இப்போ எல்லாம் கபடின்னு சொன்னா கில்லி தான் ஞாபகத்திற்கு வரும். தோ..பாருடா..அதெப்படின்னு கேட்காதீங்க.. எல்லாம் சினிமா தான்.. ஆனா ஒரு காலத்துல, பள்ளிகூடம் போறப்ப, கபடின்னா கார்த்தி தான் ஞாபகம் வரும் எல்லோருக்கும்..அப்படி பாக்காதீங்க..சாட்சாத் நானே தான்.. அந்த அளவு கபடின்னா உயிர் எனக்கு.. வேலை தேடி சென்னை வந்த பிறகு, எல்லாம் கனவா போச்சு..
ஸ்கூல்ல படிக்கிறப்போ(?) எப்போ பாத்தாலும் கபடி தான்.. பாடிப் போன, நாந்தான் பிடிப்பேன் பந்தயம் கட்டி என்னை பிடிக்காம தோத்தவங்க பல பேர்.. நான் பாடிப் போனாலே எதிர் டீமுல எல்லோரும் ஒரே பக்கமா ஒதுங்கிடுவங்க.. நான் போய் செலக்ட் பண்ணி நாலு பேரை தொட்ட காலமெல்லாம் உண்டு. அதுவும் கூட படிக்கிற பொண்ணுக பாக்குதுன்னா அன்னிக்கு ஆட்டம் கொஞ்சம் சூடாவே இருக்கும்.
சில சமயம் பிடிக்கிறேன்னு சொல்லி சில பேர் என்னோட சட்டை பட்டனை எல்லாம் பிச்செறிஞ்ச நேரமெல்லாம் உண்டு. அதுக்கு வீட்ல வந்து ஒரு மணி நேரம் திட்டு வங்கினத அவ்வளு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன..
ஒவ்வொரு வருசமும் ஊர்ல நடக்குற பொங்கல் விழால, எங்க டீம் தான் ஜெயிப்போம்.. காணும் பொங்கல் அன்னிக்கு முழுசும் போட்டியாத்தான் நடக்கும்.. சின்ன பசங்களுக்கு முருக்கு திங்குற போட்டி, பலூன் உடைக்கிற போட்டி, பொண்ணுகளுக்கு ஸ்பூன்ல எலுமிச்சை பழம் விழாம ஒடுறது, வயசானவங்களுக்கு மெதுவா நடக்குறது, ஆண்களுக்கு மெதுவா சைக்கிள் ஓட்றது, கண்ணை கட்டி மேல இருக்குற பானையை உடைகிறதுன்னு ஏகப்பட்ட போட்டி நடந்தாலும் கபடி தான் ஹீரோ. சாயங்கால நேரம்.. சுத்தி ஊர் மொத்த சனமும் நிக்கும். சித்தப்பா மக்க, பெரியப்பா மக்கன்னு தம்பி தங்கைகளும், மாமன் புள்ள, அத்தை புள்ளன்னு முறைப் பொண்ணுகளும் கலர் கலரா நிப்பாங்க.. நல்ல சப்போர்ட் இருக்கும். இப்படி நடந்த ஒரு வருசத்துல தான் என் பங்காளி ஒருத்தன் லவ் கல்யாணம் செஞ்சான்னா பாத்துகோங்களேன்.
ஆனா எல்லாம் நான் சென்னை வந்த பிறகு கனவாய் போயிடுச்சு.. உதயம் தியேட்டருல கில்லி பாத்தப்போ.. ரொம்ப அனுபவிச்சு பாத்தேன்.. அந்த படத்துல வந்த நிறைய விஷயங்கள் வாழ்க்கைல நடந்தது..ஒன்னே ஒன்னைத் தவிர..
அது, அப்படி போடுன்னு ஆட்டம் போட த்ரிஷா தான் கிடைக்கல...