பாதயாத்திரையில் அவளின் சந்திப்பு
பாதயாத்திரை போவதென்பது பக்தி கலந்த ஒரு அலாதியான விஷயம். எங்க ஊர்ல வேளாங்கண்ணி மாதாவிற்கும் பழநி முருகனுக்கும் மாலை போடுவார்கள். இப்பொழுது சபரிமலை ஐயப்பனுக்கும் மாலை போட்டு விரதமிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து இந்த வருஷம், பங்குனி முடிந்ததோடு கடந்த இருபது வருஷமாக பழநிக்கு மாலை போட்டு பாதயாத்திரை சென்று வருகிறார்கள், எங்கள் ஊரிலிருந்து.
எனக்கு எட்டு வயது இருக்கும் போது முதன் முதலாக பழநிக்கு பாதயாத்திரை போனேன். எங்கள் ஊரிலிருந்து பழநிக்கு 61 கிலோமீட்டர். முதல் நாள் சாயந்திரம் கிளம்பினா, அடுத்த நாள் இரவு தான் பழநி போய் சேருவோம். எங்கள் ஊரிலிருக்கும் சில பேர் அடுத்த நாள் பத்து மணிகெல்லாம் ஊரில் இருப்பார்கள், சாமியை பார்த்துவிட்டு. தினமும் சிறுமலைக்கு ஏறி இறங்கி பழக்கம் அவர்களுக்கு. அவ்வளவு அசுர நடையர்கள் அவர்கள்
அந்த சின்ன வயதில் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியல. என்னுடன் சேர்ந்து நடந்து வந்த என் மாமா, சித்தப்பாக்கள் தான் என்னை தூக்கி சென்றனர். இதே மாதிரி தான், ஜானகி எம்.ஜி.ஆர் மதுரையில் முதல் மாநாடு தமுக்கம் மைதானத்தில் நடத்திய போதும் என்னை இதே போல் தான் அவர்கள் அந்த மாநாட்டு திடலில் தூக்கிய வண்ணம் இருந்தனர்.. அடுத்த முறை போனபோது அவர்கள் என்னை சுமக்க முடியாத அளவு நான் வளர்ந்து விட்டேன். அதனால் பாதி தூரம் நடந்தும் மீதி தூரம் பஸ்ஸிலுமாக சென்றேன்..
மூன்றாவது முறையாக நான் பதினோராவது வகுப்பு படிக்கும் போது பாதயாத்திரை சென்றேன். எப்போதும் பங்குனி உத்திரத்திற்கு நடந்து செல்பவன், அந்த தடவை என் நண்பர்களுடன் சேர்ந்து தைப் பூசத்திற்கு சென்றேன். அந்த பாதயாத்திரை இன்னும் மறக்க எனது இளமைகால நாட்களின் சம்பவங்களில் ஒன்று. நல்ல அனுபவம். பல ஊர்களிலிருந்து வரும் நிறைய பேரிடம் இரண்டற கலந்துபழகும் வாய்பு கிடைத்தது.
அப்படி பாதயாத்திரை சென்று திரும்பி வரும் வேளையில், திண்டுகல்லிற்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தோம். எங்கள் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைசி நிறுத்தம் செல்வதற்கு ஏறுபவர்களுக்கு தான் அமர இடம் கிடைக்கும். இடையில் இறங்கும் ஆட்களை வண்டியில், வண்டி கிளம்பும் வரை ஏறவிட மாட்டார்கள். அதுவரை எனக்கும் அது கொடுமையான அனுபவத்தை தந்த விஷயம். அன்றைக்கும் அதுவே எனக்கு அழகான மலரும் நினைவுகளாய் இன்று என்னை நினைக்க வைக்கும் அளவிற்கு தருணம் அது.
நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக ஒரு பொண்ணுங்க கூட்டம் வந்தது. எல்லாம் கேரளாவை சேர்ந்தவர்கள். ஓட்டன்சத்திரம் பள்ளியில் படிப்பவர்கள் போல. ஆயிரம் விண்மீன்கள் இருந்தாலும் பளிசென்று நிலா தெரிவது போல, என் அருகில், வட்ட முகம், கரு கரு விழிகள் (அப்படியே கேரளத்து கண்கள்), கவுன் போட்டுகொண்டு ஒருவள் இருந்தாள். பார்த்தவுடன், ஃபெவிகால் உதவியில்லாமல் நெஞ்சில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் பாந்த முகம்..சாந்த முகம்..காந்த முகம்.. பஸ்ஸிள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவள் சிரிக்கும் போதெல்லாம், கண்டெக்டர் தனது சில்லறை பையை கீழே கொட்டிவிட்டாரோ என்று நினைக்கத்தோனும்.
நானும் அந்த வயதுக்கே ஊரிய குறும்புடன் அந்த பெண்ணுடன் அரைமணி நேர பயணத்தை கண்களில் பேசிய கடந்தேன். இந்த இடைப்பட்ட வெளியில், அவளுக்கும் தெரிந்துவிட்டிருந்தது, அவளுக்காய் ஒரு ஜீவன் மெழுகாய் பக்கத்தில் உருகுகிறது என்று.. அவள் பஸ்ஸை விட்டு இறங்கும் போது கடைசி படியில் நின்றுகொண்டு, என்னை திரும்பி பார்த்த ஒரு பார்வையில், இதயம் ஒரு முறை துடிப்பை நிறுத்தி அந்த பிரிவை தாங்காமல் கதறியது.அவள் முகம் இப்போது மறந்து போனாலும், அப்போது எனது வாலிப வயசில் அவள் உருவாக்கிய, அவள் எனது மனதின் தெருக்களில் நடந்து போன அந்த பாதச்சுவடுகள் இன்னமும் அப்படியே இருக்கிறது. எப்போதெல்லாம் பழநி பாதயாத்திரை பற்றி நினைப்பேனோ அப்போதெல்லாம், அந்த நினைவுக் குதிரையில் ராணியாய் சவாரி செய்து வருவாள் அவள். எப்படி நமக்கே தெரியாமல் நமது இதய சிம்மாசனத்தில் தற்காலிகமாக எத்தனையோ பேர் உட்கார்ந்து சென்றிருப்பார்கள் அதில் இவளும் ஒருவள்.