சென்னையில இருந்தப்போ ஒரு மூணு நாள் லீவ் கிடச்சா உடனே சொந்த ஊருக்குத் தான்.. வேற எந்த யோசனையும் மனசுல வராது.. ஆனா இங்க, அமெரிக்கா வந்த பிறகு, மாசத்துக்கு ரெண்டு வாரமாவது வெளில சுத்துறதே வேலையாயிடுச்சு எனக்கு.. அதுவும், இப்போ கொலம்பஸை மையமா வச்சு ஸ்கைபஸ்னு ஒரு புதிய ஏர்லன்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க.. அதுல தொடக்க டிக்கட் விலை பத்து டாலர் தான்.. அப்புறம் ஒவ்வொரு பத்து டிக்கட்டிற்கும் பத்து டாலார் ஏத்துறாங்கன்னு நினைக்கிறேன்.. முதல் நாள் காலைல இதை செய்தில கேட்டவுடனே, மடமடன்னு நண்பர்கள் கூட ஒரு கூட்டத்தை போட்டு லாஸ் ஏஞ்சல்ஸ், புளோரிடா, சான் பிரான்ஸிஸ்கோன்னு ரெண்டு வார கேப்ல டிக்கட் புக் பண்ணி, அதுல லாஸ் ஏஞ்சல்ஸும் போயிட்டு வந்தாச்சு.. நம்மளோட அதிர்ஷடம் நாம வந்த சமயத்துல இப்படி ஒரு ஏர்லன்ஸ் ஆரம்பிச்சு, நம்ம நெஞ்சுல, நாட்டாமை சொல்ற மாதிரி பீர் ஊத்திருக்காங்க..இவ்வளவு கம்மியான விலைல கொடுத்தாலும், மத்த எல்லாமே காசு தான்.. உங்களுக்குன்னு ஒரு சீட் நம்பர் சொல்ல மாட்டாங்க.. அங்க போய் க்யூவுல நிக்கணும்.. அப்புறம் உள்ள போய் எந்த சீட் கிடைக்குதோ அதுல உட்காரணும்.. அப்படி நான் வரிசைல நின்னு சீட்ல உட்கார்ந்தப்போ, நம்ம ஊர் பஸ்ல சீட் பிடிக்கிறது தான் ஞாபகம் வந்தது.
எங்க ஊருக்கு அரை மணிக்கொரு பஸ் தான் இருக்கும் திண்டுக்கல்ல இருந்து. அதனால ஒரு பஸ், பஸ்ஸ்டாண்டை விட்டு கிளம்பின பிறகு, அடுத்த பஸ் வர்றதுக்குள்ள நல்ல கூட்டம் சேர்ந்திடும். பஸ், பஸ்ஸ்டாண்டுக்குள்ள நுழையிறதுக்குள்ள, எல்லோரும் ஓடிப்போய், ஜன்னல் வழியா, கர்ச்சீப்-லயிருந்து, துண்டு, வயர்கூடை, சாக்கு வரை எல்லாத்தையும் வச்சு இடம் பிடிப்பாங்க.. சில சமயம் வாய்க்கா வரப்பு தகராறைவிட இந்த சீட் பிடிக்கிற தகராறு பெருசா இருக்கும். சீட்டு பிடிக்க பஸ் கூடவே ஓடி வர்ற கூட்டத்துக்குள்ள நிதானமா பஸ் ஓட்ற அந்த டிரைவர்களை பாராட்டியே ஆகணும்.. அப்படி ஒரு கொல வெறி நம்ம மக்கள்கிட்ட இருக்கும் சீட் பிடிக்க..
இந்த ஸ்கைபஸ் ஏர்லைன்ஸ் விமானத்துல ஏறிட்டா, உள்ளாற எல்லாமே காசு தான்.. தண்ணில இருந்து பர்கர், ஸ்நாக்ஸ் எல்லாமே உள்ளாற விக்கிறாங்கா.. நீங்க வேணும்னா தலையணை போர்வைகூட உள்ள வாங்கிக்கலாம். அதை உங்க வீட்டிற்கும் எடுத்துட்டு போகலாம். என்ன வாங்கினாலும் நமக்கு ஒரு இருபது டாலர் எக்ஸ்ட்ராவாகாது.. அப்புறமென்ன, அதுவும் நாலரை மணி நேர பயணத்துல அப்படி என்ன நாம சாப்பிட்டுவிடப்போகிறோம்.
இந்தியாவில் இருக்கும் போது பெரும்பாலான பயணங்கள் எல்லாமே பஸ்ஸில் தான் இருக்கும். ரொம்பவும் அரிதாக, ரயிலில் இருக்கும். பஸ் பயணங்கள் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்களையே தந்திருக்கு.. அதுவும் அப்போவெல்லாம் வீடியோ இருக்க பஸ்ல போறது தான் பிடிக்கும்.. அடுத்த நாள் ஆபீஸ் இருந்தாலும், ஏற்கனவே பலதடவை பார்த்த படமா இருந்தாலும், அது எவ்வளவு மொக்கப்படமா இருந்தாலும் நைட்டு ரெண்டு மணிவரையாவது படம் பாக்காம இருக்க முடியாது.. நானும் எப்படியாவது தூங்கிடணும்னு கஷ்டப்பட்டு கண்ணைமூடுவேன்.. கொஞ்ச நேரத்துல என்னையும் அறியாம அந்த படத்தை பாத்துக்கிட்டு இருப்பேன்.. கண்டக்டரா வீடியோவை நிப்பாட்டாதவரை, நமக்கு தூக்கம் கிடையாது.
ஒரு முறை என் சித்தி பொண்ணு கல்யாணத்திற்காக ரெண்டு நாளைக்கு முன்னாடியே டிக்கட் புக் பண்ணியும், ஆபீசுல வேலை இருந்ததால என்னால போக முடியல. அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி.. வேளச்சேரில இருந்து பஸ் பிடிச்சு தாம்பரம் போயாச்சு.. வர்ற எந்த பஸ்லயும் இடமே இல்லை.. ஒரு பஸ்ல சீட் இல்ல.. தரைல தான் உட்காரணும், ஆனா டிக்கட் விலை ஒண்ணுதான்னெல்லாம் மனசாட்சியே இல்லாம கேக்க ஆரம்பிச்சுட்டான். கூட்டத்தை பாத்துட்டு அங்கிருந்த வேன் வச்சிருக்கவங்க, திருச்சிக்கு ட்ரிப் கூட அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நமக்கு இந்த மாதிரி வேன்ல போறதுலையும் இஷ்டம் இல்லை.. கடைசியா, பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் வந்தது.. அதுல ஏறினா, நிக்கக் கூட இடமில்லாத அளவு பயங்கர கூட்டம்.. வேற வழியில்லாம் நைட்டு முழுக்க தூங்காம அந்த ஏழு மணிநேரமும் நின்னுகிட்டு தான் திருச்சி போய் சேர்ந்தேன். இன்னொரு தடவை, வேற வழியே இல்லாம புஷ்-பேக் இல்லாத ஒரு அரசு பஸ் தான் கிடச்சது.. பரவாயில்லைன்னு நினச்சு உட்கார்ந்தா, இன்னொரு மாப்பெரிய மனிதர் என் பக்கத்துல உட்கார்ந்தார்.. சென்னை வந்து சேர்றதுக்குள்ள, ஜூஸ் ஆகாம தப்பிக்க என்னென்னமோ பண்ணவேண்டியிருந்தது..
இப்படி பயணங்கள் எல்லாமே நமக்கு வித்தியாசமான அனுபவத்தை தான் தந்திருக்கிறது.. இப்படியான ஒரு நிலா வெளிச்ச பயணத்துல தான் நான் அந்த சுடிதார் நிலாவை சந்தித்தேன்.. இரு கண்கள் போதாதுன்னு அவசர அவசரமாக என் உடம்பெல்லாம் இந்திரன் போல கண்கள் முளைக்க வைத்தவள் அவள். அந்த அனுபவம் பற்றி, அவளை பற்றி பின்னாடி ஒரு நாள் வேறோரு பதிவுல சொல்றேனே..