புலி வருதுன்னு போன தீபாவளில இருந்து சொல்லி, அந்த புலி இதோ இப்போ வருது, வரலாறுன்னு புதுப் பேர் வச்சுகிட்டு. முதல் முறையா அஜித் மூன்று வேடத்துல நடிக்கிறாரு.. வில்லன்ல அஜித்துக்கு கை கொடுத்த கே எஸ் ரவிகுமார் இயக்கிய படம்.. டிரெய்லர் எல்லாம் பாக்க பக்காவ இருக்கு. ஏ ஆர் ரகுமான் இசைல பாடல்கள் கேக்குறவிதமா இருக்கு. படம் வெளிவர்றதுல வரலாறு படைத்த இந்த படம், படம் வந்த பிறகு வசூல்ல வரலாறு படைக்குமா?



வல்லவன்
மன்மதனை இயக்கியது சிம்பு தான்னாலும் அந்த படத்தோட டைட்டில் கார்டுல முருகன் பேரு தான் வந்தது. அதனால, இந்த படம் தான் சிம்பு இயக்குற முதல் படம். சந்தியா, ரீமா சென், நயன்தாரான்னு கோலிவுட்டின் இளமை அரசிகள் படத்துல இருக்காங்க. யுவன் மியுஸிக்ல பாட்டெல்லாம் ஏற்கனவே பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டு.. படம் ஹிட்டாகுமா.. இன்னும் 17 நாளே உள்ளது..பொறுத்திருப்போம்.

தலைமகன்
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 100வது படம். அரசியல் விளையாட்டுகளுக்கு பிறகு, வெளிவர்ற படம். படம் ஆரம்பிக்கிறப்போ டைரக்டர்னு யாரோ பாலாஜின்னு ஒருத்தர் பேர் இருந்தது. இப்போ சரத்குமாரே அந்த வேலைய செய்யறாரு. ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் தயாரிப்புல, டைரக்டர் சேரனோட திரைக்கதைல, கேரளத்து நயன்தாரா சரத் ஜோடியா நடிக்கிற இந்த படத்துக்கு J. பால் இசை அமைகிறாரு. ரொம்ப நாளா மிகப்பெரும் ஹிட் ஏதும் கொடுக்காத சரத், தலைமகன் மூலமா தீபாவளி வசூல்ல முதல்மகனா வருவாரா..?

வட்டாரம்
சரண் தன்னோட பட்டாளத்தோட, இதயத்திருடன் தோல்விக்கு பிறகு மறுபடியும் களமிறங்கி இருக்கும் படம் வட்டாரம். ஆர்யா நடிக்கிற இந்த படத்துல அவருக்கு காட்ஃபாதர் மாதிரி நெப்போலியன் நடிக்கிறார். வைரமுத்து வரிகளுக்கு பரத்வாஜ் இசையமைக்க, தனது சொந்த கம்பெனிக்காக இந்த படத்தை தயாரிக்கிறார் சரண்.


ஆர் பி சௌத்திரி தயாரிப்புல, அவரோட மகன் ஜீவா நடிக்க, இயற்கை படத்துக்கு சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது வாங்குன ஜெகநாதன் படத்தை இயக்குறார். ஸ்ரீகாந்த் தேவா மியுஸிக்ல, நயன்தாரா கிளப் டான்சராக நடிக்கிற இந்த படம், ஒரு ரவுடியோட வாழ்க்கை பற்றியது. படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கலக்கல இருக்கிற மாதிரி படமும் இருக்குமான்னு.. தீபாவளி அன்று தெரியும்

இன்னும் அர்ஜூனின் வாத்தியார், எஸ் ஜே சூர்யாவின் திருமகன், ஸ்ரீகாந்தின் கிழக்கு கடற்கரை சாலை ன்னு நிறைய படங்கள் இருந்தாலும், அவகள் தீபாவளி அன்னிக்கி ர்லீஸ் அகுமான்னு தெரில..

இந்த வருஷாம் நயன்தாரா நடிச்ச மூன்று படங்கள் வெளிவருது. இளைய நட்சத்திரங்களில் அஜித்தை தவிர, விஜய், விக்ரம், சூர்யான்னு யார் படங்களும் வரல..

முதல் வார வசூல்ல ரஜினிக்கு அடுத்து ராஜான்னு பேர் வாங்குன அஜித்துக்கு வரலாறு அந்த பேரை தக்கவைக்குமான்னு தெரில.. வரலாறு 11 கோடிக்கும், வல்லவன் 8 கோடிக்கும், தர்மபுரி 7 கோடிக்கும் விற்பனைஆகி உள்ளன.. இதே மாதிரி வசூலும் இருக்குமா.. உங்களை மாதிரியே நானும் காத்திருக்கிறேன்.

Tuesday, October 03, 2006

கலர் டிவியா நல்ல நூலகமா..

ஒவ்வொரு முறையும் பட்ஜெட் போடுறப்போ ஏதாவது விஷேசம் இருக்கான்னு பார்ப்பேன்..ம்ஹும்.. ஓண்ணும் இருக்கிறது இல்ல.. எப்பவும் ஒரே மாதிரி தான்.. அதுவும் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு, இல்லைனா எம்ஜியாரோட மறைவுக்குப் பிறகு, சட்டசபை என்னிக்கும் ஒழுங்கா நடந்ததில்லை.. இவன் ஆண்டா எதிர்கட்ச்சியாய் இருக்கிற அவன் வெளிநடப்பு, அவன் ஆண்டா எதிர்கட்ச்சியாய் இருக்கிற இவன் வெளிநடப்பு.. இப்படி சினிமாவுல மட்டும் இல்லை. அங்கேயும் அரச்ச மாவேதான் அரைக்கிறாங்க.

அதுலயாவது புதுசா ஏதாவது பண்றாங்களா.. இந்த பட்ஜெட்ல தாங்கள் ஆட்சிக்கு வர காரணமா இருந்த அரிசியையும் கலர் டிவி பத்தியும் ஒரே நியுஸ்.. எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறார், இப்போதைய முதல்வர்.. டிவியை விட இப்போதைக்கு நூலகங்கள் தான் அதிகம் தேவைன்னு நினைத்து அதற்கு ஏதும் பண்றாரன்னு தெரில.. பண்ணலாம்.. அது டிவி மாதிரி கவர்ச்சியான திட்டத்தினால் வெளியில் தெரியாமல் போகலாம். யார் கண்டா?

ஆனா, ஒரு ஊராட்சிக்கு ஒரு நூலகமாவது வேண்டும்னு ஒரு சட்டம் இருக்குன்னு நினைக்கிறேன். அப்படி எல்லா ஊராட்சியிலும் இருக்கா?.. அப்படியே இருந்தாலும் படிக்க புத்தகங்களும், உட்கார போதுமான இருக்கைகளும் உண்டா?.. தெரில.. நாம தான் இதை நினைச்சு பாக்கணும்.. ஏன்னா அரசுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கலாம்..

என்னோட ஊரும் பஞ்சாயத்து தலைநகர் தான்.. ரொம்ப நாள் கழிச்சு, நான் அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்.. ஒரு நூலகம் வந்தது, ஐநூறு புத்தகங்களோட..எல்லாம் கதைப் புத்தகங்கள்.. அறிவை வளர்க்கும் எந்த புத்தகமும் இல்லை. சரி இன்னும் கொஞ்ச நாள் போனா வரலாம்னு நினைச்சேன்.. ஒரு எட்டு மாசத்துல அந்த நூலகத்தையே காணோம்.. அப்படி இருந்த காலங்களிலும் கூட, என்னை போன்ற பையன்கள் கதை புத்தகங்களை வாங்கி படிப்போம்.. அவ்வளவு தான்.. அதனால் அறிவு ஏதும் விசாலமானதாய் தெரில.. என் பள்ளிகூடத்தில் கூட இருந்த ஞாபகம் இல்லை..

இப்படி எல்லாம் இருந்தா எப்படி பிள்ளைகள் அறிவு வளரும் ஏற்கனவே டிவி சினிமான்னு ஒவ்வொரு பையனும் அது பின்னாடி கிடக்குறான்.. எந்த ஊர்லயுமே நூலகம் இல்லைனு சொல்ல மாட்டேன்.. கவியரசு வைரமுத்து தனது 'இது வரை நான்'ங்கிற புத்தகத்துல, அவர் எப்படி எல்லாம் நூலக்கத்தை பயன்படுத்தினார்னு சொல்லி இருப்பார்.. அதனால் அவரோட பால்ய பருவதிலேயே அவ்வளவு சிறப்பா நூலகங்கள் இருந்திருக்கு. ஓரு வேளை அதன் பிறகு அதை ஒழுங்கா பராமரிக்கலயோன்னு தோணுது..

டிவி கொடுக்குறது தப்போ சரியோ அது பத்தி எனக்கு கவலை இல்லை.. இந்த மாதிரி அறிவை வளர்க்கும் நூலகங்கள் எப்போ நம்ம நாட்டுக்கு வர்றது.. எப்போ நம்ம பிள்ளைகள் சின்ன வயசுலயே அறிவை வளர்க்கிறது..

ஏன் நான் எப்படி எல்லாம் வேதனைப்படுறேன்.. எங்க ஊர்ல சின்ன வயசுல ஒரு நூலகம் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ..தெரில.. ஆன எப்போ வளர்ந்து வர்ற வேகத்துல நிச்சயமா கிராமத்துல இருக்க பசங்க ரொம்ப பின்னாடி இருக்காங்க.. இன்னும் எத்தனையோ பசங்களுக்கு இன்டர்நெட்னா என்னன்னு கூட தெரியாது.. அவங்களுக்கு தெரிஞ்சன்தெல்லம், காலைல எந்திரிச்சா, னம்ம காட்டுல கத்திரிக்காய் பொறுக்குனோமா, பள்ளிகூடத்துல போய் உக்கார்ந்தோமா அவ்வளவு தான்.. எங்க ஊர் வாத்தியார்கள் கூட இன்னமும் அவங்க படிச்சதை தான் சொல்லி தர்றாங்க.. அப்புறம் எப்படிய்யா நாடு வளர்றது.. அட போங்கப்பா.

Monday, October 02, 2006

ஏப்ரல் ஃபூல் காதல்

எனக்கு இன்னும் பளிச்சுன்னு ஞாபகம் இருக்கு அந்த முகம். நான் ஏறுன பஸ்ல தான் அந்த தேவதை தினமும் வருவா.. நான் மொத ஸ்டாப்லயே ஏறிடுவேன்.. உக்கார்றதுக்கு சீட் ஏதும் இருந்தாக் கூட நான் நின்னுகிட்டுத் தான் போவேன்.. அப்போ நான் பத்தாவது படிச்சுகிட்டு இருந்த நேரம்.. வீட்ல 'தம்பி நானூறுக்கு மேல எப்படியாவது வாங்குன்னு' எல்லோரும் சொல்லிகிட்டு இருந்த நேரம்.. அப்படி பக்கம் பக்கமா படிச்சுகிட்டு இருந்தாலும் இப்படி பக்கத்துல நிக்கிற சொக்க தேவதையை பாக்கம இருக்கிறதில்ல.. நான் மட்டும் தான் அந்த பொண்ணை அந்த பஸ்லயே பாத்துகிட்டு இருப்பதா ஒரு பிரமை.. அவ எப்பவுமே பஸ்ல ஏறினவுடனே உள்பக்கம் வந்து ரொம்ப பாதுகாப்பா நிப்பா.. அது எங்க ஊர் பஸ்ஸுங்கிறதால நான் படில எல்லாம் நிக்க முடியாது.. நிக்கிற மாதிரி தெரிஞ்சாலே போதும்..எங்கப்பா கிட்ட திரியை கொளுத்தி போட்டுடுவாங்க நம்ம சனங்க.. 'ஏ..யப்பு.. உன் புள்ள.. படிக்க போவுதா.. இல்ல பஸ்ல கிளீனர் வேல பாக்குத..படிலயே கிடக்குறான்'னு.. போற போக்குல வீட்ல ஒரு வத்தி வச்சுடுவாங்க.. அதனால நானும் எப்பவும் நடுல தான் நிப்பேன்.. அவளும் எனக்கு நேர் அந்த பக்கம் லேடிஸ் சைடுல தான் நிப்பா.. ரொம்ப நாளா இந்தப் பக்கம் திரும்பவே மாட்டா.. நானும் என்ன என்னவோ பண்ணி பாத்தேன்..ம்ஹிம்..ஒண்ணும் முடில..

என்னனன்மோ சொல்றேன்..அவ எப்படி இருப்பான்னு சொல்லவே இல்ல..ஓகே.. ஒரு வரில சொன்னா சின்னத்தம்பி படத்துல வர்ற குஷ்பூ மாதிரி இருப்பா.. நடு வகிடு.. ரெட்டை சடை.. அந்த சடை மடக்கி தலையோட சேர்த்து கருப்பு கலர் ரிப்பன்.. அவ ஸ்கூல் யுனிபார்ம் பாவாடை சட்டைல இருப்பா.. அவளும் பத்தாவது தான் படிக்கிறாங்கிறதை அவ யாரோ பஸ்ல கேட்ட கேள்விக்கு பதில் சொன்னப்போ தெரிஞ்சது.. அழகா நடு நெத்தில ஒரு ஸ்டிக்கர் பொட்டு..அதுக்கு மேல சந்தனத்துல ஒரு சின்ன கோடு.. அதுக்கும் மேல ஒரு திருநீரு தீற்றல்.. எங்கம்மா பாத்தா மஹாலட்ச்மின்னு கையெடுத்து கும்புடுற லட்சணம்.. தலைல வலது பக்க சடைல ரோஜாவோ, இல்லை மல்லிகை சரமோ வச்சிருப்பா.. காலத்துக்கு ஏத்த மாதிரி வேற பூக்களும் அவள் தலைல வைக்கப்பட்டு ஜென்ம புண்ணியம் அடஞ்சிருக்கும்.. கழுத்துல சின்னதா ஒரு வெள்ளை கலர் பாசி தொங்கும்..காதுல குடையை திருப்பி போட்ட மாதிரி ரெண்டு தொங்கட்டான் தொங்கி கிட்டு, அவ இந்த பக்கமும் அந்த பக்கமும் தலையாட்ட அதுவும் கூட சேர்ந்து ஊஞ்சலாடும்.. அவ மொகத்த பாக்குறப்போ எல்லாம், மூக்குதி போட்டா இன்னும் அழகாய் இருப்பான்னு நினச்சுக்குவேன்.. அவகிட்ட பேசுறப்போ சொல்லலாம்னு விட்டுடுவேன்..

நானா எவ்வளவோ கஷ்டப் பட்டேன்..அவள திரும்ப வைக்க..ஆன அவளா ஒரு நாள் திரும்பி என்னை பாத்தா.. நான் ஏறின பஸ்லயே என் அத்தை ஒருத்தவங்க வேற ஊருக்கு போறதுக்காக வந்தாங்க.. நான் தான் அவங்களுக்கு சீட் போட்டு கொடுத்தேன்.. என்னையும் கூட உக்காரச் சொன்னாங்க..நான் இல்லத்தன்னு சொல்லி வேற ஒருத்தவங்களை உக்கார வச்சேன்.. என் ஆளு ஏறின பஸ் ஸ்டாப்புக்கு பிறகு, என் அத்தைக்கு பக்கத்துல உக்கார்ந்து இருந்தவங்க இறங்குறதுக்காக எழ, எனக்கு அப்போதான் வினையே ஆரம்பிச்சது.. யாரோ இன்னொருத்தவங்க அந்த சீட்ல உக்காரப் போக..என் அத்தையோ என்னை கூப்பிட்டாங்க.. 'ஏய்..மருமவனே..எனக்காக எம்புட்டு கஷ்டப்பட்டு சீட்ட போட்டு கொடுத்த..வந்து உக்காருப்பா'ன்னு கூப்பிட்டாங்க.. அதுவும் எப்படி பஸ்ஸே திரும்பி பாக்குற அளவுக்கு சவுண்டா.. எனக்கோ ஒரு மாதிரி ஆகிடுச்சு.. யாரை இப்படி கூப்பிடுறாங்கன்னு எல்லோரும் திரும்பி பாத்தாங்க..அவளும் தான்.. எனக்கோ என்ன பண்றதுன்னே தெரில.. 'ஏய்..தம்பி..அந்தம்மா தான் கூப்பிடுதுல்ல போய் உக்காருப்பா..அத்தை கூட உக்காரவே இப்படி சங்கட்டப்படுறியே.. அப்புறம் எங்கிட்டு பொண்ணோட உக்கார்ற'துன்னு இன்னொரு பெருசு சவுண்டு விட.. இனி வேற வழி இல்லைன்னு நான் அப்படியே மெல்ல நகர்ந்து என் அத்தைக்கு பக்கத்துல போய் உக்கார்ந்தேன். அதுக்கப்புறம் இறங்குற வரை அவ என்னை பாத்து சிரிச்சுகிட்டே இருந்தா.. அதப் பாத்து, நான் உள்ளுக்குள்ள உருகிக்கிட்டு இருந்தேன்..மெல்ல என் அத்தை பக்கமும் பாத்து சிரிச்சேன்.. கலக்கிபுட்ட அத்தைன்னு..

அதுக்கப்புறம், அவ பஸ்ல ஏறினவுடனே, நான் எப்பவும் நிக்கிற எடத்துல பார்ப்பா.. சின்னத சிரிப்பா..இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிகிட்டு இருந்தது.. இப்ப அவ என்னை பாத்து சிரிக்கிறப்போ நானும் சிரிக்க ஆரம்பித்து இருந்தேன்.. ஓரு நாள் அப்படி ஏறி, எப்பவும் அவ நிக்குற இடத்துல வந்து நின்னா.. அன்னிக்குத் தான் கடைசி பரீட்சை.. அதோடு அவளைப் பாக்கணும்ன அவ ஊருக்குத் தான் போகணும்னு நினச்சு நான் சோகமா இருந்தேன்.. பரீச்சை நேரங்குறதால பஸ்லயும் ரொம்பக் கூட்டம் இல்ல.. அவ என் பக்கம் திரும்பி, அழகா மடித்திருந்த ஒரு பேப்பரை கொடுத்த.. எனக்கு திக்திக்குன்னு இருந்தது..என்னோட தம்பி உங்க ஸ்கூல்ல தான் செவன்த் C செக்க்ஷன்ல படிக்கிறான். அவனுக்கு உடம்பு சரியில்ல.. இந்த லீவ் லெட்டரை கொடுத்திடுறீங்களான்னு கேட்டா.. நானும் சரின்னுட்டு அந்த கிளாஸ்ல போய் கொடுத்தேன்.. இங்க சுரேஷ்னு யாரும் இல்லன்னு அந்தப் பசங்க சொன்னாங்க..என்னடா அப்படின்னு நினச்சுகிட்டு..சரி லீவ் லெட்டர்ல போட்டு இருக்குமேன்னு அதை பிரிச்சுப் பாத்தா..பெரிய பெரிய எழுத்துல ஏப்பிரல் ஃபூல்னு எழுதி இருக்கு.. வேற ஒண்ணுமே இல்ல.. எனக்கு சரியான கோபம் ஒரு பக்கம்.. சிரிப்பு ஒரு பக்கம்.. ஏன் இப்படி செஞ்சான்னு குழப்பம் வேற..

அடுத்து ரெண்டு நாள் அவங்க ஊர்ல தான் ஒரே சுத்து.. பேரும் தெரியாது.. ஒண்ணும் தெரியாது..தேடிதேடிப் பாத்தேன்.. கண்டுபிடிக்க முடியல.. அப்புறம் லீவுக்கு என் சித்தி வீட்டுக்கு போயிட்டேன்.. மறுபடியும் ஸ்கூல் ஆரம்பிச்சது.. அவளை காணவே இல்லை..யார் கிட்டயும் கேட்கவும் தயக்கம்.. அப்படியே வாழ்க்கை போயிடுச்சு..

தோ இன்னமும் கூட அந்த ஏப்பிரல் ஃபூல் பேப்பர் என்கிட்ட இருக்கு.. ஓரு வேலை இனிமேல் என்னை பாக்க முடியாம ஏமாந்து போகப்போறீங்கன்னு சொல்லி அதை கொடுத்தாளோ என்னவோ..தெரில… ஏப்பிரல் ஃபூல்னு யாராவது சொன்னா எனக்கு அவ ஞாபகம் தான் வரும்..மனச எதுவோ போட்டு பிசையற மாதிரி ஒரு ஏமாற்றம் இருக்கும்.. எனக்கு இன்னும் பளிச்சுன்னு ஞாபகம் இருக்கு அந்த முகம்.. நான் ஏறுன பஸ்ல தான் அந்த தேவதை தினமும் வருவா..

(எவ்வளவு நாள் தான் சொந்த கதை எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு, எழுதின கற்பனை கதை இது)