பில்லா அஜித் முரட்டுக்காளை விஜய்
ஹிந்தி டான் படம் வந்ததிலிருந்து எப்போ இது மாதிரி பழைய ஹிட்டான ரஜினி,கமல் படங்களை தமிழ்ல ரீமேக் பண்ணப் போறாங்கன்னு ஒரே பேச்சு.. இது ஒரு படி மேல போய், தான் ரஜினியின் முரட்டுக்காளையை ரீமேக் பண்ணினா நடிக்க ரெடின்னு விஜய் ஒரு பேட்டில சொல்ல..இப்போ இதை மையமா வச்சு தான் எல்லாப் பக்கமும் அரட்டையே.. இப்போ புதுசா கிடைச்ச நியூஸ் படி அமிதப்போட 'டான்' ரீமேக்ல ஷாருக் நடிச்ச மாதிரி ரஜினியோட பில்லால அஜித் நடிக்கப்போறாராம். முரட்டுக்காளைல விஜய் ரஜினியோட கெட்-அப் (அதே மாதிரி ஹேர்-ஸ்டைல்ல) ல வந்து பொதுவாக எம்மனசு தங்கம்னு பாடினா எப்படி இருக்கும்.. ஏற்கனவே இதே மாதிரி ஹேர்-ஸ்டைல்ல விஜய் வசீகரா-லையும் பகவதி-ல ஒரு பாட்டுலையும் வந்ததையும் நினைவுகூர்ந்து ஒப்பீடு செய்து பாருங்க..
அடுத்து அஜித் பில்லாவா நடிச்சா எப்படி இருக்கும்.. ரஜினியோட அந்த ஸ்டைல் மறுபடியும் வருமா இவருக்கும்.. ஒரு வேளை வாய் முழுக்க வெத்தலையை போட்டுகிட்டு வெத்தலையை போட்டேண்டினு அஜித் பாடினா கரகோசம் விண்ணை பிளக்குமா.. வரலாறுல அஜித் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிச்சதால இதுக்கு தேர்வாகி இருக்காரா..
இதை பத்தி பேச ஆரம்பிச்சவுடனே எல்லா ரஜினி,கமல் படங்களையும் தூசி தட்டி, இதுல இவர் நடிச்சா எப்படி இருக்கும்..அதுல அவர் நடிச்சா எப்படி இருக்கும்னு எங்க பாத்தாலும் ஒரே கதை தான்.. அந்த மாதிரி சமீபத்துல ஒரு சினிமா வலைப்பக்கதுல பட்டியல் போட்ட படங்கள் தான் கீழே பட்டியல் இடப்பட்டிருக்கிறது..
1. அக்னி நட்சத்திரத்துல பிரபுவா அஜித்தும், கார்த்திக்காக விஜயும்
2. நெற்றிக்கண் படத்துல அஜித்
3. நான் சிகப்பு மனிதனா விஜய்
4. தில்லுமுல்லு பண்றவரா சூர்யா
5. சிகப்பு ரோஜாக்கள் கமலாக அஜித்
6. நாயகன் கமலாக விக்ரம்
இந்த வெற்றிபடங்கள் எல்லாம் இன்னும் எத்தனையோ கிராம டூரிங் தியேட்டர்களில் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.. இதை எல்லாம் துடைத்து இந்த கால புதிய டெக்னிக்கல் விஷயங்களை புகுத்தி மேற்சொன்ன நடிகர்களை வைத்து எடுப்பதால் பழைய படங்களோட நிலைமைகள் என்னவாகும்.. என்ன தான் சொன்னாலும் ஷாருக்கின் டான் பார்த்தவர்கள் அமிதாப்பின் டான் மாதிரி இல்லை என்று தான் சொல்கிறார்கள்.. ஷாருக்கின் ரசிகர்கள் வேண்டுமென்றால் ரசிக்கலாம். அதே போலத் தான் இந்த படங்களும் அமையப் போகிறது..புதிதாய் மறுபடியும் எடுத்தால்..
ரஜினியின் ஸ்டைல் கலந்த அந்த துள்ளல் நடிப்பும், கமலின் உணர்வுபூர்வ நடிப்பும் இன்னொருவரால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களா.. நினைத்து பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.. அவனவன் புதுப் புது கதைகளங்கள்.. புதிய டெக்னிக்கல் விஷயங்கள் என்று முன்னே போய் கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் இவர்களின் எண்ணங்களைப் பாருங்கள்..
என்னை பொறுத்தவரை, அடுத்த ரஜினியாக வேண்டும், கமலாக வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருக்கிற நடிகர்கள் அவர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது தாங்கள் நடித்தால் அந்த நடிகரின் ஸ்தானத்தையே பிடித்ததாக நினைத்து செய்வதாகத் தான் படுகிறது.. அண்ணாமலை ரஜினி மாதிரி நெற்றியில் சாம்பலை பூசிக்கொண்டு நீ எந்த ஊரு நான் எந்த ஊரு என்று ஆடும் இவர்கள் இன்னும் எத்தனையோ மைல்கல் பயணிக்கவேண்டும் அந்த நாற்காலிக்கு என்று என்றைக்கு தான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்.