Monday, September 18, 2006

திருவிழான்னு வந்தா..

எங்க ஊர்ல அடிக்கடி திருவிழா நடக்கும்.. சித்திரையில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவும் ஆடியில் சந்தியாகப்பர் திருவிழாவும் நடக்கும்.. இது தவிர அப்பப்போ ஏழு எட்டு குட்டி திருவிழாக்களும் உண்டு..

என் ஊர்ல கிறித்தவர்கள் 65% சதவீதமும், இந்துக்கள் 35% உள்ளனர். ஆடியில் நடக்குற சந்தியாகப்பர் திருவிழா தான் பெரிய திருவிழ.. கிட்டதட்ட ஒரு பதிமூன்று சப்பரங்கள் (தேர்) உலா வரும்.. எல்லாமே சிரீயல் செட்டிங்ஸ் போட்டது.. இரவுல அந்த இடமே ஜெகஜோதியா இருக்கும்.. நான் இங்கே கிளம்பி வருவதற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை தான் இந்த திருவிழா நடந்தது..

ஊருக்கு மேக்கால தான் சர்ச் இருக்கு.. அதுக்கு முன்னாடி இருக்க பெரிய இடத்துல தான் அந்த சப்பரங்களை நிறுத்திருப்பாங்க.. அப்படி எல்லா சப்பரங்களை ஒரே இடத்துல பாக்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வருவாங்க.. நானும் என் நண்பர்களும் அந்த சர்ச் வாசலிலேயே நின்னுக்குவோம்.. அப்பத்தான், உள்ள போறவங்களையும் பாக்க முடியும் வெளியே வர்றவங்களையும் பாக்க முடியும்.. எல்லாத்தையும் கவர் பண்ணமுடியும்.. எங்க ஊரை சேர்ந்தவங்க ரொம்ப பேர் சிறுமலையிலும் அதன் அடிவாரத்துல இருக்க தோட்டங்களிலும் இருப்பதால், இந்த மாதிரி தேர் திருவிழான்னா தான் சில பேரை பாக்கவே முடியும்..

கலர்கலராய் அழகழகான பலூன்கள், பொம்மை கார்கள், குட்டி ஏரோபிளேன்னு விளையாட்டு சாமான்கள் ஒரு புறம், சின்ன சைஸ் ராட்டினங்கள் ஒரு புறம், பிதாமகன்ல சூர்யா குலுக்குற டப்பா சூதாட்டம் ஒரு புறம்னு அங்க இருக்கிற ஒவ்வொருவர் முகத்துலயும் சந்தோசம் இருக்கும்.. ஒரு பக்கம் சாக்கரின் பவுடருல கலந்த ஜூஸ் விப்பாங்க.. வளையல் கடை.. தோடு, டிசைன் டிசைன ரப்பர் பேண்டு கடை, நடிகர் நடிகைகள் போஸ்டர் கடைன்னு ஏகப்பட்ட கடைகள் போட்டு வியாபாரம் வெகு ஜோரா நடக்கும்..அன்னிக்கு ஒரு நாள் விடிய விடிய எங்க கடையும் இருக்கும்.. ஒதுங்க முடியாத கூட்டமும் இருக்கும்.. பான்பராக்கும், பீடி சிகரட்டும் அன்னிக்கு விக்கிற மாதிரி என்னிக்கும் விக்காது..

ஒரு எட்டுமணி ஆகுற நேரத்துல, ஒரு கூட்டம் வரும் பாருங்க அது தான் ஹைலைட்டே.. வெள்ளைகலர் பேண்ட், சட்டை, சிவப்பு கலர் தொப்பி, ஒரு கூலிங்கிளாஸ், கல்ல வெள்ளைகலர்ல ஷூ.. கழுத்துல ஒரு மப்ளர்..மொகத்துல ஒரு ஒண்ணரை இஞ்ச்சுக்கு பவுடர்..இந்த கெட்டப்புல ஒரு எழு எட்டு பேர் வருவாங்க.. பாக்கவே சிரிப்பா இருக்கும்.. (இவங்களை பாக்கவே சிரிப்பா இருந்தாலும், இவங்க தோட்டத்துலயே வாழ்க்கையை போக்குறதால..இந்த மாதிரி திருவிழாவுக்கு தான் புது டிரஸ் எடுப்பாங்க.. அப்படி எடுக்கிறப்போ சினிமாவுல என்னன்ன ஹீரோ போட்டு வர்றானோ அதெல்லாம் ஒரே நேரத்துல இவங்க வாங்கிடுவாங்க.. மத்த நேரமெல்லம் இவங்களுக்கு ஒரு டவுசர் தான் டிரஸே)

நாமளும் எப்பவாவது ஊருக்கு போரதால நெரைய பேருக்கு எனக்கு அடையாளம் தெரியாது.. ஆனா அப்பா கடை வச்சு இருக்கிறதால் முக்காவாசி பேருக்கு நம்மளைத் தெரியும்..

தேவதைகள்..தாவணி அணிந்த பட்டாம்பூச்சிகள், புது உடைல, சில் சில்லுன்னு கொலுசு சத்தம் கேக்க கூட்டமா அவங்க சிரிச்சு பேசிகிட்டு போறதை பாக்கவே இந்த ஜென்மம் எடுத்த மாதிரி இருக்கும்..சும்மா வாசம் வீசுற பூக்களை தலைல அவங்க வச்சுட்டு போற அழகே அழகு தான்.. அவங்க தலைல சொருகிட்டு போறது அந்த பூக்களையா இல்லை எங்களோட மனசையுமான்னு அந்த ரெண்டுங்கெட்டான் வயசுல தெரியாது.. ஏதாவது ஒரு பொண்ணு நல்லா இருந்தாலே போதும்.. அந்த பொண்ணு போற வழிலல எல்லாம் போய் நிப்போம், அந்த பொண்ணு எங்களை பாக்குற மாதிரி.. அதுகளும் என்னடா இவிங்க நம்ம பின்னாடியே சுத்துராங்கன்னு நினச்சுட்டு மனசுல சிரிஅச்சு, எங்களை பாத்து லைட்ட உதட்ல சிரிக்கும்.. அது கண்ணு ரெண்டும் படபடன்னு அடிக்கும்.. இது போதாது எங்களுக்கு.. இப்ப யாரை பாத்து அந்த பொண்ணு சிரிச்சதுன்னு ஒரு பெரிய சண்டையே வரும்.. இந்த பக்கம் எல்லோரும் அடிச்சுகிட்டு இருக்க, ஒருத்தன் மட்டும் நைசா கூட்டதை விட்டு நழுவி, அந்த பொண்ணுக்கு பக்கத்துல போய்டுவான்.. பெரும்பாலும் இந்தமாதிரி கம்பியை நீட்டிட்டு போறது நானாத் தான் இருக்கும்..

ஒரு தடவை அப்படி போய் நின்னேன்.. உடனே அவங்க அம்மா திரும்பி பாத்தது.. அந்த பொண்ணும் பாத்தது.. அதுக்கு பிறகு அந்தம்மா பேசின வார்த்தைகளை கேட்டு நான் மயங்கி விழாத குறை தான்

நீ கடைக்கார முத்துராசு மவன் தானே.. எப்படிப்பா இருக்க.. ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன்..

(ஒரே ஊர் என்பதால, கிறித்தவர்களாய் இருந்தாலும், பொண்ணு எடுக்கிறது, கொடுக்கிறது எல்லாம் நடக்கும்.. அப்படி எப்படியோ அந்த பொண்ணுக்கு நான் அண்ணன் ஆகிட்டேன்.. அதுக்கு பிறகு, கூட்டத்துல இருந்து நான் தனியா நழுவுறதே இல்லை)

Sunday, September 17, 2006

ஒரு நடிகன் மாதிரி...

எனது நியுயார்க் நகர சுற்றுலா புகைபடங்களை காண, இங்கே உங்கள் எலியை வைத்து தட்டுங்கள்..

இந்த சனிக்கிழமை நான் ஒஹாயோ மாநிலத்தில், கனடா எல்லையை ஒட்டி, எரே (Erie) ஏரியின் நடுவில் கூட்டமாய் இருக்கின்ற புட்-இன்-பே (Put-In-Bay) எனும் தீவுக்கு சென்றேன். விரைவில் அதன் புகைப்படங்கள்.. கீழே சில சாம்பிள்ஸ்...

ஒரு நடிகன் மாதிரி போட்டோ எடுதுக்கணும்கிற ஆசை நிறைய பேரின் மனசுல இருக்கும்.. அப்படி நினைத்து நான் எடுத்துக்கொண்ட சில போட்டோக்கள்..

















எனது ஊட்டி சுற்றுலா போட்டோ சாம்பிள்ஸ் இங்கே

Friday, September 15, 2006

ஈயடிச்சான் காப்பி..

சில்லுன்னு ஒரு காதல் படத்துக்கு கொடுத்த விளம்பரம் அளவுக்கு படம் நல்லா இல்ல.. படத்துக்கு விமரிசனம் எழுதுறேன் பேர்வழின்னு மழைதுளி சுபா கிழிச்சு காயப் போட்டிருக்கார்.

சமீபத்துல ஒரு போட்டோவை வலைல பாத்தேன்.. இதை ஏற்கனவே எங்கயோ பாத்திருக்கோமேன்னு ஒரே குடச்சல் மண்டைகுள்ள.. தலையே வெடிக்கிற அளவுக்கு ஒரே யோசனை... ரெண்டு நாள் கழிச்சு சில்லுன்னு ஒரு காதல் பட போட்டோக்களை பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ என் கேள்விக்கு விடை கிடச்சது..




ஈயடிச்சான் காப்பி.. கேள்விபட்டு இருக்கேன்,, ஆனா இந்த அளவுக்கு அப்படியே காப்பி அடிக்க முடியுமன்ன்னு தெரில.. சில்லுன்னு ஒரு காதல் படத்துக்காக எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே வந்த ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட காப்பி.. குமுதம் இதழில் சொல்ற மாதிரி இந்த இரண்டு படத்துக்கிடையே ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது போல..

அ..ஆ..நான் ஒரு வித்தியாசம் கண்டுபிடிசுட்டேன்னு சொல்லி.. அந்த போட்டோ கறுப்பு வெள்ளை..இது கலருன்னு.. சொல்லி என் வயத்தெரிச்சலை கிளப்பாதீங்க..

சும்மா கண்டுபிடிச்சு பாக்கலாமேன்னு பாத்ததுல, சில வித்தியாசங்கள்..

1. சூர்யா இடது கையை வாயில் வைத்திருக்கிறார்
2. ஜோ லிப்ஸ்டிக்கை கீழுதட்டில் உபயோகப்படுத்துகிறார்
3. ஜோ தனது கால்களை ஒரு பக்கமாய் வைத்திருக்கிறார்
4. சூர்யா இடது பக்கம் தலையை சாய்த்திருக்கிறார்
5. ஜோ தலையை லேசா மேல தூக்கி வைத்திருக்கிறார்

இவ்ளோ தான், என்னால முடிஞ்சது.. உங்களுக்கு ஏதும் புதுச தெரியுதா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்

Thursday, September 14, 2006

வேட்டையாடி விளையாடி...

ஒவ்வொரு வருசமும் எப்படா கால்பரீச்சை, அரைப்பரீச்சை, முழு பரீச்சை லீவு வரும்னு தவமா தவங்கிடப்பேன்.. அந்த மாதிரி லீவு நாள்ல சிறுமலை அடிவாரத்துல இருக்கிற என் அண்ணன் தோட்டதுல போய் ஆட்டம் போட. எங்க அண்ணன் தோட்டம் கிட்டதட்ட சென்னை சேப்பாக்கம் கிரிகெட்டு கிரவுண்டை விட கிட்ட தட்ட பத்து மடங்கு பெருசு..பெரும்பாலும் பாதி தோட்டத்துக்கு திராட்சை தான் போடுவாங்க.. கொஞ்சம் செவ்வந்தி பூவும், வாழையும் கூட போடுவாங்க..

அந்த சுகமான காத்து வேற எங்கேயும் கிடைக்காது.. எல்லாமே தோட்டதுக்குள்ளயே இருக்கும்.. பசிச்சா வாழத் தோட்டத்துல புகுந்து ஒரு சீப்பு பழத்தை காலி பண்ண வேண்டியது தான். தண்ணி தாகமாய் இருந்த என் அண்ணன் தோட்டதுக்குள்ள இருக்கிறவரை தண்ணி குடிச்சதில்லை.. நாலஞ்சு இளநீர் தான்.. தோட்டதுக்கு தண்ணி பாய்ச்சுறதுக்கு ஒரு பெரிய தொட்டி ஒண்ணு கட்டி இருப்பாங்க. கிட்டதட்ட 12 இஞ்ச் அகலமும் 10 இஞ்ச் நீளமும் இருக்கும்.. குளிக்கணும்னு போயிட்டா கிட்டதட்ட ஒரு மூணு மணிநேரம் உள்ளார இறங்கினா வெளியில் வர்றதே கிடையாது. எங்க பாட்டி கூட, எரும மாடு மாதிரி தண்ணிகுள்ளாறயே பொழுதுக்கும் கிடைகிறாய்ங்க பாரு..ன்னு அந்த பக்கம் கிராஸ் பண்றப்பவெல்லாம் திட்டும். அது தூரத்துல வர்றதை பாத்தாலே நாங்க தண்ணிகுள்ள போய் மறஞ்சுக்குவோம்.. பாட்டியோ விவகாரமானது. உள்ள மறஞ்சிருக்கோம்னு தெரிஞ்சாலே போதும். ஒரு குச்சியை எடுத்துகிட்டு அடிக்கும்..

அப்படி குளிச்ச பின்னாடி, திராச்சை தோட்டதுக்கு காவலுக்கு போய்டுவோம். திராச்சை தோட்டதுக்கு நடுவுல பரண் ஒண்ணு இருக்கும். அதுல ஆரம்பிச்சு திராச்சை தோட்டதோட எல்லா பக்கமும் கம்பி போகும். கம்பிக்கு இடைல, ஒரு தகர டப்பா கட்டி அதுக்குள்ள கொஞ்சம் கல்லை போட்டு தொங்கவிட்டு இருப்போம். காக்கா மாதிரி எதும் பறவைகள் திராச்சையை கொத்த வந்தா உடனே அந்த பக்கம் போகும் கம்பியை பிடிச்சு ஆட்டுவோம். உடனே பயங்கரமா சத்தம் வரும். எல்லாப் பறவையும் ஓடிடும். இது தான் நம்மளோட டூட்டி அங்கே. வள்ளிக் கதிரை காவல் இருக்கிற மாதிரி நாங்க திராச்சையை காவல் இருப்போம்.

ஆனா அப்போ மதியான சாப்பாடு வருமே அது தன் ஹைலைட்டு.. ஒரு மண்சட்டியில எருமை தயிர் விட்ட கெட்டி தயிர் சாதம்.. சும்மா கொழ கொழன்னு.. இன்னொரு சின்ன பாத்திரத்துல கும்முன்னு வாசனை வர்ற, நல்ல காரம் போட்ட நெய்க் கருவாடு.. சும்மா ஒரு கட்டு கட்டுவேன்.. அதுவும் மூணு மணி நேரம் குளிச்சதுக்கே கொலைப் பசி இருக்கும். இந்த காம்பினேசனுல, சாப்பிட்ட, சரியான டேஸ்டா இருக்கும். இன்னிக்கு வரைக்கும் அந்த காம்பினேசனை அடிசுக்க வேற எதுவுமே இல்லை.. இதை எழுதறப்ப கூட, மனசு அதுக்காக ஏங்குது.. சே.. என்ன ஒரு ரம்மியமான வாழ்க்கை அது..

என் நண்பர்கள் யாராவது வந்தாலே நான் அவங்களை அண்ணன் தோட்டதுக்கு கூட்டிட்டு போய்டுவேன். அப்படித்தான் என் கல்லூரி நண்பர்கள் கிரிஷ்ணகுமாரும், பார்த்தாவும் வந்து இருந்தாங்க.. நாங்க என் அண்ணன் கூட வேட்டைக்கு கிளம்பினோம். மதியான நேரம். ஒரு பறவையை கூட காணோம். என் அண்ணன் என்கிட்ட துப்பாக்கியை கொடுத்துட்டு ஏதாவது அடிச்சுட்டு வாங்கடான்னுட்டு போய்ட்டாரு. கொஞ்ச நேரத்துக்கு பிறகு, ஒரு மரத்துல நல்ல உயரத்துல ஒரு பறவை வந்து உட்காந்துச்சு. எங்கலுக்கு ஒரே மகிழ்ச்சி.. வேட்டைதுப்பாக்கில சாதாரணது மாதிரி ஒரு குண்டு கிடையது.. சின்ன சின்னதா நிறைய போடுவோம். அதனால குத்துமதிப்பா குறி பாத்து சுட்டா போதும்.. குறி பாத்து சுட்டோம்.. அதிசயம்.. அந்த பறவையும் அடிபட்டு கீழ விழுந்துடுச்சு.. ஐயோ.. எங்க எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம்.. ஒரே சத்தம் தான்.. சந்தோசத்துல மேல கீழன்னு குதிச்சோம்.வேகமா ஒடிப் போய் அந்த பறவையை தூக்கிகிட்டு என் அண்ணன் கிட்ட ஓடினோம். அவருகிட்ட காட்டினோம்.. அவர் கேட்ட கேள்வில எங்க முகத்துல ஈயாடல..என்ன கேட்டருனா..என்னடா இது ஆந்தையை சுட்டு கொண்டு வந்துறிகீங்க.. அதுக்கு பகல்ல கண்ணு தெரியாததாலா.. இதை கேட்டவுடன், சந்தோசமெல்லாம் போய், ஆட்டமெல்லாம் நின்று, டமால் டமால்னு எங்க இதயம் உள்ளுகுள்ள வெடிச்ச சத்தம் கேட்டது..

Tuesday, September 12, 2006

சைக்கிள் பயணங்கள்

அமெரிக்கா வந்த உங்களுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுதோ இல்லியோ கார் ஓட்டத்தெரிஞ்சிருக்கணும்..கட்டாயச் சட்டம் ஏதும் இல்லிங்க.. ஆனா தெரியலைன்னா ரொம்பக் கஷ்டம்.. நானும் இனிமேல் தான் கார் ஓட்டக் கத்துக்கணும்.. ஒரு கடைக்கு போறதுக்காக நீங்க தினமும் பாதயாத்திரை போக முடியுமா என்ன..

கார் ஓட்டக் கத்துக்கணும்ன உடனே எனக்கு நான் சின்ன வயசுல சைக்கிள் ஓட்டக் கத்துகிட்டது தான் ஞாபகத்துக்கு வருது.. கத்துகிறதுக்குன்னே ஒரு சின்ன சைஸ் சைக்கிள் ஒன்னு, சைக்கிள் கடையில நிக்கும்.. அந்த சைக்கிளுக்கு சனி ஞாயிறு ஆனா ஒரே கிராக்கி.. நான் கத்துகிட்ட சமயத்துல ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் வாடகை. பெரும்பாலும் ஊருக்கு வெளிய இருக்கிற மண் ரோடோ.. தார் ரோடோ தான் பழகுற இடம்.. பழகுறதுனா சும்மா இல்ல.. நல்லா ஓட்டத் தெரிஞ்ச, நமக்கு ஒத்து வர்ற ஒரு பையனை பிடிக்கணும்.. அவனுக்கு ஏதாவது மிட்டாயோ, குச்சிக் கிழங்கோ வாங்கித் தரணும்.. சில நாள், எங்க ஊர் கொட்டாயில நல்ல படம் வந்தா கூட்டிக்கூட போகணும்.. சில சமயம், அந்த பசங்க தம் அடிப்பாங்கன்னா அது கூட வாங்கித் தரணும். ஆனா, எனக்கு அந்த பிரச்சினை இல்ல.. எதுனாலும் என் கடையிலயே எடுத்துட்டு வந்துருவேன்.. பெரும்பாலும், எனக்கு என் மாமா பையன் தான் கூட வருவான்..

இப்போ எது பழகுறதும் பெருசு இல்ல.. அந்த சின்ன வயசுல எல்லாமே பெரிய விசயம்.. ஆன ஒரு தடவை கத்துகிட்டோம்..அப்புறம் எப்பவுமே அது மறக்காது.. சைக்கிள பேலன்ஸ் பண்றதே, ஒரு பெரிய வித்தை.. (ஒலட்டாம ஒட்டுறதுன்னு சொல்வாங்க.. இது வட்டார வார்த்தைன்னு நினைக்கிறேன்)ஹான்ட்பாரை தெக்கே திருப்பினா அது வடக்கால ஓடும்.. கிழக்க திருப்பினா மேக்கால ஓடும்.. சில சமயம், சொல்லித் தர வந்தவன் கடுப்பாகி, கீழ தள்ளி விட்டு போய்டுவான்.. போடா நீயும் நீ சைக்கிள் பழகுற விதமும், அப்படின்னு

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்க ஊர்ல சந்தை நடக்கும்.. மளிகை சாமான், பாத்திரம் பண்டம், மண்பானை, கோழி, ஆடுன்னு ஏகப்பட்ட ஐட்டங்கள் விப்பாங்க.. எங்க ஊர்ல கிறித்துவர்கள் அதிகம்னால, அவங்க சர்சுக்கு ஞாயிறு வருவதனால, அன்னிக்கு நல்ல கூட்டம் இருக்கும்.. ஊருக்கு வெளில சைக்கிள் நல்லா கத்துகிட்டா, அடுத்து ஊருக்குள்ள சுத்துறது(கத்துகிறது) தான் அடுத்த படிப்பு.. அப்படிஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள்ள நான் சைக்கிள் ஓட்டி கத்துக்கிட்டு இருந்தேன்.. நல்லாத்தான் ஓட்டிகிட்டு இருந்தேன்.. மண்பானையெல்லாம் வித்துகிட்டு இருந்த இடத்துக்கு பக்கத்துல வந்தப்போ, என்ன ஆச்சோ தெரில.. நேரா அப்படியே பானைகளுக்குள்ள சைக்கிள விட்டுட்டேன்.. சடசடன்னு ஒரு மூணு நாலு பானை உடஞ்சிருச்சு.. பானைக்கார அம்மாவோ என்ன என்னவோ சொல்லி திட்டுது.. நான் காதை பொத்தாத குறை தான்..அப்புறம் உடஞ்ச பானையை விட அதிக வெல கையில கொடுத்து அந்தம்மாவை சமாதானப் படுத்தினேன்.

அதுக்கப்புறம், நாலு பேரை ஏத்திக்கிட்டு பத்து பதினஞ்சு கிலோமீட்டர்னு காடு கழனின்னு ஊர் சுத்தி இருந்தாலும், பானை மேல மொத மொதலா ஏத்தின அந்த நாளை மறக்கவே முடியாது

Monday, September 11, 2006

மச்சான் பேரு அம்பி

எனக்கு அசின் காதலியானதால, அசினுக்கு அம்பி சகோதரன் ஆனதால, அம்பி எனக்கு மச்சான்.. அம்பிக்கு அவங்க அக்கா அசின் மாதிரியே என் மேல ரொம்ப பாசம்.. பின்ன.. நான் எப்போ மச்சான்னு கூப்பிட்டாலும், இல்ல இல்ல.. நீங்க என் குடும்பத்துல ஒரு ஆள் அப்படின்னு உடன்பிறப்பே, தம்பியே அப்படின்னு கூப்பிடுறார்.. நீங்களே சொல்லுங்க அவர் அப்படி கூப்பிட்டாலும், நான் அப்படி கூப்பிட முடியுமா..


நான் இங்கே வந்துட்டதால, பாருங்க சூர்யா-ஜோதிகா கல்யாணத்துக்கு கூட என்றம்மணி தனியாத்தான் போனாங்க.. சூர்யா கூட கேட்டாராம்.. எங்க கார்த்தின்னு.. அப்படி சூர்யா கேட்டவுடனே கண்ணெல்லாம் கலங்கிடுச்சாம்.. போன் பண்ணி ஒரே அழுகை.. மனசுக்கு கஷ்டமாயிடுச்சு...

(சும்மா சும்மா எல்லா பதிவுலயும் வந்து உடன்பிறப்பு, தம்பின்னு அம்பி பின்னூட்டம் மூலமா புலம்புறத பாத்தா எனக்கே ரொம்ப கஷ்ட்டமாயிடுச்சு.. அது தான் ஒரு தனி பதிவு எழுதுனா என் மனசும் அமைதியாகும்... அம்பிக்கும் ஆறுதல் சொன்ன மாதிரி இருக்கும்ல. அது தான் இந்த பதிவு)


சூர்யா ஜோதிகா கல்யாணதிற்காக வந்த தல அஜித்-ஷாலினி ஜோடியை பாத்தா இப்போதான் கல்யணம் ஆன மாதிரி இளமையா இருக்காங்க.. தல பாத்து.. கண்ணு பட போகுது..


ரெண்டு ஜோடியையும் பாருங்க.. ச்சும்மா.. கண்ணுல ஒத்திக்கலாம் போங்க
சூர்யா ஜோதிகா இருவரும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்..

Saturday, September 09, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 7

நல்ல தூக்கத்தில் இருந்தேன்.. ஜன்னல் டொக் டொக்ன்னு தட்டுற சத்தம் கேட்டது.. சலிப்புடன் எழுந்து பாத்த நம்ம சிட்டுக்குருவி, முறைத்து பார்த்தவாறு நின்று இருந்தது. ஜன்னலை திறந்து அதை உள்ளே அழைத்தேன்.. எவ்வளவு அரும்பாடுபட்டு உனக்கு சினிமா செய்தி கொண்டுவந்தா நீ எப்படி தூங்குறியே ஒரே கத்தல்.. அது கோபத்தைக் குறைக்க கொஞ்சம் குறைக்க, தர்ப்பூசணி போட்டேன்.. இப்போ குளிர்ச்சி அடைஞ்சு, சினிமா நியுசா கொட்ட ஆரம்பிச்சது..

தொண்டையை கணைத்துகொண்டே.. நம்ம ஜேஜே பூஜா அவங்க கடவாப்பல்லு துறுத்துகிட்டே இருந்ததால அதை ஆபரேஷன் மூலமா எடுத்துட்டாங்க..ன்னு ஒரு அதிர்ச்சியான செய்தியோட ஆரம்பிச்சது.. பூஜா சிரிச்சாலே ஒரு அழகு தான் இல்லியானு நம்மளப் பாத்து சிட்டுக்குருவி நக்கல வேற பண்ணுது..

தமிழ் கத்துக்கொடுக்க நீ போறியான்னு குருவி கேட்டது.. யாருக்குன்னு கேட்டேன்.. வேற யாருக்கு.. இப்போதைக்கு தமிழ் ரசிகர்களோட கனவு 'கன்னி'வெடி நமீதாவுக்கு தான்.. அப்படின்னது.. நானும் ஹி..ஹின்னு தலையாட்டினேன்.. தனக்கு தமிழ் கத்துகொடுத்தவர் இறந்துட்டதால நமீதா புது தமிழ் வாத்தியார் தேடுறங்களாம்.. குருவி கையிலேயே என்னோட அப்பிளிகேஷனை கொடுத்தேன்.. அ..ஆன்னு நமீதாவுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமே அது தான்..

நம்ம தல அஜித், போன வாரம் ஏவிஎம் நிறுவனம் கொண்டாடிய திருப்பதியின் வெற்றி விழாவுக்கு, அழகாய், புதுசாய், புத்துணர்ச்சியாய், தனது மனைவி ஷாலினியுடன் வந்து எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தார். (குருவி:ச்ச்சோ சுவீட் தல..)



அஜித், தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜிக்காக நடிக்க இருக்கும் படத்திற்கு கிரீடம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் தொடங்கி அடுத்த வருடம் மேய் 1, அஜித் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். ஜோடியாக ஷ்ரேயா அல்லது நயன்தார (குருவி: சிம்பு ஒகே சொல்லியச்சா.. என்ன நக்கல் பாருங்க இந்த குருவிக்கு) நடிக்கலாம். ஒளிப்பதிவை திரு கவனிக்க செல்வா கலையை கைப்பற்ற, ஆன்டனி எடிட்டிங் செய்கிறார். யுவன் இசை பொறுப்பை ஏற்றிருக்கிறார்.



லொள்ளு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஜொள்ளூ இயக்குனர் SJ சூர்யாவை கதாநாயகனாய் போட்டு ஒரு சொந்த படம் எடுக்கிறார். படத்தின் பெயர் வியாபாரி. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சென்னை சிட்டியை கலக்கி கொண்டிருப்பதாக கேள்வி. இந்த படத்தில் SJ சூர்யாவுக்கு ஜோடியாக நமீதா, மாளவிகா மற்றும் பக்கத்து மாநில நாயகி ஒருத்தரும் நடிக்கிறார்கள். ஒரு நல்ல போஸ்டர் மட்டும் இங்கே.. மற்ற ஜொள்ளு போஸ்டர்களுக்கு இங்கே செல்லவும். தாய்குலங்களும் இங்கே வருவதால் அது மாதிரி போஸ்டர் எப்போதுமே இங்கே தவிர்க்கப்படுகிறது. சே..என்னே சிட்டுகுருவியின் நல்ல எண்ணம்.

அடுத்த செய்தி என்னன்னா மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன்னு வித்தியாசமான தலைப்பை கொண்ட படத்தின் தலைப்பு எம் மகன் என்று மாற்றப்பட்டது. எல்லாம் வழக்கம் போல வரி விலக்கு காரணமாய் தான். எம்டன் என்பது இரண்டாம் உலகப் போரின் போது சென்னைக்கு அருகில் மூழ்கிப்போன ஒரு நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்பதால் வரி விலக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. படம் நன்றாக இருப்பதாய் கேள்வி.

ரொம்ப தூரம் பறந்து இந்த மாதிரி நியுஸ் எல்லாம் புடிக்கிறதால இறக்கை எல்லாம் வலிக்கிறது என்று சொல்லி என்னிடம் இருந்து ஐயோடெக்ஸ் வாங்கி கொண்டு சிட்டுக்குருவி பறந்தது.

Thursday, September 07, 2006

ஒரு பம்பரம் தான் விடப்போறேன்

நீ வேணும்டா செல்லம் படத்துல இருந்து...
எப்படியும் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட போறேன்..
இப்பவே ஏத்துகிட்ட முழுசா என்னைத் தாறேன்..

சாணக்யா படத்துல இருந்து...
தருவியா தரமாட்டியா
தரலைன்னா உன் பேச்சுக் கா கா
ஒரு பம்பரம் தான் விடப்போறேன்
உன் பாவாடை நாடாவ தருவியா

கேடி படத்துல இருந்து...
உன்ன பெத்தா ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வயபொளக்கும் ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்


வல்லவன் படத்துல இருந்து
அம்மாடி ஆத்தாடி
உன்னை எனக்கு தர்றியாடி

இப்படி பாடல்கள் எழுதும் பாடலாசிரியர்களை என்ன செய்வது.. இந்த வரிகளுக்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவாக இருக்கும்.. இப்போதைக்கு இவைகள் மகாப் பெரிய தப்புகள் இல்லை என்றாலும், இதுவே தொடர்ந்தால் இதையும் தாண்டி இவர்கள் படைப்புக்கள் போகாமல் இருக்குமா..

ஒரு விஷயதிற்காக இவர்களை பாராட்டவேண்டும்.. இந்த பாடல்களில் ஆங்கில வார்த்தைகளை தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்.. முழுவதும் சுத்த தமிழ் வார்த்தைகள்..

Wednesday, September 06, 2006

தாவணி போட்ட தீபாவளி

தழைய தழைய பாவாடை தாவணி, கூந்தலில் ஒற்றை ரோஜாவோ, இல்லை ஒரு முழ மல்லிகை பூவோ, இரு வில்லெனும் புருவத்தை பூட்டி வைத்திருக்கும் சாந்து பொட்டு, காதோரம் லோலாக்கு, எந்தப் பவுடரும் போடாத முகம், பாக்குற நம்மளை பவுடராக்கும் முகம், இது தமிழ் பெண்களின் அழகு.. எந்த உருவதிற்கும் சட்டென பொருந்திவிடும் உடை தாவணி.. இந்த தாவணிக்கு இருக்கும் அழகு சேலைக்கு கூட இல்லை.. எனக்கு ஆனந்தம் படத்துல, சிநேகா போட்டு வர்ற தாவணி காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.. (சிநேகாவையும் தான்)

ஆனா இந்த வாரம் நியுயார்க் போயிருந்தப்போ, தாவனி ந்போட்ட இந்திய பெண்கள் மட்டுமல்ல.. நாங்களும் அழகு தான் என்பது போல் இருந்தார்கள் நியுயார்க் பெண்கள். நான் போயிருந்த முதல் நாள், சனிக்கிழமை ஒரு மழை நாள்.. எல்லா வீதிகளிலும் நடந்தே சென்றோம்.. மழையில் நனைந்தே சென்றோம். அது உண்மையில் ஒரு இனிய அனுபவம்.. நிறைய விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. கலர் கலராய் ஒரு கையில் குடை.. லெதர் ஷூ.. முழுக்கை ஜெர்கின், முழங்கால் வரை.. தோளில் விழுந்து புரளும் அலை அலையான செந்நிற கூந்தல்.. காதில் சின்னதாய் ஒரு தோடு (ஸ்டட்). கண்களில் பழைய MGR காலத்து நாயகிகளின் பெரிய அளவு கண்ணாடி..ஒரு நளின நடை.. இதுவரை கிணற்றுத்தவளையாய் இருந்துவிட்டேனோ என்று மனம் வருந்தும் அளவு அழகழகாய் பெண்கள்.. மழையில் நனையும் ரோஜாக்கள் போல..

ஒரு உண்மை மட்டும் புரிந்தது.. இந்தியா என்றாலும், அமெரிக்கா என்றாலும், ரோஜா ரோஜா தான்.. அழகு அழகு தான்..

நான் சென்ற இடமெல்லாம், எழுபது சதவீதம் இந்திய மக்களே.. தங்கள் அம்மா அப்பாவை இங்கே கூடிவந்தவர்கள் அழைத்து சென்று காண்பிக்க இது மாதிரி மூன்று நாட்கள் போதுமானவை.. ஒரு இடத்தில் அங்கிருந்த காவலாளி கேட்டே விட்டார்.. என்ன இன்று இந்திய மக்களின் கூட்டம் இவ்வளவு என்று..அந்த அளவு நம்ம மக்கள் கூட்டம்..

ஒரு மரங்கள் உயர்ந்த காடுகளில் போகையில் எப்படி மரங்களை அண்ணந்து பார்த்து ஆச்சரியப்படுவோமோ அது மாதிரி, இங்கே கான்கிரீட் காடுகள்.. ஒவ்வொரு கட்டிடமும் அடுத்த ஒன்றுக்கு சளைக்காமல், உயர்மாய், விண்ணை துளைத்து இருக்கிறது.. எல்லா இடத்திலும் பணம் நன்றாகவே பாய்ந்திருக்கிறது.. முதன்முதலில் 2001-ல் சென்னை வந்த போது எனக்கு LIC யே மலைப்பை இருக்கும்.அண்ணா சாலையே சொர்க்கமாய் தெரியும்..
அதுவும் சுதந்திர தேவி சிலைக்கு படகில் போகும் வழியில் நியுயார்க்கை பார்த்தால் நமது கண்களெல்லாம் அளவை மீறி விரிய வேண்டி இருக்கும்... ஆனால் அங்கே வானத்தை தாங்கி கொண்டு உயரமாய் நின்ற உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. நினைத்து பார்த்ததை அந்த கட்டிடங்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது போட்டோவில் பார்த்த போது, என்னையும் மீறி நெஞ்சம் கலங்கியது.. ஒரு தீவிரவாத எண்ணத்தின் விளைவு எப்படி இருக்கும் என்று கண்முன்னே பார்த்தபோது, எதிர்கால உலகை நினைத்து அஞ்சாமல் இருக்க முடியவில்லை.

Tuesday, September 05, 2006

கள்ளச்சாராய கதைகள் 2


முதல் பாகம் கள்ளச்சாராய கதைகள் 1

என்கிட்ட லைசென்ஸும் இல்ல..வண்டிக்கு ஆர்சி புத்தகமும் இல்லை.. காட்டச்சொன்னாங்க.. எனக்கு வேற வழி இல்லாமா என்னுடைய கல்லூரி அடையாள அட்டையை காண்பித்தேன்.. இருவரும் ஒருவரை ஒருவரை பாத்துகிட்டாங்க.. என்னது, இந்த சாராய ஊருல இருந்து கிட்டு எம்சிஏ படிக்கிறியா.. பரவாயில்லியேன்னு சொல்லி அப்பா யாரு..வீடு எங்கே இருக்குன்னு கேட்டுட்டு என்னை விட்டுட்டாங்க..

எவ்வளவு நடந்தாலும், ஒவ்வொரு போலீஸுக்கும் தனி சம்பளம்.. ஸாரி..கிம்பளம் வேறு.. ஊரின் மத்தியில் இருக்கும் வீதியில் புல்லட்டில் சாரய முதலாளி வருகிறார்.. எதிர்புறம் சைக்கிளில் போலீஸ்காரர் வருகிறார்..சாராய முதலாளியை பாத்தவுடன் இவர் சைக்கிளிலிருந்து கீழ இறங்கி, அவரிடம் செல்கிறார். முதலாளியும் புல்லட்டை நிறுத்தி விட்டு, ஆனா அதிலிருந்து இறங்காமல் இருக்கிறார்.. அந்த போலீஸ்காரர் பவ்யமாய், சென்று ஏதோ சொல்ல, அவர் தனது சட்டைப்பையில், பணத்தை எடுத்து கொடுக்கிறார்.. போலீஸ்காரரும் வாங்கி கொண்டு சிரித்தபடியே சைக்கிளிலேறி செல்கிறார். இது எங்க ஊரில் அடிக்கடி நடக்கும் ஒரு சாதரண சம்பவம்..

என் அப்பா வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் அடங்கிய ஒரு ஸ்வீட் ஸ்டாலை நடத்தி வருகிறார்.. அந்த ஸ்வீட் ஸ்டால் தான் எங்கள் குடும்பத்தின் எல்லாவிதமான தேவைகளையும் தீர்த்து வைக்கிற அச்சயப் பாத்திரம்.. ஒரு முறை என் அம்மா கடையில் இருந்தார்..நான் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தேன்.. இரண்டு பேர் வந்து, இங்கே எங்க கஞ்சா கிடைக்கும் என்று கேட்டனர். நானும் அவர்களுக்கு வழி எல்லாம் சொன்னேன்..அவர்கள் போன பிறகு, என் அம்மா என்னை பயங்கரமா திட்டி தீர்த்துட்டாங்க.. வந்தவங்க போலிஸா இருந்தா இந்நேரம் உன்னையும் பிடிச்சுகிட்டு போயிருப்பாங்களேன்னு..அவங்களுக்கு ஒரே கவலை...

ஆனா இப்போ தமிழக அரசே மதுவிக்கிறதால கள்ளசாரயத்தை கடுமையா தடை பண்ணிட்டாங்க.. அப்படி யாராவது காய்ச்சுனா, கஞ்சா கேசுல போட்டுறதா மிரட்டல்.. கஞ்சா கேஸ் கொஞ்சம் மோசமானது.. இப்போ எல்லோரும் விவசாயம் பாக்குறங்க.. மில்லுக்கும் வேலைக்கு போறாங்க.. என்கிட்ட தமிழக அரசே மதி விக்கிறதை தப்பா பேசினா, எங்க ஊர் மாறுனதை தான் நான் கதையா அவங்களுக்கு சொல்லுவேன்.

எங்க ஊர் மதுரை திண்டுக்கல் ரோட்டுல, எட்டாவது கிலோமீட்டர்ல, ரோட்டுல இருந்து ஒண்ணரை கிலோமீட்டர் உள்ளே சிறுமலை அடிவாரத்துல இருக்கிற அ.வெள்ளோடு எனும் கிராமம்.

நியுயார்க் பதிவுகள் விரைவில்...