நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில் 2
முதல் பகுதி
காதல் என்ற வானத்தில் பறவைகள் ஏராளம். நாங்கள் மட்டுமல்ல, என் வகுப்பில் இன்னும் சில பறவைகளும் இருந்தன. எங்களை போல காதலை மண்ணுக்குள் புதைத்து வளர்க்காமல், தேசிய கொடியை போல உயரத்தில் பறக்க விட்டு வாழ்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் அவர்கள் இருவரும் விளையாட்டுபிள்ளைகள். தினமும் நூறு முறை சண்டையிடுவார்கள். ஆயிரம் முறை சேர்ந்துகொள்வார்கள். அவர்களும் அந்த சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.
அவள் என்னை கையசைத்து அழைக்க, டிரைவரின் எதிர்புறம் அமர்ந்திருந்த நான் அவள் இருக்கை நோக்கி நடந்தேன். ஓடிய திருடனை பிடிக்க போலீஸ் போகும் போது இடையில் திடீரென ரயில் வண்டி வந்துவிடுவதை போல, திடீரென்று என் நண்பனின் காதலி, எனக்கும் தோழி தான், கோபமாக வந்தாள் பின்னிருக்கையில் இருந்து. நான் என்னவளின் இருக்கை பக்கத்தில் வர, அவள் பக்கத்தில் இவள் வந்து அமர்ந்தாள். விதி என்பதன் சதங்களையும், அது அடிக்கும் நாலையும் ஆறையும் பார்த்து கை தட்டுவதா, தலையில் கொட்டுவதா என்று தெரியாமல், வந்த வழியே திரும்பினேன். அவள் என்னைப் பார்த்தாள். அதில் என்றையும் விட ஏமாற்றமும், கண்களின் ஓரம் ஒரு துளி நீரும் தேங்கி நின்றது. முதன் முதலாய் எனக்காய் அவள் இதயத்தின் கூட சேர்ந்து கண்களும் அழ ஆரம்பித்தது. தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன. மறுபடியும் என் இருக்கையில் அமர்ந்து இருக்கையில், வேகமாக வந்த என் நண்பன், அவளின் காதலன், அவள் இருக்கையின் கீழே அமர்ந்து, அவள் மடியில் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தான். நான் என்னவளை பார்த்தேன்.
எதிர்புறம் வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்தில், அவள் முகம் மறைந்து மறைந்து தெரிய ஆரம்பித்தது. மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவை போல அந்த இருட்டான வாகனத்தில் எனக்கு அவள் தெரிந்தாள். இடுப்பேறி அமர்ந்து பருப்பு சாதம் சாப்பிட்டு நிலவை கண்டு ஏமாந்து போகும் கைகுழந்தையை போல நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள்-
நேற்று நடந்த ஏமாற்றங்கள் நெஞ்சில் நிறைந்து கிடந்தாலும், அதற்கு அவள் காரணமில்லை என்று புரிந்திருந்தது மனசுக்கு. காலையில் வழக்கம் போல கேன்டீனில் நான் சாப்பிட, அவளை துணைக்கு அழைத்தேன். அவளும் வந்தாள். நான் என்றும் போலவே அவள் கூட பேசிக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கூட நடந்து வருவதை நிறுத்தினாள்.
கோபமா என்று கேட்டாள்.. உன் மீதில்லை என்றேன்.. சுற்றுலாவை விடு. இன்னும் இருக்கும் முப்பது நாட்களும் நான் உன்னருகே தான் இருப்பேன். நானென்ன செய்வது. நான் உன்னை அழைத்த போது, விதியை அழைத்ததாக அது வந்து என்னருகில் அமர்ந்து கொண்டது என்றாள். நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள். அதைப் பார்த்த, பக்கத்தில் இருந்த மரத்தின் இலைகளெல்லாம் மலராக மாறியது. இலையே மாறும் போது, நாமென்ன என்று நினைத்ததோ என்னவோ, அதன் வேர்களும் பூவாய் விரிந்தது.
அடுத்து வந்த அத்தனை நாட்களும் என் கூடத் தான் இருந்தாள். வகுப்பின் இருக்கையில் இருவரும் சேர்ந்தே அமர்ந்தோம். எனக்காய் ஏடுகளில் அவள் எழுதினாள். அவளுக்காய் நான் அவளை ரசித்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது பிறப்பாய் தெரிந்தது. நானும் தினமும் மூழ்கி முத்தெடுத்தேன். முத்தாய் அவளே மறுபடி மறுபடியும் கிடைத்தாள். இப்படியாக சென்ற ஒரு நாளில், மழை பெய்து தரையெல்லாம் புது வண்ணமடித்த நாளில், வகுப்பில், யாருமே இல்லாத ஒரு பொழுதில், ஜன்னலில் முகம் தேய்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் அவள். நானும் எழுதிய ஏட்டை மூடிவைத்து அவளருகில் சென்று நின்றேன். மெல்ல அவள் இடை பற்றி, பின்னால் இருந்து அணைத்தேன். நான் அணைத்தவுடன் அவளுள் இருந்த பெண்மை பிரகாசமாய் விளக்கேற்றி வைத்தது. என் மூச்சுகாற்று தான் அந்த விளக்கை ஏற்றி வைத்ததோ. மெல்ல திரும்பி, என்னைப் பார்த்து நாணமாய் சிரித்து, எனது கைகளை விடுவித்தாள். ஆனால் அதை பற்றி அவள் ஏதும் கேட்கவில்லை. நானும் ஏதும் தொடங்கவில்லை.
கடைசி நாள்-
இருவரும் ஒரே பெஞ்சில்.. அவன் கைகளை பற்றிக்கொண்டே அவள் இருந்தாள், கடலடியில் மண்ணைப் பிடித்த நங்கூரம் போல.. எதுவும் பேசவில்லை. கடிகாரத்தின் முட்கள் மட்டும் மணிக்கொரு தடவை பேசிக்கொண்டன. முத்தமிட்டுக்கொண்டன. மௌனமாகவே காற்று கூட நடை போட்டது. சூரியன் கூட என்ன செய்கிறோம் என்று எட்டி பார்த்துவிட்டு சென்றான். அன்றைய பொழுது எழுந்து செல்கையில், அவள் என் கை பிடித்து கொடுத்த முத்தமும், காதில் சொன்ன ஐ லவ் யூவும் தான் இன்று வரை என் இதயதில் உலராமலும், லப் டப் ஓசைக்கு பதிலாகவும் உயிரூட்டுகிறது
(இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது)