விடுதலை சிந்தனைகள்
எல்லோரும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்திடனும். நம்ம பள்ளியில தேசிய கொடியேத்தி, மாறுவேடப்போட்டி நடக்கும்னு பள்ளியின் காலை வழிபாட்டில் தமிழாசிரியர் அறிவித்தார்.. வகுப்புக்கு போனவுடனே வகுப்பு ஆசிரியை, நாளைக்கு வருகை பதிவு எடுப்பேன்.. வராதவங்களுக்கு தனியா தண்டனை கொடுப்பேன்.. எல்லோரும் நாளைக்கு காலைல வந்திடுங்கன்னு சொன்னார்.. இப்போதைய சுதந்திர தின கொடியேற்ற நிகழச்சிகள் இப்படித் தான் வலுக்கட்டாயமாக மாணவர்களை வரவைத்து நடத்தப்படுகின்றன. உள்ளத்தில் விடுதலை வேட்கையும் எழுச்சியையும் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் முதல் நம்மை சுற்றியிருக்கிற எல்லோரும் உருவாக்கத் தவறிவிட்டனர்.
அரசு விடுமுறை நாள் கிடைத்தால், விருப்பமான நேரத்தில் காலையில் எழுந்து, தொலைக்காட்சியில் போடுகின்ற நிகழ்சிகளை பார்த்து விட்டு அப்படியே சோபாக்களில் மறுபடியும் ஊறங்கிப்போகும் வழக்கம் என பாரதி சொன்னது வீணிலே அழிகின்றனர் பலர். சிறுவனாக இருக்கும் காலத்திலேயெ இதெல்லாம் அவர்களின் மனதிலே வாழைப்பழத்திலே ஊசி ஏற்றும்விதமாக செய்யப்பட்டிருக்கவேண்டும்.
எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைபள்ளியும் உண்டு. விடுதலை திருநாளின் அன்று, காலை எல்லோரையும் வரவழைத்து கொடியேற்றி, ஊர்வலம் வருவார்கள், கோஷங்கள் முழக்கமிட்டு, கையில் மூவர்ண கொடிகளுடன். அந்த சிறு வயதிலே அவர்கள் அந்த கோஷங்கள் சொல்வதிலும், கொடிகளை ஏந்துவதிலும் அப்படி ஒரு ஆர்வம் இருக்கும். இப்படி பட்டணத்தில் இருக்கும் எத்தனை பள்ளிகள் செய்கின்றன.. பெரும்பாலான பள்ளிகள் விடுதலை நாளன்று கொடியேற்றுகிறதா என்பதே சற்று சந்தேகம் தான். இந்த சிறார்கள் அப்படி ஊர்வலம் சுற்றி வருகையிலே, அவர்கள் பெற்றோர்கள் கொள்ளும் சந்தோசத்தை வார்த்தையில் சொல்ல இயலாது. அன்றைக்கு, தாங்கள் தின்பண்டங்கள் வாங்க வைத்திருக்கும் காசில் கொடி வாங்கி நெஞ்சினில் குத்திகொண்டு அவர்கள் பள்ளிகள் நோக்கி செல்லும் போதும், பார்ப்பவர்களுக்கே சற்று தேசியபற்றின் அளவு மனதில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.
ஏதோ இராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் தேசியப்பற்று இருக்க வேண்டுமென்று எல்லைகள் வகுக்கப்பட்டதை போல் எல்லோரும் வாழ்கிறார்கள். இந்நிலை மறந்து, தேசிய உணர்வை ரத்தங்களில் ஏற்றி எல்லா நாளங்கள் நரம்புகளில் பரவ செய்ய வேண்டும். இந்த அறுபது வருட காலத்திலே வியக்க வைக்கும் முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் பல கோடுகள் இந்திய அன்னையின் முகங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி, தெருவை சுற்றி சுகாதாரமாக, குற்றங்கள் இல்லாத ஒரு இடமாக, சீராக வைத்துகொள்ள ஆரம்பித்தால் அதுவே மெல்ல ஒரு சங்கிலியை போல நமது நாட்டை காக்கும். அதுவே ஒவ்வொரு விடுதலை நாளின் போதும் நாம் ஏற்றுக்கொள்ளும் உறுதி மொழியாக இருக்கட்டும்.
அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்.