கடவுளும் இல்லை.. எல்லாம் கல் என்று சொன்ன பெரியாருக்குச் சிலை.. அந்த சிலை, ஸ்ரீரங்கத்தில் அதே போன்று எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு சிலைகள் அமைத்து அவர்களின் நம்பிக்கையை தொடர்வதற்காகவும், பழம் தமிழ் மக்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும் விளங்கும் கோவிலின் முன்னே இருந்தது இடிக்கப் பட்டுள்ளது.. இந்த செய்தி ஒரு பெரிய சம்பவமாக, விழியிழந்தோர் யானையை தொட்டுப் பார்த்து காத்தாடி..தூண் என்று அவர்களின் எண்ணங்களுக்கேற்ப ஒவ்வொரு கருத்துகளை சொன்னது போல தங்களின் ஊடங்கங்கள் வழியாக ஒவ்வொரு செய்திகளை பரப்பி வருகின்றனர். எப்பவும் போல இந்த சம்பவம் விறகு இருக்கும்வரை எரியும் அடுப்பு போல எரிந்து விட்டு பிறகு அணைந்து போவது உறுதி.
இப்போதெல்லாம் ஊடகங்கள் அதன் உரிமையாளரின் எண்ணங்களை பிரதிபலிப்பதற்காகவும் ஆதராவாகவும் செய்திகள் பரப்புகின்றன. அதுவும் ஒவ்வொரு பத்திரிக்கையின் விற்பனை, படிப்பவர் எண்ணிக்கை எல்லாம் அளவுகோலாக இருப்பதால் வாசகர்களை கவருவதற்காகவே செய்திகளை வெளியிடுகின்றன. போன வாரம் காஷ்மீர் எல்லையில் ஏதோ ஒரு சிறிய சண்டையில் ஒரு இராணுவ வீரர் நாட்டுக்காக உயிரை விட்டிருக்கிறார். அது பிபிசி செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள். ஆனால் நமது நாட்டு சேனல்களோ, சஞ்சய் தத் பெயிலில் வெளிவந்ததையும், அதற்கு இன்னொரு 'உத்தம ராசா' சல்மான்கான் தரும் பேட்டியையும் மாற்றி மாற்றி ஒளிபரப்பி இருக்கின்றனர். போட்டிகள் சேனல்களுக்கிடையே இருக்கலாம்.. அதற்காக இப்படியா செய்திகளை தருவது.
பெரியார் கடவுள் இல்லை என்றும்.. அப்படிப்பட்ட வழிபாடு தவறு என்று சொன்னார் என்றும் வைத்து கொள்வோம்.. அப்படிச் சொன்னவருடைய கருத்துக்கு முரணாக அவர் 'வழிபடுவோர்', வழிபட சிலை அமைத்தது தவறு என்றும் வைத்துக் கொள்வோம்.. ஆனால் சிலை வைத்து, அமைதி, சாந்தம், நிம்மதி, பிறரை துன்புறுத்தாமை என்று உலகிற்கு போதித்தவரை வணங்கும் அன்பர்கள் ஏன் இப்படி ஒரு துவேச செயலை செய்ய வேண்டும்.. வெளிச்சம் நிறைந்த பகல் இருப்பதால் தான் அடர்ந்த இரவின் அழகு உலகிற்கு தெரிகிறது. வெயில் இருப்பதால் தான் நமக்கு நிழலின் அருமை புரிகிறது. பெரியார் போன்ற சிலர் சொன்னது உண்மையோ பொய்யோ, சரியோ தவறோ.. அவரும் அவருடையோ கருத்துகளும் இன்னும் இருப்பதாலேயே கடவுள்களை வழிபடும் அன்பருக்கு அவர்களுக்கு அந்த ஆன்மீக சக்தியின் மேல் இருக்கும் பற்றும், அந்த சக்தியின் உண்மையும் தெரிகிறது. அதற்கு நாம் அப்படிப்பட்ட ஒரு சுய சிந்தனையை நமக்குள் தூண்டி விட்ட பெரியாருக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும்..
கடவுளை கண்மூடித்தனமாக எதிர்த்தார் பெரியார் என்பதை இப்போதைக்கு மறந்துவிடுவோம். சாதிய வேறுபாட்டை களைய முற்பட்டாரே அதை வரவேற்கலாமே.. பெண்ணியதுக்கு ஆதரவாக பல கருத்துகளை கூறியுள்ளாரே அதை கடைபிடிக்கலாமே.. அதுக்காக சிலை வைத்தார்கள் என்று எண்ணிக்கொள்வோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகமும் ஒரு கடவுளும் இருகின்றது. ஒன்று முழித்திருக்கும் போது மற்றொன்று ஆழ்ந்த தூக்கத்தில் கிடக்கிறது. இரண்டையும் புரிந்து, கடவுளின் காலடியில் நாமும் சாத்தானின் குடுமியை கையிலும் பற்றி இருந்தாலே போதும்.. ஒரு மனிதன் சொல்லும் எல்லாவற்றையும் என்றைக்குமே யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.. பெரியாருக்கே சிலை வைத்த அவரது தொண்டர்களைப் போல.. ஆனால் நாம் தெய்வத்தை வணங்குபவர்கள்.. அந்த தெய்வம் நாம் இப்படி இருக்க வேண்டும் என்றும் ஒரு பெரிய கீதையே வாசித்து, போதித்து போயிருக்கிறார். ஒரு பைபிளையும் குரானையும் தந்துவிட்டு போயிருக்கிறது.. அதையெல்லாம் படித்த நாம் என்ன தான் எதிரியாய் இருந்தாலும், என்ன தான் நமது கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் நம்பிக்கைக்கும் எதிராக இருந்தாலும் மற்றொருவர் மனதை புண்படுத்துமாறு இப்படியொரு செயலை செய்யலாமா.. யாராய் இருந்தாலும் அவர் கருத்து எதுவாக இருந்தாலும் நமக்கு எரிச்சல் மூட்டுவதாக இருந்தாலும் சகித்துகொள்ள வேண்டும்.. நீங்கள் எவ்வளவு நாள் தான் இதையெல்லாம் சகித்துக் கொள்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. அதற்காக சிலை உடைப்பு நமது வேலை இல்லையே. அப்படி செய்தால் நாமும், நமக்கு சொல்லப்பட்ட, போதிக்கப் பட்டவைகளுக்கு எதிராகவும், அதை எதிர்த்தும் செய்தது போலவும் ஆகிடாதா..
ஒரு கொள்கையை ஆதரிப்பவர் குறைவு என்பற்காக அந்த கொள்கை தவறு என்பதோ, அதிகம் என்பதால் அது சரி என்பதோ உண்மை கிடையாது. இன்று பெரியார் சிலையை உடைத்தற்காக எத்தனை பேர் பொங்கி எழுந்தனர்.. பொங்கி எழுந்தவர் குறைவு என்பதால் இவ்வாறு நடக்க எல்லோரும் அனுமதித்தால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், கருத்து சுதந்திரம் என்பது இல்லாமல் போய்விடுமே.. எதிர்காலத்தில் புதிதாய் ஒரு கருத்தை சொல்ல எல்லோருக்கும் பயமே வரும். உலகம் உருண்டை என்பதை சொன்னதால் தூக்கிலிடப் பட்ட கலிலியோ மாதிரி.
பெரியாரின் நல்ல கொள்கைகளை மட்டும் எடுத்து கொண்டு அல்லவற்றை அல்ல என்று ஒதுக்கிவிட்டு, நாம் என்றும் நமது நம்பிக்கையின் வழியிலே செல்லலாம். இதை வைத்து அரசியல் செய்வதும் சில நாட்கள் வெறும் வாயை மெல்வதும் தமிழகத்தில் பல பேருக்கு கை வந்த கலை.. இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் தேவையில்லாத பிரச்சினைகளும், பெரியாருக்கு தேவை இல்லாத விளம்பரமும் தான் கிடைக்கும்.
தெருக்கு தெரு மைக் போட்டு இவர்கள் என்ன பேசினாலும், அங்கங்கே கறுப்பு பலகை வைத்து தினமும் ஒரு திருக்குறள் மாதிரி பெரியாரின் முரண்பட்ட கருத்துகளை எழுதி வைத்தாலும், சிலைகளை வைத்து மாலைகள் போட்டு கடவுளே இல்லை என்று சொன்னவரை இன்னொரு கடவுளாக்க முயற்சி நடந்தாலும் நீங்கள் கண்டு கொள்ளாமல் இருங்கள். அய்யா, பெரியார் சீடர்களே, தயவு செய்து உங்கள் கருத்துக்களை மற்றவர் மனம் நோகாதவாறு சொல்லுங்கள்.. நமக்கு அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் நமது கருத்துகளை சொல்லத் தான்.. மற்றவர் மனதை புண்படுத்த இல்லை.
நீங்களும் இது மாதிரி மறுபடியும் சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடாதீர்கள்.. சிலைகளை உடைப்பதாலேயே பிரச்சினைகள் தீர்ந்து விடாது.. எந்த கருத்துகளையும் அழித்து விட முடியாது.
அவனவன் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், தண்ணீர் பிரச்சனை, மாசுபட்டுப் போன இயற்கை, ஏறி இறங்கும் நாட்டின் பொருளாதாராம், வெளிநாட்டு தீவிரவாதிகளின் ஊடுருவல் இப்படி சொல்லிகொண்ட போகிற அளவுக்கு அத்தியாவசிய பிரச்சினைகள் இருக்கும் போது, வெடிகுண்டு செய்வது எப்படி, சஞ்சய் தத் பெயிலில் வந்தது என்று உப்புசப்பு இல்லாத விஷயங்களை போட்டு மக்களை ஏமாற்றும் டிவி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள், இனிமேலாவது மக்களிடையே அன்பும், அடுத்தவரை மதிக்கும் மாண்பும், எதிரியை பார்த்து புன்னகைத்து அவனது கருத்தை மட்டும் எதிர்க்கும் பக்குவப்பட்ட மனநிலையை தரும் செய்திகளையும் விஷயங்களையும் போடுங்கள்.. உங்களுக்கு கருத்து சுதந்திரம் மட்டுமல்ல, பத்திரிக்கை தர்மம் மற்றும் மனித நெறி காக்கும் ஒப்பற்ற பணியும் இருக்கிறது.
முதல்வர் பேசிய பேச்சில் எனக்கு பிடித்தமான வரியை தான் நான் இங்கே போட்டிருந்தேன்.. அதை நீக்கி விடுகிறேன் இப்போது..