ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 1
முன்னுரை :இது எனது பார்வையில் நான் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய ஒரு தொடர் பதிவு. வயல்காட்டையும் மதுரை (பெரிய கிராமம்) வீதிகளையுமே பார்த்தவன், டி.நகர் தெருக்களையும் ஸ்பென்சர் பிளாசாவில் பெண்களையும் கடற்கரை வரம்பு மீறல்களையும் கண்ணார கண்ட போது என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதுகிறேன்.. சில விஷயங்கள் என் கண்களை பெரியதாகவும் பல விஷயங்கள் கண்களை மூடவும் செய்த ஒரு அனுபவ தொடராய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நான் டைரியில் எழுதுவதைப் போல இங்கே எழுதுகிறேன். எப்பவும் தரும் உங்கள் ஆதரவையும் உயர் கருத்துகளையும் பின்னூட்டத்தில் இடவும் நண்பர்களே..
நான் எனது எம்.சி.ஏ கடைசி செமஸ்டர் புராஜெக்டுக்காக 2001 டிசம்பர் ஆறாம் தேதி சென்னை வந்து இறங்கினேன். அது எனது இரண்டாவது சென்னை பயணம். அந்த இரண்டிலும் நான் எல்.ஐ.சி பார்த்திருக்கவில்லை. மதுரையில் இருந்து நான் எனது நண்பன் குமரனும், அண்ணா சாலையில் சாந்தி தியேட்டரை தாண்டி வெயிலில் நின்றிருக்கும் அண்ணா சிலை அருகே எங்களை இறக்க்விட்டு சென்றது நாங்கள் வந்த பேருந்து. எனது நண்பரின் அப்பா, மதுரை திருமங்கலம் தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.. சென்னையில் எங்களுக்கு யாரும் தெரியாததால் நாங்கள் எனது நண்பர் தங்கியிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதென ஏற்பாடு ஆகியது. அறை எண் 16. அது பனிரெண்டுக்கு பத்து (குத்து பதிப்பாக) வகையிலான அறை. எதிர் மூலையில் கட்டில் இருக்கும். பேன் வசதியும் போன் வசதியும் உண்டு. அதனால் வீட்டில் இருந்து அழைப்பதற்கு வசதியாகவும் போயிற்று. மொசைக் தரையிலான குளியறை. ஹீட்டர் வசதி உண்டு.
அப்போது அந்த அறைக்கு வாடகை மாதம் ஆயிரத்து எண்ணூறு. முதன் முதலாக சென்னையில் வாசம். சுற்றிலும் ஒவ்வொரு தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள். நடப்பு எம்.எல்.ஏக்களுக்கு என தனி விடுதியும் உண்டு. அதுவும் கலைஞர் 96-இல் பதவி ஏற்றபோது அவர்களுக்கென தனியாக குவாட்டர்ஸ், மூன்று படுக்கை வசதி கொண்டது ஒன்றை கட்டினார். அது தான் டி.ஆரின் காதல் அழிவதில்லை படத்தில் விவேகானந்தா கல்லூரி என்று காட்டப்பட்டது.
எனக்கு எல்லாமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. பேருந்து எண்கள், வெள்ளை, மஞ்சள், எம் போர்ட் என பல வகைகள் என்று எல்லாமே என்னை வெகுவாக குழப்பியது. மதுரையில் ஏ சர்வீஸ், பி சர்வீஸ் என்று இருந்ததால் இதை விரைவாகவே புரிந்துகொண்டோம். நிஜமாகவே பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்த நிலை தான் எனக்கு. நுங்கம்பாக்கம் ரோட்டில் இருக்கும் பொட்டிபட்டி பிளாசாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் புராஜெக்டுக்காக தேர்வு இருந்தது. அதற்காக பஸ் (எப்படியோ) பிடித்து அங்கே போய் சேர்ந்தோம். பொட்டிபட்டி பிளாசா நுங்கம்பாக்கம் முடிவில் இருந்தது. நாங்கள் தி பார்க் ஹோட்டல் அருகிலேயே இறங்கினோம். இறங்கியவுடன், அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தோம். ஏதோ ரெண்டு நிமிசம் நடந்தால் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடக்கிறோம் நடக்கிறோம் நானும் எனது நண்பனும், இடம் வந்த பாடில்லை. மறுபடியும் விசாரித்தோம். இவரும் அதே மாதிரி தான் சொன்னார். கிட்டதட்ட நீண்ட நடைக்கு பிறகு அந்த பிளாசாவை கண்டுபிடித்தோம். இங்கே தான் எங்களின் முதல் பாடம். சென்னையில் யாரிடம் கேட்டாலும் எல்லா இடத்தையும் இந்த அப்படிக்கா போன வந்துவிடும் என்ற ரீதியில் தான் சொல்கிறார்கள். நடந்தால் தான் தெரிகிறது அது எவ்வளவு நீண்ட தொலைவு என்று. அதானல இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டொம்.
எனது காலணி பத்தியும் அது தன்னை தொலைத்துவிட்டு எனக்கான புது வாழ்க்கை தந்ததையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும். நான் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் சற்று உயரம் கொண்ட செருப்புகளையே அணிவது வழக்கம். அதனால் சென்னைக்கு வருவதற்கு முன்னால் அப்படியொரு தோல் காலணியை தைத்து வாங்கி வந்திருந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை. அது தேவையில்லா ஒன்று எனவும் குடும்ப நிலமைக்கு அறுநூறு ரூபாய் ஷூ பெரிய விஷயம் என்பதாலும் நான் இந்த இன்டர்வியூ வரை ஷூ வாங்கியதே இல்லை. எனது சிறு வயதில் ஆசை காரணமாக என் தந்தை வாங்கி தந்த ஷூ மட்டுமே அதுவரை எனக்காக வாங்கப்பட்ட ஒன்று. இந்த இன்டர்வியூ போவதற்கு இடம் கண்டுபிடித்தவுடன், பக்கத்தில் ஏதாவது ஷூ கடை இருக்க என்று தேடினோம். பாட்டா ஷோரூம் கண்ணில் அகப்பட்டது. உள்ளே சென்று புதியதாய் வாங்கி அப்படியே அந்த நிறுவனத்துக்குள் நுழைந்தோம். எல்லோரும் என் ஷூவில் தான் முகம் பார்த்துகொள்கின்றனரோ என்பது போல், எனது இடது இதய ஆரிக்கிள் கூச்சத்திலும், வலது ஆரிக்கிள் பெருமிதத்திலும் நிரம்பி தள்ளாடியது. நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள். இதோடு நுழைவுத் தேர்வு படபடப்பு வேற என்னைத் தொற்றிக்கொண்டது. (இன்று அணியும் நாற்பது டாலர் பதிப்பு ஷூ எப்போதும் எனது செருப்புக்காலை நினைவுபடுத்த தவறியதே இல்லை)
தேர்வு எழுதிவிட்டு மறுபடியும் வண்டி பிடித்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். எனது ஆரம்ப காலங்களில் நான் காலை உணவு உட்கொண்டதே இல்லை. அப்பா கொடுத்தனுப்பி விட்ட பணத்தை கொண்டு எந்த அளவுக்கு சிக்கனமாக இருக்க வேண்டுமோ அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தோம். இந்த மூன்று நேர உணவுகளை தவிர்த்து வேறேதுவும் நாங்கள் சாப்பிட்டோமா என்றால் அந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இரண்டு ரூபாய் காபியோ டீயோ எங்களது வயிற்றை நிரப்பியது. அதனால் மதிய உணவு அன்லிமிடட் மீல்ஸ் தான். தேர்வு முடிந்து வந்தவுடன், எம்.எல்.ஏ (இதற்கு தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பெயர் வைக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம்) விடுதியில் இருக்கும் உணவகத்தில் தான் உணவு உட்கொள்வோம். அன்லிமிடட் மீல்ஸ் பதினாறு ரூபாய், கூடவே கோழி குழம்பும் மீன் குழம்பு உண்டு. இது தான் நாங்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு. சில சமயம் அந்த குழம்புகளோடு வந்து விழும் சில கறித் துண்டுகள் இப்போது கைகளில் வாங்கும் லட்சம் ரூபாயை விட அதிகம் மதிப்பு கொண்டது, அன்றைய நாட்களில்.இரவு உணவு கையேந்தி பவன்களில் இரண்டு புரோட்டாக்களோ, இல்லை மூன்று வாழைப்பழங்களோ தான் தினமும் எங்களின் வாக்கைக்கு ஆதாரம்.. எங்கள் ஆகாரம்.
(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)