Sunday, January 21, 2007

கோப்பன் பொரியுருண்டை

எனக்கு பள்ளியில் படிக்கும் போது தமிழ் பாடம் என்றால் கொள்ளை பிரியம். எனக்கு, நான் தம்பிதோட்டத்தில் எட்டு, ஒன்பது, பத்தாவது படிக்கும் போது தமிழ் பால் ஊட்டியவர் த.கதிர்வேல் ஐயா அவர்கள். அவருக்கு என்னை கண்டாலும், எனக்கு அவரை கண்டாலும் அப்படி ஒரு சொல்லொணா பாசம். வகுப்புக்கு வந்தால் தமிழ் வகுப்புகளில் உரைநடை புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிப்பதிலிருந்து, தமிழ் கட்டுரைகளை வாசிக்கும் வரை என்னை தான் செய்ய சொல்வார். அவரிடம் திட்டு வாங்குவதும், தலையில் நறுக்கென்று குட்டு வாங்குவதும் தினமும் நடக்கும் செயல். ஆனால் என்னமோ தெரியவில்லை, அவர் என்னை திட்டியதில்லை. ஒரு முறை, அவர் தமிழ் கட்டுரை வாசிக்க வாசிக்க நாங்கள் எழுதிக்கொண்டிருந்தோம். அப்போது நான் பெஞ்சின் ஓரத்தில் தான் உட்கார்ந்திருப்பேன். அவர் நடந்து கொண்டே வாசிக்கும் போது ஏதோ ஒன்றுக்கு நான் சந்திப் பிழை விட்டுவிட்டேன். அவ்வளவு தான் நறுக்கென்று தலை ஒரு குட்டு விழுந்தது. அப்போது தான் வகுப்பில் மற்றவர்கள் அடி வாங்கும் வலி எனக்குப் புரிந்தது. அது தான் அவர் என்னை முதலும் கடைசியுமாய் தலையில் கொட்டியது.

நான் எட்டாவது பயிலும் போது, முதல் முறையாக அவர் எனக்கு படம் எடுத்த அழகு இன்னமும் ஞாபகப் பெட்டகத்தில் இருக்கிறது. பெரும்பாலும் பேண்ட் சட்டை தான் அணிந்திருப்பார். என்றாவது ஒரு நாள் வெள்ளை வேட்டி சட்டை அணிவார். சைக்களில் தான் வந்து போவர். அதன் செயின் மர்காடில் அவரது பெயரும், வாங்கிய பட்டங்களும், பள்ளியின் பெயரும் இருக்கும். தமிழ் வாத்தியார் என்பதால் எப்போதும் வைரமுத்து பேசுவது போல் எல்லாம் பேசமாட்டார். வாலியின் வரிகளை போல எளிமையாய் இருக்கும். ஆனால் சொல்ல வந்த விஷயத்தையும் எங்களுக்கு அழகாக விளக்குவார். செய்யுளை அவர் பிரித்து பொருள் சொல்லும் அழகே அழகு. அதை ஒரு முறை கேட்டாலே, பரீட்சையில், அன்பில்லாதவர்களை பற்றி வள்ளுவர் என்ன கூறுகிறார் என்றால் நாலு பக்கங்களுக்கு மிகாமல் எழுதலாம்.

கொஞ்சம் முற்போக்கான சிந்தனை உள்ளவர். அதை தனது வாழ்க்கையிலும் நடத்தி, கடைபிடித்தவர். எனது நாடக, நடிக்கிற எண்ணங்களுக்கு நெஞ்சில் விதை விதைத்து, அறுவடை பார்த்து உச்சி மோர்ந்தவர். இன்னும் எந்தன் நெஞ்சில் இப்படி தமிழை பச்சை குத்தியிருக்கிறேன் என்றால் அது அவர் எனக்குள் விழுத ஏர் தான். இப்போது பட்டி மன்றங்களில் நடுவராக, தனது எண்ணங்களை சின்னாளபட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் பரப்புபவர்.

இன்று வரை எனக்கு புரியாத ஒன்று, எங்கு கேட்டும் அர்த்தம் கிடைக்காதது, அவர் கோபத்தில் எங்களை திட்டும் போது பயன்படுத்தும் வார்த்தை. அது 'கோப்பன் பொரியுருண்டை'. என்ன அர்த்தம் என்று தெரியவே இல்லை. ஆனால் யாரை திட்டும் போதும் இப்படித் தான் சொல்வார். முதல் முறை அவர் திட்டும் போது, இந்த சொல்லை பயன்படுத்தும் போது, எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவர் அடிக்கடி பயன் படுத்தும் போதெல்லாம் கேட்டு கேட்டு, சேது படத்தில் சீயான் பெயரின் அர்த்தத்தை எல்லோரும் தேடுவது போல் நான் தேடி இருக்கிறேன். யார் யாரிடமோ கேட்டிருக்கிறேன். விடை தான் கிடைத்தபாடில்லை. உங்கள் யாருக்காவது இதன் அர்த்தம் தெரியுமா.. தெரிந்தால் சொல்லுங்களேன்.. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

11 பின்னூட்டங்கள்:

said...

//தமிழ் வாத்தியார் என்பதால் எப்போதும் வைரமுத்து பேசுவது போல் எல்லாம் பேசமாட்டார். வாலியின் வரிகளை போல எளிமையாய் இருக்கும்.//

:))

Anonymous said...

Hahaha nostalgia???

Flash back poiteenga pola.. :)
Ungalukkey therila vidai engalukku theriyuma :P

said...

அப்பாடி, ஒரு வழியாத் தமிழ் மணம் போய் வழி கேட்டு வந்தேன். பார்த்தாப் பதிவாப் போட்டுத் தள்ளி இருக்கீங்க. இன்னிக்குள்ளே படிச்சுடறேன். அதுக்குள்ளே கோபிச்சுக்காதீங்க, எனக்குத் திறக்காததால் தான் வர முடியலை.
ம்ம்ம்ம்ம், "உங்கொப்பன்" என்பதைக் கோபத்தில் கோப்பன் என்று சொல்லி இருப்பாரோ?

Anonymous said...

Hi,
There is a tag in my blog. I felt you might be interested 2 write the tag :)

Pls have a look and feel free 2 ignore if you are not interested to write :)

Anonymous said...

கார்த்தி,
இதை கோ+பன்+பொரியுருண்டை என்பதாக பிரித்து எழுதலாம்.

கோ = போ.
பன் = பன்.
பொரியுருண்டை = பொரியுருண்டை.

நீயெல்லாம் ஏன் படிக்க வந்த. பன்னும், பொரியுருண்டையும் தின்னத்தான் லாயக்கு போ, என்று திட்டியிருப்பார் என நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

said...

ஆஹா...தல...
பதிவாப் போட்டு தக்கியிருக்கிங்க....சத்தியாம எனக்கு தெரியாது

Anonymous said...

ROFL! தமிழ் வாத்தியார்கள்ள் எப்பவும் special thaan!

Anonymous said...

அந்த %$^&* பொரிஉருண்ண்டை யோட "base" "அர்த்தம் இது தான்! அவனுக்கு சாபட்டுக்கே வழி யில்ல்லாத போது, பொரிஉருண்டை இருக்குமா?? அது போல அறிவு நமக்கு எல்லாம் என்று அர்த்தம்?????

said...

ka.ka.ka.po maathiri adaavadhu irukkum :)

said...

இதுக்குப் பொருள் தெரியாது, ஆனா என் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியை ஞாபகம் வருது. ID, ID என்று திட்டுவார் (ஐ.டி.) ஏன் என்று கேட்டால் இடியட் என்று திட்டுவது தவறாம் அதனால் Idiot என்பதில் உள்ள ID-யை மட்டும் short form-ஆக உபயோகித்துத் திட்டுவார். I-D-I-O-T என்று ஒவ்வொரு எழுத்தாக spell செய்வார் ஆனால் தப்பித்தவறிக் கூட இடியட் என்ற அந்த வார்த்தையை உபயோகித்துவிடமாட்டார் :-)

Anonymous said...

நல்ல பதிஉ. இன்மு தமிழ் மனம், தமிழ் தொண்டு , அவர்களுக்கு என ஒரு தனிதுவமான ஒரு இனிய வழிமுறை ..
கம்பன் வந்தது பொல, வள்ளுவன் வந்தது பொல, அவர்களின் பணி வாழ்க