நீண்ட நாட்களாய் எழுதாமல் பாதியில் விட்ட இந்த தொடரை மீண்டும் தூசி தட்டு, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...
ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... - இரண்டாம் பகுதியிலிருந்து...
பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...
சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...
பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். - ஐந்தாம் பகுதியிலிருந்து
துரத்தி ஓடி வந்தவர்கள், இந்தப் பக்கம் யாராவது ஓடினார்களா என்று எங்களைப் பார்த்து கேட்டார்கள்.. என் நண்பன் கத்தி குத்துபட்டு ஓடியவன் சென்ற திசையை காட்டினான்.. அவர்கள் நான்கு பேரும் அந்தப் பக்கம் ஓட ஆரம்பித்தனர்.. எங்களுக்கெல்லாம் பயங்கர கோபம் வழி சொன்ன நண்பன் மீது.. எங்கள் கோபத்தை புரிந்து கொண்ட அவன், "டேய்! பூச்சியை மாதிரி என்னை பாக்காதீங்கடா... கத்தியில குத்து வாங்கினவர் அங்க இருக்க பாலத்துக்கு கீழ ஓளிஞ்சுகிட்டார்.. அதனால தான் நான் வழி சொன்னேன்..அங்க பாருங்க அந்த நாலு பேரும் அந்த பாலத்தை தாண்டியே போயிட்டாங்க" என்று சொன்னவன், வாங்கடா, நாம வேற வழில ரூமுக்கு சீக்கிரம் போயிடலாம்" என்று எங்களை அவசரப்படுத்தினான்.. அறைக்குள் நுழைந்த பின்னும் ஒருவித பதட்டமும், குத்து பட்ட அந்த ஆளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற கவலையும் இருந்தது எங்களுக்கு.
எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்த போது அவ்வப்போது திடீர் பெண்கள் நடமாட்டமும், பக்கத்து அறைகளில் கண்ணாடி டம்ளர்களின் (பின்னாளில், அவைகள் பயன் படுத்திய பின், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள்) ஓசைகள், சிரிப்பும் கோபம் கலந்த பேச்சுகளுமாய் எதிரொலித்தது. முக்கால்வாசி நாட்களின் இரவுகள் இப்படித் தான் கழிந்தன.. நாங்கள் அப்போது வேலை தேடும் மும்மரத்தில் இருந்ததால், இதை பற்றியெல்லாம் ரொம்பவும் சட்டை செய்ததில்லை.. இரவு நேர சாப்பாடாய், கையேந்தி பவனில் முடித்த பின், அறைக்குள் நுழைந்து விட்டால், அன்றைக்கு நடந்த விஷயங்கள் பற்றிய அரட்டையும், கையில் சீட்டு கட்டுடன் நடு இரவு வரை சீட்டாட்டமும் தொடரும்.. வார இறுதிகளில் திருவல்லிக்கேணியில் இருக்கும் தியேட்டருக்கோ (தியேட்டரின் பெயர் மறந்து விட்டது), இல்லை தேவி, சாந்தி, சத்யம் தியேட்டர்களில் ஏதேனும் படங்களுக்கோ செல்வாதாய் கழிந்தது.. அதுவும் தேவி தியேட்டரில், பிளாக்கில் டிக்கட் விற்கும் பெண்கள், டிக்கட் தரும் நபரிடம் அக்கவுண்ட் வைத்திருந்ததை பார்த்தவுடன் எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. மொத்தமாக பத்து இருபது டிக்கட்டுகள் இது மாதிரி அக்கவுண்ட்டில் வாங்கி சென்று அதை இருபது, முப்பது ரூபாய் அதிகமாய் விற்று அந்த கடனை அடைப்பதாய் அவர்களின் வேலை சென்று கொண்டிருந்தது.,. இதற்கு தியேட்டருக்கு மிகவும் தாமதமாக வரும் குடும்பத்தினரை (பொதுவாக, எல்லோரையும்)சொல்லவேண்டும்.. டிக்கட் கொடுக்க ஆரம்பித்த பின்னர் தான் அவர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள்.. அதுவரை வந்தபின், அவ்வளவு பெரிய வரிசையில் நிற்பதுவும் இயலாத காரியம்.. தியேட்டர் வரை வந்த பின்னர், படம் பார்க்காமல் செல்வதுவும் இழுக்கு.. கடைசியில் கணவனின் வியர்வை, டிக்கட்டை பிளாக்கில் விற்கும் நபரின் வியர்வைக்காக, சினிமா டிக்கட்டாய் தியேட்டர் வாசலில் கிழியும்.. ஆனால், எனக்கு தெரிந்த வரையில் சத்யம் தியேட்டரில் இது போன்ற இடைஞ்சல்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.
2002, ஏப்பிரல் மாதம் 13ந்தேதி, திருவல்லிக்கேணி தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்துகொண்டிருந்தோம்.. கலைவாணர் அரங்கத்தின் வழியாகத் தான் புதிய விடுதிக்கு செல்வோம்.. அப்படி செல்கையில் கலைவாணர் அரங்கத்தின் வாயிலில் வண்ண தோரணங்கள் எல்லாம் கட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் செல்ல செல்ல, அங்கிருந்தவர், எங்கோ பார்த்த ஆள் மாதிரி தெரிந்தது.. அட! நம்ம(!) சாபு சிரில்.. பாய்ஸ் படத்தின் பட பூஜை விழாவிற்காக அலங்கார வளைவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள் அவரது குழுவினர்.. எங்களுக்கோ இன்ப அதிர்ச்சி.. இவரையாவது சென்னையில் இருப்பதற்கு நேரில் பார்க்க முடிந்ததே என்று எனக்கு மகிழ்ச்சி.. (மற்றவர்கள் எம்.எல்.ஏ விடுதியில் நடந்த காதல் அழிவதில்லை படத்தின் படப்பிடிப்பை பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியவர்கள்) பக்கத்தில் சென்று அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திகொண்டோம்.. அவசரத்தில் என் நண்பன் பூபாலன் சினிமா டிக்கட்டிலும், கிச்சா ஒரு சிறிய டைரியிலும் கையெழுத்து வாங்கி கொண்டார்கள்.. (என்னிடம் அது கூட இல்லை அந்த நேரத்தில்) அந்த கையெழுத்தை போட்டுவிட்டு "இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. இன்னமும் அந்த சினிமா டிக்கட்டும் டைரியும் அவர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஹேராமின் கல்கத்தா கலவரத் தெரு, கன்னத்தில் முத்தமிட்டாலின் உடைந்த படகு என்று நமக்கு தெரிந்த அவரின் கைவரிசைகள் பற்றி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அவரும் எங்களை பற்றி விசாரித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அவரிடம் பேசிவிட்டு உள் நுழைந்தால், நடிகர் கமலஹாசனின் (முன்னாள்) மனைவி சரிகா நின்று கொண்டிருந்தார். இவர் தான் பாய்ஸ் படத்தின் உடையலங்கார நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடம் சென்று பேசுவதற்கு என்ன இருக்கிறது (ஏன் கமலுக்கும் உங்களுக்கும் சண்டை என்று கேட்பதை தவிர) என்று நினைத்துகொண்டு நாங்கள் எங்களின் அறைக்கு சென்று விட்டோம்.
மறு நாள், தமிழ்ப் புத்தாண்டு.. ஆங்கில புத்தாண்டில் தண்ணியடிக்க இருக்கும் சௌகரியம் தமிழ் புத்தாண்டில் இல்லை.. அன்று கோவிலுக்கு செல்வது தான் முக்கிய விஷயம் போல.. ஒரு நாள் விடுமுறை, சில திரைப்படங்கள் ரிலீஸ் என்று தான் இருக்கப்போகிறது.. ஜனவரி 1 அன்று இருக்கும் சந்தோசம், குதியாட்டம் எதுவும் ஏப்பிரல் 14-இல் ஏனோ இருப்பதில்.. இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த நாள் மறக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.. இது தான் எங்களுக்கு இடையில் முக்கியமான விவாதமாய் இருந்தது அன்று.. தூங்கி எழுந்து, வாலஜா ரோட்டில் இருக்கும் கடையொன்றில் காபியும், தி ஹிந்துவும் வாங்கி வர சென்றோம், நானும் கிச்சாவும். கலைவாணர் அரங்கத்துள் வந்தால் எங்கு பார்த்தாலும் கொடியும் தோரணமும்.. வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்..அட..இன்னைக்கு பாய்ஸ் பட துவக்கவிழா என்பதே மறந்திடுச்சு என்று கூட்டத்தை பார்த்துகொண்டே நடந்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வருக! வருக! என்று பேனர் கட்டப்பட்டிருந்தது.. அட! நம்ம தலைவர் வர்றார்..சொல்லவே இல்லியே யாரும்.. காலை காப்பியையும் ஹிந்துவையும் மறந்தோம்.. கூட்டத்தோடு கூட்டமாக நின்று, வருவோர் போவரையெல்லாம் பார்த்துகொண்டிருந்தோம்.. சத்யராஜ், கார்த்திக், என பலர் காரை விட்டு இறங்கி உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். படத்தை குத்து விளகேற்றி துவக்க ஜோதிகா என்று கூட்டத்தில் யாரோ சொல்ல, ஆஹா.. எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று மெல்ல முண்டியடித்து கூட்டதுக்குள் நுழைந்தோம்..
சிவப்பு நிற டி-ஷர்டும், கறுப்பு பேண்டும் அணிந்து ஜோதிகா.. அட அட அடடா.. இதுவல்லோ பாக்கியம் என்று நானும் கிச்சாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துகொண்டோம்.. ரஜினி வருவாரா என்ற ஆவல் பல மடங்கு எகிறியது.. அவரது கார் வந்தது..அவர் வெள்ளை வேஷ்டி, சட்டையில் வந்திருந்தார்.. பாபா முக வெட்டில் இருந்தார்.. சரியாக பார்ப்பதற்குள் "வாம்மா..மின்னல்" வேகத்தில் நுள்ளே நுழைந்துவிட்டார்.. எங்கள் இருவருக்கும் பயங்கர கவலை.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு(?) நின்று ரஜினியை ஒழுங்கா பார்க்க முடியவில்லையே என்று.. அப்போது தான் எங்களுக்கு அந்த இனிய அதிர்ச்சி கிடைக்கும் செய்தி கேட்டது..
(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)