காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 2
முதல் பகுதியை படிக்காதவர்களுக்கு, கதையின் முதல் பகுதி இங்கே
J2 போலீஸ் ஸ்டேசன்..
அன்றைக்கு எந்த கம்பிளைன்டும் வராததால பழைய வழக்கு ஒன்றை பார்த்துகொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் இன்பவேலன். ஐஜி முதல் எல்லோரும் பாராட்டும் திறமை மிக்கவர். தனது நாணயத்தாலும் துடிப்பான செயல்களாலும் நல்ல பேர் வாங்கியவர். தமிழ் நாட்டு போலிஸ்ல மக்களுக்கு நல்லா தெரிஞ்ச சில பேர்ல இவனும் ஒருவன். போலீஸ் வேலைக்கு சேர்ந்த மூணே வருஷத்துல இன்ஸ்பெக்டர் ஆனவன்.
வயசு இருபத்திஏழு. போலீஸ் உயரம். தொப்பை இல்லாத அதிசய போலீஸ்காரன். போலீஸ் உடைல இவர் நடந்து வந்தாலே அட போடவைக்கும் மிடுக்கானவன்.
டிரிங்..டிரிங்..
சிவப்பு நிறத்தில் இருந்த அந்த டெலிபோன் டிரிங்கியது.
"ஹலோ.. இன்ஸ்பெக்டர் இன்பவேலன் பேசுறேன்."
"சார்.. நான் ஏட்டு பெருமாள் பேசுறேன் சார்.."
"சொல்லுங்க பெருமாள்..எங்க இருக்கீங்க"
"சார். இங்கே மார்கெட்டுல அந்த சண்முகம் பழம் விக்கிற பாண்டியை அரிவாளால வெட்டிட்டான் சார்.. அவன துரத்தினேன் சார்.. பிடிக்க முடில.. அவன் வழக்கம் போல ஆட்டோல தப்பிச்சுட்டான் சார்.. ஆட்டோ நம்பர் Tந்02 - 4545 சார்"
ஏட்டு சொன்ன நம்பரை பேப்பரில் குறித்துக் கொண்டே "பெருமாள்..வெட்டு வாங்கினவன் உயிரோட இருக்கானா இல்ல செத்துட்டானா.."
"சார்..நான் அவனை இப்போ தான் இன்னொரு ஆட்டோவுல ஏத்தி அனுப்பினேன் சார்.. நான் ஸ்டேசனுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன் சார்.."
"சரி..வாங்க" என்றவாறு போனை வைத்த இன்பவேலன் வேற ஒரு நம்பரை டயல் செய்தான்..
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஏட்டு J2 போலீஸ் ஸ்டேசன்ல இருந்தார். அதற்குள் இன்பவேலன் அந்த ஆட்டோ நம்பரை கண்டுபிடிக்க முயற்சி செய்து..வழக்கம் போல அது போலியான நம்பர் என்று கண்டுபிடித்திருந்தார்.
"சார்..வர வர இந்த சண்முக பயலோட பெரிய ரோதனையா போச்சு.
அவனுக்கு ஒரு முடிவு கட்டாட்டி இந்த மாதிரி அடிக்கடி நடக்கும் சார்" தனது கண்ணாடியை சரி செய்தவாறே ஏட்டு பெருமாள் சொன்னார்.
தனது கைத்துப்பாக்கியை தொட்டவாறே "பெருமாள்.. அவனுக்கு வலை விரிச்சாச்சு.. இந்த மாதிரி பொடியனுக்கெல்லாம் மேலிடத்துல கேக்க எல்லாம் வேண்டாம். பாத்தோமா.. பட்டுன்னு ரெண்டு குண்ட வேஸ்ட் பண்ணி போட்டோமான்னு இருக்கணும்... என்று கர்ஜித்தான் இன்பவேலன்.
"இன்னும் ஒரு வாரத்துல அவன் சோலிய முடிக்கிறேன்.. முதல்ல அந்த அட்டோக்காரனை போடுறேன்.. ஜான், வண்டிய எடுங்க..எம்ஜியார் நகருக்கு.." என்றவாறு போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான் இன்பவேலன்.
சென்னை முழுவதும் வெளிச்சத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
வேளச்சேரியில் இருக்கும், அந்த கால் சென்டரில் 24 மணி நேரச் சேவை..அதனால் மூன்று ஷிப்ட்ல எல்லோரும் வேலை செய்வாங்க..
பாவனாவும் பவித்திராவும் நல்ல தோழிகள்.. இந்த கால் சென்டருல வேலைக்கு சேர்ந்த பிறகு தான் நண்பர்கள் ஆனார்கள்.. ஆனாலும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் மாதிரி ஆகிவிட்டனர்.
"பாவனா..நான் கிளம்புரேண்டி.. இப்பவே நேரமாச்சு.. கொட்டிவாக்கம் போற வேன் போயிடும்.. நீ வர்றியா இல்லியா.. கம்பெனிக்காக ரொம்ப உழைக்காதேடி.. வா போகலாம்" என்றவாறே அவள் பதிலுக்கு காத்திராமல்
அவளுடைய ஹேன்ட்-பேக்கை எடுத்து சென்றாள் பவித்ரா.. அவள் ஹேன்ட்-பேக்கை எடுத்து செல்வதை பார்த்து பாவனாவும் பின்னாலயே சென்றாள்.
பாவனா.. மதுரையில் இருந்து இங்கே வந்து கொட்டிவாக்கதில் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பவள். ஒரே வார்த்தையில் சொன்னால் மதுரை அழகு. எல்லா அலங்காரமும் செய்து நிற்கவைத்தால் அந்த மீனாட்சி அம்மனே வந்தது போல் இருக்கும். அப்படி ஒரு அழகு. மாதம் ஒரு முறை வீட்டிற்கு சென்று வருவாள். எப்போ போனாலும் அம்மாவும் அப்பாவும் கல்யாண பேச்சை தான் எடுப்பார்கள். இவளுக்கோ இப்போதைக்கு வேண்டாமென்று தப்பித்து ஓடி வந்துவிடுவாள். ஆபீஸ்லயும் எத்தனையோ பேர் நூல் விட்டு பாத்தாங்க. ம்ஹிம்..ஒண்ணும் நடக்கல..
பவித்ரா.. அப்பா அம்மாவோட சென்னை கொட்டிவாக்கத்துல தங்கி இருக்கா.. அண்ணன் இன்ஸ்பெக்டர் இன்பவேலன், J2 போலீஸ் ஸ்டேசன்ல டூட்டி. கொஞ்சம் மாடர்னான பொண்ணு. அது சென்னைல இருந்ததால வந்தது. மாநிற பதுமை இவள்.
இவங்க ரெண்டு பேரும் நடந்து போனா சுத்தி இருக்க பசங்க பாத்து ஏங்காம இருக்க மாட்டாங்க. அடிக்கடி பாவனா பவித்ரா வீட்டுக்கு போய் வருவாள். அப்படி போய் வந்ததுல இன்ஸ்பெக்டர் இன்பவேலன் மனசை கொஞ்சம் பறிகொடுத்து விட்டான். இருந்தாலும் தங்கை தோழிகிட்ட எப்படி இதை போய் சொல்றதுன்னு ஒரு தயக்கம்..பயம்.. பாவனாவுக்கும் ஒரு பற்று இருக்கு இந்த காக்கி சட்டைகாரன் மீது.. அது காதலான்னு இன்னும் அவளுக்கே தெரில.. ஆனா எப்போ இன்பவேலனை பாத்தாலும் இவ மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு ஓடும்..
வழக்கமான குளக்கரை..
மொத்த போதையும் தலைக்கேற சண்முகம் மயக்கத்தில் கிடந்தவாறு டேய் காளிதாசு.. இன்னிக்கு புதன்கிழமை. அடுத்த திங்கள் நம்மளோட ஆபரேஷனை நடத்துறோம். ஸ்பாட்டும் குறிச்சாச்சு.. அது வேளச்சேரி பஸ்-ஸ்டான்ட். ரெடியா இரு.. சவாரிக்கு போயிடாதா..சரியா.. அந்த பிளான் முடிச்சவுடனே, அடுத்த நாள், நான் அந்த இன்ஸ்பெக்டர் இன்பவேலனை போடுறேன்.. ரொம்பத் தான் தண்ணி காட்டுறான். நேற்று என் நைனாவை வந்து ஏதோ மிரட்டி இருக்கான்னு காளிதாசுகிட்ட உளறிகிட்டு இருந்தான்.. காளிதாஸ் எப்பவோ போதை ஏறி மயங்கி கிடந்தான்..
தூரத்தில் இன்ஸ்பெக்டர் இன்பவேலன் தனது ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார்.
கதையின் மூன்றாம் பகுதி அடுத்த திங்கட்கிழமை (இந்த முறை கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால நேற்று எழுத முடியவில்லை நண்பர்களே.. தாமதத்துக்கு மன்னிக்கவும்)