கிரிக்கெட் ஆடிய வசந்த காலங்கள்
கிரிக்கெட் காய்ச்சல் இப்போ மருத்துவருக்கும் அடிக்கிற மாதம் இது. தோனி தும்முறது முதல் கும்ளே கும்மி அடிக்கிறவரை எல்லாமே இப்போ தலைப்பு செய்திகள். ஆனா இந்த கிரிக்கெட் எங்க ஊருக்குள் நுழையாத காலம் நான் ஆறாவது, ஏழாவது படித்த வருஷங்கள். எங்கள் ஊரிலும் லகான் படத்தை போன்ற அணி ஒன்று இருந்தது.
கிரிக்கெட் விளையாடுவதற்கு உபகரணங்கள் எல்லாமே எங்கள் ஊரில் கிடைக்கும் பொருள்கள் தான்.. ஆரம்ப காலங்களில், தென்னை மட்டை.. பிறகு, எங்கள் ஊர் தச்சரிடம் செய்து வாங்கிய மட்டை.. இந்த மட்டை செய்வதற்கு அந்த தச்சரிடம் பல நாள் தவங்கிடப்போம். அவரும் ஏதாவது வீட்டிற்கு கதவையோ ஜன்னலையோ செய்துகொண்டிருப்பார், நாங்கள் போகும் போதெல்லாம். அவருக்கு வெற்றிலை பாக்கு, அவருக்கு பிடித்த நிறுவனத்தின் மூக்குப்பொடி, புகையிலை, மலபார் பீடி என்று கேட்பதை எல்லாம் வாங்கித் தருவோம். ஆனால் அப்படி வேப்பமரத்தினால் செய்யப்படும் அந்த மட்டை ரொம்பவும் எடை அதிகமாக இருக்கும். வருகிற பாலை தூக்கி அடித்தால் மட்டையின் பளு காரணமாக அது சுலபமாக நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களை தந்துவிடும். இதே வகையில் தான், நாங்கள் ஸ்டெம்புகளையும் செய்வோம்.
அப்போது கிரிக்கெட் என்பது படித்த மக்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக எங்கள் ஊரில் கருதப்பட்டது. அதனால் நாங்கள் விளையாண்டால் அதை சுற்றி நின்று பார்ப்பதற்கு, ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நூறு கேள்விகள் கேட்பதற்கு ஏகப்பட்ட ஆட்கள் இருப்பார்கள். அதுவும், நாங்கள் பெரும்பாலும் பள்ளி சென்று வந்த சாயங்கால வேளைகளிலும் வார இறுதிகளிலும் விளையாடுவதால், எங்கள் ஆட்டத்தை காணவே பெரும் கூட்டம் இருக்கும். அடிக்கின்ற பந்தை பொறுக்குப் போடுவதென்பது நின்று பார்க்கும் ஒவ்வொரு சின்ன வயசுபசங்களுக்கும் பிடித்தமான காரியம்.
நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எங்கள் ஊர் கிறித்துவ பேராலய வளாகத்தில் தான். பேராலயத்தை ஒட்டி எங்கள் ஊரின் இடைநிலைபள்ளியும் (எட்டாம் வகுப்புவரை தான் இருக்கும்.) இருப்பதால், அந்த மைதானத்தில் தான் எங்களது ஆட்டங்கள் நடக்கும். இந்த நேரத்தில் எங்களது கிரிக்கெட் ஆட்டத்தை ஊக்குவித்து எங்கள் கூட சேர்ந்து விளையாண்ட பாதிரியார் ஜேம்ஸ் மைக்கேல் ராஜை இங்கே நினைவு கூர்ந்தே ஆகவேண்டும். அவருக்கு கிட்டதட்ட நாற்பதை ஓட்டிய வயது. நாங்கள் பல நாட்கள் விளையாடும் பொழுது, அந்த பந்து பள்ளிக்குள் விழுந்துவிடும். அவரிடம் அனுமதி பெற்றுத்தான் அந்த பந்தை எடுத்து வருவோம். அப்படித் தான் எங்களுக்கு அவர் பழக்கமானார். அதன் பிறகு அவர் எங்கள் கூட சேர்ந்து விளையாடுவார். அவரே பந்துகளையும் வாங்கி வந்து தருவார். கிரிக்கெட் ஆட்டத்தின் சில நுணுக்கமான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். மற்ற நாட்டின் ஆட்டங்களை பார்க்கவைத்து எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும், எதனால் அவர்கள் அவுட் ஆனார்கள் என்பதையும் விளக்குவார். எங்களுக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயரையே அடைமொழியாக வைத்து, (நாங்கள் விளையாடும் பாணியின் அடிப்படையில்) அந்த பேர் சொல்லியே கூப்பிடுவார். அப்படி எனக்கு கிடைத்த பேர், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் பூன் பெயர். நான் மட்டையை சுழற்றினால் அது அவரை போலவே இருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் அவருக்கு பின் வந்த பாதிரியார்கள் யாரும் எங்களுடன் ஒட்டவில்லை. நாங்களும் பேராலய வளாகத்தில் விளையாடுவதை விட்டுவிட்டு ஊரின் வெளியே இருக்கும் பயன்படாத புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்தோம். அப்படி விளையாட நாங்கள் ஆரம்பித்த போது கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது.
எங்கள் ஊரில் இருந்து திண்டுகல்லிற்கு மற்றும் சின்னாளப்பட்டிக்கு படிக்கச் செல்லும் மாணவர்களே கிரிக்கெட் விளையாடினோம். அப்புறம் நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த புஞ்சை நிலங்களில் விளையாட ஆரம்பித்த போது, மற்றவர்களையும் விளையாட ஊக்குவித்தோம். ஆடு மேய்ப்பவர்களுக்கும் இந்த விளையாட்டை சொல்லிக்கொடுத்தோம். முதலில் அவர்கள் கிரிக்கட் மட்டையை கில்லி விளையாட்டிற்கு பிடிப்பதைப் போலத் தான் பிடிப்பார்கள். மெல்ல அவர்களுக்கு இந்த விளையாட்டு பிடித்து போய், கிரிக்கெட்டோடு ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள். நஞ்சை வயல்களில் அவ்வப்போது உழுவதால் அது ரம்பத்தை போல மெடு பள்ளமாகத் தான் இருக்கும். அதை சமநிலைப் படுத்துவதற்கு தென்னை மரத்தை, உருளையாக பயன்படுத்தினோம். அதில் குடம் குடமாக பக்கத்து வயலில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து ஊற்றி சமனநிலை படுத்தினோம். அந்த கிராமத்து பிட்சை நாங்கள் உருவாக்க எங்களுக்கு கிட்டதட்ட இரண்டு வாரகாலங்கள் ஆனது. வார இறுதிகள் மற்றும் பள்ளிவிட்டு வந்த பின் நாங்களும், மற்ற நேரங்களில் ஊரிலே இருக்கும் மற்ற நண்பர்களும் இந்த வேலையை செய்தோம்.
இப்படியாக கஷ்டப்பட்டு தயார் செய்த பிறகு, ஒரு மாதமோ இரண்டு மாதமோ தான் விளையாடி இருப்போம். அதன் பிறகு தென்மேற்கு பருவமழை பெய்தது. ஒரு நாள் பள்ளி விட்டு நாங்கள் அந்த வயல் மைதானத்தை கடக்கும் போது, அந்த வயலின் சொந்தக்காரர் அதில் டிராக்டர் விட்டு உழுதுகொண்டிருந்தார். எங்களின் மைதானம், இத்தனை காலங்கள் வியர்வை சிந்தி தயார் செய்த மைதானம், சில சோள விதைகளையும் அவரை விதைகளை பயிராக்க அழிக்கப்பட்டுகொண்டிருந்தது. அந்த இனம் புரியாத வயசில் எங்களின் எல்லோருடைய நெஞ்சங்களும் சொல்ல முடியாத சோகத்தில் உடைந்துகிடந்தது. அதன் பிறகு விளையாட இடம் சரிவர கிடைக்காமல் வெவ்வெறு இடங்களில் விளையாடினோம். இதனிடையே, பக்கத்து ஊர்களுக்கும் போட்டிகளுக்காக சென்று வருவோம். பிறகு, எல்லோரும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வேறு வேறு ஊர்களுக்கு கல்லூரி படிக்கச் சென்றதால், எங்கள் ஊரில் நான் கிரிக்கெட் விளையாடி கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
போன வருடம், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பையன்கள் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு கோப்பை வாங்கி இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு என் உள்ளம் மகிழ்ந்து போனது. என்னைப் போலவே, அப்போது எங்களது அணியில் இருந்த மற்றவர்களும் இதை கேட்டு மகிழ்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
[இந்தியாவில் உலககோப்பை நடந்த காலத்தில் தான் எங்கள் ஊரின் மிக அதிகமான நபர்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலம். கிரிக்கெட் பற்ரிய ஆர்வம் அப்போது தான் அதிகமாக பரவியது. இப்போது கிட்டதட்ட முக்கால்வாசி பேர், இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள்]