தாலாட்டும் காற்றே வா..
வாழ்க்கையை உலகத்துல யாரு ரொம்ப நல்லா ரசிச்சு வாழ்றாங்கன்னு பாத்தா, கடைசி இடம் இந்தியனுக்கு தான். இதோ இந்த வாரம் திங்கட்கிழமை லேபர் டே வருது.. அதனால இங்க உள்ள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சுற்றுலா போறோம்.. நான் நியுயார்க் போறேன்..
நம்ம இந்தியாவுல, வேலை, குடும்பம், குட்டி, ஏதாவது விஷேசங்களுக்கு போறது, பல பேரை பாத்து அரட்டை அடிக்கிறதுன்னு வாழ்க்கையை கழிக்கிறோம்.. பணம் ஓரளவுக்கு இருக்கிறவங்க தான் இந்த சுற்றுலா போறதை பத்தியே நினைக்கிறாங்க.. அப்படி சில பேர் போறப்பவே கொடை, ஊட்டி தாங்க மாட்டேங்குது.. எல்லோரும் போக ஆரம்பிச்சா, சாமி, ஊட்டி அப்புறம் சென்னை மாதிரி ஆகிடும் சீக்கிரம்..
சரி, அதுக்காக வாழ்க்கையின் கீழ்தட்டுல இருக்கிறவங்க, இந்த மாதிரி போறதில்லையா..தூரத்துல யாரோ கேள்வி கேக்குற மாதிரி தெரியுது.. போறாங்க..அவங்களும் இந்த மாதிரி சுற்றுலா போறாங்க..ஆனா அது எப்படி இருக்கும்னா, தவமாய் தவமிருந்து படத்துல ராஜ்கிரண் தன் குடும்பத்தோட ஒரே ஒரு ஊருக்குள்ளன்னு பாட்டு பாடிகிட்டு போற மாதிரி தான்.. அப்படியும் இல்லைனா.. புளிசோறு, எலுமிச்சைச் சோறு, கொஞ்சம் காரமாய் உருளைக்கிழங்குன்னு பொட்டலம் கட்டிகிட்டு ஒரு கோவிலுக்கு போறது.. என்னுடைய சின்ன வயசு சுற்றுலா எல்லாம் கோவிலை சுத்தி தான் இருக்கும்.. அப்படி போற கோவிலுக்கு பக்கத்துல ஆறோ குளமோ இருந்தா அதுல போய் நல்லா ஆட்டம் போடுறது தான் அங்க இருக்கிற ஒரே ஒரு விளையாட்டு..
எங்க ஊர்ல இருந்து பழநிக்கு வருடாவருடம் பாதயாத்திரை போவாங்க.. அப்படி போறதுக்கு அவங்க மாலை போட்டு இருக்கிறப்போ எங்கியாவது பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு ஒரு வேன்லயோ, லாரிலயோ, சேருகிற ஆள்களின் எண்ணிக்கையை பொருத்து, கூட்டிகிட்டு போவாங்க. அது தான் எங்களை பொறுத்தவரை டூர். போற இடத்துல, நல்லா சாமியை கும்பிட்டுவிட்டு, கொண்டு போற சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிவிட்டு, கபடி விளையாட ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது..
இந்த மாதிரி இல்லைனா, ஊருல எல்லாரும் மாதாமாதம் ஒரு பணத்தை யார்கிட்டயாவது கொடுத்து வச்சு, அதாவது ஒரு ஆளுக்கு டிக்கட் செலவு ரூபாய் 120-னா, மாதம் அவங்க பத்து ரூபாய் கட்டணும்.. அப்படி கட்டி நாங்க எல்லோரும் போன முதல் டூர், மைசூர், பெங்களூர் மற்றும் திருப்பதி.. அப்போ நான் ஐந்தாவது படிச்சதா ஞாபகம்.
சில சமயம் பக்கத்துல இருக்கிற (திண்டுக்கலிலிருந்து மதுரை போறப்போ இடதுபக்கதுல இருக்கிறது) சிறுமலைக்கு, எங்க பெரியப்பா வீட்டு தோட்டத்துக்கு போவோம்.. அந்த குளுமையான இடத்துல, ஒரு மூன்று நாள் தங்கி ஜாலி பண்ணிட்டு வருவோம்.. அது தான் எங்களுக்கு அப்போ ஊட்டி.. இந்த இடத்தை பத்தி இன்னொரு பதிவுல ரொம்ப சொல்றேன்..ஆனா இந்த இடம் ஊட்டியைவிட நல்ல இடம்ங்கிறது எனக்கு ஊட்டிக்கு போனப் பிறகுதான் தெரிஞ்சது.. அந்த அமைதியான, ரம்மியமான இடத்தை ரசிக்கக்கூடிய வயசு அப்போ இல்லைனாலும், அதற்கு பிறகு என் கல்லூரி நண்பர்களோட போனப்ப, ரொம்பவே ரசிச்சேன்..
என்னதான், இந்த வாரம் நான் நியுயார்க் போனாலும், அந்த திருப்தி, அந்த ஒரு சின்ன வயசு விளையட்டுத்தனம், சுதந்திரம், அந்த பரவசம், கிடைக்குமா..தெரியல.. அதுக்கு பிறகு, என் சுவாசக்கற்றே படத்துல வர்ற திறக்காத காட்டுகுள்ளே பாட்டும், சாமுராய் படத்துல வர்ற மூங்கில் காடுகளே பாட்டும், எனக்கு அந்த நினைவுகளை தந்தன..