Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Saturday, December 29, 2007

கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்

கண்ணதாசன்.. எளிய வரிகளில், இசையோடு தனது கருத்தை, தேனோடு பாலாக, கலந்து தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்து படைத்தவர்.. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்.. இன்னமும் ஒவ்வொரு நீள் ஒலி குழாய்களிலும் ஒலித்துகொண்டிருக்கும் உன்னத வார்த்தைகளுக்கு வடிவம் தந்தவர்.. இன்னமும் இவரைப் போல, வாழ்க்கைக்கு, வாழ்க்கையோடு ஒன்றிய பாடல்களை தந்தவர் யாரும் இல்லை..

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

இந்த பாடலை, நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் என்று நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் இந்த பாடலை, கேட்டால், யாருக்குத் தான் தெளிவு பிறக்காது.. எந்த மனதிற்குத் தான் ஆறுதல் கிடைக்காது.. இது தான் கண்ணதாசனின் பாடல்களில் இருக்கும் அடிக்கருத்தே..

ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம்.. கேட்க கேட்க படத்தின் நாயகனுக்கு எழுதிய பாட்டில் சிறிது நேரத்தில் நாம் நாயகனாக குதிரை சவாரி செய்வோம்.. வருத்தமென்றாலும், காதல் சொட்டும் வரிகள் என்றாலும், வீரம் என்றாலும், விவேகம் தரும் வேகம் என்றாலும், கண்ணதாசனின் வரிகளுக்கும், அந்த தத்துவதிற்கும் நிகர், அவரின் படைப்புகளே..

எங்கள் ஊர் மைக்-செட்டுகளில் இன்னமும் புதிய பாடல்களை விட அதிகமாய் ஒலித்துக்கொண்டிருப்பது பழைய பாடல்களே.. அதுவும் கண்ணதாசனின் காதல் பாடல்கள் பிரசித்தம்.. கவியரசுவின் காதல் பாடல்களின் கேசட்டுகள் பகுதி பகுதியாய் அடுக்கி வைத்திருப்பார்கள். இங்கே வந்த பிறகு கஷ்டப்பட்டு அதில் பாதியை தான் வலையில் இருந்து இறக்குமதி செய்ய முடிந்தது.

சிவாஜி நடித்த ரத்தத் திலகம் படத்தில் கண்ணதாசனே திரைப்பாத்தில் தோன்றி பாடும் பாடல் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. தன்னை பற்றை அவரே பாடுவது போன்ற ஒரு பாடல்.. வரிகள் எல்லாம் கண்ணாடி போல அவரது நிறைகுறை கொண்ட குணங்களை சொல்லும்..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவிய தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்

இடையில், இப்படி பாடல்கள் படைப்பதால் தன்னை இறைவன் என்று சொல்கிறார் கண்ணதாசன்.. உண்மை தானே

இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்.. இசையில் எல்லா பரிமாணத்தை, உருவி எடுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கையில் இசைத் தேன் மழை பொழிந்தவர். இவரின் ஒவ்வொரு பாடல்களும் ஆராய்ச்சி செய்கின்ற அளவுக்கு ஒரு பெரிய கடல் என்பது ஒவ்வொரு பாடலாக கேட்டவர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும்.

இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. முயற்சி திருவினையாக்கும் என்று முயல்கிறேன்.. கடலில் குதித்து முத்தெடுப்பது என்பது சுலபமில்லை தானே

பாடல்கள் தவிர, இளையராஜவின் படங்களில் பெரிய பலம் பின்ணனி இசை.. அந்த கதாபாத்திரத்தின் துடிதுடிப்பை, உணர்ச்சியை அப்படியே நமக்குள் ஏற்றி, அந்த காட்சியில் நம்மை வைத்து நாம் பதறும் அளவுக்கு, அதற்கு இசை உயிரூட்டியவர் இசைஞானி.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் மடை திறந்து என்று ஒரு பாடல் வரும். அது கிராமத்திலிருந்து இசையப்பாளனாக வந்த ஒருவன், வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னை நினைத்து பாடும் பாடல். கிட்டதட்ட இசைஞானியின் கதை.. அதனால் அதன் பாடல்வரிகளும் அதை ஒத்தே தான் இருக்கும்..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

இங்கே இளையராஜா பற்றிய வரிகளை அழகாக வாலி தந்திருப்பார்.. அதுவும் இந்த வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்துமாறு மேஸ்ட்ரோவே பாடலில் வந்திருப்பார்.. மிகவும் உயிரோட்டமான பாடல்..

இவ்வாறாக, ஒரு இறைவன் பாடல் வரிகளை தந்திருக்க, ஒரு இறைவன் அதற்கு இசை உயிர் தந்திருக்க ஆழ்ந்த அமைதியில் நமக்குள் தெய்வத்தை காண வைக்கும் பாடல், மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்.. இந்த பாடல், தான் இறக்கும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்ணதாசன் எழுதி கடைசிப் பாடல்.

Sunday, February 04, 2007

வசீகர குரலோன் விஜய் ஜேசுதாஸ்

கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்களில் இருக்கும், அந்த குரலில் இருக்கும், வசியத்தில் மயங்கி போகாதவரும் உண்டோ இவ்வுலகத்தில்.. அதுவும் அவரும் இளையராஜாவும் சேர்ந்த பிறகு வெளிவந்த திரைப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். அழும் குழந்தைக்கு தாயின் நாக்கு சுழல வரும் தாலாட்டு மயக்கம் தந்து தூங்கச் செய்வதை போல, கே.ஜே.ஜேசுதாஸின் பாடல்கள் அழும் மனசுக்கு மயிலிறகு தடவல்கள். குவிக்கப்பட்ட சீட்டுக்கட்டில் பச்சைக்கிளி ஒன்றை மட்டுமே பொறுக்கிப் போடுவதை போல, அவர் பாடியதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டு நான் அதிர்ஷ்டம் சொல்லும் பச்சைக்கிளியாக விரும்பவில்லை. இரவு நேரத்தில் எத்தனையோ முறை நிலவும் நானும் தனித்துக் கிடந்த காலங்களில் செவிகளில் புகுந்து மனசைத் தொட்டு, மெய் முழுவதும் பரவி, எனக்குள் இன்னொரு உயிரையும் துணையாக தந்திருக்கிறது அவரின் குரல். அவர் பாட்டை கேட்டு காட்டுக்குயிலெல்லாம் சில காலம் மரமேறி பாடுவதில்லை என்று காட்டுக்குள் இருந்து சோகமாய் வந்த தென்றல் என் காதுக்குள் சொன்னதுண்டு.

இப்படி பாடல்களின் மூலம், தன் குரலின் மூலம் நம் மனசை தொட்ட கே.ஜே.ஜேசுதாஸ் இப்போதெல்லாம் பாடாமல் இருப்பது, காற்று சிலகாலம் விடுமுறை எடுத்துச் சென்றதை போல, ஒரு வெற்றிடம் ஏற்பட்டுப் போனது இசையுலகில். ஆனால் 'ராம்' தந்தது இவரின் இன்னொரு பிம்பம். இவரின் குரலின் இளைய பிள்ளை. அதுவும் அடுத்த தலைமுறை இசையில் முளைத்த புதுக் கூட்டணியுடன்.. ஆம்.. யுவனின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் பாடிய ஒவ்வொரு பாடலும் குயிலுக்கு பிறந்தது குயிலே தான் என்று உலகுக்கு சொல்லியது. அதுவும் முதல் பாடலே நிழலினை நிஜமும் பிரிந்திடுமா என்று எல்லோர் காதுகளிலும் புகுந்து மனசை நிறைத்து, முதல் பாடலிலே கேட்ட அவர்களின் புருவத்தை ஆச்சரியத்தால் பாதி நெற்றிவரை உயர்த்தியது.

விழுந்து கிடந்த ஒரு வெற்றிடத்தை இவரின் வருகை நிறைத்து போனது. அதுவும் இவர் யுவன் கூட இணைந்த எல்லாப் பாடலும் மகுடி நாதமாய் நம் மனதை ஆடவிட்டது. தாவணி போட்ட தீபாவளி என்று இவர் பாடியதை கேட்டு அந்த தீபாவளியே, தாவணி போட்ட தீபாவளியே சொக்கிப் போனது. ஜேசுதாஸுக்கு ராஜா ஒரு மேடை போட்டு கொடுத்ததை போல, விஜய்க்கு யுவன் ஒரு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்.

தீபாவளி படத்தில், யுவனின் இசையில் இவர் காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்ததாக பாடியது, காய்ந்து கிடந்த கல் மனசையும் பிளந்து ஒரு ஆற்றை உண்டாக்கி விட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சென்று யார் சொன்னது.. இதோ இப்போதெல்லாம் சக்கரம் போல, இந்த பாடலைத் தான் சுழல விடச் சொல்லி மனசு கேட்கிறது.

இப்படி ஒரு அருமையான, மயக்கும் பாடலை கேட்ட பின்பு, என் மாப்ள பரணி அந்த பாடல் வரிகளையே பதிவாய் போட்டிருந்தார். அதே மயக்கத்துடன் இப்போது நானும். தயவு செய்து யாராவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். விஜய் ஜேசுதாஸின் குரலின் போதை அங்கு கிடைக்கும் சரக்கை விட அதிகமாய் இருக்கிறது.

Thursday, December 28, 2006

உங்ககிட்ட இளையராஜாவோட அரிய பாட்டு ஏதும் இருக்கா?

இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லாப் படங்களிலிருந்தும் பாடல்களைத் திரட்டும் பணியினை என் நண்பர்களோடு நானும் செய்து வருகிறேன். இளையராஜா பற்றியும் அவரது இசை ஞானம் பற்றியும் அதிகம் சொல்லத் தேவை இல்லை.. அவரின் எத்தனையோ பாடல்கள் நம் உள்ளம் முழுவதும் கேட்காத பொழுதும் பரவி கிடக்கிறது. அதுவும் அவர் எண்பதுகளில் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் இன்று கேட்டாலும் கேட்கின்ற காதுகளில் ஈ மொய்க்கும் சுவை மிகுந்தது. அதுவும் இளையராஜா எஸ்பிபியோடி இணைந்து கொடுத்த மெலடி பாடல்கள் பல நமது தனிமைக்கு துணையாய் இருந்திருக்கிறது.

அவரின் பாடல்கள் சேகரிக்கும் பணியிலே இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாய் வெறும் சினிமா பதிவுகளை மட்டுமே பதித்திருக்கிறேன். பல்சுவை விரும்பிகள் பலர், மனதுக்குள் என்னடா இவன் இப்படி சினிம பதிவாய் போடுகிறானே என்று நினைத்து கூட இருப்பார்கள். இப்போது கிட்டதட்ட பாடல் சேகரிக்கும் பணி முடிவடையப் போகிறது. இந்த தொண்ணூறு சதவீத பாடல்களை தேடுவது பெரிய வேலையாய் இல்லை. ஆனால் மிச்சமுள்ள 550 பாடல்களை சேகரிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.. அதுவும் சத்யராஜின் அமைதிப் படை படத்தில் இரண்டு பாடல்கள் தவிர வேற எதையும் எந்த வளைதளத்திலும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.

அப்படிப்பட்ட சில பாடல்கள் உங்களிடம் இருந்தால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அட..நீங்க வேணும் என்றாலும் எங்க கிட்ட கேளுங்க.. இந்த புத்தாண்டிலிருந்து சினிமா பதிவுகள் மட்டுமல்லாது மற்ற பதிவுகளையும் பழைய வேகத்தோடு தருவேன் என்றும் நினைக்கிறேன்.

சில விட்டுப் போன பாடல்களும் படங்களும்

உன்னைத் தேடி வருவேன் மாலை முதல்
ஒரியா ஒரியா
ஒரு நாளில்
வழியா வந்த
ஏண்டியம்மா

உள்ளே வெளியே ஆரிராரோ பாடும் உள்ளம்
கண்டுபிடி
சொல்லி அடிக்கிறது
உட்டாலக்கடி உட்டாலக்கடி

அமைதி படை அட நானாச்சு
முத்துமணி
வெற்றி வருது


அம்மன் கோவில் திருவிழா தெய்வம்
தேசமுது
மதுரை
(இன்னும் பட்டியல் நீளும்)