Friday, September 29, 2006

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

அண்ணா, உங்க வாழ்க்கைல நடந்த பெஸ்ட் என்னன்னா..பாசமுடன் கேட்டாள் தங்கை தீக்க்ஷன்யா.. கேட்டதோட நிக்காம, இது தான் என்னோட பெஸ்ட், உங்களோடத இதே மாதிரி வரிசை படுத்தி சொல்லுங்க அப்படின்னா. தங்கை பாசம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழனுக்கே உரியது.. அப்படி தங்கை சொல்லை மீறாம வரிசைப்படுத்தியது தான் கீழே என்னோட பெஸ்ட் எல்லாம்..

1.The best thing to do - சும்மா மழைல நனைஞ்சு கும்மாளம் போடுறது..
2.The best gift - நல்ல நண்பர்கள்
3.The best thing I've ever heard - நானிருக்கேன் கவலைப்படாதே, நண்பர்கள் என்னிடம் சொன்னது
4.The best thing I've said - நானிருக்கேன் கவலைப்படாதே, நான் நண்பர்களிடம் சொன்னது
5.The best thing that happened to me - அமெரிக்காவுக்கு என் ஊரே சேர்ந்து வழியனுப்பியது
6.The best person I've met - சோமநாதன், என் முதல் கம்பெனியில் எனக்கு GL ஆக இருந்தவர்
7.The best friend - என் தந்தை
8.The best moment - முதன்முதலாய் நான் விமானத்தில் ஏறியதும், எப்படி இருக்குமோ என்று பயந்துகொண்டே அங்கிருந்த பணிபெண்ணை பார்த்து சிரித்ததும், (வழிஞ்சதுன்னு யாரும் கமெண்ட் போட வேண்டாம்) அந்த பெண்ணும் திரும்ப சிரிச்சது
9.The best book - கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகங்கள் எல்லாம்
10.The best blog - நான் படிக்கிற எல்லாம் (உண்மையிலே, சமாளிக்க இல்ல)
11.The best place - என் ஊர் அ.வெள்ளோடும், அந்த சில்லுன்னு காற்று தரும் சிறுமலையும்
12.The best food - கெட்டித் தயிர் விட்டு வச்ச சாதமும், நெய் விட்டு வறுத்த கருவாடும் (நினைச்சாலே நாக்குல எச்சில் ஊறுதே)
13.The best song - ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒவ்வொரு பூக்களுமே
14.The best hangout - வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர், மூன்றாம் தெருல, நாங்க தங்கியிருந்த வீட்டின் மாடிப் பகுதி தான் (புது வசந்தம் படத்துல முரளி மற்றும் எல்லோரும் தங்கி இருக்க மாடி மாதிரி)
15.The best eatout - சென்னைக்கு வந்த புதுசுல, MLA ஹாஸ்டல் பக்கத்துல சாப்பிட்ட கையேந்தி பவன்கள்..
16.The best hobby - அரட்டை அடிக்கிறது, அதுவும் சினிமா பத்தின அரட்டைனா வாய்கிழிய பேசுறது
17.The best TV show ever - விடாது கருப்பு
18.The best manager - நம்ம கடவுள் தான்
19.The best musician - இளையராஜா
20.The best gang - நண்டு சிண்டுகளாய் நாலஞ்சு வாண்டு சேர்ந்து வீட்லயோ வெளிலயோ லீவுல கொட்டம் அடிக்கிறது.. அந்த கேங் தான் பக்கா கேங்
21.The best drink - இளநீர்.. அதுவும் குடிச்சா அஞ்சு ஆறு தான்
22.The best quote - "நான் மாறும் போது தானும் மாறி நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்."
23.The best woman - என் தாய்
24.The best kid - சுஷ்மிதா (என் (சித்தி பெண்)தங்கை அருணாவின் பெண்)
25.The best poem - பாரதியின் எல்லாம், கண்ணதாசனின் தத்துவ பாடல்கள், வாலியின் சுலப வார்த்தை விளையாட்டுகள்
26.The best dancer - சின்ன குழந்தைகள் தள்ளாடி நடப்பது
27.The best movie - ஆட்டோகிராப்
28.The best actor - ஏதாவது திருட்டுத்தனம் பண்ணிட்டு அதை மறைக்க, வீட்ல தில்லாலங்குடி வேலை காமிக்கிற எல்லோரும்
29.The best vehicle - போன வருஷம் வாங்கிய SPLENDOR பிளஸ்
30.The best scene in a movie - தவமாய் தவமிருந்து படத்துல, தன் அப்பா அம்மாவை கூட்டிகிட்டு சேரன் போற சுற்றுலா காட்சி

எழுதி முடிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது, என்னோட பெஸ்ட் எல்லாம்.. அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றதால, நிறைய விஷயங்களில் அந்த தாக்கம் தெரிஞ்சது...

இதே விஷயத்தை நிறைய பேரை எழுத வைக்கலாம்னு பாத்தா பிரியாவும், தீக்க்ஷன்யாவும் நிறைய பேரை இந்த வளையத்துக்குள் இழுத்துவிட்டாங்க.. அதனால..அதனால.. பிரியா, தீக்க்ஷன்யா, அம்பி, பரணி, ஷ்யாம், சசி, நம்ம தலைவி கீதா, வேதா, பொற்கொடி, தி ரா சா சார், இந்திய தேவதை (IndianAngel), எல்லோரும் நீங்க கண்டதிலயே மிகக் கொடுமையான கனவை எழுதுங்க, நான் கண்ட கனவுன்னு..

எல்லாத்தையும் ஒண்ணா கோத்துட்டு விட்டேன்.. கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கலாம்..

Thursday, September 28, 2006

என் கிராம ஊர்வலங்கள்

எனக்கு பழைய பாடல்கள்னா ரொம்ப பிடிக்கும். எனக்கு அந்த பாடல்களை கேட்கிற வழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் எங்கள் ஊர்ல மைக் செட் போடும் அன்பர்கள் தான். என் ஊர்ல எதுன்னாலும் மொதல செய்றது நாலு சவுண்டு குழாய்களும், ரெண்டு ஸ்பீக்கர் வைக்கிறதும் தான். வாழைமரம் கட்டுறது எல்லாம் அடுத்த விஷயம் தான்.

இந்த மாதிரி மைக் செட் போடுறவங்க ஒரு நாலஞ்சு குரூப் இருந்தாலும், அவங்க போடுற முறை எப்போதுமே ஒண்ணு தான். முதல்ல சாமி பாட்டு போட்டா, ஏதோ அந்த வீட்ல நல்ல விசயம்னு தெரியும். சாமி பாட்டும் கிறித்தவர் வீட்ல அவங்க பாடல்களும் (பெரும்பாலும் 'கேளுங்கள் தரப்படும்' பாடல் தான்), இந்துக்கள் வீட்ல விநாயகர் பாட்டும் தான். இதே மாதிரி பொண்ணை அழைச்சுகிட்டு வீட்டுக்கு வர்றப்போ, 'மணமகளே மருமகளே வா வா..நீ வலது காலை எடுத்துவைத்து வா வா'ன்னு "சாரதா" படத்துல இருந்து ஒரு பாட்டு. இதே அந்த வீட்ல யாராவது அண்ணன் இருந்தா 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே..சில புத்தி மதிகள் சொல்லுறேன்'னு..ஒரு பாட்டுன்னு டைமிங்கா போடுவாங்க.

பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சுட்டு போறதுன்னா என்னன்னா..இப்போ இந்துக்கள்னா விநாயகர் கோவிலிலும், கிறித்தவர்னா சர்சிலும் வைத்து தாலி கட்டுவாங்க. அங்க இருந்து மாப்பிள்ளை வீடு வரை ஊர்வலம் இருக்கும். அந்த ஊர்வலத்துல பொண்ணு மாப்பிள்ளை நடந்தும் வரலாம்.. காரிலும் வரலாம்.. கொஞ்ச நாள் முன்னாடி யானைல கூட வந்தாங்க..அது அவங்க அவங்க வசதியை பொறுத்தது.அப்படி ஊர்வலத்துல போறப்போ அந்த மணமக்கள் முன்னாடி டிரம் செட்டுகாரவங்க மேள தாளம் உண்டு. அவங்க சில சமயம் ஆடிகிட்டும் போவாங்க.. காசு இருந்து ஏதாவது கலர் பாட்டில் (உள்ளூர் குளிர்பானங்கள்) வாங்கிக் கொடுத்தா, அதை மேளம் அடிச்சுகிட்டே, வாயால கவ்வி, பாட்டிலை திறந்து குடிப்பாங்க..

இதுமட்டும் இல்ல.. பொண்ணு மாப்பிள்ளைக்கு தெரிஞ்சவங்களோ நண்பர்களோ அவங்களுக்கு குளிர்பானமும் வாங்கி கொடுப்பாங்க.. சில பேர் மேள தாளம் காரவங்க கிட்ட ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்த சொல்லுவாங்க.. அவங்களும் அந்த பணத்தை வாங்கிட்டு இதனால "ஊருக்கு சொல்றது என்னனா, அஞ்சா நெஞ்சன், கொடை வள்ளல், இந்த வெள்ளொட்டுக்கே ராசா, பொண்ணு மாப்பிள்ளையோட மாமா பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துராருப்பா".. டண்டணக்க டணக்கு அப்படின்னு ஒரு ஹைபீட் மேளத்தோட சொல்வாங்க..இந்த ஊர்வலத்தை ஊர் மக்கள் எல்லோரும் பார்ப்பாங்க..

மொத எடுத்தவுடனே 'வீடு வரை உறவு'ன்னு "பாதகாணிக்கை" படத்துல வர்ற சோக பாட்டு வந்தா, யாரோ ஒருத்தவங்க வீட்ல இறந்துட்டாங்கன்னு நினைச்சுக்க வேண்டியது தான். அந்த பாடல் முடிந்தவுடன், சாமி பாட்டு.. அதுக்கு பிறகு யாரு, எந்த வீட்டுல இருக்கிறவரு, யாரோட அப்பா, பிள்ளை ன்னு எல்லா விவரமும் சொல்லிடுவாங்க. அதுக்கு பிறகு பழைய படங்களில் இருந்து ஒரே சோக பாடல்கள் தான். இப்படி மைக் செட் போடுறதுல கூட ஒரு நேர்த்தியை, ஒழுங்கை கடைபிடிப்பாங்க.

அப்படி இறந்தவங்களை வீட்ல இருந்து தூக்குறப்போ, கரெக்டா மறுபடியும் 'வீடு வரை உறவு' பாட்டை போட்டுருவாங்க.. அதுவரைக்கும் அழாதவங்க கூட அப்போ நிச்சயமா கண்ணீர் விடுவாங்க..

பாடல்கள் எந்த அளவுக்கு மக்களோட இரண்டற கலந்திருக்கு அப்படின்னு நான் கண்ணார பல தடவை நான் பாத்துருக்கேன்.. உணர்ந்தும் இருக்கேன்.

Wednesday, September 27, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 9

சிட்டுக்குருவி தெளிவா இருக்கு இப்போ.. தோள்பட்டை எல்லாம் சரியாகி கும்மாளமா இருக்கு. அடிபட்ட றெக்கையை சைட்ல காமிச்சு நம்மள பாத்து கிண்டலா ஒரு லுக் வேற.. எல்லாம் நம்ம நேரம்னு நினைச்சுகிட்டேன்..அப்புறம் சிட்டுக்குருவி எப்படி இருக்கன்னு கேட்டேன்.. நல்லாத்தான் இருக்கேன்.. ஏன்யா உனக்காகத் தானே காடு மேடு எல்லாம் அலைஞ்சு தெரிஞ்சு நியுஸ் கொண்டுவந்தேன். அதுல தானே அடியும் பட்டேன்.. என்னடா ஆனான்னு ஒரு பாசம் உண்டா.. என்னை பாக்க ஒரு நாள் கூட வரல நீ னு ஒரே கோபம்.. ஏ குருவி.. உன் பெரியப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி.. அது தான் வரலைன்னு அதுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதா ஆயிடுச்சு..

நீ என்னை என்ன வேணும்னாலும் சமாதானம் பண்ணலாம்..ஆனா முருகதாஸை சமாதானம் பண்ண முடியாது.. உன் மேல பயங்கர கோபத்துல இருக்காரு.. அவர் மேல எப்படி நீ அபாண்டமா பழி சுமத்தலாம.. கமல் எடுத்த எந்த படமும் அவர் சொந்த சரக்கு இல்லியாம்.. எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட தாக்கமாம்..முருகதாஸுக்கு பதிலா சிட்டுக்குருவி என்னை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சது.. சரி சிட்டுக்குருவி.. இதை இப்படியே விட்டுவிடுவோம்.. கமல் ரசிகர்களும் என்னை திட்ட வேண்டாம்.. மத்த சினிமா விஷயங்களை சொல்லு நீ.. என்று நான் சொன்னவுடன் பக்கத்தில் கப்பில் கூலா இருந்த ஆப்பிள் ஜூஸை மடமடன்னு குடித்து விட்டு, சிட்டுக்குருவி சொல்ல ஆரம்பித்தது..



கூடல் நகர்னு ஒரு படத்துல பரத் நடிக்கிறார்ல, அதுல அவருக்கு ரெண்டு வேடமாம். பாவனா, சந்தியான்னு ரெண்டு கதாநாயகிகள் வேற. படத்தோட கதை அந்த படத்தோட புதுமுக இயக்குனரோட சொந்தக் கதையாம்.. நிஜத்துல தோத்த காதலை படத்துல சேர்த்து வைக்கிறாராம்..

சென்னையில் துவங்கப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய BIG 92.7 FM விளம்பரதிற்காக நடிகை அசின் ஒரு வருஷதுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப் பட்டு இருக்காங்க. தென்னிந்திய நடிகைகளிலே விளம்பரதுக்குன்னு இவ்வளவு தொகை வாங்குவது அசின் தானாம். அப்படி இருந்து நேற்று நடந்த அதன் துவக்க விழாவுக்கு அம்மணி போகலியாம்..

இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் சில காட்சிகளுக்காக திருமதி சூர்யா..அதாங்க..ஜோதிகா, மொழி மற்றும் சிலந்தி படத்துக்காக சில நாள்களை ஒதுக்கி உள்ளார். தேனிலவு முடிந்து வந்தவுடன் சில நாட்கள் இந்த படங்களின் ஷூட்டிங்கில் நடிப்பார்.

2006 தனக்கு சரியா இல்லாததால விஜய் தனது போக்கிரி படத்தை ரொம்ப பொறுமையா எடுக்கிறாராம்.. ஒரிஜினல் படத்தோட பிரதியை போட்டுப்பாத்து எப்படி வித்தியாசம எடுக்கலாம்னு ரொம்ப மெனக்கெட்டு எடுகிறாராம்.. ரொம்ப உஷாராயிட்டார் போல.. இல்ல பயமான்னும் தெரியல..

இன்னிக்கு இவ்வளவு தான்.. போயிட்டு வர்றேன்.. இன்னிக்கு தான் நான் என் சந்தியா கிட்ட காதலை சொன்ன நாள்.. அதனால அவள கூப்பிட்டுகிட்டு ஊர் சுத்தப் போறேன்.. உன்கூட வெட்டியா பேசி என்ன ஆகபோகுதுன்னு சிட்டுக்குருவி சர்ருன்னு பறந்துடுச்சு.. சே.. போற நேரத்துல நம்மள வேற அசிங்கபடுத்திட்டு போகுதே.. இந்நேரம் நமக்குன்னு ஒரு சிந்தியாவோ விந்தியவோ இருந்தா இப்படி அசிங்கப்படதேவையில்லியே.. இரு குருவி..அடுத்த தடவை வர்றப்போ உன் றெக்கையை பஞ்சர் பண்ணிவிடுறேன்..

Tuesday, September 26, 2006

இன்னைக்கு BBCல சொல்லாம விட்ட செய்தி..

என்னமோ ஏதோன்னு நியுஸ் படிக்கவந்தவங்களுக்கு ரொம்பச் சாரி..

அமெரிக்கா வந்து கொஞ்சம் உடம்பு போட்டதால வேற வழியே இல்லாம, நான் நேற்றிலிருந்து ஜிம்முக்கு போறேன்.. இது தாங்க அந்த நியுஸ்..

நம்ம நாட்டு மக்கள் மாதிரி இல்லாம, எல்லொரும் ஜிம்முக்கு போறாங்க.. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம,"உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" படிக்காமலேயே திருமூலர் சொன்னதை கடைப்பிடிக்கிறாங்க.. எத்தனை கருவிகள் உடற்பயிற்சி செய்ய.. விதவிதமான கருவிகள்.. ஒவ்வொன்றுக்கும் பக்கத்தில், அதை எப்படி பயன்படுத்துறது, செய்தால் என்ன என்ன பலன்கள்னு ஒரு சின்ன செய்முறை விளக்கம் வேற..

எல்லாத்தையும் பயன்படுத்தினாக் கூட "ஒரு நாள் போதுமா" ன்னு திருவிளையாடல் பாட்டுத் தான் பாட வேண்டி இருக்கு.. DUBLIN COMMUNITY RECREATION CENTRE-னு பேர் உள்ள இந்த இடத்துல நீச்சல் குளம், கூடை பந்து உள்ளரங்கு மைதானம், ஜிம்னாசியம்..எல்லாம் எல்லாம் இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்யும் போது போரடிக்காம இருக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் டிவி.. சின்ன சின்ன விளையாட்டுக்கள்.. உடல் பேணுதல் பற்றிய புத்தகங்கள்..னு நிறைய விஷயங்கள் இருக்கு..

நேத்து தான் போனேன்.. பணத்தை கட்டினவுடன் போட்டோ எடுத்து அடையாள அட்டை வந்தது.. நான் டைடல் பார்க்கில் இருந்தப்போ, அட எவன்டா மாசம் அறுநூறு ரூபாய் குடுகிறதுன்னு அந்தப் பக்கம் தலை வைத்துகூட பாக்கல.. அங்க எப்படி இருக்கும்னு தெரில..

சரி விடுங்க.. உடற்பயிற்சி செய்ய வேண்டிய போலீஸ்காரவங்களே அதை பண்றதில்லைன்னு முணுமுணுக்காதீங்க.. நம்ம உடம்பை நாம தாங்க பாத்துக்கணும்.. இல்லைனா, மருத்துவமனைக்கு பக்கத்துல வயசான காலத்துல குடியேறுங்க.. அடிக்கடி ஆட்டோவுக்கு கொடுக்குற காசாவது மிச்சப்படும்.. (இவ்வளவு நாளா ஜிம் போகாம ஒரு நாள் போனதுக்கே இப்படி ஒரு அட்வைஸா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. எல்லாம் உங்க நல்லதுக்கு தான்..ஹி..ஹி..ஹி)

Monday, September 25, 2006

தமிழ் கஜினியும் பிரெஞ்ச் அமெலியும் ஆங்கில மெமென்டோவும்

2005-ல் சக்கை போடு போட்ட படங்களில் கஜினியும் ஒன்று. ரமணாவில் தேர்ந்த இயக்குனர் என்று பெயர் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதற்கு பின்பு இயக்கும் படம் என்பதால், நான் நிறைய எதிர்பார்த்தேன் கஜினியில். என் எல்லாவிதமான எதிர்பார்ப்பையும் அவர் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், படத்தை அவர் கொண்டு சென்ற விதம் மிக அருமை. அதுவும் தன் தலையில், அந்த பயமுறுத்தும் இரும்பு உலக்கையினால் நாலு அடி வாங்கிய பின்பு, அசின் சூர்யாவை பார்க்கும் அந்த ஒற்றை பார்வை மட்டுமே ஆயிரம் வசனங்கள் பேசும். இப்படி படத்தை புகழ்ந்து நிறைய சொல்லலாம். அதன் பிறகு அந்த படம் ஒரு ஆங்கில பட மெமென்டோவின் (MEMENTO) தழுவல் என்று கேள்விப் பட்டபின், முருகதாஸ் மீது இருந்த மரியாதை கொஞ்சம் தொலைந்து போனதென்னவோ உண்மை. சமீபத்தில் நான் பார்த்த ஒரு படக் காட்சி சுத்தமாக அவர் மரியாதையையும் திறமை மீது இருந்த நம்பிக்கையையும் மிகவும் குறைத்து விட்டது.

நமது நாட்டில் இருந்து லகான் படம் ஆஸ்காருக்கு சென்ற போது, இந்த படத்துக்கு ஆஸ்கார் கிடைக்காமல் தட்டி பறித்து சென்றது பிரஞ்ச் மொழியின் அமெலி (AMELIE).இந்த படம், துறுதுறுப்பான, மற்றவர்க்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு பெண்ணை பற்றிய படம். ஒரளவுக்கு கஜினியின் கல்பனா பாத்திரத்திற்கு ஒத்துப் போகக்கூடியது. அதில் அமெலி பிளாட்பாரத்தில் வழியிழந்த ஒரு விழியிழந்த முதியவருக்கு, ஒரு இடத்திலிருந்து அவ்ர் செல்லும் இடம் வரை அழைத்து சென்று விட்டு வருவார். போகும் வழியில் அமெலி பார்ப்பதை எல்லாம் அந்த விழியிழந்த முதியவருக்கு விவரித்து வருவார்.. புது ஆடை அணிந்த ஒரு பெண்ணை பற்றி, கடையில் தொங்கவிடப்பட்ட சில பொருட்கள் பற்றி, ஒரு குதிரை சிலையை பற்றி என எல்லாவற்றையும் உயிரோட்டமாக விவரிப்பார். எப்படி என்றால் கஜினியில் இதே மாதிரி ஒருவருக்கு கல்பனா கதாபாத்திரம் என்ன செய்யுமோ அதே மாதிரி..அடப்பாவிகளா... படம் தான் இன்னொரு மெமென்டோவின் ஈயடிச்சான் காப்பி என்றால் அதில் வரும் சம்பவம் இன்னொரு படத்திலிருந்தா.. அப்படி என்றால், கஜினியில் இருக்கும் காட்சிகள் இன்னும் எத்தனை படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்டது.. முருகதாஸ், நீங்கள் ஒரு இயக்குனரா இல்லை மற்ற மொழிப் படத்திலிருந்து தமிழுக்கு காட்சிகளை இறக்குமதி செய்பவரா...

சரி..ஏதோ..கஜினியில் காப்பி அடித்தது சின்ன தப்பு என்று பார்த்தால், இப்போது சிரஞ்சீவியை வைத்து எடுத்த தெலுங்கு ஸ்டாலினும் ஒரு ஆங்கில மொழித் தழுவலாமே..
(அந்த படத்தின் பெயர் பே இட் ஃபார்வர்ட்-PAY IT FORWARD).. உங்களுக்கே இது நியாயமா.. தங்களது அடுத்த படமாவது சொந்த சரக்கா இல்லை அதுவும் வேறேதும் படத்தின் தழுவலா.. ஒரு வேளை கதை டிஸ்கஷன் என்ற பெயரில் நீங்கள் உங்கள் உதவியாளர்களுடன் சேர்ந்து எல்லா மொழி படங்கள் தான் பார்கின்றீர்களா..

தங்களது தீனாவும், ரமணாவும் சொந்த சரக்கா என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை.. ஆனால் சொந்த சரக்காய் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..

உங்கள் படம் வேன்டுமென்றால் நிறைய காசுகளை அள்ளி இருக்கலாம்.. தயாரிப்பாளருக்கு நல்லதொரு மகசூலை தந்திருக்கலாம்..அனால் அது எதற்கும் நீங்கள் உரியவரா.. அருகதை ஆனவர் தானா.. அடுத்த படத்தில் பதில் சொல்லுங்களேன் முடிந்தால்..

நீங்கள் மெல்லமாய் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது, முருகதாஸ்.. உனக்கும் எனக்கும் படத்தை அப்படியே காப்பியடித்தாரே அந்த படத்தின் இயக்குனர், ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா, அவரை நீ என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்கிறீர்கள்.. நான்(ங்கள்) உங்களிடம் நிறைய எதிர்ப்பார்த்ததால் தான் இப்படி குமுறுகிறேன்.. அது தவறா..

தவறு என்பது உங்கள் பதில் என்றால், நீங்கள் வசனம் எழுதிய ரமணா படத்தில் சொல்வது போல உங்களுக்கு மன்னிப்பே கிடையாது..

நாட்டியப் பேரொளி பத்மினி உயிர் நீத்தார்

நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சடைப்பின் காரணமாய், உயிர் நீத்தார்.

இவர் எம்ஜியார், சிவாஜி, ராஜ்கபூர் போன்ற பெரிய கலைஞர்களுடன் நடித்தவர். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி செர்த்தி இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர்கள்.

நேற்று முதல்வர் கருனாநிதி திரைஉலகத்தினரால் நடத்தப்பட்ட விழாக்கு அமெரிக்காவில் இருந்து வந்தவர், இன்று மறைந்தது திரை உலக்கதை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கலை உலகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. பத்மினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Friday, September 22, 2006

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

நான் மதுரையில் பிஎஸ்சி இரண்டாம் வருடம் படிச்சுகிட்டு இருந்த நேரம். எனது சீனியருக்கு வழியனுப்பு விழாவை நடத்தினோம். அப்போ போட்ட ரெண்டு ஸ்கிட்ல போட்ட ஆட்டம் தான் கீழே இருக்க புகைப்படங்கள்.



காலேஜ்ல 'மானாமதுர மாமரக் கிளையிலே'ன்னு ஆடி பாடி திரியற ஒருவன், திடீர்ன்னு ஒரு அழகான பெண்ணைப் பாத்து 'விழியில் விழி மோதி', இதயக் கதவு திறந்து 'என்னைத் தாலாட்ட வருவாளோ'னு சுத்தி திரிஞ்சு, படிப்பை கோட்டை விடப்போற நேரத்துல பீனிக்ஸ் பறவையாய் மாறி 'வெற்றி நிச்சயம்'னு பாடுற கதை..அந்த ஸ்கிட்ல எடுத்தது தான் முதல் போட்டோ.. பச்சை கலர் டி-ஷர்ட்டுல அண்ணாந்து அந்த பொண்ணை பாத்துகிட்டு இருக்கிறது சாட்சாத் நானே தான். பெண் உடையில் இருக்கிறது என் உயிர் நண்பன் மணிகண்டன்.இந்த மாதிரி ஸ்கிட் பெரும்பாலும் எல்லா காலேஜ்லயும் நடந்திருக்கும். ரொம்ப ரகளையான ஸ்கிட் அது.ரொம்ப அனுபவிச்சு பண்ணினது..இத்தனைக்கும் ரிகர்சல்னு ஒண்ணும் பண்ணல.. எப்பவும் இருக்கிற மாதிரி சும்மா போய் நடிச்சுட்டு வந்துட்டோம்..நடிச்சுட்டு வந்த பிறகு என் கூட படிக்கிற பெண் நண்பர்கள் 'அடப்பாவி.. சும்மா பெண் வேசத்துல இருந்தவனையே இப்படி பாக்குறயே. நல்ல வேளை நாங்க நடிக்கல' னு ஒரே கிண்டல் வேற..



எங்களோட புரபசர் எல்லாம் கூட எதிர்ல பாத்துகிட்டு இருந்தாங்க.. அதனால, ஒரு கருத்து கந்தசாமி ஸ்கிட் ஒண்ணு போட்டோம்.. ஜாதி வெறியொடு அடிச்சுகிட்டு இருக்க மக்கள் ஒண்ணா எல்லொரும் ஒற்றுமையா இருக்குற மாதிரி... அந்த ஸ்கிட்ல 'ஒருவன் ஒருவன் முதலாளி'ன்னு படுறப்போ எடுத்தது தான் இந்த போட்டோ.. போட்டோ பாத்தப் பின்னாடி தான் எவ்வளவு உணர்ச்கி வசப் பட்டு இருக்கேன்னு தெரிஞ்சது..

ஏற்கனவே பல நாடகங்களில் நடிச்சிருந்தாலும், வேற எதுக்கும் என்கிட்ட மெல்லின (சாஃப்ட்?) புகைப்படங்கள் இல்லை.. இவைகள் தான் என் வலை போட்டோ பெட்டகத்தில் இருந்தவை. எப்போ பாத்தாலும் ஒரு ஐந்து நிமிஷம் இவைகளை தொடர்ந்து பாத்துகிட்டு இருப்பேன். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..

Thursday, September 21, 2006

அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்பிய கதை..

என்ன தான் எங்க ஊர் சாராய வியாபாரத்துல, ஒரு காலத்துல, கொடிகட்டி பறந்திருந்தாலும், கிராமத்திற்கே உரிய பாசமும், பழக்க வழக்கமும் மாறாம இருக்கும். நான் அமெரிக்கா கிளம்ப போறேன்னு தெரிஞ்சவுடன, என் பெற்றோர்களிடமும், ஊரில் இருக்கும் என் நண்பர்களிடமும் போனில் சொன்னேன்.. அடுத்த நாள் எங்க ஊர் பஸ்ல போய் இறங்கினேன். (ஆட்டோகிராப் படத்துல சேரன், படத்தோட தொடக்கத்துல எங்க ஊர் பஸ்ல தான் வந்து இறங்குவார்).

பஸ் நிக்கிற இடத்துல இருந்து எங்க வீட்டுக்கு ஒரு முந்நூறு மீட்டர் தூரம் இருக்கும். நான் பஸ்ஸை விட்டு இறங்கினேன்.காய்கறி மார்கெட்டுக்கு போறதுக்கு, பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்த என் தூரத்து மாமா என்னை பாத்துட்டு 'என்ன கார்த்தி.. அமெரிக்கா போறியாம்ல.. பாத்து பத்திரமா போயிட்டுவாப்பா..' சந்தோசத்தோட சொன்னார்.

ஒரு ரெண்டு எட்டு எடுத்து வச்சிருக்க மாட்டேன்.. என் அப்பாவோட நண்பர் ஒருத்தர் வந்து குசலம் விசாரிச்சார். 'என்னைக்கு கிளம்புற கார்த்தி.. துணி மணி எல்லாம் வாங்கியாச்சா.. அங்க உள் டிரஸ் எல்லாம் ரொம்ப வெலையாம்.. நாலஞ்சு சேத்து வாங்கிகோப்பா..' அவருக்கு தெரிஞ்ச விசயத்தை சொன்னார்..

அடியேய் மாப்புள்ள.. இது டீக்கடையில் உக்கார்ந்து நியுஸ்பேப்பர் படுச்சுகிட்டு இருந்த ஒரு மாமா.. என்ன பிளைட்டுல பறக்க போற போல.. எவ்வளவு நாளாகும் திரும்பி வர.. பேசம எம் பொண்ணு ஒண்ணை கட்டிகிட்டு கூட்டிட்டு போயிட வேண்டியது தான.. சிரித்துகொண்டே வந்து பாத்துகொள்ளலாம் மாமா ன்னு அப்படியே கிளம்பினேன்..

நான் சின்ன வயசா இருக்கிறப்போ இருந்து எங்களோட கடைக்கு வந்து வெத்தல பாக்கு வாங்குற ஒரு பாட்டி டீக்கடைக்கு டீ வாங்க வந்திருந்தது..யாரு கார்த்தியா.. நேத்தைக்கு கடைக்கு போயிருந்தப்போ உங்கம்மா சொன்னுச்சு.. பாத்து இருய்யா.. கண்டவன் கூட எல்லாம் சேராத.. சரி பாட்டின்னு கிளம்பினேன்

என்னோட வீட்டுக்கு பக்கத்துல இட்லி, பணியாரம் சுட்டுவிக்கிற தூரத்து பாட்டி ஒருத்தவங்க.. ராசா..இந்தாயா..பணியாரம் எடுத்துக்கோ.. இதுக்கப்புறம் நீ எப்போ சாப்பிடப் போறியோ..அந்த பாட்டி பாசத்தோட பணியாரம் சுட்டு போட்டிருந்த சட்டியை தூக்கி கொடுத்தது...அப்போ..அந்த பாட்டியை பாக்கணும்.. அப்படியொரு சந்தோசம்..

ஏண்டா பேராண்டி.. அங்க எல்லாம் நல்லா மழை பெய்யுமா.. இது என் அப்பாவோட சித்தப்பா.. மனுஷன் நல்ல உழைப்பாளி.. வயலுல இறங்கி வேலையை ஆரம்பிச்சார்னா மூணு ஆள் வேலையை இவர் ஒருவரே செய்வார்..
தாத்தா பனிப்புயலே இருக்கும்னு நான் சொன்னவுடனே நம்ம சொந்தக்கரவிங்க எவனும் அங்கனகுள்ள இருக்காய்ங்களா.. ன்னு அடுத்த கேள்வி.. யாரும் இல்ல தாத்தா..நான் பதில் சொல்ல..சரி சரி இல்லைங்கிறதால சொந்தம் உண்டக்கிடாதடன்னு அவருக்கே உரிய நக்கலோட சொன்னார்..

அப்படி இப்படின்னு நான் வீட்டுக்கு போய் சேரவே அரைமணி நேரம் ஆயிடுச்சு.. அந்த ரெண்டு நாளும் என் தங்கை கல்யாணத்துக்கு வந்த பாதி கூட்டம் என் வீட்டுக்கு என்னை பாக்கவும் வழியனுப்பவும் வந்திடுச்சு.. போஸ்டர் ஒட்டாத குறை தான்.. அவங்க ஒவ்வொருத்தர் மொகத்துல இருக்கிற சந்தோசம், அவங்க வெள்ளந்தியான பேச்சு..இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு..

அன்னிக்கு சாயந்திரம் எங்க ஊர் சந்தியாகப்பர் திருவிழா.. எல்லோரும் சரியான மப்புல இருந்தாங்க.. எங்கியோ போயிட்டு வந்துகிட்டு இருந்த என்னை என் தூரத்து மாமா புடுச்சுகிட்டார்.. மாப்புள்ள..நீ அமெரிக்கா போற..எனக்குத் தெரியும்.. எப்படி தெரியும்னு கேக்குறியா.. அது தான் உன் மாமன்..என் மப்பிள்ளைக்கு மறுபடியும் முத்தம் கொடுக்க நான் இருப்பேனோ மாட்டேனோன்னு என் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தார்.. இந்த பக்காம் இன்னொரு மாமா.. 'மருமவனே..நீ போயிட்டு வர்றப்போ இந்த மாமனுக்கு ஏதாவது கட்டாயம் வாங்கிட்டுத் தான் வரணும்' னு கையைப் பிடிச்சுகிட்டு முத்தமா கொடுக்கிறார்..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. ஒரு வழியா அவங்களை சமாளிச்சுட்டு வந்தேன்..

பக்கத்து வீட்ல யார் இருக்கா.. என்ன பண்றாங்க ன்னு கூட தெரியாம இருக்கிற பட்டிணத்து வாழ்க்கைல எனக்கு எங்க ஊர் பாசமும் உபசரிப்பும் இன்னும் ஆச்சரியமா இருக்கும்.. அந்த மண்ணுக்கும் அந்த பாசத்துக்கும் நான் என்னிக்கும் தலை வணங்குறேன்..கடமை பட்டும் இருக்கேன்..

Wednesday, September 20, 2006

ஆசை ஆசையாய் வச்ச மீசை

நான் பதினோராம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்த நேரம்..மெல்ல அரும்பு மீசை கொஞ்சம் அடர்த்தி ஆக மாறிகிட்டு இருந்த நேரம். எப்போ கண்ணாடி முன்னாடி நின்னாலும், அந்த மீசையை தொட்டுப்பார்ப்பதும், அதன் நுனியை திருகி பாரதி மீசை மாதிரி முயற்சி செய்வதும் தான் வேலையா இருக்கும்.

என் பள்ளி சார்பா மதுரை ஆல் இந்திய ரேடியோவுல போட்ட நாற்றங்கால் என்னும் நாடகத்துல நான் ஒரு டாக்டர் வேஷம் போட்டேன். அதுல வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் எல்லாம் நல்ல இருந்ததால, பள்ளி ஆண்டு விழா நாடகத்துலயும் என் பெயர் இருந்தது. அது வாஞ்சிநாதன் பற்றிய நாடகம். அதுல ஆங்கில துரை கூட வேலை பாக்குற ஒரு போலீஸ் வேடம் எனக்கு..

ஆண்டு விழவுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது.. நாடக ரிகர்சல் ஆரம்பம் ஆச்சு.. என்ன பண்ணினால், எப்படி செய்தால் நாடகம் பாக்குற எல்லோரையும் கவரலாம் என்பதே, அதற்கு பிறகு என்னோட ஒரே நினைப்பாய் இருந்தது. ஒரு நாள் எங்க ஊர் டூரிங் டாக்கீஸ்ல விஜயகாந்த் நடிச்ச மாநகர காவல் படம் போட்டு இருந்தாங்க.. அதை பாத்தவுடனே, ஏன் நாம குரல் எல்லாம் மாத்தி விஜயகாந்த் மாதிரி நடிக்க கூடாதுன்னு ஒரு எண்ணம்.. அந்த நேரத்துல, ஏன் இப்பக்கூட போலீஸ் வேஷம்னாலே அது விஜயகாந்த் தான் ஞாபகம் வரும் இல்லியா.. அன்னிக்கே விஜயகாந்த் போலீஸ் வேஷதுல நடிச்ச எல்லா படங்களையும் ஒரு வாரத்துல பாத்துடுறதுன்னு முடிவு பண்ணினேன்..

எல்லா படத்தையும் ஒண்ணு விடாமல் பார்த்தேன்.. நடை, உடை, பாவனை எல்லம் அப்படியே மாத்துனேன். வீட்ல பயங்கரமா ரிகர்சல் பார்த்தேன்.. ஆனா பள்ளில ரிகர்சல் பாத்தப்போ இது எதையுமே நான் காட்டிக்கல.. எப்பவும் போல என் குரலிலயே பேசினேன்.. ஆண்டு விழாவுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த ரிகர்சல் என் தமிழ் வாத்தியார் கிட்ட, நான் விஜயகாந்த் மாதிரி பிராக்டிஸ் பண்ணின விசயத்தை சொன்னேன்.. ரொம்ப நல்ல மனுசன்.. வகுப்புலயே நான்னா அவருக்கு உயிர்.. அவர் உடனே நடிச்சு காட்டச் சொன்னார்.. நான் நடிச்சு காட்டினத பாத்து அசந்துட்டார்.. நாடகத்துக்கு, இன்னும் ரெண்டு நாளு தான் இருக்குன்னாலும், சில திருத்தங்கள் செய்தார் வசனத்துல..அதுவும் விஜயகாந்த் மாதிரி பேசணும்கிறதால கொஞ்சம் வசனம் வேற கூடியது அந்த போலீஸ் வேசத்துக்கு.. அப்போ என் நண்பர்களுக்கு கூட இது தெரியாது..

ஆண்டு விழாவுக்கு முன்னாடி நாள்.. என் தமிழாசிரியர் கூப்பிட்டு என்னை விஜயகாந்த் மாதிரி இனிமே நடிக்கலாம் சொன்ன பிறகு, செய்யப் போற ரிகர்சல்.. பசங்க எல்லாம் சுத்தி இருந்தாங்க.. ரிகர்சல் ஆரம்பித்தது.. என்னோட முத சீன் முடிஞ்ச உடனே எல்லோரும் என்கிட்ட வந்து கலக்கிட்டடா ன்னு சொன்னாங்க (அப்பாடா.. அவங்களால் கண்டுபிடிக்க முடிஞ்சதே எனக்கு இன்னிக்கும் நினைச்சாலும் பெரிய சந்தோசம்) எப்படிடா இவ்ளோ நல்லா பிராக்டிஸ் பண்ணினேன்னு ஆள் மாத்தி ஆள் மாத்தி ஒரே கேள்விகள்.. எனக்கு அந்த நிமிஷம் ரொம்ப பெருமையா இருந்தது..

ஆண்டு விழா அன்னிக்கு, நான் மேடை ஏறி நடிச்சுட்டு வந்த பிறகு, ஒரு டீச்சர் என்னை கூப்பிட்டு, விஜயகாந்த் மாதிரியே நடிச்சு பேசி கலக்கிட்டியேப்பா ன்னு சொன்னது இன்னமும் மனசுல அப்படியே இருக்கு.

இதை எல்லாத்தையும் விட, ஆசை ஆசையாய் வளர்த்த(?) மீசையை அன்னிக்கு எடுக்க வச்சுட்டாங்க..கொஞ்சம் பெரிய மீசையாய் வைக்கணும்னு ஒரு காரணம் வேற சொன்னாங்க.. அன்னிக்கு மீசை எடுத்தப்போ இருந்த வெட்கம், ஒரு தவிப்பு வேற என்னிக்கும் இருந்ததில்ல..

Tuesday, September 19, 2006

சிட்டுக்குருவிக்கு ஆபரேஷன்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 8


சிட்டுக்குருவிக்கு உடம்பு சரி இல்ல.. றெக்கையில் ஏதோ சின்ன ஆபரேசனாம்.. பறந்து வர முடியாத நிலைமை. றெக்கைல புத்தூர் கட்டு போட்டு இருக்காங்க.. நான் போய் பாக்கலாம்னு நினைச்சா, அதை அவங்க அப்பா, பக்கத்து காட்டுல இருக்கிற அவங்க பெரியப்பா வீட்டுக்கு ஒய்வு எடுக்க அனுப்பிச்சிட்டார்..அவங்க பெரியப்பா குருவிகள் மிலிட்டரில இருந்தவராம். யாராவது மனுஷங்க குருவிகளை பிடிக்க வந்த அவங்க கிட்ட இருந்து குருவிகள் இனத்தை காத்தவராம்.. அதனால் அவருக்கு மனஷங்கள்னாவே புடிக்காதாம்.. சரி..எதுக்கு வம்புன்னு நான் இருந்துட்டேன்.. ஆனா பொறுபுள்ள நம்ம சிட்டுக்குருவியோ, சினி பிட்ஸை இமெயிலில் அனுப்பிசுட்டது. எல்லோரும் சிட்ட்க்குருவிக்கு சீக்கிரம் நல்ல ஆகனும்னு வேண்டிகிட்டே எல்லா நியுசையும் படிச்சு ரசிங்க..

அஜித் நடித்த காட்பாதர் படத்தை அரசோட வரிவிலக்கு காரணமா பேர் மாத்தி இருக்காங்க வரலாறுன்னு. படம் தீபாவளிக்கு ரிலீஸ்.. இந்த வருஷம் தல தீபாவளி தான்..

ஜோதிகா, இனி நடிக்க மாட்டேன்னு சொன்ன பிறகு, அவர் நடித்த சிலந்தி மற்றும் மொழி தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏன்னா, கல்யணமான ஹிரோயினை எல்லாம் பாக்க முடியாதுன்னு 75% மக்கள் சொல்லியிருக்காங்க..

இதுவரை பாட்டு மட்டுமே எழுதி வந்த பஞ்ச் டயலாக் பேரரசு, முதன் முறையா தர்மபுரி படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கார்.. திருப்பதில நடிச்சதயே பாக்க முடியல.. இப்போ பாட்டா.. என்ன கொடுமை இது சரவணா...

பிப்ரவரி 14 படத்துல அறிமுகமான நடிகை ரேணுகாமேனன், அமெரிக்கவுல வேலை பாக்குர கம்பியூட்டர் இஞ்சினியரை விரைவில் திருமணம் செய்கிறார்.. கேரளாவில் அவரது வீட்டில் போன வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.. (சத்தியமா நான் இல்லீங்கோ)