Thursday, August 09, 2007

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை

இந்தியாவுல இருக்க பெரும்பாலான மக்கள்களுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் பாக்குறது தான். சென்னையிலாவது கடற்கரை அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதி, கிண்டி பூங்கா, கோயில்கள் என்று இடங்கள் அநேகமாக இருக்கலாம். ஆனால் திண்டுக்கல் போன்ற சராசரி நகரங்களுக்கு பெரிதாக அப்படி என்ன இருந்துவிடப் போகிறது தியேட்டர்களை விட. அபிராமி, மாரியம்மன் கோயில்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை (இந்த மலைக்கு போனவர்களின் எண்ணிக்கையை விட போகாதவர்களின் எண்ணிக்கை தான் அதிகமிருக்கும்), மலைக்கோட்டை அடியினில் இருக்கும் நகராட்சி பூங்கா (எப்போதும் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதான்னு தெரில), இது போன்ற சொற்ப இடங்களே.. இதுவிட்டால், நடுத்தர மக்களுக்கு அருகிலிருக்கும் கொடைக்கானல், எல்லோரும் செல்லும்படியான பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் என ஒரு சில இடங்களும் உண்டு. ஆனால், எல்லோரும் போகக்கூடிய ஒரே இடங்கள் தியேட்டர்கள் தான். நான் திண்டுக்கலில் இருக்கின்ற எல்லா தியேட்டர்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆமாம், இருக்கிறதே பதிமூன்று தியேட்டர்கள்..அதிலென்ன எல்லா தியேட்டர்களும் என்று கணக்கு வேறு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இனி ஒவ்வொரு தியேட்டர்களாக பார்ப்போம்..

ஒளி மற்றும் ஒலித் தரத்தில் இப்போது முண்ணனியில் இருப்பது தியேட்டர் ராஜேந்திராவும் அதன் குட்டி அடையாளமான உமா தியேட்டரும் தான். இந்த தியேட்டர் நான் சென்னை வந்த பிறகு தான் திறந்தார்கள் என்பதால் என்னால் அதிக படங்கள் பார்க்க முடியவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் நான் படங்கள் பார்த்திருக்கிறேன். கடைசியாக அந்நியன் பார்த்தேன்.. அதிசயமாக எப்போதும் தியேட்டரில் ஏசி போடப்பட்டிருந்தது. தியேட்டரும் கொஞ்சம் புதுசு என்பதால் பளபளப்பு குறையாமல் தான் இருந்தது. இப்போதைக்கு அதிக விலை கொடுத்து, அதிக பரபரப்பு மிகுந்த படங்களை வாங்கி வெளியிடத் தகுதியான தியேட்டர் ராஜேந்திரா மட்டுமே. சென்னையில் இருந்து திண்டுக்கல் என்ஜினியர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன், தமிழ் நாட்டிலேயே சத்யதிற்கு அடுத்த DTS நன்றாக இருப்பது திண்டுக்கல் ராஜேந்திரா தான், என்று சொல்லக் கேள்வி.. இந்த வளாகம் பஸ் நிலையத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பது இதற்கு ஒரு பின்னடைவே.

இதற்கடுத்த தியேட்டர் ஆர்த்தி மற்றும் சிவா வளாகம். 90-ன் ஆரம்பத்தில் (சரியாக ஞாபகம் இல்லை) கட்டப்பட்டு பளிச்சென்று அப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த தியேட்டர் இது. தியேட்டர் உள்ளமைப்பு நன்றாக இருக்கும். எனக்கு விவரம் தெரிஞ்சு பார்த்த படம் சிப்பிக்குள் முத்து.. கடைசியாக பார்த்தது ஆதி. விஜயின் அதிகப் படங்கள் இதில் தான் வெளியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருப்பதால் எப்படிப் பட்ட படம் போட்டாலும் வசூலை இந்த தியேட்டர் பார்த்து விடும். முதலில் ஆர்த்தி தியேட்டர் கட்டப்பட்டு, சமீபத்தில் தான் கிட்டதட்ட நானூறு இருக்கைகள் கொண்ட சிவா தியேட்டர் கட்டப்பட்டது. சிவாவில் இதுவரை எந்த படமும் நான் பார்த்ததே இல்லை. ஆனால், திண்டுகல்லிலேயே அதிகமாக நான் ஆர்த்தியில் தான் படங்கள் பார்த்திருக்கிறேன்..

இப்போது இந்த நாலு தியேட்டர் படங்கள் தான் அதிகமாக வசூல் குவிக்கும் படங்களை எடுத்து ஓட்டுபவைகள். இங்கு திரையிடப்படும் படங்கள் நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னைக்கு சத்யம், தேவி போல திண்டுக்கலுக்கு இந்த இரு தியேட்டர்களையும் சொல்லலாம்..

மற்ற தியேட்டர்கள் பற்றி அடுத்த பதிவில்..

14 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நான் திண்டுகல்லில் 1996 முதல் 2000 ஆண்டு வரை PSNA என்ஜினியரிங் காலேஜில் படித்தேன்.தற்போது சென்னையில் உள்ளேன்.
ராகவேந்திரா தியேட்டர் சென்னையில் உள்ள
தியேட்டர்களை விட தரத்தில் உயர்ந்தது என்பது எனது கருத்து.
ஆனாலும் நானும் எனது நண்பர்களும் அப்போது அபிராமி தியேட்டரில் தான் அதிகம் படம் பார்த்து இருப்போம்.

said...

நான் தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு மேல் வேலை பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிய உமா-ராஜேந்திரா தியேட்டரின் டி.டி.எஸ். வசதியும், ஒளி-ஒலி துல்லியமும் வேறெங்கும் இல்லை. அங்கு படம் பார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம்.

said...

கார்த்தி,

ஆர்த்தி தியேட்டர் 85-86ல் திறந்தார்கள் என நினைக்கிறேன்.

போடியிலிருந்து 86ல் முதலாமாண்டு கல்லூரிக்கு திருச்சிக்குப் போகும் வழியில் கையில் இருந்த பெட்டியோடு போய் புன்னகைமன்னன் பார்த்தேன். :-))
விஜய்காந்த்நடித்து வந்த ஒரு 3D படமும் ஆர்த்தியில் பார்த்திருக்கிறேன் இந்த தியேட்டரில்.

நாகா தியேட்டர் காம்ப்ளக்ஸ் அப்போது திண்டுக்கல்லின் ஸ்டார் திரையரங்கமாக இருந்தது.

திண்டுக்கல் - திருச்சிக்கு மதியம் 1.30 மணிக்கு பாடல் கேட்டவாறு செல்ல ராணிமங்கம்மாள், தீரன்சின்னமலை அரசினர் பேருந்துகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு TMT (Thirumathi Muthammal Transport) பஸ்ஸில் காத்திருந்து போவேன். 95 கிமீ தூரத்தை 90 நிமிடத்தில் சென்று சேர்ப்பார்கள். சீக்கிரம் வந்துவிட்டது என்று திருச்சி பஸ்நிலையத்துக்குள் TMT பஸ்ஸை விடமாட்டார்கள் :-))

திண்டுக்கல்லை நினைக்க வைத்தது இப்பதிவு.

said...

/// சென்னையில் இருந்து திண்டுக்கல் என்ஜினியர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன், தமிழ் நாட்டிலேயே சத்யத்திற்கு அடுத்த DTS நன்றாக இருப்பது திண்டுக்கல் ராஜேந்திரா தான் ///

உண்மை கார்த்தி! திரு.ராஜேந்திரன் என்னுடைய நண்பர். திருப்பூர் வந்திருக்கும் போது, அவர் என்னிடம் DTS நன்றாக இருக்கும் தியேட்டர்களை காண்பிக்கச் சொல்லி பல விளக்கங்களைக் கேட்டறிந்தோம். கடைசியில் அனைத்து ஒலி உபகரணங்களும் இறக்குமதி செய்யப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளதால் அதன் தரம் மெச்சத்தகுந்ததாக இருக்கிறது.

அவருடைய மனைவியின் பெயரால் இன்னொரு தியேட்டர் பின்பு கட்டப்பட்டது. உமா சைக்கிள் கடை தெரியும் தானே, உங்களுக்கு.

said...

//இனி ஒவ்வொரு தியேட்டர்களாக பார்ப்போம்..
//

ஹிஹி, சன் டிவியின் டாப் டென் நிகழ்ச்சி பார்த்த மாதிரி இருந்தது. :)

btw, all tamil translated english film names are superrrr. :)

said...

பந்தை கையில் வச்சுக்கிட்டு நீங்க நிக்கிறதைப் பார்த்தா சாட்சாத் அந்த திருமால் உலக உருண்டையை கையில் வச்சிருக்கிற மாதிரி தெரியுதுங்க...

said...

//விஜய்காந்த்நடித்து வந்த ஒரு 3D படமும் ஆர்த்தியில் பார்த்திருக்கிறேன் இந்த தியேட்டரில்.//


ஹரி, இந்த கொடுமைலாம் வேற சந்திச்சிங்களா ? :P


( படம் பேரு "அன்னை பூமி" )

ஆர்த்தி 86 தான், நாகா வுல "24 மணி நேரம்னு" மைக் மோகன் நடிச்ச படத்துக்கு கூட்டிட்டு போய் அலற வச்சானுங்க.

கார்த்தி என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான். அந்த சிறுமலை காத்தும் ஆத்தூரு தன்ணியும். நான் நினைச்ச இப்பல்லாம் வைகை பிடிச்சு ஓடிருறது .

திமுக ஆட்சி வந்த பின் குமரன் பூங்கா கடும் நடவடிக்கை எடுக்கபட்டு கஞ்சா பார்ட்டிகள் விரட்டபட்டு நன்றாக பராமரிக்க படுகிறது. வந்தால் குடும்பத்துடனும் போய் பார்க்கலாம்.

said...

/ராகவேந்திரா தியேட்டர் சென்னையில் உள்ள
தியேட்டர்களை விட தரத்தில் உயர்ந்தது என்பது எனது கருத்து.
ஆனாலும் நானும் எனது நண்பர்களும் அப்போது அபிராமி தியேட்டரில் தான் அதிகம் படம் பார்த்து இருப்போம்/

திண்டுக்கல்லில் ஏது ராகவேந்திரா தியேட்டர்? அபிராமி தியேட்டரில் அதிகப் படம் பார்த்த காரணம் தெரியுது((-

said...

Hello boss,

Namma Dindigul pathi sonnna ungalukku muthalil ennoda nanri.
Neenga madurai ill irrukkum manikka vinayakar & mappilai vinayakar theatrei ill padam athum parthathuillaiya. Dts sound ennaral antha theatre thaan,next sinthamani theatre,next namma oru Rajendra theatre......
Nammu Blog vanthathukku remba nanri,ennoda sontha urooru Vedasandur....

said...

நல்ல பதிவு! திண்டுக்கல் பக்கமா ட்ரைவ் பன்னி போயிருக்கோம்! ஊர பாத்ததில்ல :(

said...

//ஆனால், திண்டுகல்லிலேயே அதிகமாக நான் ஆர்த்தியில் தான் படங்கள் பார்த்திருக்கிறேன்//
நீங்க தியேட்டரில் ஆர்த்திய பாத்தீங்களா, இல்லா ஆர்த்தி தியேட்டர பாத்தீங்களா?

said...

திண்டுக்கல் பூட்டுக்குதான் பிரபலம் என்ன நினைச்சேன்...தியேட்டருக்கும் பிரபலம் என இப்பதான் தெரியுது.

said...

//திண்டுக்கல் - திருச்சிக்கு மதியம் 1.30 மணிக்கு பாடல் கேட்டவாறு செல்ல ராணிமங்கம்மாள், தீரன்சின்னமலை அரசினர் பேருந்துகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு TMT (Thirumathi Muthammal Transport) பஸ்ஸில் காத்திருந்து போவேன். 95 கிமீ தூரத்தை 90 நிமிடத்தில் சென்று சேர்ப்பார்கள். சீக்கிரம் வந்துவிட்டது என்று திருச்சி பஸ்நிலையத்துக்குள் TMT பஸ்ஸை விடமாட்டார்கள் :-))//

உண்மைதான்.. இந்த பஸ்ஸில் ஏறுவதற்கு சினிமா தியேட்டரில் நிற்கும் க்யூவைப் போல கூட்டம் பஸ்ஸ்டாண்டில் நிற்கும். முதல் வீடியோ கோச்சும் இந்த பஸ்தான்.. அரசு பேருந்து டிரைவர்களும், கண்டக்டர்களும் சேர்ந்து ஒரு நாள் இந்த பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து பெரும் கலாட்டாவே செய்தார்கள். ஆனாலும் மறுநாளே புது கண்ணாடி போட்டு பக்காவாக கொண்டு வந்து நிறுத்தினார்கள். பாராட்டப்பட வேண்டிய செயல் அது.

ராஜேந்திராவும், உமாவும் நவீன வசதிகளோடு சினிமா பார்ப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு குறுகிய காலத்தில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. எதிரில் இருந்த நாகாவும், லஷ்மியும் குத்தகைதாரர்களின் புட்பால் விளையாட்டில் கவனிக்கப்படாமல் போய்விட்டது வருத்தத்திற்குரியது.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் ஏஸி தியேட்டர் நாகாதானே.. God Must Be Crazy படத்தை 1 ரூபா டிக்கெட்டில் பார்த்தது என்ககு இஇன்றைக்கும் நினைவிருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் வருகிற ஏஸி காத்தும், நறுமணமும் பார்வையாளர்களை ஏங்க வைத்தது என்னவோ உண்மை.

said...

//மிதக்கும்வெளி said...
திண்டுக்கல்லில் ஏது ராகவேந்திரா தியேட்டர்? அபிராமி தியேட்டரில் அதிகப் படம் பார்த்த காரணம் தெரியுது((-//

அபிராமி தியேட்டரும் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது.. ஊமைவிழிகள் அங்கேதான் பார்த்தேன்.. காலப்போக்கில் குத்தகைக்கு தியேட்டர் போய்விட 'நல்ல, நல்ல' படங்களாகப் போட்டு எங்களது பர்ஸை காலியாக்கினார்கள்.. ம்.. அதெல்லாம் ஒரு காலம்..

சுகுணா ஸார்.. இரவு எட்டரை மணி காட்சி படம் பார்த்திருக்கீங்களா..?